You cannot copy content of this page

திருமந்திரம் காட்டும் வழி


சிவமயம்

திருமூலர் துதி


ஐய மாகடல் ஆழ்ந்த உயிர்க்கெலாங்
கையி லாமல கம்மெனக் காட்டுவான்
மையல் தீர்திரு மந்திரஞ் செப்பிய
செய்ய பொற்றிரு மூலனைச் சிந்திப்பாம்.

“குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
யேபர விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்
மூலனாகின்ற அங்கணனே.”

தேவர் குறளும், திருநான்மறை முடிவும்,
மூவர் தமிழும், முனிமொழியும் – கோவை
திருவாசகமும், திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்!

இது ஔவையார் பாடல்.

திருக்குறள், நால்வேதங்கள், மூவரின் தேவாரம், மணிவாசகர் திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம் ஆகிய 11 நூல்களின் கருத்தும் மனிதரைப் புனிதம் ஆக்கும் ஒரே வழியையே காட்டுகின்றன என்று ஔவையார் பாடியுள்ளதே திருமந்திரத்தின் சிறப்புக்கு சாட்சியாகும்.

அகத்தியர், போகர், கோரக்கர், கைலாசநாதர், சட்டைமுனி, திருமூலர், நந்தி, கூன்கண்ணர், கொங்கணர், மச்சமுனி, வாசமுனி, கூர்மமுனி, கமலமுனி, இடைக்காடர், புண்ணாக்கீசர், சுந்தரானந்தர், ரோமரிஷி மற்றும் பிரமமுனி ஆகிய 18 சித்தர்களில் இவர் ஒருவரே, நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர்.

தவத்தால் ஞானம் பெற்ற சித்தர்கள் மவுனம் ஆகி விடுவார்கள். ஆனால் ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் உயர் நோக்கில், தான் பெற்ற ஞானத்தை நமக்கு அளித்து மகிழ்ந்தார் திருமூலர். அவருடைய வரலாறு அற்புதமானது. இவரது வரலாற்றை 28 பாடல்களில் பெரிய புராணத்தில் அழகாகப் பாடியுள்ளார் சேக்கிழார்.

திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அமையாது, உலக மக்களுக்கெல்லாம் அறத்தையும், ஆன்மிகத்தையும், மருத்துவத்தையும் எடுத்துரைக்கும் பொது நூலாக அமைந்துள்ளது.

ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல் என திருமூலர் தொடாத துறைகளே இல்லை.

திருமூலர் இயற்றிய மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திர பாடல்களே இதற்கு சான்றாகும்.

மூலன்உரை செய்த மூவாயிரம் தமிழ்
மூலன்உரை செய்த முந்நூறு மந்திரம்
மூலன்உரை செய்த முப்பது உபதேசம்
மூலன்உரை செய்த மூன்றும் ஒன்றாமே

திருமூலர் அருளிய மூவாயிரம் பாடல்களும், திருமூலரே சொல்லிய முந்நூறு மந்திரங்களும், திருமூலர் வழங்கிய முப்பது உபதேச மொழிகளும் திருமூலர் தமிழுக்குத் தந்த ஒத்த கருத்துடைய, ஒரே பொருளுடைய தமிழ் மறை எனப் போற்றத்தக்க பெருமை உடையவையாகும்.

பாயிரத்தில் – கடவுள் வாழ்த்து, வேதாகமச் சிறப்பு, திருமூலர் வரலாறு முதலியனவும்,

முதல் தந்திரத்தில் – உபதேசம், யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, கொல்லாமை, கல்வி, கள்ளுண்ணாமை முதலியனவும்,

இரண்டாம் தந்திரத்தில் – அட்ட வீரட்டம், இலிங்க புராணம், பஞ்ச கிருத்தியம், கர்ப்பக் கிரியை, சிவநிந்தை, குருநிந்தை முதலியனவும்,

மூன்றாம் தந்திரத்தில் – அட்டாங்க யோகம், அட்டமா சித்தி முதலியனவும்,

நாலாந் தந்திரத்தில் – திரு அம்பலச் சக்கரம், நவகுண்டம், வயிரவி மந்திரம் முதலியனவும்,

ஐந்தாம் தந்திரத்தில் – சரியை, கிரியை, யோகம், ஞானம், சத்திநிபாதம் முதலியனவும்,

ஆறாந் தந்திரத்தில் – குரு தரிசனம், துறவு, திருநீறு, தவவேடம், ஞான வேடம் முதலியனவும்,

ஏழாந் தந்திரத்தில் – ஆறாதாரம், சிவ பூசை, குரு பூசை, சமாதிக் கிரியை, பசு இலக்கணம் முதலியனவும்,

எட்டாந் தந்திரத்தில் – அவத்தைகள், வாய்மை, அவா அறுத்தல், பத்தி, முத்தி முதலியனவும்,

ஒன்பதாந் தந்திரத்தில் – பஞ்சாட்சரம், சிவ தரிசனம், சூனிய சம்பாஷணை, தோத்திரம் முதலியனவும் கூறப்பட்டுள்ளன.

சூனிய சம்பாஷணை என்பது, எளிதில் பொருள் விளங்காதனவாய்க் குரு மூலமாகப் பொருள் காண வேண்டியனவாயுள்ள
பாடல்களைக் கொண்டது. படிக்க வேடிக்கையாயிருக்கும்; உதாரணமாகக் கீழ்க் காட்டியுள்ள பாடலைக் காண்க:

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே – 2869.

