You cannot copy content of this page

பகுதி: 2 வித விதமான குழம்பு வகைகள் !

1 சுக்குப்பொடி குழம்பு

தேவையானவை:

சுக்குப்பொடி – கால் கப், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், புளி – 50 கிராம், தேங்காய்ப்பால் – கால் கப், கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். சுக்குப்பொடி போட்டு லேசாக வதக்கி, புளிக் கரைசலை விடவும். உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு… கெட்டியானதும், தேங்காய்ப்பால் விட்டுக் கலந்து இறக்கவும்.


2 கலவைக் கீரைக்குழம்பு

தேவையானவை:

முருங்கைக்கீரை, முளைக்கீரை, தூதுவளைக் கீரை – தலா ஒரு கைப்பிடி அளவு, துவரம்பருப்பு – 100 கிராம், புளி – எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி – இரண்டு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கீரைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கீரைகளை வதக்கிக்கொள்ளவும். வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி… சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். இதனுடன் வதக்கிய கீரையை சேர்த்துக் கிளறி, வேகவைத்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: கீரைகளை அடிக்கடி உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.


3 பொங்கல் பண்டிகைக் குழம்பு

தேவையானவை:

வேக வைத்த துவரம் பருப்பு – ஒரு கப், தக்காளி-2 , அவரைக்காய், பீன்ஸ் – தலா 6, சேனை – ஒரு துண்டு, வாழைக்காய் – பாதி, பரங்கிக்காய் துண்டு, பூசணிக்காய் துண்டு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கத்தரிக்காய் – தலா 1, கேரட் – 2, நெய் விட்டு வறுத்த தேங்காய் துண்டுகள், கொண்டைக்கடலை (இரவே ஊற வைக்கவும்) – தலா ஒரு கப், தனியா – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, வறுத்த தேங்காய் துருவல் – சிறிதளவு, உப்பு , மஞ்சள், பெருங்காயம் – தேவையான அளவு. வெல்லம் – ஒரு சிறுதுண்டு, புளி – நெல்லிக் காய் அளவு, சாம்பார் பொடி – 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

எல்லா காய்களையும் நறுக்கி, தனித்தனியாக மஞ்சள்,உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். தனியா, கடலைப்பருப்பு, பெருங்காயம், 2 காய்ந்த மிளகாயை, எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய் துண்டுகள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, தக்காளியை வதக்கி, மஞ்சள், சாம்பார் பொடி மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கை சேர்த்து அடுப்பில் வைக்கவும். குழம்பு கொதிக்கும்போது, வேக வைத்த மற்ற எல்லா காய்களையும் சேர்த்து விடவும். அரைத்த தேங்காய் விழுதையும் வெந்த பருப்பையும் சேர்த்துக் கலந்து குழம்பில் விடவும். வறுத்த தேங்காய் துருவல், கொண்டைக்கடலையைப் போட்டு, வெல்லத்தையும், தேவைப்பட்டால் உப்பையும் போட்டு இறக்கவும்.

பொங்கல் அன்று செய்யக்கூடிய தனிக் குழம்பு இது. பொங்கலுக்கு நன்றாக இருக்கும்.


4 வெந்தயக்கீரை குழம்பு.

தேவையானவை:

வெந்தயக்கீரை – ஒரு கப், தக்காளி-1 ,புளி – நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், உப்பு, மஞ்சள், பெருங்காயம் – தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு – அரை கப், கடுகு, சீரகம்,வெந்தயம் – சிறிதளவு.

செய்முறை:

வெந்தயக்கீரையை எண்ணெய் விட்டு வதக்கவும். ஒரு பாத்திரத்தில் தக்காளியை சற்று எண்ணெயில் வதக்கி , புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மஞ்சள், சாம்பார் பொடி மற்றும் வதக்கிய வெந்தயக்கீரை சேர்த்து, கொதிக்க வைக்கவும். இதில் வேக வைத்த பருப்பையும் சேர்த்துக் கலக்கவும். குழம்பு வெந்ததும் எண்ணெயில் கடுகு, சீராக, பெருங்காயம் வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

கறிவேப்பிலை கொஞ்சம் தாளிக்கும் போது சேர்த்துக்கொண்டால் வாசனையாக இருக்கும் இந்த வெந்தயக்கீரை குழம்பு.


