You cannot copy content of this page

வித விதமான பொடி வகைகள்

‘சமய சஞ்சீவினி’யாக கைகொடுத்து உதவுவதில் பொடிகள் முக்கிய இடம் பெறு கின்றன.

மேலும் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என்று எல்லாவற்றிலும் சுவை சூப்பராக அமைவதில், பொடிகளின் பங்கு ரொம்பவே உண்டு.


பருப்புப்பொடி

தேவையானவை: துவரம்பருப்பு – 2 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட… சுவை அசத்தலாக இருக்கும்.


பூண்டுப்பொடி

தேவையானவை: பூண்டு – 250 கிராம், காய்ந்த மிளகாய் – 10, உளுத்தம்பருப்பு – ஒரு கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன்… மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு: பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.


தேங்காய்ப்பொடி

தேவையானவை: முற்றிய தேங்காய் – ஒன்று, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து… தேங்காய், உப்பு சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: இந்த தேங்காய்ப்பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். காய் கறிகளை சமைக்கும்போது மேலே தூவிக் கிளறலாம். இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காயில் தயாரித்தால், ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.


இட்லி மிளகாய்ப்பொடி

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 100 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கப், எள் – 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எள்ளையும் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, எள் சேர்த்து பொடித்து எடுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, கைபடாமல் ஸ்பூன் உபயோகப்படுத்தி பயன்படுத்தினால்… இது இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும்.


மிளகு  சீரகப்பொடி

தேவையானவை: மிளகு, சீரகம் – தலா 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு – சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது உப்பு சேர்க்கவும்.

குறிப்பு: ‘சம்பா சாதம்’ என்று கோயில்களில் இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் கலந்து கொடுப்பார்கள். இது கைவசம் இருந்தால், ரசம் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.


கூட்டுப்பொடி

தேவையானவை: கடலைப் பருப்பு, தனியா – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை: வெறும் வாணலி யில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். மூன்றையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு: கூட்டு, பொரியல் செய்யும் போது இதை மேலே தூவிக் கிளறி இறக்கினால்… சுவை அதிகரிக்கும்.


எள்ளுப்பொடி

தேவையானவை: எள், உளுத்தம்பருப்பு – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து… உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வும்.

குறிப்பு: புரட்டாசி சனிக் கிழமையில் இந்தப் பொடியை செய்து, சாதத்துடன் கலந்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்வார்கள்.


கறிவேப்பிலை பொடி

தேவையானவை: கறிவேப்பிலை (ஆய்ந்தது) – 4 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவும்.


ஆவக்காய் ஊறுகாய் பொடி

தேவையானவை: காய்ந்த மிளகாய், கடுகு – தலா 200 கிராம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாயை மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடுகையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் இவற்றுடன் உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: ஆவக்காய் மாங்காய் சீஸனில் இந்தப் பொடி மிகவும் உபயோகமாக இருக்கும். இந்தப் பொடியை உபயோகப்படுத்தி ஊறுகாய் போட்டால், ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.


அங்காயப் பொடி

தேவையானவை: சுண்டைக்க £ய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப் பிலை – தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு – ஒரு பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் – 6, கடுகு, மிளகு, சீரகம் – தலா 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாக வறுத்து, தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: இந்தப் பொடியை ஆறு மாதம் வரை வைத்து உபயோகிக்கலாம். சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும். உடல்வலி, வயிற்று உபாதைகளுக்கு சிறந்த நிவாரணி இது.


நாரத்தை இலை பொடி

தேவையானவை: நாரத்தை இலை – 2 கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நாரத்தை இலைகளின் நடுவில் உள்ள காம்பினை ஆய்ந்து எடுக்கவும். இலைகளுடன் உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: இது, தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.


திடீர் புளியோதரைப்பொடி

தேவையானவை: புளி – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 10, வேர்க்கடலை – ஒரு கப், கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன், வெந்தயம் – 2 டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், மஞ்சள் – ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புளியை  வாணலியில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மொறுமொறுப்பாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், தனியா, மஞ்சள், பெருங்காயம், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து இந்த புளியோதரைப் பொடி சேர்த்து சாதத்தில் போட்டு கலந்தால்… உடனடி புளிசாதம் ரெடி! இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து… வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பொடி கரைசலை கொதிக்கவைத்தால், புளிக்காய்ச்சல் தயாராகிவிடும்.


வெந்தயப்பொடி

தேவையானவை: வெந்தயம் – 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடித்து, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: காலையில் மோருடன் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் கலந்து, வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுப் புண் வராமல் தடுக்கும்… உடல் குளிர்ச்சியாகும். வெறும் வெந்தயத்தை தயிரில் முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால், தலைமுடி நன்கு வளரும். சூடு குறையும்.


வேப்பம்பூ பொடி

தேவையானவை: வேப்பம்பூ – ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 3, உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் வேம்பம்பூ, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: வேப்பம்பூ, பித்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேப்பம்பூ அதிகமாக கிடைக்கும் சீஸனில் சேமித்து வைத்து… பிறகு துவையல், பொடி, ரசம், பச்சடி என்று பலவிதமாக செய்து பயன் பெறலாம்.


நெல்லிக்காய்ப் பொடி

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவி வெயிலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்கவும்.

நெல்லிக்காய்… வைட்டமின் ‘சி’, இரும்புச்சத்து மிக்கது.


கொத்த மல்லிப் பொடி

தேவையானவை: பச்சை கொத்தமல்லி – ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 4, புளி – பெரிய நெல்லிக் காய் அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை  வறுத்துக் கொள்ளவும். புளியை தனியாக வறுக்கவும் (நன்கு உலர்ந்துவிடும் வரை). கொத்தமல்லியை ஆய்ந்து, கழுவி, ஒரு துணியில் பரவலாகப் போட்டு உலரவிடவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, உப்பு சேர்த்து, கொத்தமல்லியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொடிக்கவும்.

குறிப்பு: இது தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். கொத்தமல்லி இல்லாத நாட்களில், அதற்குப் பதிலாக இந்தப் பொடியை குழம்பில் சிறிதளவு சேர்க்கலாம்.


மூலிகைப் பொடி

தேவையானவை: வல்லாரை இலை, முடக்கத்தான் இலை, துளசி இலை,  தூதுவளை இலை, புதினா – தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு – ஒரு துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இலைகளைத் தனித்தனியாக கழுவி, துணியில் பரவலாக போட்டு, நன்கு உலர்ந்ததும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சுக்கை நசுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: வல்லாரை ஞாபக சக்தி தரும். முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து. துளசி – தூதுவளை தொண்டைக்கட்டு, சளி, இருமல் வராமல் தடுக்கும் சக்தி உடை யவை. புதினா வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது. சுக்கு வாயுத்தொல்லையை நீக்கும். இத்தனை பயனும் உள்ள இந்த மூலிகைப்பொடி உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த துணைவன்.


சுண்டைக்காய்ப் பொடி

தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் சுண்டைக்காய் வற்றல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். பிறகு இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: சுண்டைக்காய் வற்றல் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சூடான சாதத்தில் இந்தப் பொடியை சிறிதளவு சேர்த்து, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.


ஓமப் பொடி

தேவையானவை: ஓமம் – 100 கிராம், மிளகு – 10, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் ஓமம், மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். பிறகு அவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டு, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மோருடன் இதை சிறிதளவு சேர்த்து அருந்தினால், ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்தப் பொடி கைவசம் இருந்தால் தோசை மாவுடன் கலந்து தோசை செய்தால் மிகவும் ருசியுடன் இருக்கும். சிறிதளவு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு தயாரித்தால் சுவையில் அசத்தும்.


கொள்ளுப் பொடி

தேவையானவை: கொள்ளு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உளுத்தம்பருப்பு – 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கொள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: கொள்ளு, கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.


சட்னிப் பவுடர்

தேவையானவை: கொப்பரைத் தேங்காய் துருவல் – 2 கப், காய்ந்த மிளகாய் – 4, பொட்டுக்கடலை – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல், காய்ந்த மிளகாயை வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்தால்… உடனடி சட்னி தயார். சிறிதளவு தயிர் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.


கீரைப் பொடி

தேவையானவை: கோங்கூரா (புளிச்சக்கீரை), கறிவேப்பிலை, புதினா – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோங்கூரா (புளிச்சக்கீரை) இலை, கறிவேப் பிலை, புதினா ஆகியவற்றை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு துணியில் போட்டு, வெயிலில் உலர்த்தவும். பிறகு, இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.

குறிப்பு: உளுந்தை ஊறவைத்து அரைத்து, இந்தப் பொடியை சேர்த்து, எளிதாக கீரை வடை தயாரித்துவிடலாம். புளிச்சக்கீரை, இரும்புச்சத்து கொண்டது.


பாயசப் பவுடர்

தேவையானவை: பிஸ்தா பருப்பு – 10, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு – தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை, பால் – தேவையான அளவு.

செய்முறை: பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பை லேசாக சூடாக்கி மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

பாலைக் காய்ச்சி இந்த பவுடரை கொஞ்சம் சேர்த்து, ஏலக்காய்த் தூள், சர்க்கரை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால்… திடீர் பாயசம் ரெடி. வாழைப்பழம், பலாக்சுளையை பொடியாக நறுக்கி சேர்த்தால், சுவை கூடும்.


தீபாவளி மருந்துப்பொடி

தேவையானவை: கண்டதிப்பிலி – 50 கிராம், சுக்கு – ஒரு துண்டு, ஓமம் – 50 கிராம், சீரகம் – 2 டீஸ்பூன், அரிசி திப்பிலி – 25 கிராம், வாயு விளங்கம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) – 25 கிராம், வால் மிளகு – 50 கிராம், மிளகு – 25 கிராம், சித்தரத்தை – ஒரு துண்டு.

செய்முறை: கண்டதிப்பிலி, சுக்கு, ஓமம், சீரகம், அரிசி திப்பிலி, வாயு விளங்கம், மிளகு, வால் மிளகு, சித்தரத்தை எல்லாவற்றையும் நன்கு நசுக்கி, வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும்.

குறிப்பு: பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும் நேரங்களில், குறிப்பாக தீபாவளி சமயத்தில், வயிற்றுக் கோளாறு ஏற்படாமல் தடுக்கும் குணம் கொண்டது இந்தப் பொடி.

