You cannot copy content of this page

பசுவைப் பற்றி நம் சாஸ்திரங்கள்

பசுவைப் பற்றி நம் சாஸ்திரங்கள் எப்படியெல்லாம் புகழ்கின்றன! பசுவின் உடலிலே சகல தேவர்களும் சாந்நித்தியம் பெற்றிருக்கிறார்கள் அல்லவா?

பசுவின் வலது கொம்பில் கங்கை இருக்கிறாள். இடது கொம்பில் யமுனை இருக்கிறாள். மத்திய பாகத்தில் சரஸ்வதி இருக்கிறாள். முன் காலில் பிரம்மன் வீற்றிருக்கிறான். பிந்திய பாகத்தில் ருத்திரன் தன் பரிவாரங்களோடு இருக்கிறான். பின் பக்கத்தில் விஷ்ணு இருக்கிறார்.

பசுவின் பாகங்களில் அனேக புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. வயிற்றின் வலது பக்கத்தில் மகரிஷிகளும், இடது பக்கத்தில் சகலமான தேவர்களும் இருக்கிறார்கள். வயிற்றின் கீழ்ப்பாகத்தில் புண்ணிய நதிகளும், குளம்பில் வேதங்களும் இடம் கொண்டிருக்கின்றன. பசுவின் பால் மடியில் சமுத்திரங்கள் இருக்கின்றன. இன்னும் இதுபோல் எத்தனையோ சொல்லப் பட்டிருக்கின்றன.

பசுவை வலம் வந்து வணங்கினால் பூமியை வலம் வந்த பலன் கிடைக்கும். கோதானத்துக்குச் சிறந்த பலன்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

கோதானம் செய்பவன் பூதானம் செய்த பலனை அடைவானாம். பிராயச்சித்தமே கிடையாது என்று சொல்லப்படும் பாவங்கள் கூட கோதானத்தில் நீங்கி விடக்கூடும். சாணமும் கோமூத்திரமும் உட்கொள்வதால் சகல பாவங்களும் நீங்கப் பெறுவான்.

பசுவைத் தரிசிப்பதாலேயே சில பாபங்கள் நீங்கிவிடும். அதைத் தியானித்துப் பூஜிப்பதோ இன்னும் மேலான பலன்களைக் கொடுக்கக் கூடியதாம்.

கொம்புக்குப் பொன், குளம்புக்கு வெள்ளி, புட்டத்திற்குத் தாமிரம், நேத்திரத்துக்குப் பவளம், கழுத்துக்கு ஆபரணம், உடலுக்கு வஸ்திரம் ஆகியவற்றால் அலங்கரித்து, பால் கறக்க வெண்கலப் பாத்திரத்தோடும், கொழு கொழுவென்று இருக்கக்கூடிய கன்றோடு, நன்றாக பால் கறக்கும் இளம் பருவமும் அழகும் கொண்ட பசுவை வைத்துப் பராமரிப்பவனுக்கு எல்லா விதமான நன்மைகளும் உண்டாகும்.

கோதானம், பூதானம், வித்யா தானம் இம்மூன்றும் ஒருவனின் நூற்றொரு தலைமுறைகளைச் சொர்க்கவாசத்துக்கு அழைத்துச் செல்லக் கூடியவை யென்றால் இன்னும் விவரிப்பதற்கு என்ன இருக்கிறது?

Scroll to Top