You cannot copy content of this page

ஆரோக்ய உணவு!

ஆரோக்ய உணவு!

‘எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்’ என ஒரு பழமொழி உண்டு. இதை பல இடங்களில் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உபயோகித்தாலும் இதன் முதன்மை வயிற்றைப் பேணிக் காக்க வேண்டும் என்பதுதான்.

உடலை ஆரோக்கியமாக வைக்க நாம் செய்ய வேண்டியது

சூரிய ஒளி- காலை சூரியஒளி படுமாறு சூர்ய வணக்கம் செய்யுங்கள். காற்று சூரிய ஒளியின் அணுக்கள் நம் உடம்பில் பல தேவையான இயற்கை மாற்றங்களைச் செய்யும்.

நல்ல சுவாசம்- நல்ல சீரான மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் பிரணாயமம் செய்யுங்கள்.

நீர்சத்து: தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் நீர் பருகுங்கள்.

உடற் பயிற்சி- முடிந்த அளவு உங்களுக்குத் தெரிந்த சாதரண பயிற்சிகளைச் செய்யுங்கள். உடற் பயிற்சி என்ற பெயரில் உடலை வருத்தக்கூபாது.

“அற்றல் அளவறிந்து உண்க, அஃதுடம்பு பெற்றான் நெடுதுய்குமாறு” என்பதற்கேற்ப அளவறிந்து தேவைக்கேற்பத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள்

இயற்கை வைத்தியத்தில் தாது உப்புகள் அதிகம் உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள் போன்றவை முதல் தரமான உணவுகளாகும்.

புரதப் பொருட்கள், மாவுப் பொருட்கள், சர்க்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள்.

இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

சத்தான உணவைவிட ஜீரணிக்கும் உணவே உன்னத உணவு. நோயை உண்டாக்காமல் ஜீரணிக்கக்கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், கீரைகள், தேங்காய், முளைகட்டிய தானியங்கள், முளைகட்டிய பயறுகள் ஆகியவை உடலுக்கு ஏற்ற உணவுகள்.

சாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. இதனால், வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலத்தின் செயல்திறன் குறையும். செரிமானம் தாமதப்படும்.

அதிகமான அல்லது குறைவான கலோரிகள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
பாலினம், வயது, உடல் எடை, பரம்பரை, செரிமானமாகும் நேரம், தினசரி செய்யும் வேலை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட கலோரிகள் தேவைப்படும்.

கொழுப்பைக் கரைக்க சில வழிமுறைகள்

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்தாலே. உடல் எடை வெகுவாகக் குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு,
சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். இதனால், விரைவிலேயே உடலில் உள்ள கொழுப்புக் குறைந்து, உடல் அழகான வடிவம்பெறும்.

சுரைக்காய் வயிற்றுச்சதையைக் குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால், சுரைக்காயை வாரத்துக்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வாழைத்தண்டு சாறு பருகலாம். அரும்கம்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.

உண்பதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கி உணவுகளை ரசித்து உண்ணுங்கள்.

மூன்று வேளை நன்றாகச் சாப்பிட்டால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை சிறுவயதிலிருந்து கேட்டிருக்கிறோம்.

ஆனால், `ஒரு நாளைக்கு ஐந்து வேளையாக உணவைப் பிரித்துச் சாப்பிடுவதே சிறந்தது’ என்கிறார்கள் உணவியலாளர்கள்.

எந்த உணவை, எந்த நேரத்தில், எப்போது சாப்பிடவேண்டும்… பார்க்கலாமா?

காலை உணவு:

காலை உணவை தவிர்க்காமல், ஆற அமர பொறுமையாக, நொறுங்கச் சாப்பிடுவோம்.

காலை உணவை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அதிகபட்சம் 9:00-க்குள் சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில், காலை உணவானது முதல் நாள் இரவு முழுக்க வயிற்றை வெறும் வயிற்றில் வைத்திருந்து, நீண்ட நேர இடைவெளிக்குப் பின்னர் சாப்பிடுவது.

இதுதான் ஒரு நாளைத் தொடங்குவதற்கான புத்துணர்ச்சியை நம் உடலுக்குத் தருகிறது.

மூளை முதல் ரத்தம் வரை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு வழிவகுக்கிறது.

பெரும்பாலும் நீரில் அவித்து உண்பதே சிறந்த உணவு. இதை மனதில் கொள்வோம்.

