You cannot copy content of this page

ஸ்ரீமத் பகவத்கீதை (1-8)

ஸ்ரீமத் பகவத்கீதை
(ஜானகி க்ருஷ்ணன்)

முன்னுரை:

ஸ்ரீமத் பகவத்கீதையை முதல் முறை படிக்கும் பொழுது தோன்றுவது – இது நமக்கில்லை, யாரோ போர்வீரனுக்கு, அல்லது சன்யாசிக்கு, அல்லது யோகம் பயிலும் மாணவனுக்கு, அல்லது நீயே எல்லாம் என்று வணங்கும் பக்தனுக்கு என்று தோன்றும். அன்றாட வாழ்க்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என்பதே பெரும்பாலோர் நினைப்பது.

ஆனால், வயதான பிறகு படித்துக் கொள்ளலாம், வேதாந்தம் தானே என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. இது பள்ளி நாட்களிலேயே தெரிந்து கொள்ள வேண்டிய பல அறிவுரைகளை உள்ளடக்கியது.

முதன் முதல் பள்ளிக்கு குழந்தையை அனுப்பும் பெற்றோர் சொல்லும் பயப்படாதே என்ற உபதேசம் – முரட்டு சிறுவர்களோ, சிறுமியோ, உன்னை படுத்தினால் பயப்படாதே, டீச்சரிடம் சொல்லு என்று சொல்லுகிறோமே-அத்துடன் யோசி, உனக்கு சரியென்று தோன்றினால் மட்டுமே செய் என்று கீதை உபதேசிக்கிறது.

எடுத்த காரியத்தை பாதியில் விடாதே, செய்வதை திருந்தச் செய் என்ற உபதேசம் அனைவருக்குமே.

குருவை அடைந்து, மரியாதையுடன் கற்றுக் கொள், கற்றதை மனனம் செய்து உருவேற்றிக் கொள் என்பது எல்லா மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும், தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ள முனையும் மற்றவர்களுக்கும் உரிய உபதேசம்.,

சந்தேகப்பிராணியாக இருக்காதே, எதிலுமே சாதிக்க மாட்டாய் என்ற அறிவுரை., எது உன் வழி என்பதை தெரிந்து கொள்- அந்த பாடத்தை படி, உன் மனதுகுகந்த தொழிலை செய் என்று நாம் சொல்ல ஆரம்பித்திருக்கிறோமே, அதையே தான் கீதாசாரியனும் சொல்லியிருக்கிறார்.

மன வலிமை பெற உடல் வலிமையும் தேவை என்பதை வலியுறுத்த யோக சாதனைகள்.

பொதுவாக வாய் மொழியாக பேசுவதிலிருந்து எது நாகரீகம் என்பதையும், ,

நம்பினோர் கைவிடப் படார் என்ற உறுதி மொழியும் நாம் அன்றாட வாழ்க்கையில் ,மனதில் கொள்ள வேண்டிய வழிமுறைகளே என்பது புரியும். .

ஸ்ரீ ஆதி சங்கராசார்யருடையது தான் முதன் முதல் பகவத் கீதைக்கு உரை என்று நமக்கு கிடைத்துள்ளது என்கிறார்கள். அவருடைய விளக்கங்கள் மூலம் – அவருடைய வார்த்தைகளிலேயே இந்த மாபெரும் காவ்யத்தை நாம் அறிந்து கொள்வோம்.

யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தர: |

தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர்மதிர்மம ||

यत्र योगेश्वर: कृष्णो यत्र पार्थो धनुर्धर: | तत्र श्रीर् विजयो भूतिर् ध्रुवा नीतिर् मतिर्मम ||

இந்த ஸ்லோகத்துடன் கீதையை முடிக்கிறார். எந்த இடத்தில் யோகேஸ்வரனான க்ருஷ்ணன் இருக்கிறானோ, உடன் கையில் வில்லுடன் பார்த்தன் இருக்கிறானோ, அங்கு லக்ஷ்மி தேவி தானே வாஸம் செய்வாள். விஜயா-வெற்றியும் நிறைந்த செல்வ செழிப்பும், அழியாத நீதியும் என்றும் ஓங்கி விளங்கும்.

ஜானகி க்ருஷ்ணன்


தியான ஸ்லோகங்கள்:
ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம் |

வ்யாஸேன க்ரதிதாம் புராண முனினா மத்யே மஹாபாரதம் |

அத்வைதாம்ருத வர்ஷிணீம் பகவதீமஷ்டா தஶாத்யாயினீம் |

அம்ப த்வாம் அனுஸந்ததாமி பகவத்கீதே பவத்வேஷிணீம் ||

ऊँ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयम् |

व्यासेन ग्रथितां पुराण मुनिना मध्ये महाभारतम् |

अद्वैतामृत वर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम् |

अम्ब त्वामनुसन्दधामि भगवत्गीते भवद्वेषिणीम् || -1

நமோஸ்து தே வ்யாஸ விஶால புத்தே புல்லாரவிந்தாயத பத்ர நேத்ர ||

யேன த்வயா பாரத தைல பூர்ண: ப்ரஜ்வாலிதோ ஞானமய ப்ரதீப: ||

नमोस्तु ते व्यास विशाल बुद्धे फुल्लारविन्दायत पत्र नेत्र |

येन त्वया भारत तैल पूर्ण: प्रज्वालितो ज्ञानमय प्रदीप: ||-2

ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே |

ஞான முத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருத துஹே நம: ||

प्रपन्न पारिजाताय तोत्र वेत्रैक पाणये | ज्ञान मुद्राय कृष्णाय गीतामृत दुहे नम: || -3

ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |

பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||

सर्वोपनिषदो गावो, दोग्धा गोपाल नन्दन: | पार्थो वत्स: सुधीर्भोक्ता दुग्धम् गीतामृतं महत् ||-4

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |

தேவகீ பரமா நந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

वसुदेवसुतं देवं कंस् चाणूर मर्दनं | देवकी परमानन्दं कृष्णं वन्दे जगत्गुरुम् || -5

பீஷ்மத்ரோண தடா ,ஜயத்ரத ஜலா ,காந்தார நீலோத்பலா |

ஶல்யக்ராஹவதீ க்ருபேண வஹனீ , கர்ணேன வேலாகுலா||

அஶ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனாவர்தினீ ,

ஸோத்தீர்ணா கலு பாண்டவைர் ரண நதீ, கைவர்தகே கேஶவே ||

भीष्मद्रोणतटा जयद्रथ जला गान्धार नीलोत्पला |

शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला |

अश्वत्थाम विकर्ण घोर मकरा दुर्योधनावर्तिनी |

सोत्तीर्णा खलु पाण्डवैर्रणनदी कैवर्तके केशवे ||-6

பாராஶார்ய வச: ஸரோஜமமலம் கீதார்த கந்தோத்கடம் | நானாக்யானக கேஸரம் ஹரிகதா ஸம்போதனா போதிதம் ||

