You cannot copy content of this page

நமஸ்காரம் செய்வது எப்படி?

நமஸ்காரம் !

மாதா (அன்னை), பிதா (தந்தை) இருவரையும் தினமும் பாத பூஜை செய்பவருக்கும், பாதத்தைத் தொட்டு வணங்குபவருக்கும் ஏழேழு ஜன்மங்களிலும் செய்த பாவம் தொலையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.

பாதத்தைத் தொட்டு வணங்குதலுக்கு உரியவர்கள் பெற்றவர்களே.

வித்யை எனும் கல்வியை வழங்கும் குருவுக்கு வணக்கம் செலுத்துவது இரு கைகளையும் நெற்றிக்கு நேராக கூப்பிய வண்ணம் செய்வது குருவருளை பெறத்தக்கது.


தெய்வங்களை வணங்குவது இரு கைகளையும் மேலே தூக்கி அஞ்சலி செய்வது தெய்வப்பலன்களைப் பெறக்கூடியது.

இரு கைகளையும் தூக்கி வணக்கம் செய்வது சரணாகதி, தெய்வமே கதி என்பதைக் காட்டுகின்றது.


சக மனிதர்களுக்கும், இதயத்துக்கு இதமான நண்பர்களுக்கும் வணக்கம் செலுத்துவது – இரு கைகளையும் இருதயத்துக்கு நேராக கூப்புவது நலம் பயக்கும்.

யாரை,எப்படி வணங்குவது என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்

வணக்கங்கள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை அஷ்டாங்கணம், சாஷ்டாங்கம், பஞ்சாங்கம், நமஸ்காரம், அபிநந்தனம், சரணஸ்பர்ஷம்.

அஷ்டாங்கணம்:

பொதுவாக இந்த வணக்கமுறை ஆண்களுக்கானது. அஷ்டாங்கணம் தெய்வங்களை வழிபடும்போது மட்டுமே மேற்கொள்ளவேண்டும். நம் உடலின் நெற்றி, மூக்கு, தாடை, மார்பு, வயிறு, கை, கால், மூட்டு ஆகிய எட்டுப் பாகங்களும் தரையில் நன்றாகப்படும்படி வணங்கும் முறைக்கு ‘அஷ்டாங்கணம்’ என்று பெயர்.

தெய்வ ஸன்னிதானத்திலுள்ள தெய்வங்கள் அனைத்தையும் வணங்கிவிட்டு, ஆலயத்தில் கொடிமரம் இருந்தால், தெய்வத்திற்கும் கொடிமரத்தைக்கும் இடைப்பட்ட இடத்தில் இல்லாமல், கொடிமரத்திற்குப் பின்னே நமஸ்கரிக்க வேண்டும்.

கொடிமரத்திற்கும் தெய்வ ஸன்னிதானத்திற்கும் இடையில் நமஸ்கரிக்கக் கூடாது.


முதலில் ஆண்கள் செய்யக்கூடிய நமஸ்காரம் பற்றிக் காண்போம்.
அஷ்டாங்க நமஸ்காரம் ஆண்கள் செய்யக் கூடியதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.


உடல் முழுவதும் முதலில் பூமியில் படும்படி பொருத்தி,
(1) வலது கையை முதலில் தலைக்கு நேரே தூக்கி பிறகு
(2) இடது கையை தலைக்கு நேரே தூக்கி அஞ்சலி (கூப்பிய கரம்) செய்யவேண்டும். முகத்தை நேராக தரையில் கொண்டு வந்து
(3) நெற்றியைத் தரையில் படச் செய்து, முன்னர் செய்தது போல வலக்கையை இடுப்புக்கு நேரே கொண்டுவந்து,
வலது புஜம் எனும் வலது தோள் (4) தரையில் படச்செய்து,
பிறகு இடது கையை இடுப்புக்குக் கொண்டு வந்து,
இடது (5) தோளைத் தரையில் படச்செய்ய வேண்டும்.
பின்னர், முதலில் வலது (6) காதையும் பிறகு
இடது (7) காதையும் தரையில் படச்செய்ய வேண்டும்.
பின்னர் மோவாய் (8) தரையில் பட வேண்டும்.
இதுவே ஸாஷ்டாங்க (எட்டு அங்கங்களும் – எட்டு உறுப்புகளும் தரையில்படக்கூடிய) நமஸ்காரம் எனப்படும்.