[“வழுதலை வித்து – யோகப்பயிற்சி; பாகல்-வைராக்கியம்; புழுதியைத் தோண்டினேன்- தத்துவ ஆராய்ச்சி செய்தேன்; பூசணி பூத்தது- சிவம் வெளிப்பட்டது; தோட்டக் குடிகள் – இந்திரியாதி விடயங்கள்; பழுத்தது-கிடைத்தது; வாழைக்கனி- ஆன்ம லாபம்” இது செவப் பெரியார் துடிசைகிழார் எழுதி யுள்ள உரைக் குறிப்பு.]

திருமூலர் தான் உலகிற்கு வந்த நோக்கத்தைக் கூறிய பாடல் எண் 92

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளால் நான் இருந்தேனே

என் தலைவன் நந்தி. அவன் அருளாலே சிவனை நாடிப். பின் நந்தி அருள் துணையாலேயே சதா சிவ சிந்தனையுள் ஆழ்ந்தேன். நந்தி எம் பெருமான் அருள் வழி காட்டுதலின்படியே நான் மெய்ஞ்ஞான சித்தி பெற்றேன். இப்படியாக நான் பெற்றது உற்றது எல்லாமும் நந்தியால் தான்.நந்தி அருளால் தான் நான் நானேன்.

திருமூலர் திருக்கயிலாய பரம்பரையில் வந்தவர் என கூறிய பாடல் எண் 91


விளக்கிப் பரமாகும் மெஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன் சொற்போந்து
வளப்பின் கயிலை வழியில் வந்தேனே

ஆகம வேதப் பொருளை விளக்கி அருளியவன் பராபரன். மெஞ்ஞானச்சோதி வடிவானவன். அளவிடமுடியாத பெருமை உடையவன். அவனே இன்ப வடிவான நந்தியெம் பெருமான். மனித மனங்களை நடுங்கச் செய்யும் ஆணவ மலங்களைப் போக்கி அருள ஆனந்த நடமிடுபவன். இவன் அருளானையை ஏற்று, வளமிக்க திருக்கயிலாய மலைஞானகுரு, நந்தி பரம்மரையில் வந்தவன் நான்.


திருமூலர் தனது குரு பரம்பரை பற்றிக் கூறும் பாடல் எண் 67

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோடு எண்மரும் ஆமே

நந்தி எம்பெருமான் திருவருள் கருணையால், மறைப் பொருள் கேட்டுணர்ந்த மாமுனிகள் எட்டுப் பேர்களாவார். அவர்கள் சனகர், சனந்தனர், சனாதனர், சன்ற்குமாரர் என்ற நால்வர். சிவயோக மாமுனிவர், பதஞ்சலி (தில்லைத் தாண்டவம் கண்டு மகிழ்ந்த பாம்புக் காலுடைய தவயோகி), வியாக்கிரபாதர் (புலிக் காலுடைய முனிவர்), என்னையும் சேர்த்துக் குருமார் எட்டுப் பேர்.


திருமூலர் தனது சீடர்கள் யார், யார் என கூறிய பாடல் எண் 102

கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகைத் தேவர் நாதாந்தர்
புலம்கொள் பரமானந்தர் போக தேவர்
நிலம்திகழ் மூலர் நிராமயத் தோரே

திருவருளும் குருவருளும் கலந்த மெய்த் தவயோகிகள் காலாங்கர், அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர், போகநாதர், இவர்கள் அனைவரும் இறவா உடல் பெற்ற தவஞானிகள்.


திருமூலர் தான் பல ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறிய பாடல் எண் 80

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணைஅடிக் கீழே

தியானத்தில் இந்த உடலோடு பல கோடி தத்துவமாய் இருந்தேன். பகல் இரவு பேதம் தெரியாது தவயோகத்தில் நான் என்னை மறந்து இருந்தேன். வானுலகத் தேவர்கள் எல்லாம் வழிபட்டு வணங்கும் திருவடியை வணங்கித் துதித்தபடி இருந்தேன். என் தலைவன் நந்தியெம் பெருமான் திருவடியே துணை என்று அதன் கீழே அதனைப் பற்றியபடி பற்று ஒழிந்து இருந்தேன். (திருமந்திரம்)

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய இத்திருமூலரைப் பற்றிய முதற்குறிப்பை நம்பி ஆரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையில் “நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” என்னும் பகுதியிற் காண்கின்றோம்.

திருத்தொண்டத் தொகையிற் “பிரான்” என்னும் அருமைச் சொல்லால் இருவரையே ஆரூரர் போற்றினர். ஒருவரை “எம்பிரான்” எனப்போற்றி செய்தார். அவ்வொருவர் “சம்பந்தர்”. மற்றொருவரை “நம் பிரான்” என நயந் தேத்தினர். அவ்வொருவர் “திருமூலர்”. “கோவணம் பேணு மேனும் பிரான் என்பரால் எம்பெருமானையே”[1] என்னும் சம்பந்தர் திருவாக்கினின்றும் ‘பிரான்’ என்னும் சொல்லின் சிறப்புப் பெறப்படும். இத்தகைய சிறப்புப் பெயரைச் சம்பந்தருக்கும் திருமூலருக்குமே சூட்டினர் ஆரூரர் என்றால் ஆரூரருக்குத் திருமூலர்பால் இருந்த மதிப்பு எப்பெற்றியது என்பது நன்கு தெரிகின்றது. யோக நெறியைப் புலப்படுத்த வந்த நம்பி ஆரூரர் தவராஜ யோகியாகிய திருமூலரை “நம் பிரான்” என வியந்து போற்றாது வேறு எவ்வாறு தான் போற்றக்கூடும்! 1 திருப்புகலூர்-2-115-7. பிரான்-தலைவன் ‘தன்னை நானும் பிரான் என்றறிந்தேனே’- அப்பர்-5-91-8. ஆரூரருக்குப் பின்னர் வந்த நம்பியாண்டார் நம்பியும் ஆரூரரைப் பின்பற்றித் திருமூலரைப் ‘பிரான்’ என்றே தாமும் போற்றுகின்றனர்; தாம் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில் தம் உச்சியில் திருவடி சூட்டிய பிரான் திருமூலர் என்று அவரைப் போற்றி செய்து, அவரது வரலாற்றையும் சுருக்கிக் கூறியுள்ளார்.

