You cannot copy content of this page

தீராத தலைவலிக்கு தீர்வு

தீராத தலைவலிக்கு தீர்வு:

இன்றைய இயந்திர வாழ்க்கையில் மைக்ரேயன் எனப்படும் ஒற்றை தலைவலி பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இப்பிரச்னை வருகிறது.

துாக்கமின்மை, கால நேரம் தவறி உணவு அருந்துதல், அஜீரண கோளாறு, தேவையற்ற சிந்தனை, மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒற்றை தலிவலி வருகிறது.

கம்ப்யூட்டர், மொபைல் போன் அதிக நேரம் பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது, சில வாசனைகளை நுகர்வது போன்ற காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம்.

ஜலதோஷம் காரணமாக தலை வலி ஏற்படலாம், சிலருக்கு அதிகமாக சிந்திப்பதன் மூலம் தலைவலி ஏற்படலாம், அதிக கோபம் கொண்டால் தலை வலி ஏற்படலாம், அதிக சத்தம் உள்ள இடத்தில இருந்தால் தலை வலி ஏற்படலாம்.

வலியானது, தலையின் இரு பக்கங்களின் பின் பகுதியில் ஆரம்பித்து முன்பக்கம் பரவும். மந்தமாகவோ, தலையைச் சுற்றி இறுக்குவது போன்றோ காணப்படும்.

முதலில் தலையின் ஒரு புறத்தில் ‘தெறிப்பது’ போல ஏற்பட்டு, தலை முழுவதும் பரவும். தலைவலி வருவதற்கு முன்பே அறிகுறி (Aura) தோன்றும்.

இதைத் தவிர சைனஸ் பிரச்னையாலும், மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பும், காய்ச்சலினாலும் தலைவலி வரலாம். குடும்ப பாரம்பரியமாகவும் சிலருக்கு இந்நோய் வருகிறது.

மூளைக் கட்டி, மூளை நோய்கள், பக்கவாதம், மூளை ரத்தக் குழாய்களின் அமைப்பில் குறைபாடுகள், உயர் ரத்த அழுத்தம் போன்ற முக்கியமான நோய்களின் வெளிப்பாடாகவும் தலைவலி காணப்படுகின்றது. நோய்களால் தலைவலி ஏற்பட்டாலோ அல்லது தலைவலியோடு சேர்ந்து வாந்தியும் இருந்தாலோ மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

இப்படி தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன

சரியான நேரத்தில் உணவு உண்ணுதல், சரியான நேரத்தில் தூங்குதல், மதுபானம் தவிர்த்தல், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் போன்றவை தலைவலிக்கான சாத்தியங்களைக் குறைக்கும்

நொச்சித்தழையை வெண்ணீரில் போட்டு ஆவி பிடித்து, ஒற்றை தலைவலிக்கு தீர்வு காணலாம்.

ஆறுமுக செந்துாரம், கவுரி சிந்தாமணி செந்துாரம் ஆகிய மருந்துகளை, சுக்கு மிளகு திப்பிலி சேரக்கூடிய திரிகடுகு சூரணத்துடன் சேர்த்து உட்கொண்டால் ஒற்றை தலைவலிக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

சித்த மருத்துவத்தில் தலைவலிக்கு எளிய தீர்வுகள்:

துளசி, சுக்கு போன்றவை இயற்க்கை நமக்கு தந்த வரப்ரசாத மூலிகைகள்.

இவைகள் மூலம் தலைவலியை எளிதில் குணப்படுத்தலாம்.

துளசி இலைகள் ஐந்து எடுத்துக்கொண்டு அதோடு ஒரு துண்டு சுக்கு மற்றும் இரண்டு லவங்கத்தை சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் தலைவலி இருக்கும் இடத்தில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

சிலருக்கு உடல் உஷ்ணத்தால் கூட தலைவலி ஏற்படும். அது போன்ற சமயங்களில் சீரகம் மற்றும் கிராம்பை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தால் சூட்டல் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

நொச்சி இலை சாறு தலைவலியை போக்கக்கூடியது. ஆகையால் நொச்சி இலையை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அதை நெற்றியின் இருபுறம் மட்டும் தடவினால் தலைவலி நீங்கும்.

சூரிய உதயம் ஆகும் சமயத்தில் எருமைப் பாலேடு வெள்ளை எள்ளை சேர்த்து நன்கு அரைத்து அதை நெற்றியில் பற்று போட்டு சூரிய ஒளியில் காட்டினால் தலைவலி நீங்கும்.

வில்வ இலைக்கு நீண்ட நாள் தலைவலியை குணமாக்கி மருத்துவ குணம் உண்டு.

