You cannot copy content of this page

திருமந்திரம் பிராணாயாமம்

பிராணாயாமம்

திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க முழுக்க “அஷ்டாங்க யோகம்’ என்பதைக் குறித்தே விவரிக்கிறது. பல சூட்சும ரகசியங்களை விளக்குகிறது. “அஷ்டாங்கம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு “எட்டு பிரிவுகள்’ என்பது பொருள். முழுமையான யோகக் கலையானது எட்டு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. அவை முறையே-

 1. இயமம்
 2. நியமம்
 3. ஆசனங்கள்
 4. பிராணாயாமம்
 5. பிரத்தியாகாரம்
 6. தாரணை
 7. தியானம்
 8. சமாதி

பிறந்தது முதல் இறப்பது வரையில் அனைவருமே சுவாசிக்கிறோம். மனிதர்கள் மட்டுமின்றி தாவரங்களும் விலங்குகளும்கூட சுவாசிக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிர்களில்கூட சுவாசம் என்பது நடைபெறுகிறது. சுவாசமே உயிரின்- உயிர் வாழ்தலின் ஆதாரம்.

இந்த சுவாசத்தை முறைப்படுத்தி, ஆயுளை நீட்டிப்பது என்பது ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். அனைத்து உயிரினங்களிலும் சுவாசம் என்பது தானாகவே நடைபெறும் ஒரு அனிச்சை செயலாகவே உள்ளது. மனிதர்களால் மட்டுமே அதை முறைப்படுத்தி, நமது இச்சைக்கு உட்பட்ட ஒரு செயலாக மாற்றியமைக்க முடியும்.

இந்த சுவாசப் பயிற்சி களின் சூட்சுமங்களைக் கூறும் சில திருமந்திரப் பாடல்களைக் காணலாம்.

உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான். எனவேதான் அதை “உயிர் மூச்சு’ என்கிறோம். மனிதன் உணவின்றி பல நாட்கள் உயிர் வாழ முடியும். நீர் இல்லாமற்கூட சில நாட்கள் உயிர் வாழலாம். ஆனால் காற்று (பிராணவாயு) இல்லாமல் போனால் எட்டு நிமிடங்களில் மரணம் நிச்சயம்! உடலின் இயக்கங்கள் அனைத்திற்கும் இந்த மூச்சுக் காற்றே ஆதாரம்.

“ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண்டு ஏறும் குதிரைமற்று ஒன்றுண்டு
மெய்யர்க்கு பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.’

(திருமந்திரம்)

நாம் நமது ஐம்பொறிகளாலேயே இந்த உலகை அளக்கிறோம். ஐம்பொறிகளின் வழியாகக் கிடைக்கும் செய்திகளின், உணர்வு களின் அடிப்படையிலேயே நமது செயல்பாடு களும் அமைகின்றன. கண், காது, மூக்கு, வாய், மெய் (தோல்) ஆகிய இந்த ஐம்பொறிகளையே திருமூலர் “ஐவர்’ என்று குறிக்கிறார்.

இந்த ஐவர்க்கும் நாயகனாகவும், இந்த ஐம்பொறிகளும் உறையும் ஊருக்குத் (உடலுக்கு) தலைவனாகவும் ஒருவன் இருக்கிறானாம். நமது மனம்தான் (அல்லது சித்தம்) இந்தத் தலைவன்! தலைவன் வலுவாக இருந்தால் ஐம்பொறிகளும், இந்தப் பருவுடலும் அவனுக்கு அடங்கி நடக்கும்.

தலைவன் வலுவற்றவனாக இருக்கும் பட்சத்தில் ஐம்பொறிகளும் தம் இச்சைக்குச் செயல்படத் துவங்கிவிடும். உடலும் (ஊரும்) அந்தத் தலைவனின் கட்டுப்பாட்டிற்குள் இராது.

இந்த மனம் எனும் தலைவன் ஏறி வரும் குதிரை ஒன்று உள்ளதாம். சித்தர் இலக்கியங்க ளில் பல சங்கேத மொழிகள் உபயோகத்தில் உள்ளன. அவற்றுள் இந்த “குதிரை’ என்பதும் ஒன்று. வேகம், உறுதி, இடைவிடாத ஓட்டம் ஆகியவை குதிரையின் தனிக்குணங்களாகும். குதிரைகள் தூங்கும்போதுகூட நின்று கொண்டேதான் தூங்கும்; படுப்பதில்லை.

நோய்வாய்ப்படும்போது மட்டுமே குதிரைகள் படுத்துக்கொள்ளும். இந்த குணநலன்கள் அனைத்துமே நமது மூச்சுக் காற்றுக்கும் (பிராணன்) பொருந்துகின்றன. எனவேதான் சித்தர் இலக்கியங்களில் பல இடங்களில் மூச்சு அல்லது பிராணனைக் குறிக்க “குதிரை’ என்ற சங்கேதச் (ரகசியம்) சொல்லை உபயோகப் படுத்துகின்றனர்.

குதிரை அடிப்படையில் ஒரு காட்டு விலங்கு. எளிதில் கட்டுப்படாது. ஒரு குதிரையைக் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம். அதில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் பல நாட்கள் போராடித்தான் குதிரையை அடக்கி அதன் மேல் ஏறி சவாரி செய்ய முடியும். ஒவ்வொரு முறையும் அதன் மேல் ஏற முயற்சி செய்யும்போதும் அது குப்புறத் தள்ளிவிடும். படிப்படியாகவே அதை அடக்க முடியும். ஒருமுறை அதை அடக்கி வெற்றி கொண்டு சேணத்தைப் பூட்டிவிட்டால், தனது வாழ்நாள் முழுவதும் அந்தக் குதிரை தனது எஜமானனுக்கு விசுவாசமுள்ள துணையாக இருக்கும். மூச்சுக் காற்றும் அவ்வாறே! அடக்குவதும் ஆள்வதும் மிக மிகச் சிரமமான காரியம். இந்த மூச்சு எனும் குதிரை யாருக்கு அடங்கும்?

இறைவனின் திருவடிகளையே பற்றிக் கொண்டு மெய்ஞ்ஞான வழியில் செல்லும் மனிதர்களுக்கே (மெய்யர்க்கு) இந்த குதிரை வசப்படுமாம்! உலக மாயைகளில் சிக்கி, இறை நாட்டம் கொள்ளாது வாழும் பொய்யர்களை இந்த சண்டிக் குதிரை கீழே தள்ளிவிடுமாம்.

இந்த ஒரு பாடலில் திருமூலர் பல சூட்சுமமான விஷயங்களை விளக்கியிருக்கிறார். அவற்றை சுருக்கமாகக் காண்போம்.

 • ஐம்பொறிகளையும் ஆளும் தலைவன்- சித்தம் (மனம்).
 • இந்த மனம் ஒருநிலைப்பட்டு உறுதியா னால் மட்டுமே ஐம்புலன்களும், பருவுடலும் அந்த சித்தத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

*இந்த மூச்சுக் காற்றை வசப்படுத்து பவர்களுக்கு மட்டுமே மனம் ஒருமுகப்படும்.

 • இறைவனைப் பற்றிக் கொண்டு மெய்ஞ் ஞான வழியில் செல்பவர்களுக்கு மட்டுமே மூச்சு கட்டுப்படும்.
 • பொய்ஞானம் எனும் மாயைகளில் சிக்குண்டு உழலுபவர்களுக்கு மூச்சு, மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய எதுவுமே வசப்படாது. முக்தி நிலையும் இவர்களுக்கு சாத்தியப்படாது.

குருவின் துணை

கல்விக்கு குருவின் துணை மிக அவசியம். அதைவிடவும் ஞானத் தேடலில்- ஞானம் தேடிய பயணத்தில் ஒரு குரு மிக மிக அவசியம்.

பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சியை முறையாகக் கற்றுக்கொள்ள ஒரு குரு தேவை. இதை கீழ்க்கண்ட திருமந்திரப் பாடல் வலியுறுத்துகிறது.

“ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகு அறிவார் இல்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.’

(திருமந்திரம்)

“மனம்’ என்பதை “ஆரியன்’ என்ற சொல்லால் திருமூலர் குறிப்பிடுகிறார். இந்த மனமானது மிக நல்லதாம். இந்த மனதிடம் இரண்டு குதிரைகள் உள்ளதாம். முதல் பாடலில் ஒரு குதிரை உண்டு எனக் கூறிய திருமூலர் அடுத்த பாடலிலேயே இரண்டு குதிரைகள் உள்ளதாகக் கூறுகிறாரே, இது என்ன முரண்பாடு என்ற கேள்வி எழுகிற தல்லவா? இங்கேதான் மூச்சு குறித்த அடுத்த சூட்சும ரகசியம் பொதிந்து கிடக்கிறது.

