You cannot copy content of this page

சாளக்ராம வழிபாடு

சாபங்களை தீர்க்கும் சாளக்ராம வழிபாடு

சாளக்ராமம் என்பது முதுகில் கருங்கல் போன்ற பொருளுடன் பிறந்து, வளர்ந்து பெரிதாக உருவாகி தெய்வத்தன்மையுடன் கூடிய உயிரினம்.

இது நத்தை, சங்கு, பவழம், ஆகியன தன் உடலில் ஒரு கூட்டை உருவாக்குவது போல, தன் உடலில் உறுதியான கருங்கல்லை முதுகில் கொண்டு பெரிதாக வளர்ந்து உருவாவதாகும்.


பூக்களில் நாகலிங்க (நூற்றுக்கணக்கான நாகங்கள் லிங்கத்துக்கு குடைபிடிப்பது போல இருக்கும்) புஷ்பம் இயற்கையிலேயே தெய்வத்தன்மையுடன் விளைவதுபோல, தெய்வத்தன்மை கொண்ட உயிரினமான சாளக்ராமங்கள் மஹாவிஷ்ணுவின் அம்சமாக போற்றப்படுகின்றன.

சைவ சமயத்தினரால் நர்மதை நதியில், பாணலிங்கம் தெய்வத்தன்மையுடன் உருவாதல் போல, கண்டகி நதியில் உற்பத்தியாகும் சாளக்கிராமங்கள் வைணவ சமயத்தினரால் தெய்வத்தன்மை கொண்டதாக வழிபாட்டுக்கு உகந்தவையாக போற்றப்படுகின்றன.


இவை இமயமலையில் கண்டகி நதியில், சாளக்ராமம் எனும் பகுதியில் தோன்றி உருவாவதால், இவைகளுக்கு “சாளக்ராமம்” என்றே பெயர் பெற்று விளங்குகிறது.


புராண விளக்கம் : சங்கசூடன் எனும் அசுரன் தேவர்களை வதைத்து வந்தான். அவனிடம் இருக்கும் கவசத்தை விஷ்ணு பெற்றதால், பலமிழந்த இவனை சிவன் கொன்றார். இவன் உடல் சிதறிய பாகங்களே சங்குகளாக விளைகின்றன.
சங்கசூடனின் மனைவி துலசி. மஹா தபஸ்வினி. கணவரைக் கொல்ல காரணமாயிருந்த விஷ்ணுவை “பாஷாணமாகுக” என சபித்தாள்.
அதற்கு மஹாவிஷ்ணு “உன் பூர்வ ஜன்ம பயனே நீ இந்த நிலை அடைந்தாய். உலக நன்மை பொருட்டு நான் பாஷாணமாகின்றேன். இனி நீ இந்த உடலை நீக்கி, உன் ஆத்மா கோலோகம் அடைவதாக. உன் உடல் ‘கண்டகி’ நதியாகவும், உனது ரோமங்கள் துளசி செடிகளாகவும் உருவாகி, துளசி மூன்று லோகங்களிலும் பூஜைக்குரியதாக தேவர்களாகலும், மனிதர்களாலும் தெய்வத்தன்மையுடைய மூலிகையாக சிறப்படையட்டும்” எனும் வரங்களை அளித்தார்.


துலசி கொடுத்த சாபத்தால், மஹா விஷ்ணு கண்டகி நதியில் சிலா ரூபமாக பல்கிப் பெருகி, விஷ்ணு அம்சமாக, சாளக்ராமங்களாக உருவெடுத்து அருள் செய்து வருகிறார்.


சாளக்ராமம் என்பது நெல்லிக்கனி அளவு முதல் ஆறடிக்கு மேல் உயரம் கொண்டுள்ளதாக வளர்வதாகும்.
இந்தக் கல்லின் மேற்புறம் முதல் நடுப்பகுதி வரை ஒரு மெல்லிய துளை (ஈர்க்கு நுழையும் அளவு) இருக்கும்.


உட்புறம் சங்கு, சக்கரம், தாமரை, ஆகிய விஷ்ணுவின் சின்னங்களைக் கொண்டதாக இருக்கும்.


இதன் துவாரத்தின் மேற்புறம், விஷ்ணுவுக்கு வனமாலை இருப்பது போல, பந்தளவு உடைய சாளக்ரமாத்தின் மேல் தானாகவே மாலையைச் சார்த்தியது போல இருப்பது “லக்ஷ்மி நாராயண சாளக்ராமம்” எனப் பெயருடையதாகும்.

மேலே மாலையில்லாமல், வழவழப்புடன், உட்புறம் விஷ்ணுவின் சின்னங்களைக் கொண்டிருப்பது “லக்ஷ்மி ஜனார்த்தனம்” என்பதாகும்.


108 விஷ்ணு புராண திவ்ய தேச ஆலயங்களில் சிலவற்றில் சாளக்ராமங்களே மூலவர் மூர்த்தியாக சிலையாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.


அந்தச் சிலையின் உச்சந்தலை முதல் நாபி வரை துளை உடையதாக இருக்கும்.
ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், பெருமாள், லக்ஷ்மி நரசிம்மர், திருமால் ஆகிய தெய்வச் சிலைகளை சாளக்ராம சிலைகளாக வடித்து ஆதிகாலத்திலேயே கோயில்களில் அமைந்துள்ளனர்.


சாளக்ராமத்தை, தமது ஜாதகப் பலன்படி, தக்க வகையில் வீட்டில் பூஜிப்பவர்கள் விரும்பும் பலன்கள் அனைத்தையும் பெற்று வருவது அனுபவ பூர்வமான உண்மை ஆகும்.


சாளக்ராம சிலைகள் மூலவராக அமையப்பெற்ற ஆலயங்கள், தரிசிக்கும் பக்தர்களுக்கு விரைவில் பலன் தரும் ஆலயங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.
உதாரணமாக, ப்ருந்தாவனத்தில் ஸ்ரீ க்ருஷ்ணரின் மூலவர் சிலை சாளக்ராமத்தால் ஆனது.

தஞ்சை மாரியம்மன் கோயில் எனும் ஊரில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் ஆலய மூலவர் சிலை (ஆறடி உயரம் உள்ளது) சாளக்ராமத்தினால் ஆனது.

முன்பு குறிப்பிட்டது போல், இந்த சிலையின் உச்சியில் ஒரு துளை உள்ளது. அந்தத் துளை சுமார் 3 1/2 அடி ஆழத்திற்கு, ஒரு ஈர்க்குச்சி மட்டுமே நுழையக் கூடியதாக உள்ளது.

இது அனைவரும் தரிசிக்க வேண்டிய சாளக்ராம மூலவர் ஆலயம் ஆகும்.


சாளக்ராமங்களை நல்ல குருவின் ஆலோசனை கொண்டு தோஷங்கள், குறை நீக்கி, நல்லதைப் பெற்று, பூஜித்து அனைவரும் பலனடைய வேண்டும் என்பது தெய்வ ஸங்கல்பம் ஆகும்.


எவ்விடத்தில் சாளக்ராமம் பூஜிக்கப்படுகிறதோ அங்கு எல்லா தெய்வங்களும் தமது அருள் அனைத்தையும் அளிப்பார்கள் என விஷ்ணு புராணம் கூறுகிறது.

Welcome to vidyaarthini.com, a Hindu Web Portal !
சாளக்ராம வழிபாடு
Category
சாளக்ராம வழிபாடு
Description
Saalakraama pooja
Author
Publisher Name
vidyaarthini.com

Leave a Comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top