லோகே ஸஜ்ஜன ஷட்பதைரஹரஹ: பேபீயமானம் முதா |

பூயாத் பாரத பங்கஜம் கலிமல ப்ரத்வம்ஸி ந: ஶ்ரேயஸே ||

पाराशर्य वच: सरोजममलं कीतार्थ गन्धोत्कटम् |

नानाख्यानक केसरं हरिकथा सम्बोधना बोधितम |

लोके सज्जन षत्पदैरहरह: पेपीयमानं मुदा |

भूयाद्भारत पङकजं कलिमल प्रध्वंसि नस्श्रेयसे || -7

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |

யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் ||

मूकं करोति वाचालं पङगुम् लङगयते गिरिम् | यत्कृपा तमहं वन्दे परमानन्द माधवम् ||

யம் ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவ்யை: ஸ்தவை: | வேதை: ஸாங்கபத க்ரமோபனிஷதை: காயந்தி யம் ஸாமகா: | த்யானாவஸ்திதேன மனஸா பஶ்யந்தி யம் யோகினோ | யஸயாந்தம் ந விது: ஸுராஸுர கணா: தேவாய தஸ்மை நம: ||

यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुत: स्तुन्वन्ति दिव्यै: स्तवै: |

वेदै: साङगपद क्रमोपनिषदै: गायन्ति यं सामगा: |

ध्यानावस्थितेन मनसा पश्यन्ति यं योगिनो |

यस्यान्तं न विदु: सुरासुर गणा: देवाय तस्मै नम: ||

இதி த்யானம் – इति ध्यानम् ||

ஸ்ரீமத் பகவத் கீதை

அத்யாயம்-1 அர்ஜுன விஷாத யோகம்

துரியோதனன் முதலிய நூற்றுவரின் தந்தை த்ருதராஷ்டிரன். குரு குலத்து அரசன். அதனாலேயே அவன் வம்சத்தினர் கௌரவர்கள் என்று அறியப் பட்டார்கள். அவருடைய இளைய சகோதரன் பாண்டு. பாண்டுவின் மக்கள் ஐவர் பாண்டவர்கள். சகோதர்களுக்கிடையே நடந்த பூசல் வளர்ந்து யுத்தம் என்று முடிவாகி விட்டது.

வேதவியாசர் எழுதிய பாரதத்தின் நடுவில் வரும் பகவத் கீதை ஒரு உபதேச நூல். யுத்தகளத்தின் நடுவில் ஸ்ரீ க்ருஷ்ணரால், அர்ஜுனனுக்குச் சொல்லப் படுகிறது. அதன் பிண்ணனியை முதல் அத்தியாயத்தில் காண்கிறோம். என்னதான் தந்தையாக மகனின் முடிவை, அவன் அரசனாக எடுத்த முடிவை ஏற்றுக் கொண்டாலும் த்ருதராஷ்டிரனின் மனம் தம்பி மகன் மற்றும் குலத்தின் மற்ற வாரிசுகளுக்காகவும் வருந்துகிறது. சஞ்சயன் கண் தெரியாத பேரரசருக்கு உற்ற துனைவன். அவருக்கு நடப்பதை நடந்தபடி சொல்ல என்றே வியாசர் அருள் செய்திருக்கிறார். அரண்மனையில் அரசனுக்கு அருகில் இருந்தபடியே யுத்தகளத்தில் நடப்பதை சஞ்சயன் காண்கிறான் – உடனுக்குடன் அரசருக்குத் தெரிவிக்கிறான்.

கீதையின் ஆரம்பம் பேரரசர் த்ருதராஷ்டிரன் சஞ்சயனிடம் கேட்கிறார்.

யுத்தம் என்று முடிவு செய்து விட்டார்கள். இரு தரப்பினரும் யுத்த வெறி கொண்டு யுத்த களத்தில் வந்து சேர்ந்து விட்டார்கள். ஒரு தரப்பில் என் மக்கள், எதிரில் பண்டவர்கள் – இரு பக்கத்தினரும் என்ன செய்கிறார்கள், சஞ்சயா?

சஞ்சயன் பதில் சொல்கிறார். அரசே, தங்கள் மகன் துரியோதனன் பாண்டவர்களின் படை அணி வகுத்திருப்பதைப் பார்த்து விட்டு ஆசாரியர் த்ரோணரிடம் வருகிறான்.

அவரைப் பார்த்து, ஆசிரியரே, எதிர் அணியை பார்த்தீர்களா? த்ருபதன் மகன் உங்கள் மாணவன் தானே? – அணி வகுத்திருக்கிறான் பாருங்கள். அந்த அணியில் சூரர்கள் நிறைய – பீமன், அர்ஜுனன் – இவ்விருவருக்கும் இணையான பல வீர்கள். மஹா ரதிகள் – என்ற முதன்மை வீர்கள், விராடன், த்ருபதன் , த்ருஷ்ட கேது, மற்றும் பலர். அனைவருமே நல்ல வீரர்கள். நம் தரப்பில் யர் யார் – சொல்லவா ? தாங்கள், பீஷ்மர், கர்ணன், மற்றும் பலர். அனைவருமே சிறந்த வீரர்கள். எனக்காக உயிரையே கொடுக்கத் தயங்க மாட்டர்கள்.

(இந்த இடத்தில் விதி அவன் வார்த்தையில் விளையாடியதாக சொல்வார்கள். எனக்காக உயிரைக் கொடுப்பார்கள் என்று சொல்ல வந்தவன் – எனக்காக உயிரை விட்டவர்கள் என்று பொருள் படும்படி – த்யக்த ஜீவிதா: – உயிரை விட்டவர்கள் என்று சொல்லி விடுகிறான்.)

பீஷ்மரின் தலைமையில் கூடிய நமது தரப்பில் வீர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது, பீமன் தலைமையில் அவர்கள் எண்ணிக்கை அதன் எதிரில் ஒன்றுமேயில்லை. எனவே ஆசிரியரே, வீரர்களே எந்த நிலையிலும் பீஷ்மரை காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

அவன் மகிழ்ச்சியை மேலும் கூட்டுவது போல அதே சமயத்தில் குரு வம்சத்தின் பிதாமஹர் எனும் குல மூத்தவர், பீஷ்மர் சங்கத்தை எடுத்து ஊதினார். சிம்ஹ நாதம் போன்று ஒலித்த அந்த நாதத்தைத் தொடர்ந்து மற்றும் பலரின் சங்க நாதங்கள் ஒலிக்கத் தொடங்கின. பேரி எனும் வாத்யங்கள் முழங்கின. பணவான், கோமுகம் எனும் வாத்யங்களும் ஒலித்தன- ஒரே சமயத்தில் எழுந்த இரைச்சல்.

அதே சமயம் பாண்டவ வீரர்களும், க்ருஷ்ணரும் வெண் புரவிகளில் வருகிறார்கள். ஹ்ருஷீகேசன் -ஸ்ரீ க்ருஷ்ணர் பாஞ்சஜன்யம் என்பதையும், தனஞ்ஜயன் – அர்ஜுனன் அதே போல தன் தேவதத்தம் எனும் சங்கத்தையும் எடுத்து சங்க நாதம் செய்கிறான். ஒவ்வொருவரும் அவரவர் சங்கத்தை ஊதுகிறார்கள், பீமன் தன்னுடைய சங்கம் பௌன்ட்ரம் என்பதை ஊதுகிறான். , யுதிஷ்டிர் அனந்த விஜயம், நகுல சஹதேவர்கள், சுகோஷ, மணி புஷ்பகம் என்ற பெயர்களுடைய சங்கங்களை ஊதுகிறார்கள்.