சாத்தனூரிற் பசுக்களை மேய்த்திருந்தவனுடைய உடலிற் புகுந்து அவ்வுடலில் இருந்தபடியே சிவபிரானைத் “தமிழின்படி மன்னு வேதத்தின் சொற்படியே” பரவின பிரான் திருமூலர் என்று பின் வரும் பாடலில் விளக்குகின்றார்:

“குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின் படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சி அடிமன்ன வைத்த பிரான் மூலனாகின்ற அங்கணனே.”

நம்பியாண்டார் நம்பி இங்ஙனம் சுருக்கமாகக் கூறிய வரலாற்றைச் சேக்கிழார் பெருமான் தாம் அருளிய பெரிய புராணத்தில் விளக்கமாக எடுத்தோதியுள்ளார்.

சேக்கிழாரும் “திருமூல தேவர்” என இவரைச் சிறப்பித்துள்ளார். பெரிய புராணத்தின்படி திருமூலர் வரலாறு சுருக்கமாகப் பின் வருமாறு:

கயிலைமால் வரையைக் காத்தருளும் நாயகராம் நந்தி தேவரின் திருவருள் பெற்ற யோகிகளுள் ஒருவர் திருமூலர்.

திருமூலர் அணிமாதி சித்தி பெற்றவர்; பொதிய மலையிலிருந்த தம் நண்பர் குறு முனிவரொடு சில நாள் உடனுறைய விரும்பிப் புறப்பட்டுக் கேதாரம், பசுபதி நேபாளம், காசி, பருப்பதம், காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, திருவதிகை, தில்லை முதலிய தலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறைக்கு வந்து சிவதரிசனஞ் செய்து புறப்பட்டுச் சாத்தனூர் என்னும் ஊருக்கு அருகில் வரும் பொழுது அங்குப் பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தில் அவைகளை மேய்க்கும் இடையன் இறந்து கிடப்பதையும், அவனைச் சுற்றி பசுக்கள் கண்ணீர் விட்டுப் புலம்பி நிற்பதையுங் கண்டார்.

இந்த ஆயன் உயிர் பெற்று எழுந்தா லொழிய இப் பசுக்களின் துயரம் நீங்காதென உணர்ந்த இக் கருணையாளர் தமது உடலை ஒருபுறம் சேமித்து வைத்துத் தம் உயிரை இறந்து கிடந்த மூலன் என்னும் பெயரிய அந்த இடையன் உடலில் அடைவித்து மூலனாய் உயிர் பெற்றெழுந்தனர்.

ஆயன் எழுந்ததைக் கண்ட பசுக்கள், அவனை நாத்தழும்ப நக்கி, மோந்து அணைந்து, கனைப்பொடு நயந்து, களிப்பினால் வாலெடுத்துத் துள்ளித் துயரம் நீங்கின.

மாலைப்பொழுது வந்ததும் பசுக்கள் தத்தம் இல்லங்களுள் தாமே நுழைய மூலனாம் இவர் வெளியே நின்றார். இவர் காலந் தாழ்ந்து நிற்பதைக்கண்ட இவர் மனைவி இவருக்கு ஏதோ ஈனம் அடுத்ததுபோலும் எனக் கவன்று வந்து இவரை அழைக்க, ‘எனக்கு உன்னுடன் யாதொரு தொடர்பும் இல்லை’ என்று இவர் சொல்லிப் பொது மடம் ஒன்றிற் புகுந்தார்.

பிற்றைநாள் நல்லார் பலர் வந்து இவரை அழைத்தும் பயனில்லாது போக ‘இவருக்கு ஞான உணர்வு வந்து விட்டது, இவர் இனி வரமாட்டார்’ எனக்கூறி மூலன் மனையாளை அவர்கள் அழைத்துச்சென்றனர். அவர்கள் நீங்கியதும் திருமூலர் தமது பழைய உடலைத் தேடினர். அது காணப்படவில்லை.

ஆகமப் பொருனைத் தமிழில் வகுக்க வேண்டி இறைவன் உடலை மறைப்பித்தார் எனத் தமது ஞான உணர்வால் இவர் தேர்ந்து திருவாவவடுதுறையை அடைந்து ஓர் அரச மரத்தின் கீழ்ச் சிவயோகத்தில் அமர்ந்து, ஆண்டுக்கு ஒரு பாடலாகச் சைவாகமங்களில் உணர்த்தப்பட்ட ஞானம், யோகம், கிரியை, சரியை என்னும் நிலைகளை விளக்கும் மூவாயிரம் பாடல்களைத் தெள்ளுதீந் தமிழில் உலகோர் உய்யும்படிப் பாடி, மூவாயிரம் ஆண்டு இப்புவியில் மகிழ்ந்திருந்து கயிலையிற் சிவன் தாள் அடைந்தார்.

அவர் அங்ஙனம் பாடிய பாடல்களுக்குத் ‘திருமந்திரமாலை’, ‘திருமந்திரம்’ எனப் பெயர்கள் வழங்கலாயின.

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதங்கள்,
ஆதி படைத்தனன் ஆயபல் ஊழிகள்
ஆதி படைத்தனன் எண் இலிதேவரை,
ஆதி படைத்தவை ஆகி நின்றானே.

