You cannot copy content of this page

கபிலரகவல்

KABILAR AKAVAL
கபிலரகவல்

திருச்சிற்றம்பலம்
சர்வஞ்சின்மயம்.

ஓம்

கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

பெண்பானால்வரும், ஆண்பாண் மூவருமாகிய ஏழுபிள்ளைகளையும்
பிறந்தவிடங்களிலே வைத்துவிட்டு ஆதியும் பகவனும் அப்புறம்
போகும்போது ஆதியானவள் அப்பிள்ளைகளைநோக்கி இந்தப்
பிள்ளைகளை யாவர் காப்பாற்றுவாரென்று இரங்கிக் காலெழாது நிற்க
அப்போது அவள் மனவருத்தம் தீரும்படி அக்குழந்தைகள் கடவுளருளினாலே
உண்மை தெரிந்துசொல்லிய பாடல்கள்.

வெண்பா

உப்பை

கண்ணுழையாக் காட்டிற்கடுமுண்மரத்துக்கும்
உண்ணும்படி தண்ணீரூட்டுவார் – எண்ணும்
நமக்கும்படி யளப்பார் நாரியோர்பாகர்
தமக்குந்தொழிலேதுதான். (1)

ஔவை

எவ்வுயிருங்காப்பதற்கோ ரீசனுண்டோவில்லையோ
அவ்வுயிரில்யானுமொன்றிங் கல்லேனோ – வவ்வி
அருகுவது கொண்டிங்கலைவானேனன்னாய்
வருகுவதுதானே வரும். (2)

உறுவை

சண்டப்பைக் குள்ளுயிர்தன் றாயருந்தத்தானருந்தும்
அண்டத்துயிர்பிழைப்ப தாச்சரியம் – மண்டி
அலைகின்றவன்னா யரனிடத்துலுண்மை
நிலைகண்டு நீயறிந்துநில். (3)

வள்ளி

அன்னைவயிற்றி வருத்திவளர்த்தவன்றான்
இன்னம்வளர்க்கானோ வென்றாயே – மின்னரவம்
சூடும்பெருமான் சுருதிமுடிவிரிருந்
தாடும்பெருமானவன். (4)

அதிகமான்

இட்டமுடனென்றலையி லின்னவகையென்றெழுதி
விட்டசிவனுஞ்செத்து விட்டானோ
முட்டமுட்டப்பஞ்சமேயானாலும் பாரமவனுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நி. (5)

திருவள்ளுவர்

கருப்பையுண்முட்டைக்குங் கல்லினுட்டேரைக்கும்
விருப்புற்றமுதளிக்கு மெய்யன் – உருப்பெற்றால்
ஊட்டிவளர்க்கானோ வோகெடுவாயன்னாய்கேள்
வாட்டமுனக்கேன்மகிழ். (6)

கபிலர்

கெர்ப்பமுதலின்றளவங் கேடுவாராமற்காத்
தப்புடனே யன்னமளித்திட்டோன் – தப்பித்துப்
போனானோகண்டுயிலப்புக்கானோ நின்மனம்போல்
ஆனானோவன்னாயறை (7)

முற்றிற்று
திருச்சிற்றம்பலம்
சர்வம் சிவமயம்

கபிலதேவர் அருளிச் செய்த
கபிலரகவல்
ஓம்
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