5 தேங்காய்ப்பால் குழம்பு

தேவையானவை:

தேங்காய் துருவல் – அரை கப், மிளகு – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – கால் கப், கீறிய பச்சை மிளகாய் – 2, புளி, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

தேங்காய் துருவலை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, முதல் பால், இரண்டாம் பால் என எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில், தேங்காய் எண்ணெய் விட்டு மிளகு, கீறிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும். வேக வைத்த கடலைப்பருப்பு, புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, இரண்டாம் தேங்காய்ப்பாலை விடவும். அது, கொதித்து கெட்டியாக வந்ததும் முதல் தேங்காய்ப்பாலை விட்டு, உடனே இறக்கி விடவும். கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.


6 தேங்காய்ப் பால் சொதிக்குழம்பு

தேவையானவை:

பீன்ஸ் – 10, கேரட் – 1, குடமிளகாய் – 1, தேங்காய்ப் பால் – கால் கப், சிறிய பச்சைமிளகாய் – 1, கடுகு , சீரகம் , மஞ்சள் – கால் டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

காய்களை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து, நறுக்கிய காய்களைப் போட்டு வதக்கவும். இதில் உப்பு, மஞ்சள் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். காய்கள் வெந்ததும் தேங்காய்ப் பால் விட்டு இறக்கவும்.

விருப்பப் பட்டால் பொடியாக நறுக்கிய தக்காளியை தாளிக்கும்போது சேர்த்து வதக்கியும் செய்யலாம்.

தோசை, ஆப்பம், இடியாப்பத்துக்கு இந்த தேங்காய்ப் பால் சொதி நன்றாக இருக்கும்!


7 மாங்காய் வற்றல் குழம்பு

தேவையானவை:

உலர்ந்த மாங்காய் வற்றல் – பத்து (சிறியது), புளி – சிறிய எலுமிச்சைப் பழ அளவு, துவரம்பருப்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – இரண்டு, கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மாங்காய் வற்றலை சுடுநீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், துவரம்பருப்பை வறுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு, புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இந்த விழுதுடன் உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்து, வாணலியில் ஊற்றி, மாங்காய் வற்றலையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: புளி அதிகம் தேவை இல்லை. பல நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம்.


8 பத்தியக் குழம்பு

தேவையானவை:

சுண்டைக்காய் வற்றல் – 10, புளி – எலுமிச்சை அளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், கடுகு,வெந்தயம், துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சுண்டைக்காய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: காய்ச்சலால் அவதிப்பட்டு மீண்டவர்களுக்கு இந்தக் குழம்பை சாப்பிடக் கொடுக்கலாம். வாய்க்கசப்பு, வயிற்றுப் புண் நீங்க உதவும்.


9 தாளகக் குழம்பு

தேவையானவை:

பீன்ஸ் – 10, பறங்கிக்காய் – ஒரு கீற்று, கேரட் – ஒன்று, புளி – நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எள், கடலைப்பருப்பு, அரிசி, உளுத்தம்பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கப், கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெறும் வாணலியில் எள்ளை வறுத்துக்கொள்ளவும். அரிசி, உளுத்தம்பருப்பையும் வறுத்துக்கொள்ளவும். மூன்றையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அதே வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியாவை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். காய்களை நறுக்க வும். தேங்காய்த் துருவலை வறுத்துக் கொள்ளவும்.

புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து, காய்களையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். பொடித்து வைத்துள்ள வற்றை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து, வறுத்த தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.


10 முருங்கைக்காய் பொரித்த குழம்பு

தேவையானவை:

முருங்கைக் காய் – 6, துவரம்பருப்பு – ஒரு கப், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முருங்கைக்காயை வேகவைத்து சதைப் பகுதியை சுரண்டி எடுத்துக்கொள்ளவும். துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறி தளவு எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்து… தேங்காய்த் துருவல் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனை முருங்கைக்காய் விழு துடன் சேர்த்து, வாணலியில் ஊற்றி வேகவைத்த பருப்பு, உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். எண்ணெ யில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து இறக்கவும்.


