You cannot copy content of this page

சும்மா இரு, சொல்லற !


சிவமயம்

இலை, புஷ்பம், பழம், தண்ணீர் இவை ஏதேனும் யார் பக்தியுடன் சமர்ப்பிக்கிறாரோ அதில் நான் திருப்தியடைகிறேன். நேர்மையற்ற பக்தியை நான் ஏற்பதில்லை

இது பகவத்கீதையில் கிருஷ்ணன். இவ்வளவு தான் இறைவன் வேண்டுவது.

யாவர்க்கு மாம் இறை வற் கொரு பச்சிலை என்பது திருமூலர் வாக்கு.

அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே – 270 திருமந்திரம்

கந்தர் அலங்காரம் அருணகிரி நாதரின் குரு வணக்கப் பாடல்

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.

சொற்பிரிவு:

நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்தநேரத்திலும்
கோலக் குறத்தியுடன் வருவான் குருநாதன் சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே
காலத்தை வென்று இருப்பார்; மரிப்பார் வெறும் கர்மிகளே.

பதவுரை:

நீலநிற மயில்வாகனத்தின் மீது ஏறுகின்ற திருமுருகப்பெருமான் எந்த
நேரத்திலும் அழகுமிக்க வள்ளியம்மையாருடன் அருள்புரிவதற்கு வருவார்.
[மேலும்] அடியேனின் குருமூர்த்தியாகிய எம்பெருமான் உபதேசித்த
மெய்ப்பொருளின் தன்மையை மெல்லத் தேர்ந்து [தெளிந்து]
புரிந்துகொள்பவர்களாகிய சிவயோகிகள் மாத்திரமே காலதத்துவத்தை
வென்று அதனைக் கடந்து காலாதீதராக இருப்பார்கள். வெறும்
கர்மயோகிகளோ காலத்துக்கு உட்பட்டு மாய்ந்துபோவர்.

“குருநாதர் சொன்ன சீலத்தை மெல்லத் தெளிந்து அறி வார்சிவ யோகிகளே”.

முருகன் தனிவேல் முனிநம் குருவென்று
அருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென நின்றதுவே.

//முருகன் தனி வேல்முனி நம் குரு என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ//

இங்கே அருணகிரியார் சொல்வது ஞானத்தின் வடிவான வேலை ஏந்தி, அண்ட சராசரங்கமெங்கும் வ்யாபித்து உலகில் உள்ளவை இல்லாதவை இனிவருபவை என முக்காலமும் காரியமும் உணர்ந்தவனாய், அனைத்து ஞானத்திற்கும் சுடராய் யோக நிலையில் நின்று அருள் தரும் ஒரே பெருமான் கந்தன். அப்படி தனியொருவனாக, அனைத்தும் அறிந்தவனாக நிற்பவன் கந்தவேள் மட்டுமே என்பதைக் குறிக்கவே தனி என்னும் பதத்தை பயன்படுத்தி யிருக்கிறார். அப்பெருமானை குருவாய் கொண்டவர்கள் மட்டுமே மெய்ப்பொருளை உணரமுடியும். அதுவும் அவனை குருவாய்க் கொள்வதே அவன் அருள் இல்லாமல் கிடைக்காது.

//உருவன்று அருவன்று உளதன்று இலதன்று இருளன்று ஒளியன்று என நின்றதுவே//

உருவம் அன்று. அருவம் அன்று. உளது அன்று. இலது அன்று. இருள் அன்று. ஒளியும் அன்று. இப்படி எதிலும் இருப்பவன். அதே நேரம் எங்குமே இல்லாதவன். அவனைத்தேடி எங்கே அலைந்தாலும் கிடைக்கமாட்டான். அப்படி யென்றால் தேடி என்ன பயன் என்று எண்ணக்கூடாது. இறைவனை நம் அறிவிற்கு எட்டிய பொருட்களில் ஒன்றாக தேடினால் கண்டிப்பாக கிடைக்க மாட்டான். ஆணவம் ஒழியும் வரை இறைவனைக் காண முடியாது.

அங்கே இங்கே என்று அலையாதே மனமே!
ஆழ்ந்து பார் உன்னுள்ளே ப்ருந்தாவனமே!”

என்று ஒரு பாடல் உண்டு. கண்ணன் கோகுலத்தில் இருக்கிறான், துவாரகையில் இருக்கிறான், வைகுண்டத்தில் இருக்கிறான் என்று அலைந்து அயராதே மனமே. உன்னுள்ளே உன் மனம் தான் ப்ருந்தாவனம். அங்கேயேதான் கண்ணனும் இருக்கிறான்.

