You cannot copy content of this page

0001. திருமந்திரம் பாயிரம்

சிவமயம்

திருமூலர் திருமந்திரம்

திருமந்திர விநாயகர் வணக்கம்

பாடல்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

விளக்கம்:
ஐந்து கரங்களைக் கொண்டவனும், யானையை முகத்தைக் கொண்டவனும், இளம் பிறை நிலாவைப் போன்ற வளைந்த கொம்பைக் கொண்டவனும், இறை நந்தியின் மகனாகவும், அறிவின் வடிவாகவும் இருப்பவனுமான, விக்ன வினாயகனின் திருவடியை புந்தியில் வைத்துப் போற்றுகிறேனே!


பொதுப்பாயிரம்


கடவுள் வாழ்த்து

பாடல்:

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே


விளக்கம்:

சிவபெருமான் உலகப் பெரும் தோற்றத்துக்கு முன்னும், உலகப் பேரொடுக்கத்துக்குப் பின்னும், நிலைத்திருக்கும் அழிவிலா ஒருவன்.

இன்னருள் இரண்டு; கடவுள் தன் அருளுடன் கூடி இருக்கும்போது இரண்டு எனப்படுவான். அவனே சிவம் சக்தி என இரண்டாகி அருள் பாலிக்கிறான்.

மூன்று என்றது பலவகையாகப் பொருள் கொள்ளப்படலாம். நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) நிற்பவன் என பொருள் பட இலய போக அதிகாரத்துள் நின்றமையை இது குறிப்பிடுகிறது.

மேலும் நின்றனன் மூன்றினுள் என்பது படைத்தல் (பிரம்மா) காத்தல் (விஷ்ணு), அழித்தல் (ருத்திரன்), என மூன்றாகிய சிவ தத்துவத்யையும், சாத்வீகம், ராஜசம்,தாமசம் ஆகிய முக்குணங்களயும், பதி, பசு, பாசம் என்ற சைவ சித்தாந்தையும், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளையும் குறிப்பதாகக் கொள்ளலாம். மூன்று என்பதற்கு உருவம், அருவம், அருவுருவம், எனக் கூறுதலும் உண்டு.

நான்கு உணர்ந்தனன் என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனையும் தானே உணர்ந்து உயிர்கட்கு உணர்த்துபவன் என்பதைக் காட்டுகிறது. இதையே வேறு விதமாக நான்கு என்பதை சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு அனுபவங்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

ஐந்து என்பது ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய செயல்களை குறிப்பதாகும்.

ஐந்து வென்றனன் என்பது பொறி வாயில் ஐந்தவித்தான் என்ற திருக்குறள் கருத்தும், நேரிழையைக் கலந்திருந்தே புலன்களைந்தும் வென்றானை என்ற அப்பர் திருவீழிமிழலைத் தாண்டகக் (தி.6 ப.50 பா.3) கருத்தும் புலப்படத் தோன்றுவது

ஆறு என்பது மந்திரம். பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்னும் ஆறு (அத்துவாக்கள்) வழிகளாக விரிந்தனன் என்பதை உணர்த்துகிறது. ஓர் அறிவுமுதல் ஆறறிவு ஈறாகவுள்ள அனைத்துயிர்க்கும் அறிவிக்க ஆறாய் விரிந்தனன்.

ஏழு உம்பர்ச் சென்றனன் என்பது பிரமலோகம், விஷ்ணு உலகம், உருத்திரலோகம், மகேசுவரலோகம், சதாசிவலோகம், சக்திலோகம், சிவலோகம் என்னும் ஏழுலகங்கட்கும் மேற்சென்று நின்றவன் என்பதை உணர்த்தும். சிவஞான சித்தியாரில் அருளியபடி சத்தி, விந்து சத்தி,மனோன்மணி, மகேசை, உமை, திரு, வாணி என எழு வகை ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவன். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்னும் ஏழு அண்டங்களையும் கடந்து நின்றவன். எழு வகைப் பிறப்பிற்கும் அப்பால் நின்று பிறப்பினை நல்கி இயக்கும் பிறப்பில் பெருமான்.

