You cannot copy content of this page

இந்து சமயப் பிரிவுகள்

இந்து சமயப் பிரிவுகள்:

இந்து மதத்தில் நான்கு வேதங்கள், 108 உபநிஷதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள், எண்ணற்ற மதக் கோட்பாடுகள், ஸ்தோத்திரங்கள், துணை நூல்கள், தெளிவுரை நூல்கள்,
நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன.

இந்து மதம் ஆறு பிரிவுகள்

காணாபத்தியம்:

விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு. எல்லாச் செயல்களையும் தொடங்குவதற்கு முன் வணங்கப்படும் ஆனைமுகன் கணபதியை எல்லாக் கடவுளர்களையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்று வணங்குவது காணபத்யம் என்னும் சமயம்.

சைவம்:

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியான சிவத்தை; தெய்வங்களின் தலைவனை, பெரியகடவுளாகிய மஹாதேவனை, சிவபெருமானைப் பரம்பொருளாக வணங்குவது சைவம்.

சைவம் சிவனைமுழுமுதலாகக் கொண்ட சமயமாகும். சிவ வழிபாடானது, பண்டுதொட்டே இந்திய உபகண்டத்தில் நிலவிவந்திருக்கிறது. சைவத்தின் காலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பப்டது.

யார் சைவர் எனப் போற்றப் படுபவராவார்?

1 திருநீறு அணிதல்.
2 உருத்திராக்கம் அணிதல்.
3 திருவைந்தெழுத்து மந்திரமாகிய
நமசிவய எனும் மந்திரத்தை எப் பொழுதும் மனதில் இருத்தி தியானித்தல்.
4 சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குதல்.
5 தாய், தந்தை, ஆசான், குரு நால்வரையும் பேணுதல்,
6 சகல உயிரினங்களையும் நேசித்தல். (அன்பே சிவம்),
7 செய்நன்றி அறிதல்
8 புலால் மறுத்தல்: மாமிச உணவுகளை உண்ணாதிருத்தல்; சாத்வீக உணவுகளை மட்டும் உண்ணுதல்; எந்த ஜீவராசிகளையும் இம்சிக்காது இருத்தல்.
9 பெண்களைத் துன்பறுத்தாது அவர்களை அன்புடன் பேணுதல்.
10 அறநெறி வழுவாது பொருள் ஈட்டி தர்ம வழியில் உலக இன்பங்களை அனுபவித்து அவற்றின் மீது பற்றை விடுத்து இறை உணர்தல்.
11 சர்வம் சிவமயம் என்ற தத்துவத்திற்கு இணங்க காணும் அனைத்து உயிர்களையும், உயிரற்றவைகளையும் சிவமாகவே கண்டு போற்றி வணங்குதல்.
12 பன்னிரு திருமறைகளையும் காலை, மாலை இரு வேளையும் பொருள் உணர்ந்தோதுதல்.

என்ற மேற்கண்ட பன்னிரு அனுட்டானங்களையயும் அனுதினமும் கடைப்பிடிப்பவர்களே சிவனின் அன்புக்கு உரிய அன்பர்கள் ஆவர். இவர்களே சைவர் எனப் போற்றப்படுவர்.

சைவ சித்தாந்த வாழ்வியல் திருமூலர் காலத்தில் அவரால் வகுக்கப் பட்டது. தமிழகத்தில் உள்ள சிவாலயங்களை நிர்வகிக்கும் ஆதீனங்கள் சைவ வேளாளர் மரபைச் சார்ந்தவர்களைக் குரு பீடமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

திருமந்திரம் முதல் பாடல்:

ஒன்று அவன் தானே ; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள் ; நான்கு உணர்ந்தான் ; ஐந்து
வென்றனன் ; ஆறு விரிந்தனன்; ஏழு உம்பர்ச்
சென்றனன் ; தானிருந் தான் உணர்ந்து எட்டே!

சாக்தம்:

பரம்பொருளை அன்னை வடிவில் சக்தி வடிவில் வணங்குவது சாக்தம். பெண்களைத் தெய்வமாக வழிபடும் முறை. இந்தியாவில் மட்டும் தான் உயிருள்ள ஒரு பெண்ணை சக்தியின் வடிவமாக கன்யா பூஜை அல்லது சுகாஸினி பூஜை என்று வணங்கி வழிபடுகின்றனர்.