11 பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை – உருண்டைக்கு: துவரம்பருப்பு – அரை கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

குழம்புக்கு: புளி – 50 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை

உருண்டை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து அந்த மாவில் கொட்டி பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக செய்துகொள்ளவும்.

குழம்பு: 2 கப் தண்ணீரில் புளியைக் கரைத்து வடிகட்டி… அதில் சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயத்தூள், வெல்லம் போட்டு அடிகனமான காடாயில் விட்டு, அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், உருண்டைகளை அதில் ஒவ்வொன்றாகப் போடவும். அவை வெந்து மேலே வந்ததும்… அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொதிக்க விடவும். அவ்வப்போது கிளறிக் கொண்டே இருந்தால், உருண்டைக்குள் உப்பு- காரம்-புளிப்பு சேர்ந்து சுவையாக இருக்கும். குழம்பு கெட்டியானதும் அடுப்பில்இருந்து இறக்கவும்.


12 பச்சைப்பயறு குழம்பு

தேவையானவை: பச்சைப்பயறு – அரை கப், பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, புளி – சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பச்சைப்பயறை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். ஒரு கப் நீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். பச்சை மிளகாய், சீரகம், காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில், எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, புளிக் கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விட்டு, ஒன்றிரண்டாக மசித்த பயறைச் சேர்த்துக் கலக்கவும். வாசனை வந்தவுடன், அரைத்த கலவை, பெருங்காயத்தூள் போட்டுக் கொதிக்க வைத்து இறக்கவும்.


13 மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் – அரை கப், புளி – 50 கிராம், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். மணத்தக்காளி வற்றலை போட்டு, நன்றாகப் பொரிந்ததும்… சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, புளிக் கரைசலை விட்டு, பொடித்த வெல்லம், உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், கறிவேப்பிலையைப் போட்டு இறக்கவும்.

குழம்பு தண்ணியாக இருந்தால், சிறிதளவு அரிசி மாவையோ அல்லது கடலை மாவையோ கரைத்து விட்டுக் கொதிக்க விடவும்.


14 பாகற்காய் வற்றல் பொரிச்ச குழம்பு

தேவையானவை: பாகற்காய் வற்றல் – அரை கப், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு, மிளகு, எள் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5.

செய்முறை:

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வறுத்து… ஆற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு பாகற்காய் வற்றலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அதே எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, புளிக் கரைசல், மஞ்சள்தூள், பொடித்த வெல்லம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்தெடுத்த பாகற்காய், அரைத்த கலவை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.


15 சுண்டைக்காய் காரக்குழம்பு

தேவையானவை: பச்சை சுண்டைக்காய் – 100 கிராம், சாம்பார் பொடி – 3 டேபிள்ஸ்பூன், தக்காளி-3 , புளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவு, உப்பு, மஞ்சள் , பெருங்காயம் – தேவையான அளவு, கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம், துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ௧, கறி வேப்பிலை , கொத்தமல்லி – தேவையான அளவு .

செய்முறை:

பச்சை சுண்டைக்காயை காம்பு நீக்கி நசுக்கி, எண்ணெயில் வதக்கவும். இதில் தக்காளியை போட்டு வதக்கி, புளியைக் கரைத்து விட்டு, உப்பு , மஞ்சள் சேர்த்துக் கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயம், துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். இதனைக் கொதிக்கும் குழம்பில் போட்டு, சுண்டைக்காய், புளி கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

சற்று கடலை அல்லது அரிசி மாவை கரைத்து விட்டால் சாம்பார் திக்காக திரண்டு இருக்கும்.


16 கத்திரி வற்றல் குழம்பு

தேவையானவை:

கத்திரி வற்றல் – கால் கப், துவரம்பருப்பு – அரை கப், புளி – 50 கிராம், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

தண்ணீரில் கத்திரி வற்றலை அரை மணி நேரம் ஊற விடவும். குக்கரில், துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். கடாயில், எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து… புளிக் கரைசல், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு போட்டுக் கலந்து கொள்ளவும். கொதித்தவுடன், கத்தரி வற்றல், சேர்த்து வேக விடவும். வாசனை வந்ததும், வேக வைத்துள்ள துவரம்பருப்பு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கவும்.


