You cannot copy content of this page

விநாயகர்

விநாயகர்

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே!

சுக்லாம்பரதரம் – சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் விநாயகர் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).
விஷ்ணும் – எங்கும் நிறைந்திருப்பவர்
சசிவர்ணம் – சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர்
சதுர்புஜம் – நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் – மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் – தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே – எல்லா தடைகளும் நீங்கட்டும்

விநாயகர் தான் இந்த மண்ணால் ஆகிய பூமிக்கும், சுடர் விட்டுப் பிரகாசிக்கும் விண்ணான ஆகாயத்துக்கும், சகலத்துக்கும் நாயகன், அதாவது தலைவன் ஆகிறான்.

யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். மிகவும் அன்பான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர்.

அங்கு இங்கு என எணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்

வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன்.

ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.

இந்து மதம் முழுவதற்கும் பொதுவாய் எழுந்தருளியிருக்கும் தெய்வம் விநாயகர்.

எந்த ஒரு நற்காரியத்தைத் தொடங்கு முன்னும் விநாயகர் வணக்கத்துடன் தொடங்கும் போது காரியம் சித்தியடையும் என்பது நம்பிக்கை.

51 விநாயகர் வடிவங்கள்

 1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.
 2. மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்
 3. த்ரைலோக்ய. மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
 4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி
 5. ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.
 6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
 7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
 8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
 9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
 10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
 11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
 12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
 13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
 14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
 15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
 16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
 17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
 18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
 19. விஜய கணபதி: வெற்றி.
 20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
 21. ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
 22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
 23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
 24. விரிவிரி கணபதி: விசால புத்தி.
 25. வீரகணபதி- தைரியம்.
 26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.
 27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.
 28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
 29. குமார கணபதி: மாலா மந்திரம்.
 30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.
 31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
 32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
 33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
 34. யோக கணபதி: தியானம்.
 35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
 36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
 37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
 38. நவநீத கணபதி: மனோவசியம்.
 39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
 40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
 41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
 42. குரு கணபதி: குருவருள்.
 43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
 44. சிவாவதார கணபதி: சிவபக்தி.
 45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
 46. ரக்த கணபதி: வசிய விருத்தி.
 47. அபிஷ்டவாத கணபதி: நினைத்ததை அடைதல்.
 48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
 49. மகா கணபதி: ப்ரணவமூலம்.
 50. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை

விநாயகர் உருவ ரஹஸ்யம்

யானை முகம், ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறு எழுத்துக்கள் உள்ளவர். விநாயகர் என்பது ஆறு எழுத்து.

இவரை வழிபடுவோர் ஏழு பிறவிகளில் இருந்தும் விடுபட்டு, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று சம்”பத்து”க்களுடன் வாழ்வார்கள்.

இவருடைய திருமேனி மூன்று வகையில் ஆனது. இடைக்குக் கீழே பூத உடம்பு, இடைக்கு மேல் கழுத்து வரை தேவ உடம்பு, தலை மிருகத் தலை, ஒரு கொம்பு ஆண் தன்மை, கொம்பில்லாத பகுதி பெண் தன்மை, யானைத் தலை அஃறிணை, தெய்வ சரீரம் உயர்திணை.

தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அஃறிணையாய் எல்லாமுமாய் விளங்குபவர் விநாயகர். “தத்துவ மசி” என்ற ஆறு எழுத்தின் வடிவமே விநாயகர்.

பிரணவ வடிவினரான விநாயகரின் காது, அகன்ற யானைத் தலை, வளைந்த துதிக்கை ஆகியவை “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் வடிவத்தைக் குறிக்கும்.

இவரது திருவடிகள் ஞான சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும். இவருடைய பேழை வயிற்றில் உலகெல்லாம் அடங்கும்.

ஐந்து கரங்களும் ஐந்து தொழில்களின் குறியீடு. எழுத்தாணி பிடித்த கரம் படைப்பையும், அங்குசம் கொண்ட கை அழித்தலையும், பாசம் வைத்திருக்கும் கை மறைத்தலையும், அமுத கலசம் ஏந்திய துதிக்கை அருளையும் குறிக்கும்.