சரித்திர பூர்வமாக கூறவேண்டும் என்றால், சிந்து சமவெளி நாகரீக காலம் தொட்டே பெண் தெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாகும்.

தொல்காப்பியம் மற்றும் பல சங்க இலக்கியங்களில் சக்தி வழிபாடு மிக சிறப்பாக சுட்டிக் காட்டப்படுகிறது. இந்த சக்தி வழிபாட்டோடு தாந்த்ரீகம் என்பது சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற காப்பியங்கள் உருவான காலத்தில் இணைந்ததாக அறிய முடிகிறது.

தனக்கு மேலே தன்னை படைத்ததாக தன்னை ஆட்சி செய்வதாக யாரும் இல்லாதவள் ஆதி பராசக்தி. அதனால் அவள் தத்துவ நாயகி என்றும் அறியப்படுகிறாள்.

தேவருக்கும் மூவருக்கும் யாவருக்கும் எங்கும் என்றும் தலைவியாகத் திகழ்பவள் அன்னை.

அத்தகைய அன்னைக்கு தற்பரை என்ற சிறப்புப் பெயர் சூட்டி அவளை அனாதியானவள் என்று நமக்கு திருமூலர் காட்டுகிறார்.

இங்கே திருமூலர் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலையும், அதாவது பிரம்மனாகவும் சிவனாகவும் விஷ்ணுவாகவும் இருப்பவள் அன்னை ஆதிபராசக்தியே என்ற கருத்தை முன்வைக்கிறார். அது மட்டுமல்ல அன்னை பராசக்தி, தானே முளைத்த சுயம்பு என்று கூறி அவளே உலகத்தின் மூல காரணம் என்கிறார்.

திருமந்திரம்:

தானே வெளியென எங்கும் நிறைந்தவள் 
தானே பரம வெளியது வானவள் 
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்துள அண்ட சகலமே !

வைணவம்:

திருமகள் மணாளனை, விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வணங்குவது வைஷ்ணவம் என்றும் சொல்லப்படும் வைணவம்.

வைணவ சமயம் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப் படுகிறது.

உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள் ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத் தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம், இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட , நாரதிய, பத்ம , வராஹ புராணங்கள் ஆகும்

கௌமாரம்:

கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் எனப் பெயர் பெற்றது.

ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்” – கந்தபுராணம்.

கந்தன்; கடம்பன்; கார்த்திகேயன்; அழகன்; முருகன்; அழகில் சிறந்தவன்; ஆறுமுகங்களைக் கொண்டவன்; குமரன்; குகன் என்று பலவாறாகப் போற்றப் படும் குமரக்கடவுளை முழுமுதற்கடவுளாகப் போற்றுவது கௌமாரம்.

சௌரம்:

உலகுக்கெல்லாம் ஒளி கொடுத்து உலகச் செயல்கள் எல்லாம் நடக்கச் சக்தியும் கொடுக்கும் கண்கண்ட தெய்வமான சூரியனை முழுமுதற்கடவுளாக, பரம்பொருளாக வணங்குவது சௌரம்.

ஸ்மார்த்தம்:

மேலுள்ளவற்றில் முதல் ஆறு பிரிவுகளையும் உள்ளடக்கியது ஸ்மார்த்தம். சிவன், சக்தி, விஷ்ணு, கணேசர், சூரியன் மற்றும் முருகனை வணங்கும் சமயப் பிரிவு.

ஆறு உட்பிரிவுகள் சிவன், திருமால், சக்தி, சூரியன், கணபதி, முருகன் ஆகிய ஆறு கடவுளர்களை அவ்வவ் பிரிவிற்குத் தலையாய முழுமுதற் கடவுளாகக் கொண்டவை. ஸ்மார்த்தம் என்பது ஆறு கடவுளரையும் வணங்கும் பிரிவு.

தற்காலத்தில் சைவம், காணபத்யம், கௌமாரம், சாக்தம், வைணவம், சௌரம் ஆறு சமயங்களும் இந்து மதமாக (ஸ்மார்த்தம்) உருமாறி நிற்கின்றன.

Scroll to Top