ஒரு பங்கு பொடிக்கு ஒரு பங்கு பொடித்த வெல்லம் சேர்த்து, லேசாக சூடாக்கிய நெய் – நல்லெண்ணெய் 4 டீஸ்பூன், சிறிதளவு தேன் சேர்த்துப் பிசைந்து… இந்தக் கலவையில் கொஞ்சம் எடுத்து, சிறிய நெல்லிக்காய் சைஸில் உருட்டி சாப்பிடலாம்.


அடைப் பொடி

தேவையானவை: இட்லி அரிசி – 250 கிராம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை: இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றுசேர்த்து ரவை பதத்துக்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து… வெங்காயம் நறுக்கிப் போட்டு அடை தயாரிக்கலாம்.


தனியாப் பொடி

தேவையானவை: தனியா – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: தனியாப்பொடி பித்தத்தை தணிக்கும். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.


பஜ்ஜிப் பவுடர்

தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், அரிசி – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 6, சோள மாவு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). இதனுடன் சோள மாவு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து… விருப்பமான காய்களைத் தோய்த்து பஜ்ஜி தயாரிக்கலாம்.


வடைப் பவுடர்

தேவையானவை: தோல் நீக்கிய உளுத்தம்பருப்பு – 250 கிராம், மிளகு – 20, காய்ந்த மிளகாய் – மூன்று, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). பிறகு இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: தேவைப்படும்போது, மாவுடன் தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசையவும். கோஸ் துருவல், நறுக்கிய கீரை, வெங்காயம் என விருப்பமானதை சேர்த்து, பிசைந்து வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.


புளிப்புக் கூட்டுப்பொடி:

இதற்கு ஒரு பிடி கடலைப்பருப்பு, ஒரு பிடி உளுத்தம்பருப்பு, ஒரு பிடி தனியா, 5 அல்லது 6 மிளகாய், ஒரு ஸ்பூன் பச்சரிசி, அரை ஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு மூடி தேங்காய் தேவை.

ஒவ்வொன்றையும் தனித்தனியே நல்லெண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும். அரிசியை கடைசியாக வறுக்கவும். ( அரிசி வேண்டாம் என்றால் விட்டுவிடலாம்) தேங்காயையும் ஈரப்பதம் போகும்வரை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு ஓரளவுக்கு நைசாக அரைத்துக்கொள்ளவும்.

புடலங்காய், கோஸ், வெள்ளைப் பூசணி, பாகற்காய் போன்றவற்றிக்கு இது நன்றாக இருக்கும். காயை துவரம்பருப்பு மற்றும் ஒரு பிடி கடலைப்பருப்புடன் குக்கரில் வேக வைத்து இறக்கியதும் உப்பு, பெருங்காயம், ஒரு ஸ்பூன் புளி பேஸ்ட், இந்த பொடி எல்லாம் சேர்த்து கிளறி கடுகு தாளிக்கவும்.

(டிப்ஸ்: கொஞ்சம் தேங்காய் பால் அல்லது சாதா பால் (சுமார் ரெண்டு ஸ்பூன்) சேர்க்க கூட்டு ரிச்சாக புதிய தேங்காய் துருவலுடன் செய்தது போலவே இருக்கும்)

மற்றபடி மேலே சொன்ன சாம்பார் பொடிகளில் ஏதாவது ஒன்று உபயோகித்தும் கூட்டு செய்யலாம். மோர் கூட்டு போன்றவைகளுக்கு அரைத்து விட்டுதான் செய்யவேண்டும், பொடி use ஆகாது.


கரிமாப் பொடி

கசகசா – 1 tbsp
தனியா – அரை கப்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் – நூறு கிராம்
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – ஒரு ஸ்பூன்
மேலே சொன்ன எல்லாவற்றையும் தனித்தனியாக வறட்டு வாணலியில் வறுத்து பெருங்காயத்துடன் சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். சில பொரியல் வகைகளுக்கு இந்த பொடி உபயோகிக்கலாம். இஞ்சி பூண்டு வேண்டுமானால் பொரியல் செய்யும்போது சேர்க்கவும்.


கரிமாப் பொடி 2:

தனியா கால் கப்
மிளகு ரெண்டு ஸ்பூன்
சோம்பு ரெண்டு ஸ்பூன்
பூண்டு (பொடியாக நறுக்கியது) ஒரு ஸ்பூன்
பெருங்காயம் சிறிதளவு.

எல்லாவற்றையும் தனியாக வறுத்து பொடிக்கவும். பூண்டு வேண்டாம் என்றால் விட்டுவிட்டு பொரியல் செய்யும்போது சேர்க்கலாம்.


கரிமாப் பொடி 3:

தனியா கால் கப்
கடலைப்பருப்பு கால் கப்
கசகசா நூறு கிராம்
மிளகாய் நூறு கிராம்
ரெண்டு பட்டை துண்டுகள்

மேலே சொன்னவைகளை எண்ணையில் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும். இதை வாழைக்காய் மற்றும் கிழங்கு வகைகளுக்கு மேலே தூவி வதக்கலாம்.

காய்கள் மேலே தூவி வதக்க இன்னொரு சிம்பிள் பொடியும் உள்ளது.
இந்த பொடியை சுண்டல் வகைகளுக்கும் தூவலாம்.

முக்கால் கப் கடலைப்பருப்பு, கால் கப் தனியா, 5 மிளகாய், ஒரு கட்டி பெருங்காயம் எல்லாவற்றையும் தனித்தனியாக மிகக் கொஞ்ச நல்லெண்ணெய் உபயோகித்து பொன்னிறமாக வறுக்கவும். ( ஒரு மூடி தேங்காயோ, கொப்பரையோ வறுத்து சேர்ப்பது சிலர் வழக்கம்)
வறுத்தவற்றை கொரகொரப்பாக ரவை போல அரைப்பது இதன் சிறப்பு.

கத்தரிக்காய், வெண்டைக்காய், காரட் எல்லா வகை சுண்டல்களுக்கு ஏற்றது இது.


சாதாரணமாக செய்த உணவுகளை சில பொடிகள் செய்து flavour ஐக் கூட்டுவதால் எப்படி ரிச் ஆக்கலாம் என்று இங்கே பார்க்கலாம்.


புளியோதரை செய்யும்போது மேலே தூவும் பொடி:

ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு ஒரு கட்டி பெருங்காயத்தை நன்றாகப் பொரிக்கவும். அதை எடுத்துவிட்டு அதே எண்ணையில் 6 ஸ்பூன் தனியா போட்டு மணமாக வறுத்து எடுக்கவும். அதிலேயே 6 அல்லது 7 மிளகாய் சிவக்க வறுத்து எடுக்கவும். மூன்றையும் கொரகொரப்பாக வறுத்து எடுத்து வைத்தால் ஆறு மாதம் ஆனாலும் கெடாது.

உபயோகிக்கும் விதம்:

வீட்டில் செய்த புளிக்க்காயச்சல் என்றாலும் சரி, கடையில் ரெடிமேட் ஆக வாங்கின புளிக்காய்ச்சல் என்றாலும் சரி, உதிரி சாதத்தில் பிசைந்து இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு மேலே தூவி பிசையவும். கோவில் புளியோதரை போலவே இருக்கும் இந்தப் பொடியால்.

(டிப்ஸ்: மேலே சொன்ன பொடியுடன் வறட்டு வாணலியில் வறுத்துப் பொடித்த வெந்தயம் ஒரு பின்ச் சேர்ப்பதும் சுவையையும் மணத்தையும் கூட்டும்)


மிளகுப் புளியோதரை பொடி:

மேலே சொன்ன பொடியைப் போலதான். ஆனால் வெறும் மிளகு எடுத்து நல்லெண்ணெயில் வெடிக்கும் வரை வறுத்து கொரகொரப்பாக பொடிக்கணும்.

கடையில் வாங்கிய புளிக்காய்ச்சல் என்றாலும் இந்த பொடியை தூவி பிசைய அது மிளகுப் புளியோதரை ஆகும். வெளியூர் பிரயாணத்தின் போது overnight என்றாலும் கெட்டுப்போகாது.


வெந்தயப் பொடி:

“மூத்தோர் சொல்லும் முதுநெல்லியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்” என்று ஒரு பழமொழி இருக்கு, அது போல இந்த வெந்தயத்தின் கசப்பைப் பார்க்காமல் அதன் குணத்தை மட்டும் பார்த்தால் இது “நவராத்திரி” என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி ஒன்பது வேடங்கள் போட்ட மாதிரி இதுவும் multi action பண்ணும்.

கால் கப் வெந்தயத்தை வெறும் வாணலியில் கை விடாமல் சிவக்க வறுத்து நைசாக பொடித்து வைக்கவும். இந்த வெந்தயப் பொடியில் பாதியை அப்படியே வைத்து விட்டு மீதியில் அதே வாணலியில் வறட்டாகப் பொறித்த பெருங்காயக்கட்டியையும் பொடித்து கலக்கவும்.

இந்த ரெண்டு வகைப்பொடியையும் பருப்புக்குழம்பில் இறக்கும் முன் கால் ஸ்பூன் (அதிகம் போட்டால் கசந்துவிடும்) போட, எவ்வளவு பழைய சாம்பார் பொடியை உபயோகித்திருந்தாலும் அது கமகமவென்று மணக்கும்.

புளியோதரை பிசைந்ததும் கடைசியில் ஒரு பின்ச் சேர்த்துக் கலக்க அதுவும் கம கம தான்.


ஊறுகாய்ப் பொடி:

இந்தப்பொடியை செய்து வைத்துக்கொண்டால் கட் மாங்காய் ஊறுகாய், மாங்காய் இஞ்சி ஊறுகாய், காய்கறி ஊறுகாய் எல்லாம் போடலாம்.

கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி அதில் 25gm வெந்தயத்தையும் 100gm மிளகாயையும் போட்டு தனிதனியாக வறுத்துக்கொள்ளவும். எண்ணெய் அளவாக விடவேண்டும். எண்ணெய் போதாது என்று தோன்றினால் கொஞ்சம் நடுவில் சேர்க்கலாம். (அதிகம் எண்ணெய் இருந்தால் சரியாகப் பொடியாது.)