பூதங்கள், ஊழிக்காலங்கள், தேவர்கள் ஆகியோரைப் படைத்த ஆதி கடவுள் தான் படைத்த பொருள்களிலும் இருக்கின்றான்.

அன்பே சிவம்

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

அன்பு வேறு சிவம் வேறு என பிரித்து அறியாமல் இரண்டும் ஒன்றே என உணர்ந்தாரின் அன்பே சிவமாகும்.

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. – (திருமந்திரம் – 1)
ஒன்று அவன் தானே
இரண்டு அவன் இன்னருள்
மூன்றினுள் நின்றான்
நான்கு உணர்ந்தான்
ஐந்து வென்றான்
ஆறில் விரிந்தான்
ஏழு உம்பர்ச் சென்றான்
எட்டில் உணர்ந்திருந்தான்.

விளக்கம்:
இந்த உலகம் முழுவதையும் ஒரு மொத்த பொருளாகப் பார்த்தால் அது சிவபெருமானே! அவன் சிவன், சக்தி என இருவராய் நின்று அருள் புரிகிறான். நாம் அவன், அவள், அது என எவையெல்லாம் குறிப்பிடுகிறோமோ அவை அனைத்திலும் உயிராய் நிற்பவன். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கையும் உணர்ந்தவன், நமக்கு உணர்த்துபவன். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் வெல்ல உதவுபவன். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களிலும் விரிந்திருப்பவன். எழாவது இடமான சகசிரதளத்தில் விளங்குபவன். நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களிலும் கலந்திருப்பவன். அந்த சிவபெருமானை நான் வணங்குகிறேன்.

அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே. – (திருமந்திரம் – 766)

விளக்கம்:
அண்ணலாகிய சிவபெருமான் நம் சீவனுடன் கலந்திருக்கும் தன்மையை நாம் அறிந்திருக்கவில்லை. சிவபெருமானை தன்னுள்ளே கண்டு கொண்டவர்களிடம் அந்த சிவன் நீங்காதிருந்து அருள்புரிவான். அப்படி சிவனருள் பெற்றவர் சிவமே ஆவார்.

வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே – (திருமந்திரம்)

விளக்கம்:
வானத்திலிருந்து தானே மழை பெய்வது போல இறைவனும் தானே வந்து அருள் செய்யட்டும் என்று தயங்கி சிலர் அழைக்க மாட்டார். கன்று தன் தாய்ப் பசுவை அழைப்பது போல் நான் என் சிவபெருமானை அழைக்கிறேன், ஞானம் பெறுவதற்காகவே.

அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. – (திருமந்திரம்)

விளக்கம்:
அளகாபுரி வேந்தனான குபேரன் வட திசைக்குத் தலைவனாகவும், செல்வத்துக்கு அதிபதியாகவும் காரணம், அவன் சிவபெருமானை நோக்கிச் செய்த நிறைந்த தவம். அந்த தவத்தை நாமும் வடதிசை நோக்கி செய்வோம். அப்படிச் செய்வோரை ‘குபேரன் போல் நீயும் தலைவன் ஆவாய்’ என்ற சொன்ன என் சிவபெருமானை வணங்குகிறேன்.

இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே. – (திருமந்திரம்)

விளக்கம்:
கம்பீர ஒலியுடன் வேதியர் சொல்லும் அழகிய வேதத்தில் மந்திர வடிவமாகவும், மனதை உருக்கும் உணர்வாகவும், அந்த வேதத்தின் நுண்ணிய கருப்பொருளாகவும் உடையவன் முக்கண்களை உடைய சிவனே ஆம்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந் துய்மினே.

உயிர்குலம் யாவும் ஒன்றே. கடவுள் எல்லா உயிர்க்கும் ஒருவனே என உணர்ந்து பேதமில்லா அன்பில் ஊன்றி நின்றவர்களுக்கு யம பயமில்லை. மரணமில்லாது வாழலாம். பேதங்களால் வெறுப்பு, பகை முதலிய தீய உணர்வுகள் தோன்றும். மேற்கண்டவாறு நினைத்தால் நல்ல உணர்வே தோன்றும் என்பதால் நன்றே நினையுங்கள்.

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கு ஒருவாய் உறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒருகைப்பிடி யாவர்க்குமாம் பிறஎக்கு இன்னுரை தானே.

கடவுளுக்கு ஒரு பச்சிலை, பசுவுக்கு ஒரு கைப்புடிப் புல், தாங்கள் உண்ணும்போது ஒரு கைப்பிடி பிறரிடம் பேசும்போது பேச்சில் இனிய உரை இவைகளை யோகம் முயல்வோர் செய்க.

படமாடக் கோவில் பரமற்கு ஒன்று ஈயின் நடமாடு அக்கோயில் நம்பற்கு ஒன்று ஆகா

நடமாடு அக்கோயில் நம்பற்கு ஒன்று ஈயின் படமாடு அக்கோயில் பரமற்கு அது ஆமே.

தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது

கொண்டது மூன்று புவனமும் கொண்டதுதென்று எண்திசை நந்தி எடுத்துரைத் தானே.

கோயிலில் அமர்ந்த இறைவனுக்கு ஒன்றைச் செய்வார்களே அல்லாமல் இறைவனை நெஞ்சில் நிறுத்திய அடியார்க்கு எதையும் செய்யார்கள். அடியார்களுக்கு ஒன்று செய்தால் அதுவே இறைவனுக்கும் செய்வது ஆகும். இறைவன் விரும்பி இருக்கும் இடமடியர் மனமே.