அங்கே இல்லை, அதுவும் இல்லை, இதுவும் இல்லை, இங்கேயும் இல்லை. ஆணவத்தால் விளையும் தேவையற்ற தேடலை விடு. உன்னுள்ளே நிற்கிறான் இறைவன். அவனைத் தேடு.

மானத தவம்:

மனதில் செய்யப்பட்ட பெரும் தவம் மானத தவமாகும். தவம் செய்வதில் விருப்பம் கொண்டு சிரத்தையாகச் செய்தல், உண்மையை பேசுதல், மௌனமாக மஹேஸ்வரனை தியானித்தல், ஐம்பொறிகளை ஆளுதல் ஆகும்.

ஞானயோகம்:

தன்னையும் உலகத்தையும் பிரித்துப் பாராமல் ஒன்றான ஐக்கியத்தில் உள்ளும் புறமும் தன்னைக் காண்பது ஞானயோகம்.

மகாயோகம்:

ஆதியாய் உறையும் பொருளை ஜோதியாய், நிர்மலமாய், ஆனந்தமயமாகி அப்பழுக்கற்ற தூயநெறியில் மனதால் உணர்வது மகாயோகம்.

மானஸ மலர்கள் அர்ச்சனை

பலவித வண்ண மலர்களால் அர்ச்சிப்பதைவிட எட்டுவித மானஸ மலர்களால் அர்ச்சிப்பது மகோன்னத பலன்களைத் தர வல்லது.

முதல்மலர்: ஜீவஹிம்சை செய்யாமல் அஹிம்சையை கடைப்பிடிப்பது
இரண்டாம்மலர்:சுய கட்டுப்பாடு
மூன்றாம்மலர்: எல்லா உயிர் களிடமும் அன்பு பூண்டிருப்பது.
நான்காம்மலர்: பேராசையின்றி உள்ளதைக் கொண்டு திருப்தி அடைதல்
ஐந்தாம்மலர்: இறைவனிடம் மாறாத அன்பு.
ஆறாம்மலர்: சதா இறைவனை நினைத்து தியானம்
ஏழாம்மலர்: வாய்மை
எட்டாம்மலர்: பற்றற்று இருப்பது

இந்த எட்டு மலர்களால் தினமும் இறையை பக்தியுடன் ஆராதிப்பவர்கள் எல்லாவிதமான நற்பலன்களையும் அடைந்து முடிவில் இறையின் அடியை அடைவர்.

அவ்வையாரிடம் இனியது எது என்று முருகப் பெருமான கேள்வி கேட்க அவர் கூறிய பதில் இது:

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே!

அருணகிரிநாதரும் திருப்புகழில் இதே கருத்தை ‘தனிமையில் இனிமை’ என்று வருணிக்கிறார்.

இனிமை தருமொரு தனிமையை மறைகளி
னிறுதி யறுதியி டவரிய பெறுதியை
இருமை யொருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே

என்று பாடுகிறார்.

இதன் பொருள்: இன்பத்தை தருகின்ற ஒப்பற்ற தனி நிலையை, வேதங்களின் முடிவான பொருள்களும் முடிவுசெய்ய முடியாத இருமையில் ஒருமை என்ற கருத்தை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும் (இருமையில் ஒருமை என்பது சக்தி, சிவம் என்ற பேதமற்ற தன்மை அல்லது அஹம் பிரம்மாஸ்மி= அவன் நானே என்ற அத்வைதப் பெரு நிலை)

இன்னொரு பாட்டிலும் ஏகாந்த மவுன நிலை பற்றிப் பாடுகிறார்:

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொ ணாதது நெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது விந்துநாத
ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது கண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாது மயங்கலாமோ
ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
லாகிப்பொற் பாத மேபணி கந்தவேளே

ஆலித்துச் சேல்கள் பாய் வய லூரத்திற் காள மோடட
ராரத்தைப் பூண்ம யூரது ரங்கவீரா
நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
நாடிற்றுக் காணொ ணாதென நின்றநாதா
நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
நாதர்க்குச் சாமி யேசுரர் தம்பிரானே.