இறைவன் படைத்த உடல் இறைவனுக்கே அர்ப்பணம் எனும் செயலைக் காட்டுவதே அஷ்டாங்க (8 உடல் உறுப்புகள்) நமஸ்காரம். இந்த நமஸ்காரம் தெய்வீகப் பலனை வாரி வழங்கக் கூடியது.

அறுபதாம் கல்யாணம், சஷ்டியப்த பூர்த்தி போன்ற சுபநிகழ்ச்சிகளின்போது மட்டும் மனிதர்களை இந்த முறையில் வணங்கலாம்.

சாஷ்டாங்கம்


‘சாஷ்டாங்கம்’ எனப்படுவது உடலின் ஆறு அங்கங்கள் அதாவது நெற்றி, மூக்கு, தாடை, கைவிரல், கால்விரல், கால்மூட்டு ஆகியவை மட்டும் தரையில் படும்படி வணங்குவது. ஆண், பெண் இருவருக்கும் பொதுவான வணக்க முறையாகும்.

பஞ்சாங்கம்:

இதையும் தெய்வங்களை வழிபடுவதற்காக மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இந்த வணக்க முறை பெண்களுக்கு உரித்தானது.

இது பெண்களின் நெற்றி, கைகள், கைமூட்டு, கால்விரல், கால்மூட்டு ஆகிய ஐந்து அங்கங்கள் தரையில்படும்படி முட்டிபோட்டு வணங்கும் முறையாகும். பெண்கள் கோயிலில் கொடிமரத்தை வணங்கும்போது பஞ்சாங்கமாகத்தான் வணங்க வேண்டும்.

பெண்கள் செய்யக் கூடியது பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும்.


பெண்கள் முதலில் இரண்டு (1,2) முழங்கால்களைத் தரையில் பொருந்தச் செய்து, முதுகை வளைத்து, பின் இரண்டு (3,4) கைகளையும் கூப்பியவாறு தரையில் படச் செய்து, பின் நெற்றியினை (5) தரையில் படச் செய்ய வேண்டும்.
இதுவே ஐந்து உடல் உறுப்புகள் தரையில் படச்செய்யும் பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். பெண்களுக்கு நல்வாழ்க்கையும், சுமங்கலிகளுக்கு நீடித்த மணவாழ்க்கையையும் அருளுவது பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். பெண்களின் திருமாங்கல்யம் எந்நிலையிலும் தரையில் படக்கூடாது.

சுமங்கலி பூஜை, சஷ்டியப்த பூர்த்தி போன்ற சுபநிகழ்ச்சிகளின்போது மட்டும், மனிதர்களை இப்படி வணங்கலாம்.

நமஸ்காரம்

மனிதர்களை வணங்கும்போது பின்பற்றும் முறை. இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து, மார்பின் அருகிலோ, நெற்றிக்கு நேராகவோ வணங்கும் முறைக்கு ‘நமஸ்காரம்’ என்று பெயர்.

மனிதர்கள் மட்டுமின்றி, கோமாதா பூஜையின்போது பசுக்களை நாம் இந்த முறையில் வணங்கலாம்.

பசுக்கள் மட்டுமின்றி, எந்த ஜீவராசிகளை வணங்கும்போதும் நாம் இந்த முறையையே பின்பற்றலாம்.

இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து வணங்குவதன் மூலமாக `நீயும் நானும் சமமானவன்’ என்ற தத்துவம் வெளிப்படுகிறது.

அபிநந்தனம்:

இருகைகளையும் கூப்பி மார்பின் அருகே வைத்து, தலையைச் சாய்த்து, பணிவோடு வணங்கும் முறைக்கு `அபிநந்தனம்’ என்று பெயர்.

தெய்வங்களை வழிபடும்போதும், உயர்ந்த மனிதர்களை வழிபடும்போதும் இந்த வணக்க முறையை மேற்கொள்ள வேண்டும்.

பணிவாக ஒருவருக்கு மரியாதை செய்ய விரும்பினால், கண்டிப்பாக நாம் அபிநந்தன முறையில்தான் வணக்கம் வைக்க வேண்டும்.

