You cannot copy content of this page

பகுதி: 1 வித விதமான குழம்பு வகைகள் !

வித விதமான குழம்பு வகைகள் !

1 பூண்டு-வெங்காயக் குழம்பு

தேவையானவை:

நாட்டுப் பூண்டு – 4 பல், சாம்பார் வெங்காயம் – 10, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 1, கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம்,பெருங்காயம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – அரை கப், கறிவேப்பிலை ,கொத்தமல்லி – சிறிதளவு, புளித் தண்ணீர் – ஒரு கப்.

செய்முறை: பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை , கொத்தமல்லி தாளித்து, உரித்த பூண்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் சாம்பார் பொடியைப் போட்டு வறுத்து, புளித் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.

விருப்பப்பட்டால் கொதிக்கும்போது ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம். தக்காளியும் சேர்க்கலாம். ருசி கூடும்.

இந்தக் குழம்பு , சளித் தொல்லையால் அவதிப் படும்போது மருந்தாக சாப்பிட ஏதுவானது.


2 வத்தக் குழம்பு

தேவையானவை:

சின்ன வெங்காயம் – ஒரு கப், கடுகு – கால் டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, புளி – 50 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து… தோல் உரித்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

வாசனை வந்ததும் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, வடிகட்டிய புளிக் கரைசல் விட்டுக் கொதிக்க வைக்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில், பொடித்த வெல்லம் போட்டுக் கலந்து, கெட்டியான பதம் வந்ததும் இறக்கவும்.

இந்தக் குழம்பு இரண்டு நாட்கள் வரை கூட நன்றாக இருக்கும்.


3 கறிவேப்பிலை குழம்பு

தேவையானவை:

கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு, மிளகு – 10, காய்ந்த மிளகாய் – 2, உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், புளி – சிறிய எலுமிச்சைப் பழ அளவு, எண்ணெய் – 50 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை வதக்கிக்கொள்ளவும். அதே வாணலியில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன் புளியை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து தேவையான உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

சூடான சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். சுட்ட அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன்.


4 ஓமக் குழம்பு

தேவையானவை:

ஓமம் – இரண்டு டீஸ்பூன், புளி – எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், கடுகு, கடலைபருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

ஓமத்தை சிறிதளவு எண்ணெயில் வறுக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி… உப்பு, ஓமம் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: ஓமம் ஜீரண சக்தி தரும். வயிறு உபாதைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.


5 பொரிச்ச குழம்பு

தேவையானவை:

பாசிப்பருப்பு – அரை கப், பெருங்காயத்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக விடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்து… ஆற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேக வைத்த பருப்புடன் அரைத்த கலவை, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி பரிமாறவும்.


6 வெந்தயக் குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயம் – சிறு துண்டு, பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், புளி – 50 கிராம், அரிசி மாவு – 2 டீஸ்பூன். உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகை பருப்புகள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். புளியைத் தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து, வடிகட்டி தாளிப்பில் சேர்க்கவும். மஞ்சள்தூள், பொடித்த வெல்லம், உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். அரிசி மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, அதில் சேர்த்து மீண்டும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.


7 கொண்டைக் கடலை குழம்பு

தேவையானவை:

வெள்ளை கொண்டைக்கடலை – அரை கப், துவரம்பருப்பு – அரை கப், புளி – 50 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் இரவே வெள்ளை கொண்டைக்கடலையை ஊற வைக்கவும். குக்கரில் துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெள்ளை கொண்டைக்கடலையை தனியாக வேக வைக்கவும். புளியை ஊற வைத்துக் கரைத்து, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த வெள்ளைக் கொண்டக்கடலை, பெருங்காயத்தூள் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். மசித்த துவரம்பருப்பை போட்டுக் கொதிக்க விட்டு… எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.


8 பூண்டு – வெங்காய குழம்பு

தேவையானவை:

பூண்டு – 100 கிராம், சின்ன வெங்காயம் – 20, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சைப் பழ அளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பூண்டைத் தோல் உரித்து இரண்டாக நறுக்கவும். வெங்காயத்தையும் தோல் உரித்து நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து… பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் சாம்பார் பொடி போட்டு வறுத்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.


9 மிளகு குழம்பு

தேவையானவை:

மிளகு – கால் கப், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – 50 கிராம், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், அரிசி – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெறும் கடாயில் அரிசியை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை மிக்ஸியில் சேர்த்து, நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு… புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து மேலே வரும் சமயத்தில் பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து இறக்கவும்.


