You cannot copy content of this page

திருமந்திரம் சரீர சித்தி

சரீர சித்தி

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்மை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

உடம்பினை முன்னம்இழுக்கு என்று இருந்தேன் உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யான்இருந்து ஓம்புகின்றேனே.

உயிர்போகாமல், காக்கும் வழி உடம்பு அழியாமல் காக்கும் வழியே, அதனால் உடம்பில் யோகசாதனை செய்தேன். உடம்பு மாயை அன்று. அது இறைவன் இருக்கும் கோவில் என அறிந்து உடம்பை பாதுகாக்கின்றேன்.

கழற்றிக் கொடுக்கவே கத்தி கழியும் கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து

உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு அழற்றித் தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே.

அஞ்சனம் போன்றுடல் ஐஅறும் அந்தியில் வஞ்சகவாதம் அறும்பத்தியானத்தில்

செஞ்சிறுகாலையில் செய்திடில் பித்தறும் நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.

மூலாதாரத்தில் எப்போதும் மனம் வைத்திருந்தால் சிவன் லிங்கத்திலிருப்பதைக் காணலாம். குரு உபதேசமும் கிடைத்ததாகும். நீலநிறமான பைரவியை மனத்தில் பதித்து அதுவே சதம் என்று வேறு நினையாதிருப்பவர்க்கு உலகம் அறிய நரையும் திரையும் மாறிவிடும். இளமையும் பெறுவர். என் குருநாதர் நந்தியின் மேல் ஆணை.

மூன்று மடக்குடைப் பாம்புஇரண்டு எட்டுள ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்

நான்ற இம்முட்டை இரண்டையும் கட்டியிட்டு ஊன்றியிருக்க உடம்பு அழியாதே.

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர நூறும் அறுபதும் ஆறும் இடம்வர

நூறும் அறுபதும் ஆறும் எதிரிட நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.

பிரம்ம விஷ்ணு ருத்திர கிரந்தி முடிச்சுகள் உள்ளன. அவற்றில் 2+8 நாடிகள் உள்ளன, இதை உணரும் துரியம் 12 விரல் பாவனை. விழிகளாகிய இரு முட்டைகளும் பார்த்தும் பாராது இருக்கக்கண்டு உள்முகமாக ஊன்றி இருப்பவர்க்கு உடம்பு அழியாது. கண் திறந்திருக்கும் ஆனால் பார்க்கும் புலனுடன் ஒன்றாது பார்வை இழந்ததால் விழிகளை இருமுட்டை எனலாம். நாள்தோறும் மூன்று வேளையும் சந்தியா காலங்களில் வலமாகவும் இடமாகவும் இவை தமக்குள் மாறி மாறியும் 166+166+166 என பிராணாயாமம் செய்தல்166 ஆண்டுகள் திடத்துடன் வாழலாம்.

சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால் மத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம்

தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே.

திறத்திறம் விந்துத் திகழும் அகாரம் உறப்பெறவே நினைந்து ஓதும் சகாரம்

மறிப்பது மந்திரம் மன்னிய நாதம் அறப்பெற யோகிக்கு ஆறநெறியாமே

சக்தி வடிவக் கோயிலாகிய இந்த உடம்பில் இடம் வலம் மாறி மாறி இப்படிச் சாதித்தால் மதியப் பொழுதில்- மார்புப் பகுதியில் நாதம் கேட்கலாம். திருக்கூத்தும் சிவனும் காணலாம். ஹம்+ஸம் எனும் மந்திரத்தை மூச்சை இழுக்கும்போதும் விடும் போதும் சொல்வது நாதத்தை எழுப்பும். இதை உணர்ந்து காண்பது யோகியின் தவப்பயன்.

உந்திச்சுழியின் உடனோர் பிராணனைச் சிந்தித்து எழுப்பிச் சிவமந்திரத்தினால்

முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் சிந்தித்து எழுப்பச் சிவன் அவன் ஆமே.

மாறா மலக்குதம் தன்மேல் இருவிரல் கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்

ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் கூறா உபதேசம் கொண்டது காணுமே.