கபிலரகவல்
நான்முகன் படைத்த நானா வகையுலகில்
ஆன்றசிறப்பி னரும்பொருள் கூறுங்கால்
ஆண்முதிதோ? பெண்முதிதோ? வன்றியலிமுதிதோ
நாண்முதிதோ? கோண்முதிதோ? நல்வினைமுதிதோ?
தீவினைமுதிதோ?
செல்வஞ்சிறப்போ? கல்விசிறப்போ? அல்லதுலகின்
அறிவுசிறப்போ? 5
தொல்லைமாஞாலந் தோற்றமோ? படைப்போ?
எல்லாப்பிறப்பு மியற்கையோ? செயற்கையோ?
காலத்தாற்சாவரோ? பொய்ச் சாவு சாவரோ?
நஞ்சுறுதீவினை துஞ்சுமோ துஞ்சாதோ
துஞ்சும்போதந்தப் பஞ்சேந்திரியம் 10
என்செயா நிற்குமோ? எவ்விடத்தேகுமோ?
ஆற்றலுடையீர் அருந்தவம் புரிந்தால்
வேற்றுடம்பாகுமோ? தமதுடம்பாகுமோ?
உண்டியை யுண்குவது உடலோ? உயிரோ?
கண்டின் புறுவது கண்னணோ கருத்தோ? 15
உலகத்தீரே யுலகத்தீரே !
நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்து
சாற்றக்கேண்மின் சாற்றக்கேண்மின்
மனிதர்க்கு வயது நூறல்லதில்லை
ஐம்பது இரவில் அகலும் துயிலினால் 20
ஒட்டிய இளைமையால் ஓரைந்து நீங்கும்
ஆக்கை யிளமையி ல் ஐம்மூன்று நீங்கும்
எழுபது போகநீக்கி இருப்பனமுப்பதே
(அவற்றுள்) இன்புறுநாளும் சிலவே அதாஅன்று
துன்புறுநாளுஞ் சிலவேயாதலால் 25
பெருக்காறு ஒத்தது செல்வம்பெருக்காற்று
இடிகரையொத்தது இளமை இடிகரை
வாழ்மரம் ஒத்தது வாழ்நாள் ஆதலால்
ஒன்றேசெய்யவும் வேண்டும் அவ்வொன்றும்
நன்றேசெய்யவும் வேண்டும் அந்நன்றும் 30
இன்றேசெய்யவும் வேண்டும் அவ்வின்றும்
இன்னேசெய்யவும் வேண்டும் அவ்வின்னும்
நாளைநாளை யென்பீ ராகில்
நம்னுடை முறைநாள் ஆவதுமறியீர்
நமமுடை முறைநாள் ஆவதுமறியீர் 35
எப்போது ஆயினுங் கூற்றுவன் வருவான்
அப்போது அந்தக் கூற்றுவன் தன்னைப்
போற்றவும் போகான் பொருளொடும் போகான்
சாற்றவும் போகான் தமரொடும் போகான்
நல்லா ரென்னான் நல்குரவறியான் 40
தீயார் என்னான் செல்வரென்று உன்னான்
தரியான் ஒருகணந் தறுகணாளன்
உயிர் கொடுபோவான் உடல்கொடுபோகான்
ஏதுக் கழுவீர் ஏழை மாந்தார்காள்
உயிரினை யிழந்தோ உடலினையிழந்தோ? 45
உயிரிழந்து அழுதும் என்றோது வீராகில்
உயிரினை அன்றுங் காணீர் இன்றுங்காணீர்
உடலினை அன்றுங் கண்டீர் இன்றுங்கண்டீர்
உயிரினையிழந்த உடலதுதன்னைக்
களவுகொண்ட கள்வனைப்போலக் 50
காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக்
கூறைகளைந்து கோவணங்கொளுவி
ஈமத்தீயை எரியெழ மூட்டிப்
பொடிபடச் சுட்டுப் புனலிடை மூழ்கிப்
போய்த்தம ரோடும் புந்திநைந் தழுவது 55
சலமெனப் படுமோ? சதுரெனப்படுமோ?
பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்
இறந்தவரா யுமை யிவ்விடை யிருத்திப்
பாவனை மந்திரம் பலபடவுரைத்தே
உமக்கவர்புத்திரர் ஊட்டினபோது 60
அடுபசியால் குலைந்து ஆங்கவர் மீண்டு
கையேந்தி நிற்பது கண்டதார் புகலீர்
அருந்தியவுண்டியால் ஆர்பசி கழிந்தது
ஒட்டியர் மிலேச்சர் ஊணர் சிங்களர்
இட்டிடைச் சோனகர் யவனர் சீனத்தர் 65
பற்பலர்நாட்டிலும் பார்ப்பார் இலையால்
முற்படைப் பதனில் வேறாகிய முறைமைபோல்
நால்வகைச் சாதியிந் நாட்டினில் நாட்டி நீர்
மேல்வகை கீழ்வகை விளங்குவது ஓழுக்கால்
பெற்றமும் எருமையும் பிறப்பினில்வேறே 70