10 வேர்க்கடலை காரக் குழம்பு

தேவையானவை:

வேர்க்கடலை – கால் கப், தோலுரித்த சின்ன வெங்காயம் – கால் கப், கடுகு – கால் டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், திக்கான தேங்காய்ப்பால் – கால் கப், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, வெந்தயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். வெறும் கடாயில், வறுக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு சிவக்க வறுத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து.. சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வாசனை வந்ததும், வேக வைத்த வேர்க்கடலை, மஞ்சள்தூள், உப்பு, புளிக் கரசைல் சேர்த்து நன்கு கலக்கவும். நன்றாகக் கொதித்ததும், அரைத்த கலவையைப் போட்டுக் கலந்து, பொடித்த வெல்லம் சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


11 மிளகு பூண்டுக் குழம்பு

பூண்டு(உரித்தது) – ஒரு கப் தனியா – 3 டேபிள் ஸ்பூன், மிளகு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4,
ன உளுத்தம் பருப்பு, சீரகம் – தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, புளி – சிறிய உருண்டை, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்.
ன உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து கொள்ளவும். கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.

சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் சிவக்கும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும். மீதம் உள்ள எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். சுவையான சத்தான பூண்டு – மிளகுக்குழம்பு ரெடி.


12 வேர்க்கடலை குழம்பு

தேவையானவை:

பச்சை வேர்க் கடலை – 100 கிராம், காய்ந்த மிளகாய் – ஒன்று, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், புளி – எலுமிச்சைப் பழ அளவு, கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வேர்க்கடலையை 2 மணி நேரம் ஊறவைத்து, வாணலியில் சிறிது நேரம் வேகவைக்கவும். வாணலி யில் எண்ணெய் விட்டு, கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து… சாம்பார் பொடி சேர்த்து வறுத்து, புளியைக் கரைத்து ஊற்றி உப்பு சேர்க்கவும். இதனுடன் வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.

குறிப்பு: சுட்ட அப்பளம், தயிர் பச்சடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.


13 வாழைப்பூ குழம்பு

தேவையானவை:

வாழைப்பூ – நான்கு மடல்கள், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், துவரம்பருப்பு – 100 கிராம், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் உள்ள நரம்பை எடுத்து பொடியாக நறுக்கிகொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வாழைப்பூவை வதக்கிக்கொள்ளவும். புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வதக்கிய வாழைப்பூ, வேகவைத்த பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும்.


14 மாங்காய் குழம்பு

தேவையானவை:

சிறிய மாங்காய் – 1, பச்சைமிளகாய் , பெரிய தக்காளி – 2, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு – ஒரு கப், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், காய்ந்த மிளகாய் – 1, மஞ்சள், உப்பு , பெருங்காயம் – தேவையான அளவு, எண்ணெய், கடுகு, சீரகம்,வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு.
செய்முறை: மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு வேக விடவும். பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், தனியாத்தூள்,பெருங்காயம், தேங்காய் துருவலை எண்ணெயில் வறுத்து அரைக்கவும். தக்காளியை வதக்கி, அதில் இந்த அரைத்த மசாலாவை போட்டு, வேக வைத்த மாங்காயை அதில் சேர்த்து உப்பு, மஞ்சள்,சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைக்கவும். இதில் வேக வைத்த பருப்பையும் போட்டுக் கலக்கவும். எண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி இறக்கவும். கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும்.


15 தக்காளிக்காய் குழம்பு

தேவையானவை:

தக்காளிக்காய் – 6, துவரம் பருப்பு – அரை கப், பச்சைமிளகாய் – 1, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, புளித் தண்ணீர், தேங்காய் துருவல் – தலா அரை கப், உப்பு , பெருங்காயம் – தேவையான அளவு, கடுகு, சீரகம் , எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:

தக்காளிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் , சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைக்கவும். இதில் புளித் தண்ணீரை விடவும். பச்சைமிளகாய், தேங்காய் துருவலை அரைத்து சேர்க்கவும். துவரம் பருப்பை வேக வைத்து இதனுடன் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்து வந்ததும் , கடுகு , சீரகம் , பெருங்காயம், கறிவேபிழை மற்றும் கொத்து மல்ல தாளித்து கொட்டி இறக்கவும்.
புளி சேர்க்காமலும் செய்யலாம்


16 மோர்க் குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், புளிப்பில்லாத கடைந்த மோர் – ஒரு கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, கடுகு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சுண்டைக்காய் – 15, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு, வெந்தயம் சேர்த்து வறுக்கவும். பிறகு, பச்சை மிளகாய், ஊற வைத்த பருப்பு சேர்த்து நன்கு வதக்கி… இஞ்சி, கொத்தமல்லி, தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வைத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு அதனுடன் கடைந்த மோர் சேர்க்கவும். தேங்காய் எண்ணெயில் சுண்டைக்காயை சிவக்க வறுத்து மோர்க் கலவையில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி நன்கு கலந்து பரிமாறவும்.


