பட்டினத்தாரின் சில பாடல்கள்
கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி அப்பால்
எட்டி அடிவைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே!
பொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம்புலன்கள் தமை
வெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால்
செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின் திருவடிக்கு அன்பு
இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சி ஏகம்பனே!
பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே!
அன்ன விசாரம் அதுவே விசாரம்; அது ஒழிந்தால்
சொர்ண விசாரம் தொலையா விசாரம்; நற்றோகையாரைப்
பன்ன விசாரம், பலகால் விசாரம் இப்பாவி நெஞ்சுக்கு
என்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சி ஏகம்பனே!
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!
காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வரும் மாயைதன்னை மறலி விட்ட
தூதென்று எண்ணாமல் சுகமென்று நாடும் இத்துர்புத்தியை
ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே!
ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும்
சீரும் சதமல்ல, செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின்றாள் சதம் கச்சி ஏகம்பனே!
பொருள் உடையோரைச் செயலினும், வீரரைப் போர்க்களத்தும்,
தெருள் உடையோரை முகத்தினும், தேர்ந்து தெளிவது போல்
அருள் உடையோரைத் தவத்தில், குணத்தில், அருளில், அன்பில்,
இருள் அறு சொல்லினும் காணத்தகும் கச்சி ஏகம்பனே!
வாதுக்குச் சண்டைக்குப் போவார் வருவார், வழக்குரைப்பார்
தீதுக்கு உதவியும் செய்திடுவார், தினம் தேடி ஒன்று
மாதுக்கு அளித்து மயங்கிடுவார், விதி மாளும் மட்டும்
ஏதுக்கு இவர் பிறந்தார் இறைவா கச்சி ஏகம்பனே!
ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப்பெற்ற
தாயாரை வைவார், சதி ஆயிரம் செய்வார், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்யார், தமை அண்டினோர்க்கு ஒன்றும்
ஈயார் இருந்தென்ன போயென்ன காண் கச்சி ஏகம்பனே!
நாயாய் பிறந்திடில் நல்வேட்டையாடி நயம்புரியும்
தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க்
காயா மரமும், வறளாங் குளமும், கல்லாவும் அன்ன
ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே!