You cannot copy content of this page

மஹா அன்னாபிஷேகம்

மஹா அன்னாபிஷேகம் (ஐப்பசி மாத பெளர்ணமி)


அன்னம். உணவு.


உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை. அன்னம் எனும் உணவே அனைத்திற்கும் ஆதாரம். வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன.


தைத்ரீய உபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறை சாற்றுகின்றன.

அதர்வண வேதத்திலுள்ள அன்னபூர்ணோ உபநிஷத் அன்னத்தின் மேன்மைகளைக் கூறுகின்றது.

அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.

நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் வாக்குப்படி நமது உடலும் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபிரான்.

அந்தப் பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றிகிட்ட அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும், நாட்டிலும் வீட்டிலும் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.

அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது. காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியானபின் மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது.

சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.

ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.

ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல்.

நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப் படுத்தினார்கள்.

அன்னம் ந நிந்த்யாத் – அன்னத்தை நிந்தனை செய்யக் கூடாது. அஹமன்னம் – அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.


இறை வடிவம் கொண்ட அன்னத்தினை அன்னலாருக்கு அபிஷேகம் செய்து காண்பது அளவிற்கடந்த புண்ணியங்களைத் தரவல்லது.


தானத்திலும் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்ன தானம் மட்டுமே. உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.


உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள் என்றும் வீண்போவதில்லை.


சிவலிங்க வடிவம் ஓர் ஒப்பற்ற வடிவம்.
Elliptical எனும் நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவம் எண்ணற்ற அர்த்தங்களை நமக்குத் தருகின்றது.

சிவ லிங்க வடிவம் எல்லையற்ற ஒன்றைக் குறிப்பிடுகின்றது.

பிரபஞ்சத்தின் சக்தியைக் குறிக்கக் கூடியது.

உலகம் தோன்றிய விதத்தையும், இயற்கையையும், பிரபஞ்ச வடிவத்தையும் விவரிக்கக் கூடியது.

சூரியனைச் சுற்றிக் கோள்கள் அனைத்தும் நீள்வட்டப் பாதையான சிவலிங்க வடிவத்திலேயே சுற்றுகின்றன.

ஆற்றில் அடித்துவரப்படும் கூழாங்கற்கள் கூட சிவ வடிவத்திலேயே இருக்கின்றன.

சிவம் எனும் ஆற்றல் இந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது.


அன்னம் எனும் அரிசியின் வடிவம் கூட நீள்வட்ட வடிவம் தான். அன்னமும் ஒரு சிவ வடிவம் தான்.


அண்டம் முழுக்க சிவ வடிவம் தான்.
சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.


சிவ பெருமானை அபிஷேகப் பிரியர் என்றும், மஹா விஷ்ணுவை அலங்காரப் பிரியர் என்றும் கூறுவார்கள்.


சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் காண்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.


பால், தயிர் போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படுவது போல உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது.

அன்னாபிஷேகம் செய்யும் முறை:

ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து, தீர்த்தம் விட்டு, சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ஆகும். (தேவையானால் சற்று நீர் கலந்து அன்னாபிஷேகம் செய்யப்படும்.)

சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.

இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.

நீர்வாழ் உயிர்களுக்கு உணவு!

லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னத்தை அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ, ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள்.

நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.

அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.

பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கு அளிக்கப்படுகிறது.

பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோயில்களில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.

இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.


அன்னாபிஷேக பிரஸாதம்

அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் அன்னதானமாக அளிக்கப்படும்.

ஐப்பசி மாதத்து பௌர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.


அவை,


மாதம் – அபிஷேகப் பொருள் – பலன்


சித்திரை பௌர்ணமி – மருக்கொழுந்து – புகழ்


வைகாசி பௌர்ணமி – சந்தனம்- மனை, வீடு, நிலம், புதையல்


ஆனி பௌர்ணமி – முக்கனி = மா, பலா, வாழை – கேட்ட வரம் கிட்டும்


ஆடி பௌர்ணமி – காராம் பசுவின் பால் – பயம் நீங்கும்


ஆவணி பௌர்ணமி – வெல்ல சர்க்கரை – சாபம் தோஷம் பாவம் நீங்கும்


புரட்டாசி பௌர்ணமி – கோதுமை+பசுநெய் கலந்த வெல்ல அப்பம் – அஷ்ட ஐஸ்வரியம்


ஐப்பசி பௌர்ணமி- அன்னாபிஷேகம் – கல்வி, கலை தேர்ச்சி, ஞானம் கிட்டும்
கார்த்திகை பௌர்ணமி – பசு நெய், தாமரை நூல் தீபம் – பழி தீரும், வழக்கு வெற்றி


மார்கழி பௌர்ணமி – பசு நெய் & நறுமண பன்னீர் – கண்டம் நீங்கி ஆயுள் கூடும்


தை பௌர்ணமி – கருப்பஞ்சாறு – நோய் நீங்கி ஆரோக்கியம்


மாசி பௌர்ணமி – பசுநெய்யில் நனைத்த கம்பளி – குழந்தை பாக்கியம்

பங்குனி பௌர்ணமி – பசுந்தயிர் – மனைவி, மக்கள், உறவினர் உதவி

சிதம்பரம் ஸ்ரீ ஆதி மூலநாதர் சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் மேற்கண்ட முறையில் விசேஷ அபிஷேகம் நடைபெறும்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் எனும் பெரும் சிவ வடிவத்திற்கு நூற்றுக்கணக்கான மூட்டைகள் அரிசி கொண்டு, பெரும் வடிவமாகிய சிவபெருமான் முழுக்க நிறைந்திருக்கும்படி மஹா அன்னாபிஷேகம் நடைபெறும்.

அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது.
அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது.


அன்னாபிஷேகத்தில் பங்கு கொள்வோம் ! அளவற்ற புண்ணியம் பெறுவோம் !!

Welcome to vidyaarthini.com, a Hindu Web Portal !
மஹா அன்னாபிஷேகம்
Category
மஹா அன்னாபிஷேகம்
Description
The maha annabishega pooja
Author
Publisher Name
vidyaarthini.com

Leave a Comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top