இட்லி – சாம்பார் சிறந்த காலை உணவு’ என யுனெஸ்கோ சான்றளித்திருக்கிறது. அதேபோல், பழைய சோற்றை காலை உணவாகச் சாப்பிடலாம். இது, நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க உதவும். தொற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.

இட்லி, தோசை – சட்டினி – சாம்பார், பொங்கல், காய்கறிகள் சேர்த்த உப்புமா, ஆப்பம், புட்டு – கொண்டைக் கடலை, சத்துமாவுக் கஞ்சி மற்றும் பழங்கள் போன்றவை காலை உணவுக்கு ஏற்றவை.

இட்லி, சாம்பார்:

இட்லி, சாம்பாரில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால், இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த உணவு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள்கூட காலையில் சாப்பிடலாம்.

தோசை, தேங்காய் சட்னி:
தோசை-தேங்காய் சட்னி காம்பினேஷன் அன்றைய நாளையே நமக்கு உற்சாகமாக வைத்திருக்க உதவும். புரோட்டீன், தாதுக்கள், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, டி ஆகிய சத்துக்கள் தேங்காயில் உள்ளன. கால்சியம் சத்து குறைவாக உள்ள பெண்கள் தேங்காய் சாப்பிட்டால், அந்தக் குறை நீங்கும். எனவே, தேங்காய் சட்னி நமக்கு ஆரோக்கியமான உணவே. குழந்தைகளுக்கு இதைக் கொடுப்பதால் எலும்பு பலம் பெறும்; வளர்ச்சி பெறும்.

பொங்கல், சாம்பார், சட்னி:
பொதுவாக பொங்கல் சாப்பிட்டால் மந்தமாக இருக்கும் என்ற உணர்வு நாம் அனைவர் மத்தியிலும் இருக்கிறது. உண்மையில் பொங்கல் மிக மிக ஆரோக்கியமான உணவு. நாம் சேர்க்கின்ற வனஸ்பதி போன்றவற்றினால்தான் மந்தத்தன்மை, தூக்கம் வருவது போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன. புரோட்டீன் சத்துக்கள் பொங்கலில் அதிக அளவில் இருப்பதால் இது குழந்தைகளுக்கு ஏற்றது.

காய்கறிகள் சேர்த்த உப்புமா, தேங்காய் சட்னி:
சர்க்கரை நோயாளிகளுக்கு, காய்கறிகள் சேர்த்த உப்புமா ஏற்ற உணவு. புரோட்டீன், தாது, கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, டி ஆகிய சத்துக்கள் தேங்காயில் உள்ளன. அனைவருக்கும் ஏற்றது.

ஆப்பம், புட்டு, கொண்டக்கடலை:
கொண்டக்கடலையில் உள்ள புரோட்டீனும் புட்டில் உள்ள கார்போஹைட்ரேட்டும் அனைவருக்கும் ஏற்றவை. காலையில் சாப்பிடவேண்டிய அருமையான உணவு இது. சத்தான இந்த டிபன் நம்மைச் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.

சத்துமாவு கஞ்சி மற்றும் பழங்கள்:
குழந்தைகள் எந்த உணவையும் சாப்பிட மறுக்கிறார்கள் என்றால், சத்துமாவுக் கஞ்சியைக் கொடுக்கலாம். இதுவே அவர்களுக்குத் தேவையான எனர்ஜியை வழங்கப் போதுமானது. .ஏனெனில் மற்ற உணவுகளில் உள்ள சத்துகள் அனைத்தும் சத்துமாவுக் கஞ்சியில் உள்ளன.

வாழைப்பழத்தை, `வாழ்வதற்கான பழம்’ என்று கூறுவார்கள். தினசரி உணவோடு வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

இந்த பிரேக்ஃபாஸ்ட் பட்டியலில் சிறந்த காலை உணவாக இருப்பது…

இட்லி, சாம்பார், ஆப்பம்
புட்டு, கொண்டைக்கடலை
சத்துமாவு கஞ்சி மற்றும் பழங்கள்.
பொங்கல், சாம்பார் மற்றும் சட்னி
தோசை, தேங்காய் சட்னி, உப்புமா.

