You cannot copy content of this page

நால்வகை வாழ்வியல்

நால்வகை வாழ்வியல்:

பிரம்மச்சர்யம்
கிரகஸ்தம்
வானப்பிரஸ்தம்
சன்னியாசம்

பிரம்மச்சரியம்:

மனித வாழ்வில் முதல் நிலையாகும். இது தன்னடக்க நிலை அல்லது மாணவப் பருவமாகும்.

ஆசிரியர் களுக்குக் கட்டுபட்டு அவர்களுக்கு பணிவிடைகளை செய்து பயின்று சமயச் சடங்குகளை செய்து நன்னடத்தை உடையவராய் திகழும் மாணவப் பருவமே பிரம்மச்சரியம்.

மாணவ வாழ்க்கை முடிந்ததும், தன் தகுதிக்கேற்ற ஓர் தட்சணையை குருதேவருக்கு தட்சணை வழங்கி விடைபெறுகிறான்.

குருதேவர் சீடனுக்கு உபதேசம் அளித்து அடுத்த ஆசிரமமான கிரகஸ்தம் செல்ல ஆசிர்வதித்து வழியனுப்பி வைக்கின்றார்.

கிரகஸ்தம்:

கிரகஸ்தம் எனப்படும் இல்லறம் என்பது, ஒருவன் பிரம்மச்சர்யம் என்ற நிலையைக் கடந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு நல்வழியில் பொருள் ஈட்டி கர்ம யோகம் மற்றும் பக்தி யோகம் வழியில் வாழ்க்கையை நடத்துவதாகும்.

புருஷார்த்தம்:

“புருஷன்” என்றால் “மனிதன்”. “அர்த்தம்” என்றால் “ இலட்சியம்” அல்லது “இலக்கு” என்று பொருள். மனிதனுக்கு இருக்க வேண்டிய இலட்சியம் “புருஷார்த்தம்” ஆகும்.

நான்கு வகை இலட்சியம்:

மனிதனுக்கு இருக்க வேண்டிய இலட்சியம் “புருஷார்த்தம்” எனபார்தோம். சாஸ்திரம் நான்கு வகையான புருஷார்த்தத்தை கூறுகிறது. அது சமஸ்கிருதத்தில் “தர்மார்த்த காம மோக்ஷம்” (தர்மம்,அர்த்தம்,காமம்,மோக்ஷம்) எனப்படும். நம்முடைய தமிழ் மொழியில் “அறம்,பொருள்,இன்பம்,வீடு” எனப்படும்.

கிரகஸ்த தர்ம கடமைகள்:

இல்லறத்தார்கள் பஞ்ச மகாயக்ஞங்கள் எனும் கர்மங்கள் செய்வது அவசியம் என வேத சாத்திரங்கள் கூறுகின்றன.

1,தேவ யக்ஞம் 2, பித்ரு யக்ஞம்.3, பூத யக்ஞம் 4, மனித யக்ஞம். 5, பிரம்ம யக்ஞம் என்பன பஞ்சமஹா யக்ஞம் எனப்படும்.

தேவ / பிரம்ம யக்ஞம்:

தெய்வ சிரத்தையுடன், பக்தி நெறியில் வாழ்வதும், எல்லா உயினினத்திடமும் அன்பு செலுத்தி அனைத்து உயிரனங்களையும் சிவ சொரூபமாக கண்டுணர்வதும் தேவ / பிரம்ம யக்ஞம் ஆகும்.

தெய்வ வழிபாடு, ஆலய தரிசனம், கோவில் கைங்கர்யம், வேள்வி செய்வது, மற்றும் வேதம் ஒதுவது, ஓதுவிப்பது போன்றவையும் பிரம்ம யக்ஞம் ஆகும்.

2 ரிஷி / முனி யக்ஞம்:

திருமந்திரம், திருமுறைகள், உப நிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, இதிகாசங்கள், திருக்குறள் போன்ற தெய்வீக நூல்களைப் படித்தல், கேட்டல், மற்றும் படித்தவைகளை மீண்டும் மீண்டும் மனதால் சிந்தித்தல், அதன் வழி நடத்தல் ரிஷி யக்ஞம் / முனி யக்ஞம் ஆகும்.

3 பித்ரு யக்ஞம்:

பித்ருக்களான தாய் தந்தையர்களுக்கும் மூதாதையார்களுக்கும் நமது கடமைகளைச் செய்வது பித்ரு யக்ஞம்.