முதல் பாடலில் “குதிரை’ என்பது மூச்சு அல்லது பிராணனைக் குறிக்கிறது. இந்தப் பாடலில் அது நமது இடது நாசி, வலது நாசி ஆகிய இரண்டையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளாம். இதுவே இரண்டு குதிரைகள். அல்லது இடது நாசி வழியாகச் செல்லும் மூச்சுக் காற்றை ஒரு குதிரை எனவும், வலது நாசி வழியாகச் செல்லும் மூச்சுக் காற்றை மற்றொரு குதிரை எனவும் பொருள் கொள்ளலாம்.

பிராணன் என்பது ஒன்றுதானே? வலது நாசியில் செல்லும் மூச்சுக்கும், இடது நாசியில் செல்லும் மூச்சுக்கும் வித்தியாசம் இருக்க முடியுமா என்ற கேள்வி உங்கள் மனதில் இப்போது எழுந்திருக்கும். ஆம்; இரண்டு நாசிகளிலும் செல்லும் மூச்சுக் காற்றுக்கு தனித்தனித் தன்மைகளும், செயல்பாடுகளும் உள்ளன. எனவேதான் திருமூலர் அதைப் பாகுபடுத்திக் காட்ட இரண்டு குதிரைகள் என்றார்.

நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள உண்மை புரியும்.

ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மிகச் சிறய அளவிலான காற்று உட்புகும்.) சற்று நேரத்திற்குப்பின் (இரண்டு மணி நேரத்திற்குப் பின்) அடுத்த நாசி வழியாக காற்று செல்லத் துவங்கும். இவ்வாறு ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மொத்தம் 12 முறை இந்த இடம் மாறுதல் நடைபெறும். எந்த நேரத்தில் எந்த நாசியில் காற்று செல்லும் என்பதையும் நம் முன்னோர் கள் கணித்து வைத்துள்ளனர்.

நேரம் நாசி

காலை 6-8 மணி வரை வலது நாசி

காலை 8-10 மணி வரை இடது நாசி

காலை 10-12 மணி வரை வலது நாசி

மதியம் 12-2 மணி வரை இடது நாசி

மதியம் 2-4 மணி வரை வலது நாசி

மாலை 4-6 மணி வரை இடது நாசி

மாலை 6-8 மணி வரை வலது நாசி

இரவு 8-10 மணி வரை இடது நாசி

இரவு 10-12 மணி வரை வலது நாசி

இரவு 12-2 மணி வரை இடது நாசி

இரவு 2-4 மணி வரை வலது நாசி

அதிகாலை 4-6 மணி வரை இடது நாசி

வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த இரண்டு சுவாசங்களுக் கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.

வலது நாசிக் காற்று (சூரிய கலை)

 • உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
 • வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
 • உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.
 • உடலின் வலிமை அதிகரிக்கும்.
 • மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
 • இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை)

 • உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.
 • சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
 • இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
 • பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.
 • மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.
 • அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.

இந்த இரண்டு வகையான மூச்சுகளையும் (குதிரைகளையும்) அடக்கி ஆளக் கற்றுக் கொண்டால், மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய அனைத்துமே நம் கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால் இவற்றை அடக்கும் சூட்சுமம் எவருக்கும் தெரிவதில்லை என்பதையே இந்தப் பாடலின் இரண்டாவது வரி தெரிவிக்கிறது.

“வீசிப்பிடிக்கும் விரகு (உபாயம், வழிமுறை) அறிவார் இல்லை.’

இந்த சூட்சுமங்களைக் கற்றுக்கொண்டு, பிராணன் எனும் குதிரைகளை வசப்படுத்த ஒரு குருவின் துணை வேண்டும். அந்த குருவும் நுண்ணறிவு படைத்தவராக, அந்தக் கலையில் முழுமை பெற்றவராக இருத்தல் வேண்டும். இந்தக் கருத்தே கடைசி இரு வரிகளில் வெளிப் படுகிறது.

“கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்

வாரிப் பிடிக்க வசப்படும் தானே.’

இதில் “அருள் பெற்றால்’ என்ற சொற்களிலும் ஒரு சூட்சுமம் உள்ளது. குருவிடம் சென்று கற்றுக்கொள்வது வேறு; அவரது அருளைப் பெறுவதென்பது வேறு. நீங்களே இதை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். இதிலுள்ள சூட்சும ரகசியங்கள் புரியும்.

“புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பர் தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.’

திருமந்திரம்- பாடல் எண்: 559

“புள்’ என்பது பறவையைக் குறிக்கும் சொல்லாகும். “புள்ளினும் மிக்க புரவி’ என்றால் பறவையைவிட வேகமாகப் பறக்கக் கூடிய குதிரை என்பது பொருள். பிராணனைக் குறிக்க குதிரை என்ற குறியீட்டை சித்தர்கள் பயன்படுத்தினர் என்பதை ஏற்கெனவே கண்டோம். ஆக, பறவையைவிட வேகமாகச் செல்லக்கூடிய இந்த பிராண னாகிய குதிரையை நம்வசப்படுத்திக் கொண்டால் (மேற்கொண்டால்) என்னென்ன நிகழும்?

“கள் உண்ண வேண்டாம்; தானே களிதரும்.’

ஒருவித ஆனந்தமான மனநிலையை அடையவே மனிதர்கள் கள் முதலிய போதைப் பொருட்களை உண்கிறார்கள் அல்லவா? ஆனால் திருமூலரின் கூற்றுப்படி, பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சியின் மூலமாக நமது பிராணனை நாம் வசப்படுத்திவிட்டால், கள் உண்ணாமலேயே கள் உண்ட ஆனந்த நிலை உடலிலும் மனதிலும் உருவாகிவிடும்.

மூச்சுப் பயற்சியின் மூலமாக குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்பட்டு நமது தலையின் மேற்பகுதி யிலுள்ள “லலான சக்கரம்’ தூண்டப்பட்டால், அந்த சக்கரத்திலிருந்து உருவாகும் “அமிர்தம்’ ஒரு எல்லையற்ற ஆனந்த நிலையை உருவாக்கும். இதையே “பேரானந்தம்’ என்கிறார்கள். இந்த ஆனந்த நிலையும் ஒருவகையான போதையே. ஒருமுறை அனுபவித்தவர்களுக்கு அந்த நிலை யிலிருந்து வெளியில் வரவே மனம் வராது. மீண்டும் மீண்டும் அந்த ஆனந்த நிலையையே மனம் நாடும். எனவேதான் வடமொழியில் இந்த நிலையை “ஆனந்த லகரி’ என்கிறார்கள்.

ஆக, பிராணனை வசப்படுத்துவதால் விளையும் முதல் பலன்- ஆனந்தமான மனநிலை உருவாகும். இது ஒரு பேரானந்த நிலை.

“துள்ளி நடப்பிக்கும், சோம்பர் தவிர்ப்பிக்கும்.’

ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாக அமைவது அவனிடத்தில் காணப் படும் சோம்பல்! பலர் பல நல்ல வாய்ப்புகளைத் தவற விட்டுவிடுவதற்குக் காரணமாக அமைவது மனதில் அல்லது உடலில் ஏற்படும் சோம்பல் தான்! பிராணன் எனும் குதிரையை நமது வசப்படுத்திக் கொண்டால் சோம்பல் மறையும். மனதிலும் உடலிலும் ஒரு புதிய உற்சாகம் பிறக்கும். சுறுசுறுப்பும் துள்ளலும் தானே ஏற்படும். வாழ்க்கை சிறக்கும்.

“உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.’

இதுவே உண்மை. அதைச் சொல்லிவிட்டோம். ஆனால் உணர்வுடையோர்க்கு மட்டுமே இந்த ரகசியம் புரியும் என்கிறார் திருமூலர். உயிரோடி ருக்கும் (மரம், செடி, கொடி, விலங்குகள் உட்பட) அனைத்துமே உணர்வு கொண்டவை தானே என்ற சந்தேகம் எழும். இந்தப் பாடலில் திருமூலர் குறிக்கும் உணர்வு என்பது “உள்ளுணர்வு’ அல்லது “மெய்ஞ்ஞானம்’ என்பதைக் குறிக்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

“ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி
வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே’

-திருமந்திரம் பாடல் எண்: 564.