மிட் மார்னிங்:

காலை மற்றும் மதிய உணவு வேளைக்கு நடுவில் உள்ள மிட்மார்னிங் நேரமான 10:45 முதல் 11:30 மணிக்குள் பழச்சாறுகள், ஹெல்த்தி ஸ்நாக்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம். டீ, காபி போன்றவற்றை மதிய உணவு வேளைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகப் பருகலாம்

மதிய உணவு:

மதிய உணவை 12 முதல் 2 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது.
சூரியன் உச்சிக்கு வரும் வேளையில் தான் அக்னியும் உச்சத்தில் இருக்கும். ஆம்! நமது செரிமான சக்திக்கும் சூரியனுக்கும் ஒரு நெருங்கிய சம்மந்தம் உண்டு. அதனால் தான் மழைக்காலங்களில் நமக்கு பசி எடுக்காத உணர்வு மேலோங்கி இருக்கும்.

நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

சரி உங்கள் மதிய உணவில் என்ன இருக்க வேண்டும் என்று பார்ப்போமா?

அனைத்து வகை கீரைகளையும், பருப்புகளையும், பயறுகளையும், காய்கறிகளையும் மதிய உணவாகச் சாப்பிடலாம்.
கைக்குத்தல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிடலாம். பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துகள் நிறைந்த காய்கறிகள்.
மதிய உணவில் அவசியம் இடம்பெறவேண்டிய ஒன்று, ரசம். இது, செரிமானம் சீராக நடைபெற உதவும். ரசத்தை போலத் தான் தயிரும். தினமும் சிறிதளவு தயிர் சாதம் சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெருகும். அனைத்துக் கீரை வகைகளும் இருத்தல் நல்லது.

இருக்க கூடாதவை:

மைதாதாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நாண் போன்றவற்றை மதியம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
எண்ணெய்யில் பொரித்த உருளைக்கிழங்கு போன்றவற்றை மதியம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
பஜ்ஜி, பானிபூரி, பிட்சா, சமோசா போன்றவற்றையும் மதிய உணவில் எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.
‘வெரைட்டி ரைஸ்’ என்று நாம் செய்யும் புளியோதரையோ, எலுமிச்சை சாதமோ, தக்காளி சாதம் ஆகியவை வாரத்தில் ஒருநாள் சாப்பிடலாம். இவற்றில் சிறிது பூண்டு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் ஆகியவை சேர்த்தால் மிகவும் நல்லது.

மதிய உணவாக வெரைட்டி ரைஸ் எனப்படும் புளியோதரை, தக்காளி சாதம், லெமன் சாதம்… எதுவாக இருந்தாலும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது.

மதிய உணவாக எதைச் சாப்பிட்டாலும் இறுதியில் ரசத்தை உடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். ரசம், செரிமானம் சீராக நடைபெற உதவும். ரசத்தைப்போலவே சூப்பும் மதியம் சாப்பிடச் சிறந்தது.

மாலை ஸ்நாக்ஸ்:

மாலையில் 4 முதல் 5 மணிக்குள் ஈவினிங் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். ஸ்முத்தீஸ், ஹெல்த்தி ஸ்நாக்ஸ், பழச்சாறுகள், காய்கறி சாலட், தானியங்களால் செய்யப்பட்ட நொறுக்குத்தீனிகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

இரவு உணவு:

இரவு உணவை மாலை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது சிறந்தது. அதிகபட்சம் 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். தாமதமாக இரவு உணவைச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள், தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம்.

இரவு உணவுக்கு இட்லி, சாம்பார், தோசை, சப்பாத்தி, உப்புமா, கோதுமை உணவுகள், பருப்பு வகைகள், ராகி, கம்பு, தேன், பால் போன்றவற்றை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகச் சாப்பிட வேண்டும்.

கஃபைன் உள்ள பானங்கள், கார்பனேட்டட் டிரிங்க்ஸ், அசைவ உணவுகள், கீரை, மசாலா அதிகம் நிறைந்த துரித உணவுகள், மைதா பொருள்கள், நொறுக்குத்தீனி, அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிடும் நேரம் வந்துவிட்டது என்பதற்காக வலுக்கட்டாயமாக எதையும் சாப்பிடக் கூடாது. உணவை நொறுங்கக் கடித்து, மென்று சாப்பிட வேண்டும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவும் சாப்பிட்டு முடித்து அரை மணி நேரத்துக்குப் பின்னரும் தண்ணீர் குடிக்கலாம். சாப்பிடும்போது குடிக்கக் கூடாது.