அவ்விரு சாதியில் ஆண்பெண்மாறிக்
கலந்துகருப்பெறல் கண்டதும் உண்டோ
ஒருவகைச் சாதியா மக்கட்பிறப்பிலீர்
இருவகையாகநீர் இயம்பிய குலத்துள் 75
ஆண்பெண் மாறி அணைதலும் அணைந்தபின்
கருப்பொறை யுயிர்ப்பதுங் காண்கின்றிலீரோ?
எந்நிலத்து எந்தவித்து இடப்படுகின்றதோ
அந்நிலத்து அந்த வித்து அங்குரித்திடுமலால்
மாறி வேறாகும் வழக்கமொன்றிலையே
பூசுரர்ப் புணர்ந்து புலைச்சியரீன்ற 80
புத்திரராயினோர் பூசுரரல்லரோ
பெற்றமும் எருமையும் பேதமாய்த் தோன்றல்போல்
மாந்தரிற் பேதமாம் வடிவெவர் கண்டுளார்
வாழ்நா ளுறுப்புமெய் வண்ணமோ டறிவினில்
வேற்றுமையாவதும் வெளிப்படலின்றே 85
தென்றிசைப் புலையன் வடதிசைக்கேகிற்
பழுதறவோதிப் பார்ப்பானாவான்
வடதிசைப்பார்ப்பான் தென்திசைக்கேகின்
நடையதுகோணிப் புலையனாவான்
(அதுநிற்க)
சேற்றிற்பிறந்த செங்கழுநீர்போலப் 90
பிரமற்குக் கூத்தி வயிற்றிற் பிறந்த வசிட்டரும்
வசிட்டர்க்குச் சண்டாளி வயிற்றிற் பிறந்த சத்தியரும்
சத்தியர்க்குப் புலைச்சி தோள் சேர்ந்து பிறந்த பராசரரும்
பராசரருக்கு மீன்வாணிச்சி வயிற்றிற் பிறந்த வியாசரும்
(ஆகிய இந்நால்வரும்)
வேதங்களோதி மேன்மைப்பட்டு 95
மாதவராகி வயங்கினரன்றோ
அருந்தவமாமுனி யாம்பகவற்கு
(இருந்தவா றிணை முலைஏந்திழை மடவார்) கருவூர்ப்பெரும்பதிக் கட்பெரும்புலச்சி
ஆதிவயிற்றினில் அன்றவதரித்த
கான்முளையாகிய கபிலலும் யானே 100
என்னுடன் பிறந்தவர் எத்தினை பேரெனில்
ஆண்பான்மூவர் பெண்பான் நால்வர்
யாம்வளர்திறஞ் சிறிது இயம்புவல் கேண்மின்
ஊற்றுக்காடெனும் ஊர்தனில் தங்கியே
வண்ணாரகத்தில் உப்பை வளர்ந்தனள் 105
காவிரிப்பூம்பட்டினத்தில் கள்விலைஞர் சேரியில்
சான்றா ரகந்தனில் உறுவை வளர்ந்தனள்
நரப்புக் கருவியோர் நண்ணிடுஞ் சேரியில்
பாணரகத்தில் ஔவை வளர்ந்தனனள்
குறவர் கோமான் கோய்தினைப் புனஞ்சூழ் 110
வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்
தொண்டை மண்டலத்தில் வண்டமிழ் மயிலைப்
பறையரிடத்தில் வள்ளுவர்வளர்ந்தனர்
அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி 115
அதிகமா னில்லிடை அதிகமான் வளர்ந்தனன்
பாரூர்நீர்நாட்டு ஆரூர்தன்னில்
அந்தணர்வளர்க்க யானும்வளர்ந்தேன்
(ஆதலால்)
மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ
காற்றுஞ் சிலரை நீக்கிவீசுமோ 120
மானிலஞ் சுமக்க மாட்டேன் என்னுமோ?
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ?
வாழ்நான்கு சாதிக் குணவுநாட்டிலும்
கீழ்நான்கு சாதிக் குணவுநாட்டிலுமோ?
திருவும் வறுமையுஞ் செய்தவப் பேறும் 125
சாவதும் வேறிலை தீரரணி யோர்க்கே
குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே
வழிபடுதெய்வமு மொன்றேயாதலால்
முன்னோருரைத்த மொழிதவறாமல் 130
எந்நாளாயினும் இரப்பவர்க் கிட்டுப்
புலையுங் கொலையுங் களவுந்தவிர்ந்து
நிலைபெற அறத்தில் நிற்பதை யறிந்து
ஆணும்பெண்ணும் அல்லதை யுணர்ந்து
பேணியுரைப்பது பிழையெனப் படாது 135
சிறப்புஞ்சீலமும் அல்லது
பிறப்பு நலந்தருமோ பேதையீரே.

கபிலரகவல் முற்றிற்று

Scroll to Top