சொல் விளக்கம்:

வாசித்துக் காணொ ணாதது: நூல்களைக் கற்று கலையறிவால்
காணமுடியாததும்,

பூசித்துக் கூடொ ணாதது: பூஜை செய்து கிரியாமார்க்கத்தால்
அடைதற்கு அரியதும்,

வாய்விட்டுப் பேசொ ணாதது: வாக்கினால் இத்தன்மைத்து
எனப் பேசமுடியாததும்,

நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது: உள்ளத்தில்
மாசு உடையோருக்குத் தோன்றி விளங்காததுவும்,

நேசர்க்குப் பேரொ ணாதது: அன்பு செய்தார் நெஞ்சினின்றும்
நீங்காது நிற்பதுவும்,

மாயைக்குச் சூழொ ணாதது: மாயையினால் சூழமுடியாததும்,

விந்துநாத ஓசைக்குத் தூர மானது: விந்து நாத ஓசைக்கு
தூரத்தில் இருப்பதுவும்,

மாகத்துக் கீற தானது: ஆகாயத்திற்கு முடிவிலே இருப்பதுவும்,

லோகத்துக் காதி யானது: இவ்வுலகத்திற்கு ஆதியானதுவும்
ஆகிய மெய்ப்பொருளை,

கண்டுநாயேன்: உள்ளக் கண்களால் நாயேன் கண்டு,

யோகத்தைச் சேரு மாறு: சிவயோகத்தை அடையுமாறு

மெய்ஞ் ஞானத்தைப் போதி யாய்: உண்மை அறிவை நீ
உபதேசித்து அருள்வாய்.

மயங்கலாமோ: மாயை வசப்படலாமோ?

ஆலித்துச் சேல்கள் பாய்: ஆரவாரித்து சேல்மீன்கள் பாய்ந்து
விளையாடுகின்ற

வய லூரத்தில்: வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி

பொற் பாத மேபணி கந்தவேளே!

நாடிற்றுக் காணொ ணாதென: எத்தனை விரும்பியும்
காணமுடியாதபடி

நின்றநாதா: (அப்பாலுக்கு அப்பாலாய்) நின்ற தலைவனே,

நாகத்துச் சாகை போய்: மலையின் கிளைச் சிகரம் வளர்ந்து சென்று

உயர் மேகத்தைச் சேர் சிராமலை: உயர்ந்த மேகமண்டலத்தைச்
சேரும் திரிசிராமலையில்

நாதர்க்குச் சாமி யே: எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு
குருஸ்வாமியே,

சுரர் தம்பிரானே: தேவர்களுக்குத் தலைவனே.

கந்தர் அநுபூதி: பேசா அநுபூதி

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.

பதவுரை:

தூசு ஆம் மணியும் … தூய்மையான இரத்தின மணிகளும்,
துகிலும் புனைவாள் … ஆடைகளும் அணிகின்ற வள்ளி பிராட்டியாரின்,
நேசா … காதலனே,
முருகா … முருகப் பெருமானே,
நினது அன்பு அருளால் … நீ காட்டிய அன்புடன் கூடிய அருளினால்,
ஆசா நிகளம் … ஆசையாகிய விலங்கு,
துகள் ஆயின பின் … தூள் தூளாக பொடியான பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே … மெளன நிலையுடன் கூடிய அநுபூதி
நிலை எனக்குக் கிடைத்தது.

பொழிப்புரை:

தூய மாணிக்க மாலையையும் அழகிய ஆடைகளையும் அணிந்திருக்கும்
வள்ளியின் நாயகனே, இளமையும் அழகும் உடையவனே, உனது பெருங்
கருணையின் காரணமாக ஏற்பட்ட திருவருளால் ஆசை என்கிற தொடர்
சங்கிலி போன்ற பெருந் தடைகள் தூள் தூளாக உடைந்து போயின. நான் மோன நிலையை அடைந்து விட்டேன். இதுவே எனது அநுபூதியாகும்.

நிகளம் என்றால் சங்கிலி. ஆசைகள் சங்கிலித் தொடர்போல்
ஒன்றோடு ஒன்றுபோல் பிணைத்துக்கொண்டு வருவதால் அதை
நிகளம் என்கிறார்.

நாம் அருள் பெறுவதற்கு தடையாக இருப்பது இந்தச்
சங்கிலியே.

இப்படிப்பட்ட விரோத சொரூபங்கள், முருகனின் அன்பு அருளால் தூள்
தூளாகிப் போய் விடுகின்றன.

‘மோனம்’ என்பது ஞானத்தின் வரம்பு. ‘நிர்விகல்ப’ சமாதியில்
அனுபவிக்கும் இந்த மோனத்தையே ‘திரிபுடி’ என்கிறார் அருணகிரி நாதர்.

திரிபுடி அற்ற இடத்தில் பேச்சுக்கே இடம் கிடையாது. இதுவே ‘பேசா அநுபூதி’.

சொற்கள் எங்கு செல்லாவோ அங்குதான் மெய்ஞ் ஞானம் பிறக்கிறது என்பது உபநிஷத முடிபு.

கடவுளைக் கண்டவர் அவனைப் பற்றிப் பேசமுடியாது. அவனைப் பற்றிப் பேசுபவர்கள் அவனைக் காணவில்லை என்றே அர்த்தம்.