பழச்சாற்றை குடிக்கக் கூடாது. இது செரிமானத்துக்கு உதவும் டைஜெஸ்டிவ் ஜூஸை (Digestive juices) உருவாகவிடாமல் தடுக்கும். செரிமானக் கோளாறை உண்டாக்கும்.

உணவு சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. செரிமானத்துக்குத் தேவையான நேரத்தை தூங்குவது குறைத்துவிடும். இது, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
உடற்பயிற்சி செய்யக் கூடாது. சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்தால் வயிற்றுப்பிடிப்பு, வயிற்றுவலி ஏற்படும் வாய்ப்பு உண்டு.

ாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. இது கை கால்களில் சீரற்ற ரத்த ஓட்டத்தை உண்டாக்கும். செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளில் இடையூறை உண்டாக்கும்.
டீ, காபி குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள ஆக்ஸலேட் மற்றும் ஃபைலேட் உடலில் இரும்புச்சத்தை உறியும் செயலை (Iron absorption) சரியாக நடக்கவிடாமல் தடுக்கும்.


பருவகால உணவு:

அந்தந்த பருவ காலங்களில் விளையும் பழங்கள், காய்கறிகள், தானியங்களை அதிகம் பயன்படுத்தி கொள்வது நல்லது என்கிறார்கள் டயட்டீஷியன்கள். இயற்கை அளித்திருக்கும் அற்புதங்களில் இதுவும் குறிப்பிடத்தக்கது. அதனால் கிடைக்கும் போது அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சரிவிகித சத்துக்கள்:

உடலுக்கு வேண்டிய முழுமையான உணவு என்பது தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள் அன்றாடம் ஒரு கீரைவகைகள் நிறைந்தவை. தொடர்ந்து பழம் அல்லது காய்கறிகள் அல்லது பருப்பு வகைகள் அல்லது கார்போ ஹைட் ரேட் உணவுகள் என்று இருக்கும் போது சத்துக்களும் சரிவிகிதமாக இருக்காது. அதனால் தான் முழுமையான டயட் ஷீட்டை உருவாக்கி அதை நடைமுறைப் படுத்த வலியுறுத்துகிறார்கள் டயட்டீஷியன்கள்.

மேற்கண்டவை பற்றி அதிகம் படித்திருக்கிறோம். சத்தான உணவு வகைகள் எடுத்துக்கொள்வதைப் பின் பற்றியும் வருகிறோம். ஆனால் சாப்பிடும் முறை யில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோமா?

சம்மணமிட்டு சாப்பிடுங்கள்:

நமது பாரம்பரியத்தில் சிறப்பு மிக்கவை பல இருந்தாலும் அதில் ஒன்று விருந தோம்பல். தலைவாழையில் விருந்து படைத்து வந்தாரை வரவேற்கும் சிறப்பு இன்றுவரை நமக்கு மட்டுமே சொந்தமானது என்பதிலிருந்தே நமது முன்னோர்கள் உணவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள் ளலாம்.

தற்போது மேற்கத்திய பாணியில் நாற்காலியில் சாப்பிடுவது நாகரிக வழக்கமாக இருக்கலாம் ஆனால் இது நல் ஆரோக்யத்துக்கு பொருந்தாத ஒன்று என்கிறார்கள் பெரியோர்கள். அதை மருத்துவ ரீதியாக நிரூபித்த பிறகு நவீன பாணி மக்களும் இப்போது கடைபிடிக்க தொடங்கிவிட்டார்கள்.

தற்போது பரவலாக செரிமான பிரச்னை இருந்து வருகிறது. அதில் ஒரு காரணம் உண்ணும் முறை. காலை மடக்கி மடித்து சம்மணமிட்டு (சுக ஆசனம்) சாப் பிடும்போது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்வதால் செரிமானம் எளிதாகிறது. காலை நாற்காலியில் தொங்கவிட்டு அமரும் போது இரத்த ஓட்டம் கால் பகுதிக்கு அதிகமாக செல்கிறது. அதனால் செரிமானம் தாமதமாகிறது.

எப்படி சாப்பிடவேண்டும்:

மருத்துவர்கள் சொல்வதற்கு முன்பே சித்தர்கள் இது குறித்து கூறியிருக்கிறார்கள். நொறுக்கத் தின்றால் நூறு வயது என்ற பழமொழி மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

உணவை நன்றாக மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயது வரை ஆரோக்யமாக வாழலாம் என்கிறார்கள்.