17 பருப்பு உருண்டை மோர்க்குழம்பு

தேவையானவை

உருண்டைக்கு: துவரம்பருப்பு – அரை கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

குழம்புக்கு: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – ஒரு துண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, கடைந்த மோர் – ஒரு கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை

உருண்டை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து அந்த மாவில் கொட்டி பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

குழம்பு: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும், தயாராக இருக்கும் உருண்டைகளை அதில் போடவும். அவை வெந்ததும் மேலே வரும். பின்னர், அரைத்து வைத்திருக்கும் துவரம்பருப்புக் கலவையை சேர்த்து… அடிபிடிக்காமல் கொதிக்க விடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து கொட்டவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். மோரில் தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, உருண்டைகள் கொதித்துக் கொண்டிருக்கும் பாத்திரத்தில் கொட்டி கலந்து பரிமாறவும்.


18 மாந்தோல் குழம்பு

தேவையானவை:

மாங்காய்த் தோல் (உப்பு போட்டு ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்தது) – கால் கப், புளி – சிறிதளவு, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன். கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கொதிக்கும் நீரில் மாங்காய்த் தோலை போட்டு அரை மணி நேரம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, மிளகு போட்டு வறுத்து… அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி, அதில் உப்பு, பெருங்காயத்தூள் போட்டுக் கொதிக்க விடவும். பிறகு, ஊற வைத்த மாங்காய்த் தோல், பொடித்த வெல்லம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, அரைத்த கலவையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலைத் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.


19 சுண்டைக்காய் வற்றல் குழம்பு

தேவையானவை:

சுண்டைக்காய் வற்றல் – கால் கப், தனியா – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு மூன்றையும் வறுத்து… அதனுடன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சுண்டைக்காய் வற்றலை போட்டு வறுக்கவும். புளிக் கரைசலை விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, பொடித்த வெல்லம் போட்டுக் கொதிக்க விடவும். பிறகு, அரைத்த கலவையை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.


20 மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையானவை:

மணத்தக்காளி வற்றல் – 4 டீஸ்பூன், புளி – எலுமிச்சைப் பழ அளவு, வெந்தயம், கடலைப்பருப்பு, கடுகு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 50 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

புளியை 200 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வெந்தயம் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். பிறகு, மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு… கறிவேப்பிலை தூவி இறக்கவும்.


21 பக்கோடா குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு – அரை கப், புளி – 50 கிராம், சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு, மஞ்சள் தூள் – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு. எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

பக்கோடாவுக்கு:

கடலைப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பக்கோடாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றாகச் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து… புளிக் கரைசல், சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த துவரம்பருப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் போட்டு நன்கு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களைப் போட்டு ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கவும்.


22 சேனைக்கிழங்கு இருபுளிக் குழம்பு

தேவையானவை:

புளித்த மோர் – ஒரு கப், நறுக்கிய சேனைக்கிழங்கு – ஒரு சிறிய கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பச்சை மிளகாய் – ஒன்று, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

சேனையை துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு… உளுத்தம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு… அரைத்து வைத்த விழுது, வேகவைத்த சேனைக்கிழங்கு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். மோரில் அரிசி மாவைக் கரைத்து குழம்பில் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

குறிப்பு: மோர், புளி இரண்டும் சேர்வதுதான் இருபுளி குழம்பு. இருவிதமான புளிச்சுவையுடன் வித்தியாசமான ருசியில் இருக்கும்.


23 இரு புளிக் குழம்பு

தேவையானவை:

புளித்த மோர் – ஒரு கப், புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு,எண்ணெய், பெருங்காயம், அரிசி மாவு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பச்சைமிளகாய் – 1, மஞ்சள்தூள் , பெருங்காயம் – ஒரு சிட்டிகை, சேனைக்கிழங்கு – ஒரு சிறு துண்டு, உப்பு – தேவையான அளவு, தேங்காய் துருவல் – அரை கப், கொத்த மல்லி, கறி வேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயத்தை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். சேனைக்கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக விடவும். புளியைக் கரைத்து சாம்பார் பொடி, உப்பு போட்டுக் கலக்கி, இதனுடன் அரைத்த விழுது மற்றும் வேக வைத்த சேனைக்கிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும். குழம்பு நன்கு கொதித்ததும், மோருடன் அரிசிமாவு சேர்த்துக் கரைத்து விட்டு, ஒரு கொதி வரும்போது கொத்து மல்லி , கறிவேப்பிலை தூவி இறக்கவும்.