சிவமந்திரமாகிய ஹம், ஸம் இரண்டையும் சுவாசத்திற்குப் பயன் படுத்தி உந்தியிலிருந்து பிராணன் எழுவதாகக் கருதவும். மூச்சை உள்ளே இழுக்கும்போது உந்தியுள் நிறைந்து அது பிராணவாயுவாக தோன்றும். மண்ணீரல் சென்று தசவாயுவாகப்பிரியும். அதுவரை கும்பகமாக இருந்த உள்வந்த அபானவாயுவை வெளிவிடுவதாக கருதுக. மூச்சு இழுப்பதால் வருவதும் போவதும் அபானனே. மூலாதாரத்தில் எப்போதும் மனம் வைத்திருந்தால் சிவன் லிங்கத்திலிருப்பதைக் காணலாம்.

நீல நிறனுடை நேரிழையாளொடும் சாலவும் புல்லிச் சதமென்று இருப்பார்க்கு

ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனும் ஆவர் பராநந்தி ஆணையே.

அண்டம் கருங்கில் அதற்கோர் அழிவில்லை பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்

உண்டி சுருங்கில் உபாயம் பலவுள கண்டம் கறுத்த கபாலியும் ஆமே.

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை அண்டத்துள் உற்று அடுத்து அடுத்துஏகிடில்

வண்டுஇச்சிக்கும் மலர்க்குழல் மாதரார் கண்டு இச்சிக்கும் காயமும் ஆமே.

சுழலும் பெரும் கூற்றுத் தொல்லைமுன் சீறி அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்

கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே நிழலுளும் தெற்றுளும் நிற்றலும் ஆமே.

நான் கண்ட வன்னியும் நாலுகலைஏழும் நான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்

ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக மான்கன்று நின்று வளர்கின்ற வாறே.

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற நீர்கொள நெல்லில் வளர்கின்ற நேர்மையைப்

பாகுபடுத்திப் பலகோடி களத்தினால் ஊழ்கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே.

நீலநிறமான பைரவியை மனத்தில் பதித்து அதுவே சதம் என்று வேறு நினையாதிருப்பவர்க்கு உலகம் அறிய நரையும் திரையும் மாறிவிடும். இளமையும் பெறுவர். என் குருநாதர் நந்தியின் மேல் ஆணை. குண்டலினி சக்தியுடன் சூரிய சந்திர அக்னி ஆகிய கலையுமாகிய நான்கையும் ஆறு ஆகவும் சகஸ்ராரம் ஆகிய ஏழையும் உடல் முழுவதுமான தச வாயும் இவைகளை அறிந்து இயக்கும் உணர்வினில் அகங்காரம் கொண்ட என் உடலும் உயிரும் வளர்கின்றன. பிறந்த நட்சத்திரம் அதற்கு அடுத்த நட்சத்திரம் அதற்கு எட்டாம் நட்சத்திரம் இவை மூன்றும் இவையோடு ஜன்ம, அனுஜன்ம, ஜன்மானுஜன்ம எனும் திடர் நட்சத்திரங்களும் ஆகியவற்றை நீக்கி மிச்சம் உள்ள நாளில் திருந்திய நாள் கண்டு அதில் யோகம் தொடங்குக.

எடுத்துக்காட்டு:- ஒருவர் அசுவதி என்ற நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் ஜன்மநட்சத்திரம்- அசுவினி, அடுத்த நட்சத்திரம்- பரணி, எட்டாம் நட்சத்திரம்- பூசம் இந்த மூன்றுடன் அனுஜன்ம- மகம் ஜன்மானுஜன்ம மூலம் நட்சத்திரம் ஆகிய ஐந்து நாளும் விட்டு பிறகு ஒரு நல்ல நாளில் யோகம் பயிலலாம்.

நட்சத்திரங்கள் வகைகள் மூன்று 1.ஜன்மநட்சத்திரம்- அசுவதி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை புனர்பூசம், பூசம், ஆயில்யம், 2.அனுஜன்ம நட்சத்திரம்- மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, 3.ஜன்மானுஜன்ம நட்சத்திரம். மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், அதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.