உணவை அப்படியே விழுங்காமல் நன்றாக மென்று கூழ் போல் ஆக்கி உமிழ் நீருடன் கலந்து விழுங்கவேண்டும்.

இது அதீத பலத்தை தருவதோடு உணவில் இருக்கும் சத்துக்களை வீணாக்காமல் உடலுக்கு சேர்க்கும். ஏனெ னி ல் உமிழ் நீரிலுள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவு குழலுக்கு செல்கிறது. இதிலிருக்கும் நொதி பித்தத்துடன் இணைந்து உணவை எளிதில் செரிக்க தூண்டுகிறது.

உணவு மட்டுமல்ல குடிக்கும் நீரையும் பொறுமையாக உமிழ்நீரோடு கலந்து குடிக்க வேண்டும் என்றும் கூறி யிருக்கிறார்கள்.

உமிழ்நீர் வாய்துர்நாற்றத்தைப் போக்குவதோடு வயிற்றில் இருக்கும் புண்களையும் ஆற்றும் வல்லமை கொண்டது.

இந்த உமிழ்நீர் சுரப்பில் மாற்றம் இருந்தாலே உடல் ஆரோக்யம் குறைவதற்கான அறிகுறி என்று புரிந்து கொள்வார்கள் நமது முன்னோர்கள்.

சாப்பிடும் போது செய்ய கூடாதவை:

என்ன சாப்பிடவேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை விட எப்படி சாப்பிடக்கூடாது என்பதுதான் இன்றைய தலைமுறைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

சாப்பிடும் போது கவனம் முழு வதும் உணவின் மீது மட்டுமே இருக்க வேண்டும். டீவி, செல்ஃபோன் போன்றவை நிச்சயம் கூடாது.

சாப்பிடும் போது பேசக்கூடாது என்று சொல்வார்கள் பெரியவர்கள். காரண காரியங்களின்றி அவர்கள் சொல்லவில்லை.

சாப்பிடும் போது வெளியில் இருந்து காற்று வாய் வழியாக உள்ளே செல்லும் . இதுவும் ஆரோக்யமானதல்ல என்பதால் பேசாமல் இயன்றவரை வாயை திறக்காமல் உதடுகளை மூடியபடி சாப்பிட்டால் சில நாட்களிலேயே உடல் ஆரோக்யமடைவதை கண்கூடாக உணரலாம்.

மனதில் வெறுப்பு, வன்மம், கோபம், உளைச்சல் என எதையும் அசைபோடாமல் உணவை ரசித்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிட்டால் நூறுவயது வரை வாழ்கிறோமோ இல்லையோ ஆரோக்யத்தோடு வாழலாம்

உணவருந்திய பிறகு செய்யக் கூடாத செயல்கள்:

சாப்பிட்டதும், ரத்த ஓட்டம் நமது வயிற்றுப் பகுதிக்குத் தான் செல்ல வேண்டும். சாப்பிட்டவுடன் வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க, ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவு சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, குளித்து அரை மணி நேரம் கழித்துச் சாப்பிடலாம் அல்லது சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.

சாப்பிடும்போதோ சாப்பிடும் முன்போ பழங்கள் சாப்பிடக் கூடாது. வயிற்றில் வாயுவை உருவாக்கும். சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

சாப்பிட்டதும் தேநீர் குடிக்கக் கூடாது. தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது, உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து, உணவு செரிப்பதைச் சிக்கலாக்கிவிடும்.

சாப்பிட்டதும் இடுப்பு பெல்ட்டைத் தளர்த்தக் கூடாது. தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு இடுப்பில் உள்ள பெல்ட்டை தளர்த்திவிடுவார்கள். இதனால், சாப்பிட்ட உணவு உடனடியாகக் குடலுக்கு சென்று விழுவதால், சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

சாப்பிட்டதும் நடக்கக் கூடாது. சாப்பிட்ட உடனே நடந்தால், உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால், உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால், சாப்பிட்டும், சத்துகள் நம் உடலில் சேராது.

சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் உருவாக வழிவகுக்கும்.

எந்த திசையில் அமர்ந்து உண்டால் எவ்விதமான பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்வி வளரும், ஆயுள் விருத்தியாகும்.
மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவருக்கு செல்வம் பெருகும்.
வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் நோய்வாய்ப்படும் நிலை உண்டாகும்.
தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அழியாப் புகழ் உண்டாகும்.
இது எப்படி சாத்தியம்?