எட்டு உணர்ந்தான் என்பது, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், சீவன் ஆகிய வற்றைக் குறிப்பதாகக் கொள்ளலாம். தமிழில் ’அ’ என்பது எட்டைக் குறிக்கும். எனவே அவன் அகரமாக உணரப் பெற்றவன் எனவும் கொள்ளலாம்.(அகர,உகர,மகரச் சேர்க்கையே ’ஓம்’). பேறுபெற்ற ஆருயிர்கள்பால் சிவபெருமானின் எண்பெருங் குணங்களும் பதிந்து விளங்கும். தானிருந் தானுணர்ந் தெட்டே.

சிவபெருமான் எண் குணங்களையும் தானுணர்ந்து உலகை உய்யும் பொருட்டு எட்டும் பொருள்களான நிலம், நீர், காற்று, தீ, வான், கதிரவன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டு பொருளையும் உணர்ந்து அதன் மேல் ஏழு உலகங்களான பிரம்மலோகம் விஷ்ணுலோகம் உருத்திரலோகம் மகேசுரலோகம் சாதாசிவலோகம் சக்திலோகம் சிவலோகம் என்னும் ஏழு உலகங்களையும் கடந்து எதற்கும் எட்டாமலும் அன்பர்களுக்கு எட்டியும், என்றும் எப்பொழுதும் சகல உயிரினங்களின் இதயத்தில் கலந்து அன்பு வடிவாக விளங்கும் அருளாளன்.

இறைவன் ஒருவனே! அவன் தோற்றம் பல!


(ப. இராமநாதன்) இத்திருமுறை முழுமுதற் சிவபெருமானின் எண்பெருங் குணங்களையும் முறையே குறிக்கும் அருங்குறிப்புமாகும். மேலும் சிவபெருமான் உலகப் பெரும் தோற்றத்துக்கு முன்னும், உலகப் பேரொடுக்கத்துக்குப் பின்னும், நிலைத்திருக்கும் அழிவிலா ஒருவன். அவன் இனிய அருள் ‘சிவய நம’ என்னும் திருவைந்தெழுத்திற் காணப்படும் வகரமும் நகரமும் ஆகிய இரண்டெழுத்துக்குரிய வனப்பு (பராசத்தி) நடப்பு (ஆதிசக்தி) என இரண்டாகும். அன்பு அறிவு ஆற்றல் என மூன்றாகும். இவற்றை இச்சை ஞானம் கிரியை எனவும் இசைப்பர். சிவசிவ எனப் பொருள்மறை நான்காகும். படைத்தல் காத்தல் துடைத்தல் மறைத்தல் அருளல் எனத் திருவருட்டொழில் ஐந்தாகும். அவன் திருவடியைச் சேர்ப்பிக்கும்படி முறை வழிகள் தொகை வகையால் ஆறாகும். எழுவகை யாற்றலுக்கும் அப்பாற்பட்டவன். எழுவகை ஆற்றல் தமிழாகம விரிவாகிய சிவஞான சித்தியாரில்3அருளியபடி சத்தி, விந்துசத்தி, மனோன்மணி, மகேசை, உமை, திரு, வாணி என்பர். நிலம், நீர், நெருப்பு, உயிர் (காற்று) விசும்பு, நிலா, பகலோன், புலனாய மைந்தன்4என எண்வகைப் பொதுவடிவங்களாகும்.

