You cannot copy content of this page

ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதம்

விரதங்களில் உயர்ந்ததான வைகுண்ட ஏகாதசி விரதம், நம்மைப் பிறப்பிறப்பில்லாத பேரின்ப நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியது.

பரந்தாமனின் திருவடிகளை அடையச் செய்து, நித்திய வைகுண்டவாசத்தை அளிக்கும் இந்த விரதத்தினை மேற்கொள்ளும் எல்லா அடியவர்களுக்கும் தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் முக்திக்கான வழியை அடையலாம்.

ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம்.

பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம் என்கிறோம்.

கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்லபக்ஷம் (வளர்பிறை) ஆகிய இந்த இரண்டு பக்ஷங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும்.

இதில் மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக வணங்குகிறோம்.

ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனை கொடுக்கும் என்கிறது புராணங்கள்.

தாயிற் சிறந்ததோர் கோவில் இல்லை; காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை; கங்கையை விட சிறந்த தீர்த்தம் இல்லை; வைகுண்ட ஏகாதசியை விட சிறந்த விரதம் இல்லை; என புராணங்கள் கூறுகின்றன.

வைகுண்ட ஏகாதசி

இந்த விரதத்தின் சிறப்பு பற்றி சிவபெருமானே, பார்வதி தேவியிடம் எடுத்து கூறியுள்ளார் என்பது புராணங்கள் கூறும் தகவலாகும்.

மாதம் இரு ஏகாதசி என்று 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது.

இவற்றில் மார்கழி வளர் பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.

வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது.

துவாதசியன்ற மஹாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு, திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார்.

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, “கீதா ஜயந்தி‘ என்று கொண்டாடுகின்றனர்.

ஏகாதஶீ ஸமம் கிஞ்சித் பாவனம் ந ச வித்யதே ஸ்வர்க மோக்ஷப்ரதா ஏஷா ராஜ்யபுத்ரப்ரதாயினி

ஸ்வர்கம், மோக்ஷம், நல்ல புத்ரன், அரச பதவி முதலிய பலன்களைத் தருவதில் ஏகாதசிக்கு இணையான விரதம் கிடையாது என்கிறது தத்துவ ஸாரம் என்னும் புஸ்தகம்.

வைகுண்ட ஏகாதசிக்கு மோக்ஷ ஏகாதசி என்ற பெயரும் உண்டு. ஸ்ரீமஹாவிஷ்ணு வஸிக்கும் வைகுண்டத்தில் வாசல் திறக்கும் தினம் இன்று. இதன் அடையாளமாக பெருமாள் கோவில்களில் சிறப்பாக ஒரு வாசலைத் திறந்து அதன்வழியே பெருமாள் தரிசனம் தருகிறார்.

வருஷத்தில் 25 ஏகாதசிகளில் முக்கியமானவை நான்கு ஏகாதசிகள். (1) சயன ஏகாதசி: (ஆனி மாத சுக்ல (சயன) ஏகாதசி) ஆனி மாதம் சுக்ல ஏகாதசி முதல் ஐப்பசி மாதம் சுக்ல ஏகாதசி வரை விஷ்ணு யோக நித்திரையில் இருக்கிறார். (2) பரிவர்த்தன ஏகாதசி: ஆவணி வளர்பிறை (பரிவர்த்தன) ஏகாதசி – இன்று பெருமாள் வலப்புறமாகத் திரும்பிப் படுக்கிறார். (3) உத்தான-ப்ரபோதன ஏகாதசி: துயில் கலைந்து எழுந்திருக்கும் கார்த்திகை வளர்பிறை ஏகாதசி. (4) வைகுண்ட ஏகாதசி: மார்கழி வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசி எல்லாவற்றிலும் முக்கியமானது.

ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் நாள் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து, வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் ஆகிய கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி மனதில் பெருமாளை நினைத்திருப்பதே ஏகாதசி விரதம்.

உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாஸம் எனப்படும். எட்டு வயதுக்கு மேற்பட்டவர்களும், எண்பது வயதுக்கு உட்பட்டவர்களும் இந்த ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.

ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, வைகுண்டவாசம் வழங்குவதாக புராணங்களில் கூறப்படுகிறது.

விரத முறை

தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதம் இருப்ப வர்களின் சிந்தனையில், இறைவனின் நினைப்பு மட்டுமே இருக்க வேண்டும்.

விரத நாட்களில் காலையில் பிரம்ம முகூர்த்த வேளையிலும், மாலையில் பிரதோஷ காலத் துவக்கத்திற்குச் சற்று முன்பாகவும் குளிக்க வேண்டும். மூன்று வேளை குளிப்பது மிகவும் சிறந்தது.

விரத காலங்களில் புறம் பேசுவது, பிறரை நிந்திப்பது, சினம் கொள்வது, டிவி சீரியல் பார்ப்பது மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடுவது கூடாது.