நட்சத்திரம் உடம்பில் நிற்கும் பகுதி

1.ஜன்மநட்சத்திரம்-

அசுவதி-

இந்திரயோனி-

உள்நாக்கு

2.அடுத்தநட்சத்திரம்-

பரணி

பிரம்மநாளம்

உச்சித்தலைத்துவாரம்

3.மூன்றாம்நட்சத்திரம்

கார்த்திகை

சகஸ்ராரம்

நெற்றிஉச்சி

4.நான்காம்நட்சத்திரம்

ரோகிணி

ஆக்ஞை

புருவநடு

5.ஐந்தாம்நட்சத்திரம்

மிருகசீரிடம்

விசுத்தி

தொண்டைக்குழி

6.ஆறாம்நட்சத்திரம்

திருவாதிரை

அநாதகம்

மார்புநடு

7.ஏழாம்நட்சத்திரம்

புனர்பூசம்

தொப்புள்

உந்தி

8.எட்டாம்நட்சத்திரம்

பூசம்

சுவாதிட்டானம்

சிறுநீர்த்துளை

9.ஒன்பதாம்நட்சத்திரம்

ஆயில்யம்

மூலாதாரம்

நாடவல்லார்க்கு நமன் இல்லை கேடுஇல்லை நாடவல்லார்கள் நரபதியாய் நிற்பர்

தேட வல்லார்கள் தெரிந்த பொருள் இது கூட வல்லார்கட்கும் கூறலும் ஆமே.

கூரும் பொருள் இது, அகார உகாரங்கள் தேறும் பொருளிது, சிந்தையுள் நின்றிடக்

கூறும் மகாரம் குழல்வழி ஓடிட ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே.

யோகசாதனையாகிய நாடுதல் செய்ய வல்லார்க்கு யமனும் இல்லை. உடல் கேடும் இல்லை. மனிதர்களில் தலைமை எய்தியவர். தேட நினைப்பவர்கள் ஆய்ந்த பொருள் இதுவே. சாதிக்க இயலாருக்கு இதைச் சொல்ல முடியாது. பிரணவமாகிய ஓம் சுழுமுனையில் நாதமாக ஓடிட அண்ணல் கடவுள் ஆறு ஆதாரங்களிலும் அமர்ந்து அவற்றைமலரச் செய்வார். மூலாதாரத்திலிருந்து கனலும், நெருப்பும், ஓம் எனும் மந்திரமும் சுழுமுனை நாடியில் செல்லும்போது அது விந்து-ஒளியாகவும் நாதம்-ஓசையாகவும் உச்சியில் மலரும். மூலாதாரத்தில் தியானித்து ஓம் என்று சொல்லும் பிரணவம்- ஒலியும் நாதமாக மேலே போவது யோகமுறையில் சிறந்தது. ஓ என்பதை மூலாதாரத்தில் சொல்லி 6 வினாடிக்குள் ம் என்பதை புருவ மத்தியை நினைத்து சொல்ல வேண்டும்.

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு

அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணில் அவன் இவன் ஆமே.

கடவுள் உடலில் இருக்கும் இடம் எது என யாரும் அறியவில்லை, ஆய்ந்து தெரிந்தவர்களுக்கு கடவுள் உள்ளே இருப்பதைக் காணலாம். அவர் கடவுள் தன்மை பெற்றவர் ஆவர்.

அவனிவன் ஆகும் பரிசு அறிவாரில்லை அவனிவன் ஆகும் பரிசது கேள்நீ

அவனிவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும் அவனிவன் வட்ட மாதாகி நின்றானே.

வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர்

ஒட்டி இருந்துள் உபாயம் உணர்திடக் கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே

காணலும் ஆகும் பிரமன் அரியென்று காணலும் ஆகும் கறைக்கண்டன் ஈசனைக்

காணலும் ஆகும் சதாசிவ அக்தியும் காணலும் ஆகும் கலந்துடன் வைத்தே.

ஒரேகடவுள் ஐந்து வடிவாய் உடலில் பிரிந்து நிற்பதையும் யோகத்தால் காணலாம். மும்மூர்த்திகள், மகேஸ்வரன், சதாசிவம் என்ற ஐவர். யோக சாதனையால் தச நாதங்கள் ஓசை கேட்கப் பெற்றோர் கடவுளை உடலில் உணர்வர்.

Scroll to Top