இன்னும் ஒருவகையாக நோக்கின், முழுமுதல் சிவன் ஒருவனே. அவன் அம்மையப்பரென இரண்டாக விளங்குவன். அவன், அவள், அது என மூன்றினுள் நின்றனன். சீலம் நோன்பு செறிவு அறிவு என நான்குணர்த்தினன். இவற்றைச் சரியை கிரியை யோகம் ஞானம் எனக் கூறுவர். மூவர் தேவாரம், முனிமொழியும் திருவாசகம் திருக்கோவையார், திருமூலர் சொல்லென்னும் ஐந்தால் வெல்லுவித்தனன். ஓர் அறிவுமுதல் ஆறறிவு ஈறாகவுள்ள அனைத்துயிர்க்கும் அறிவிக்க ஆறாய் விரிந்தனன். எழுவகைப் பிறப்பிற்கும் அப்பால்நின்று பிறப்பினை நல்கி இயக்கும் பிறப்பில் பெருமான். பேறுபெற்ற ஆருயிர்கள்பால் சிவபெருமானின் எண்பெருங் குணங்களும் பதிந்து விளங்கும். அங்ஙனம் விளங்க அச்சிவபெருமான் அவ் வெட்டினையும் உணர்தல்வேண்டும். மூன்று என்பதற்கு அருவம், அருவுருவம், உருவம் எனக் கூறுதலும் ஒன்று. இத்திருமறை பொருளியல் புரைக்கும் பொற்பினது.


பாடல் 2:

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாங்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.2


விளக்கம்:

போற்றி இசைத்து நமது இன்னுயிரில் கலந்த புனிதனை, நான்கு திசைக்கும் அருளாளனாக விளங்கும் சிவனை அனைத்து உலகினுக்கும் இன்னருள் புரியும் ஆதிசத்தியாகிய நல்ல மாதிற்குத் தலைவனை, தென் மேற்கு திசைக்கு உரிய எம் வேந்தனை, (எமனைத் தனது இடக்காலால் உதைத்தவனை) கூற்றுதைத்தான் என்னும் கூற்றுக்களால் விளங்கும் ஒப்பில் முழு முதலாம் சிவனை, சிவன் விழுமிய அருளால் கூறுகின்றேனே!

தென்திசைக்கு வேந்தன்: தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!‘ ‘தென்பாண்டி நாடே சிவலோகம்’, ‘பாண்டி நாடே பழம்பதி‘ மணிமொழியார் திருமொழி. ‘சிவத்தைப் பேணில் தவத்திற் கழகு‘ ஒளவையார் திருமொழி


(ப. இ.) மேற்றிசை – நாற்றிசையொடும். பொருந்தி அப்பெயரை முற்கொண்டு திகழும் கோணத்திசை நான்கு. அவை முறையே தென்கிழக்கு தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கென்பன. இதன்கண் சேர்தல் செறிதல் செலுத்தல் என்னும் உயிர்க்குயிராம் சிவபெருமானின் முப்பண்புகள் குறிப்பால் விளக்கப்பட்டுள்ளன. அவை புனிதன், நாதன், தென்பால் நிறுவிய வேந்தன் ஆளாம் கூற்றுதைத்தான் என்னும் கூற்றுக்களால் விளங்கும். ஒப்பில் முழுமுதலாம் சிவபெருமான் ஒருவனே அனைத்துயிரின் போற்றுதற்கும் உரியவன். அத்தகையோன் அருளால் ஆம் தூயவுடம்பினையுடையவன். அனைத்துலகினுக்கும் இன்னருள் புரியும் நடப்பாற்றலாகிய ஆதிசத்திக்குத் தலைவன். உயர்ந்த திசை என்று சொல்லப்படும் வடதிசை தென்திசை என்ற இரண்டனுள்ளும் சிறந்ததாகிய தென்திசைக்கு வேந்து நிறுவிய ஒப்பில்லாத வேந்தன் சிவபெருமான். வேந்தன் என்பது ஆருயிர்கட்குப் போகமீன்ற புண்ணியன் என்பதாம். தொன்மைத் தமிழரே சிவபெருமானை வேந்தன் எனவும் வழிபட்டனர். அவ்வுண்மை ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியத்தின்கண் ‘வேந்தன் மேய தீம்புனல் உலகமும்’ (தொல். பொருள் – 5) என்னும் நூற்பாவால் உணரலாம். இதன்கண் காணும் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள் கொள்வது ஒருவாற்றானும் ஒவ்வாது. மேலும் ‘தென்பாண்டி நாடே சிவலோகம்’, ‘பாண்டி நாடே பழம்பதி’ என்பன மணிமொழியார் திருமொழி. ‘முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி’ என்பது அப்பர் அருண்மொழி. அவன் ஒருவனே கூற்றுதைத்து ஆட்கொண்ட எண்குணவன். அவ்வுண்மை ‘சிவத்தைப் பேணில் தவத்திற் கழகு’ என்னும் ஒளவையார் செம்மொழியால் உணரலாம். அத்தகைய அமிழ்தினும் இனிய தமிழ் முழுமுதலை அவன் விழுமிய அருளால் வழிமொழிகின்றேன்.