தவம் செய்வோர் தாம் மனம் மகிழ்ந்து ஒன்றை உண்டால் அது மூன்று உலகங்களும் மகிழ்ந்து உண்டதற்குச் சமம். அதுபோல் அவர்களுக்கு ஒன்று கொடுக்க அவர்கள் அதை ஏற்றுக் கொண்டால் அதுவும் மூன்று உலகமும் ஏற்றுக்கொண்டதேயாகும்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத்தெளிந்தார்க்குச் சிவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே

மானுடர் உடல் சிவலிங்கம், உள்ளமே கருவறை. உடம்பே திருக்கோயில்கள் பகுதியாம். நுணுகி அறிந்தோர்க்கு உயிரே சிவசக்தி. மயங்கி நின்ற புலன்கள் ஐந்து மாணிக்க ஒளிவிளக்காகும்.

சிவசிவ என்கிலர் தீவினையாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்றிடச் சிவகதி தானே

தீவினை அழிக்கும் காரண பஞ்சாக்கரத்தைச் சொல்லாதவர் தீவினை உள்ளவரே, அதைச் சொல்லுபவர் தேவராக வருவர். சிவகதியாகிய வீடுபேரும் பெறுவர்.

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவசிவ வாய்வும் சேர்ந்து உள் அடங்க
சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள் சிவசிவ ஆகும் திருஅருள் ஆமே.

சிவமந்திரம் கூற வாயிருந்தும் கூறாதவர் ஊமர்களே. வாயு சுழுமுனையில் உள் அடங்கும்போது சிவசிவ என்று கூறி எல்லாமே சிவமே என தெளிபவர்களுக்கு சிவமே ஆகுமாறு திருவருள் கிடைக்கும்.

காரண பஞ்சாக்கரம்-

1 தூல பஞ்சாக்கரம்– நமசிவாய,
2 சூக்கும பஞ்சாக்கரம் – சிவாயநம
3 அதிசூக்கும பஞ்சாக்கரம்– சிவாய சிவ
4 காரண பஞ்சாக்கரம்- சிவசிவ
5 மகாகாரண பஞ்சாக்கரம்- சி

உள்ளமே கோயில்

செயல் அற்றிருக்கச் சிவானந்தம் ஆகும் செயல் அற்று இருப்பார் சிவயோகம் தேடார்
செயல் அற்று இருப்பார் செகத்தோடும் கூடார் செயல் அற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே.

செயல் ஏதுமின்றி சும்மா இருப்பதே சிவானந்தம் பெறும் வழி. அப்படி இருப்போர்க்கு அதுவே சிவயோகம், வேறு யோகம் தேடவேண்டாம். சும்மா இருப்பவர்கள் உலகத்தோடும் உலகியலோடும் ஒன்றியிருக்கமாட்டார்கள். அப்படி இருப்போர் சிவானுபவம் பெற்றவர் ஆவார். செய்தி – சிவானுபவம். வேறு நினைவு ஏதுமின்றி ஓம் சிவாய நம என்பதையே துரியத் தானத்தில் மேலோங்கியிருப்பதாக நினைத்திருப்பதுவே சும்மா இருத்தலாம்.

தன்னை அறியத் தனக்கு ஒருகேடு இல்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத்தான் இருந்தானே

தன் ஆன்மாவின் இயல்பை அறிந்து கொண்டால் மரணம் முதலிய கேடு இல்லை. அப்படி அறியாமலே பலர் கெடுகின்றனர். தன்னை அறியும் பதி அறிவைப் பெற்று அறிந்து விட்டால் அவனே கடவுளாகி அவனைப் பிறரும் அர்ச்சிக்குமாறு அவன் இருப்பான். உலகியல் அறிவால் ஆன்ம இயல்பை அறியமுடியாது.

அறிவுடையார் நெஞ்சு அகலிடம் ஆவது அறிவுடையார் நெஞ்சு அருந்தவம் ஆவது
அறிவுடையார் நெஞ்சொடு ஆதிப்பிரானும் அறிவுடையார் நெஞ்சத்து அங்கு நின்றானே.

சிவத்துமான அறிவுடையார் நெஞ்சம் முழுவதும் அகன்ற பிரபஞ்சமே வீற்றிருக்கும். அதுவே பெரிய தவமும் ஆகும். நெஞ்சில் கடவுள் நிற்பார்.

என்னை அறிந்திலேன் இத்தனைக் காலமும் என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது என்னை இட்டு என்னை உசாவுகின்றேனே.

இத்தனைக் காலமும் என்னை அறியும் முயற்சியில் ஈடுபடாதிருந்தேன். இப்போது என்னை அறிந்தபின் இதுவரையில் என்னைச் சூழ்ந்துள்ள எதையும் என்னால் அறியமுடியவில்லை. இந்த நிலையைக் கைவிடாது இருந்து என்னையே ஆராய்ந்து என்னையே நான் விசாரித்து உணர்ந்தேன்.

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்

பின்னை வினையைப் பிடித்து பிசைவார்கள் சென்னியில் வைத்த சிவன் அருளாலே.

தன்னை மாயைக்கு வேறான சிவ சம்பந்தமான பொருள் என்று உணரும் ஞானிகள் இன்னும் அனுபவத்துக்கு வராத முன்பிறவி முடிச்சுகளை அவிழ்ப்பர். பின்வரும் வினைகளை நீக்குவர். காரணம் தலையில் சிவன் இருப்பதை யோகத்தால் உணர்ந்தமையால்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடு அயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தமாமே

ஈசனுடன் இனைந்த நிலையில் இருப்பவர் ஆசைப்பட்டாலும் அதனால் துன்பமே உண்டாகும். துன்பம் தீர ஆசையை ஒழியுங்கள். ஆனந்தம் அடையலாம்.