கிழக்கு திசை இந்திரனுக்கு உரியது.

மேற்கு செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமிக்கு உரியது.

வடக்கு சிவனுக்கு உரியது.

தெற்கு எமனுக்கு உரியது.

அதேபோல், ஒருவர் தங்களது வீட்டை தவிர்த்து உறவினர்கள் வீட்டிற்குச் சென்றால் மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அந்த உறவு பகையாகிவிடும்

நாம் சாப்பிடும் உணவு முற்றிலும் சமைக்கப்பட்டதாக இருக்கிறது. எண்ணெயில் பொரித்து, வேகவைத்து என உணவுப் பொருட்களைப் சமைக்கும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் அழிந்துவிடுகின்றன. சிலர், ‘ஆரோக்கியத்துக்காக…’ என்று கூறி வெறும் பச்சைக் காய்கறி, பழங்களை மட்டும் எடுத்துக்கொள்கின்றனர். இதுவும் தவறு. பொதுவாக சமைத்த உணவுகளை எடுத்துக்கொள்வதுபோல், தினசரி உணவில் சமைக்காத பச்சைக் காய்கறி பழங்களையும் எடுத்துக்கொள்ளும்படி டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆரோக்கிய வாழ்வுக்கு சமைத்த உணவுகள், சமைக்காத உணவுகள், பாதிப் பக்குவப்படுத்தப்பட்ட உணவுகள் (Semi Processed food ) ஆகிய மூன்று வகையான உணவுகளும் தேவை. எதை பச்சையாக எடுத்துக்கொள்வது, எதை அரை வேக்காட்டில் சாப்பிடுவது, எதை நன்கு சமைத்து சாப்பிடுவது என்பதில் பலருக்கும் பலவித குழப்பம் ஏற்படுகிறது.

சமைத்த உணவுகள்

ஓர் உணவை அதன் இயல்பான நிலையில் இருந்து முற்றிலும் வேறொரு நிலைக்கு மாற்ற நீரில் வேகவைத்தோ, நீராவியால் வேகவைத்தோ, எண்ணெயில் வறுத்தோ, வதக்கியோ, பதப்படுத்திகள் சேர்த்தோ, சூடுபடுத்தியோ சமைத்துச் சாப்பிடுவார்கள். இந்த உணவுகள் எல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவை.

தானியம், பருப்பு போன்றவற்றை அப்படியே சாப்பிட்டால், அதனை செரிக்கும் சக்தி மனிதனுக்கு கிடையாது. ஆனால், இந்த உணவுகளைச் சமைத்துச் சாப்பிடும்போது, நம் உடலில் உள்ள என்ஸைம்கள் மூலம் உணவு செரிக்கப்பட்டு, சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கின்றன. பொதுவாக, சமைத்த உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருக்கும். இதுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறது. எனவேதான், ‘தினமும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை 55 – 65 சதவிகிதம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

சமைத்த உணவுகளை அனைவருமே சாப்பிடலாம். செரிமானத்துக்கு ஏற்றது. குறிப்பாக, எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் நன்றாகச் சமைத்த உணவுகளே ஏற்றவை.

உணவு நன்றாகச் சமைக்கப்படும்போது, நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவை ஓரளவுக்கு உடலுக்குக் கிடைக்கும். எனினும், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முதலான நுண்ணூட்டச் சத்துக்கள் மிகக் குறைவாகவே கிடைக்கும். எனவே, பாதி பக்குவப்படுத்தபட்ட உணவுகள், சமைக்காத உணவுகள் போன்றவற்றைக் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.

பாதி பக்குவப்படுத்தப்பட்ட உணவுகள்

அரை வேக்காட்டில் சமைக்கப்பட்ட உணவுகளுக்கும், பாதிப் பக்குவப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. அரை வேக்காட்டில் சமைக்கப்பட்ட உணவுகள் அனைத்துமே சமைக்கப்பட்ட / சமைத்த உணவுகள் என்ற வகையையே சேரும்.