இதைத்தான் தமிழில் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர்.

கீதையில்

கீதையில் கண்ணபிரானும் ஏகாந்தம் பற்றிப் பேசுகிறார் (6-10)

யோகி யுஞ்சீத சததம் ஆத்மானம் ரஹசி ஸ்தித:
ஏகாகி யதசித்தாத்மா நிராசீ: அபரிக்ரஹ:

பொருள்: எப்போதும் ஏகாந்தத்தில் (ரஹசி) இருக்க வேண்டும் தன்னந்தனியனாய் உடலையும் உள்ளத்தையும் கட்டுப் படுத்த வேண்டும்.

ஆசை இருக்கக் கூடாது. உடமைகள் மீது பற்று இருக்கக் கூடாது. யோகியானவுடன் இப்படி உறுதிபெற வேண்டும்.

யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய।
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே॥

என்கிறான் கண்ணன். அதாவது , அர்ச்சுனா, யோகத்தில் நின்று உன் கடமையை செய். வெற்றியோ தோல்வியோ அதை உன் கவனத்தில் கொள்வது வேண்டாம். மன ஒருமித்தலோடு செய்தால் அதற்குண்டான பலன் நிச்சயம் என்று அறிவுறுத்துகிறான்.

எளிய உதாரணத்தோடு சொல்வதென்றால் ஜென் குருவிடம் ஒருத்தர் கேட்டாராம். ஜென் என்றால் என்ன என்று. அதற்கு அவர் சொன்னார் ” உண்ணும் போது உண்ணுவது, உறங்கும் போது உறங்குவது. இது தான் ஜென்” என்றார்.

யோசித்து பாருங்கள். நம்மில் எத்தனை பேர் நாம் உண்ணும் போது உணவில் கவனமும், உறங்கும் போது வேறெதுவும் நினைவுகளின்றி உறங்கவும் செய்கிறோம்.

உலக வாழ்வும் தியானமும் எப்படி சமனமாவது என்னும் கேள்விக்கு ஒரு ஜென் கதை அற்புதமாக விடை சொல்கிறது:

“ஜோஷு என்னும் ஜென் குருவிடம் புதிய சீடன் ஒருவன் கேட்டான்,

‘நான் இப்போதுதான் மடத்தில் சேர்ந்திருக்கிறேன். எனக்கு தியானம் கற்றுத் தாருங்கள்’

‘நீ உன் அரிசிக் கஞ்சியைக் குடித்துவிட்டாயா?’ என்று கேட்டார் ஜோஷு.

‘ஆமாம், குடித்துவிட்டேன்’ என்றான் அவன்.

‘கிண்ணத்தைக் கழுவிக் கவிழ்த்து வை’ என்று சொன்னார் ஜோஷு. இதைக் கேட்ட கணத்தில் அந்தச் சீடன் ஞானம் அடைந்தான்.

ஒரு வேலையைச் செய்து முடித்த பின்னும் மனம் அதை முடிக்காமல் தொடர்ந்து சிந்தனையில் அதைத் தொடரும்போது மனதின் நலம் பாதிக்கப்படுகிறது.

“கஞ்சியைக் குடித்தபின் கிண்ணத்தைக் கழுவிக் கவிழ்த்து வை” என்று ஜோஷு சொல்வது ஒரு வேலையை முடித்துவிட்டால் மனத்தை அதன் சிந்தனைகளை விட்டும் சுத்தமாக்கி வை என்பதைத்தான்.

அருணகிரியாரின் அற்புதமான பாடல்!

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!

சிவந்த மானின் மகளைக் கள்வனைப்போல திருடியவன், அகிலாண்ட கோடிக்கும் பெருமான் முருகன், அவன் பிறப்பில்லாதவன், இறப்பில்லாதவன். அவன் சும்மா இரு சொல் அற என்று சொன்ன நொடியே, நான் இதுவரை பெரியவை, முக்கியமானவை என்று எண்ணிவந்த உலக வஸ்துக்கள் அனைத்தும் மறந்து அறியாமல் அவனுளே கலந்த மோன நிலை மட்டுமே கண்டேனே! என்ன ஆச்சரியம்!

சும்மா இரு சொல்லற என்ற முருகன் ஆணைப்படி இருந்தவுடன் இந்த மா பொருட்கள் ஒன்றுமே தெரியாமல் சிந்தையிலிருந்து மறைந்து போய், முருகனுடன் கலந்துவிட்ட தவயோகநிலை ஒன்று மட்டுமே நிலைக்கிறதே! இது என்ன ஆச்சரியம் என்று வினவுகிறார் அருணகிரியார்.