இந்தப் பொடியை பொடிக்கும் முன்பு கல்லுப்பை பொடித்துக்கொள்ளவும். (டேபிள் சால்ட் சேர்ப்பதை விட கல்லுப்பு சேர்ப்பது ஊறுகாயை நீண்ட நாள் கெடாமல் காக்கும்)
அடுத்து வறுத்த வெந்தயம் மிளகாயுடன் தேவையான பெருங்காயப் பொடியையும் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்ததும் பொடித்த கல்லுப்பையும் சேர்த்து இன்னொரு சுற்று சுற்றி வைக்கவும்.
இதில் ரெண்டு டேபிள்ஸ்பூன் கடுகை நல்லெண்ணையில் வெடிக்க விட்டு சேர்க்கவும். இனி ஊறுகாய் போடும்போது இந்த பொடியை போட்டு மேலே நல்லெண்ணெயை காய்ச்சி ஆறவிட்டுக் கொட்டினால் போதும், ஊறுகாய் ரெடி.

சாதத்தில் போடும் பொடியைப்போலவே புலாவ், சப்ஜி போன்றவற்றில் உபயோகிக்கும் கரம் மசாலா பொடியையும் வீட்டிலேயே செய்யலாம்.


கரம் மசாலாத் தூள்:

தனியா – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்
கருப்பு மிளகு – ஒரு டீஸ்பூன்
கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன்
ஒரு சின்ன துண்டு பட்டை
ஏலக்காய் – 3
லவங்கம் – 8
பொடித்த ஜாதிக்காய்(nutmeg) – கால் ஸ்பூன்
பொடித்த ஜாதிபத்திரி (mace) – கால் ஸ்பூன்
மேலே சொன்ன எல்லாவற்றையும் பிரவுன் ஆக வரும் வரை (அல்லது நல்ல மணம் வரும்வரை) வறட்டாக வறுத்து பொடித்து airtight ஜாரில் வைக்கவும்.


சாய் மசாலா / டீ மசாலாப் பொடி:

ஏலக்காய் 10 ( உள்ளே உள்ள pods மட்டும் போதும்)
ஒரு சின்ன துண்டு பட்டை
கிராம்பு 12
மிளகு 15
சுக்குபொடி ஒரு டீஸ்பூன்
வறுக்கவே வேண்டாம், அப்படியே அரைத்து வைத்தால் போதும். காற்று புகாத பாட்டிலில் வைப்பது நல்லது. டீ போடும்போது கால் ஸ்பூன் அளவு இந்த பொடியையும் சேர்க்க நாக்கு மசாலா டீக்கு ஏங்கும்.


சன்னா மசாலா/சோளே மசாலா:

தனியா 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
லவங்கம் – 5
ஒரு இன்ச் நீள பட்டை
மிளகு – 8
கருப்பு ஏலக்காய் – 2 (கருப்பு ஏலக்காய் என்பது சைசில் சாதா ஏலக்காயை விட பெரிதாக இருக்கும். இதை மசாலா செய்ய மட்டுமே உபயோகிக்க முடியும்.)
காய்ந்த மிளகாய் – 4
மேலே சொன்னவற்றை தனித்தனியாக சிம்மில் வறுத்து நைசாகப் பொடிக்கவும்.
சன்னா சாட், சோளே மட்டர், சன்னா புலாவ் போன்றவற்றில் இந்த பொடியை உபயோகிக்கலாம்.


இட்லி மிளகாய்ப் பொடி:
முதல் வகை:

உளுத்தம்பருப்பு அரை கப்
மிளகாய் தேவைக்கேற்ப
தனியா 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
உப்பு தேவையானது
எல்லாவற்றையும் நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். தனித்தனியே வறுப்பது நல்லது. விருப்பமுடையவர்கள் ஒரு சிறு உருண்டை புளியை கூட வறுத்து அரைக்கலாம்.


பூண்டு மிளகாய்ப் பொடி:

மேலே சொன்ன மிளகாய் பொடியிலேயே ஏழு அல்லது எட்டு பூண்டுப்பற்களை வறுத்து சேர்க்கவும். விருப்பம் இருந்தால் ரெண்டு ஸ்பூன் கொப்பரை துருவலையும் வறுத்து சேர்க்கலாம்.


எள்ளு மிளகாய்ப் பொடி:

முதலில் ஒரு கை எள்ளை பட படவென்று பொரியும்வரை வறுக்கவும். இதற்கு எண்ணெய் எதுவும் தேவையில்லை. பட படவென்று வெடித்ததும் (முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது என்றால் என்ன என்று அனுபவபூர்வமாக உணர்வீர்கள்!) எடுத்துவிட்டு அதே வாணலியில் எண்ணெய் விட்டு ஒரு கட்டி பெருங்காயத்தை பொறித்து எடுக்கவும். அதே எண்ணையில் ஐந்து மிளகாய்களை வறுத்துக்கொள்ளவும். இன்னும் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு கை உளுத்தம்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அடுத்து ஒரு கை கடலைப்பருப்பு போட்டு அதுவும் சிவக்கும்படி வறுக்கவும். தேவையான உப்பு வைத்து மிக்சியில் பொடிக்கவும்.

(டிப்ஸ்: குழந்தைகள் சாப்பிடும் போது காரம் ஒத்துக்கொள்ளாது என்றால் ஒரு ஸ்பூன் கசகசா ஒரு ஸ்பூன் இட்லி அரிசி ரெண்டையும் அதே வாணலியில் கடைசியாக போட்டு எண்ணெய் சேர்க்காமலேயே நன்றாக பொறியும் வரை வறுத்து சேர்க்கலாம். மிளகாய் பொடிதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகள் சாப்பிட்டாலும் காரம் ஒன்றும் செய்யாது)


பருப்புப்பொடி 1:

இந்த முறை செலவே இல்லாத ஒன்று. ஆயில் restriction உள்ளவர்களுக்கு ஏற்றது. ஒரு கப் துவரம்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். சூடாக இருக்கும் இந்தப் பருப்பில் ஒரு ஸ்பூன் பெருங்காயப் பொடி, தேவையான உப்பு, (நான் உப்புக்கு பதில் இந்துப்பு என்று நாட்டு மருந்து கடையில் கிடைப்பதை சேர்ப்பேன்) ரெடிமேட் காரப்பொடி தேவையானது சேர்த்து நைசாக பொடிக்க வேண்டும். அவ்வளவுதான். கட்டை மிளகாய்ப் பொடி வேண்டாம் என்றால் தேவையான வர மிளகாயை சிவக்க வறுத்து சேர்க்கலாம்.

சாப்பிடும் விதம்
சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும். நெய்யும் நல்லெண்ணையும் சமமாக சேர்ப்பது இன்னும் சுவையானது.


பருப்புப்பொடி 2:

துவரம்பருப்பு ரெண்டு பங்கு என்றால் கடலைப்பருப்பு ஒரு பங்கு, பாசிப்பருப்பு அரை பங்கு வேண்டும். (நான் பங்கு என்றது அவரவர் தேவைக்கு ஏற்ற அளவில் எடுக்கவே).

மூன்று பருப்புகளையும் வாணலியில் தனித்தனியாக பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளவும். கட்டிப் பெருங்காயம் எடுத்து அதையும் நன்றாகப் பொரியும்படி வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே தேவையான மிளகும் கல்லுப்பும் சேர்த்து கொஞ்ச நேரம் வறுத்துவிட்டு எல்லாவற்றையும் பொடிக்கவும். இதிலும் எண்ணெய் இல்லை. சாப்பிடும் விதம் மேலே சொன்ன மாதிரிதான்.


பருப்புப்பொடி 3:

கடலைப்பருப்பு மட்டும் அரை கப் எடுத்து மேலே சொன்ன படி எண்ணெய் இல்லாமலோ அல்லது ஒரேயொரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டோ வாசனை வரும் வரை சிவக்க வறுத்து, தேவையான மிளகாய் பெருங்காயம் வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே கால் கப் பொட்டுக்கடலையை பிரட்டி உப்புடன் அரைக்கலாம். இதில் பொட்டுக்கடலை சரி சமமாக சேர்ப்பதும் உண்டு. எவ்வளவு நாள் ஆனாலும் கெடாது, (எங்கள் வீட்டில் இதை ஏதோ அமிர்தம் ரேஞ்சுக்கு பார்க்கிறார்கள்.)


பருப்புப்பொடி 4:

வாணலியில் கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு 2 பங்கு துவரம்பருப்பு, 3 பங்கு கடலைப்பருப்பு, தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவும். அடுத்து வாணலியில் உள்ள அந்த எண்ணைப் பசையிலேயே தேவையான மிளகாய், கொஞ்சம் மிளகு ( இது ஒரு வாசனைக்குத்தான்), ஒரு கட்டி பெருங்காயம் சேர்த்து வறுத்துவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு 2 பங்கு பொட்டுக்கடலையும் போட்டு வறுக்கவும். தேவையான உப்புடன் அரைத்து உபயோகிக்கலாம்.
இந்த வகையில் அரைக்கும் பொடி இட்லி தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். ரொம்பவே கொஞ்சம் எண்ணைதான் உள்ளது என்பதால் டயட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்றது.


சீரகப் பருப்புப்பொடி:

ஒரு கப் துவரம்பருப்பை மட்டும் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். பிறகு ரொம்ப கொஞ்சமாக எண்ணெய் விட்டு, ரெண்டு மிளகாய் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே ரெண்டு ஸ்பூன் சீரகத்தை வறுத்து எடுத்துக்கொண்டு (அதிக சூட்டில் சீரகம் அதிகம் வறுபட்டு மருந்து வாசனை வந்துவிடும்)உப்பு பெருங்காயப்பொடியுடன் அரைக்கவும்.
சாப்பிடும் விதம்: சூடான சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்து இந்த பொடியையும் சேர்த்துப் பிசையவும்.


எள்ளு சாதப் பொடி:

கருப்பு எள் இதற்கு பெஸ்ட். வெள்ளை எள்தான் பிடிக்கும் என்றாலும் அதுவும் ஓகேதான்.
எள்ளும் உளுத்தம்பருப்பும் தான் வேண்டும். எள்ளை (அதிலேயே எண்ணெய் இருப்பதால்) வறட்டாகத்தான் வறுக்கணும். எவ்வளவு பருப்பு எடுக்கிறோமோ அதைவிட மூன்று பங்கு அதிகம் எள் வேண்டும். முதலில் எள்ளை பட படவென்று வரும்வரை வறுக்கவும். அடுத்து கொஞ்சம் எண்ணெய் விட்டு பருப்பை சிவக்க வறுக்கவும். (சிலர் எள்ளிலேயே எண்ணெய் இருப்பதால் உளுத்தம்பருப்பையும் வறட்டாகவே வறுப்பார்களாம்)
தேவையான மிளகாய் உப்பு பெருங்காயத்தையும் வறுத்துக்கொள்ளவும்.

