You cannot copy content of this page

சங்காபிஷேகம்

சங்காபிஷேகம்

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாகக் காட்சி தருகிறார். அதனால் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவன் கோயில்களில் இறைவனைக் குளிர்விக்க சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது.

இந்த சங்காபிஷேகம் சிவபூஜையில் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்காபிஷேகத்தைக் கண்டால் ஜஸ்வரியம், லட்சுமி கடாட்சம் நிறையவே கிடைக்கும்.

இதனைப் புலிப்பாணி சித்தர்:


‘‘சிவனார்க் கேத்த நாளதனிலே
சங்காபிடேகம் கண்டுய்ய
ரிசியருடனே சனகனு மதிலை
யாண்டானு மருபியென நிற்ப
கண்டு புளங் காகித மெய்தினமே
’’ என்று பாடுகிறார்.

சிவராத்திரி காலத்தில் இம்மையிலும் நன்மை பயக்கும் சிவனாருக்கு பலவித ஹோமங்களும், சங்காபிஷேகமும் நடப்பதை பற்பல ரிஷிகளுடன் தசரத மகாராஜனும் அரூபமாக இருந்து தொழுவதை நேரில் பார்த்து இன்புற்றோம் என்று பேசிமகிழ்கிறார் புலிப்பாணி சித்தர்.

சங்கு.


கடலில் இருந்து கிடைக்கும அரிய தெய்வீகப் பொருள். சங்கிற்கு பவித்ர (புனிதமான) பாத்திரம் எனப் பெயருண்டு. அதில் விடப்படும் தீர்த்தம் மிகவும் புனிதமானதாகக் கருதப் படுகிறது. சங்கு பஞ்ச பூதங்களாலும் மாறுபடாதது.

நீரில் கிடைப்பது. நெருப்பால் உரு மாறாதது. இதிலுள்ள துவாரத்தினில் காற்றைச் செலுத்தினால் சுநாதமான ஒலியை வழங்குவது.


பவழம், முத்து மற்றும் பாண லிங்கம், சாளகிராமம் ஆகியவை உயிரினங்களிலிருந்து கிடைத்து பூஜைக்குரிய பொருட்களாக விளங்குவதுபோல் சங்கும் கடலில் கிடக்கப்பெறும் பூச்சியினத்தின் மேல் ஓடு. இதுவே பூஜைப் பொருளாகக் கருதப் படுகிறது.

பொதுவாக சங்குகள் இரண்டு வகைப்படும்.

1 வலம்புரி சங்கு, 2 இடம்புரி சங்கு.

இதை எளிதாக அடையாளம் காண இடது கையால் பிடித்துக் கொண்டு ஊதுவதற்கு வசதியாக அமைந்திருப்பது வலம்புரி சங்கு.


வலது கையால் பிடித்து ஊதும் அமைப்பில் உள்ளது இடம்புரி சங்கு.


லட்சம் இடம்புரி சங்குகள் கிடைத்தால் ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும். மிக அரிதாக வலம்புரி சங்கு கிடைக்கிறது.

மனிதன் பிறந்தவுடன் சங்கில் பால், மருந்து முதலியவைகளை ஊட்டுவதே மரபாகும். இறந்த பிறகு சங்கு ஊதுவதன் மூலம் இறந்தவரின் ஆத்மா ஸ்வர்க்கம் அடையும் என்றும் நம்பப்படுகின்றது.


சங்கிலிருந்து எழும் ஒலி பிரணவமாகிய ஓங்கார ஒலி.


மருத்துவத் துறையிலும் சங்கை இழைத்து தேன் முதலியவற்றுடன், அளிக்க பல நோய்களை தீர்க்கும் என்கின்றது வைத்ய சாஸ்திரம்.


சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டிற்கு அருகாமையில் உள்ள திருக்கழுக்குன்றம் எனும் ஸ்தலத்தில் உள்ள சங்கு தீர்த்தம் எனும் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு கிடைப்பதாகவும், அவற்றை ஆலயத்தில் சேகரித்து வைப்பதாகவும் ஆலயக் குறிப்புகள் தெரியப்படுத்துகின்றன. (கடலில் சங்கு கிடைப்பது வழக்கம். ஆனால், குளத்தில் சங்கு கிடைப்பது அரிதிலும் அரிதானது)

நவக்ரஹ நாயகர்களில் ஒருவரான சந்திரன் மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாகவும் (சந்த்ரமா மனஸோ ஜாத: – புருஷ ஸூக்தம்), பாற்கடல் கடைந்த போது தோன்றியதாகவும் (சந்த்ர ஸஹோதரி ஹேமமயே – பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மியுடன் பிறந்தவர் – லக்ஷ்மி ஸ்தோத்ரம்) அறியமுடிகின்றது.


பெரும் தவம் செய்து கிரஹ பதவி பெற்றவர் சந்திர பகவான்.
சந்திரனுக்கு, தக்ஷ பிரஜாபதி எனும் மஹரிஷி, தன் குழந்தைகளான நக்ஷத்திர பதவி பெற்ற அஸ்வினி முதல் ரேவதி வரையிலான – 27 பேரையும் மணம் முடித்து வைத்தார்.
சந்திரன், 27 நக்ஷத்திர பெண்களில் கிருத்திகை மற்றும் ரோஹிணி மங்கையர்களிடம் மட்டும் அதிக அன்பு பாராட்டுவதைப் பொறுக்காத மற்ற நக்ஷத்திர பெண்கள், தந்தையாகிய தக்ஷ பிரஜாபதியிடம் முறையிட, கோபம் கொண்ட தக்ஷன் தன் தவ வலிமையை உபயோகித்து, சந்திரன் ஒவ்வொரு நாளும் தேயட்டும் என்று சாபமிட்டார்.


அவ்வாறே சந்திரனும் முழுமையாக தேய்ந்து போனான். (அ – இல்லை, மா – சந்திரன், வஸ்யை – இருப்பது ; சந்திரன் இருப்பது இல்லை, சந்திரன் இல்லாத தினமே அமாவாஸ்யை).


தன் ஒளி முற்றிலும் குன்றிய சந்திரன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ய, சந்திரனின் தவத்திற்கு மனமிரங்கிய சிவன், அவனைத் தன் சடாமுடியில் வைத்து ஆறுதல் கூறினார். (மாகேஸ்வர மூர்த்தங்கள் எனும் சிவபெருமானின் 25 வடிவங்களில் ஒன்று சந்திரசேகர மூர்த்தி).


சந்திரன் தனது குளிர்ந்த தன்மையினால், தன்னிடமிருந்து பெருகும் அமிர்த தாரையினால் சிவனுக்கு அபிஷேகம் செய்தான்.

இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான் அவனை வாழ்த்தி, நாளும் நீ வளர்ந்து பூரணமாவாய் என்று வரம் அளித்தார். (பூரணம் – முழுமை. பூர்ணிமா – பௌர்ணமி – முழு சந்திரன் உள்ள நாள்).
(சந்திரகாந்தக் கல் – இந்தக் கல்லில் இருந்து தானாகவே நீர் சுரக்கும். இதுவும் சந்திரனின் அம்சமாகவே கொண்டாடப்படுகின்றது. ஆனால், கிடைப்பதற்கு மிக மிக அரிதானது)
ஆக, சந்திரன் சிவபெருமானை வழிபட்டே வளர்ச்சி பெற்றான்.

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம்.
சூர்யாக்னி, கார்த்திகை அக்னி, அங்காரக அக்னி மூன்றும் சேர்ந்த நாளில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகின்றது. (இதற்கு முந்தைய பதிவான கார்த்திகை தீபம் * சொக்கப்பனை காணவும். அல்லது இங்கே க்ளிக் செய்யவும்).


கார்த்திகை மாதம் முழுக்க சிவபெருமானை தீப ஒளியாலேயே குளிப்பாட்ட வேண்டும் என்று சிவாகம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கார்த்திகை மாதத்தில் தீப ஒளியால் ஏற்படும் வெப்பத்தை சமன் செய்யவும், சிவரூபத்தை குளிர வைக்கவும் சங்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.