வில்வ இலையை நன்கு அரைத்து வைத்துக்கொண்டு பதினைந்து நாட்கள் முதல் இருவது நாட்கள் வரை தொடர்ந்து ஒரு பட்டாணி அளவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் தொல்லை கொடுத்த தலைவலி நீங்கும்.

தலைவலி தவிர்க்க… 

மூக்கு அடைத்து, தும்மலுடன், முகம் எல்லாம் நீர் கோத்து வரும் சைனசைட்டிஸ் தலைவலி சிறார்களுக்கும் பெண்களுக்கும் அதிகம்.

இதற்கு மஞ்சள், சுக்கு வகையறாக்களைச் சேர்த்து அரைத்து உருட்டிய `நீர்க்கோவை ’ மாத்திரையை நீரில் குழைத்து நெற்றியில், மூக்குத்தண்டில், கன்னக் கதுப்பில் தடவி, ஓர் இரவு தூங்கி எழுந்தால் தலைவலி காணாமல் போகும். அதோடு, நொச்சித்தழை போட்டு ஆவி பிடிப்பது, இரவில் மிளகுக் கஷாயம் சாப்பிடுவது ஆகியவையும் தலைவலியைத் தீர்க்கும்.

சைனசைடிஸ் தலைவலியைப் போக்க சீந்தில் சூரணம் முதலான ஏராளமான சித்த மருந்துகள் உள்ளன.

சீந்தில் கொடியை ‘ சித்த மருத்துவத்தின் மகுடம்’  எனலாம். நீர்கோத்து, மூக்கு அடைத்து, முகத்தை வீங்க வைக்கும் சைனசைட்டிஸ் தலைவலிக்கு, அப்போதைக்கான வலி நீக்கும் மருந்தாக இல்லாமல், பித்தம் தணித்து மொத்தமாக தலைவலியை விரட்டும் அமிர்தவல்லி அது. 

சைனசைட்டிஸோ, மைக்ரேன் தலைவலியோ… வாரம் இருமுறை சுக்குத் தைலம் தேய்த்துக் குளித்தால், வலி மெள்ள மெள்ள மறையும். 

மைக்ரேன் எனும் பித்தத் தலைவலிக்கு இஞ்சி ஓர் அற்புத மருந்து.

இந்த வலி வராமலிருக்க, இஞ்சித் தேனூறல், இஞ்சி ரசாயனம் என நம் பாட்டி மருத்துவம் இருக்கிறது. இஞ்சியை மேல் தோல் சீவி, சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்து, தினமும் காலையில் அரை டீஸ்பூன் சாப்பிட்டால், மைக்ரேனுக்குத் தடுப்பாக இருக்கும். இதுதான் இஞ்சித் தேனூறல்.

இஞ்சி, சீரகம், இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து, அந்தக் கூட்டுக்குச் சம அளவு ஆர்கானிக் வெல்லம் கலந்தால், இஞ்சி ரசாயனம் தயார். சாப்பாட்டுக்குப் பின் இதை அரை டீஸ்பூன் சாப்பிடுவது அஜீரணத் தலைவலியைத் தவிர்க்கும். 

மைக்ரேன் தலைவலிக்கு, அதிமதுரம், பெருஞ்சீரகம் (சோம்பு), ஹை ட்ரேஸ் (High Trace) மினரல்ஸ் சேர்க்காத நாட்டுச்சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பால் உடனடித் தீர்வு தரும். 

சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போகும் என, ‘திருவள்ளுவ மாலை ‘ எனும் நூல் குறிப்பிடுகிறது.

இந்த மூன்று பொருட்களும் சைனசைட்டிஸ், மைக்ரேன் மற்றும் மன அழுத்தத் தலைவலிக்கான தீர்வை உடையன என நவீன அறிவியல் சான்றையும் பெற்றவை. முகர்ந்தால் மட்டும் போதாது… சாப்பிடவும் வேண்டும். 

அஜீரணத் தலைவலி மற்றும் இரவெல்லாம் ‘ மப்பேறி’ மறுநாள் வரும் ஹேங் ஓவர் தலைவலிக்கு சுக்கு, தனியா, மிளகு போட்டு கஷாயம் வைத்து, பனைவெல்லம் கலந்து குடித்தால், தலைக்கு ஏறிய பித்தம் குறைந்து, தலைவலி போகும்.

சம அளவு இஞ்சிச் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது தலைவலியைக் குறைக்கும்.

இஞ்சி இரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைக்கும்.