பச்சைப் பயறை நீரில் ஊறவைத்து, அடுத்த நாள் முளைவிட்ட பிறகு பச்சையாகச் சாப்பிடுவதை ‘பாதி பக்குவப்படுத்தப்பட்ட உணவு’ என்கிறோம். இந்த முறையில் தண்ணீரில் ஊறவைக்கப்படுவதால் பல புதிய நுண்ணூட்டச்சத்துக்கள் கிடைக்கும். உதாரணத்துக்கு, பாதாம் பருப்பில் புரதச்சத்து அதிகம்; வைட்டமின் சி குறைவு. பாதாம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடும்போது, வைட்டமின் சி அதிகம் கிடைக்கும். பாதாம், பிஸ்தா முதலான நட்ஸ் வகைகளைத் தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடுவதே சிறந்தது.

பாலில் இருந்து கிடைக்கும் தயிர் முதலான உணவுகள், அரிசியில் இருந்து கிடைக்கும் அவல் பொரி போன்றவையும் இந்த வகையில் சேரும். முளைகட்டிய பயறுதான் மிகச் சிறந்த பாதி பக்குவப்படுத்தப்பட்ட உணவு.

இந்த வகை உணவில் பெரும்பாலும் புரதச்சத்து அதிகம் நிறைந்திருக்கும். உடலுக்குத் தேவையான ஆற்றலுக்கும் தசை வலுவுக்கும் புரதச்சத்து மிகவும் அவசியம்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், அன்றாடம் இந்த வகை உணவுகளை மூன்றில் ஒரு பங்கு எடுத்துக்கொள்வது நல்லது. நொறுக்குத்தீனிகளுக்குப் பதில், பாதிப் பக்குவப்படுத்தபட்ட உணவுகளைச் சாப்பிடலாம்.

சமைக்காத உணவுகள்

ஓர் உணவுப்பொருளை அதன் தன்மையை மாற்றாமல், வேறொரு உணவுப்பொருளோடு கலக்காமல், அப்படியே சாப்பிட ஏற்ற உணவுகள் அனைத்துமே ‘சமைக்காத உணவுகள்’ என்ற வகையைச் சேரும்.

விலங்கு, தாவரம் முதலியவற்றில் இருந்து கிடைக்கும் உணவுகள் அனைத்துமே சமைக்காத உணவுகளே. ஆனால், இவற்றில் பெரும்பாலான உணவுகளை, செரிமானப் பிரச்னையைத் தடுக்க, சமைத்துத்தான் சாப்பிட வேண்டியிருக்கும். எனினும், இலை, கிழங்கு வகைகளைத் தவிர்த்த மற்ற காய்கறிகளை நாம் சமைக்காமலேயே சாப்பிடலாம். பழங்களை சமைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அது சாப்பிட ஏற்ற வகையில்தான் கனிந்திருக்கிறது.

சமைக்காத உணவுகளில்தான் நார்ச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுஉப்புகள் முதலான நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

காய்கறிகள், பழங்கள் போன்ற சமைக்காத உணவுகளை அனைவருமே சாப்பிடலாம். எனினும், ஏதாவது சில உணவுகள் செரிமானக் கோளாறை ஏற்படுத்துகிறது எனில், குறிப்பிட்ட அந்த உணவை மட்டும் தவிர்ப்பதே நலம்.

காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒரு பாகம் அழுகி இருந்தாலோ, அதன் தோல் உரிந்திருந்தாலோ, அவற்றை நேரடியாகச் சாப்பிடுவதைத் தவிர்த்து, சமைத்துச் சாப்பிடுவதே நல்லது.

எந்தெந்த உணவை எப்படிச் சாப்பிட வேண்டும்?

சமைத்து சாப்பிட…

அரிசி, கோதுமை.
துவரை முதலான பருப்பு வகைகள் அனைத்தும்.
வேர்க்கடலை போன்ற தாமதமாகச் செரிமானமாகும் நட்ஸ் வகைகள்.
கீரைகள்.
பால்.

கிரில்டு உணவுகள்.

சூப், ரசம்.
உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளி.

பாதி பக்குவப்படுத்தி உண்ண…

முளைகட்டிய பயறுகள்.
பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள்.
பனீர்.
சீஸ்.
வெண்ணெய்.
தயிர்.
அவல் பொரி.

சமைக்காமல் அப்படியே சாப்பிட…

காய்கறிகள்.
பழங்கள்.
தேன்.
முந்திரி.
உலர் திராட்சை, பேரீச்சை போன்ற உலர் பழங்கள்.
சாலட்.

Scroll to Top