You cannot copy content of this page

கௌமாரம்

தமிழ்க் கடவுள் முருகன்

கௌமாரம் (Kaumaram)

முருகு என்றால் அழகு, இளமை, மணம், தெய்வம் ஆகிய பொருள்படும்.

முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாக கொண்டு வணங்கும் வழிபாடு கௌமாரம் என்று சொல்லப்படுகிறது.

கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் முருகன் வழிபாடு கௌமாரம் எனப் பெயர் பெற்றது.

இலக்கியச் சான்றுகள்

கி.பி 3 மற்றும் 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையில் முருகன் தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாகப் பரிபாடலில் முருகனின் பிறப்பு தொடர்பான நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளன.

திருமுருகாற்றுப்படையில் முருகனின் இருப்பிடங்களாகத் திருப்பரங்குன்றம், திருசாரல், திருவாவினன் குடி, திருஏரகம், குன்றுதோராடல் மற்றும் பழமுதிர்சோலை ஆகிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையைத் தொடர்ந்து முருகன் தொடர்பான செய்திகள் திருஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் தேவாரப்பதிகங்களில் இடம்பெற்றுள்ளன.

சேயோன் குன்றில் மேல் அமர்ந்தவனாகவும் அழிக்கும் தொழிலை செய்யும் கடவுளாக முறையே தமிழ் சங்க இலக்கியங்களும் தமிழ் நாட்டார் கூத்துகளும் எடுத்து இயம்புகின்றன.

சேயோன் என்பது குழந்தை எனும் பொருளில்வரும் . தமிழரின் முதல் பெண்தெய்வமான கொற்றவையின் மகன் என்பர்.

இதனை திருமுருகாற்றுப்படையில் “கொற்றவை சிறுவ” “பழையோள் குழவி” குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.

தொல்காப்பியம்

அகத்திணையியல் “சேயோன் மேய மைவரை உலகமும்” என்பதற்கு முருகவேள் மேவிய மைவரை உலகமும் என பொருள் கொள்ளலாம்.

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க! – திருவாசகம்

முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சிவன் பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார்.

சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர்.

அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமயம் கூறுகின்றது.

ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்த்தமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே.

பாடல் தொகுப்பு: திருப்புகழ்
இயற்றியவர்: ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான்

இப்பாடலின் பொருள்

மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம்தான்.

* ஏறு(ஏறிச் செல்லும்) மயில்
* ஏறு(எருது) + மயில்=இரண்டிலும் ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(உயரமான) மயில் மீது ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(போர்) = போர் வாகன மயில் மீது ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(ஆண்) மயில் மீது ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(ஏறிச் செல்லும்) மயில்=அது சென்று கொண்டிருக்கும் போதே…அதன் மீது தாவி ஏறுவான்!

ஏறு மயில் = வினைத் தொகை! ஏறிய, ஏறுகின்ற, ஏறும் மயில்!
ஏறு மயில் = உம்மைத் தொகை! ஏறும், மயிலும்!

முருகன் மயில் மேலும் ஏறுவான், அப்பாவின் வாகனம், காளை மீதும் ஏறுவான்!

அதனால்தான்….ஏறி “விளையாடும்” என்று அருணகிரி நாதர்  கூறுகிறார். ஏறிப் “பறக்கும்” என்று கூறவில்லை.

சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம்தான்.

கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும்
தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான்.

குறைகளைச் சொல்லும் அடியார்கள் வினைகளைக் கூறும் முன்பே  தீர்த்து விடுவான் முருகன்.

கிரெளஞ்ச மலையை
உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு
முகம்தான்.

முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம்தான்.

பனிதவதி வள்ளியை மணம் புணர
வந்ததும் உன் ஒரு முகம்தான்.

ஆறுமுகம் ஆன பொருள் நீ தான்
நீ அருள வேண்டும்!

ஒரு முகத்தால் பலவும் செய்து, ஆறுமுகமாகவும், ஒரே முகமாகவும் ஆகி நிற்கிறாய்!

ஆதி
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

(இற்றைக்கும், எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் முருகனுக்கே கட்டுண்டோம். காதலுண்டோம். இந்த விதியை யாம் கடவா வண்ணம் கந்தா நீ நல்குவாயாக !)

சரவணபவன்

‘சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற
சிறப்புப் பெயரும் உண்டு.

இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பியாவார். முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.

முருகனும் தமிழும்

முருகப்பெருமான் தமிழ் கடவுள். சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் முருகனை வணங்கி வருகின்றனர்.

முருகன் ‘ஓம்’ எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான். பழமைக்கும் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான்.

முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம். எனவே தமிழே முருகன், முருகனே தமிழ் என்பார்கள். முருகன் ‘ஓம்’ எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான். பிரணவம் என்றால், ‘சிறந்த புதிய ஆற்றலைத் தருவது’ என்று பொருள்.