24 மொச்சை மசாலா குழம்பு

தேவையானவை:

மொச்சைப்பருப்பு – ஒரு கப், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி – 3 டீஸ்பூன், தேங்காய்ப் பால் – அரை கப், உப்பு – தேவையான அளவு, புளி – நெல்லிக்காய் அளவு (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், கடுகு, வெந்தயம்,சீரகம், பெருங்காயம் – தலா ஒரு டீஸ்பூன். கறிவேப்பிலை , கொத்து மல்லி -தேவையான அளவு.

செய்முறை:

புளிக் கரைசலுடன் சாம்பார் பொடி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து மொச்சையைப் போட்டு கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்ததும், வேக வைத்த துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து, தேங்காய்ப் பாலை விடவும். குழம்பு வெந்ததும், எண்ணெயில் கடுகு, வெந்தயம் முதலியவற்றி தாளித்துக் கொட்டி கே.வேப்பிலை, கொ.மல்லி தூவி பரிமாறவும்.


25 மல்டி வெஜிடபிள் குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு – ஒரு கப், குடமிளகாய், கேரட், முருங்கைக் காய், உருளைக் கிழங்கு – தலா 1, பீன்ஸ் – 10, அவரைக்காய் – 6, பரங்கி, பூசணி – தலா ஒரு துண்டு (சிறியது), புளி – எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், மசாலாத் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறி வேப் பிலை, எண்ணெய் – சிறிதளவு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல், கடுகு, தனியா, கடலைப்பருப்பு,பச்சரிசி – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2.

செய்முறை:

தேங்காய் துருவல், தனியா, கடலைப்பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். குடமிளகாய், கேரட், பீன்ஸ், அவரைக்காய், உருளைக்கிழங்கைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக்காயை விரல் அளவுக்கு நறுக்கவும். பரங்கி, பூசணியை தோல் சீவி நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கி கழுவிய எல்லா காய்களையும் போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும், புளியைக் கரைத்து விட்டு, சாம்பார் பொடி, உப்பு மற்றும் மசாலாத்தூள் போட்டு கலக்கி, கொதிக்க விடவும். இதில், வறுத்து அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் வெந்த பருப்பு இரண்டையும் கரைத்து சேர்த்துக் கலக்கவும். குழம்பு நன்கு வெந்ததும், எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

இதற்கு உருளைக் கிழங்கு வறுவல் பிரமாதமாய் இருக்கும்


26 மணத்தக்காளி -அப்பளக் குழம்பு

தேவையானவை:

மணத்தக்காளி வத்தல் – ஒரு கப், சிறிய உளுந்து அப்பளம் – கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, 4 கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு , சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன் அல்லது தேவைகேற்ப , புளி – நெல்லிக்காய் அளவு (சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), சாம்பார் பொடி – 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு கப் அல்லது தேவையான அளவு .

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், மஞ்சள், வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும்.

இத்துடன் மணத்தக்காளி வத்தல் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து புரட்டவும். இதில் புளித் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.

கறிவேப்பிலை, கொத்த மல்லி வதக்கியோ, பச்சையாகவோ (அவரவர் விருப்பப் படி) சேர்க்கவும்.

இறுதியில், அப்பளத்தை சிறு துண்டுகளாக வறுத்து குழம்பு கொத்தித்ததும் அதில் போட்டு கலக்கவும்.

அப்பளத்தை வத்தலோடு வறுத்தும் செய்யலாம். ஆனால் அதை விட , இறுதியில் சேர்ப்பது நன்றாக இருக்கும்.

வாய்ப் புண், வயிற்றுப் புண் இருந்தால் இந்த மணத்தக்காளி குழம்பு அவற்றை குணப்படுத்தும்.


27 அப்பளக் குழம்பு

தேவையானவை:

புளி – எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், அப்பளம் – 2, கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, அப்பளத்தை ஒன்று இரண்டாக உடைத்துப்போட்டு, சாம்பார் பொடியை சேர்த்து வறுக்கவும். பிறகு, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

காய்கறிகள் கைவசம் இல்லாத சமயத்தில், இந்தக் குழம்பு கை கொடுக்கும்.