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ (அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்). தாய் தந்தையர் உயிருடன் இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கிய மெல்லாம் செய்து தரவேண்டும்.

தாய் தந்தையார் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும். பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும்.

அவர்கள் இந்த உலகத்தை விட்டுப்போன பிறகு நீத்தார் வழிபாட்டின் மூலம் நமது தாய், தந்தையர் மற்றும் மூதாதையர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுத்து இறந்த முன்னோர்களை மகிழ்விப்பது மிகவும் அவசியம்.

4 மனுஸ்ய யக்ஞம்:

நம்மை நாடி பசித்து வந்தோர்க்கு உணவளித்து உதவுவது. வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அமுது படைத்து விருந்தோம்புவது. தான தர்மம் செய்வது. மேலும் இந்து தர்மப்படி அவரவரும் தங்களுக்கான தொழிலை நேர்மையான வழியில் செய்து ஈசுவரார்ப்பணம் என்ற நிலையில் பணம் சம்பாதிப்பது. பலருக்கும் பகிர்ந்தளிப்பது. சக மனிதரிடம் அன்பு பாராட்டுவது.

5 பூத யக்ஞம்:

மனிதர் நீங்கலாக தாவரங்களுக்கும், ஈ. எறும்பு முதலான பிராணிகளுக்கும் தன்னிடமுள்ள உணவு பொருள்களை சிறிதளவாவது சுயநலமின்றி தியாக மனப்பான்மையுடன் கொடுத்து உதவுவது. பசு, காகம், நாய் முதலியவற்றிற்கு உணவு படைப்பது. சகல உயிரினங்களிடத்தும் அன்பு பாராட்டுவது.

இல்லற தர்மத்தில் இருந்தாலும், பகவானிடம் பக்தி செலுத்த வேண்டும். படைக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு காலாத்தில் அழியும் தன்மை உடையதோ அவ்வாறே கண்ணுக்குப் புலப்படாத சொர்க்கம் முதலிய லோகங்களும் அழியும் தன்மை உடையது என்று இல்லறத்தான் அறிந்து அதன்படி வாழ வேண்டும்.

உடல் மற்றும் வீடு போன்ற பொருட்களில் “ நான் – எனது ” (அகங்காரம் – மமகாரம்) என்ற கர்வம் இன்றி வாழ வேண்டும். வீட்டில் உள்ள பெண்கள் குறிப்பாக தாய், மனைவி, மகள் மனம் வருந்தாமலும், கண்ணீர் சிந்தாமலும் அவர்களைக் காக்க வேண்டும். பெண்களைத் துன்பறுத்தாது அவர்களைத் தெய்வமாக வணங்க வேண்டும். சைவ மதத்தில் சிவன் அர்த்தநாரி வடிவில் வணங்கப் படுகிறார் என்பதை அனுதினமும் நினைவில் கொள்ள வேண்டும்.

வானப்பிரஸ்தம்:

வானப்பிரஸ்தம் என்பது இந்து தர்மத்தின்படி மனித வாழ்வில் மூன்றாம் நிலையாகும்.

பொறுப்புணர்வு கொண்ட பிள்ளைகளிடம், குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, கிரகஸ்தன் (இல்லறத்தான்), தன் மனைவியை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது தன்னுடன் அழைத்துக் கொண்டு வானப் பிரஸ்த ஆசிரம தர்மத்தையும், பின்பு சந்நியாச தர்மத்தையும் ஏற்கவேண்டும்.

இல்லற வாழ்வில் கடமைகளை முறையாகச் செய்து முடித்தபின் மனைவியுடன் வேறிடம் சென்று தவ வாழ்வினை மேற்கொள்ளுதல் வானப்பிரஸ்தம் ஆகும்

பொருளாசையை படிப்படியாக துறத்தலும், பாச பந்தங்களிலிருந்து விடுபடுதலுமே இக்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளாகும். சுருங்கக் கூறின் வானப்பிரஸ்த வாழ்க்கை, துறவறத்திற்கு ஆயத்தப்படுத்துதல் ஆகும். இது ஐம்பது வயதிற்கு மேல் எழுபத்தைந்து வயதுக்கு உட்பட்ட காலமாகும்.

வானப்பிரஸ்தனின் முதன்மையான தர்மம் பாச பந்தங்களிலிருந்து விடுபடுதலும், இறைபக்தியும், தவமும் மேற்கொள்ளுவதும் அன்பே சிவம் என எல்லா உயினினத்திடமும் அன்பு செலுத்தி அனைத்து உயிரனங்களையும் சிவ சொரூபமாகக் கண்டுணர்வதும் மட்டுமே.