பாடல் 3:

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென் றேத்திடு நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே.


விளக்கம்

ஒக்க நின்றானை, உயிர்களுடன் கூடவே நின்றவனை, உலப்பிலி தேவர்கள் (அழிவில்லா தேவர்கள்) நக்கன் (தத்துவங்களைக் கடந்தவன்; மலமில்லாதவன்; மாசில்லாதவன்) என்று போற்றிடும் நாதனை (தலைவனை), அவன் பக்கமாய் உடன் இருப்பினும் (அவன் அருளில்லாதாரால்) அறிய முடியாத பரமனை, புக்கு (புகலிடம) நின்று (சிவனை எந்த நாளும் சிந்தையில் இருத்தி) யான் போற்றி வணங்குவேனே!


(ப. இ.) சிவபெருமான் திருவருளோடும், அவ்வருளின் ஆணையுடனும், ஆருயிரோடும், மாயைகன்மங்களுடனும் கூடி இயக்குதற் பொருட்டு ஒப்பநின்றானை, பிறப்பு இறப்பு கேடு ஏதுமில்லாத கடவுளை, விண்ணவர், விண்ணவர்கோன் மூவர் முதலிய தேவர்களுக்கு உற்றுழி உதவ அருளால் வெளிப்பட்டுநின்று அருள்வோனை, பக்கமாய் உடனிற்பினும் அவனருளில்லாதாரால் அறியவொண்ணாத விழுப்பொருளை அவனருளால் அவனுட்புக்கு அவன் முன்நி்ற்ப நற்றவத்தால் நினைந்து போற்றிப் புகழ்வேன்.


பாடல்: 4

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

(ப. இ.)சிவனுடன் ஒப்பான ஒரு தெய்வத்தை ஆண்டுத் தேடினும் காண்டல் இல்லை. அவனுடன் ஒப்பாரை ஈண்டுங் காண்டல் இல்லை. எனவே, யாண்டும் யாவரும் அவனுக்குத் தாழ்ந்தவரே. அனைத்துலகங்களுக்கு அப்பாற்பட்டுப் பொன்போல் விளங்காநின்ற பின்னுதலையுடை தீவண்ணச் செஞ்சடையுடன் திகழ்கின்றான். மெய்யன்பர்களின் அன்பால் விளங்கும் நெஞ்சத் தாமரையைத் துய்ய வைப்பாகக் கொண்டு உறைகின்றனன் சிவன்.

(அ. சி.)தவனம் – தீ – (செந்நிறம்). புவனம் – அண்டங்கள். சிவன் – சீவனோடு சேர்ந்துள்ளவன்; மங்களகரமானவன்; செந்நிறத்தவன்.

பாடல்: 5

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.