17 மிளகு மோர்க்குழம்பு

தேவையானவை:

கெட்டியான மோர் – 500 மில்லி, மிளகு – 10, காய்ந்த மிளகாய் – 2, வெந்தயம், அரிசி – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கப், எண்ணெய் – உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு… மிளகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், அரிசியை வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். இந்த விழுதை மோருடன் கலந்து, உப்பு சேர்த்து வாணலியில் ஊற்றி ஒரு கொதி விட்டு… சிறிதளவு எண்ணெயில் கடுகை தாளித்து இதனுடன் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். தேவைப்பட் டால், வேகவைத்த சேப்பங் கிழங்கு சேர்த்து செய்யலாம்.


18 மாம்பழ மோர்க்குழம்பு

தேவையானவை:

மாம்பழம் – ஒன்று, ஓரளவு புளித்த மோர் – 500 மில்லி, காய்ந்த மிளகாய் – 2, அரிசி, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கப், கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

மாம்பழத்தை தோல் சீவி வேகவிட்டு, மசித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரிசி, துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாயை வறுத்து தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து… மோருடன் கலக்கவும். இதனுடன் உப்பு, மசித்த மாம்பழக் கூழ் சேர்த்துக் கரைத்து வாணலியில் ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரு கொதிவிட்டு… எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.


19 வெண்டைக்காய் மோர்க்குழம்பு

தேவையானவை:

வெண்டைக்காய் – 10, ஓரளவு புளிப்பு உள்ள மோர் – 500 மில்லி, காய்ந்த மிளகாய் – 2, தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கப், மிளகு, தனியா, கடலைப்பருப்பு, கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெண்டைக்காயை நீள துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து, மோருடன் கலந்து தேவையான உப்பு சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, மோர் கலவையை ஊற்றி, வதக்கிய வெண்டைக்காயும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.


20 உருண்டை மோர்க்குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, மிளகு – 6, இஞ்சி – ஒரு சிறு துண்டு, உப்பு – தேவையான அளவு, கடுகு, எண்ணெய் – தலா அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் 4, சீரகம் – ஒரு டீஸ்பூன், மோர் – 2 கப், தனியா – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு கப், கொத்த மல்லி , கறி வேப்பிலை – சிறிதளவு .

செய்முறை:

சிறிதளவு துவரம் பருப்பு, பச்சைமிளகாய், சீரகம், தனியா, இஞ்சி, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் ஊற வைத்து அரைத்து, மோர் மற்றும் உப்பு சேர்த்துக் கலக்கவும்.
துவரம்பருப்பை நன்றாக ஊற விடவும். இதனுடன் காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்புக் கலவையைப் போட்டு கெட்டியாகக் கிளறவும். இதனை சிறிய உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து வேக விடவும். கடாயில், கலந்து வைத்த மோர் கலவையுடன் வெந்த உருண்டைகளையும் போட்டு, கொத்த மல்லி, கறி வேப்பிலை தூவி, ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சாதம், சப்பாத்தி, ரொட்டி போன்றவைக்கு நன்கு சேரும் இது.

*********************************

21 பச்சை மோர்க்குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கொப்பரைத் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மோர் – ஒரு கப், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியற்றை சிவக்க வறுக்கவும். ஆறியதும் கொப்பரைத் துருவல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மோரில் அரைத்த கலவையைப் போட்டு நன்கு கலக்கவும். கடாயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மோர்க் கலவையில் கொட்டிக் கலக்க.. அடுப்பில் வைக்காமலேயே மோர்க்குழம்பு தயார்!


22 பத்தியக் குழம்பு

தேவையானவை:

புளி – 2
எலுமிச்சை அளவு, சுண்டைக்காய் வத்தல் – 10, காய்ந்த மிளகாய் – 1,
சாம்பார் பொடி – 3 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம்,வெந்தயம், துவரம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் , துவரம் பருப்பு தாளித்து, சுண்டைக்காய், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் சாம்பார் பொடி சேர்த்து வறுத்து, புளியை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். இத்துடன் உப்பு சேர்த்து, குழம்பு கொதித்ததும் இறக்கவும்.
காய்ச்சலாய் வந்த வாய்க் கசப்பு, வயிற்றுப் பிரச்னைக்கும் இது நல்லது .


