You cannot copy content of this page

கிராமங்களைச் சரணடையுங்கள்!

நோயில்லா வாழ்க்கை வேண்டுமா? கிராமங்களைச் சரணடையுங்கள்!

‘தீரா நோய் தீரணுமா? கிராமத்துக்குப் போங்க’ என்று ஒரு சொலவடை உண்டு. ‘அது எப்படி கிராமங்கள் நோய்களைத் தீர்க்கும்?

கிராமங்கள் என்ன மருத்துவமனைகளா? இல்லை பெட்டி பெட்டியாய் மருந்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களா?’ என்று கிராமங்களைப் பற்றி முழுமையாக அறிந்திடாத நகரவாசிகள் நையாண்டியாக கேள்வி எழுப்பலாம்.

மருத்துவர்களையும், மருந்தகங்களையும் நகரத்துவாசிகள் அடிக்கடி பார்த்து பழகிவிட்டதால் இந்த கேள்வி எழுவதில் நியாயம் உண்டு.

வயல்வெளி

கிராமங்கள் – சூழல் சார்ந்த மருத்துவர்கள்

உண்மை என்னெவென்றால், கிராமங்கள்தான் இயற்கை ஈன்றெடுத்த சூழல்சார் மருத்துவர்கள்.

இயற்கையின் மூலம் நோய் தீர்க்கும் மருந்தகங்கள், கிராமங்களில் நிறையவே உண்டு. அந்த அந்த சூழல் தொகுதிகளுக்கேற்ப மூலிகைகள், காய்கள், பழங்கள் என மருத்துவ குணங்களைப் பொதித்து வைத்திருப்பவை கிராமங்கள்.

மருத்துவத் தாவரங்கள், அனுபவ முதியவர்கள், மன அழுத்தம் போக்கும் இயற்கை சூழல், உயர்ந்த மரங்களும் வெட்டவெளிகளும் தரும் இதமான காற்று என கிராமங்கள் முழுவதும் நோய்களைப் போக்கும் இயற்கையின் மருந்துகள் அதிகளவில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன.

மரபணுவில் பதிந்த கிராமத்து நினைவுகள்

அனைத்திற்கும் மேலாக நம்முடைய மரபணுக்களில் பொதிந்திருக்கும் கிராமத்து சூழல், நம்மை உற்சாகமாக்குவது தான் இயற்கையின் சிறப்பு. குறிஞ்சியிலும், முல்லையிலும், மருதத்திலும், நெய்தலிலும் வாழ்வைக் கழித்த நமது முன்னோர்களின் உயிர் அச்சுக்கள் நம்முடைய மரபணுவில் பொதிந்திருப்பது உண்மை தானே!

கிராமங்களைப் பார்த்திராத மனிதர்கள் கூட, முதன்முறையாக கிராமங்களைப் பார்வையிடும் போது உண்டாகும் பரவச நிலைக்கு, மரபணுவும் முக்கிய காரணமாக இருக்கலாம்.

சமீபமாக மரபணுவில் சிறிது சிறிதாக கிராமத்து அச்சுக்கள் மறைந்துக்கொண்டே வருவது தான் வருத்தமான செய்தி.

இயற்கை சூழலில் ஒரு கிராமம்

புத்துணர்ச்சி தரும் அமைப்பியல்

அவ்வப்போது உங்கள் சொந்த கிராமத்திற்கோ, அருகிலிருக்கும் கிராமத்திற்கோ சென்று வந்தால் பல விதமான வாழ்வியல் நோய்களைத் தடுக்கலாம்.

குறிப்பாக மன அழுத்தம் சார்ந்த நோய்கள் துளிர் விடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மனதை உற்சாகமாக வைத்துக்கொண்டாலே பல நோய்கள் நம்மை நெருங்காது.

வருடம் ஒரு முறை முழுமையான உடல் பரிசோதனை செய்து, ஒவ்வொரு முறையும் பரிசோதனை முடிவிற்காக படபடப்புடன் காத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கிராமத்து பகுதிகளில் இரண்டு அல்லது மூன்று நாள் தங்கிப் பொழுதைக் கழித்தாலே உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்.

மனசோர்வைத் தடுக்கும் இயற்கை ஓவியம்

மனதளவில் சோர்வாக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்… மாலை வேளையில் ஒரு கிராமத்து சூழலைப் பார்வையிடுகிறீர்கள்…

உங்கள் கால்களுக்கு கீழே ’வல்லான் வகுத்த வாய்க்கால்’ விரைந்துக்கொண்டிருக்கிறது. (வாய்க்கால்கள் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்படுபவை). சற்று தொலைவில் இயற்கையாக பாதை அமைத்த ஓடைகள் சலசலத்துக் கொண்டிருக்கின்றன.

கண்களுக்கு நேரே முதல் அடுக்கில் நெற்கதிர்கள் பசுமையாக நடனமாடுகின்றன. அடுத்த அடுக்கில், வாழை மரங்களும், மாமரங்களும் தெம்பாக காட்சி அளிக்கின்றன. அடுத்த அடுக்கில் மலைமுகடுகள் கரும்பச்சையாகவும் கிளிப்பச்சையாகவும் மேகத்தின் அசைவுகளுக்கு ஏற்ப நிறம் மாறுகின்றன.

எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் பறவைகள் ஆனந்தமாய் வாய்க்கால், ஓடை, நெல்வயல், வாழைத் தோப்பு, மாந்தோப்பு, மலைகள், மேகங்கள் என அனைத்தையும் பார்வையிட்டுக்கொண்டே சுற்றித் திரிகின்றன.