காசி ராஜா, சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராடன் மற்றும் அவர்கள் தர்ப்பில் உள்ள பெரும் வீர்கள் அனைவரும் தயார் என்பது போல தங்கள் சங்கங்களை ஊதுகிறார்கள். ஏக காலத்தில் எழுந்த ஒலி, தார்தராஷ்டிர்கள்- உங்கள் மைந்தர்களை நிலை குலைய செய்து விட்டது போலத் தோன்றுகிறது அரசே. கௌரவர்களின் தரப்பு வீரர்களை பார்த்தவாறு, தன் ரத சாரதியான க்ருஷ்ணரிடம், அர்ஜுனன் ஏதோ சொல்கிறான். அவனுடைய கொடியில் கபி-குரங்கு தெரிகிறது. (ஆஞ்சனேயர் கொடியில் அமர்ந்தாக பொருள்)

அர்ஜுனன் சொல்கிறான்:-

யுத்தகளத்தின் நடுவில் நின்று எதிர் தரப்பினரை பார்த்த அர்ஜுனன் மனம் தடுமாறுகிறது – என்ன செய்யத் துணிந்தோம் – நம் பாட்டனாரும், சகோதர்களும், மாமன், மருமகன் போன்ற உறவினர்களும், குரு நாதர்களும் எதிர் தரப்பில்– இவர்களையா கொல்லத்துணிந்து போர் செய்யப் போகிறோம் – க்ருஷ்ணா , வேண்டாம் – என்னால் முடியாது என்று கண்ணீர் மல்க வேண்டியபடி தேர் தட்டில் அமர்ந்து விட்டான்.

யுத்தகளத்தில் தன் படை வீரர்கள் எண்ணிக்கையில் எதிரி சேனையை விட அதிகமாக இருப்பதைக் கண்டு இறுமாப்பு கொள்கிறான் துரியோதனன். அதே காட்சியைக் காணும் பாண்டவ வீரன் பார்த்தனோ பதறுகிறான்.

மனித மனத்தின் இரு எல்லைகள் இதுவே. ஒரே விஷயத்தை அல்லது செயலை பார்க்கும் இருவரின் கண்ணோட்டம் எவ்வாறு வேறு படுகிறது. இதுவே கீதை பிறக்க காரணமாக இருந்த குருக்ஷேத்ர யுத்த களம்.

பீஷ்மர் சங்க நாதம் செய்து ஆரம்பித்து வைக்கிறார். மற்ற அனைவரும் தாங்களும் தயார் என்பது போல சங்கங்களை ஊதுகிறார்கள். அர்ஜுனன் ரதத்தை நடுவில் நிறுத்து, நான் யார் யார் , துரியோதனுக்காக யுத்தம் செய்ய வந்துள்ளார்கள் என்பதைப் பார்க்கிறேன் என்றான். ரத சாரதியாக வந்துள்ள க்ருஷ்ணனும் அவ்வாறே செய்கிறான்.

சஞ்ஜயன் அரசருக்கு விவரிக்கிறான். அரசே, சாரதியும் அவ்வாறே பீஷ்ம துரோணர் மற்றும் கௌரவ சேனை நடுவில் ரதத்தை நிறுத்தினான். சுற்றிலும் இருப்பவர்கள் அனைவரும் உறவினர்களே – பாட்டனார், ஆசிரியர்கள், மாமன் மச்சான் உறவு முறை கொண்டவர்கள், சகோதரர்கள், நண்பர்கள், மகன், பேரன் என்று குலத்தின் இளையவர்கள், பெண் கொடுத்த சம்பந்திகள், அனைவருமே என் நலனில் கருத்துடையவர்கள். என் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டவர்கள்.

இவர்கள் பேராசை, இந்த இழிந்த செயலைச் செய்யத் தூண்டுகிறது என்றால் நாமும் அதைச் செய்ய வேண்டுமா?

குலம், அழியும். ஒரு குலம் அழிவதால் ஏற்படும் தோஷம், மித்ர துரோகம் என்பதை விடக் கொடியது. அண்டியவனை அழித்தல், நம்பினவனை கைவிடுதல் போன்ற பாபங்கள் இதற்கு எதிரில் ஒன்றுமேயில்லை எனும் அளவு கொடியது. நாம் இந்த பாபத்திலிருந்து எப்படி விடு படுவோம். என்ன செய்வோம்? ஜனார்தனா ! குலமே அழியும் என்று அறிந்த பின் இந்த செயலை நாம் ஏன் செய்ய வேண்டும்.

குலம் அழிந்தால் குல தர்மம் அழியும். அதர்மம் தலை விரித்தாடும்.

இதனால் துன்பப்படப் போவது நம் குலப் பெண்களே. பாதுகாப்பின்றி பெண்கள் என்ன செய்வார்கள்? பெண்களின் நிலை பரிதாபமாகும். இவர்களை அதர்மமாக பயன்படுத்தினால் குலம் என்று முழுதுமாக இருக்குமா? வாரிசுகள் எப்படி வளரும்? குடும்பம் என்ற ஒழுங்கை குலைத்து அழிப்பவனும், நரகத்துக்கே போவான். இப்படி முறையற்ற ஒரு நிலையை அடைந்தவர்களும் என்ன செய்வார்கள்? அவர்களும் நிரந்தரமாக நரகத்துக்கு சமமான வாழ்வையே வாழ்வார்கள்.

காலம் காலமாக வந்த மனித தர்மம் அழியும். பித்ருக்களுக்கு – முன்னோர்களுக்கு பிண்டம் போடுவது நிற்கும். (நீரளிப்பது) நிற்கும். அவர்கள் தவிப்பார்கள். ஜாதி தர்மாவது, குல தர்மமாவது, எதுவுமே இருக்காது.

(வ்ருஷ்ணி வம்சத்தில் வந்தவனே – வார்ஷ்ணேயா! கோகுலத்தில் பெண்களை கம்ச ராஜா வருத்தியதை நீ அறிவாய். தனக்கோ, தன் குழந்தைகளுக்கோ, மற்றவர்களுக்கோ எதுவும் மீதி வைக்காமல் கோகுலத்து பெண்கள் மதுரா அரசனான கம்சனுக்கே கோகுலத்து பசுக்கள் மூலம் கிடைத்த பால் முதலான அனைத்தையும் கொடுக்க வேண்டியிருந்தது. கம்சனிடம் இருந்த பயத்தால் அவர்கள் தொடர்ந்து பால் தயிர், வெண்ணெய் முதலியவைகளை மதுரா கொண்டு சென்றனர். அதைத் தடுக்கவே. வெண்ணெய் உண்பவனாக மற்ற கோகுலத்து சிறுவர், சிறுமியர்களையும் கூட்டி வெண்ணெயை அபகரித்தாய்.