கடலில் இருந்து கிடைக்கும் சங்கு, பாற்கடலில் இருந்து தோன்றிய சந்திரனின் அம்சமாகப் போற்றப்படுகின்றது.

கார்த்திகை மாதத்தில் சிவலாயங்களில் 108, 1008 என்ற எண்ணிக்கையில் சங்காபிஷேகங்கள் நடக்கும்.
அபிஷேகம் செய்யும் விதமவாழை இலை மீது தானியங்களைப் பரப்பி அதன் மீது சங்குகளை ஒழுங்கு முறையாக வைத்து நீர் வார்த்து மாவிலை, தர்ப்பை நுனிகளை விட்டு சங்குக்கு பூஜை செய்து சுவாமிக்கு அபிஷேகிப்பர்.

சந்திர அம்சம் கொண்ட சங்கிற்கு, பூஜைகளின் போது, சூர்யனின் காயத்ரி மந்திரத்தையேச் சொல்லி பூஜிக்க வேண்டும் என்ற நியதியையும் சாஸ்திரங்கள் வகுக்கின்றன.

சங்கினில் நிரப்படும் தீர்த்தம் மேலும் குளிர்ந்து, அதைக் கொண்டு அபிஷேகம் செய்கையில் சிவபெருமான் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு வரம் அளித்ததைப் போல, பக்தர்களுக்கு என்றும் வளமான வாழ்க்கையை அளிப்பார் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

108 அல்லது 1008 சங்குகளில் நீர் நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்த நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டு செய்கிற காட்சி சிலிர்க்க வைக்கும்!

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமை சந்திர பகவானுக்கு மிக உரியது.

கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து
சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய
ஸோமவாரம் எனும் திங்கட் கிழமைகளில், சந்திர அம்சமான சங்குகளுக்கு பூஜை செய்து,
சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது, சந்திரன் பலம் பெற்று வளர்ந்ததைப் போல, நம் வாழ்க்கையையும் நல்வளங்கள் அனைத்தும் பெருகும்.

சந்திரன் இன்பங்களுக்கு அதிபதியாக விளங்குபவர். ஸோமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர். ஔஷதம் எனும் மருந்துப் பொருட்களுக்கும், மூலிகைகளுக்கும் அதிபதியாக விளங்குபவர்.

சங்காபிஷேகம் நடக்கும் முக்கியமான கோயில்கள் திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு, திருவானைக்கோயில், பேரூர், போளூர், திருவேடகம், திருப்பாதிரிப் புலியூர், ராமேஸ்வரம், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆகிய கோயில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்து ஸோமவாரம் எனும் கார்த்திகை மாதத் திங்கட் கிழமைகளிலும், சங்கு அபிஷேகம் காணப் பெறுவது பெரும் பேற்றினை அருளக் கூடியது.

சங்காபிஷேகத்தைப் பார்த்தாலோ, சிவமூர்த்தத்திலிருந்து விழும் தீர்த்தத்தைப் பருகினாலோ நம் உடல்நிலை சமன் நிலை அடையும். தோஷம் நீங்கும். பிணிகள் அண்டாது.

இந்த நாட்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா விமரிசையாக நடைபெறும்.

கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் ஸ்ரீசந்திரசேகர மூர்த்திக்கு வெண்மை நிற மலர்கள் சூட்டி, வெண்பட்டாடை அணிவித்து வழிபட்டால், ஆயுள் பலம் பெருகும். விருத்தி அடையும். மன அமைதி கிட்டும். வம்சம் தழைத்தோங்கும்!

கார்த்திகை சோம வார நாளில், சங்காபிஷேக தரிசனம் செய்தால் கடன் தொல்லையில் இருந்து முற்றிலும் மீளலாம்!


சங்கு அபிஷேகம் காண்போம் ! சங்கடங்கள் நீங்கப் பெறுவோம் !!

Welcome to vidyaarthini.com, a Hindu Web Portal !
சங்காபிஷேகம்
Category
சங்காபிஷேகம்
Description
Sangaabishegam
Author
Publisher Name
vidyaarthini.com

Leave a Comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top