(ப. இ.)அச் சிவபெருமான் திருவாணை ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்கும் முத்திறப்புணர்ப்பானும் ஆருயிர்களைப் பொருந்தும். அங்ஙனம் பொருந்தாவிடின் அமரர். எவர்க்கும் வாழ்வில்லை. அவன் அருள் துணையின்றிச் செய்யப்படும் அருந்தவங்கள் ஏதும் இல்லை. அவனருள் இல்லாமல் அயன், அரி, அரன் என்னும் மூவரால் நடக்கக்கூடியது ஒன்றும் இல்லை. அவன் திருவருளில்லாமல் வானோர்க்கு உயர்ந்த உலகமாகிய பேரின்பத் திருவூர்புகும்வழி ஒருவராலும் உணரவொண்ணா தென்க.

அவன்: சேய்மைச் சுட்டு; பண்டறிசுட்டுமாம். சேய்மைச் சுட்டு உண்மையும், பண்டறிசுட்டுப் பொதுவுமாம்; பொது ஈண்டுச் சார்பு.

(அ. சி.)ஊர் – முத்தி நகர். மூவர் – அயன், அரி, அரண் (உருத்திரன்). அமரர் – மரியாதவர்கள்; இறவாதவர்கள்.

பாடல்: 6

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.

(ப. இ.)ஒவ்வொரு தொழிலே உடைய அயன் அரி அரன் என்னும் மூவரும் அவ்வத் தொழில் ஒன்றேபற்றி தம்முள் ஒப்பாவர். அம் மூவர்க்கும் முழுமுதலாய்ச் சிறந்தோனாய் என்றும் காணப்படுபவன் சிவன். மூப்பு – சிறப்பு. அச் சிவன் தன்னை யொப்பாக ஒரு பொருளுமில்லாத தனிமுதல்வன். அவனை விட்டு நீங்காது ஒட்டியுறைவோன் என்னுங் கருத்தால் அப்பன் என்று அன்பாய்ச் கூறின், அப்பனுமாவன். அவன் ஆருயிர்களின் நெஞ்சத் தாமரையின் உன்னிடத்தான். அந்நெஞ்சத்தாமரையின்கண் பொன்னொத்துத் திகழ்கின்றனன். பொன் : பொதுப்பெயர்; அஃது இரும்பு, பொன் என்னும் இரண்டினையும் குறிக்கும் ஆருயிரின், நெஞ்சம் ஆணவச் சார்பால் இரும்பொக்கும்; அருட்சார்பால் பொன்னொக்கும்.

  1. இருடரு அப்பர், 4. 92 – 5.
  2. மின்னும் (பெரும்பொருள் விளக்கம்) தொல் பொ 90. மேற்கொள்.

(அ. சி.) முன்னை – படைப்புக் காலத்துக்கு முன். போதகத்தான் – போது அகத்தான்; உள்ளமாகிய தாமரை மலர்மீது உள்ளவன். (6)

பாடல் 7:

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.

(ப. இ.) தீயைக் காட்டிலும் மிகவும் வெப்பம் உள்ளவன். இந்நிலை அறிவாய்த் தனியாய் நிற்கும் கழி நிலை. புனலைவிடக் குளிர்ந்தவன். இந்நிலை அருளுடன் கூடி அனைத்துயிரையும் இயக்கியாளும் வழிநிலை. ஆயினும் அவன்தன் அருள் நிலையினை உள்ளவாறு அறிவார் ஒருவரும் இலர். சுட்டுணர்வாலும் சிற்றுணர்வாலும் அறியப்படாத சேய்மையனாயினும் நல்லன்பர்களுக்கு அணியனாய் நின்று என்றும் நன்மை செய்பவன். பால் நினைந்தூட்டும் தாயினும் இனியன். தாழ்ந்த திருச்சடையை உடையவன். கழிநிலை – கடந்த நிலை.

(அ. சி.) சேயினும் – மனமாதிகளுக்கு எட்டாதவன் ஆயினும். அணியன் – அணுவாகிய உயிருடன் கலந்துள்ளவன். (7)

பாடல் 8:

பொன்னால் புரிந்திட்ட பொன் சடை என்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப் படும் எம் இறை மற்று அவன்
தன்னால் தொழப் படுவார் இல்லை தானே.