சுக்குப் பொடியை தண்ணீரில் கலந்து தலையில் பத்து போடலாம்.

இலவங்கப் பட்டையைப் பொடி செய்து நீர் கலந்து நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.

கிராம்புப் பொடியை முகர்ந்தால் சுறுங்கி இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைந்து தலைவலி சரியாகும்.

இரு துளி கிராம்பு எண்ணெயை ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயில்  கலந்து கடல் உப்பு சேர்த்து நெற்றியில் மிதமாக மசாஜ் செய்தால் தலைவலி சரியாகும்.

துளசி சிறந்த வலி நிவாரணி, நான்கு துளசி இலைகளை ஒரு கோப்பை கொதிக்கும் நீரில் போட்டு மிதமான தீயில் சிறிது நேரம் விடவும்.  பின்பு தேன் சேர்த்து அதனை அருந்தவும்.

தலைவலி வருவதற்கான அறிகுறி தெரிந்தால் பாதாம் பருப்பை சாப்பிடவும். தலைவலியைப் போக்குவதில் ஆப்பிள் மற்றும் ஆப்பிள் சைடர்  வினிகருக்கு முக்கிய பங்கு உள்ளது.

காலையில் தலைவலியால் அவதிப்பட்டால் ஆப்பிள் துண்டுகளை உப்புடன் சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடிக்கவும், இது தலைவலிக்கு சிறந்த  மருந்து.

மக்னீசியம் குறைபாடு தலைவலியோடும், ஒற்றைத் தலைவலியோடும் நேரடித் தொடர்புள்ளது.

பாதாம், எள், ஓட்ஸ், முந்திரி, முட்டை, பால், சூரியகாந்தி விதைகள், பிரேசில் நட்ஸ், பீனட் பட்டர் போன்றவை அதிக மக்னீசியம் கொண்டவை, எனவே இவற்றை உட்கொண்டால்  தலைவலிக்கு உடனடியாக பலனளிக்கும்.

தேன் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டது, அதில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது.

தலைவலியால் அடிக்கடி அவதிப்படுவோர் தினமும் காலையில் ஒரு டேபிள்ஸ்பூன் தேனை மிதமான சூட்டில் உள்ள நீருடனும், 2 டேபிள்ஸ்பூன் தேனை உணவு  உண்பதற்கு முன்பும் அருந்த வேண்டும்.

மேலும் சில குறிப்புகளை இங்கே காணலாம்:

1 கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.

2 திருநீற்றுப் பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.

3 துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். தலை பாரமாக இருக்கும் போது ஆவிப் பிடித்தால், இறுகியிருக்கும் சளியானது இளகி எளிதில் வெளியேறி, தலை பாரத்தில் இருந்து விடுதலைப் பெறலாம்.

4 கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.

5 நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

6 துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.

7 கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.

8 வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.

9 முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.

10 கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலி குறையும்.

11 இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.

12 வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.

13 சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.

14 மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.

15 கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்

16 எலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

17 சுக்கை அரைத்து, அதில் எலுமிச்சம்பழம் சாறு விட்டு குழைத்து நெற்றியில் பூச தலைவலி நொடியில் குணமாகும்.

18 தலை பாரத்தை சரிசெய்வதில் உப்பு ஒரு சிறந்த பொருள்.  காலை எழுந்த உடன் உப்பு கலந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். அதிலும் அந்த நீரை தொண்டையில் வைத்து கொப்பளிக்க வேண்டும். இதனால் சளி உடனே வெளியேறி, தலைவலியில் இருந்து நிவாரணம் தரும்.

பொதுவான தீர்வுகள் இப்படி இருந்தாலும், தலைவலிக்கான மருந்துகள் பலவும் சித்தர்களினால் அருளப் பட்டிருக்கிறது.

ஆடாதோடை – 1 பங்கு, வேப்பந்தோல் – 1 பங்கு சுக்கு – 1 பங்கு பற்பாடகம் – 1 பங்கு சந்தனம் – 1 பங்கு வெட்டி வேர் – 1 பங்கு முத்தக்காசு – 1 பங்கு விலாமிச்சு – 1 பங்கு தண்ணீர் – 8 பங்கு
இவற்றை 1/8 பங்கு குடிநீராகக் குறுக்கி இரவில் குடிக்க வேண்டும். தீரும் நோய்கள் – வெதுப்பு, தலைவலி, சன்னி.

இவ்வாறு பல வழிகள் உள்ளன. நமக்கு ஏற்ற வழிகளை தேர்வு செய்து தலைவலியை விரட்டி நலம் பெறுவோம்.
 

Scroll to Top