அர்சனையும் மலர்களும்:
விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்.)
பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.
சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.
விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம்.
பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த, பழைய, தரையில் விழுந்த மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.
அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும். தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.
ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.
சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.
முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா, இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.
பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.
குடுமியுள்ள தேங்காயை உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
பெரு விரலும் மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.
கோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூபதீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.
அர்ச்சனை!
இறையை மரிக்கொழுந்தால் அர்ச்சித்தல் ஆனந்த வாழ்விற்கு அடிகோலும்.
மல்லிகையால் அர்ச்சித்தால் பாவங்களிலிருந்து விடுபடலாம்.
சண்பகம், ஜாதிப்பூ, மலைஅத்தி, குருக்கத்தி, அலரி, செவ்வந்தி ஆகிய மலர்களின் அர்ச்சனை முக்தி கிட்டும்.
புங்க மலர் அர்ச்சனை புனிதம் பெறுவர்.
தாமரை, கேட்டகி, குந்தம், அசோகம் ஆகியவை அமோக பலன்களைத் தரும்.
கணபதியை அருகம் புல்லால் அர்சித்தல் பலன். துளசியால் அர்ச்சிக்கக்கூடாது.
திருமாலை துளசி கொண்டு அர்ச்சித்தால் அவர் அருகில் இருக்கும் பாக்கியம்.
காஞ்சனம், ஊமத்தம், மலைக்கர்ணிகை ஆகிய மலர்களால் அர்ச்சிக்கக்கூடாது.
அருக்கம், மந்தாரம், தும்பை, வில்வ இலைகள், கொன்றைப்பூ இவைகள் சிவனுக்கும் மிகவும் பிடித்தது.
கேதகி, கர்கடி, நிம்பம் ஆகிய மலர்களால் சிவனை அர்சிக்கக்கூடாது.
தங்கத்தால் அர்ச்சிப்பதைவிட மலர்கள் அர்ச்சனையே நூறு மடங்கு பலன் தர வல்லது.
அபூர்வ வில்வம்!
வில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்தாக சொல்லப்படுகிறது.
தேவலோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்களான ஐந்து மரங்களுள் (பாதிரி, மா, வன்னி, மந்தாரை, வில்வம், என்றும் வில்வம், லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது.
சிவ பூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகன்று தோஷங்கள் மறைந்து பகவான் ஈசனது அருட்பார்வை கிடைக்கும்.
வில்வ மரத்தை வழிபடுவதால் லட்சுமி தேவியின் பரிபூரணமான அருள் கிட்டும். வில்வ இலைகள் சிவன் எனவும், முட்கள் சக்தி எனவும் கிளைகளே வேதங்கள் என்றும் வேர்கள் யாவும் முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகிறது.
பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி துதி கூறி கற்கண்டு, தேங்காய்,பழம், தாம்பூலம் வைத்து வழிபடலாம். வில்வ விருட்சம் முன் அமர்ந்து விநாயகரை வணங்கி பிறகு
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
க்லீம் ஐம் வில்வ ரூபிண்யை
சௌபாக்ய லட்சுமியை
தனதாண்ய கர்யை நமோ நம!
–என்று துதிப்பதால் (16, 32, 54, 108 எண்ணிக்கையில்) வளமே பெருகும்.