மூன்று கண்களின் குறியீடு முறையே சூரிய, சந்திர, அக்னியாகும். இவரின் உருவ அமைப்பில் எல்லா உருவங்களும் இருப்பதாய்க் கூறுகிறது “பார்கவ புராணம்” என்னும் விநாயக புராணம்.

இவருடைய நாடி பிரம்மா, முகம் வி்ஷ்ணு, கண் சிவன், இடப்பாகம் சக்தி, வலப்பாகம் சூரியன் என்று அமைந்திருப்பதாய்க் கூறுகிறார்கள்.

நம் உடலில் மூன்று விதமான நாடிகளும் இணைந்துள்ள மூலாதாரத்துக்கும் அதிபதி “கணபதி”யே ஆவார்.

இட, பிங்கள, சூஷ்மன நாடிகள் மூன்றும் சேரும் இடுப்புக்குக் கீழ் பாகத்தை பூமிக்குச் சமமாகச் சொல்லுவதுண்டு. இங்கே தான் மூலாதார சக்தி உறைந்து கிடக்கிறது. அது எழும்பி மேலே உள்ள “ஸ்வாதிஷ்டானம்” என்னும் நீரின் சக்தியுடன் சேர்ந்து கொண்டால் தான், பூமியில் உள்ளே கிடக்கும் விதையில் இருந்து முளை வெளிக் கிளம்பிப் பின்னர் அது வளர்ந்து பெரிய விருட்சமாய் ஆவதைப் போல் நம் “குண்டலினி சக்தி” படிப் படியாக மேலே எழும்பிப் பின் சகஸ்ராரத்தை அடைய முடியும். அந்த மூலாதாரத்துக்கு அதிபதியாகவும் கணபதி தான் விளங்குகிறார். அதற்காகவும் கணபதி வழிபாடு செய்யப் படுகிறது.

இவர் நம் உடலில் உள்ள ஆனந்த மய கோசத்துக்கு அதிபதியும் ஆவார். பிள்ளையாருக்கு அருகம்புல் சாத்துவதின் உள்நோக்கமும் என்னவென்றால், அருகு நாம் நட்டால் ஒரே இடத்தில் இராமல் குறைந்தது ஆறு இடங்களில் வேரூன்றும். நம் உடலில் மூலாதாரத்தில் இருக்கும் விநாயகர், குண்டலினி சக்தியை அங்கே இருந்து எழுப்பிக் கொண்டு வந்து மற்ற ஆறு ஆதாரங்களில் தங்கித் தழைக்கச் செய்து கடைசியில் சகஸ்ராரத்தை உணர வைக்கிறார். அது பற்றிப் பார்த்தால் நம் தலையின் உச்சியில் இருந்து உள்ளே உள்ள உள்ளொளியானது புருவம் வரையும், தலையின் பின் பகுதியிலும் இணைக்கிறது. இந்தக் கண்ணைத் தான் ஞானக் கண் என்று சொல்லுவார்கள். இந்த ஞானக் கண் விழிப்பு உண்டாவது மூலாதாரத்தில் இருக்கும் விநாயகரின் அருளால்தான்

விநாயகர் ‘ஓம்’கார மூர்த்தியானவர் என்பதை விளக்க ஆனைமுகத்தானாக அவர் உருவெடுத்துள்ளார். அண்டங்கள் யாவும் அவரிடத்து அடங்கியுள்ளன என்பதை விளக்க அவரது பேழை வயிறும், தன்னிடத்து தங்கியிருக்கும் யாவையும் தனது சக்தியால் தாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை வயிற்றைச் சுற்றியிருக்கும் சர்ப்பமும் உணர்த்துகிறது. ஆற்றலிலே மிக்கவர் என்பதைக் காட்ட தும்பிக்கையுட்பட்ட ஐந்து கைகளைக் கொண்டுள்ளார். மக்களை நல்வழியில் நடத்துதலை உணர்த்த அங்குசமும் துன்பத்திலிருந்து காக்கப்பாசமும், சிந்தனாசக்தி வளர்ப்பது அவசியம் என்பதைக் காட்ட ஜபமாலையும்,கல்வியை உணர்த்த தந்தமும், அவரது கைகளில் இருக்கின்றன.

மேலும் தும்பிக்கை எப்பக்கம் வளைந்து உள்ளதோ அதன்படி வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என இயம்ப்படுகிறார்.