நீ அது ஆனாய் என நின்ற பேருரை ஆயது நான் ஆனேன் என்னைச் சமைந்து அறச்
சேய சிவமாக்கும் சீர் நந்தி பேரருள் ஆயதுவாய் ஆனந்தானந்தம் ஆமே

நீ அதுவானாய் என ஆசிரியன் மாணவனுக்குக் கூறிய உபதேசம் அவன் அனுபவத்தில் நான் அது ஆனேன் எனமாறும். இப்படி மாறவைப்பது சிவமே. அருள்மயமாகிப் பின் சிவமயமாகும் ஆனந்தமே அனுபவம் ஆகும். 36 தத்துவங்களும் மாயை. மாயையால் இயற்கையின் அறிவை இழந்தேன். தத்துவங்களாகிய மாயையை உணர்ந்து அது எனக்கு அந்நியம் என்று தெளிந்ததும் அதன் பலனாய் நானே என்னை உணர்ந்து சிவமானேன். பிரபஞ்சப் பொருள்களெல்லாம் அணுக்களாகிச் சிவத்தை அடைந்தன. ஆன்ம கோடிகள் யாவும் அணுக்களாகி என்னை அடைந்தன.

வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளியானதே.

இமயம் நியமங்களுக்கு அடிப்படையானது சாந்தம். அதைச் சிதைக்கும் கோபத்தை விடுக. நினைவை அது செல்லும் இடம் வரையில் நீண்டு செல்லுமாறு அனுப்பு. இரவு பகல் எல்லா உயிர்க்கும் அருள் கொண்டு இறையருளில் தன்னை அழுந்தச் செய்து எப்போதும் ஒருமுக நினைவுடன் இருந்தால் மலையும் பிளக்கப்படும். ஆகாயவெளி அங்கு தெரியும். மலை-ஆணவத்தை. கடும்வெளி- தடையற்ற வெட்டவெளி.

பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன் அணி பூடணம்
தனனி மறைத்தது தன் கரணங்களாம் தன்னின் மறைந்தது தன் கரணங்களே.

மரத்தை மறைத்தது மாமதயானை மரத்தில் மறைந்தது மாமதயானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.

தங்கத்தால் செய்த நகையின் அழகு அது தங்கத்தால் செய்யப்பட்டது என்ற உண்மையையே மறைத்து விட்டது. அழகு மேலோங்கியது. தங்கத்தால் செய்யப்பட்டது என்று மட்டும் நோக்கும்போது அழகு மறைந்து தங்கச் சிறப்பு மேலோங்கியது.

நம் பொறிபுலன்களை மட்டும் நினைத்தபோது ஆன்மா மறைக்கப்பட்டது. ஆன்மாவை உணரும்போது உடலும் அதன் கருவிகளும் மறைந்து விடும். இவ்விரண்டும் மிக ஐக்கியமாய் இருப்பதே இதன் காரணம்.

மரத்தால் செய்த யானையின் வடிவமைப்பு அது மரம் என்பதை மறைத்துவிட்டது. மரத்தின் சிறப்பை நோக்கும்போது யானை என்பதே மறைந்து விட்டது.

பரம்பொருளே இவ்வுலகமும் பஞ்சபூதங்களுமாக ஆகியது என்பதி பூதங்களை பார்க்கும்போது அதில் பரம்பொருள் மறைந்து விடும். பரம்பொருளை உணர்ந்து பார்க்கும்போது பூதம் முதலிய பொருள்கள் அதற்குள் மறைந்து விடுகின்றன. இதில் வெளிப்படையாகத் தெரிவது காரணங்கள் அல்ல. அவைகளால் வெளிப்படும் காரியங்களே.

காரணத்தை நன்கு உணர்ந்தால் காரியத்தில் வந்த குழப்பமும் மயக்கமும் நீங்கித் தெளிவு ஏற்படும்.

நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே
ஆயத்தவர் தத்துவம் உணர்ந்தாங்கு அற்ற நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே

பரிசன வேதி பரிசித்தது எல்லாம் வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே

அன்பில் நிறைந்து நிற்பவன் இறைவன் மலமில்லாத அன்பை அவன் அருள்வான். தத்துவம் 36ம் உணர்ந்து அவற்றின் மாயையில் சிக்காது நீங்கி வாழ்பவர்க்கு வீடுபேறு அளிக்கும் குருவாக இறைவனே வருவான். அவன் சுத்தனாகவும் நித்தனாகவும் இருப்பதால் அவன் மீது கொண்ட அன்பும் அந்த இயல்பு உடையதாகும்.

உலோகங்கள் எல்லாவற்றையும் பரிசத்தால் பொன்னாக்கும் ஒரு மருந்து பரிசனவேதி எனும் ரசாயனம். இது எல்லாவற்றையும் பொன் ஆக்குவதுபோல் குருவின் பரிசம் பட்ட உலகம் சிவனாக இருக்கும்.

ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அரும்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அவன்பதம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே.

ஐந்து புலன்களை அடக்குவதற்குப் பதில் ஒடுக்கினால் அதாவது நம் வழியே அதை நடக்கச் செய்தால் அது பிரபஞ்சம் முழுவதும் கருதியது ஆகும். அதுவே தவம், திருவடி ஆகும் அது செய்வோர் இறையருள் பெறுவர்.

அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.