கோகுலத்துப் பெண்களை கம்சனின் அரச குலத்தோர், சிறுமை செய்வதை தடுத்தவன் நீ. அந்த வகையில் பெண்கள் உரிமை என்பதை முதன் முதலில் பேசியவனும் நீயே. எனவே குலம் அழிந்து போவதால் பெண்கள் துன்பமடைய பொறுப்பாயா)

அஹோ – (அலறுகிறான்) – பெரும் பழிச் செயலை செய்வோமா? ராஜ்ய சுகம் அவ்வளவு பெரிதா? என்ன பேராசை? தன் மக்களை அழித்து அரசனாவோமா?

இப்படி பலவும் எண்ணிய அர்ஜுனன் என் தேகம் நடுங்குகிறது. இவர்களைக் கொன்று நான் வெற்றியைக் கொண்டாடுவேனா? என்னால் முடியாது என்று சொல்லியபடி ரத தட்டில் அமர்ந்து விட்டான்.

எனக்கு வெற்றி வேண்டாம். நாம் இந்த வெற்றியை எப்படி கொண்டாடுவோம். நாம் பெற்ற வெற்றியை பகிர்ந்து மகிழ்ச்சி கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள், சம்பந்திகள், இளையவர்கள் அனைவரும் எதிர் தர்ப்பில். இவர்களைக் கொன்று நான் எதை சாதிக்கப் போகிறேன். இதனால் என் குலமே அழியும்.. பிழைத்தவர்கள் மத்தியில் என்ன பேச்சு இருக்கும். என்னை தூற்றுவார்கள். வேண்டாம். யாராவது அம்பெய்தி என்னை கொன்று விட்டால், நான் மகிழ்வேன்.

இவ்வாறு சொன்னவன், தன் வில்லை கீழே வத்து விட்டு ரதத் தட்டில் அமர்ந்து விட்டான்.

(இது வரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்யா எனப்படும் பகுதியில், யோக சாஸ்திரத்தில் க்ருஷ்ண அர்ஜுன சம்வாதம் -சம்பாஷனை – எனும் முதலாவது அத்யாயம்)

ஸ்ரீமத் பகவத் கீதை-அத்யாயம் 2– சாங்க்ய யோகம்

சஞ்சயன்:

அரசே, இப்படி தன் மக்கள், என்று கருணையால் கண்களில் நீர் பெருக மனம் வாடும் அர்ஜுனனைப் பார்த்து மதுசூதனன் ஏதோ சொல்கிறான். இருவரும் பேசுவதை கேட்டு, அட்சரம் பிறளாமல் அரசரிடம் தெரிவிக்கிறான்.

(சஞ்சயன் த்ருதராஷ்ட்ர ராஜாவுக்கு நடந்ததை நடந்த படி சொல்லும் தகுதியை பெற வியாசர் அருளால் அதற்கான விசேஷ கண் பார்வையை பெற்றவர்.)

அர்ஜுனன்:

எப்படி நான் பீஷ்மர் பேரில் அம்பை விடுவேன்? துரோணர் எனக்கு வில் வித்தயை கற்பித்தவர். அவர் மேல் தான் எப்படி என் அம்பை செலுத்துவேன்? இவர்கள் என் மதிப்புக்குரியவர்கள் க்ருஷ்ணா – இப்படி என் குரு, பாட்டனார் இவர்களைக் கொன்று நான் என்ன நன்மையை அடைவேன்? இவர்கள் அடிபட்டு ரத்தம் சொட்ட இருக்கும் பொழுது நான் நிம்மதியாக சாப்பிடவா முடியும்? இதில் யார் ஜயிப்போம், யார் தோற்போம் என்றும் தெரியாது. எவரின்றி நாம் வாழவே விரும்ப மாட்டோமோ அவர்கள் தான் யுத்த களத்தில் எதிரில் நிற்கிறார்கள். என் மனம் நடுங்குகிறது, செய்வதறியாது தவிக்கிறேன். க்ருஷ்ணா! நீ தான் சொல், நான் என்ன செய்ய? இதில் எதில் நன்மை, உன் சிஷ்யனாக இருந்து கேட்கிறேன். எனக்கு கட்டளை இடு.

இப்படித்தான் ராஜ்யம் பெற வேண்டுமா? என் மனமே வருந்தி தவிக்க, எனக்கு துளிக் கூட சம்மதமில்லாமல் ஒரு செயலைச் செய்து, எதிரிகள் இல்லாமல் தேவ ராஜ்யமே கிடைத்தால் கூட நான் எப்படி மகிழ்ந்து இருப்பேன்.

சஞ்ஜயன்:

அரசே! இப்படி சொன்னவன், நான் சண்டை போட மாட்டேன் என்று சொல்லி விட்டு, மௌனமாக இருந்து விட்டான். அவனைப் பார்த்து, பாட்டனார் முதல் சகலரும் எதிரி தரப்பில் உள்ளது தெரிந்தது தானே, கண் எதிரில் காணும் போது தடுமாறுவது சகஜம் தான் என்று நினைத்தோ, சற்றே சிரித்தபடி, இரு சேனைகளுக்கும் இடையில் நின்றபடி ஹ்ரிஷீகேசன் பதில் சொல்கிறார்.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

குழம்பிய மனதுடன் அமர்ந்துவிட்ட அர்ஜுனுக்கு கண்ணன் சமாதானம் செய்கிறார். வேண்டாத விஷயங்களை நினைத்து, தேவையற்ற வருத்தம் அடைகிறாய். பெரிய அறிவாளி போல வேறு பேசுகிறாய்.

சங்கர பாஷ்யம் : இந்த குழப்பம் துரோணருக்கும், பீஷ்மருக்கும் கூட வர வேண்டிய குழப்பம் தானே. அவர்களும் தான் உன் குருவும், பாட்டனாரும் ஆவர். எடுத்து வளர்த்த குழந்தைகளை எதிர்த்து நிற்கிறோமே என்று அவர்கள் வருந்தவில்லை. ஏன் தெரியுமா? இருவருமே ஆத்ம ஞானம் அடைந்து ப்ரும்ம தன்மையை அடைந்து விட்டவர்கள். உலகியலில் உள்ள இன்ப துன்பங்களை கடந்து விட்டவர்கள்.

நீ இந்த சமயம் பின் வாங்குவது உன் குலத்திற்கும் அழகல்ல, யுத்தத்தில் மரணமடைந்து பெறும் ஸ்வர்கமும் கிடைக்காது, உனக்கு புகழும் தராது. உயிருடன் இருப்பவன், மரணமடைந்தவன் என்று, விஷயம் அறிந்தவர்கள் கவலைப் படுவதில்லை.

இதற்கு முன் நான் இருந்தேனா ? நீ தான் இருந்தாயா, அல்லது இந்த வீரர்கள், தலைவர்கள் இருந்தார்களா? நாம் அனைவருமே இன்னும் வரும்காலத்திலும் இருப்போமா?

பிறந்த அனைவரும், குழந்தை பருவம், இளமை, முதுமை என்று மாறுவது போலவே அடுத்த நிலையாக உடலைத் துறந்து செல்வதும் இயற்கையே. குழந்தையாக இருந்த உடலா தற்சமயம் உள்ளது ?