முருகன் தன்னை நாடி, தேடி வருபவர்களுக்கு புதிய ஆற்றலை வற்றாமல் கொடுக்கிறான்.

தந்தைக்கு ‘ஓம்’ என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

ஓம் என்பது அ, உ. ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது. அ-படைத்தல் உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

அ, உ, ம என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துகளுக்கும் எல்லா ஓசைகளுக்கும் மூலமாக உள்ளது.

முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ, உ, ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவாக உள்ளான்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவார்கள். முருகனுக்குப்படை வீடு ஆறு.

அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணி ஆகும்.

முருகப்பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

இவர் திருமணம் இரண்டும் தமிழ் நாட்டிலேயே நடைபெற்றது. வள்ளி என்ற தமிழ்ப் பெண்ணைக் காதலித்து மணந்தார்.

அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள்.

முருகன் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த வழிபாடாக முருகன் வழிபாடு இருந்தது.

முருகன் குறித்த பழமொழிகள்:


வேலை வணங்குவதே வேலை.
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
வயலூர் இருக்க அயலூர் தேவையா?
முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
வேலனுக்கு ஆனை சாட்சி.
வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்

கந்தசட்டி கவசம் ”விந்து விந்து மயிலோன் விந்து, முந்து முந்து முருகவேள் முந்து”

முருகன் கோவில்கள், முருக வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் காணப்படுகின்றது. வடபழனி முருகன் கோவில், தேனாம்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில், மயிலை சிங்காரவேலன், பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவில், குமரக்குன்று, கந்தகோட்டம், குன்றத்தூர் என தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோவில்கள் பல அமைந்துள்ளன.

அறுபடைவீடுகள்

பழநி – மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.

சுவாமிமலை – தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.

திருச்செந்தூர் – அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.

திருப்பரங்குன்றம் – சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.

திருத்தணி – சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.

பழமுதிர்சோலை – ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது. வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம் அனுமனுக்கு அருள்புரிந்தது.

விழாக்கள்

கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாக கொண்டாடப்படுகிறது.

வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் இவரது ஜென்ம நட்சத்திர தினமாக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி கந்த சஷ்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் மிக முக்கியமான விழா ஆகும்.

முருகனின் அடியவர்கள்

அகத்தியர்
நக்கீரர்
ஔவையார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
பாம்பன் சுவாமிகள்
கிருபானந்தவாரியார்

நூல்கள்
கந்தபுராணம் என்னும் பாடற்தொகுதி கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இது முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்து உரைக்கிறது. சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப்படை, முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியம் ஆகும்.

மேலும் சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, குமரவேல் பதிற்றுப்பத்தந்தாதி, சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி போன்ற நூல்களும் முருகனின் பெருமை சொல்வன.


முருகனின் பெயர்கள் :

சேயோன்: கொற்றவை மைந்தன்
அயிலவன் – வேற்படைஉடையவன்
ஆறுமுகன் – ஆறு முகங்களை உடையவன்.
முருகன் – அழகுடையவன்.
குமரன் – என்றும் இளமையானவன்
குகன் – அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
சேனாதிபதி – சேனைகளின் தலைவன்.
வேலன் – வேலினை ஏந்தியவன்.
சுவாமிநாதன் – தந்தைக்கு உபதேசம் செய்தவன்.
சண்முகன் – ஆறு முகங்களை உடையவன்.
தண்டாயுத பாணி – தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.
வடிவேலன் – அழகுடைய வேலை ஏந்தியவன்.
சுப்பிரமணியன் – மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.
மயில்வாகனன் விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
சிவகுமரன் – சிவனுடைய மகன்.
வேலாயுதன், சிங்கார வேலன் – சிங்கார வேல் என்ற ஆயுதத்தினை உடையவன்
வேந்தன் – மலை அரசன் , மலை வேந்தன்
அக்கினியில் தோன்றியதால் அக்னி புத்திரன்
கங்கை தன் கரங்களால் முருகனின் தீப்பிழம்பு கருவை ஏந்தியதால் காங்கேயன்.
சரவண பொய்கையில் மிதந்ததால் சரவணபவன்.
கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன்.
அறுவரும் இணைத்து ஒருவராக மாறியதால் கந்தன்
கந்தசாமி
ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன் / சண்முகன்
செந்தில்நாதன்
ஆறுபடை வீடுடையோன்
வள்ளற்பெருமான்
சோமாஸ்கந்தன்
முத்தையன்
சேந்தன்
விசாகன்
சுரேஷன்
செவ்வேள்
கடம்பன்

இப்படி தமிழ்க்கடவுள் முருகன் பெயர்கள் அனைத்திற்கும் பொருள் உள்ளது.


Scroll to Top