23 முருங்கைக்கீரை பொரித்த குழம்பு

தேவையானவை:

ஆய்ந்த முருங்கைக்கீரை – இரண்டு கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 1, சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், உளுத்தம்பருப்பு, மிளகு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், மஞ்சள், உப்பு , பெருங்காயம் , கறிவேப்பிலை, கொத்த மல்லி – தேவையான அளவு.

செய்முறை:

முருங்கைக்கீரையை சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். பாசிப்பருப்பை சிறிது மஞ்சள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், சீரகம், உளுத்தம்பருப்பு, மிளகு, தேங்காய் துருவல் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்தவற்றுடன் வேக வைத்த கீரையையும் சேர்த்துக் கிளறவும். இதில் வெந்த பாசிப்பருப்பு , மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். கடைசியில் கடுகு , பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.


24 பருப்பு உருண்டை காரக்குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, புளி – ஒரு எலுமிச்சை அளவு, தக்காளி-2 , சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள் ,உப்பு – தேவையான அளவு, கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், சோம்பு(1 ஸ்பூன் ) , இஞ்சி (ஒரு இன்ச் துண்டு ), பச்சை மிளகாய் (3 ) , தேங்காய் (ஒரு டேபிள் ஸ்பூன்) , உடைத்த கடலை(கால் கப்) அரைத்த மசாலா விழுது , கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:

துவரம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வடை மாவு பதத்துக்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்புக் கலவையை போட்டுக் கிளறவும். இத்துடன் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். இதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். அடுப்பில் கடாயை வைத்து, புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, பிறகு அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.

பிறகு வெந்த உருண்டைகளைப் போடவும். கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து இறக்கவும். கறிவேப்பிலை , கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.

சூடான பச்சரிசி சாதத்தில் உருண்டைகளைப் போட்டுப் பிசைந்து, குழம்பு தொட்டு சாப்பிடலாம். . இதற்கு சுட்ட அப்பளம் நன்றாக சேரும் . தோசைக்கும் மிக நன்றாக இருக்கும்.


25 கடலை பருப்பு உருளை உருண்டை மசாலாக் குழம்பு

தேவையானவை:

கடலை பருப்பு – ஒரு கப், உருளைக் கிழங்கு -1 /4 கிலோ , காய்ந்த மிளகாய் – 4, புளி – ஒரு எலுமிச்சை அளவு, தக்காளி-2 , சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள் ,உப்பு – தேவையான அளவு, கடுகு, சீரகம்,சோம்பு,வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், சோம்பு(1 ஸ்பூன் ) , இஞ்சி (ஒரு இன்ச் துண்டு ), பச்சை மிளகாய் (3 ) , தேங்காய் (ஒரு டேபிள் ஸ்பூன்) , உடைத்த கடலை(கால் கப்) அரைத்த மசாலா விழுது , கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:

கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் , சோம்பு, சிறிது இஞ்சி, பெருங்காயத் தூள், மஞ்சள் எல்லாம் சேர்த்து வடை மாவு பதத்துக்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். மாவு சற்று நீர்த்துப் போனால், அரிசி மாவை சேர்த்துக் கெட்டிப் படுத்தலாம். இத்துடன் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். இதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். குழம்பில் கரைக்க, இந்த மாவில் சற்று தனியாக எடுத்து வைக்கவும் . உருளைக் கிழங்கையும் மஞ்சள் , சிறிது உப்பு சேர்த்து தோல் நீக்கி, வேக வைக்கவும் .
பின்பு அடுப்பில் கடாயை வைத்து, புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, பிறகு அரைத்த சோம்பு மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும். பின் வேக வைத்த உருண்டைகள் போக மீந்திருக்கும் வடை மாவை நீரில் கரைத்து இதில் சேர்க்கவும். சற்று நேரத்தில் நன்கு தள தள வென்று கொதித்து கெட்டியாய் குழம்பு போல் ஆகும்.
பிறகு வெந்த உருண்டைகளைப் போடவும். கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து இறக்கவும். கறிவேப்பிலை , கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
வடை மாவு போத வில்லை என்றால் குழம்பில் கரைக்க , பஜ்ஜி போடும் கடலை மாவை பயன் படுத்தலாம்.
இதில் குடை மிளகாயையும் வதக்கிச் சேர்க்கலாம். பிரமாதமாய் இருக்கும். சற்று மசித்த வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சூடான பச்சரிசி சாதத்தில் உருண்டைகளைப் போட்டுப் பிசைந்து, குழம்பு தொட்டு சாப்பிடலாம். . இதற்கு சுட்ட அப்பளம் நன்றாக சேரும் . தோசைக்கும் மிக நன்றாக இருக்கும்.