சுவாசம் என்பது இரு பகுதிகளைக் கொண்டது. உள்ளே மூச்சை இழுப்பது (உள் சுவாசம்), மூச்சை வெளியே விடுவது (வெளி சுவாசம்). சுவாசப் பயிற்சியின்போது இடது நாசியின் வழியாக (இடகலை நாடி) மூச்சை உள்ளே இழுத்து, வலது நாசியின் வழியாக (பிங்கலை நாடி) வெளியே விட வேண்டும். இந்த இரு நாடிகளையே “இருகாலும்’ என்கிறார் திருமூலர்.

“ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை.’
உள்ளே, வெளியே என இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடிகளையும் நிறைக்கும் (பூரிக்கும்) காற்றை தன் வசப்படுத்தும் (பிடிக்கும்) கணக்கை பெரும்பாலான மனிதர்களும் உணர்ந்து கொள்வதில்லை என முதல் இரு அடிகளில் திருமூலர் குறிப்பிடுகிறார்.

“காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.’

காற்றை வசப்படுத்தும் கணக்கை அறிந்து கொண்ட வர்களுக்கு அதுவே யமனை அல்லது மரணத்தை (கூற்றை) வெல்லுகின்ற (உதைக்கும்) வழிமுறையாகும். (குறியதுவாமே!) காலனை எட்டி உதைக்கும் வழியே மூச்சுப் பயிற்சி என்கிறார் திருமூலர்!

திருமூலர் எதற்காக “உதைத்தல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

பெரும் பாலான மனிதர்களுக்கு “மரண பயம்’ என்பது அடிமனதில் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. வயது ஏற ஏற மரண பயமும் படிப் படியாக அதிகமாகிறது. அந்த மரண பயமே அவர்களைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. மரணமும், அதைக் கொண்டு வருவதாகக் கூறப்படும் காலனும் (யமனும்) அஞ்சத் தகுந்தவையல்ல என்பதை மறைமுகமாக உணர்த்தவே “எட்டி உதைக்கிறேன்’, “உதைக்கும் குறியதுவாமே’ என்பன போன்ற சொற்களை உபயோகப் படுத்தியுள்ளார்.

மரணம் என்பது துச்சமானது. காலால் அதை எட்டி உதைக்க முடியும் என்று உணர்த்தி, மக்களின் மனதை மூடிக்கிடக்கும் “மரண பயத்தை’ப் போக்குவதற்காகவே இவர் “உதைத்தல்’ என்ற சொல்லைப் பயன் படுத்தியிருக்க வேண்டும். மகாசித்தர்!

சாதாரண மனிதர்களுக்கு மூச்சை வசப் படுத்தும் கணக்கு தெரியாது என இந்தப் பாடலில் உரைத்த திருமூலர், அடுத்த சில பாடல்களில் அந்த கணக்கு என்ன என்பதையும் விளக்கிவிடுகிறார்! அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

“மேல், கீழ், நடுப்பக்கம் மிக்கு உறப் பூரித்துப்
பாலாம் இரேசகத்தால் உட்பதிவித்து
மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே.’

-திருமந்திரம் பாடல் எண்: 565.

மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது மேல், கீழ், நடுப்பக்கம் ஆகிய மூன்று பகுதிகளும் அந்தக் காற்றால் நிரம்பிப் பூரிக்க வேண்டும். (சற்றே பெரிதாக வேண்டும்).

இங்கே திருமூலர் குறிப்பிடும் மூன்று பகுதிகள் எவை?

மேல்- உச்சந்தலை
நடுப்பக்கம்- நெஞ்சுப் பகுதி
கீழ்- அடி வயிற்றுப்பகுதி

ஆகிய மூன்று பகுதிகளையே திருமூலர் குறிப்பிடுவதாகவே பெரும்பாலான விளக்க உரைகளும் கூறுகின்றன. சற்றே விளக்கமாகக் காண்போம்.

நாம் காற்றை உள்ளே இழுக்கும் போது நமது விலாப்பகுதிகளிலுள்ள சுவாசத் தசைகள் (Respiratony muscles) சுருங்குவதால் நெஞ்சுக்கூடு (தண்க்ஷ ஸ்ரீஹஞ்ங்) விரிவடைகிறது. அதே நேரத்தில் நம் மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் உதரவிதானம் கீழ்நோக்கி நகருகிறது. இதனால் நெஞ்சுக் கூட்டினுள்ளே ஒரு வெற்றிடம் உருவாகிறது. அதை சமன் செய்ய வெளியிலிருந்து காற்று உள்ளே நுழைய, நுரையீரல்கள் விரிவடைகின்றன. இதுவே உள் சுவாசம் (Inspiration) .

மூச்சை வெளியே விடும்போது இதற்கு நேர்மாறான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சுவாசத் தசைகள் விரிவடைவதால் நெஞ்சுக் கூடு சுருங்குகிறது. உதரவிதானம் மேல் நோக்கி நகருகிறது. இதனால் நெஞ்சுக் கூட்டின் உள்ளே அழுத்தம் அதிகமாவதால் நுரையீரல் கள் சுருங்குகின்றன. அதன் உள்ளே நிறைந் திருக்கும் காற்று வெளியே தள்ளப்படுகிறது. இதுவே வெளி சுவாசம் (Expirtaion). இந்த உள்சுவாசம், வெளிசுவாசம் இரண்டும் மாறி மாறி நடைபெற்று வருகின்றன.

ஆக சுவாசத்தின்போது சுவாசக் குழாய்கள் (தொண்டை), நெஞ்சுக்கூடு, உதரவிதானம், நுரையீரல்கள் ஆகியவையும் சுருங்கி விரிகின்றன. இதுவே நவீன விஞ்ஞானம் கூறும் உண்மை.

சுவாசக் காற்று நெஞ்சுக் கூட்டைத் தாண்டி நேரடியாக அடிவயிற்றுப் பகுதிக்குச் செல்வதோ அல்லது மேலே தொண்டையைத் தாண்டி உச்சந்தலைக்குச் செல்வதோ, நவீன உடற்கூறியல் (Anatomy), உடல் இயங்கியல் (Physiology) தத்துவங்களின்படி நிகழ முடியாத செயல்களாகும்.

சுவாசம் மூக்கு, தொண்டை, மூச்சுக் குழாய், நுரையீரல்கள் ஆகிய பகுதிகளுக்குள் மட்டுமே செல்ல முடியும்- அங்கிருந்து வெளியே வர முடியும். உச்சந்தலைக்கோ வயிற்றுப் பகுதிக்கோ செல்வதற்கான பாதைகளோ வழிகளோ உடலில் இல்லை என்பதே நவீன விஞ்ஞான உண்மை.

அப்படியானால், திருமூலர் கூற்று விஞ்ஞானத்திற்கு ஏற்புடையதல்ல என்றாகிறது. ஆனால் விஞ்ஞானத்தால் விளக்க முடியாத பலவற்றிற்கும் திருமூலர் கண்ட மெய்ஞ்ஞானத் தில் விளக்கம் உண்டு.

நாம் சுவாசிக்கும்போது காற்றிலுள்ள பிராண வாயுவை (ஆக்சிஜன்) மட்டுமின்றி, காற்றில் நிறைந்து நிற்கும் பிரபஞ்ச சக்தி (பிராண சக்தி)யையும் சேர்த்தே உள்ளே இழுக்கிறோம். காற்றும் அதிலுள்ள பிராண வாயுவும் நுரையீரல்களைத் தாண்டி வேறு இடங்களுக்குச் செல்ல முடியாது என்பது உண்மையே. ஆனால் பிராண சக்திக்கு இத்தகைய தடைகள் கிடையாது.

நாம் சுவாசிக்கும்போது உள்ளே நுழையும் பிராண சக்தி, உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் ஊடுருவிச் செல்லுகிறது. நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும் நுரையீரல்கள் மட்டுமின்றி உடலிலுள்ள அனைத்து தசை களும் மூட்டுகளும்கூட சுருங்கி விரிகின்றன.

இந்த பிராண சக்தியானது நமது உடலிலுள்ள நாடிகள் எனப்படும் சக்தி நாளங்களின் வழியே உடல் முழுவதும் கொண்டு செல்லப் படுகிறது. இந்த நாடிகள் நமது பருவுடலுக்கு சற்றே வெளிப்புறமாக உள்ள சக்தி உடலில் அமைந்துள்ளன. பருவுடலின் தடைகள் எதுவும் இந்த சக்தி உடல்களில் கிடையாது.