கள்வன் என்ற பட்டத்தையும் முருகன் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறான். அருணகிரி நாதர் செம்மான் மகளை மணந்த மணாளன் என்று சொல்லாமல் கள்வன் என்று சொல்வதன் மூலம். முருகனின் கருணையை அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறார்.

இதற்கு நேரடியாக கந்த புராணத்தில் வேடர்க்கரசன் அவ்வாறு பெருமானை விளித்தமையால் அதே சொற்றொடரை பயன்படுத்தியுள்ளார் என்பதைவிட, தன்னையே நினைத்து உருகும் பக்தர்களுக்கு முருகன் எப்படி அருள்வான் என்பதைத் தான் குறிப்பால் சொல்கிறார்.

அவனுக்கும் அவனடியார்க்கும் நடுவே யார் குறுக்கே நின்றாலும், நடுநிசியில் ஒரு கள்வனைப் போல தெரியாமல் வந்து கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, தன் அடியாரைக் கவர்ந்து சென்று தன்னுள் கலக்கச் செய்துவிடுவான் குமரன்.

வள்ளியின் விருப்பத்தை நிறைவேற்ற குமரன் கிழவனாய் மாறு வேடத்தில் மணம் புணர வந்த கள்வன்.

பக்தர்களின் இடர்களை அவர்கள் அறியாமலே அவர்களிடம் இருந்து நீக்கும் கள்வன்.

பக்தர்களின் வேண்டும் வரத்தை அவர்கள் அறியாமலே அவர்களிடம் கொடுக்கும் கள்வன்.

“அம் மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!” ‘அந்த மா பொருள் ஒன்றும் விளங்கவில்லயே’ என்கிறார் அருணகிரியார் !

“சும்மா இருப்பது” என்று சொன்னால் வேலைகள் ஏதுமின்றிச் சோம்பேறியாக காலம் கடத்துவது என்பதல்ல.

கடவுளைக் கண்டவர்கள் சும்மா இருப்பார்கள், மோனிகள் (மவுன நிலை) ஆகி சொல்லற்றுப் போய்விடுவார்கள். இதுதான் பேசா அநுபூதி

சும்மா இருப்பது என்பது இறைவனின் பக்கம் சார்ந்துகொள்வதற்காக நமக்கு அளிக்கப்படும் ஒரு வரம்.
அதற்கு மேல் ஒரு சொல்லே கிடையாது. அது உயர்ந்த சொல். அதுதான் உபதேசம்.

மாங்கொட்டைச் சாமி என்ற சித்தர், ”முட்டாள்
அழுக்குமூட்டையை நீ உள்ளே சுமக்கிறாய் நான் வெளியே சுமக்கிறேன்
போடா” என்று கூறிய சொற்களே மந்திரமாக அமைந்து,

‘சொல் அற’ என்ற பதமும் மிக வியப்புதான். வெறும் பேச்சு இன்றி இருத்தல் இல்லை இது. வாய்ப்பேச்சை மட்டும் இது குறிக்கவில்லை. மனத்தில் எழும் எண்ணங்களையும் சேர்த்தே குறிக்கிறது.

மனதிலே எண்ணங்கள் தோன்றினால், சொல் எழும். சொல் அற்றுப்போவது என்றால், மனதிலே எண்ணங்களும் இல்லாமல் போவதுதான்!

இப்படி, சொல் இன்றி, சொல் எழும் வித்தான எண்ணங்கள் இன்றி, சும்மா இருத்தல் என்பது மிகவும் முயற்சி எடுத்து செய்யப்பட வேண்டியது!

இதனால் தானோ என்னவோ அருணகிரினாதர், ‘அம் மாபொருள் ஒன்றும் அறிந்திலனே’ என்று சொல்லி விட்டார்!

வாழ்க்கையின் நெடுகே நாம் அறிந்து கொள்வது எல்லாமே அறிதல் என்னும் வரையறைக்குள் வந்தாலும் , அறிவறிதலில் தலையாயதும், நிலையாயதும், உண்மையானதும் தன்னை அறிதலே ஆகும்.

சித்தர்களும் இதையே “தன்னை அறிதல் என்பதைத் தவிர்த்த அறிதல்கள் எதுவும் பெரியதாகாது” என்று முதன்மைப் படுத்திச் சொல்கிறார்கள், இதையே திரு மூலர்,

“என்னை அறிந்திலேன் இத்தனைக் காலமும் என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது என்னை இட்டு என்னை உசாவுகின்றேனே.”

என்றும்,

“தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுக்கிறான்”

“தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த சிவனருளாலே”

என்றும், சொல்கிறார்.