எள்ளை தனியாகதான் அரைக்கணும். மிக்சியை நிறுத்தி நிறுத்தி அரைக்கணும். (இல்லாவிட்டால் அதிலேயே எண்ணெய் வந்து பொடி taste கெட்டுவிடும்) அரைத்த எள்ளை எடுத்துவிட்டு பருப்பு மிளகாய்களை அரைக்கவும். சன்ன ரவை பதத்துக்கு அரைப்பது நல்ல சுவை தரும். இந்த பருப்புப்பொடியுடன் அரைத்த எள்ளையும் சேர்த்து ஒரேயொரு முறை மிக்சியை ஓட்டி எடுக்கவும்.

சாப்பிடும் விதம்: சூடான சாதத்தில் நெய் மட்டும் விட்டு இந்தப் பொடியும் போட்டு கிளறினாற்போல் பிசைந்து மேலே ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, வேர்கடலை அல்லது முந்திரி வறுத்துப் போடவும்.


இன்னொரு முறையில் எள்ளுப் பொடி:

கருப்பு எள்ளை மட்டும் வறட்டாக பட படவென்று வறுத்து, தேவையான மிளகாயை எண்ணையில் வறுத்து உப்பு பெருங்காயத்துடன் அரைப்பது. இது பார்க்க கொஞ்சம் டார்க் கலரில் எள் வாசனையுடன் இருக்கும். சாப்பிடும் விதம் மேலே சொன்னபடியே.
(புரட்டாசி சனிக்கிழமை இந்த எள் சாதத்தை வீட்டில் விசேஷமாக செய்வார்கள்)


கொள்ளுப் பொடி:

எள்ளுக்கு பதில் கொள்ளு போட்டு செய்யலாம். மேலே சொன்ன ரெண்டு முறைகளிலும் எள்ளுக்கு பதில் கொள்ளை வறுக்கவும். கொள்ளு வறுக்கவும் எண்ணெய் தேவையில்லை. அல்லது கொள்ளுடன் துவரம்பருப்பு மிளகு சேர்த்து வறுத்து சாப்பிடலாம்.

(டிப்ஸ் :துவரம்பருப்பு சேர்த்தரைத்தால் அதையே கொள்ளு ரசம் செய்யவும் உபயோகிக்கலாம்) இதில் உள்ள பயன், இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழியால் விளங்கும்.


கறிவேப்பிலைப் பொடி:

முதலில் ஒரு பெரிய உருண்டை புளியை கொட்டை நார் நீக்கி எண்ணையில் வறுத்து தனியாக வைக்கவும். அடுத்து அரை கப் உளுத்தம்பருப்பு எடுத்து அதை நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் தனியாவையும் அடுத்து வறுத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு டேபிள்ஸ்பூன் மிளகையும் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தையும் வறுக்கவும். கடைசியில் தேவையான மிளகாயும் சேர்த்து வறுத்து உப்பு பெருங்காயம் சேர்த்து ஆறவிடவும். நன்றாக ஆறியதும் மிக்சியில் பொடிக்கவும். இது இரத்த விருத்திக்கு உதவும், இள நரை போகவும் பசியைத் தூண்டவும் செய்யும்.


கொத்தமல்லி / புதினாப் பொடி:

அரை கட்டு கொத்தமல்லி / புதினாவை நன்றாக கழுவி ஒரு kitchen paperல் ஆறவிடவும். மைக்ரோவேவ் இருந்தால் ஒரு tissue பேப்பர் இல் வைத்து நிறுத்தி நிறுத்தி காய வைக்கலாம். கலர் மாறாமல் வரும். அது இல்லாதவர்கள் வீட்டிலேயே நிழலில் உலர்த்தி வைக்கவும்.

வாணலியில் ஒரு சிறு உருண்டை புளியை எண்ணையில் பொறித்து ஆறவிடவும். ஒரு பிடி கடலைப்பருப்பு, ஒரு பிடி உளுத்தம்பருப்பு ரெண்டையும் தனித்தனியாக நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். அடுத்து தேவையான மிளகாய், பெருங்காயம் வறுத்து உப்பு சேர்த்து ஆற விடவும். கடைசியாக காய வைத்த கொத்தமல்லி/ புதினாவையும் நன்றாகப் பிரட்டி எல்லாவற்றையும் கொரகொரப்பாக அரைக்கவும்.

கறிவேப்பிலையையும் இந்த முறையில் செய்யலாம். இது சாதத்துடன் சாப்பிட மட்டுமின்றி தயிர் சாதத்துக்கும் தொட்டுக்க ஏற்றது.

சாப்பிடும் விதம்:

சூடான சாதத்தில் நெய் எண்ணெய் கலந்து ஊற்றி இந்தப் பொடியை தூவிப் பிசைந்து சாப்பிடலாம்.

(குறிப்பு: புளி போட்டால் மிக்சியில் மாட்டிக்கொள்ளும் என்பவர்கள் கடையில் விற்கும் புளி பவுடர் சேர்க்கலாம். ஆனால் அது இந்த taste வராது, மேலும் கட்டி தட்டிப்போகும். எனக்கும் இந்த problem உள்ளது என்பதால் நான் புளியைத் தவிர்த்து மீதியைப் பொடி செய்து வைத்துக்கொண்டு சாதம் கலக்கும் போது புளிக்கு பதில் லெமன் ஜூஸ் சேர்ப்பேன். இது புளிப்புச் சுவை தருவதோடு சாதம் உதிரி உதிரியாக இருக்கும்படியும் செய்யும்.)


இஞ்சி சாதப் பொடி:

இதற்கு நூறு கிராம் இஞ்சி தேவை. இஞ்சியை கழுவி தோல் சீவி வில்லை வில்லையாக வெட்டி வைக்கவும். கொஞ்சம் ஈரப்பசை போகும்வரை ஒரு பேப்பர் tissue இல் வைக்கலாம்.
ஒரு வாணலியில் ஒரு கப் துவரம்பருப்பை வறட்டாக சிவக்க வறுக்கவும். அடுத்து ரெண்டு மிளகாய் வறுக்கவும்.( இஞ்சியில் காரம் இருப்பதால் மிளகாய் குறைவாகவே போதும்) விரும்பினால் ஒரு பிடி கறிவேப்பிலையும் வறட்டாக வறுக்கலாம். உப்பு பெருங்காயப் பொடி சேர்த்து ஆறவைக்கவும்.

காய வைத்த இஞ்சியை நெய்யில் பொரிக்கவும். பொரித்ததும் இஞ்சி வில்லைகளை ஒரு கிட்சேன் பேப்பரில் வைக்க அதிகப்படி நெய் வடிந்துவிடும். (பொடி செய்யும்போது fat இருந்தால் பொடியில் சிக்கு வாசனை வந்துவிடும். நெய்க்கு பதில் எண்ணெய் சேர்ப்பதும் அவரவர் விருப்பம்)

இஞ்சி துண்டுகள் ஆறியதும் முதலில் பருப்பு etc வை பொடித்துக்கொண்டு கடைசியில் இஞ்சி வில்லைகளையும் சேர்த்து பொடிக்கவும். இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் தயிர் சாதத்துடன் சாப்பிடவும் ஏற்றது.

மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள் தொடர்ந்து சாப்பிட நீங்கும்.


முருங்கைக் கீரைப் பொடி:

முருங்கை இலைகளை கழுவிக்காயவைத்து எண்ணெய் அல்லது நெய்யில் பொரிக்கவும். வாணலியில் மிளகு, சீரகம், பெருங்காயம் வறுத்து மிக்சியில் பொடித்து கடைசியில் பொறித்த இலைகளையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி உப்பு சேர்த்து சாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிடலாம். இதுவும் இரும்பு சத்து நிறைந்தது. பிரெஷ் ஆக வாரம் ஒரு முறை செய்து சாப்பிடலாம்.


கடுகு சாதப்பொடி:

ஒரு ஸ்பூன் கடுகை வறட்டாக வறுக்கவும். அதே வாணலியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு ரெண்டு ஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு மிளகாய் வறுக்கவும். மூன்றையும் பெருங்காயம் மற்றும் உப்புடன் பொடித்து வைக்கவும்.

செய்யும் விதம்:
உதிரியாக வடித்த சாதத்தில் கலக்கவும். மேலே ஒரு ஸ்பூன் நெய்யில் கடுகு கறிவேப்பிலை ஒரு ஸ்பூன் வேர்க்கடலை தாளித்து போடவும்.


தனியா சாதப் பொடி:

ஒரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு தேவையான வர மிளகாயை வறுத்து எடுக்கவும். மீதமுள்ள எண்ணையில் அரை கப் தனியாவை போட்டு கருகாமல் மணமாக வறுத்து எடுக்கவும். (தனியா சீக்கிரம் வறுபட்டுவிடும் என்பதோடு நிறைய எண்ணையும் இழுக்காது.) தனியாவையும் எடுத்த பின் ரெண்டு ஸ்பூன் உளுத்தம்பருப்பையும் போட்டு சிவக்க வறுக்கவும். இன்னும் கொஞ்சம் எண்ணை சேர்த்து ஒரு சிறு உருண்டை புளியை பிரித்துப்போட்டு அப்படியே அடுப்பை அணைக்க புளி கரகரப்பாகும். பூண்டு சேர்க்க விருப்பமுள்ளவர்கள் ஏழெட்டு பூண்டுப்பற்கள் புளியுடன் சேர்க்கலாம். எல்லாம் ஆறியதும் மிக்சியில் போட்டு கரகரப்பாக பொடித்து காற்று புகாத பாட்டிலில் வைக்கவும். இது கொஞ்ச நாட்கள் நன்றாகவே இருக்கும். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். பத்தியம் சாப்பிடுபவர்களும் சாப்பிடக்கூடிய இது ஒரு ஆந்திரா ஸ்பெஷல்.


ஓம சாதப்பொடி:

ஓமமும் சீரகமும் தலா ஒரு ஸ்பூன் என்றால் மிளகு அரை ஸ்பூன் போதும். (ஓமத்திலேயே கொஞ்சம் காரம் இருக்கும்), உப்பு தேவையானது எடுத்து பச்சையாகவே கொரகொரவென்று பொடிக்கவும்.