நடுக்கும் குளிர், வாட்டும் கோடைக் காலம், இவை சரீரத்தை பாதிக்கின்றன. சுக துக்கங்கள் மனதை வருத்துகின்றன. வருவதும் மறைவதுமாக இருக்கும் இது போன்ற இரு எதிர் நிலைகள், இவைகள் நிரந்தரமல்ல. போகிற போக்கில் நம் மேல் படும் தொடு உணர்வே – அதற்கு மேல் அவை நிரந்தரமல்ல. இந்த உணர்வை இயல்பு என்று எண்ணி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் இருப்பதே நன்று. இவ்விரண்டு விதமான தன்மைகளிலும் சமமாக இருப்பவன் – அதாவது துக்கம் என்று ஒரேயடியாக வருந்தாமலும், சுகம் என்பதில் ஒரேயடியாக திளைக்காமலும் இருப்பவன்- அமரத்வம் அடைகிறான்.

அது எப்படி சாத்யம் என்பதை விளக்குகிறார் ஸ்ரீ சங்கரர் தன் பாஷ்யத்தில். உண்மையில் இவைகள் – குளிர், அல்லது வெப்பம் எனும் உணர்வுகள் மற்றொன்றின் வெளிப்பாடே – நமது மனம் உணர்ந்து நாம் அனுபவிப்பது. ஒருவருக்கு குளிர் மற்றொருவருக்கு அதே அளவு பாதிக்காமல் இருக்கலாம். வெப்பம் என்று உணர்வதை மற்றொருவர் சுகமாக நினைக்கலாம். எனவே இதன் அடிப்படை வேறு.

சுகம், துக்கம் என்று நீ அனுபவிப்பதும் அவ்வாறே. இதுவும் எல்லோருக்கும் ஒரே விதமாக இருப்பதில்லை. அவரவர் மனப் பான்மையை, சந்தர்பத்தை பொறுத்து சுகம் என்றோ, துக்கம் என்றோ அனுபவிக்கிறார்கள்.

இதற்கு உதாரணமாக கயிற்றில் பாம்பை காண்பதை சொல்கிறார்கள். இருட்டில் கயிறு பாம்பாக தோற்றமளிக்கிறது. அதைக் கண்டு ஏற்படும் பயம் உண்மை. அதுவே வெளிச்சத்தில் கயிறு என்று தெரிந்தவுடன் வரும் மன அமைதியும் உண்மையே. கயிறு இருக்கிறது. அதைக் கண்டு மிரண்ட பாம்பு இல்லை. ஆனால் பாம்பு என்ற நினைவு இருந்தவரை அனுபவித்த பயம் உண்மையே. எனவே நமது அறிவு ஒரு எல்லைகுட்பட்டதே. உண்மை தெரிந்து ஆஹா , வெறும் கயிறு, இதைப் பார்த்தா பயந்தோம் என்ற அறிவு- ஞானம் வரும்போது சாதாரண மனிதன் அடையும் நிம்மதியை, உலகையே வெறும் தோற்றமே எனக் காணும் பேறு பெற்ற ஞானிகள் , அடைகிறார்கள். அவர்களே அமரத்வத்தை அடைகிறார்கள்.)

नासतो विद्यते भाव: नाभावो विद्यते सत: | उभयोरपि दृष्टोऽन्तरनयो: तत्व दर्शिभि: ||

இது சற்று கடினமான அர்த்தம் கொண்ட ஸ்லோகம். நம் அறிவுக்கு புலனாவது ஒன்று. அதன் இயல்பான நிலை ஒன்று. இரண்டையும் அறிந்தவர்கள் தத்வ தர்சிகள் – அதாவது உண்மையான ஞானத்தை அடைந்தவர்கள்.

இவையனைத்தயும் படைத்தும், செலுத்தியும் வருவது- ஒரு சக்தி – ப்ரும்மம் -அது அழியாதது என்று அறிவாய்.

குழம்பாதே, உலகில் பிறந்த உயிரினங்கள் ஒரு நாள் மறையத்தான் வேண்டும். இது தான் இயற்கை என்பதை அறியாதவனா நீ. நீ அழிக்கப் போவது உடலையே. அதனுள் உறையும் ஆத்மா அழிவில்லாதது. அதனால் தயக்கம் எதுவுமின்றி போர் செய். எழுந்திரு.

அழிப்பவன் தான் அழித்து விட்டதாக சொல்வதும் அவன் உடலையே, , அழிபவனும் உடலைத் தான் விடுகிறான்., ஆத்மா விடுதலை அடைகிறது. காலம் அதை அழிக்காது அடிபட்டாலும் உடல் வலி அதற்கு இல்லை. ஆத்மா அழியாதது – பிறவியற்றது, என்றும் உள்ளது எனும் பொழுது எவரும் கொலை செய்வதும் இல்லை, கொலை செய்யப்படுபவனும் இல்லை.

குழந்தை பருவம், யௌவனம், முதுமை என்று மாறும் உடல், காலம் வரும் பொழுது இந்த உடலையே தியாகம் செய்து விடுகிறது. பழைய நைந்த ஆடைகளை மனிதன் களைவது போல நைந்த உடலை துறந்து விட்டு புது உடலை கண்டடைகிறது. நீ கொல்லப் போவதாக நினைத்து கலங்குகிறாயே அது அந்த ஜீவனின் உடலையே – அதன் ஆத்மா விடுதலை பெற்று விடுகிறது. பரமாத்மாவுடன் இரண்டற கலந்து விடுகிறது. பரமாத்மாவின் அம்சமே ஜீவன்களில் ஆத்மாவாக உள்ளது.

அக்னியோ, வாயுவோ, அல்லது மற்ற இயற்கை சீற்றங்களோ அதை வாட்டாது. கத்தி முதலான ஆயுதங்களால் பாதிக்கப்படாது. உடலில் படும் காயங்கள் ஆத்மாவை பாதிக்காது.

அதனால் ஜீவன்களின் பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. நாம் செய்யக் கூடியதும் எதுவும் இல்லை. இதை உணர்ந்து க்ஷத்திரியனாக, யுத்தம் செய்ய வந்தாய், அதைச் செய்.

பிறக்கும் முன் என்னவாக இருந்தோம்? தெரியாது, இறந்த பின் என்னவாக ஆவோம் – அதுவும் தெரியாது. இடைப் பட்ட இந்த நிகழ் காலத்தையே நாம் அறிகிறோம்.

ஏதோ எண்ணி கலங்கி செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டால் உன் கடமையை மறந்தவனாகிறாய். க்ஷத்திரியனாக உனது கடமை – அதை செய்து தான் ஆகவேண்டும். மிஞ்சிப் போனால் என்ன நடக்கப் போகிறது ? ஜயித்தால் ராஜ்யத்தை திரும்ப பெறுவாய் – தோற்றால் யுத்தத்தில் உயிரை விட்டு வீர சுவர்கம் அடைவாய். யுத்தம் செய்து மரணம் அடைவது க்ஷத்திரியர்களுக்கு உகந்ததே. பற்றின்றி உன் கடமையை செய், நமக்கு விதிக்கப் பட்ட கடமையை செய்வது வரை தான் நமது பொறுப்பு – பலன் என்ன என்று முன் கூட்டியே எதிர் பார்த்தால் , அது கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம் – அதுவும் யுத்தம் செய்யும்போது வெற்றி தோல்வி இரு சாராருக்கும் பொதுவே.

இவ்வளவு தூரம் வந்து விட்டு யுத்தம் செய்ய மறுத்தால் கோழை என்று தூற்றுவார்கள். மரணத்தை விட கொடியது அது. மதிப்போடு வாழ்ந்தவனுக்கு இந்த இகழ்ச்சி பொறுக்க முடியாது. பயந்து ஓடி விட்டான் என்பர். தேவையா இந்த கெட்ட பெயர்? யோசித்துப் பார்.

சுகம், துக்கம், லாபம் நஷ்டம் என்ற கணக்கெல்லாம் வேண்டாம். யுத்தம் செய்ய வந்தாய், அதை முழு மனதோடு செய்.

இது வரை சொன்னது சாங்க்யம் எனும் யோக முறையில் பர தத்வத்தை புரிந்து கொள்வது. அதுவே புத்தி யோகம் – . புத்தி அல்லது ஞானம்.

மனதில் சஞ்சலம் வரும். அதில் கட்டுபடாதே. பயப்படாதே. உழைப்பு தான் மன குழப்பத்தை தீர்க்கும். புத்தி யோகம் அதாவது செய்யும் செயலில் ஈடுபாடு- மோக்ஷத்துக்கு வழி காட்டும். இதில் நஷ்டம் எதுவுமில்லை. முதல் காரியமாக பயம் போகும், மனதில் தெளிவு உண்டாகும். குரு நந்தனா! யோக சாதனையே பரமானந்தத்தைத் தரும். பலவிதமான வழிகள், கொள்கைகள், மோக்ஷத்துக்கு வழி காட்டுவதாக சொல்லும். அவை நம்பத் தகுந்ததல்ல.

பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப் பட்டு இனிமையான வார்த்தைகளால், வேதமே ஆனாலும் அதன் உட்பொருளை அறியாமல் கண் முன் தெரியும் இந்த உலகமே உண்மை என்பர். சுக துக்கங்கள் வினைப் பயனே – வினை அல்லது ஒருவனின் கர்மாவே பலன் அளிக்க வல்லது. நல் வினையின் பயன் ஸ்வர்கமே என்பர். இது அவர்களின் அறிவின் எல்லை என்று கொள்ளலாம். இவர்களுக்கு சாதனையில் மனம் செல்லாது.

அறிவு என்றும் உடன் இருப்பது. திருட்டு போகாது. எதிர் காற்று வந்து அடித்துக் கொண்டு போகாது. (இந்த கஷ்டங்கள் விவசாயிகள் அனுபவிப்பது- விளைந்த பயிரை முழுவதுமாக அறுவடை செய்யும் முன் இந்த இடையூறுகளை அனுபவிக்கிறார்கள்)

வேதம் மூன்று குணங்களைப் பற்றி பேசுகிறது. ப்ரும்ம ஞானம் இந்த மூன்றையும் விடச் சொல்கிறது. (மூன்று குணங்கள்- சத்வ, ரஜஸ், தமஸ் என்பவை) உடல் சம்பந்தமான அனுபவங்களை தாண்டி வா. அவைகள் க்ஷண நேர அனுபவங்களே – ஒரே நிலையில் மனதைக் கட்டுப் படுத்தி என்றும் உண்மையாக, நேர்மையாக இரு.

அடுத்த ஸ்லோகமும் கடினமானதாகத் தோன்றியது. காஞ்சி மஹா ஸ்வாமிகளின் விளக்கம் தெளிவாக புரிய வைத்தது.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது அல்லது மிகப் பெரிய நீர் நிலை, அதில் தளும்ப நீர். அதன் அருகில், சிறு குளம்- ‘உதபானே ‘என்பதற்கு குறைவான நீர் கொள்ளும் ஒரு பாத்திரம்- குளமாகவும் இருக்கலாம் அல்லது கையில் வைத்திருக்கும் குடம் நீராகவும் இருக்கலாம்.

சுற்றிலும் நீர் நிறைந்துள்ள இடத்தில் கையிலுள்ள குடம் நீருக்கு என்ன மதிப்பு? அல்லது பயன். குடிக்கலாம் என்று கொண்டாலும், அதே நீர் தான் இதிலும். அந்த அளவே வேத சாஸ்திர விற்பன்னர்களின் அறிவு ப்ரும்ம ஞானத்தின் முன்.

यावानर्थ उदपाने सर्वथ: सम्प्लुतोदके | तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानत: ||

யாவானர்த்த உதபானே சர்வத: ஸம்ப்லுதோதகே |

தாவான் சர்வேஷு வேதேஷு ப்ராம்மணஸ்ய விஜானத: ||

ச.பா: வெள்ளம் பெருக்கெடுத்து வரும் பொழுது, நீருக்காக அதன் அருகில் குளம், கிணறு வெட்டுவோம் என்று முனைய மாட்டார்கள். ராஜ்யத்தையே வெற்றி கொள்ள புறப்படும் அரசன், ஒரு துண்டு நிலத்துக்கு ஆசைப் பட மாட்டான். அதே போல ப்ரும்ம ஞானம் பெற விரும்பும் சாதகன், சாதனையின் நடுவில் பெறும் சிறு நன்மைகளை பொருட்படுத்தக் கூடாது,

வேதம் படித்தவனும் அந்த கல்வியில் கரை கண்டவனே. அவர்கள் கர்ம காண்டமான – யாக யக்ஞங்களை வலியுறுத்துகிறார்கள். ஸ்வர்கம் அடையலாம் என்பது இதன் பலன் – பலனை எண்ணியே இந்த யாக யக்ஞங்களை செய்கிறார்கள். அதுவும் அத்யாவசியமான செயலே. அது பல வழிகளில் ஒரு வழியே. அதன் மூலமும் என்னை அடையலாம் என்கிறார்.

ச,பா: செயல்களின் பலன் அவித்யை அல்லது அறியாமையை அகற்றும் அவ்வளவே. ஒருமுறை செய்த செயலின் நினைவு, எதிர்பார்ப்பு, அதில் கிடைத்த பலன் , தவறுகள், திருத்த வேண்டியவை எவை என்ற விவரங்களே அனுபவம் என்பது. ஒவ்வொருமுறையும் இந்த அனுபவம் செயலை இன்னும் மேம்படுத்திச் செய்ய உதவும்.

அடுத்த ஸ்லோகம் பலனையே எண்ணி செயல்களைச் செய்யாதே.

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन | मा कर्म फलहेतुर्भू: मा ते सन्गोऽस्त्वकर्मणे ||

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன |

மா கர்மபலஹேதுர்பூ: மா தே சங்கோஸ்து அகர்மணே ||

சாதாரணமாக நாம் விரும்பும் செயல்களைச் செய்யும் பொழுதே, அதைச் செய்வது வரை தான் ஒருவன் தன் மனம் விரும்பியபடி செய்யலாம். அதன் முடிவு எப்படி வரும் என்பதை ஓரளவுக்கு மேல் அனுமானிக்க முடியாது. அதிகமான பலனை எதிர்பார்த்து கிடைக்கவில்லையெனில் ஏமாற்றமும், மன சோர்வும் தான் மிஞ்சும். அதற்காக செய்யவே வேண்டாம் என்று விடவும் முடியாது.