இத்தகைய காட்சிகள் நிறைந்த கிராமங்கள், மன சோர்வை உண்டாக்குமா இல்லை தடுக்குமா! மேற்குறிப்பிட்ட பறவைகள் போல வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது. வாழலாம் பறவைகள்போல, கிராமத்து சூழலில்…

மாசடையா கிராமங்கள்

புகைப் படியாத தூய்மையான காற்று, இரைச்சல்கள் இல்லாத பறவைகளின் மெல்லிசை, கண்களுக்கு விருந்தளிக்கும் கிராமத்து அழகு, சுவை மொட்டுக்களுக்கு இதமளிக்கும் பாரம்பரிய உணவுகள், தேகத்தை வாஞ்சையோடு தீண்டும் சில்லென்ற காற்று என பஞ்சபூத அடிப்படையில் உடல் இயந்திரங்களுக்கு வலுவூட்டி நோய்களைப் போக்கும் கிராமத்து வாழ்க்கைமுறை.

ஆனால் நகரங்களிலோ, சுவாசிக்கும் காற்று, கேட்கும் ஒலிகள், உணவுகள் என்று அனைத்துமே அளவிற்கு மீறி மாசடைந்து கிடக்கின்றன. இவற்றிலிருந்து சில நாட்களாவது தப்பிக்க கிராமங்களில் செலவிட முயற்சி செய்யுங்கள்.

பிள்ளைகளுக்கு கிராமங்களின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லுவதும் காலத்தின் கட்டாயம்.

நோயில்லா வாழ்க்கைக்கு துணைபுரியும் இயற்கை

கிராமங்களில் அன்று

அதிகாலையில் எழுந்து, சிறுது தூர நடைப்பயிற்சி செய்துகொண்டே சூரிய உதயத்தை ரசித்துவிட்டு, அருவியிலோ ஆற்றிலோ குளத்திலோ குளித்து, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொண்டு, அன்றைய பணிகளை முழுநிறைவுடன் செய்து, மாலையில் வயல்களிலும், வரப்போரங்களிலும் நடமாடிவிட்டு, சொந்தங்களோடு உரையாடிவிட்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் உறங்கியபோது அதிகுருதி அழுத்தம், மன அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தது.

ஆனால் சூரியன் உதயமாகி, காலை உணவு சாப்பிடும் நேரத்தில் எழுந்து, அரக்கபறக்க குளித்து, அரைகுறையாக சாப்பிட்டு, அலுவலகப் பணிகளையும் ஏதோ ஒரு அழுத்தத்துடன் செய்து முடித்து, நெரிசல் மிகுந்த சாலைகளில் வாகனத்தில் தட்டிமுட்டிப் பயணம் செய்து, வீட்டிற்கு திரும்பும் போது, கூடவே பல நோய்களையும் அழைத்து வருவது தான் இப்போதைய வாழ்க்கை முறையாக மாறிவிட்டது.

நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். மாற்று வழிகளின்றி சலிப்போடு பயணிக்கிறோம். இதற்குத் தீர்வாக அனைத்தையும் விட்டுவிட்டு, கிராமங்களுக்கு இடம்பெயரச் சொல்லவில்லை.

வாய்ப்பிருக்கும் போதெல்லாம் சிறிது தூரத்தில் இருக்கும் கிராமங்களுக்கு செல்வது, கிராமத்து வாழ்க்கையின் அழகை உணர்த்தும்.

உடல் நலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறும்.

நாத்து நடும் பெண்கள்

கிராமங்களின் அழிவுதானே நகரங்கள்

ஒரு பெரிய நகரத்தில் வாழ்ந்தாலும், அருகிலேயே கிராமங்கள் நிச்சயமாக இருக்கும். கிராமங்களை அழித்து உருவாக்கப்பட்டவைதானே நகரங்கள். கடற்கரையோரமோ, மலை உச்சியின் ஓரத்திலோ இருக்கும் சொகுசு விடுதியில் தங்கி பொழுதைக் கழித்தால்தான் திருப்தி என்றில்லை.

கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள பாரம்பரியத்தை ருசித்து லயித்தாலே ஆத்ம திருப்தி உண்டாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நகரங்களில் சரணடைந்து விட்டவர்கள், கண்டிப்பாக கிராமங்களை அன்போடு அரவணைத்துக் கொள்வது முக்கியம்.

மனதை சாந்தப்படுத்த, அதிகமாக செலவு செய்து வெளிநாட்டு சுற்றுலாத் தளங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை.

நம்மை சுற்றி இருக்கும் கிராமங்களே மனதை சாந்தப்படுத்தும் கருவிகள் தான். சூழலியல் சுற்றுலாக்கள் அதிகளவில் பிரசித்தி பெற்று இருந்தாலும், அனைவராலும் செலவு செய்து நீண்ட நாட்கள் பயணங்களை மேற்கொள்ள இயலாது.

அதற்கு பதிலாக சூழலியல் சார்ந்த கிராமங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசித்துக் கொள்ளலாம்.

’கிராமங்களில் தங்கி இயற்கையோடு இயைந்து பொழுதைக் கழிப்பதென்பது’ குறுகிய கால சலுகை மட்டுமே!

ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து கிராமங்களே இல்லாமல் போகலாம். பசுமைப் புரட்சியின் விபரீத கரங்கள் நீண்டு, இயற்கை விவசாயம் உயிரிழக்கலாம். நமக்கு இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், இந்த பாதிப்புகளை நம்மால் மீட்டெடுக்க முடியும் என்பதே.

கிராமத்துப் பூமியை மழை நனைக்கும் போது உண்டாகும் மண்வாசனையை ரசிக்க இப்போதே கிராமங்களை நோக்கி பயணிப்போம்!

Scroll to Top