வழிபடும் முறை

நம் உடலில் வாதம்-பித்தம்- சிலேத்துமம் எனப்படும் கபம் என்று மூன்றுவிதமான தோஷங்கள் இருக்கின்றன.

வாதம் நீர்த்தன்மை கொண்டது. வாதம் உள்ளவர்கள் எப்போதும் வெயிலையே விரும்புவார்கள் எனச் சொல்லப் படுவது உண்டு.

நாராயணன் நீர் மேல் இருப்பவர். அவர் எப்போதும் நீர் மேல் இருப்பதால் அவர் வழிபாட்டுக்கு வெப்பம் உள்ள துளசியை வைத்திருக்கிறார்கள்.

பரமசிவனோ கோடான கோடி சூரிய வெப்பத்தை உள்ளடக்கியவர், அக்னி ஸ்வரூபமானவர். அவரின் வழிபாட்டுக்கு குளிர்ச்சி தரும் வில்வம் சிறந்தது. சிவனின் வெப்பத்தைத் தனிப்பதற்காகத்தான் அவருக்கு அபிஷேகங்கள் செய்யப்படுகன்றது.

சிலேத்துமம் மத்திமமானது. அதற்காகத் தான் அருகம்புல்.

அருகம்புல் மூலிகை வைத்தியத்தில் முதன்முதல் பயன்படுத்தப் பட்டதாய்ச் சிலர் சொல்கிறார்கள்.

இது நம் உடலில் படிந்திருக்கும் அதிகப் படியான உப்பைக் கரைத்து வெளியேற்றி ரத்தத்தைச் சுத்தமாக்கி நீரின் அளவை மிதப் படுத்தும்.

அதனால் தான் விநாயகர் வழிபாட்டுக்கு அருகம்புல் சிறப்பாகச் சொல்லப் படுகிறது.

எருக்கம் பூ மாலையும் வன்னி மர இலைகளும் விநாயகருக்கு உகந்தவை. வன்னி மர இலைகளும் மருத்துவ குணம் மிகுந்தது. நச்சுத் தன்மையை முறியடிக்கும், மேலும் சருமப் புண்களை இந்த மரத்தின் இடையே புகுந்து வரும் காற்று நீக்கும் தன்மை கொண்டது. விஷக்கடி, சொறி, சிரங்கு, அலர்ஜி போன்றவை குணமாக வன்னி மரத்தின் இலை, காய், பட்டை ஆகியவற்றை உலர்த்திப் பொடி செய்து தேனோடு கொடுப்பது உண்டு, அல்லது சொறி, சிரங்குகளில் தேங்காய் எண்ணெய் கலந்து தடவுவதும் உண்டு. இலையைச் சுத்தமான பசும்பாலில் அரைத்து உட்கொண்டால் கடும் நோய்கள் குணம் ஆகும்.

விநாயகரை வலம் வரும்போது ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. விநாயகரை வழிபடுவதால் ஏழரைச் சனி உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் குறைவாக இருக்கும்.

விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பதிலும் ஒரு பெரும் தத்துவம் அடங்கி இருப்பதாய்ப் பரமாச்சாரியார் கூறி உள்ளார்.

தேங்காய்க்கு மூன்று கண்கள் உண்டு. இது ஈஸ்வர ஞானத்தைக் குறிக்கிறது. ஈஸ்வரனைப் போன்ற மூன்று கண்கள் உடைய காயை விநாயகருக்கு நிவேதனம் செய்வதின் மூலம் நம்மை விட உயர்ந்த ஒன்றை இறைவனுக்கு அர்ப்பணிப்பது இதன் தத்துவம்.

சிதறுகாய் உடைக்கும்பொழுது நமது மண்டையில் உள்ள ஆணவம் வெடித்து சிதறுவதாகக் கருதி, தேங்காயின் மண்டை ஓடுகள் சிதறும் விதமாக சிதறு தேங்காயை உடைக்கிறோம்.

மண்டை ஓட்டைப் போலக் கெட்டியான தேங்காயை உடைத்துச் சிதற அடிப்பதன் பொருள் நம் மனதில் உள்ள ஆணவமும் அதுபோல் சிதறிப் போய்த் தேங்காயின் உள்ளே உள்ள இனிப்பான நீர்போல் இனிமை நிரவ வேண்டும் என்பது தான்.