சரணஸ்பர்ஷம்:

நேரடியாகக் கால்களை மட்டும் தொட்டு வணங்கும் முறைக்கு ‘சரணஸ்பர்ஷம்’ என்று பெயர். மாதா, பிதா, குரு,தெய்வம், மாமனார், மாமியார், பெரியப்பா, சித்தப்பா, மாமா, அத்தை, சித்தி, அண்ணன், அக்கா, துறவிகள், ஞானிகள் ஆகியோரை மட்டுமே இப்படி வணங்கவேண்டும்.

தெய்வங்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவதென்பது இறைவனின் பாதத்தில் சரணடைதலைக் குறிக்கிறது.

வணங்குதல் என்பது மிக உயர்ந்த குணமே. இருந்தபோதும் தாய், தந்தையர், குரு, தெய்வம், மாமனார், மாமியார், பெரியப்பா, சித்தப்பா, மாமா, அத்தை, சித்தி, அண்ணன், அக்கா,  துறவிகள், ஞானிகள் தவிர்த்து மற்றவர்களை காலைத் தொட்டு வணங்குவதோ காலில் விழுந்து வணங்குவதோ முறையல்ல.


மரியாதைக்கு உரியவர்களை, நம் முகத்துக்கு நேராக இரு கைகளையும் கூப்பிச் செய்வது நல் அபிப்ராயத்தைப் பெற உதவும்.

பூஜை முடிந்த பிறகு கடைசியாக உடல் நன்றாகத் தரையில் படும்படியாக விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும். அது சாஷ்டாங்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் தங்களுடைய அவயங்கள் யாவும் பூமியில் படும்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

பெண்கள் தலை, கால்,தோள்கள் ஆகியவை மட்டும் தரையில் படும்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

முறையோடு நமஸ்காரம் செய்தால் நல்லது நடக்கும். தகப்பனாருக்கு நமஸ்காரம் செய்யும் போது இந்த முறையில்தான் பண்ண வேண்டும்.

சன்னியாசிகளை வணங்கும் போது நான்கு தடவைகள் செய்யலாம். அவர்கள் நம்மை ஆசிர்வதிக்கும் போது”நாராயணா”என்று தான் கூற வேண்டும்.

வேத காலத்திலிருந்தே நமஸ்கரிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது.
நான்கு வேதங்களில் இரண்டாவதாக இருக்கும், யஜுர் வேதத்தின் இருதயம் போன்று இருக்கும் ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது.

ஸ்ரீ ருத்ர மந்திரத்தின் சிறப்பு பகுதியாக விளங்குவது ருத்ரனை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்த பகுதி நமகம்.”ருத்ராயா ததாவினே க்ஷேத்ராணாம் பதயே நமோ நமோ” (துன்பங்களைத் துடைப்பவரும், உலகைப் படைத்துக் காப்பவரும் ஆகிய ருத்ரனாகிய பரமேஸ்வரனுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்)


நமகம் எனும் மந்திரத்தை உள்ளடக்கிய ஸ்ரீ ருத்ரத்தைச் சொல்வதும், கேட்பதும் பரமேஸ்வரனையே ஆயிரத்து எட்டு முறை வலம் வந்து நமஸ்கரித்தலுக்கான பலன் கிடைக்கும்.


ஸ்ரீ ருத்ர மந்திரங்களால் மகேஸ்வரனை மானசீகமாக நமஸ்கரிப்பது மகத்தான பலனைத் தரக்கூடியது.


சைவ வேதம் என்று போற்றக் கூடிய பன்னிரு திருமுறைகளில், திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரத்தில், நின்ற திருத்தாண்டகம் எனும் பகுதி வடமொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரத்தின் தமிழின் நேர் வடிவம் என்று ஆய்வாளர்கள் மதிக்கின்றார்கள்.


நின்ற திருத்தாண்டகம் பாடும்போதும், கேட்கும்போதும் சிவனை நமஸ்கரிப்பது சிறந்த பலனைத் தரக்கூடியது.