27 பொன்னாங்கண்ணி- காராமணி குழம்பு

தேவையானவை:

உருவிய பொன்னாங்கண்ணிக் கீரை – ஒரு கப், சிவப்பு காராமணி, துவரம்பருப்பு – தலா அரை கப், தக்காளி- 2 , புளி – நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 3 டீஸ்பூன், மஞ்சள்,உப்பு,பெருங்காயம் – தேவையான அளவு, கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – சிறிதளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை:

பொன்னாங்கண்ணிக் கீரையை நன்றாகக் கழுவவும். சிவப்பு காராமணியை வறுத்து, ஊற வைக்கவும். புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைக்கவும். இதனுடன் தக்காளியை வதக்கி, சாம்பார் பொடி, உப்பு, மற்றும் ஊற வைத்த காராமணியை சேர்த்துக் கொதிக்க விடவும். கீரையை சிறிது எண்ணெயில் வதக்கி, கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். இறுதியாக, துவரம் பருப்பை வேக வைத்து குழம்பில் சேர்த்து கடுகு, வெந்தயம் தாளித்து இறக்கவும்.


28 குணுக்கு மோர்க்குழம்பு

தேவையானவை:

உளுத்தம்பருப்பு – 2 கப், காய்ந்த மிளகாய் – 2, மிளகு – 10, இஞ்சி – ஒரு சிறு துண்டு, எண்ணெய் – கால் கிலோ, உப்பு, மஞ்சள், பெருங்காயம் – தேவையான அளவு, கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெந்தயம் – சிறிதளவு.

மோர்க்குழம்புக்கு:

மோர் – 2 கப், காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு கப், எண்ணெய், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஊற வைத்து தண்ணீரை வடித்து விடவும். இதனுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, மிளகு, உப்பு , மஞ்சள், பெருங்காயம் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சிறிது சிறிதாக மாவைக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

எண்ணெய், மோர் நீங்கலாக மோர்க்குழம்புக்கு கொடுத்துள்ளவற்றை வறுத்து அரைக்கவும். இதை, மோருடன் கலந்து உப்பு சேர்த்து பொரித்த குணுக்குகளைப் போட்டு லேசாக சூடாக்கி இறக்கவும். மோரை கொதிக்க வைக்கக் கூடாது. இதில், கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்துக் கொட்டவும்.


29 அவரை துவரை குழம்பு

தேவையானவை:

அவரைக்காய், தோலுரித்த துவரைக்காய் – தலா 100 கிராம், வேக வைத்த துவரம் பருப்பு – தலா ஒரு கப், தக்காளி- 3, புளி – 1 எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், உப்பு, மஞ்சள், பெருங்காயம் – தேவையான அளவு, பச்சைமிளகாய் – 1, கடுகு, சீரகம்,வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

அவரைக்காய், துவரைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தக்காளியை வதக்கி, புளியைக் கரைத்து விட்டு, சாம்பார் பொடி, உப்பு , மஞ்சள் சேர்த்து அவரைக்காய், துவரைக்காயைப் போட்டு கொதிக்க விடவும். காய் வெந்ததும், வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து, பச்சைமிளகாயைக் கிள்ளிப் போடவும். எண்ணெயில் கடுகு, சீரகம்,வெந்தயம் , பெருங்காயம் தாளித்து, குழம்பில் கொட்டி கொதிக்க விட்டு இறக்கவும்.

பச்சை துவரையில் செய்வதால் மணமும் ருசியும் வெகு நன்றாக இருக்கும் .


30 பறங்கிக்காய் காரக்குழம்பு

தேவையானவை:

பறங்கிக்காய் – ஒரு சிறிய கீற்று (துண்டுகளாக நறுக்கவும்), புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து வறுத்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து, பறங்கித் துண்டுகளையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.


31 கூட்டு வடகக் குழம்பு

தேவையானவை:

கூட்டு வடகம் – 15, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், புளி – ஒரு சிறிய எலுமிச்சைப் பழ அளவு, கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்த யம், கடலைப்பருப்பு தாளித்து… கூட்டு வடகத்தைப் போட்டு வறுத்து, சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.