(ப. இ.) பொன்னால் பின்னி அழகுற அமைக்கப்பட்ட திருச்சடையென்று வழுத்தும்படியாகப் பின்னால் விளங்கும் சடையுடன் வீற்றிருந்தருள்பவன். அவன் திருப்பேர் நந்தியங் கடவுள் என்று சொல்லப்படும். அடியேனால் தொழப்படும் எம் தலைவன். அத்தகைய சிவன் யாரையும் தொழுவானல்லன். எல்லாரும் அவனையே தொழுவர். அதனால் தன்னால் தொழப்படுவார் இல்லை யென்றருளினர். இதுபற்றியே ‘சேர்ந்தறியாக் கையானை’ என்னும் செந்தமிழ்ச் சிறப்புத் திருமறை முடிவும் (திருவாசகம்) அருளிற்றென்க.

(அ. சி.) நந்தி – நந்துதல் இல்லாதவன். பிறப்பு, இறப்பு இல்லாதவன். பொன்…இருந்தவன் – அருளாகிய கதிர்களால் சூழப்பட்டவன். (அக் கதிர்கள் ஒன்றோடொன்று பிணைந்திருப்பது சடை போன்ற காட்சியை அளிக்கின்றது.) (8)

பாடல் 9:

அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே.

(ப. இ.)வேறிடத்தும் பக்கத்தும் யாவற்றிற்கும் காரணமாம் சிவ பெருமானை அவனருளால் ஆராயின் அவனுடன் ஒத்து விளங்கும் பெரிய முழுமுதல் தெய்வம் யாதொன்றும் இல்லை. அவன் திருவடியுணர்வு கொண்டு சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மையால் அடைய முயலும் முயற்சிக்கண் அவன் துணைபுரிந்து வெளிப்பட்டருள்வன்; முடிவிலும் அங்ஙனே திகழ்ந்தருள்வன்; அதனால் அவன் வேண்டுங்காலத்துப் பொய்யாது பெய்யும் அருண்மழை முகில் போல்வன். அவன் திருப்பேர் நந்தி என்ப.

(அ. சி.)பெயலு மழைமுகில் – மழை பெய்யும் முகில், அருண் மழையைப் பொழிகின்ற மேகம் போன்றவன். முயலின் முடியும் – அச்சாதனையின் பயனும் முயலும் – முத்தி சாதனையும். அயலும் புடையும் – புறத்தும் அகத்தும்.

பாடல் 10:

பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம்மானை
இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே

(ப. இ.)எந்நாளும் அவனருள் துணையால் நிகழும் பேரன்பால் நந்தியங் கடவுளைச் ‘சிவ சிவ’ என்று; இடையறாது ஏத்துகின்றேன்; இரவும் பகலும் நெஞ்சத்து அவனையே இடையறாது நினைதலாகிய பரவுதலைச் செய்கின்றேன்; அவன் திருவடியைப் பெறவே முயல்கின்றேன்; அவன் என்றும் அழியா அறிவொளியாய் எவற்றையும் ஒளிர்விக்கும் ஆற்றலொளியாய்த் திகழும் ஓங்கொளிவண்ணன்; எம் தலைவன்; இயல்பாக விளங்கும் உண்மையறிவின்பப் பேரொளி வண்ணன்; குறைவிலா நிறைவாய்க் கோதிலா அமிழ்தாய்த் திகழும் முறையுறும் முதல்வனாவன்.

(அ. சி.)இயற்றிகழ் – இயல்பாகவே பிரகாசிக்கின்ற உயற்றுவன் – உயிர் வாழ்வேன். இயற்றுவன் நெஞ்சத்து – நந்தி தன் திருவடியை நெஞ்சத்துள் பொறிப்பன். பிதற்றுகின்றேன் – ஓயாமல் உச்சரிக்கின்றேன்.

(10)

Scroll to Top