நமது உடலிலுள்ள சக்கரங்கள், நாடிகள், தசவாயுக்கள், பஞ்ச பூதங்கள் ஆகியவற்றைக் குறித்த சூட்சும ரகசியங்களை அறிந்து கொண்டவர்கள் மூச்சுப் பயிற்சிகளின் மூலம் சுவாசத்திலிருக்கும் பிராண சக்தியை உடலின் எந்த பாகத்திற்கும் தமது விருப்பப்படி கொண்டு செல்ல முடியும்.

பிராண சக்தியின் வழியாக உடலிலுள்ள சக்தி மையங்களான சக்கரங்களைத் தூண்டிவிட முடியும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது, திருமூலர் கூறும் மூன்று பகுதிகளும் மூன்று சக்கரங்களைக் குறிப்பதாகவே கொள்ள வேண்டும்.

மேல்: சகஸ்ராரச் சக்கரம் (மேல் நிலைச் சக்கரம்).
நடுப்பக்கம்: அனாஹதச் சக்கரம் (இடைநிலைச் சக்கரம்).
கீழ்: மூலாதாரம் (கீழ்நிலைச் சக்கரம்).

சுவாசத்தை உள்ளே இழுக்கும்போது அந்த சுவாசத்திலுள்ள பிராண சக்தியானது இந்த மூன்று சக்கரங்களையும் நிறைக்க வேண்டும். இந்த மூன்று சக்கரங்களும் தூண்டப்பட்டு, முழுத்திறனுடன் செயலாற்றத் துவங்கும்போது, மீதமுள்ள நான்கு சக்கரங்களின் செயல்பாடு களும் தூண்டப்பட்டுவிடும். இனி இப்பாடலின் அடுத்த இரண்டு வரிகளைக் காணலாம்.

“பாலாம் இரேசகத்தால் உட்பதிவித்து
மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கவே.’

உள்ளே இழுத்த மூச்சுக் காற்றை வெளியே விடும்முன் (இரேசகம்) அதை சற்று நேரம் உடலில் தங்கியிருக்குமாறு செய்ய வேண்டும். (உட்பதிவித்து). இவ்வாறு காற்றை உள்ளே தங்க வைப்பதையே “கும்பகம்’ என்பார்கள். “உந்தி’ என்பது வயிற்றைக் குறிக்கும் சொல்லா கும். வயிற்றுப் பகுதியில் மூச்சை கும்பகம் செய்தல் வேண்டும். (உந்தியுள் கும்பித்து வாங்கவே).

இந்த முறைப்படி மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால்-

“ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே.’

ஆலாலம் என்பது ஆலகால விஷத்தைக் குறிக்கிறது.

தொடர்ந்து மூச்சுப் பயிற்சிகளைச் செய்து வருபவர்களுக்கு சிவனின் அருள் முழுமையாகக் கிடைக்கும் என்பதே நான்காவது வரியின் பொருளாகும்.

இனி மூச்சுப் பயிற்சியின் கால அளவுகள் குறித்துக் கூறும் திருமந்திரப் பாடலைக் காணலாம்.

“வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத்திரண்டும் இரேசித்து
காமுற்ற பிங்கலை கண்ணாக இவ்விரண்டு
ஓமத்தால் எட்டெட்டு கும்பிக்க உண்மையே.’

-திருமந்திரம் பாடல் எண்: 566.

“வாமம்’ என்பது இடது நாசியையும் இடகலை நாடியையும் குறிக்கிறது. பிங்கலை வலது நாசி, வலது பக்கத்து நாடியையும் குறிக்கும் சொல். உள்மூச்சு- “பூரகம்’ எனப்படும். வெளிமூச்சு- “இரேசகம்’. மூச்சை உள்ளே அடக்குதல்- “கும்பகம்’. இனி பாடலின் பொருளைக் காணலாம்.

இடது நாசியின் வழியாக மூச்சை உள்ளே 16 வினாடிகள் (ஈரெட்டு மாத்திரைகள்- அல்லது 1, 2 என 16 வரை எண்ணும் நேரம்) உள்ளே இழுத்து, 64 வினாடிகள் (எட்டெட்டு 8 ஷ் 8 = 64) அதை வயிற்றுப் பகுதியில் தங்கச் செய்து (கும்பித்து), பின்னர் வலது நாசி வழியாக 32 வினாடிகள் வெளியே விட வேண்டும். இதுவே மூச்சுப் பயிற்சிக்கான சரியான கணக்காகும்.

பூரகம் = 16 மாத்திரைகள் (வினாடிகள்)

கும்பகம் = 64 மாத்திரைகள்

இரேசகம் = 32 மாத்திரைகள்

நான்காவது வரியில் வருகின்ற “ஓமத்தால்’ என்ற சொல்லிலும் ஒரு சிறிய சூட்சுமம் உள்ளது. “ஓமம்’ என்ற சொல்லுக்கு “பாதுகாப்பான’ என்ற பொருளும்; வேள்வி (யாகம்) என்ற பொருளும் உண்டு. (வட மொழியில் ஹோமம் என்று கூறுவதைத் தமிழில் ஓமம் என்று எழுதலாம்).

கும்பகம் செய்வது 64 வினாடிகள் வரை மட்டுமே பாதுகாப்பானது. அதற்கு மேல் செய்தால் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவு குறைந்து தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படக் கூடும். எனவே எக்காரணம் கொண்டும் 64 மாத்திரை நேரத்திற்கு மேல் (கிட்டத்தட்ட ஒரு நிமிடம் என வைத்துக் கொள்ளலாம்) கும்பகம் செய்யக்கூடாது.

இதை வலியுறுத்தவே திருமூலர் “ஓமத்தால் எட்டெட்டு கும்பிக்க’ என்று கூறியிருப்பதை சில உரையாசிரியர்கள் எழுதியுள்ளனர்.

வேறு சில உரையாசிரியர்கள் ஹோமம் என்பதையே தமிழில் “ஓமம்’ என திருமூலர் குறிப்பிடுவதாக எடுத்துக்கொண்டு, கும்பகம் செய்வதை ஒரு வேள்வி போல முழு கவனத் துடனும், ஒருமுகப்பட்ட மனதுடனும் செய்ய வேண்டும் என திருமூலர் அறிவுறுத்துவதாக பொருள் கூறியுள்ளனர்.

இந்த இரண்டு விளக்கங்களும் ஏற்புடையவையே!

மூச்சுப் பயிற்சி செய்யத் துவங்கும் ஆரம்ப கால கட்டங்களில் இந்த 16: 64: 32 என்ற காலக் கணக்கில் பயிற்சி செய்வது இயலாத காரியமாக இருக்கும். தொடர்ந்த பயிற்சிகளின் மூலமே இது கைகூடும்.

பயிற்சியைத் துவங்கும்போது 8:32:16 என்ற கால அளவில் துவங்கி, படிப்படி யாக நேரத்தை அதிகரிக்கலாம்.

திருமூலர் கூறும் 16:64:32 என்ற கால அளவை எட்டிப் பிடிக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையில் ஆகலாம். ஒரு குருவின் மேற் பார்வையில் இந்த பயிற்சியைத் துவங்கினால் எளிதில் கைகூடும்.

இனி அடுத்த பாடலைக் காணலாம்.

“பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை
பிராணன் மடைமாறிப் பேச்சு அறிவித்துப்
பிராணன் நடைபேறு பெற்று உண்டீரே.’

திருமந்திரம்- பாடல் எண்: 560

ஆன்மிகப் பாதையில் செல்பவர்களுக்கும், ஞானத் தேடலில் இறங்குபவர்களுக்கும் இறுதி யான குறிக்கோள் ஒன்றேயாகும். அது பிறப்பு- இறப்பு அற்ற முக்தி நிலை! வழிகள் வெவ்வேறாக இருந்தாலும் முக்தி நிலையை அடைவதே குறிக்கோளாக இருக்கிறது.

பிராணனும் மனமும் ஒன்றாக இணைந்து, ஒன்றில் ஒன்று அடங்கி ஒடுங்கும் நிலையை அடையும்போதுதான் பிறப்பு – இறப்பு இல்லாத நிலை உருவாகும் என்கிறார் திருமூலர்.

“பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை.’