மனமார்ந்த நம்பிக்கையுடனும், நல்லெண்ணத்துடனும் விதி முறைகளை அனுசரித்து நேர்மையாக உன் கடமையைச் செய். தனஞ்ஜயா! வெற்றியா தோல்வியா என்ற கவலை இல்லாமல் யோகத்தில் இருந்து செய். இந்த இரண்டையும் வெற்றி அல்லது தோல்வி- சமமாக பார்ப்பது யோகம் -devotion- அல்லது ஈடுபாடு எனப்படும்.

தொலை நோக்கோடு பார். புத்தியை பயன்படுத்தி எது தேவை எது தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்.

உயிரினங்கள் பிழைத்திருக்கவும், கவலையின்றி வாழவும் வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு யாக யக்ஞங்கள் செய்யப் படுகின்றன. இதனால் மனித குலம் பெறும் நன்மையும் அளவில்லாதது.

இந்த ஸ்வர்கம் எனும் ஆசை கூட இல்லாமல் நீ உன் கடமையைச் செய். எந்த சபலத்துக்கும் நீ காரணமாக இருக்காதே. கடமையை செய்யாமல் இருக்கவே வேண்டாம்.

செயல் நன்மையாக முடிந்ததா, தவறா என்று யோசிக்காதே. இந்த இரண்டும் பாதிக்காத மன நிலை தான் யோகியுடையது. தனஞ்ஜயா! கடமையை செய்யும் வரை தான் உனக்கு அதனுடன் உள்ள தொடர்பு. அதனால் யோகியாக செயல் படு.

யோகம் என்பது என்ன? செய்வன திருந்தச் செய் – அவ்வளவே. ஞானத்தை அடைந்தவன் வினைப் பயன் என்ற ஒன்றை நம்புவதில்லை. அவர்களுடைய நாட்டம் பரப்ரும்மத்தை அறிவதே. பிறவி எனும் பெருங்கடலை கடப்பதேயாகும்.

இதுவரை நீ அறிந்ததிலும், செயல்களிலும் அலுப்பு தட்டும் பொழுது அடுத்து என்ன என்று யோசிப்பாய். இன்னமும் நாம் அறியாதது உள்ளது என்று உணர்வாய். ஆத்ம விசாரம் – தான் யார்? நான் என்பது என்ன என்று யோசிக்கத் துவங்குவாய். ஆழ்ந்து ஆராயத் தொடங்குவாய். வாழ்வில் இது நாள் வரை செய்த எதுவும் முழு திருப்தியை தராத நிலையில் என்ன செய்தால் மன சாந்தி கிடைக்கும் என்ற எண்ணம் வரும். திடமான மனதுடன் சாதனை செய்யும் யோகிகள் போல ஆவாய். தியானத்தில் மனம் அமைதி அடையும்.

அர்ஜுனன் வினவுகிறான்.

திடமான மனதுடையவர் யாவர்? அவர்கள் மொழி என்ன? தியானத்தில் மனதொன்றி இருப்பது எப்படி சாத்யம்? அதன் பொருட்டு என்ன விதிகள், நியமங்கள் உள்ளன? ஸ்தித தீ: -அசையாத மனதுடையவர் என்று சொல்லப்படும் சாதகன் அந்த சமமான மன நிலையை எப்படி அடைகிறான்? அதனால் அவர் பெறுவது என்ன?

பகவான் பதில் சொல்கிறார்.

தனக்கென்று எந்த ஆசையும் இன்றி, அனைத்தையும் துறந்தவன். தன்னிடம் இருப்பதிலேயே திருப்தி அடைபவன். அவனே ஸ்தித ப்ரக்ஞன்.

துக்கம் என்று அவன் மனம் வருந்தாது. சுகம் என்று துள்ளி குதிக்கவும் மாட்டான். ஆசை, பயம், க்ரோதம் போன்றவை அவனை அலைக்கழிக்க விட மாட்டான். அவனே திட மனத்தினன்- ஸ்தித தீ:

அனைவரிடமும் ஒரே விதமான சினேக பாவத்துடன் இருப்பவன். அந்தந்த நேரங்களின் சுபமோ, சுபம் அல்லாததோ அப்படியே ஏற்றுக் கொள்வான். யாரையும் வெறுக்க மாட்டான். எவரையும் அளவுக்கு அதிகமாக நேசிக்கவும் மாட்டான்.

ஆமை தன் அங்கங்களை சுருக்கிக் கொள்வது போல தன் புலன்களை அடக்கிக் கொள்வான்.

ஆகாரத்தை விட்டு, விரதம் இருக்கும் மனிதர்கள் கூட அந்த ஆகாரத்தின் வாசனையை மறக்க முடியாது, மறப்பதும் இல்லை. விரதம் முடிந்தவுடன் அதே, முன் சுவைத்த ருசியான உணவுகளைத் தான் தேடுவார்கள். ப்ரும்ம ஞானம் அடைந்த பெரியவர்கள், அந்த வாசனையையும் துறந்தவர்கள்.

புலன்கள் அனுபவிப்பதை துறப்பது என்பது எளிதல்ல. கௌந்தேயா! முயன்று தோற்றவர்களே அதிகம். உலக விஷயங்களில் பற்று அதிக சக்தியுடன் மனிதனை மாற்றக் கூடியது. அதை வெல்வது என்பது மிக் கடினம்.

(ப்ரும்ம ஞானம் என்பது அஹம் ப்ரும்மாஸ்மி – அந்த ப்ரும்மும் நானே என்ற மனப் பக்குவத்தை அடைந்தவர்கள். உலக ஆசையை அறவே விட்டவர்கள். அவர்களால் என்ன லாபம்? அந்த மனப் பக்குவத்தை அடைந்தவர்கள், மற்ற சாதாரண ஜனங்கள் போலவே தோற்றத்தில் இருந்தாலும் உலக நன்மைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருப்பர். இது பற்றியும் பின்னால் விவரமாக சொல்கிறார் பகவான்.)

இதையும் என்னிடத்தில் நம்பிக்கை வைத்தவன் சாதிக்கிறான். மன அடக்கம் உள்ளவனே புலன்களையும் அடக்குகிறான். அவன் புத்தி தான் ஸ்திரமானது என்கிறோம்.

அதில் என்ன தப்பு என்று கேட்கிறாயா? உலகில் பிறந்தவர்கள் கண் பார்ப்பதையும், காதுகள் கேட்பதையும், வாய் ருசியை விரும்புவதையும் ஏன் மறுக்க வேண்டும்?

இது ஒருமுறை அனுபவித்தால் அடங்காது. மேலும் மேலும் ஆசையை வளர்க்கும். கிடைக்காத பொழுது கோபத்தைக் கிளறும். கோபம் தாபத்தை கொடுக்கும். புத்தி அதே நிலையில் இருந்தாலும் மேற்கொண்டு அறிவு வளர்ச்சியோ, சாதனைகளோ செய்ய முடியாது. அதனால் தான் நிம்மதி வேண்டுமானால், ஆசையை அடக்கு என்று சொல்கிறோம்.