விநாயக வழிபாடு நம் நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகலிளும் நடைமுறையில் உள்ளது.

பர்மாவில் “மகாபிணி” என்றும், மங்கோலியாவில் “தோட்கர்” என்றும், திபெத்தில் “சோக்ப்ராக்” என்றும், கம்போடியாவில் “பிரசகணேஷ்” என்றும், சீனாவில் “க்வான்ஷிடியாக்” என்றும், ஜப்பானில் “விநாயக் ஷா” என்றும் வணங்கப் படுகிறார்.

இந்தோனேஷியாவில் சதுர்முக கணபதி என்றும், ஜப்பானிலும், சீனாவிலும் அர்த்தநாரி (பாதி பெண், பாதி ஆண்) உருவத்திலும் விநாயக வழிபாடு நடைபெறுகிறது.

விநாயகர் சன்னதியை ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. துளசி விநாயகருக்கு உகந்தது அல்ல.

மஞ்சள் தூளில் நீர் சேர்த்தோ, அல்லது களிமண்ணாலோ அல்லது சாண உருண்டையாலோ விநாயகரைப் பிரதிஷ்டை செய்து விநாயகரை மிகவும் சுலபமாய் வழிபடலாம். உட்கார்ந்த நிலையில் உள்ள விநாயகரை அருகம்புல், எருக்கம் பூ சாத்தி ஆவாஹனம் செய்து பூஜை செய்வது நன்மை தரும்.

களிமண்ணால் ஆன விநாயகருக்குத் தான் விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து பின்னர் அந்த விநாயகரைக் கடலிலும் கரைக்க வேண்டும்.

இந்த உலகம் மண்ணால் ஆனது. ஒரு காலத்தில் முழுதும் கடல் நீரினால் சூழப் பட்ட இவ்வுலகம் கடல் பின் வாங்கியதால் தோன்றியது என்றும் சொல்வதுண்டு. அந்தக் கடல் பின்வாங்காமல் முன் வாங்கினால் இவ்வுலகம் மீண்டும் கடலுக்குள் போவதும் உறுதி!

பூமித் தாய்க்கும், கடலரசனுக்கும் நன்றி செலுத்தும் விதமாய்க் களிமண்ணால் ஆன விநாயரைப் பிடித்து வைத்துப் பூஜை செய்துப் பின்னர் அதைக் கடலிலும் சேர்க்கிறோம்.

கேட்ட உடனேயே வரம் கொடுப்பவர் விநாயகர். ஆனால் நாம் வேண்டுவது அனைவருக்கும் நன்மை அளிக்கக் கூடியதாய் இருத்தல் வேண்டும்.

விநாயகரை வழிபடுவதால் எல்லா வினைகளும் வேரோடு அறுக்கப் படுகிறது.

நம் உடலில் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பல எண்ணற்ற நரம்புகள் உள்ளன. அந்த நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாய் இயங்கினால்தான் நம்மால் எந்த வேலையையும் சிறப்பாகச் செய்ய முடியும். அதற்கு வழி காட்டுவது விநாயக வழிபாடு.

விநாயகர் சன்னிதிக்கு முன்னால் நாம் இரண்டு கைகளாலும் தலையின் இரு பொட்டுக்களிலும் குட்டிக் கொள்ள வேண்டும்.

நம்முடைய அந்த இரு நெற்றிப் பொட்டுக்களிலும் தான் சுறுசுறுப்பைத் தூண்டும் நரம்பு மண்டலம் ரத்த ஓட்டம் பாய்ந்து சுறுசுறுப்பைப் பெறும்.

இரண்டு கைகளையும் மாற்றி வைத்துக் கொண்டு வலது கையால் இடப்பாகத்திலும், இடது கையால் வலப்பாகத்திலும் குட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு “தோப்புக்கரணம்” போட வேண்டும்.

யோக முறையில் ஒன்றான இதன் பெயர் சம்ஸ்கிருதத்தில் உள்ளது. இதன் அர்த்தம் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது எனப் பொருள். இது தான் மருவி தோப்புக் கரணம் என்றாகி விட்டது.