“பேராது’ என்ற சொல்லுக்கு “விலகாது’ என்று பொருள். பிராணன் மனத்திலிருந்து விலகாமல் இரண்டும் ஒன்றாக இணைந்து அடங்க வேண்டும். பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியின் வாயிலாகவே இது சாத்தியமாகும் என்கிறார் திருமூலர்.

நாம் சுவாசிக்கும்போது மூச்சுக் காற்றானது (பிராணன்) மேலிருந்து கீழாகவே செல்கிறது அல்லவா? இதுவே இயல்பான மூச்சு. ஆனால் இத்தகைய இயல்பான சுவாச முறையினால் முக்தி நிலையை அடைய இயலாது. பிராணன் தனது இயல்பான பாதையை விட்டு மாறி (மடைமாறி) மேல்நோக்கிச் சென்று ஆக்ஞை, லலானம், சகஸ்ராரம் ஆகிய உயர்நிலைச் சக்கரங்களை அடைய வேண்டும். அப்போதுதான் பிறப்பு- இறப்பு இல்லாத முக்தி நிலை உருவாகும்.

“மடைமாறி’ என்ற ஒரு சொல்லில் பல சூட்சுமங்கள் உள்ளன. தண்ணீர் செல்லும் சிறிய வாய்க்காலையே (ஈட்ஹய்ய்ங்ப்) “மடை’ என்பார்கள். மடை மாறி என்ற சொல்லுக்கு (மேலே கண்டபடி) கீழ்நோக்கிச் செல்லும் பிராணன் தனது பாதையிலிருந்து மாறி மேல்நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். இது தவிர மேலும் இரு சூட்சுமங்கள் இந்த ஒற்றைச் சொல்லில் உள்ளன.

சுவாசம் என்பது இடது நாசி, வலது நாசி என மாறி மாறி வரும்; இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த மாற்றம் நிகழும் என்பதை கடந்த அத்தியாயத்தில் ஒரு திருமந்திரப் பாடலில் கண்டோம்.

இது இயல்பான சுவாச நிலை. தொடர்ந்த மூச்சுப் பயிற்சி, தியானம், யோகாசனங்கள் ஆகியவற்றின் மூலம் இந்த இயல்பான நிலை மாறி (மடை மாறி) இடது நாசியில் மட்டுமே சுவாசம் செல்லும் நிலை உருவாகும்போதுதான் பிறப்பு- இறப்பு அற்ற நிலை உருவாகும். இது ஒரு சூட்சுமம். மேலும் ஒன்று உள்ளது.

இடது நாசியில் சுவாசம் செல்லும்போது இடகலை நாடி தூண்டப்பட்டு அந்த நாடியில் அதிகப்படியான பிராணன் பாயும். வலது நாசியின் வழியாகச் சுவாசிக்கும்போது பிங்கலை நாடி தூண்டப்பட்டு அந்த நாடியில் அதிகப் படியான பிராணன் பாய்ந்து செல்லும். இதுவே இயல்பான சுவாச நடை.

இந்த இயல்பு நிலை மாறி (மடை மாறி) ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும் பிராணன் சுழுமுனை நாடியில் பாயத் துவங்கும்போதுதான் பிறப்பு- இறப்பு இல்லாத முக்தி நிலையை அடைய முடியும். தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சிகளை மேற்கொண்டு யோகக் கலையில் உயர்நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும்.

பிராணன் தனது இயல்பான பாதையிலிருந்து “மடைமாறி’ சுழுமுனை நாடியில் பாயத் துவங்கும்போது எல்லையற்ற பேரானந்த நிலை உருவாகும். யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே இது சாத்தியமாகும்.

இந்தப் பாடலின் மூன்றாவது வரியில் “பேச்சு அறிவித்து’ என்ற ஒரு சொல் வருகிறதல்லவா? அந்தச் சொல்லிலும் ஒரு மிகப் பெரிய சூட்சுமம் ஒளிந்து நிற்கிறது. அதைச் சுருக்கமாகக் காணலாம்.

சாதாரண – இயல்பான சுவாசம் நடைபெறும் வரையில் பேச்சு நிற்காது. மனம் ஒடுங்காது பிராணனிலிருந்து தனியாக நிற்பதால் மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும். வாயும் ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கும். ஆனால் மூச்சு மடைமாறி பாயத் துவங்கும்போது சூட்சும உடலிலும் (சக்தி உடல்), பருவுடலிலும் சில மாற்றங்கள் நிகழும்.

 • சுழுமுனை நாடியில் பிராணன் பாயும் போது மூலாதாரத்தின் அருகே உறங்கிக் கிடக்கும் குண்டலினி தட்டி எழுப்பப்படும்.
 • இந்தக் குண்டலினி சக்தியானது சுழு முனை நாடி வழியே மேலெழும்பி சக்கரங்களை அதிக வலிமையுடன் இயங்கச் செய்யும்.
 • முதலில் கீழ்நிலைச் சக்கரங்கள் தூண்டப் படும்.
 • தொடர்ந்து யோகப் பயிற்சிகளைச் செய்து வரும்போது இடைநிலைச் சக்கரங்கள் தூண்டப் படும்.
 • மேலும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வரும்போது உயர்நிலைச் சக்கரங்கள் தூண்டப்படுகின்றன.
 • ஒவ்வொரு சக்கரத்தையும் குண்டலினி இயக்கும்போது அந்த சக்கரத்தோடு தொடர்பு டைய பல சித்திகள் சாதகருக்குக் கிடைக்கும்.
 • கீழேயுள்ள ஐந்து சக்கரங்களையும் கடந்து ஆறாவது சக்கரமான ஆக்ஞை சக்கரத்தைக் குண்டலினி அடையும்போது, “திரிகால ஞானம்’ எனும் சித்தி கிடைக்கும். கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலங் களையும் உணர்ந்தவர்களையே, “முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்’ அல்லது திரிகால ஞானி என்கிறோம்.

ஆறாவது சக்கரத்தையும் கடந்து, ஏழாவது சக்கரமான சகஸ்ரார சக்கரத்தை குண்டலினி அடையும்போதுதான் பரமாத்மாவும் ஜீவாத்மா வும் இணையும் நிகழ்வு நடைபெறும். இந்த நிலையை அடைந்த மனிதன் கடவுளுக்கு இணையான சக்திகளையும் திறமைகளையும் கொண்டவனாக இருப்பான்.

இறைவன் அல்லது இயற்கை மனிதனைப் படைக்கும்போதே, தானே முடிவெடுத்துச் செயல்படும் தன்மையையும் சேர்த்தே படைத்திருக்கிறது.

ஆறாவது சக்கரத்தைத் தாண்டி குண்டலினி ஏழாவது சக்கரத்திற்குச் செல்லும் வழியில் ஒரு வேகத்தடை உள்ளது. அதன் பெயர் “தாமச நாடி’. குண்டலினி ஆறாவது சக்கரத்தைத் தாண்டிச் செல்லும்போது லலான சக்கரம் மட்டுமின்றி, இந்த தாமச நாடியும் தூண்டப் படுகிறது.

இந்த தாமச நாடி தூண்டப்படும்போது அந்த மனிதரிடம் ஒரு பற்றற்ற நிலை உருவாகி வரும். எதிலும் ஒரு ஈடுபாடு இராது. ஆரவாரங்கள் எல்லாம் அடங்கிப் போகும். சித்து விளையாட்டுகள் எல்லாம் மறைந்து, தன்னுள்ளே ஒடுங்கி, ஒரு குழந்தையைப் போன்ற தன்மை அவர்களிடம் உருவாகிவிடும்.

தாமச நாடி தூண்டப்பட்டு விட்டால் பேச்சும் அடங்கிப் போகும். மிகமிகத் தேவை யான தருணங்களில் மட்டுமே பேசுவார்கள். பிற மனிதர்களிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் ஆசா பாசங்களிலிருந்தும் ஒதுங்கிப் போய் தன்னுள்ளே ஒடுங்கி, எல்லையற்ற ஆனந்த நிலையில் எந்நேரமும் திளைத்திருப்பார்கள். அவர்கள் நிறைந்த குடம்- இனிமேல் தளும்ப மாட்டார்கள்.

பிராணனும் மனமும் தனித்தனியே இருக்கும் வரையில்தான் “பேச்சு’. இரண்டும் ஒன்றிணைந்து தாமச நாடி தூண்டப்பட்ட பின் பேச்சு என்பதே இராது. இதையே “பேச்சு அறிவித்து’ என்ற இரு சொற்களில் திருமூலர் சூட்சுமமாகக் கூறிச் சென்றுள்ளார்.

“புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே.’

-திருமந்திரம்- பாடல் எண்: 568.

உடலில் உயிர் இருக்கும் வரையில் சுவாசம் என்பதும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டேயிருக்கும். இதையே மாற்றிக் கூறுவதானால் சுவாசம் நடைபெறும் வரையில்தான் உயிர் உடலில் தங்கியிருக்கும். சுவாசம் நின்று போனால் உயிர் உடலை விட்டுப் பிரிந்து போகும். எனவேதான் உயிரை இயங்க வைக்கும் வாயுவை பிராண வாயு என்கிறோம். உயிர் பிரிந்துவிட்டால் “பிராணனை விட்டு விட்டான்’ என்று கூறுகிறோம்.

சுவாசத்தில் இரு பகுதிகள் உண்டு. காற்றை உள்ளே இழுப்பது (உள் சுவாசம்), காற்றை வெளியே விடுவது (வெளி சுவாசம்).

காற்று உள்ளே சென்று வெளியே வரும் இந்தச் செயல் ஒரு அனிச்சை செயலாகும். நம்மை அறியாமலேயே நமக்குத் தெரியாமலேகூட

இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது பாடலின் முதல் வரியைப் பாருங்கள்.

“புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை.’
புறப்பட்டு (வெளியே சென்று- வெளிசுவாசம்), புக்கு (உள்ளே புகுந்து- உள் சுவாசம்), திரிகின்ற வாயுவை (சுவாசக் காற்றை)- இந்த வரியில் வருகின்ற “திரிகின்ற’ என்ற சொல்லில் ஆழமான அர்த்தங்கள் உள்ளன.

எந்தவிதமான குறிக் கோளோ இலக்கோ நெறிமுறையோ இல்லாது இயங்குவதையே “திரிதல்’ என்கிறோம். “அவன் சும்மா ஊரைச் சுற்றித் திரிகிறான்’ என்று சொல்வதில்லையா?

மூச்சுப் பயிற்சி இல்லாதவர்களின் சுவாசமும் இவ்வாறே எந்தவிதமான இலக்கோ குறிக்கோளோ இன்றி, உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக வீணே “திரிந்து’ கொண்டிருக்கிறது.

“திரிதல்’ என்ற சொல்லுக்கு “தனது இயல்பு நிலையில் இருந்து மாறுபடுதல்’, “கெட்டுப் போதல்’, “வீணாகிப் போதல்’ போன்ற அர்த்தங் களும் உண்டு. எவ்வித குறிக்கோளும் நெறி முறையும் இன்றி உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருக்கும் சுவாசம் தனது இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட அல்லது வீணாகிப் போன சுவாசமே ஆகும். (திரிந்த சுவாசம்).

அப்படியானால் “சுவாசம்’ என்பதன் இயல்பு நிலை என்ன? அதன் குறிக்கோள் அல்லது இலக்கு என்னவாக இருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்னர் சுவாசத்தின்போது உடலின் உள்ளே என்ன நிகழுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

 • உடலின் ஒவ்வொரு “செல்’லும் நலமாக இயங்க ஆக்சிஜன் எனும் பிராண வாயு அவசியம் தேவை.
 • செல்கள் இயங்கும்போது பலவிதமான கழிவுப் பொருட்கள் உருவாகின்றன. இவற்றுள் மிக முக்கியமான கழிவுப் பொருள் கரியமில வாயுவாகும். (கார்பன்-டை-ஆக்ஸைடு).

*உள்சுவாசத்தின்போது வெளியிலுள்ள- காற்றிலுள்ள பிராணவாயு நுரையீரல்களால் உறிஞ்சப்பட்டு ரத்தத்தோடு கலக்கிறது.

*வெளிசுவாசத்தின்போது ரத்தத்தில் தேங்கி நிற்கும் கரியமில வாயு பிரிந்து வெளியேறுகிறது.

(பிராண வாயுவோடு பிராண சக்தி, பிரபஞ்ச சக்தி போன்ற பலவிதமான சக்திகளும் சுவாசத்தின் போது உடலினுள்ளே நுழைகின்றன. அது குறித்து தற்போது காண வேண்டாம்.)

ஆக, சுவாசம் என்பதன் இலக்கு பிராண வாயுவை உடலுக்குள் கொண்டு வருவதும், உடலிலுள்ள கழிவுப் பொருளான கரியமில வாயுவை வெளியே அனுப்புவதுமே ஆகும். இந்தச் செயல் அனைவரது உடலிலும் இடையறாது நடந்து கொண்டுதானே இருக்கிறது.

நாம் உள்ளே இழுக்கும் காற்றிலுள்ள ஒரு சிறிய பகுதி பிராணவாயு மட்டுமே நுரையீரல்களால் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது. நுரையீரல்களில் தங்கியிருக்கும் கரியமில வாயுவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே வெளிமூச்சின் வழியே வெளியேறுகிறது.

எனவே செல்களுக்குத் தேவையான பிராணவாயு சரிவரக் கிடைப்பதில்லை. செல்களில் தேங்கி நிற்கும் கரியமில வாயுவும் முழுமையாக வெளியேற்றப்படுவதில்லை.

இதனால் என்ன நிகழும்? செல்கள் தனது முழுமையான திறனுடன் இயங்க இயலாது. பழுதடைந்த செல்கள் தம்மை சரிவர புதுப்பித்துக் கொள்ள முடியாது. இறந்துபோன செல்களுக்குப் பதிலாக புதிய செல்கள் உருவாவதில் சுணக்கம் ஏற்படுகிறது.

இவை அனைத்தும் சேரும்போது பலவிதமான நோய்கள் உருவாகின்றன. முதுமை, தோல்களில் சுருக்கம், கண்களில் காட்டராக்ட் என்ற திரை ஆகியவை தோன்றுகின்றன. கேசத்தி லும் நரை விழத் துவங்குகிறது. இறுதியாக மரணம் வந்து தழுவிக் கொள்கிறது. இந்த மூச்சை நெறிப் படுத்தினால் என்ன நிகழும்? பாடலின் அடுத்த வரிகளைப் பாருங்கள்.

“நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டு போகான் புரிசடையோனே.’

மூச்சுப் பயிற்சிகளின் மூலம் மூச்சை நெறிப்படுத்தி உடலின் உள்ளே பிராணவாயுவை நிரம்பச் செய்தால் (உள்ளே நின்மலம் ஆக்கில்) உடல் இளமை பெறும். தேஜஸ் உருவாகும் (உறுப்பு சிவக்கும்). நரை விழுந்துபோன கேசம் கூட மீண்டும் கறுப்பாகும். (உரோமம் கறுக்கும்). மொத்தத்தில் முதுமைக் கோலம் மறைந்து, இளமை திரும்பும். உடல் உறுதியாகும்.

இவற்றைவிட மிக முக்கியமான பலனை நான்காவது வரியில் குறிப்பிடுகிறார் திருமூலர். “புறப்பட்டு போகான் புரிசடையோனே.’ “புரிசடை யோன்’ (அழகிய சுருண்ட கூந்தலை உடையவன்) என்பது சிவபெருமானின் அடைமொழிகளில் ஒன்று. உடலினுள் இருக்கும் சீவன் அல்லது ஆன்மா சிவனின் (இறைவனின்) அம்சமே என்பது சித்தர்களின் கூற்று. எனவேதான் இங்கே உயிரை புரிசடையோன் என குறிப்பிடுகிறார்.

மூச்சுப் பயிற்சிகளின் மூலம் மூச்சை நெறிப்படுத்தி னால் உடலில் தங்கியிருக்கும் சீவன் வெளியேறாது! அதாவது மரணம் இராது! மூச்சை நெறிப்படுத்தும் வித்தை என்ன என்பதை அடுத்த இதழில் காணலாம். இனி அடுத்த பாடலுக்குச் செல்லலாம்.

“கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல், கண்டிப்பர் நால்விரல்
கூடிக்கொள்ளில் கோல அஞ்செழுத்து ஆமே.’
-திருமந்திரம் பாடல் எண்: 569.

பருவுடலை ஒரு வீடாகவும் (கூடம்) இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடிகளையும் அந்த வீட்டில் குடிபுக வந்த இரு மங்கையர் களாகவும் பாடலின் முதல் வரியில் உருவகம் செய்கிறார் திருமூலர்.

நமது உடலில் உள்ள தசவாயுக்களை ஆண்பாலாகக் குறிப்பிடுவர்.

பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என பத்து வாயுக்களுக்கும் ஆண்பால் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன.

நாடிகள் அனைத்தையும் பெண் பாலாகக் கூறுவது தொன்றுதொட்டே தமிழில் நிலவிவரும் ஒரு மரபாகும். திருமூலரும் அந்த மரபின்படியே இடகலை, பிங்கலை நாடிகளை இரு மங்கையராக உருவகப்படுத்தியுள்ளார்.

இந்த முதல் வரியில் ஒரு நுட்பமான சூட்சுமம் உள்ளது. “கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்’ என்ற தொடரை சற்றே கூர்ந்து கவனியுங்கள்.

கூடம் என்பது பருவுடல். நமது உடலிலுள்ள கண், காது, மூக்கு போன்ற அவயங்களும்; இதயம், நுரையீரல், குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உள்ளுறுப்புகளும் இந்தப் பருவுடலின் அங்கங்கள்; பருவுடலைச் சார்ந்தவை. இவை அனைத்தும் இணைந்தே பருவுடல் உருவாகிறது.

நாடிகள் இந்த வீட் டைச் சார்ந்தவை அல்ல! வெளியிலிருந்து இந்த வீட்டினுள் வந்து குடியேறியவை! நாம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடிபுகுகிறோம் அல்லவா? அது போன்றே இடகலை, பிங்கலை ஆகிய இரு மங்கையரும் இந்தப் பருவுடலின் உள்ளே குடிவந்துள்ளனர். (“கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்’).

நமது நாடிகள் அனைத்துமே சூட்சுமமானவை. நமது ரத்த நாளங்கள், நரம்புகள் போன்றவை பருவுடலைச் சார்ந்தவை; கண்ணுக்குத் தெரிபவை. ஆனால் பிராணசக்தியைச் சுமந்து செல்லும் நாடிகள் பருவுடலைச் சார்ந்தவை அல்ல. அவை நமது சக்தி உடலைச் (ஊய்ங்ழ்ஞ்ஹ் இர்க்ஹ்) சார்ந்தவை. எனவேதான் திருமூலர் நாடிகளை பருவுடலினுள்ளே குடிபுக வந்த மங்கையர் என வர்ணிக்கிறார்!

இந்தக் கூடம் அழியும் நாள் வரும்போது குடிபுகுந்த மங்கையர் அதிலிருந்து வெளியேறிவிடுவர். சக்தி உடல்களுக்கும், அதிலுள்ள சக்கரங்கள், நாடிகள் போன்றவற்றிற்கும் அழிவு என்பது கிடையாது. ஆன்மா மறுபிறவி எடுக்கும் போது சக்தி உடல்களும் சக்கரங்களும் நாடிகளும் வேறொரு பருவுடலில் குடிபுகும்.

சுவாசம் என்பது உள்சுவாசம், வெளி சுவாசம் என இடையறாது நடந்து கொண்டேயிருக்கிறது. வலது நாசி, இடது நாசி (பிங்கலை, இடகலை நாடிகள்) வழியே இது மாறி மாறி நடைபெறுகிறது என்பதை ஏற்கெனவே கண்டோம். இந்த சுவாசமானது தலைக்குக் கீழே எட்டு விரற்கடையும் (அங்குலம்), தலைக்குள் நான்கு விரற்கடையும் பாய வேண்டும். மொத்தம் 12 விரற்கடை களே நலமான சுவாசத்தின் அளவாகும். இதையே இந்தப் பாடலின் இரண்டாவது அடியில் காண்கிறோம்.
“ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்’.

ஒரு குழந்தை பிறக்கும்போது சுவாசத்தின் அளவு 12 அங்குலமாக இருக்கும். ஆனால் வளர வளர இது குறைந்து கொண்டே வரும். தவறான மூச்சு முறை, தவறான உணவுப் பழக்கங்கள், தவறான வாழ்க்கை முறைகளால் சுவாசத்தின் அளவு பாதிக்கப்பட்டு படிப்படியாகக் குறையும்.

வயது முதிர்ந்த நிலையில் (நீடுவர்) மூச் சின் அளவு எட்டு விரற்கடையே இருக்கும். தலைக்குக் கீழே மட்டுமே சுவாசம் பாயும்.

தலைக்கு உள்ளே செல்ல வேண்டிய நான்கு விரற்கடை சுவாசம் குறைந்து போய்விடும்.

“நீடுவர் எண் விரல், கண்டிப்பர் நால்விரல்’
என்ற மூன்றாவது அடி இதையே குறிக்கிறது.

இவ்வாறு குறைவுபடும் நான்கு அங்குல மூச்சை முறையான மூச்சுப் பயிற்சிகளின் மூலமாகக் கூட்டிக் கொண்டால் (“கூடிக் கொள்ளில்’) நமது உடல் “நமசிவாய’ எனும் ஐந்தெழுத்தாக மாறும். அதாவது உடல் சிவசொரூபமாகும். (“கோல அஞ்செழுத்து ஆமே’).

ஜீவாத்மா வசிக்கின்ற இந்த உடல் நரை, திரை, மூப்பு நீங்கி, பரமாத்மாவின் அம்சமாக ஒளிவீசத் துவங்கும். இதுவே மூச்சுப் பயிற்சியின் நோக்கமும் இலக்கும் என்பதே இந்த திருமந்திரப் பாடலின் சுருக்கமான கருத்தாகும்.

இந்த நிலையை அடையும்போதுதான் எல்லையற்ற ஆனந்த நிலை மனதிலும் ஆன்மாவிலும் உருவாகும். இதையே “பரமானந்த நிலை’ என்கிறோம். இந்த நிலையை அடைந்த ஆன்மாவில் “தான்’ என்ற அகங்காரம் அழிந்து போகும். இரவு- பகல் என்ற பேதங்களும் அந்த ஆன்மாவிற்கு இராது. காலங்களைக் கடந்த ஒருவித பரவச நிலையில் இறைவனோடு ஒன்றி அந்த ஆன்மா வாழும்.

இதை அடுத்த பாடலில் திருமூலர் விளக்குகிறார்.
“பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவுள்ளது
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவு இல்லையே.’
-திருமந்திரம் பாடல் எண்: 570.

உயிருக்கு அடிப்படை மூச்சு எனும் பிராணன். பிராணன் இன்றி உயிர் இல்லை. எனவே பிராணனே உயிர் எனக் கொள்ளலாம். இந்தப் பிராணனையே “ஆனை’ என்கிறார் திருமூலர். அது 12 விரற்கடை பாயும். எனவேதான் “பன்னிரண்டு ஆனை’ என்கிறார். இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடிகளின் வழியே மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆனைக்கு (மூச்சுக்கு) பகல்- இரவு என்ற பேதங்கள் உண்டு.

பகலில் இந்த ஆனை சற்றே விரைவாக நடைபோடும். இரவில் இதன் வேகம் குறையும்.

சாதாரணமாக நாம் அனைவருமே பகலில் ஒரு நிமிடத்திற்குப் பதினாறு முறை சுவாசிக்கிறோம் சற்றே கடினமான வேலை களில் ஈடுபடும்போது இது இன்னும் அதிக மாகும்.

இரவில் உறங்கும்போது உடலின் இயக்கங்கள் அனைத்தும் குறைவதால் தேவை யான பிராணனின் அளவும் குறைகிறது. அதற்கேற்ப மூச்சின் வேகமும் குறையும்.

இரவில் பெரும்பாலும் நிமிடத்திற்கு பன்னிரண்டு முறை என்ற அளவிலேயே இருக்கும். இவ்வாறு பகலிலும் இரவிலும் மூச்சில் ஏற்படும் மாறுதல்களையே,
“பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவுள்ளது’
என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

உடலுக்கும் பிராணனுக்கும் அதிபதியாக இருப்பது “ஆன்மா’. இந்த ஆன்மாவையே “பாகன்’ என்று உருவகம் செய்கிறார் திருமூலர்.

ஆன்மா என்பது உடலினுள் இருக்கும்வரைதான் பிராணனும் உடலில் தங்கியிருக்கும்; சுவாசமும் நடைபெறும்.

ஆன்மா பருவுடலை விட்டு நீங்கும்போது சுவாசமும் நின்றுவிடும். எனவேதான் சுவாசம் எனும் ஆனையை இயக்கும் பாகனாக ஆன்மாவைக் குறிப்பிடுகிறார்.