26 கூட்டு வடக குழம்பு

தேவையானவை:

கூட்டு வடகம் – 100 கிராம், புளித் தண்ணீர் – அரை லிட்டர், சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு , பெருங்காயம் , மஞ்சள் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி – சிறிதளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் தாளித்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். இதில் சாம்பார் பொடியை போட்டு லேசாக வறுத்து, கூட்டு வடகத்தை அப்படியே சேர்க்கவும். வடகம் நன்கு வறுபட்டதும், புளித் தண்ணீரை விட்டு, உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
இதில், வேக வைத்த கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலையை சேர்த்தும் செய்யலாம் (வடகத்தை சேர்க்கும்போது சேர்க்கலாம்).


27 மல்டி கீரை குழம்பு

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, முள்ளங்கிக்கீரை, மணத்தக்காளிக்கீரை, முருங்கைக்கீரை, வேக வைத்த துவரம் பருப்பு – தலா ஒரு கப், நெய் – 2 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் – 1 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு, எண்ணெய், வெந்தயம், கடுகு, சீரகம், பெருங்காயம் – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:

கீரைகளை பொடியாக நறுக்கி, கழுவி, நெய் விட்டு வதக்கவும். புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து , அதில் மஞ்சள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, நறுக்கிய கீரைகளை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இதில் வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்க்கவும். குழம்பு வெந்ததும், எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம், வெந்தயத்தை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
துவரம்பருப்பிற்கு பதில் பாசி பருப்பையும் உபயோகப் படுத்தலாம்.


28 வேர்க்கடலை குழம்பு

தேவையானவை:

பச்சை வேர்க்கடலை – ஒரு கப், பெரிய தக்காளி-1 ,புளி – இரண்டு பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய், சாம்பார் பொடி – 3 டீஸ்பூன், கடுகு ,பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வேர்க்கடலையை அரை மணி நேரம் ஊற வைத்து வேக விடவும். வாணலியில் தக்காளியை சிறிது எண்ணெயில் வதக்கி, ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து ஊற்றவும். இதனுடன் உப்பு, சாம்பார் பொடி சேர்த்து, வேக வைத்த கடலையையும் சேர்த்து கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்து, குழம்பில் கொட்டி இறக்கவும்.


29 மாங்காய் வத்தல் குழம்பு

தேவையானவை:

மாங்காய் வத்தல் – 10 துண்டுகள், தக்காளி-1 , காய்ந்த மிளகாய் – 4, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு சிறிதளவு, மஞ்சள்,உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி- சிறிதளவு .

செய்முறை:

மாங்காய் வத்தலை சிறிதளவு தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் துவரம்பருப்பை எண்ணெய் விட்டு வறுக்கவும். இத்துடன் ஊற வைத்த மாங்காய் வத்தலையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். கடாயில் தக்காளியை வதக்கி, இந்தக் கலவையை சேர்த்து, அத்துடன் உப்பு , மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும், எண்ணெயில், கடுகு, பெருங்காயம்,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்குமுன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி மேலும் ஒரு கொத்தி வந்ததும் பரிமாறவும் .
புளி சேர்க்காமல் செய்யப்படும் குழம்பு இது. மாங்காய் சீஸனின்போது அதிகமாக வத்தல் போட்டு வைத்துக் கொண்டால் இப்படி சுலபமாய் செய்து அசத்தலாம்.


