You cannot copy content of this page

மார்கழியின் சிறப்பு


மார்கழியின் சிறப்பு

மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர்.

விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.

வீதியெங்கும் வண்ணக் கோலங்கள் மின்னுவதும், விடியற்காலையில் ஒலிக்கும் பஜனைப் பாடல்களும், மார்கழி மாதத்தின் தனிச் சிறப்புகள்.

‘மார்கழித் திங்கள்  மதி நிறைந்த நன்னாளாம்’ என்று கோதை நாச்சியார் தனது திருப்பாவைப் பாடல்களால் கண்ணனை கன்னித் தமிழின் துணை  கொண்டு ஆராதனை செய்த  மாதம் இது.

ஆண்டாளின் அடிதொட்டு, மணமாகாத பெண்கள் தாங்கள் நினைத்தபடி வரன் அமைய இன்றளவும்  மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து  முடித்து திருப்பாவைப் பாடல்களை மனமுருகப் பாடுவதை சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில்  காண முடிகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம்  இல்லங்களில் மார்கழி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் எதுவும் செய்வதில்லை.

மார்கழி மாதத்தை ஏன் உயர்வாகக் கொண்டாட வேண்டும்?

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களைப் பொறுத்த வரை ஒரு நாள் கால அளவே ஆகும்.

அந்த வகையில் கணக்கிட்டால்  நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே. ( 1 மாதத்திற்கு 2 மணி  நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள்).

இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத  காலம் தேவர்களுக்கு பகல்  பொழுதாக அமைகிறது. இந்தக் காலத்தை உத்தராயணம் என்று அழைக்கிறோம்.

ஆடி மாதம் முதல் மார்கழி மாதம்  வரை வருகின்ற ஆறு மாத காலம்  தேவர்களுக்கு இரவுப் பொழுதாக அமைகிறது. இதை தட்சிணாயணம் என்று சொல்கிறோம்.

இந்த தட்சிணாயணத்தின் நிறைவுப் பகுதி, அதாவது, தேவர்களைப்  பொறுத்தவரை இரவுப் பொழுது – நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி  முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம்.

இந்த காரணத்தால்தான் தேவர்களை வரவேற்கின்ற விதமாக மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள்  வண்ணக்  கோலமிடுவதை வழக்கமாகக் கொண்டனர்.

மார்கழியின் தனிச்சிறப்பே அதி காலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு கோலத்தின் நடுவே  விளக்கேற்றி வைத்துப் பாருங்கள்,  மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். மகாலட்சுமியின் அருள் பூரணமாகக் கிட்டும்.

அரங்கநாதனையே மணாளனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் இது. அவரது உயரிய பக்தியின்  காரணமாகத்தான் அவரால் ஆண்டவன் அடி சேர முடிந்தது. அதே போன்று ராம நாம ஜபத் தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ் சநேயர் பிறந்ததும் மார்கழி மாத  அமாவாசை நாளில்.

மார்கழி மாதத்தில் வரும் வளர் பிறை ஏகாதசித் திருநாளை வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடுகிறோம். வைணவர்கள் மட்டுமின்றி  இந்துக்கள்  எல்லோருமே விரதம் இருக்கும் நாள் வைகுண்ட ஏகாதசி.

வைகுண்ட ஏகாதசி நாள் அன்று விரதம் இருப்பதோடு   உறங்காமல் கண் விழிக்கவும் செய்வார்கள். அந்த நன்னாளில் அதிகாலை வேளையில் ஆலயங்களில் சொர்க்க வாசல் திறக்கப்படும். அன்றைய தினத்தில்  பெருமாளை சேவிப்பவர்கள் சொர்க்கத்தை அடைவர் என்பது பெரியோர் வாக்கு.

இவ்வாறு பக்தி சிந்தனைக்கு உரிய உயரிய மாதமாக மார்கழியை  வைத் திருக்கிறார்கள் நம் பெரியோர்கள்.

மார்கழி மாதத்தில் சூரியனின் நிலை.

சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனு இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

கால நிலை

குளிர் காலத்தின் துவக்கமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. பூமியின் வடகோளப்பகுதியில் உள்ளோருக்கு திசம்பர், சனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர்காலங்களாகும். குளிர்காலத்தின் துவக்கம் திசம்பர் 2 அல்லது 3 வது வாரத்தில் துவங்குகிறது.

ஜோதிட சாஸ்திர ரீதியாக ஆராய்ந்தால், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை ‘மார்க்கசிர’  என்று  வடமொழியிலும் மார்கழி என்று தமிழிலும் அழைக்கிறோம்.

மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. ஜோதிடப்  பிதாமகராகத் திகழ்பவர்  ம்ருகண்டு மகரிஷி. இவரது ‘ம்ருகண்டு சூத்ரம்’ மற்றும் ‘ம்ருகண்டு வாக்கியம்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே  அந்நாளில்  பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது என்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்டேயரின தந்தை இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்டேயரின ஜென்ம  நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.

சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு  அடுத்தபடியாக  நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர்.

தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்ற மகாயோகி  அவர். மார்கழி மாதத்திற்கு  உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில உதித்தவர்.

மார்க்கண்டேய சரித்திரம்  மரணத்தை வெல்லும் மார்கழி என்று இந்த மாதத்தின்  பெருமையை நமக்கு உணர்த்துகிறது. எனவேதான் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்ய மார்கழி  மாதத்தை தேர்ந்தெடுப்பாரகள், விவரம் அறிந்தவர்கள்.

மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள்.

தனுசு ராசிக்கு அதிபதி குரு  பகவான். அதாவது,  குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது.

நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும்  நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள்  உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள்.

பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக  இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய  காலம் மார்கழி.

‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி மார்க்கத்தால் கண்ணனை  அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டவே என்பதை நாம் உணர வேண் டியது அவசியம்.

மார்கழியைக் கொண்டாடுவோம்! மங்கலம் பெற்றிடுவோம்!

Scroll to Top