மூச்சை இயக்குவது ஆன்மாவே எனினும் அந்த மூச்சின் இயக்கங்களை ஆன்மா உணர்ந்து கொள்வதில்லை. இதையே,
“பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன்’
என இரண்டாவது வரியில் திருமூலர் குறிப்பிடுகிறார்.

பாகனின் அறிதலும் புரிதலும் இன்றியே அந்த ஆனை தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளாத அனைவரது உடலிலும் இதுவே நடைபெறுகிறது.

“பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவு இல்லையே.’

மூச்சு எனும் ஆனையை அதன் பாகனா கிய ஆன்மா உணர்ந்து கொண்டு, முறையான மூச்சுப் பயிற்சிகளின் மூலமாக அதைத் தன்வசப்படுத்தியபின் அந்த ஆனைக்கு (மூச்சுக்கு) பகல் இரவு என்ற பேதங்கள் இல்லாமற் போகும்.

இது எப்படி சாத்தியமாகும்? சற்றே விரிவாகக் காணலாம்.

சாதாரணமாக சுவாசம் என்பது இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடி களிலுமே மாறி மாறி நடைபெறுகிறது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் நாடியில் மாற்றம் ஏற்படும் என்பதை ஏற்கெனவே கண்டோம். அதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
மொத்தமுள்ள நாடிகள் 72,000. இவற்றுள் சுழுமுனை, இடகலை, பிங்கலை ஆகிய மூன்றை முதன்மை நாடிகள் அல்லது மிக முக்கியமான நாடிகள் என்று கூறுகிறோம்.

இடகலையும் பிங்கலையும் சுழுமுனை நாடியைச் சுற்றி பாம்பு போல் பின்னிக் கிடப்பவை. இவை மூலாதாரத்தின் அருகிலிருந்து துவங்கி, மேலெழும்பி, நாசித் துவாரங்களில் சென்று முடிவடைகின்றன. இந்த நாடிகளில் மட்டுமே சுவாசம் நடைபெறும்போது நாசித் துவாரங்களில் துவங்கி மூலாதாரம் வரையிலேயே பிராணன் பாயும்.

முறையான மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவரும்போது பிராணன் மூலாதாரத்தைக் கடந்து சுழுமுனை நாடியிலும் பாயத் துவங்கும்!

இவ்வாறு சுழுமுனையில் பிராணன் பாயத் துவங்கும்போது மூலாதாரத்தின் கீழே உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியும் தூண்டப்படும். குண்டலினி மேலெழும்பி சுழுமுனை வழியே மேல்நிலைச் சக்கரங் களைச் சென்று அடையும்போதுதான் எல்லையற்ற ஆனந்த நிலை உருவாகும். “காலம்’ எனும் தளையிலிருந்து ஆன்மா விடுதலை பெறும்! பகல்- இரவு என்ற பேதங்கள் மறைந்து போகும்.

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு அளியனும் ஆமே.’

-திருமந்திரம் – பாடல் எண்: 562.

தொடர்ந்து மூச்சுப் பயிற்சிகளைச் செய்து வருபவர்களுக்கு முதுமை மறையும். உடல் காற்றைவிட லேசாகும் என்பதே இப்பாடலின் சுருக்கமான கருத்தாகும். இதை சற்றே விரிவாகக் காணலாம்.

“வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்’

“வளி’ என்பது காற்றுக்கு மற்றொரு பெயர். இந்தக் காற்றை உள்வாங்கி, வசப்படுத்தி (வயத்தில்) உடலில் தங்குமாறு செய்தால் (அடக்கில்), உடல் பளிங்குபோல் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். வயது ஏறினாலும் உடலில் முதுமையின் சின்னங்கள் (திரை, நரை போன்றவை) தோன்றாது. உடல் இளமையாகவே இருக்கும். இதை ஒரு அழகான உவமை மூலம் விளக்குகிறார் திருமூலர்.

“பழுக்கினும் பிஞ்சாம்.’

மிகவும் வயதானவர்களை “அவர் ஒரு பழுத்த பழம்’ என்று சொல்வதுண்டு. அதே உவமையை இங்கு பயன்படுத்துகிறார். வயதால் பழுத்திருந்தாலும் உருவத்தால் பிஞ்சாகவே இருப்பர்.

மூன்றாவது அடியில் “தெளியக் குருவின் திருவருள் பெற்றால்’ என குருவின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

பாடலின் நான்காவது வரியைப் பாருங்கள்.

“வளியினும் வேட்டு அளியனும் ஆமே.’

இந்த கடைசி வரிக்கு இருவிதமான பாட பேதங்கள் உள்ளன. பாடபேதத்திற்கு ஏற்ப பொருளும் மாறுபடுகிறது. நாம் எடுத்துக்கொண்ட பாடபேதத்தின் பொருள்- தொடர்ந்து மூச்சுப் பயிற்சியைச் செய்துவருபவர்களுக்கு உடல் காற்றைவிட லேசானதாகும். அவனால் காற்றிலும் சஞ்சரிக்க இயலும் என்பதாகும். (வேட்டு= விரும்பும்போது, வளியினும்= காற்றை விடவும், அளி= மென்மையான).

மற்றொரு பாட பேதத்தையும் காண்போம்.

“வளியனும் வெட்ட வெளியனும் ஆமே.’

“வளி’ என்பது காற்று. உயிர் வாழ்வது என்பது காற்றை அடிப்படையாகக் கொண்டது. காற்று இல்லையேல் உயிர் (சீவன்) உடலை விட்டுப் பிரிந்து போய்விடும். எனவேதான் அந்த சீவனை “வளியன்’ என்கிறார் திருமூலர். இது ஜீவாத்மாவைக் குறிக்கிறது.

“வெட்ட வெளி’ என்பது எல்லை யில்லாத- ஒன்றுமில்லாத- சூன்யமான என்பன போன்ற பல அர்த்தங்களைத் தரும் ஒரு சொல்லாகும். எல்லையற்ற பிரபஞ்சத்தையும், அந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து நிற்கும் பிரபஞ்ச சக்தியையும் குறிக்கவே இங்கே “வெட்ட வெளி’ என்ற சொல்லை திருமூலர் பயன்படுத்தியுள்ளார். இது பரமாத்மாவைக் குறிக் கிறது.

குருவின் அருளோடு தொடர்ந்து மூச்சுப் பயிற்சி களைச் செய்து மூச்சை தன்வசப்படுத்த முடிந்த ஜீவாத்மா, பரமாத்மாவின் நிலையை எட்ட முடியும்.

ஜீவாத்மா என்பது அதிர்வுகள் குறைந்த ஒரு சக்தி நிலை. பரமாத்மா என்பது உயர் அதிர்வு சக்தி நிலை. தொடர்ந்த மூச்சுப் பயிற்சிகளால் உடலில் அதிக அளவில் பிராண வாயு செல்களில் தங்கும். ஒவ்வொரு செல்லும் தமது முழுத் திறமையோடு செயல்படத் துவங்கும். நாடிகளில் சக்தி தங்கு தடையின்றி பாயும். குண்டலினி எழும்பும். சக்கரங்களும் ஒவ்வொன் றாகத் திறந்து கொள்ளும்.

இறுதியாக சகஸ்ராரச் சக்கரம் திறந்து கொள்ளும்போது ஜீவாத்மா பரமாத்மாவோடு ஒன்றிய நிலை உருவாகும். மனிதனும் கடவுளாகலாம் என்ற அரிய சூட்சுமத்தையே இப்பாடலின் கடைசி வரியில் திருமூலர் மறைமுகமாகக் கூறியுள்ளார்.

அட்டமா சித்திகளில் ஒன்று “லகிமா சித்தி.’ இந்த லகிமா சித்தியைப் பெற்ற சித்தர்களால் தாம் விரும்பிய மாத்திரத்தில் தமது உடலைக் காற்றை விட லேசாக்கிக் கொள்ள முடியும். தரையில் கால்படாமல் மிதக்க முடியும். நீரின் மேல் நடக்க முடியும். காற்றில் பறந்து செல்லவும் முடியும். இப்பாடலின் கடைசி அடிக்கு, முதலாவது பாட பேதத்தை எடுத்துக் கொண்டால் “லகிமா சித்தி’ குறித்து திருமூலர் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம். இரண்டாவது பாட பேதத்தை எடுத்துக் கொண்டால் “மனிதனும் கடவுளாகலாம்’ என்ற சூட்சுமத்தை திருமூலர் விளக்குவதாகக் கொள்ளலாம். இரண்டுமே பொருத்தமுடைய விளக்கங்களாகவே தோன்றுகின்றன.

Scroll to Top