சாப்பிடும் விதம்:

சூடான சாதத்தில் இந்தப் பொடியை மேலே போட்டு அதன் மேலே நெய்யைக் காய்ச்சிக் கொட்டி பிசைந்து சாப்பிடனும். காய்ச்சின நெய்யை மேலே விடுவதால் இந்தப் பொடி அந்த சூட்டிலேயே வருபட்டுவிடும். வயிற்று வலி இருந்தால் இதை சாப்பிடலாம்.


நெல்லிக்காய்ப் பொடி:

பத்து நெல்லிக்காய்களை ( அல்லது தேவையானதை) கொட்டை நீக்கி மிக்சியில் பூ போலத் துருவவும். (இதை சுலபமாக செய்ய நெல்லிக்காயை கழுவி, freezerல் திறந்தே வைக்கவும். தோல் சுருங்கிப்போகும். அதை அப்படியே துருவலாம்). காரத்துக்கு வேண்டிய பச்சை மிளகாய்களை உப்புடன் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.

ஒரு டீஸ்பூன் கடுகை வறட்டு வாணலியில் பட பட வென வரும் வரை வறுக்கவும். இந்த நெல்லிப்பொடியில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், கடுகு, பச்சை மிளகாய் தூள் சேர்த்து ஒரு கண்ணாடி பாட்டிலில் அழுத்தி வைக்கவும். நிறம் சற்று வெளுக்குமே தவிர ரெண்டு வருடம் ஆனாலும் கெடாது.

சாப்பிடும் விதம்:

சூடு சாதத்தில் கலந்து சாப்பிடலாம். நீர் மோரில் போட்டு சாப்பிடலாம். தயிரில் போட்டு பச்சடியாக்கலாம். தேங்காய் சேர்த்து துகையல் அரைக்கலாம். உடம்புக்கு குளிர்ச்சி, கர்ப்பிணிப் பெண் வாயில் சிறிது போட்டுக்கொள்ள குமட்டல் நிற்கும். இன்னும் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது.


வேப்பம்பூ பொடி:

நாலு டேபிள்ஸ்பூன் வேப்பம்பூவை குப்பை காம்பு நீக்கிவிட்டு நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். கருப்பாக வறுத்தாலும் இதன் சுவை கூடத்தான் கூடும். அடுத்து அதே நெய்யில் ரெண்டு ஸ்பூன் பாசிப்பருப்பை மணமாக பொன்னிறத்தில் வறுக்கவும். ரெண்டு மிளகாய் ஒரு டீஸ்பூன் சீரகம் அடுத்தடுத்து வறுக்கவும். புளி வேண்டுமானால் பொறித்து சேர்க்கலாம். உப்பு பெருங்காயத்துடன் நைசாக பொடிக்கவும்.

இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம், கொஞ்சம் கொதிநீரில் இட்டு தாளித்தால் ரசம் போல இருக்கும், தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். ஜுரம் வந்த வாய்க்கு ருசிக்கும்.
நான் புளி சேர்க்காமல் தான் செய்கிறேன். கசப்பே தெரியாது.


அப்பள சாதப் பொடி:

நாலு உளுந்து அப்பளத்தை சுட்டு வைக்கவும். ரெண்டு மிளகாய் வற்றலை ஒரு சிறு கட்டி பெருங்காயத்துடன் வறட்டாக வறுத்து பொடிக்கவும். உப்பு சேர்த்து அப்பளங்களை கையால் நொறுக்கிப் போடவும். சூடான சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்து இந்த பொடியும் கலந்தால் அப்பள சாதம் ரெடி.

பொறித்த அப்பளங்களானால் வர மிளகாய்க்கு பதில் ரெண்டு மோர் மிளகாய்களை பொறித்து சேர்க்கலாம். உப்பு மட்டும் மோர் மிளகாயில் ஏற்கனவே இருப்பதால் கவனமாக போடவும். இது ஒரு சட்டுபுட்டு டிஷ்.


ஆரஞ்சு தோல் பொடி:

என்னது? கமலா ஆரஞ்சு தோலை சாப்பிடணுமா? நாங்கள் மாடா என்று கோவிக்காமல் இதை செய்து பாருங்க.. அப்புறம் இதற்கு உங்கள் சொத்தை எழுதித் தரலாமான்னு யோசியுங்கள்!

சீசனில் கமலா ஆரஞ்சு சாப்பிட்ட பின் (அல்லது நாக்பூர் ஆரஞ்சு கூட பெஸ்ட்) தோலை தூக்கி எறியாமல் உள் பக்கம் உள்ள நார், நூல் போல வருபவைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக கட் செய்து வைக்கவும். ரெண்டு அல்லது மூணு பழத்தின் தோல் போதும். கட் செய்தா தோலை கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுப் பொறித்தார் போல எடுக்கவும். மீதியுள்ள எண்ணையில் ஒரு உருண்டைப் புளியை பிரித்துப் போட்டு நன்றாக ஈரம் காயும் வரை வைத்து அப்படியே அடுப்பை அணைத்து வைக்கவும்.

இன்னொரு வாணலியில் ரெண்டு பிடி கடலைப்பருப்பு, ஒரு பிடி உளுத்தம்பருப்பு, ஒரு ஸ்பூன் மிளகு, ரெண்டு மிளகாய் எல்லாவற்றையும் தனித்தனியாக பொன்னிறத்தில் வறுத்து வைக்கவும். ஆறியதும் உப்பு பெருங்காயப்பொடி சேர்த்து மிக்சியில் பொடித்து கடைசியில் ஆரஞ்சு தோல் மற்றும் புளியையும் சேர்த்து பொடிக்கவும். இது நாள் பட்டு வரும் என்பதோடு பித்தத்துக்கும் நல்லது.

இதை சாதத்துடன் சாப்பிடலாம், இட்லி மிளகாய் பொடிபோலவும் உபயோகிக்கலாம்.
(குறிப்பு: இந்த ஆரஞ்சு தோலிகளை வற்றல் குழம்பில் பொறித்து சேர்க்கலாம்.)


வேப்பிலைக் கட்டி என்கிற நார்த்தை இலைப்பொடி:

இது மனுஷியே இல்லை, மாடுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா? இதெல்லாம் நம்ம முன்னோர் செய்து சாப்பிட்டவைகள்தான். உடம்புக்கும் நல்லது. எங்கள் வீட்டில் ஐப்பசி மாதத்தில் இதை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்று சொல்வார்கள். பிரசவித்தவர்கள் தயிர் சாதத்துடன் சாப்பிட மிகவும் ஏற்றது. இன்னும் சவுத் இந்தியாவில் பலர் வீட்டில் நாரத்தை மரம் வைத்துள்ளார்கள். எலுமிச்சை மரம் இருந்தால் அந்த இலையிலும் செய்யலாம்.

நார்த்தை இலை அல்லது எலுமிச்சைஇலை எடுத்து சம அளவு கறிவேப்பிலையும் எடுத்து நன்கு கழுவி ஒரு துணியில் காய விடவும். நார்த்தை இலையில் உள்ள நரம்பை கவனமாக நீக்கிவிடவேண்டும். (அது வாயில் மாட்டி சுவையைக் கெடுக்கும், பல்லில் சிக்கும்.) இலைகளை பொடியாக நறுக்கி கறிவேப்பிலையுடன் (ஈரம் போக காய வேண்டியது முக்கியம்) ஒரு ஸ்பூன் ஓமமும் சேர்த்து மிக்சியில் பொடிக்கவும். (ஓமத்தில் மண் இருக்கக்கூடும் என்பதால் அதை நீரில் இட்டு மேலே தங்கும் குப்பைகளை நீக்கி டீ வடிகட்டியில் வடிகட்டி, வறட்டு வாணலியில் வறுக்க, நீர் எல்லாம் காய்ந்து ஓமம் படபடவென்று வெடிக்கும்) தேவையான மிளகாயையும் லேசாக வறுத்து பொடிக்கலாம். உப்பு சேர்த்து ஒரு தட்டில் கொட்டி அப்படியே வைக்கவும். முதலில் ஈரம் உள்ளது போல தெரிந்தாலும் காற்று புகாத பாட்டிலில் வைத்து உபயோகிக்க உபயோகிக்க ஈரம் போய் நன்றாக ஆகிவிடும். நோயிலிருந்து மீண்டவர்களும் சாப்பிடக்கூடியது இது.


அம்ருதப் பொடி:

ஓமம் – அரை கப் (கல் மண் அரிந்து வறட்டாக வறுக்கவும்)
தனியா – 1 கப்
மிளகு – கால் கப்
சீரகம் – 1 கப்
சுக்கு (சின்ன சின்ன துண்டுகள்) – கால் கப்
உடைத்த கண்ட திப்பிலி (தேசாவரம்/குச்சி திப்பிலி) – 1 கப்
துவரம்பருப்பு – அரை கப்
காய்ந்த கறிவேப்பிலை – அரை கப்
ஒரு துண்டு பொறித்த பெருங்காயம்.

மேலே சொன்னவற்றை வறட்டாக தனித்தனியாக வறுத்து மிக்சியில் பொடித்து நன்கு சலிக்கவும்.
இதுதான் அம்ருத பொடி. இது நிறைய அவதாரம் எடுக்கும்.

1. சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட வாய்வுத்தொல்லை, அஜீரணம் நீங்கும்.
2. ரசம் செய்ய எடுக்கும் புளித்தண்ணீரில் இந்த பொடி, உப்பு போட்டு கொதிக்க விட்டு மேலே கடுகும் பூண்டும் தாளித்தால் பசியைத் தூண்டும் ரசம் ரெடி.
3. கடுத்த மோரில் ( புளிக்காத மோர்) ஒரு ஸ்பூன் அம்ருத பொடி மற்றும் உப்பு சேர்த்துக் குடிக்க வயிறு உபாதைகள் போகும்.
4. பத்திய சாப்பாடு சாப்பிடுபவர்கள் புளிக்கு பதில் மூணு தக்காளி நறுக்கிப்போட்டு அதில் ஒரு டம்ளர் நீர் விட்டு உப்பு மற்றும் 3 ஸ்பூன் இந்த பொடியுடன் கொதிக்கவிட்டு கெட்டியானதும் இறக்கவும். மேலே ஒரு ஸ்பூன் நெய்யில் பூண்டு தாளித்து சேர்க்கவும். இந்தக் குழம்பு பிரசவித்தவர்களும் சாப்பிடலாம்.
5. சாதா வற்றல் குழம்பு போல சாப்பிட வேண்டுமானால் கரைத்த புளியில் உப்பு, ஒரு துண்டு வெல்லம் சேர்த்து இந்த மருந்துப் பொடியும் போட்டு கொதிக்க விடவும். சுண்டியதும் கடுகு கறிவேப்பிலை நாலு சுண்டக்காய் தாளிக்கவும்.