புலன்கள் ஐந்தும் அடக்கு அடக்கு என்பர். தேவர்கள் கூட ஐந்தும் அடக்கி இருப்பதில்லை. ஐந்து புலன்களையும் அடக்கினால் உயிருக்கு அறிவு வரும் வாயில்கள் அடைபட்டு அறியாமை உண்டாகும் என்பதால் ஐந்தையும் அடக்கிப் பழகாமல் அறிவை அறிந்தேன். மனம் அடக்க அடக்க வலிமையாகி நம்மை மீறும். நம் சக்தி வீணாகும். எனவே எப்போதும் பரந்து விரிவதை இயற்கையாகக் கொண்ட மனத்தை பிரபஞ்சம் அளவுக்கு விரியச் செய்து கொண்டே போனால் நமக்கு நல்ல அறிவு வரும்.

என்தாயோடு என் அப்பன் ஏழ் ஏழ் பிறவியும் அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில்வண்ணாண் நேர் எழுத்தாயே.

ஏதோ ஒரு பிறவியில் என்தாய் தந்தை இருவரும் ஏழ் பிறவியிலும் சிவனுக்கு நான் அடிமை என்று அன்றே ஆவணம் எழுதி விட்டனர். பிரம்மா ஆவணம் தயாரித்தவன் திருமால் சாட்சிக் கையெழுத்திட்டவன் ஆவர்.

உள்ளத்தின் உள்ளே பல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின்று ஆடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ளமனம் உடைக் கல்வியிலோரே.

பல இடங்களில் தீர்த்தம் ஆடுவதற்கு யாத்திரைகள் செய்து பயனில்லை. உள்ளத்தின் உணர்வால் உடம்பில் உள்ள அமுதமாகிய தீர்த்தமதை ஆடுவதே வினைகள் தீரும் வழியாகும்.

தலை உள்ள அமுதம் ஆடுபவரே கங்கை யாடும் புண்ணியர் ஆவார்
தலையில் ஊறும் அமுதத்தில் ஆடுபவரே புண்ணிய கங்கை தீர்த்தம் ஆடுபவர்.

கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல் உடல் உற்றுத் தேடுவார் தம்மை ஒப்பார் இல்
திடம் உற்றநந்தி திருவருளால் சென்று உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே.

பிரபஞ்சத்தில் கடல்போல் பரவிய கடவுளை குரு அருளால் தலையின் தாமரைக் குளத்தில் யோக முயற்சியால் சாதிப்பவரை ஒப்பாரில்லை. பிறரால் அதை அறிய முடியாது.

அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே – திருமந்திரம் 272

உள்ளத்து ஒருவனை உள் உறு சோதியை உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை

உள்ளமும் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருஅறி யாதே.

உள்ளத்தில் இருப்பவன், உள்சோதியை விட்டு நீங்காதவன், உள்ளத்தினுள்ளே தானும் இருந்தபோதும் உள்ளம் அவனின் அருவை அறியவில்லை.

உள் நின்ற சோதி உறநின்ற ஓர் உடல் விண் நின்ற அமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்நின்ற வானோர் புகழ் திருமேனியன் கண்நின்ற மாமணி மாபோதகமே.

யோகமுயற்சியால் உடம்பினுள் உள்ள சோதியை யார் காண்கிறாறோ அவரை தேவரும் விரும்புவர், மண்ணில் அவர் தெய்வமாவார், புகழ் பெறும் அழகிய உடலை பெறும் அவரை கண்மணிபோல் காக்கவேண்டும். அவர் ஞானியாவார்.

இறைவனை அறிவதற்கும் அடைவதற்கும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அக வழிபாடு, மற்றொன்று புற வழிபாடு.

இதில் அக வழிபாடு தியானம் அதாவது தவம், அதேபோல புற வழிபாடு பூஜை, தொண்டு ஆகியவைதான். உள்ளம் பெருங்கோயில் எனக்கூறிய ஆன்ம நேய அருட்கவி திருமூலர்.

கடவுள் வெளியே இல்லை உன் உள்ளேயும் இருக்கிறார் என்பது தான் கடவுள் பற்றிய இவரது ஒற்றை வரி கண்டுபிடிப்பாகும். இதைதான் அகம்பிரம்மா என்று வேதம் கூறுகிறது.

எனவே உள்ளத்தில் அன்பு இல்லாமல் கூடைகூடையாய் கோயிலுக்கு லட்சார்ச்சனை செய்வதை விட, உள்ளன்போடு கடவுளை வணங்கினால் போதுமானது என்கிறார்.

கோயிலுக்குச் செல்வது, பூஜை செய்வது, மந்திரம் சொல்வது, படையல் வைப்பது போன்றவையெல்லாம் முக்கியம்தான். ஆனால் அவற்றையெல்லாம்விட, உண்மையான அன்பு வேண்டும். அதனால் உங்கள் உள்மனம் குழைந்து அவனை வணங்கிச் சரணடைய வேண்டும். அப்போதுதான் ஒப்பற்ற மணியாகிய அவனது திருவருள் நமக்குக் கிடைக்கும்.

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே – 532

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கினாற்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே – 603

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே – 725

அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே – 916

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே – 1680

ஆசூச மில்லை அருநிய மத்தருக்
காசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்
காசூச மில்லையாம் அங்கி வளர்ப்போருக்
காசூச மில்லை அருமறை ஞானிக்கே – 2552

தல தரிசனத்தின் இன்றிமையாமையும் அங்ஙனம் வணங்கினோர் நெஞ்சத்துள் இறைவன் கோயில் கொள்வதும் —

‘நாடு நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மானென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே — 1445

என்னும் பாடலில் விளக்கப்பட்டுளது. இச்செய்யுள்,

‘தேடிக் கண்டு கொண்டேன் … தேவனை
என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்’

என்னும் அப்பர் பெருமான் தேவாரப் பாடலை நினைவூட்டுகின்றது.

திருமந்திர நூலின் பழமையும் பெருமையும்.