எந்த உயிரையும் இம்சிக்கக் கூடாது. பழம் சாப்பிட்டால் கூட விதைகளைச் சேதப் படுத்தாமல் சாப்பிட வேண்டும். விதைகளுக்கு உயிர் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.

ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று, மதியம் ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும்.

ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும்.விரதம் இருப்பவர்கள் தங்கள் பணிகளைச் செய்யும் வேளையைத் தவிர மற்ற நேரங்களில் இறைவனினின் திருநாமங்களை சொல்லியபடி தியான நிலையில் இருக்க வேண்டும்.

ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரைக் குடிக்கலாம். துளசி தீர்த்தம சாப்பிடலாம். உபவாசத்தினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

உடல்நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பூஜையில் வைத்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்ணலாம்

வெங்காயம், பூண்டு, தானியங்கள், தானியங்களால் ஆக்கப்பட்ட மாவு வகைகள் மற்றும் எண்ணெய்வகைகள், தேன் முதலிய பொருட்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

ஏகாதசி அன்று முழு நாளும் உபவாசம் இருந்து விஷ்ணுவை நினைத்து தியானிக்க வேண்டும். அவர் புகழ்பாடும் கீர்த்தனைகளைப் பாராயணம் செய்ய வேண்டும்.

பாராயண மந்திரம்:

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்!

பதவுரை

நாராயணா என்னும் நாமம் – நாராயண நாமமானது (தன்னை அநுஸந்திக்கு மவர்கட்கு)
குலம் தரும் – உயர்ந்த குலத்தைக் கொடுக்கும்;
செல்வம் தந்திடும் – ஐச்வரியத்தை அளிக்கும்;
அடியார் படு துயர்ஆயினஎல்லாம் – அடியவர்கள் அனுபவிக்கிறதுக்கமென்று பேர்பெற்றவையெல்லாவற்றையும்
நிலம் தரம் செய்யும் – தரை மட்டமாக்கிவிடும்

ஏகாதசி நாள் முழுவதும் நாராயணன் நாமம் சொல்வதால், இறைவனின் அருளுக்கு பாத்திரமாவோம்.

விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபடலாம்.

வீட்டில் இருந்தபடியே இறைவனின் திருவுருவ படத்திற்கு மலர் அலங்காரம் செய்தும் வழிபாடு செய்யலாம்.

ஏகாதசி தினத்தன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனைத் துதி செய்ய வேண்டும். அன்று இரவு முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓத வேண்டும்.

ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும்.

விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.

மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும்.

ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை தான் நாம் பாரணை என அழைக்கிறோம்.

துவாதசியன்று பஞ்சாங்கத்தில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.

ஏகாதசிவிரதத்தை எப்படி சிரத்தையுடன் கடைப்பிடிக்கிறோமோ, அது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும்.

விரதத்தை முடிக்கும் போது, பகவானின் நாமத்தை சொல்லியபடி துளசித் தீர்த்தத்தை அருந்தி, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம்.

துவாதசி அன்று காலையில் 21 வகையான கறி சமைத்து உண்ணவேண்டும். இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் இடம் பெற வேண்டியது அவசியமாகிறது.
துவாதசி அன்று, பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.

8 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 80 வயதிற்குட்பட்ட பெரியவர்கள், நோயுற்றோர் ஆகியோர் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ ரங்கம் ரங்கநாத ஸ்வாமி திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ பெரும்புதூர், திருப்பதி மற்றும் அனைத்து வைஷ்னவ திவ்ய தேசங்களிலும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.

சென்னை பார்த்தசாரதி திருக்கோயில், திருமயிலை கேசவ பெருமாள், மாதவ பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் போன்ற வைஷ்னவ ஸ்தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏகாதசி வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் முக்திக்கான வழியை அடையலாம்.

எனவே வைகுண்ட ஏகாதசி விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயனம் செய்து பரந்தாமனின் அருளைப் பெற்று திருப்பாவை “நீங்காத செல்வம் நிறைந்தேலொ ரெம்பாவை” என்று அருளியபடி நீங்காத செல்வத்தை பெற்று நிறைந்த வாழ்வைப் பெறுவோமாக!

லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே ஹ்ருத்பத்ம வாஸே ரவி பிம்பவாஸே க்ருபாம் நிவாஸே குணப்ருந்தவாஸே ஸ்ரீரங்கராஜே ரமதாம் மநோமே
ஸ்ரீமஹாலக்ஷ்மியின் இருப்பிடமானவரும், உலகமனைத்திலும் ஊடுருவி இருப்பவரும், குறிப்பாக ஸூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பவரும், கருணைக்கு இருப்பிடமானவரும், குணக்கூட்டங்களுக்கு இருப்பிடமானவரும், ஸ்ரீரங்கத்தில் வஸிப்பவருமான அந்த ரங்கராஜாவினிடத்தில் என் மனது ரமிக்கட்டும்.
ஓம் நமோ நாராயணாய…!

Scroll to Top