சந்நியாசம்:

சந்நியாசம் மனித வாழ்வில் நான்காம் ஆசிரம நிலையாகும். இக்காலத்தில் இடம் விட்டு இடம் சென்று (seclusion), உடல் சுகத்தைத் துறந்து கடவுளை தியானிப்பதும், தான் அறிந்த உண்மைகளையும் நீதிகளையும் மக்களுக்கு கூறுதலும், பாச பந்தங்களிலிருந்து விடுபடுதலும், இறைபக்தியும், தவமும் மேற்கொள்ளுவதும்  அன்பே சிவம் என எல்லா உயினினத்திடமும் அன்பு செலுத்தி அனைத்து உயிரனங்களையும் சிவ சொரூபமாகக் கண்டுணர்வதும் சன்னியாசமாகும். பாசங்களினின்று விடுபட்டு ஆசையை முற்றும் துறந்த நிலையே சந்நியாசத்தின் வடிவம். துறவறத்தின் தர்மம் சாந்தமும், அமைதியும், அன்பும், அகிம்சையுமே.

துறவி எதனிடத்திலும் பற்றுக் கொள்ளாமல், புலன்களை அடக்கி, ஆத்மாவுடன் விளையாடிக் கொண்டு தன்னிலேயே மனநிறைவு அடைந்தவனாக, எல்லா சீவராசிகளையும் சமமாகப் பார்த்து, தனியாகப் பூவுலகில் ஒரிடத்தில் தொடர்ந்து தங்காமல், நிலையின்றி திரிந்து வாழவேண்டும்.

மோட்சத்தில் விருப்பு, வெறுப்பற்றவன் துறவி. ஆத்மாவில் நிலைகொண்டவன் (ஞானநிஷ்டன்), வைராக்கியம் அடைந்தவன், ஆசிரம நியமங்களுக்கு (விதிகள்) கட்டுப்பட்டவன் அல்லன்.

தர்ம சாத்திரங்களில் கூறப்பட்ட செய்யத் தக்கவை, தகாதவை என்ற விதிகளை கடந்து, சந்நியாசி (துறவி) சுதந்திரமாக உலகம் சுற்றலாம். இவனே ஞானியும் ஆகிறான்.

ஞானி அனைத்தையும் அறிந்தவனானாலும், சிறுவனைப் போல் விளையாடுவான்; ஆற்றல் உள்ளவனானாலும், ஏதும் அறியாதவன் போல் இருப்பான்; பண்டிதனானாலும் பைத்தியம் போல் பேசுவான்; வேதாந்தங்கள் கற்றறிந்தவனானாலும் ஆசார, ஆசிரம நியமங்களை கடைப் பிடிக்கா தவனாக இருப்பான்.

யார் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வான்; எவரையும் அவமதிக்க மாட்டான்; மற்றவர்களிடம் விரோதம் கொள்ள மாட்டான்.

ஞானத்தில் நிலை பெற்ற துறவியிடம் இருமை (இன்ப- துன்பம், மான-அவமானம், குளிர்-வெப்பம்) போன்ற உணர்வுகள் காண முடியாது. துறவிக்கு வேதம் கூறியுள்ள அக்னி காரியம்கிடையாது;

இவ்வாறாக ஒருவன் தன்னுடைய தர்மங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் மனம் தூய்மை அடைந்து, பட்டறிவு, மெய்யறிவு (ஞான-விக்ஞானம்) பெற்று இறுதியில் பிரம்மத்தை அடைகிறான்.

திருமந்திரம்

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன்இல்லை நாளுமே
சென்றே புகுங்கதி இல்லேதும் சித்தத்து
கின்றே நிலைபெற நீர்நினைத் துய்மினே.

விளக்கம்: குலம் பல இல்லை; ஒன்றே! தெய்வங்களும் பல இல்லை! ஒன்றே ஆகும்! என்றும் நல்லனவற்றையே எண்ணுங்கள். யமன் அணுகான். உங்கள் பூத உடல் மறைந்தாலும் புகழ் உடல் என்றும் நிலைத்து இருக்க இறைவனை நினைந்து, நல்லனவற்றை நினைந்து ஈடேறுங்கள்.

ஒன்றே குலம்! ஒருவனே கடவுள்!

திருச்சிற்றம்பலம்

Scroll to Top