இவ்வாறு தோப்புக்கரணம் போட்டு வழிபடுவதால் நம்முடைய உடலில் மூலாதாரம் என்று சொல்லப் படும் இடுப்பின் பின் பகுதியில் உள்ள சக்தி மேலெழும்பி உடல் எங்கும் பரவி சுறு சுறுப்பைக் கொடுக்கிறது. மனம் அமைதி அடையும், உடல் சுறுசுறுப்படையும்.

விநாயகருக்கான பிரசாதங்கள்

பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் கரும்பும், நற்கனிகளும், சர்க்கரையும், நெய்யும், எள்ளும், பொரியும், அவலும் அப்பமும், அதிரசமும், வடையும், சுண்டலும், பட்சணம் எல்லாவற்றிற்கும் மேலாய் மோதகமும் விநாயகருக்கு உரிய பிரசாதங்கள்.

தியாகத்தின் உயர்வைக் காட்ட தனது தந்தங்களில் ஒன்றை இழந்து ஏகதந்தன் எனப்பெறுகிறார்.

விநாயகருக்கு இன்னும் பல பெயர்கள் அடியார்களால்
வழங்கப்படுகின்றன.

மூஷிகவாகனன்[பெருச்சாளி வாகனன்] வித்யராஜன்.[கல்விக்கு அரசன்]
ஓங்காரரூபன்[ஓம் என்னும் மந்திர வடிவினன்],ஞானகணபதி [ஞானியர் கூட்டத்திற்கு தலைவன்]


விநாயகர் வழிபாடு யாவருக்கும் எளிதானதாகவும், விநாயகர் வணக்கத்துடன் தொடங்கும் எக்காரியமும் சித்திபெறும் என்பதாலும் சைவ வைணவ பௌத்த மத மக்களிடம்
விநாயகர் சிறப்பாகப் போற்றப் படுகிறார்.

விநாயக சதுர்த்தி, விநாயக சஷ்டி, போன்ற விரத
தினங்களில் விநாயகரை நினைந்து அனுசரிக்கப்படும்.

கணநாயகாஷ்டகம் :

‘முதாகராத்த மோதகம்’ எனத் தொடங்கும் கணேச பஞ்சரத்னம் (5 பாடல்கள்) போல, கணநாயக அஷ்டகம் (எட்டு பாடல்கள்) சிறப்பு வாய்ந்த ஒன்று. விநாயகரை வழிபடும்போது இந்த கணநாயகாஷ்டகத்தைச் சொல்வது அனைத்து பாபங்களையும் அழித்து, நற்கதி அடைய வழிசெய்யும்.

ஸ்ரீ கணநாயகாஷ்டகம்

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் I
லம்போதரம் விசா’லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம் I
பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் I
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் I
சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
கஜவக்த்ரம் ஸுரச்’ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம் I
பாசா’ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே I
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா I
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம் I
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர: I
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி II

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க
வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான்


விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்

கண்ணிற் படுமின் பணிந்து.!

என்று ஒரு பாடல் இருக்கிறது.

நம்முடைய வினை எல்லாவற்றையும் அதாவது நாம் செய்யற, செய்யப் போற பாவங்கள் எல்லாவற்றையும் வேரோடு அறுத்து விடுவான் விநாயகன் என்று முதல் வரிக்கு அர்த்தம்.

விநாயகன் நம்முடைய வேட்கை தணிவிப்பான் என்றால் நம்முடைய நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

“விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்” விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் தலைவன் என்று பொருள்.

“தன்மையிலே கண்ணிற்படுமின் கனிந்து!”ன்னு சொல்றாங்க. “கனிந்து”ங்கிற வார்த்தையோட பொருள் விநாயகனின் சக்தியை நாம் முழுமையாக உணர்ந்து கொண்டு, மனம் கனிந்துன்னு இந்த இடத்திலே பொருள் கொள்ள வேண்டும்.

வெவ்வினையை வேரறுக்க
வல்லானை, விண்ணிற்கும், மண்ணிற்கும் நாதனை, மனமுருக நினைந்து, நமது
விக்கின தீமைகளை தீர்ப்போமாக.

விநாயகரைப் பணிவோம் ! வினைகள் நீங்கப் பெறுவோம் !!

Welcome to vidyaarthini.com, a Hindu Web Portal !
விநாயகர்
Category
விநாயகர்
Description
Lord Vinayaka
Author
Publisher Name
vidyaarthini.com

Leave a Comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top