30 காய்கறி குழம்பு

தேவையானவை:

கேரட், தக்காளி, கத்தரிக்காய், குடமிளகாய், பச்சைமிளகாய் – தலா 1, சின்ன உருளைக் கிழங்கு , பீன்ஸ் – 6, பாசிப்பருப்பு – ஒரு கப், சாம்பார் பொடி, சோம்பு , போட்டுக் கடலை , தேங்காய் அரைத்த பொடி – 2 டீஸ்பூன், இஞ்சி – ஒரு சிறு துண்டு, புளித் தண்ணீர் – ஒரு கப், உப்பு , மஞ்சள் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரை கடாயில் விட்டு, சாம்பார் பொடி, சோம்பு பொடி ,உப்பு, மஞ்சள், நறுக்கிய காய்களைப் போட்டுக் கொதிக்க விடவும். காய் ஓரளவு வெந்ததும், வேக வைத்த பருப்பை இதனுடன் சேர்க்கவும். குழம்பு நன்கு வெந்ததும், கடுகு தாளித்து கொட்டி, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
காய்களை சிறிது எண்ணெயில் வதக்கியும் சேர்க்கலாம். இட்லிக்கு பொருத்தமாக இருக்கும் இந்தக் காய்கறி குழம்பு.
தேங்காய் தவிர்த்தும் .சோம்பு மசாலா பொடி தவிர்த்தும் இதை செய்யலாம்.


31 பஞ்சாபி மோர்க்கலவை

தேவையானவை: கடைந்த மோர் – 2 கப், கடலை மாவு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: புளிப்பான கடைந்த மோரில் கடலை மாவு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் தாளித்து… கடைந்த மோர் விட்டு கொதிக்க விடவும். அந்தக் கலவை கொஞ்சம் வற்றியதும் அடுப்பிலிருந்து இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

மோர் சிறிது புளிப்புடன் இருந்தால் நன்றாக இருக்கும்.


32 கீரை மிளகூட்டல்

தேவையானவை: முளைக் கீரை – ஒரு சிறிய கட்டு, சீரகம் – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு கப், தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கப், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கீரையைப் பொடியாக நறுக்கி வேகவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு… சீரகம், தேங்காய்த் துருவல், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, உப்பு சேர்த்து கீரையுடன் கலந்து, வேகவைத்த பருப்பையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, வாணலியில் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கீரையுடன் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இதனை சூடான சாதத்துடன் சேர்த்து நெய் விட்டு சாப்பிடலாம். இதே முறையில் எல்லா கீரையிலும் தயாரிக்கலாம்.


33 முருங்கைக்காய் மிளகூட்டல்

தேவையானவை: முருங்கைக்காய் – 6, தேங்காய் துருவல் – அரை கப், துவரம்பருப்பு – ஒரு கப், பச்சரிசி, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு, கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக விடவும். துவரம் பருப்பை தனியாக வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அரிசி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து, தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக அரைக்கவும். வேக வைத்த முருங்கைக்காய்களின் நடு சதைப்பகுதியை, ஒரு ஸ்பூனால் சுரண்டி எடுத்து தோலை நீக்கி விடவும். கடாயில் வேக வைத்த பருப்பு, முருங்கைக்காய் விழுது, அரைத்த தேங்காய் விழுதை (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்) சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும்.

முருங்கை மிளகூட்டலுக்கு , கத்திரிக்காய் துகையல் நன்றாய் இருக்கும் .


34 பிடிகருணை மசியல்

தேவையானவை: பிடிகருணைக்கிழங்கு – 200 கிராம், பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எலுமிச்சம்பழம் – ஒரு மூடி, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வெல்லம் – சிறிய துண்டு, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: பிடிகருணையை வேக வைத்து, தோல் உரித்து மசித்துக்கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, வெல்லத்தைப் பொடித்து சேர்த்து கொதிக்கவிடவும். இதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

***********************************

35 பாசிப்பருப்பு மசியல்

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், நறுக்கிய தக்காளி – கால் கப், பச்சை மிளகாய் – 3, காய்ந்த மிளகாய் – 2, புளி – 50 கிராம், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி… புளிக் கரைசல், உப்பு சேர்த்து கலக்கவும். அது கொதித்ததும், வேக வைத்து மசித்த பாசிப்பருப்பைப் போட்டு மீண்டும் ஒருமுறை கொதிக்க விடவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.


36 துவரம்பருப்பு மசியல்

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, புளி – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 2, கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பு, வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி, அதனை தாளிப்பில் சேர்க்கவும். அது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்து மசித்த துவரம்பருப்புக் கலவை, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வாசனை வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.


37 வெந்தய மசியல்

தேவையானவை: வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு கலவை – அரை கப், காய்ந்த மிளகாய் – 6, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, புளி – 50 கிராம், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகை பருப்புகள், வெந்தயம், பெருங்காயத்தூள் போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு, வறுத்தவற்றுடன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும். ஆவி போனதும் குக்கர் மூடியைத் திறந்து, கரைத்து வடிகட்டிய புளிக் கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு… கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி, பரிமாறவும்.




Scroll to Top