32 முளைகட்டிய காராமணி குழம்பு

தேவையானவை:

முளைகட்டிய காராமணி – 100 கிராம், துவரம்பருப்பு – 100 கிராம் (வேகவைக்கவும்), சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், புளி – எலுமிச்சைப் பழ அளவு, கடுகு, வெந்தயம், எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி… உப்பு, சாம்பார் பொடி போட்டு, முளைகட்டிய காராமணி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இதே முறையில் மற்ற முளைகட்டிய பயறு வகைகளிலும் குழம்பு தயாரிக்கலாம்.


33 கத்தரிக்காய் ரஸவங்கி குழம்பு

தேவையானவை:

வேக வைத்த பாசிப்பருப்பு – ஒரு கப், கத்தரிக்காய் – கால் கிலோ, வெல்லம் – ஒரு சிறு துண்டு, தனியா – 2 டீஸ்பூன், சாம்பார் பொடி, கடலைப்பருப்பு, கச கசா, உடைத்த முந்திரிப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் , பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல் – அரை கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, சீரகம்,உளுத்தம்பருப்பு , பட்டை , லவங்கம்,– தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பெருங்காயம், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை:

கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் புளியைக் கரைத்து விட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். எண்ணெயில் தனியா, கடலைப்பருப்பு, மிளகாயை வறுத்து, தேங்காய் துருவலையும் , கசகசா மற்றும் முந்திரியையும் சேர்த்து அரைக்கவும். கொதிக்கும் குழம்பில் சாம்பார் பொடி, வறுத்து அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, வேக வைத்த பருப்பையும் போட்டு, கொதிக்க விட்டு இறக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு , பட்டை , லவங்கம் , பெருங்காயம் தாளித்து, குழம்பில் கொட்டி, வெல்லத்தை நசுக்கிப் போட்டுக் கலக்கவும்.

முந்திரி சேர்ப்பதால் கடலை பருப்பை தவிர்த்து போட்டுக் கடலையை உபயோகப் படுத்தினால் இன்னமும் நன்றாக இருக்கும்.

இட்லி, தோசைக்கு ஏற்ற காம்பினேஷன் இது.


34 நூல்கோல் சிறுகிழங்கு குழம்பு

தேவையானவை:

வேக வைத்த துவரம் பருப்பு – ஒரு கப், நூல்கோல் – 1, சிறுகிழங்கு – 10, சாம்பார் பொடி – 3 டீஸ்பூன், தக்காளி-3 , புளி – 1 நெல்லிக்காய் அளவு, எண்ணெய், உப்பு , மஞ்சள், பெருங்காயம் – தேவையான அளவு, கடுகு, சீரகம் , வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:

நூல்கோல், சிறுகிழங்கை தோல் சீவி வேக விடவும். ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளியை வதக்கி, புளியைக் கரைத்து விட்டு, சாம்பார் பொடி, மஞ்சள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வேக வைத்த சிறுகிழங்கு, நூல்கோலை நறுக்கிப் போட்டு, வெந்த பருப்பையும் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம்,பெருங்காயம், வெந்தயம் தாளித்துக் கொட்டவும்.

மிகவும் அரிதாக கிடைக்கும் இந்த சிறு கிழங்கை, பொரியல், கூட்டு, அவியல் எல்லாவற்றிலும் சேர்த்து செய்யலாம்.


35 மொச்சைக் குழம்பு

தேவையானவை:

காய்ந்த மொச்சை – அரை கப், புளி – 50 கிராம், சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதல் நாள் இரவே மொச்சையை ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து… வேக வைத்த மொச்சையில் பாதியளவு சேர்க்கவும். பிறகு, புளியை ஊற வைத்துக் கரைத்து, அதில் சாம்பார் பொடி, உப்பு போட்டு மொச்சையுடன் சேர்த்து, நன்கு கலந்து கொதிக்க விடவும். மீதியிருக்கும் மொச்சையுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக நன்கு கலந்து கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இதனை சாதத்துடன் சாப்பிடலாம். தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.