நவரசப் பொடி:

இது வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குணம் தெரியும்.
சுண்டைக்காய் வற்றல் – 2 கப்
வேப்பம்பூ (காய்ந்தது) – 2 கப்
கறிவேப்பிலை (fresh) – 2 கப்
சுக்கு துண்டு – 2 பெரியது
சீரகம் – 6 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் – 6
கடுகு – 2 டீஸ்பூன்
ஒரு துண்டு பெருங்காயம், உப்பு தேவையானது.

கறிவேப்பிலையைக் கழுவி ஈரம் போக காய வைக்கவும்.
எல்லா சாமான்களையும் வறட்டு வாணலியில் தனித்தனியாக வறுக்கவும்.
சுக்குக்கு பதில் சுக்குப்பொடியும் சேர்க்கலாம்.
கடுகையும் எண்ணையின்றி வெடிக்க விட்டு எடுக்கவும்.
உப்பு கூட கடைசியில் போட சூட்டிலேயே வறுபடும்.
எல்லாவற்றையும் சேர்த்து நைசாக பொடித்து air tight ஜாரில் எடுத்து வைக்க ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப்போகாது.

சாப்பிடும் விதம்:
சாதாரணமாக சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். வயிற்றுப்போக்கு இருந்தால் சூடான சாதத்தில் நெய்யும் எண்ணெய்யும் காய்ச்சிக் கொட்டி பிசைந்து சாப்பிடவும். அடுத்து ஆறின சாதத்தில் மோர் விட்டு சாப்பிட, வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படும்.


எலுமிச்சங்காய்த் தோல் பொடி:

ஒரு பிடி தனியா, நாலு மிளகாய், ரெண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு இவைகளை எண்ணெய் இன்றி வறட்டாக பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். ஆறியதும் உப்பு பெருங்காயப்பொடி சேர்த்து காய்ந்த எலுமிச்சை மூடிகள் ஒரு பத்து வைத்து மிக்சியில் பொடிக்கவும். இது எண்ணையில்லாத ஊறுகாய் போல தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். வாய் கசப்பு பித்தத்துக்கு நல்லது.


சீரகப் பொடி:

இது என் பாட்டி செய்து வைப்பது. ஒரு பிடி சீரகத்தில் ஒரு மூடி எலுமிச்சம்பழத்தை பிழிந்து உப்பு சேர்த்து அப்படியே வெயிலில் வைத்து விடவேண்டும். ஜூஸ் காய்ந்து போனதும் அம்மியிலோ மிக்சியிலோ அரைத்து வைத்துக்கொண்டால் கர்ப்பிணிப் பெண்கள் வாய்க்கு ருசியாக இருக்கும்.
பிரயாணத்தின் போது சிலர் குமட்டி பக்கத்தில் உள்ளவர்கள் வயிற்றில் PS brand புளியைக் கரைப்பார்கள். அவர்கள் வாயில் ஒரு பின்ச் போட்டுக்கொண்டால் vomitting sensation குறையும். அதிக சாப்பாடினால் ஏற்படும் உப்புசமும் நீங்க இது மருந்து.

குறிப்பு: இதே போல சீரகத்துக்கு பதில் வேப்பம்பூவிலும் செய்துகொள்ளலாம். வெறுமே பொடித்தால் வேப்பம்பூ பொடி, ரசத்தில் தாளித்தால் வேப்பம்பூ ரசம், அப்படியே பொறித்தால் புளிப்பு சுவையுடன் வற்றல்….


ரெடிமேட் வடை மிக்ஸ் :

செய்வது மிகச் சுலபம். அரை கிலோ உளுந்தை (வறுக்கக்கூடாது) நல்லா காயும் வெயிலில் ஒரு மணி நேரம் வைத்து மிஷினில் தந்து மிகவும் நைசாக திரித்துக்கொள்ளுங்கள்.

செய்யும்விதம்:

வடை அல்லது போண்டா தேவைப்பட்டபோது, அரை கப் மாவை எடுத்து அதில் புளிப்பில்லாத தயிர், உப்பு, கால் ஸ்பூன் சோடா உப்பு( ரெண்டு பின்ச்) சேர்த்து மிக்சியில் ஒரேயொரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் மிளகு அல்லது பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒரு பிடி நறுக்கின வெங்காயம் அல்லது கோஸ் சேர்த்து வடையாகப் பொரிக்கலாம்.

மாவு அரைத்த மாவு போல புசு புசுவென்று இருக்காது என்றாலும் வடை மட்டும் மெத்து மெத்துதான். முதலில் ஒன்று தட்டிப் பார்த்து சரியாக வராவிட்டால் தயிர், சோடா, தண்ணீர் எதாவது ஒன்று கூடக் குறைய இருக்கும் என்று தெரிந்துகொண்டு அட்ஜஸ்ட் பண்ணலாம்.


திடீர்த் தோசை மாவு:

ரெண்டு கப் பச்சரிசி, ரெண்டு கப் இட்லி அரிசி, ஒரு கப் உளுத்தம்பருப்பு ஒரேயொரு டீஸ்பூன் வெந்தயம் – நான்கையும் கலந்து மிஷினில் மாவாக திரித்து வைத்துக்கொண்டால் தேவையான போது நீர் விட்டுக் கரைத்து உப்பு போட்டு கொஞ்சம் மோர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து தோசை வார்க்கலாம்.


கல்கண்டு சாதப் பொடி:

உபயோகிக்கும் விதம்:

திடீரென விருந்தாளி வந்தால் ஒரு கரண்டி சாதத்தில் ஒரு கிளாஸ் பாலை விட்டு கொஞ்சம் சூடானதும் இந்த பொடியை சேர்த்து இறக்கினால் இன்ஸ்டன்ட் பாயசம்.
மழைக்காலங்களில் அல்லது குழந்தைகளுக்கு சளி பிடித்திருக்கும்போது, இரவு தயிர் சாதத்துக்கு பதில் பால் சாதம் போடுவோம். அந்த சமயத்தில் பாலில் இந்த பொடி தேவையானது கலந்து போடலாம். கல்கண்டு தொண்டைக்கட்டுக்கு நல்லது.

இனி சில பொடிகள் வைத்து பானங்கள் செய்யும் விதத்தைப் பார்க்கலாம்.


சுக்கு மல்லிக் காபி:

அரை கப் தனியாவுக்கு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு வேண்டும். ரெண்டையும் லேசாக சூடு வரும்வரை வறுத்துக்கொள்ளவும். இதை மிக்சியில் நன்றாகப் பொடித்து அதனுடன் ஒன்றரை டேபிள்ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து மீண்டும் ஒரு முறை மிக்சியை ஓட்டவும். சுக்கு மல்லிக் காபி பொடி ரெடி.


காபி போடும் விதம்:

ஒரு டம்ளர் நீரில் தேவையான பொடி போட்டு கூடவே இனிப்புக்குத் தக்க பனை வெல்லம் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து கொதித்ததும் வடிகட்டி குடிக்கலாம்.
பனை வெல்லத்துக்கு பதில் சாதா வெல்லமும் சரிதான். சிறிது தேன் கலந்தும் அருந்தலாம். இது பசி தூண்டி, சளி பிடித்தால் அதற்கு மருந்து. ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதோடு கொலஸ்ட்ராலும் கட்டுப்படுமாம்.


சுக்குப் பால் பொடி:

ரெண்டு டேபிள்ஸ்பூன் சுக்குப்பொடி, நாலு ஏலக்காய்(தோல் நீக்கி உள்ளே உள்ள விதையை மட்டும் எடுக்கவும்) அரை கப் பனங்கல்கண்டு அல்லது சாதா கல்கண்டு மூன்றையும் ஒன்றாக மிக்சியில் அல்லது அம்மியில் பொடி பண்ணி வைக்கவும்.
இதை சூடான பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிடலாம். பால் காய்ச்சியதும் கலப்பது பெஸ்ட். (வேண்டுமானால் சுக்குப்பால் பொடி கலந்த பாலை வடிகட்டிக்கலாம்) பாலுடன் கலந்து காய்ச்சினால் பால் திரிந்து போக வாய்ப்பு உள்ளது. பால் வேண்டாம் என்றால் சுடுநீரில் கலந்து வடிகட்டி சாப்பிடலாம். இப்படி சாப்பிட உடம்பில் உள்ள நச்சுக்கள் அகலும்.


மிளகுப் பால் பொடி:

வால் மிளகு என்று நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இது சளி, தொண்டைக்கட்டு, மூக்கடைப்புக்கு கண் கண்கண்ட மருந்து. கருப்பு மிளகு ( நாம் வீட்டில் உபயோகிப்பது) ஒரு ஸ்பூன் என்றால் வால் மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து தனித்தனியாக வறட்டு வாணலியில் வறுத்து வாசனைக்கு ரெண்டு ஏலக்காயையும் சேர்த்து பொடித்து வையுங்கள். மேலே சொன்ன முறையில் காய்ச்சின பாலில் இதை கலந்து குடிக்க தொண்டைக்கட்டு சளி நீங்கும்.

சுவைக்கு சாப்பிடும் பொடி, ஆரோக்கியத்துக்கு சாப்பிடும் பொடி, மருந்தாக சாப்பிடும் பொடி எல்லாம் பார்த்தாச்சு. ஒரு கம்பெனிக்கு CEO போல நம் வீட்டு CEO (Chief Entertaining Officers), அட, அதாங்க, நம்ம குழந்தைகளுக்கு ஒன்றும் சொல்லாவிட்டால் எப்படி? அவங்க dutyயில் சேரும்போது தொடங்கி வளரும் பருவம் வரை கொடுக்கக் கூடிய பானங்கள் தயார் செய்ய சில பொடி வகைகளைப் பார்க்கலாம்.


நேந்திரங்காய் மால்ட்:

இது அறுபது நாள் குழந்தைக்கு தரலாம். solid food கொஞ்ச கொஞ்சமாக பழக்கப் படுத்தினால்தான் குழந்தை கொஞ்ச நேரம் சேர்ந்தாற்ப்போல் தூங்கும். தூங்கத்தூங்கத்தான் வளரும்.
நேந்திரங்காயை வாங்கி தோல் சீவி சிப்ஸ் கட்டையில் சீவிக்கொள்ளவும். சீவிய வில்லைகளை தூசி படாமல் மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைக்கவும். (குழந்தைகள் உணவு என்பதால் கூடுமானவரை பிறர் கண் படாமல் செய்ய வேண்டும். அதற்க்கு சாத்தியம் இல்லை என்றால் வீட்டினுள்ளேயே நிழலில் உலர்த்தி வைக்கலாம்.)