இதையே சிவவாக்கியார்,

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே!

என்கிறார். ஆக , சித்தர்கள் எல்லோரும் மனிதனாய் பிறந்தவன் அறியவேண்டியதில் முதன்மையானது, தன்னை அறிவதே என்கிறார்கள்.

“என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்”, என்றும் “தன்னை அறிய தனக்கொரு கேடில்லை” என்றும் திருமூலர் குறிப்பிடுவதும், “என்னிலே இருந்திருந்து” என்று சிவவாக்கியரும் குறிப்பிடுவதும் இங்கு “சும்மா இரு, சொல்லற” என்ற மாமந்திரத்தின் தத்துவத்தையே.

செயல் அற்றிருக்கச் சிவானந்தம் ஆகும் செயல் அற்று இருப்பார் சிவயோகம் தேடார்
செயல் அற்று இருப்பார் செகத்தோடும் கூடார் செயல் அற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே.

செயல் ஏதுமின்றி சும்மா இருப்பதே சிவானந்தம் பெறும் வழி. அப்படி இருப்போர்க்கு அதுவே சிவயோகம், வேறு யோகம் தேடவேண்டாம்.

சும்மா இருப்பவர்கள் உலகத்தோடும் உலகியலோடும் ஒன்றியிருக்க மாட்டார்கள். அப்படி இருப்போர் சிவானுபவம் பெற்றவர் ஆவார்.

சிவானுபவம்: வேறு நினைவு ஏதுமின்றி ஓம் சிவய நம என்பதையே துரியத் தானத்தில் மேலோங்கியிருப்பதாக நினைத்திருப்பதுவே சும்மா இருத்தலாம்.

சும்மா இரு

தமிழ் மொழிக்களஞ்சியத்தில் நிறைந்திருக்கிற ஆயிரக்கணக்கான சொற்களுள்
அடிக்கடி பயன்படும் ஒரு சொல்லாக ‘சும்மா’ என்பது விளங்குகிறது.

இச்சொல்லின் பொருளினை தெரிந்தோ, தெரியாமலோ எல்லோரும் பயன்படுத்தி வருகின்றனர்.

சும் என்ற அடிச்சொல்லில் உருவானதே சும்மா என்ற சொல். பழந்தமிழில் ‘சும்மை’ என்ற சொல் ஓசை என்ற பொருளை உணர்த்துவதாக உள்ளது. இந்த சும்மைக்கும் ‘சும்’ என்பதே அடிச்சொல்லாகும்.

ஆகவே சும் என்ற ஒலிக்குறிப்புச்சொற்பகுதியோடு ஆ என்ற எதிர்மறை விகுதி சேர்ந்து மகரம் இரட்டித்து சும்மா என்ற சொல் வடிவம் பெற்றிருக்கலாம்.

இச்சொல்லின் அதிசயம் என்ன எனில், இச்சொல் தமிழில் மட்டுமன்றி மலையாளம் முதலிய மொழிகளிலும் பெரிய வேறுபாடின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சேரநாட்டு மொழியான மலையாளத்தில் ‘சும்மா’, ‘சும்மக’ என்றும் கன்னடத்தில் ‘சும்மென’ என்றும் கோலாமி என்ற மொழியில் ‘சுர்மி’ என்றும் நாய்க்கி என்ற இந்திய மொழியில் ‘சுரும், சுருமக’ என்றும் பயின்று வருதல் ஆய்வாளர்களால்;
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சிவயோகிகள் தம்மை நாடுகிறவர்களில் அநேகமானவர்களுக்கு ‘சும்மா இரு’ என்றே உபதேசிப்பது வழக்கம்.

யோகர் தமது நற்சிந்தனைப்பாடல் ஒன்றில் ‘எண்ணங்கள் யாவும் இறந்திடவேண்டும் என் குருபரபுங்கவ சிங்கனே’ என்று பாடுகிறார்.

உகந்து மனங்குவிந்து ஒன்றுக்கும் அஞ்சாது
அகந்தை அவா வெகுளி அகற்றி- சகந்தனிலே
தாமரையிலை தண்ணீர் போல் சாராமல் சார்ந்து நற்
சேமமொடு வாழ்வாய் தெளிந்து.’

என்ற பாடலும் இதையே உணர்த்தி நிற்கிறது.

அருணகிரிநாதர் சுவாமிகள் உபதேச மொழியாகக் குறிப்பிடும் ‘சும்மா இரு சொல்லற’ என்ற சொல் தத்துவ அடிப்படையில் பல பொருள் கொள்ளத்தக்கதாக ஆராயப்பட வேண்டியது.

