You cannot copy content of this page

பஞ்ச மகாயக்ஞங்கள்

இல்லறத்தார்கள் பஞ்ச மகாயக்ஞங்கள் எனும் கர்மங்கள் செய்வது அவசியம் என வேத சாத்திரங்கள் கூறுகின்றன.

1,தேவ யக்ஞம் 2, ரிஷி / முனி யக்ஞம் 3, பித்ரு யக்ஞம்.4, பூத யக்ஞம் 5, மனித யக்ஞம் என்பன பஞ்சமஹா யக்ஞம் எனப்படும்.

தேவ / பிரம்ம யக்ஞம்:

தெய்வ சிரத்தையுடன், பக்தி நெறியில் வாழ்வதும், எல்லா உயினினத்திடமும் அன்பு செலுத்தி அனைத்து உயிரனங்களையும் சிவ சொரூபமாக கண்டுணர்வதும் தேவ / பிரம்ம யக்ஞம் ஆகும்.

தெய்வ வழிபாடு, ஆலய தரிசனம், கோவில் கைங்கர்யம், வேள்வி செய்வது, மற்றும் வேதம் ஒதுவது, ஓதுவிப்பது போன்றவையும் பிரம்ம யக்ஞம் ஆகும்.

2 ரிஷி / முனி யக்ஞம்:

திருமந்திரம், திருமுறைகள், உப நிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, இதிகாசங்கள், திருக்குறள் போன்ற தெய்வீக நூல்களைப் படித்தல், கேட்டல், மற்றும் படித்தவைகளை மீண்டும் மீண்டும் மனதால் சிந்தித்தல், அதன் வழி நடத்தல் ரிஷி யக்ஞம் / முனி யக்ஞம் ஆகும்.

3 பித்ரு யக்ஞம்:

பித்ருக்களான தாய் தந்தையர்களுக்கும் மூதாதையார்களுக்கும் நமது கடமைகளைச் செய்வது பித்ரு யக்ஞம்.

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ (அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்). தாய் தந்தையர் உயிருடன் இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கிய மெல்லாம் செய்து தரவேண்டும்.

தாய் தந்தையார் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும். பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும்.

அவர்கள் இந்த உலகத்தை விட்டுப்போன பிறகு நீத்தார் வழிபாட்டின் மூலம் நமது தாய், தந்தையர் மற்றும் மூதாதையர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுத்து இறந்த முன்னோர்களை மகிழ்விப்பது மிகவும் அவசியம்.

4 மனுஸ்ய யக்ஞம்:

நம்மை நாடி பசித்து வந்தோர்க்கு உணவளித்து உதவுவது. வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அமுது படைத்து விருந்தோம்புவது. தான தர்மம் செய்வது. மேலும் இந்து தர்மப்படி அவரவரும் தங்களுக்கான தொழிலை நேர்மையான வழியில் செய்து ஈசுவரார்ப்பணம் என்ற நிலையில் பணம் சம்பாதிப்பது. பலருக்கும் பகிர்ந்தளிப்பது. சக மனிதரிடம் அன்பு பாராட்டுவது.

5 பூத யக்ஞம்:

மனிதர் நீங்கலாக தாவரங்களுக்கும், ஈ. எறும்பு முதலான பிராணிகளுக்கும் தன்னிடமுள்ள உணவு பொருள்களை சிறிதளவாவது சுயநலமின்றி தியாக மனப்பான்மையுடன் கொடுத்து உதவுவது. பசு, காகம், நாய் முதலியவற்றிற்கு உணவு படைப்பது. சகல உயிரினங்களிடத்தும் அன்பு பாராட்டுவது.

இல்லற தர்மத்தில் இருந்தாலும், பகவானிடம் பக்தி செலுத்த வேண்டும். படைக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு காலாத்தில் அழியும் தன்மை உடையதோ அவ்வாறே கண்ணுக்குப் புலப்படாத சொர்க்கம் முதலிய லோகங்களும் அழியும் தன்மை உடையது என்று இல்லறத்தான் அறிந்து அதன்படி வாழ வேண்டும்.

உடல் மற்றும் வீடு போன்ற பொருட்களில் “ நான் – எனது ” (அகங்காரம் – மமகாரம்) என்ற கர்வம் இன்றி வாழ வேண்டும். வீட்டில் உள்ள பெண்கள் குறிப்பாக தாய், மனைவி, மகள் மனம் வருந்தாமலும், கண்ணீர் சிந்தாமலும் அவர்களைக் காக்க வேண்டும். பெண்களைத் துன்பறுத்தாது அவர்களைத் தெய்வமாக வணங்க வேண்டும். சைவ மதத்தில் சிவன் அர்த்தநாரி வடிவில் வணங்கப் படுகிறார் என்பதை அனுதினமும் நினைவில் கொள்ள வேண்டும்

Scroll to Top