ரெண்டு மூணு நாளில் காய்ந்துவிடும். காய்ந்ததை ஒரு சம்புடத்தில் போட்டு மூடி வைக்கவும். நமக்குத் தேவையான போது இந்த சிப்ஸ் ஐ மிக்சியில் நன்கு பொடியாகப் பொடிக்கவும்.


மால்ட் செய்யும் விதம்:

அரை ஸ்பூன் பொடியை கொதிக்க வைத்து ஆறிய நீரில் கரைக்கவும். கால் கப் நீர் போதும். அதை அடுப்பிலேற்றி கிளற, கூழ் போல் ஆகும். வாழை என்பதால் கொழகொழப்பு வந்துவிடும். முதலில் அழுக்கு கலரில் இருக்கும் இந்த பொடி கூழாக ஆகும் போது நேந்திரங்காய் சிப்ஸ் கலரில் அழகாக வந்துவிடும். இதில் ஒரேயொரு பின்ச் சர்க்கரை சேர்த்து இறக்கியதும் கால் ஸ்பூன் புளிப்பில்லாத தயிர், கால் ஸ்பூன் உருக்கிய நெய் சேர்த்து ஆறியதும் குழந்தைக்கு ஸ்பூனால் ஊட்டி விடவும். அல்வா மாதிரி உள்ளே போய்விடும். கொஞ்ச நாள் இதே அளவு தந்த பின் அரை ஸ்பூன் அதிகரிக்கலாம். அதற்கேற்ப தயிரும் நெய்யும். அதிக நேரம் பசி தாங்காது என்றாலும் solid food முழுங்க தெரிந்து கொள்ளும். குழந்தைகள் கொழு கொழுவென்று தெரிவார்கள்.


ராகி மால்ட்:

அரை கிலோ ராகி (கேழ்வரகு)யை முதல் நாள் இரவே ஊறவிடவும். காலையில் அதை வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் கட்டி மேலே கொஞ்சம் நீர் தெளித்து வைத்து விட்டால் (sprout)முளை விடும். முளை விட்ட ராகியை ஒரு dry towel ல் காற்றாட விட்டால் நன்றாக காயும். ஈரமின்றிக் காய்ந்ததும் ஒரு வாணலியில் ரொம்பக் குறைந்த சூட்டில்வறட்டாக ஒவ்வொரு கைப்பிடியாக போட்டு (பாப் கார்ன் மாதிரி நன்றாக பாப் ஆகும், அதனால் ஒரு இட்லி பானை மூடி அல்லது pan மூடி கொண்டு மூடி வைத்தால் நல்ல மணமாக வறுபடும்.) இதை செய்ய சற்று பொறுமை தேவை. இப்படி செய்ததை மிஷினில் தந்தோ வீட்டிலேயோ நைசாக அரைத்து வைக்கவும். இதுதான் ராகி மால்ட்.

பாலில் கரைக்கும் விதம்:

ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க விட்டு அது நன்றாக கொதிக்கும்போது ஒரு டேபிள்ஸ்பூன் ராகி மால்ட்டை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் விடவும். மாவு வெந்து கெட்டியானதும் சர்க்கரை பால் கலந்து குடிக்கவும். இது ஜீரணம் ஆவது கொஞ்சம் கஷ்டம் என்பதால் குழந்தைகளுக்கு அரை டம்ளரில் ஆரம்பித்து கொஞ்ச கொஞ்சமாக அளவை increase பண்ணலாம்.


Homemade Horlicks:

பொட்டுக்கடலை கால் கிலோ
கோதுமை அரை கிலோ
(sprouted) முளைகட்டிய ராகி அரை கிலோ (முன் சொன்ன முறையில் செய்யவும்)
உளுந்து கால் கிலோ
முளை கட்டிய கம்பு (bajra) கால் கிலோ
ஏலக்காய் – விரும்பினால்.

பொட்டுக்கடலை தவிர மீதியை மிக சிறு சூட்டில் கைப்பிடி கைபிடியாக போட்டு நன்கு வறுக்கவும். கடைசியில் அந்த சூட்டிலேயே ஏலக்காய் பொட்டுக்கடலையை போட்டு வைத்திருந்தால் கர கர வென்று பொறியும். எல்லாவற்றையும் மிஷினில் நைசாக அரைத்து சலிக்கவும்.

செய்யும் விதம்:

கொதிக்கும் நீர் அல்லது பாலில் தேவையான பொடியைக் கலந்து சீனி கலந்து குடிக்கலாம்.
அல்லது சர்க்கரைப்பொடி மற்றும் பால் பவுடர் சேர்த்தால் வெறும் நீரில் கலந்து தரலாம். சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் ஏற்றது இது.

வளரும் குழந்தைகளுக்கு Protein Rice பொடி:

இது ரெண்டு வயதுக்கு மேல் தரலாம்.

பொட்டுக்கடலை – 800gm
சுக்கு, மிளகு, சீரகம், ஓமம், சோம்பு – தலா 100 gm
பூண்டு – ஒரு முழு பூண்டு
கறிவேப்பிலை – ஒரு பிடி
பெருங்காயம் – ஒரு பெரிய கட்டி
உப்பு – தேவையானது

மேலே சொன்ன எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி வாணலியில் தனித்தனியாக லேசாக வறுக்கவும். பூண்டை மட்டும் உரித்து தோல் நீக்கி தனியாக வறுக்கவும். மிக்சியில் பொடித்துக்கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் முதல் சாதத்தில் நெய்யுடன் பிசைந்து தர எளிதில் ஜீரணமாவதுடன் பசியைத் தூண்டி குழந்தைகள் உடம்பைத் தேற்றும்.

(குறிப்பு: நாம் செய்வது குழந்தைகளுக்காக என்பதை மறக்காமல் வறுக்கும் முன் ஓமம் போன்றவற்றை அலசி வடிகட்டி காய வைத்து பிறகு வறுக்கவும். அதில் உள்ள கல் மண் போன்றவை குழந்தைகளுக்கு பாதிப்பு விளைவிக்கலாம், அதை அவர்களுக்கு சொல்லவும் தெரியாது.)


பீடா பாக்குத்தூள்:

பாக்கு – 100 gm
கசகசா – 500 gm
சிறிய கொப்பரை – 1
சர்க்கரை – 300 gm
ஜாதிக்காய் (nutmeg) – 1
ஏலக்காய் – 5
மென்தால் (Menthol) – 5 gm
Pear Essence – 2 tsp

பாக்கை சிறு சிறு தூளாக இடித்து, கொப்பரையை துருவி வைக்கவும்.
ஜாதிக்காயையும் ஏலக்காயையும் இடிக்கவும்.
அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் அப்படியே போட்டு மென்தால் சேர்த்து நன்றாகக் கலக்கி கடைசியாக essence சேர்த்து கலந்து air tight jarஇல் ஸ்டோர் பண்ணவும். இது நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

பீடா செய்யும் விதம்:

வெற்றிலையைக் கழுவி துடைத்து, நரம்பை நீக்கி, மேலே கொஞ்சம் சுண்ணாம்பைத் தடவி இந்த பீடா தூள் ரெண்டு மூணு ஸ்பூன் வைத்து சுருட்டி போட்டுக்கொண்டால் வாய்க்கு ருசியாகவும் நறுமணத்துடனும் இருக்கும்.


குழம்புப் பொடி:

அரை கிலோ தனியா என்றால் அரை கிலோ வர மிளகாய் எடுக்கணும்.

இந்தளவுக்கு ஒன்றரை கப் துவரம்பருப்பு, ஒரு கப் கடலைப்பருப்பு, ஒரு கப் மிளகு, அரை கப் வெந்தயம், ஒரு பிடி சீரகம், நூறு கிராம் மஞ்சள் எடுத்து வெயிலில் உலர்த்தி அரைக்கவும்.

வீட்டிலேயே கொஞ்சம் கொஞ்சமாக பிரெஷ் ஆக அரைக்க விரும்பினால் ஒரு குழிக்கரண்டியை வைத்து எல்லா சாமான்களையும் அளந்து கொள்ளலாம். அப்படி எடுப்பதாக இருந்தால்

ரெண்டரை கரண்டி தனியா,
ஒன்றரை கரண்டி துவரம்பருப்பு
ஒரு கரண்டி கடலைப்பருப்பு
ஒரு கரண்டி மிளகு
அரை கரண்டி வெந்தயம்,
ஒரு ஸ்பூன் சீரகம்
காரத்துக்குத் தேவையான மிளகாய் எடுத்து வாணலியில் தனித்தனியாக லேசாக வறுத்து அல்லது வெயிலில் வைத்து எடுத்து மிக்சியில் பொடிக்கவும். தேவையான மஞ்சள் தூள் கலந்து வைக்கவும். இந்த முறையில் எடுப்பது சுலபமாய் இருக்கும்.
இந்தப் பொடியை உபயோகித்து பருப்பு போட்ட சாம்பாரும் செய்யலாம், புளிக்குழம்பும் செய்யலாம்.

மேலே சொன்னவைகள் சாதாரண குழம்பு பொடி வகைகள். குழம்பு செய்யும்போது பிரெஷ் ஆக வறுத்து அரைத்து செய்யும் பொடிகள் சில உண்டு. அந்தப் பொடிகளையும் அதை வைத்து செய்யும் குழம்பு வகைகளையும் பார்க்கலாம்.


மணத்தக்காளி வத்தல் குழம்புப் பொடி:

வற்றல்களிலேயே சிறந்த வாசனை உள்ளது மணத்தக்காளி வற்றல் என்று சொல்லலாம். இது வாய்ப்புண் வயிற்றுப்புண்ணை ஆற்ற வல்லது. இந்த வற்றல் வறுத்துப் போட்டு மேலே சொன்ன ஏதாவது ஒரு குழம்பு பொடியை use பண்ணி குழம்பு செய்தால் அது பரவாயில்லை ஓகே தான் என்ற பாராட்டை வாங்கும். ஆனால் இந்த முறையில் குழம்பு பொடி அரைத்து வற்றல் குழம்பு செய்தாலோ நீங்கள் பாராட்டு மழையில் நனைவது நிச்சயம்.
அப்படியென்ன ஸ்பெஷல் இதில் என்றால் அரைக்கும் பொடியில் வற்றலையும் வறுத்து அரைத்து சேர்ப்பதுதான் இதன் speciality.