திருமந்திரம் மிகப் பழைய நூலாதலின் திருமூலருக்குப் பின்வந்தோர் பலரும் இந்நூலின் சொல்லையும் பொருளையும்
ஆண்டுள்ளார்கள்.

பெரியார் துடிசைகிழார் ‘தமிழ் மூவாயிரத்தினின்றும் திருவள்ளுவர் எடுத்தாண்ட பகுதிகள்’ என்று சில பகுதிகளை எடுத்துத் தமது திருமந்திர நூற்பதிப்பிற் காட்டியுள்ளார்.

சைவ சித்தாந்த மகா சமாஜப் பதிப்பில் உள்ள திருமூலர் வரலாற்றுக் குறிப்பில் திரு ம. பாலசுப்பிரமணிய முதலியாரவர்கள் “திருவாசகத்துக்கும் திருமந்திரத்துக்கும் பல வகையான சொல், சொற்றொடர், கருத்து ஒற்றுமைகள் காணப்படுதலால், இவ்விரண்டு நூல்கட்கும் ஒரு தொடர்பிருத்தல் வேண்டும்” — என எழுதியுள்ளார்.


அப்பர் பெருமானும் திருமந்திரச் சொற்றொடர்களையும் கருத்துக்களையும் ஆண்டுள்ளார்.


சித்தாந்தம் மலர் 19 – இதழ் 12-ல் திரு. பூ. ஆலால சுந்தரச் செட்டியாரவர்கள் ‘திருமந்திரத்திலுள்ள சில பாடல்களும், நாலடியாரிலுள்ள சில பாக்களும் சொல்லினும் பொருளினும் ஒத்துள்ளன எனக் கூறித், ‘திருமந்திரமும் நாலடியாரும்’ என்ற ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

என்னுங் கண்ணியில்:–

திரையற்ற நீர்போலச் சிந்தைதெளி வார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே — 2955

எனவரும் திருமந்திரச் செய்யுளையும்,

எந்நாட் கண்ணி –குரு மரபின் வணக்கம்

என்னும் பகுதியில் —

சக்கர வர்த்தி தவராச யோகியெனும்
மிக்கதிரு மூலனருள் மேவுநா ளெந்நாளோ —

எனத் திருமூலர் பெருமையையும் மிக அருமையாகப் பாராட்டியுள்ளார்.

அருளையர் அருள் வாக்கிய அகவலில் —
மூலன் மரபின் முளைத்த மௌனிதன்
பாலன்யா னெனவும் பரிவொடும் பகர்ந்தோள் —

எனத் தாயுமானவரைத் துதித்த இடத்துத் திருமூலரைக் குறித்துள்ளார்.

திருக்குறள், நான்மறை, தேவாரம் முனிமொழி, திருக்கோவையார், திருவாசகம் இவையெலாம் உயரிய, ஒத்த, இணையிலாப் பொருள் ஒன்றையே குறிப்பன என்பதற்கு —
‘தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்’

என்னும் ஔவையார் அருளிய நல்வழிச் செய்யுளே தக்க சான்றாம்.

திருக்குறள் முப்பால் செப்பி, என்றும் தேன்பிலிற்றும் தன்மையதாய் விளங்குகின்றது; திருமந்திரம் நாற்பாலும் நவின்று என்றும் தேன்பிலிற்றும் பெற்றியதாய்ப் பொலிகின்றது.

பன்னிரு திருமுறையும் என்னிரு கண்மணியாம்
என்ன எழுந்திடுமோர் இச்சை பிறங்குதலால்
என்னது செல்வமெலாம் சைவம் இலங்குறவே
நன்னர் அளித்திடுவேன் நானெனுந் தன்மையராய் —

திருமூலரின் திருமந்திரம்

ஆரோக்கியம் அல்லது சுகநிலை என்பது உடல், உள்ளம், சமூகம், ஆன்மிகம் ஆகிய நான்கு நிலைகளிலும் ஒருவன் பூரண சுகத்துடன் இருப்பதையே குறிக்கிறது. உடல் ஆரோக்கியத்ததைப் பேணினால் மாத்திரமே ஞானமும் கைகூடும் என்பது தெளிவு. இதனையே திருமூலர் தனது பாடலில் உறுதியோடு சொல்கிறார்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

மேற் கூறிய பாடலில் மட்டுமின்றி திருமூலரின் திருமந்திரத்தில் உடல் நலம், மருத்துவம், ஆகியன தொடர்பான பல பாடல்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். திருமந்திரம் தமிழுக்கு கிடைத்த மிக அற்புதமான நூல்களில் ஒன்று. அதில் உள்ளடங்கும் சுவார்ஸமான மற்றொரு பாடல் சொல்வதைப் பாருங்கள்.

என்னை அறிந்திலேன்
இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும்
அறிந்திலேன் – திருமந்திரம் 2366

உடல் வைத்த வாறும் உயிர்வைத்த வாறும் மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்குக் கடைவைத்த ஈசனைக் கைகலந்தேனே.

உடல் அமைப்பு வைத்து, அதில் உயிரை வைத்ததும், யோகம் செய்ய வழிவைத்தும், ஒன்பது துவாரங்களால் உணர்வு கொள்ளவைத்தும் உடம்பில் உள்ள தாமரைகளில் அக்னியை வைத்ததும் ஆன ஈசனை யோக சாதனையால் கலந்து நின்றேன்.

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்ற திருமூல நாதரின் பெருமையை “அருணந்தி” அல்லது வேறு யாவர் அறிவர்?
நந்தி அருளாலே “அருணந்தி” வாழ்க பல்லாண்டு; அவர் தாபிக்கும் அறம் பலவும் வாழி, வாழி, வாழி.

திருமூலர் காட்டும் வழி

Scroll to Top