36 கசகசா மசாலா குழம்பு

தேவையானவை:

கசகசா, துவரம்பருப்பு – தலா கால் கப், காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1, புளி – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பை குழைய வேக விடவும். கடாயில், எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். ஆற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில், புளிக் கரைசலை விட்டுக் கொதித்ததும்… வேக வைத்த துவரம்பருப்பு, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, அரைத்த கலவையை சேர்த்துக் கொதிக்க விட்டு, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


37 பாகற்காய் வற்றல் குழம்பு

தேவையானவை:

பாகற்காய் வற்றல் – அரை கப், புளி – 50 கிராம், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5.

செய்முறை:

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்து… ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு பாகற்காய் வற்றலை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் இருக்கும் அதே எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், வறுத்த பாகற்காய், அரைத்த கலவை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் வெல்லம் சேர்த்து இறக்கவும்.


38 காராமணி குழம்பு

தேவையானவை:

காராமணி, தேங்காய்ப்பால் – தலா கால் கப், புளி – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 5, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – கால் கப், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதல் நாள் இரவே காராமணியை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் போட்டு வறுத்து ஆற வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். அதனுடன் வேக வைத்து, ஆற வைத்த காராமணி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு சுற்று அரைத்து, புளிக்கரைசலுடன் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும்.


39 பாகற்காய் பிட்ளை குழம்பு

தேவையானவை:

மிதி பாகற்காய் – ஒரு கைப்பிடி (அ) பெரிய பாகற்காய் – 1, தேங்காய் துருவல் – அரை கப், காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள், உளுத்தம் பருப்பு , மிளகு, சீரகம், பச்சரிசி, தனியா – தலா ஒரு டீஸ்பூன், புளித் தண்ணீர் – ஒரு கப், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், துவரம் பருப்பு – ஒரு கப், கடலை பருப்பு -1/2 கப் , உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் ,எண்ணெய் – தலா ஒரு ஸ்பூன்.

செய்முறை:

கடலை மற்றும் துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பச்சரிசி, தனியா, உ.பருப்பை தனியாக எண்ணெய் விட்டு மஞ்சளுடன் வறுத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து, வேக வைத்த பருப்புடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் வதக்கவும். இதில் புளித் தண்ணீரை விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இத்துடன் ஏற்கெனவே கலந்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும். வெந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் ,கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.


40 சோயா உருண்டை துமட்டிக்காய் குழம்பு

தேவையானவை:

சோயா உருண்டை – 10 (சுடு தண்ணீரில் போட்டு வேகவிட்டு, பிழிந்து கொள்ளவும்), துமட்டிக்காய் வத்தல் – 25 கிராம், காய்ந்த மிளகாய் – 2, வெந்தயம், கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி-2, கடுகு , சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு,மஞ்சள் – தேவையான அளவு, புளித் தண்ணீர் – 2 கப், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, . பின்பு துமட்டிக்காய் வத்தல், சோயா உருண்டையை சேர்த்து வறுக்கவும். பின்பு தக்காளியை போட்டு வதக்கவும். இதில் சாம்பார் பொடி போட்டு வறுத்து, புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதி வந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டி இறக்கவும்


41 சிவப்பு பரங்கி குழம்பு

தேவையானவை:

சிவப்பு பரங்கி துண்டு – 1, துவரம் பருப்பு, தேங்காய் துருவல் – தலா அரை கப், கடலைப்பருப்பு, தனியா – தலா கால் டீஸ்பூன், தக்காளி-3 , காய்ந்த மிளகாய் – 3, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், புளி – ஒரு எலுமிச்சை அளவு, உப்பு, மஞ்சள், பெருங்காயம் – தேவையான அளவு.

செய்முறை:

பரங்கிக்காயை நறுக்கிக் கொள்ளவும். சிவப்பு பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய்த் துருவலை வறுத்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியை தண்ணீர் விட்டு கரைத்து,தக்காளியை நறுக்கி அதில் போட்டு வதக்கி, சாம்பார் பொடி, உப்பு , மஞ்சள் சேர்த்து பரங்கிக்காயைப் போட்டு கொதிக்க விடவும். இதில் வறுத்து அரைத்த பொடி, வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்த்து இறக்கவும்.

கடுகு, சீரகம், கறி வேப்பிலை தலித்துக் கொட்டினால் மனம் தூக்கலாக இருக்கும்.

லேசான இனிப்புடன் அருமையாக இருக்கும் இந்தக் குழம்பு.


Scroll to Top