கடலைப்பருப்பு – 25 gm
துவரம்பருப்பு – 50 gm
முழு உளுத்தம்பருப்பு – 50 gm
தனியா – 15 gm

மேலே சொன்ன இந்த நான்கையும் வறட்டு வாணலியில் தனித்தனியாக நாள் பொன்னிறத்தில் வறுத்து வைக்கவும். இவைகள் ஆறுவதற்குள் அடுப்பை அனைத்து விட்டு வாணலி சூடாக இருக்கும்போதே அதில் மிளகு, சீரகம், வெந்தயம் மூன்றும் தலா ரெண்டு டீஸ்பூன் போட்டு காரத்துக்கு வேண்டிய மிளகாய் வற்றலையும் போட்டு பிரட்டவும். (இப்படி செய்வது spices அதிகம் வறுபடாமல், அதே சமயம் நன்கு பொடியாக உதவும்.)

இப்படி பிரட்டியதை வறுத்த பருப்புடன் சேர்த்து ஆற வைக்கவும். இனி அடுப்பை மூட்டி வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அதில் 50 gm மணத்தக்காளி வற்றலை போட்டு வற்றல் பொன்னிறத்தில் பொரியும்படி காந்தாமல் வறுக்கவும். நல்ல மணத்துடன் வறுபட்ட வற்றலை பருப்புடன் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். மணத்தக்காளி வற்றல் குழம்பு பொடி ரெடி.

குறிப்பு: இது மணத்தக்காளி வற்றல் குழம்புக்கு மட்டுமே உபயோகிக்கவும். சுண்டக்காய் அல்லது வேறு வற்றலுக்கு எடுபடாது.
மணத்தக்காளி வற்றலை வாங்கும்போது உப்பு சேர்க்காத வற்றலாய் பார்த்து வாங்குவது நலம்.


குழம்பு செய்யும் விதம்:

புளியை கரைத்துக்கொண்டு, உப்பு சேர்த்து இந்த குழம்பு பொடியை தாராளமாக போடவும். பருப்பெல்லாம் அரைக்கும்போதே சேர்த்துவிட்டதால் மீண்டும் தாளிப்பு தேவையில்லை. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், ஒரு வற்றல் மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கரைத்த புளியையும் சேர்த்து கொதித்து சுண்டியதும் இறக்கவும். மேலே மீண்டும் ஒரு ஸ்பூன் மணத்தக்காளி வற்றலை எண்ணையில் பொறித்துப் போட குழம்பு வாசனை ஊரைத் தூக்கும். குழம்பு சீக்கிரத்தில் ரெடி ஆகும் என்பதும் இதன் advantage.

சுண்டைக்காய் வற்றலை உபயோகித்து செய்ய வேண்டும் என்றால் முதலில் சொன்ன பொடிவகைகளில் ஒன்றை use பண்ணலாம்.


வெந்தயக் குழம்புப் பொடி:

வற்றல் போடாமல் வேறு காய்கள் போட்டு செய்யும் குழம்புக்கு வெந்தயக் குழம்பு என்று பெயர். இதற்கு சாம்பார் போல பருப்பெல்லாம் வேண்டாம். காய்கள் வெந்துவிட்டால் போதும், குழம்பு ரெடி. பொடி செய்யும் விதத்தைப் பார்க்கலாம்.

கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
தனியா 4 டேபிள்ஸ்பூன்
மிளகு 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் 5 (அல்லது காரத்துக்கு வேண்டியது)
வெந்தயம் 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு பிடி
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

எல்லாவற்றையும் நல்லெண்ணெய் விட்டு தனித்தனியாக பொன்னிறத்தில் வறுத்துக்கொண்டு நைசாக அரைக்கவும். கறிவேப்பிலை மைக்ரோவேவ் இருந்தால் அதில் காய வைத்து போட பொடியின் நிறம் மஞ்சளும் பச்சையுமாக வரும்.
(மேலே சொன்ன அளவில் செய்து வைத்துக்கொண்டால் நாலு பேர் உள்ள குடும்பமானால் ரெண்டு வாரத்துக்கு தாராளமாக வரும்)


வெந்தயக் குழம்பு செய்யும் விதம்:

பூசணிக்காய், சௌசௌ, போன்ற காய்களானால் குழம்பில் போட்டால் வெந்துவிடும். கத்தரிக்காய் வெண்டக்காய் முருங்கைக்காய் போன்றவற்றை எண்ணையில் வதக்கி சேர்க்கணும். சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு என்றால் குக்கரில் வேக வைத்து சேர்க்கணும். காய்கள் இல்லாமல் ஊறவைத்து வேகவைத்த கருப்பு கொத்துக்கடலை அல்லது நிலக்கடலை சேர்த்து குழம்பு செய்தாலும் இந்த பொடி போடலாம்.
நல்லெண்ணெய் விட்டு கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, தாளித்து (வதக்க வேண்டிய காய்களை போடுவதானால் இப்போது போட்டு வதக்கவும்) புளிக்கரைசலை விட்டு (வெந்த காய்கள் என்றால் இங்கே சேர்க்கவும்) பொடியும் சற்றே அதிகமாக போட்டு கொதித்ததும் உப்பு சேர்த்து நன்றாக சுண்டும் வரை வைத்து (அல்லது ஒரு ஸ்பூன் cornflour கரைத்து விடலாம்) இறக்கவும். மேலே ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் பச்சையாக சேர்ப்பது மணத்தைக் கூட்டும்.

டிப்ஸ் : இந்தப் பொடியை போட்டு குழம்புதான் செய்ய வேண்டும் என்பதில்லை. எந்த கீரையை பருப்புடன் மசித்தாலும் இந்த பொடி போட்டால் அதன் சுவை விதயாசமாக இருக்கும். தேங்காய் பால் அல்லது தேங்காய் சேர்ப்பது அவசியம்.


பொறித்த கூட்டுப் பொடி:

ஒரு கரண்டி உளுத்தம்பருப்பு, அரை கரண்டி மிளகு, ரெண்டு மிளகாய், பெருங்காயம் ஒரு மூடி தேங்காய் வேண்டும். தேங்காய் தவிர மீதியை நெய்யில் தனித்தனியாக வறுத்து எடுத்து கடைசியில் தேங்காயும் லேசாக (ஈரம் போகும் வரை) பிரட்டி அரைத்து பிரிட்ஜில் வைக்கலாம். கூட்டு கொஞ்சம் திக்காக வேண்டியிருந்தால் அரை கரண்டி கடலைப்பருப்பும் வறுத்து அரைக்கலாம்.

இது பீன்ஸ், வெள்ளரிக்காய், கோஸ், சௌ சௌக்கு match ஆகும். காய்களை பருப்புடன் வேக விட்டு உப்பும் இந்த பொடியும் சேர்த்து தாளித்தால் கூட்டு ரெடி. கடைசியில் ஒரு ஸ்பூன் தேங்காய் பாலோ அல்லது ஒரு கரண்டி சாதா பாலோ சேர்த்தால் பிரெஷ் ஆக அரைத்து செய்தது போலவே இருக்கும்.


புளிப்புக் கூட்டுப்பொடி:

இதற்கு ஒரு பிடி கடலைப்பருப்பு, ஒரு பிடி உளுத்தம்பருப்பு, ஒரு பிடி தனியா, 5 அல்லது 6 மிளகாய், ஒரு ஸ்பூன் பச்சரிசி, அரை ஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு மூடி தேங்காய் தேவை.

ஒவ்வொன்றையும் தனித்தனியே நல்லெண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும். அரிசியை கடைசியாக வறுக்கவும். ( அரிசி வேண்டாம் என்றால் விட்டுவிடலாம்) தேங்காயையும் ஈரப்பதம் போகும்வரை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு ஓரளவுக்கு நைசாக அரைத்துக்கொள்ளவும்.

புடலங்காய், கோஸ், வெள்ளைப் பூசணி, பாகற்காய் போன்றவற்றிக்கு இது நன்றாக இருக்கும். காயை துவரம்பருப்பு மற்றும் ஒரு பிடி கடலைப்பருப்புடன் குக்கரில் வேக வைத்து இறக்கியதும் உப்பு, பெருங்காயம், ஒரு ஸ்பூன் புளி பேஸ்ட், இந்த பொடி எல்லாம் சேர்த்து கிளறி கடுகு தாளிக்கவும்.

(டிப்ஸ்: கொஞ்சம் தேங்காய் பால் அல்லது சாதா பால் (சுமார் ரெண்டு ஸ்பூன்) சேர்க்க கூட்டு ரிச்சாக புதிய தேங்காய் துருவலுடன் செய்தது போலவே இருக்கும்)


ஹெல்த் டிப்ஸ்:  

1. வயிற்றுப் பொருமல் உப்புசத்துக்கு மோரில் ஒரு டீஸ்பூன் வெந்தயப் பெருங்காயப் பொடி கலந்து குடிக்கலாம்.


2. Blood sugar உள்ளவர்கள் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் நீரிலோ, மோரிலோ ஒரு டீஸ்பூன் வெறும் வெந்தயப்பொடி கலந்து குடித்து வர blood sugar குறையும்.


3. வயிற்றுப்போக்கு இருந்தால் நாலு மணி நேரத்துக்கு ஒரு முறை நீர் மோரில் அரை ஸ்பூன் வெறும் வெந்தயப் பொடியை கலந்து குடித்தால் ரெண்டாம் முறையிலேயே குணம் தெரியும்.


4. உங்கள் வீட்டில் மூட்டு வலி யாருக்காவது உண்டா? அப்படின்னா, ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடியை வெல்லத்துடன் கலந்து ஒரு நாளைக்கு மூணு முறை சாப்பிட்டு வர மூட்டு வலி நன்றாகக் குறையும்.


5. சிலருக்கு வயிறு எப்பவும் கோளாறுதான். அவர்கள் பிரயாணம் செய்ய வேண்டி வந்தால் கை வசம் இந்தப் பொடியை கொண்டு போகலாம். போன இடத்தில் use ஆகும். பிரயாணத்துக்கு முன் அரை ஸ்பூன் பொடியை கசப்பைப் பார்க்காமல் வாயில் போட்டு ஒரு டம்ளர் நீர் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினால் அட்லீஸ்ட் ஐந்து மணி நேரத்துக்காவது வயிறு சொன்ன பேச்சு கேட்கும்.

Scroll to Top