“மாதா பிதாவாகி மக்க ளாகி மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்கோதா விரியாய்க் குமரி யாகிக்கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்போதாய மலர்கொண்டு போற்றி நின்றுபுனைவார் பிறப்பறுக்கும் புனித னாகியாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகிஅழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.” (நின்ற திருத்தாண்டகம்)


அங்கப்ரதக்ஷணம் : தெய்வங்களுக்கு அங்க பிரதக்ஷணம் செய்வது என்பது ஒரு விசேஷ வழிபாடு. உடலின் அனைத்து பாகங்களும் தரையில் படும்படி நமஸ்கரித்துக் கொண்டே ஆலயத்தை வலம் வருவது பெரும் புண்யங்களைத் தரக்கூடியது.

பக்தர்கள், பெரியோர்கள், தவசீலர்கள் வலம் வந்த பாதையில் அவர்களின் பாதங்கள் பட்ட இடங்களையும் நமஸ்கரிப்பதால், அடியவர்க்கும் அடியவராக விளங்கக்கூடிய பெருமானின் பூரண அருளைத் தரக் கூடியது. ‘நான்’ என்ற அகந்தையை நீக்கக் கூடியது.

இறைவன் ஒருவனைத் தவிர வேறு கதியில்லை என்ற செயலைக் காட்டுவது அங்க பிரதக்ஷணம் ஆகும்.

யாரை நமஸ்கரிக்கக் கூடாது ?


இறைவனை எண்ணிக்கொண்டு ஜெபம் செய்து கொண்டிருப்பவரையும், தானம் செய்து கொண்டிருப்பவரையும், தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருப்பவரையும், யாகங்கள் செய்து கொண்டிருப்பவரையும், தர்ப்பணம் செய்து கொண்டிருப் பவரையும், சிரார்த்தம் செய்பவரையும் நமஸ்கரிக்கக் கூடாது.


பெரும் புண்யம் நல்கும் நமஸ்காரம் :


பெரும் தவசீலர்கள் உள்ள சபையிலும், தெய்வங்கள் உறைந்திருக்கும் யாகசாலையிலும், ஆலயங்களிலும், புண்ய க்ஷேத்ரங்களிலும், புண்ய தீர்த்தங்களை நோக்கியும், வேத கோஷம் முழங்கும் இடங்களிலும் – செய்யக் கூடிய பிரத்யேக நமஸ்காரங்கள் பலமடங்கு புண்யங்களைத் தரக்கூடியது.

நமஸ்கரிக்கும் திசை :


ஆலயங்களில் நமஸ்கரிக்கும் போது நமது தலை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ அமையவேண்டும். தெற்கு நோக்கி நமஸ்கரித்தல் கூடாது.

பதின்மூன்று அத்தியாயங்கள் கொண்ட துர்கா ஸப்தசதீயின் ஐந்தாவது அத்தியாயம் மிக முக்கியம் வாய்ந்தது. அருட்செயல்கள் புரிந்த தேவியை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்தது ஐந்தாவது அத்தியாயம் .


“யா தேவி ஸர்வபூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:!


(அனைத்துலகையும் ஈன்று எடுத்த அன்னை வடிவாகிய அம்பிகைக்கு வணக்கம். மீண்டும் வணக்கம். என்றென்றும் வணக்கம்)


இந்த அத்தியாயத்தில் வரும் மற்ற ஸ்லோகங்களிலும் வரும் “நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: ” என்று சொல்லும்போதெல்லாம் அம்பிகையை நமஸ்கரிப்பது, வாழ்வில் ஏற்படக் கூடிய துன்பங்கள் அனைத்து அகற்றி, அளவற்ற அருளை பெறக் கூடியது.

மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.

  • அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
  • கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
  • விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.
  • தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.
  • கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.

வணங்கும் விதி

பிரம்மா , விஷ்னு , சிவன் இம்மூவரை வணங்கும் போது , சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும்.

மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும்.
குருவை வணங்கும் போது , நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும்.

அரசரையும் , தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.


தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும்.

மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.பூமியில் நெடுஞசாண் கிடையாக வணங்க வேண்டும். ஆனால் பெண்கள் , மாதா , பிதா , குரு , தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது.

Welcome to vidyaarthini.com, a Hindu Web Portal !
நமஸ்காரம் செய்வது எப்படி?
Category
நமஸ்காரம் செய்வது எப்படி?
Description
How to do a namaskara?
Author
Publisher Name
vidyaarthini.com

Leave a Comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top