சும்மா இருத்தல் என்பது உலகியல் நோக்கில் சும்மா வேலை செய்யாமல் இருப்பது எனவும், ஓரிடத்தில் பேசாமல் இருந்து கொண்டு அலைபாயும் மனம் அதனை எங்கெங்கோ சுற்றிச் சுழலவிடுவது எனவும் புரிந்து கொள்ளலாகாது.

சப்தம் இல்லாமல் இருப்பது சொல்லற இருப்பதாகாது. பற்றற்ற செயலற்று ஏகாந்தத்தில் திளைப்பதே சொல்லற சும்மா இருப்பதாகும்.

யோக நிலையில் சும்மா இருத்தலையே குறிப்பிடும் விதமாக அருணகிரியார் ‘சும்மா இரு, சொல் அற,’ என்று பாடுகிறார்.

‘சொல் அற’ என்பது மனதில் எண்ண ஓட்டம் இல்லாமல் இருத்தல் என்ற பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சொல் இல்லை எனில் எண்ணம் இல்லை. ஆக, மனதில் எண்ணமே இல்லாமல் இருக்கும் நிலை ஏகாந்த நிலை.

முப்பத்தாறு தத்துவங்களும் ‘தற்போதமும்’ நீங்கி தனக்கெனச் செயலின்றி ஆரவாரமற்று ஒலியற்று பேச்சற்று அமைதியாய் சுகமாக ஆனந்தமாக அருளே தாரகமாய் அவ்வருளேயாய் நிற்கும் துரிதநிலையே அருணகிரிநாதர் பேசும் ‘சும்மா இருக்கும்’ உயர்நிலை ஆகும்.

சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென் றெம்மா லறிதற் கெளிதோ பராபரமே. 70.
தாயுமானசுவாமிகள்.

சுட்டிக்காட்ட முடியாத ஒரு பூரணம் சும்மா இருப்பது.

பட்டினத்தாரும் இப்படித்தான் புலம்பி இருக்கிறார்

சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி!”

தாயுமானவர் “சும்மா இருக்கும் சுகம் ஒன்று அறியேன் பராபரமே” என்று புலம்பி விட்டு பின், சும்மா இருக்க அறிந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொல்கிறார் கேளுங்கள்.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும்
கட்டலாம் ஒரு சிங்க முதுகின் மேற் கொள்ளலாம்
கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகது லாவலாம்
விண்ணவரை யேவல் கொளலாம்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
சரீரத்தி மும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கிற
திறமரிது சத்தாகி யென்
சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே.

தாயுமானவர்.

சும்மா இருத்தல்” என்பது மா பொருள்! பெரும் பொருள்! ஞான ரகஸ்யம்!
நிர்விகல்ப சமாதி நிலை என்று சொல்வார்கள்!

ஞானசம்பந்தர், விவேகானந்தர், மாணிக்கவாசகர் எல்லோரும் இளம் வயதிலேயே இறைவனை அடைந்துவிடுவதன் ரகசியமும் இதுவே.

சில ஞானிகள் தன்னுடன் ஞான நிலைக்கு மற்றவர்களையும் அழைத்துச் செல்வர். திருமூலர், ஞான சம்பந்தர், அருணகிரி நாதர், இராமலிங்க சுவாமி ஆகியோர் இப்படி தன்னுடன் இருந்தவர்களையும் முக்தி நிலைக்கு அழைத்துச் சென்றனர்.

நிர்விகல்ப சமாதி என்பது விருப்பு-வெறுப்பு, இருள்-ஒளி, இன்பம்-துன்பம் என்ற இரட்டைகளில் சிக்கிக் கொள்ளாத நடுநிலை! மனமற்ற நிலை, சிந்தனை அற்ற நிலை, இறையொளியில் மனம் லயித்து நிற்கும் நிலை, இறைவன்பால் சார்ந்திருக்கும் நிலை இதுதான்.

“சும்மா இரு” என்பது சித்த வாக்கு. இது சிந்தனை செய்வதில் உச்ச நிலைக்குச் செல்லும் சீடனை, ஆழமாகச் சிந்திக்கும் சாதகனை நோக்கிச் சொல்லப்பட்டது.

சராசரி மனிதனின் மனத்தில் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ அறுபதாயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன என்று உளவியல் கூறுகிறது. அதில் ஒரு சதவிகிதம்தான் அவனுடைய அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானதாக இருக்கிறதாம். 99% எண்ணங்கள் மனோசக்தியை விரயம் செய்வதாகவே முடிகின்றன.

இந்த விரயத்தைத் தடுத்து உள்முகமாக ஆற்றலைத் திரட்டச் செய்யும் விரதம்தான் தியானம் என்று சொல்கிறோம்.

தேவையற்ற எண்ணங்கள் மனத்தில் உற்பத்தி ஆவதைத் தடுத்து நிறுத்துவதையே பதஞ்சலி முனிவர் யோகம் என்கிறார்: “யோகம் சித்த வ்ருத்தி நிரோத்த”.

கிருஷ்ணமூர்த்தியும் ஓஷோவும்கூட தியானம் என்பதை சிந்தனை இல்லாத மனநிலை என்றே முன்வைத்தார்கள். எண்ணம் என்பது இல்லாத நிலையில் மனம் என்பதே இல்லை என்பதால் தியானம் என்பது மனமற்ற நிலை என்று ஓஷோ விளக்கினார்.

இன்னும் ஆழமான ஒரு பார்வை என்னவெனில், சிந்தனை இன்றி இருப்பது. மனமற்ற நிலை என்று சொல்லப்படுவது. இதுவே உண்மையில் மௌனம் என்பது. இந்த நிலையே தியானம் என்றும் சொல்லப்படுகிறது. வெறும் விழிப்புணர்வு மட்டும் இருக்கும் நிலை. அதாவது ஒளி / வெளிச்சம் மட்டும் இருக்கிறது. அது வெளிச்சமிட்டுக் காட்டும் ‘பொருள்’ எதுவுமில்லை. ஒளியை மட்டும் காணும் நிலை இது

நடக்கின்றபோது நமக்குக் கால்களின் இயக்கம் அவசியமாகிறது. ஆனால் சேர வேண்டிய இடத்தை அடைந்து நாற்காலியில் அமர்ந்த பின்னரும் கால்கள் அசைந்துகொண்டே இருந்தால், அதுவும் உங்கள் கட்டுப்பாட்டை மீறி!, நீங்கள் இயல்பான நிலையில் இல்லை என்று பொருள்.

மனம் அதேபோல் தன்னிச்சையாக சிந்தித்துக் கொண்டே இருந்தால் அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம்.

இந்த நிலையைத்தான் ஜார்ஜ் குருஜீஃப் சொன்னார்: Man is polypsychic (மனிதன் பலமனவியல் கொண்டவன்). இன்னொரு உதாரணமும் சொன்னார்: எஜமான் இல்லாத வீட்டில் நூறு வேலைக்காரர்கள் ஒவ்வொருவரும் தானே எஜமான் என்று சொல்லிக்கொண்டு அதிகாரம் செய்வது போல் இருக்கிறது சராசரி மனிதனின் மனம்.

சும்மா இரு என்றால் உங்களை எதிர்வினை ஆற்றத் தூண்டும் பேச்சுக்களைக் கேட்டாலும்கூட எதிர்வினை ஆற்றாமல் இருப்பது. அதாவது ஏச்சுப் பேச்சுக்களைக் கேட்டும் கேளாதது போல் இருந்துவிடுவது. அதாவது பதில் பேசாமல் மௌனமாக இருப்பது என்று பொருள் வந்துவிடுகிறது.

இதையே இன்னும் நீட்சி செய்து பார்த்தால் மனத்தில் ஒரு எண்ணம் வந்ததும் அதற்கு ஒரு தொடர்ச்சியைத் தரவேண்டும் என்னும் நமைச்சல் / தூண்டுதல் மனத்திற்கு வருகிறது. அதை வேண்டுமென்றே நிறுத்தி வைத்து மனத்தின் எண்ணம் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து பாருங்கள்.

எண்ணங்களின் உற்பத்தி கணிசமாகக் குறைந்து கொண்டே வந்து எண்ணமற்ற மௌன நிலை ஒருநாள் நிச்சயம் வாய்க்கும். அதன்பின் நாம் விரும்பிய போது எண்ணவும் விரும்பிய போது எண்ணமற்று இருக்கவும் கைக்கூடும்.

உபநிடத மகா வாக்கியங் களாயினும் சித்தர்களின் மொழியாயினும் எவ்வளவு ஆராயினும் அவரவர் அனுபவங்களின் வெளிப்பாடாக மட்டுமே அதன் உண்மைத் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலும்.

ஞானதவ சீலராக விளங்கிய முருகனருள் முழுமையாகப் பெற்ற மாமுனிவர் அருணகிரிநாதப் பெருமானின் திரு அருள் நமக்கும் முருகன் அருளைக் கூட்டி அனுக்கிரகிக்க பிரார்த்திப்போம்.

சும்மா இருப்போம் சொல்லற இருப்போம்! ஏகாந்ததில் என்றும் இருந்து முடிவிலா ஆனந்தத்தில் திளைப்போம்.

ஓம் தத் சத்!

Scroll to Top