சாந்தமாக இருந்து சிந்திப்பவன் புத்தி நல்ல வேலை செய்யும். அவனால் பல காரியங்களை உலக நன்மைக்காக செய்ய முடியும். அதுவே தன்னிஷ்டப்படி நடப்பவன், தன் சுகங்களையே பெரிதாக நினைப்பவன் செய்ய நினைத்தாலும் நற்காரியங்களை செய்ய விடாமல், காற்று வீசும் போக்கில் செல்லும் ஓடம் போல ஆவான்.

அடுத்த ஸ்லோகமும் கடினமானது.

या निशा सर्व बूतानाम् तस्याम् जाग्रति सम्यमि | यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुने: ||

யா நிசா சர்வ பூதானாம் தஸ்யாம் ஜாக்ரதி ஸம்யமீ |

யஸ்யாம் ஜாக்ரதி பூதானி சா நிசா பஸ்யதோ முனே: ||

உயிரினங்கள் அனைத்தும் உறங்கும் இரவு, தன்னை உணர்ந்த முனிவனுக்கு பகல். அவை விழித்திருக்கும் நேரம் அவனுக்கு இரவு.

ச.பா: இரவு இயல்பாகவே தாமஸம் என்னும் அறியாமை. அதனால் பொருள்களை சரிவர புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. அறிவு உள்ளவன், அந்த இருட்டிலும் கண்டு கொள்கிறான். மிகப் பெரிய உண்மை- பர ப்ரும்மம் என்பது இருட்டுக்கு உதாரணமாக சொல்லப் படுகிறது. இது சாதாரணமாக இருளில்- அறியாமையில் மூழ்கி இருப்பவர்களுக்குத் தெரியாது. ஆனால் ப்ரும்ம ஞானி அறிகிறான் அதாவது விழித்திருக்கிறான்- எனவே அது அவனுக்கு பகல். .

அறியாமையில் மூழ்கி இருப்பவன் இருளில் இருப்பவன். அதே நேரம் மெய்யறிவு அடைந்தவன் அந்த இருளில் வாடுவதில்லை. உலக இயலில், பொருள் ஈட்டுவதிலும், சிற்றின்பங்களிலும் ஈடுபடுபவன், விழித்திருப்பதாக வைத்துக் கொண்டால் அதில் நாட்டம் இல்லாத மெய்யறிவுடையவன் இருளில் இருக்கிறான்.

அது எப்படி என்றால், மேலும் மேலும் நீர் வந்து நிரம்பிக் கொண்டிருக்கும் சமுத்திரம் அசைவற்று அவைகளை ஏற்றுக் கொள்கிறது. அதே போல காமங்கள்-ஆசைகள் மற்றும் தேவைகள் அந்த ஞானியிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவது இல்லை. அவனிடம் அடங்கி விடுகிறது. சாதாரண மனிதர்கள் அதில் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள். தான் என்ற அகங்காரம் இன்றி உலகில் இயல்பாக நடந்து கொண்டிருக்கும் சாதகன் தான் மெய்யறிவை பெற்று சாந்தமாக இருக்கிறான்.

பார்த்தா! இது தான் ப்ரும்ம ஞானம் அதாவது மெய்யறிவு, அதை அடைந்தவன் எப்பொழும் ஆனந்தமாக இருப்பான். துன்பம் அவனை அணுகாது. வாழ்வின் இறுதி காலத்திலும் ப்ரும்ம நிர்வாணம் எனும் நிலையை அடைகிறான்.

(இது வரை ப்ரும்ம வித்யா எனப்படும் உபனிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், க்ருஷ்ண அர்ஜுன சம்வாதம் -சம்பாஷனை – என்பதில் சாங்க்ய யோகம் எனும் இரண்டாவது அத்யாயம்)

ஸ்ரீமத் பகவத் கீதை

அத்யாயம்-3 கர்ம யோகம்

பரமார்தம் என்றால் என்ன – க்ருஷ்ணா ! விவரமாக சொல்லு- அதை அறிய நான் என்ன செய்ய வேண்டும்? நீயே என் குரு – உபதேசம் செய் எனவும்,

ஸ்ரீ க்ருஷ்ணர் விவரமாக சொல்கிறார். உன்னையே உணர்ந்து கொள் – அதற்கான தகுதியை பெற புலன்களை அடக்குவதே முதல் படி. உலகில் பிறவி எடுத்தவன் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டு – அதை சரிவர செய்ய வேண்டும். அதிலும் பலனை நினைக்காமல் செய்வதே நன்மை தரும் – அதன் பின் சாதகனாக ஒருவன் எப்படி இருப்பான் என்பதை விவரிக்கிறார்.

ஆசை, பயம், கோபம், இவற்றை விட வேண்டும். புலன்களை அடக்கி மனதை ஸ்திரமாக கட்டுக்குள் வைத்திருப்பான் – என்று “ஸ்தித தீ: “ என்று சாதகணை வர்ணிக்கிறார்.

பயப்படாதே, எடுத்த காரியத்தில் பின் வாங்காதே – என்பது தான் இரண்டாவது அத்தியாயத்தின் சாரம்.

அத்யாயம் -3

சாஸ்திரங்களிலும் மற்றும் வழக்கில் உள்ளதுமான பல கடமைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் சொல்லப் படுகிறது. ஒவ்வொருவருக்கும் இந்த சமூகத்தில் ஒரு கடமை உள்ளது கடமையை ஏன் செய்ய வேண்டும் ? மனிதனின் வாழ்வின் தேவைகள் பல – அதை நிறைவேற்ற உழைக்க வேண்டியது பொதுவானது. அது தவிர, தன் நலன், சமூக நலன், தேசத்தின் நலன், தெய்வ , முன்னோர்கள் – இவர்களுக்கு செய்ய வேண்டியவை இவைகளும் கடமைகளே. இது தவிர ஆத்யாத்மிகமாக , யோக சாதனைகள் செய்வதும் , அறிவை வளர்த்துக் கொள்வதும் ஒரு சிலரேனும் ஏற்று செய்ய வேண்டியுள்ளது. அதன் பொருட்டு சாமான்ய கடமைகளை விட்டு தவம் செய்வது, சன்யாசம் மேற்கொள்வது போன்றவைகளும் அவசியமாகிறது. இரண்டுமே யோகம் – முனைந்து செய்யப் படுவதே. இவையே, கர்ம யோகம் என்றும், ஞான அல்லது சன்யாச யோகம் என்றும் சொல்லப்படுகின்றன.

இந்த இடத்தில் அர்ஜுனன் தன் சந்தேகத்தை கேட்கிறான்.

இந்த இரண்டில் எது உயர்ந்தது? தனக்கு விதிக்கப்பட்ட செயலை விடாமல் செய்யும் கர்ம யோகமா, அல்லது தன் அறிவின் மேம்பாட்டுக்காக ஏற்றுக் கொள்ளும் சன்யாஸமா? ஏதோ ஒன்றை நான் ஏற்று நடக்க வேண்டும் என்று தீர்மானமாக சொல் – என் மனம் குழம்பி இருக்கும் நிலையில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார் .

என்னைப் பொறுத்தவரை , இந்த உலகில் இரண்டு விதமாகவும் பகவானை அல்லது பரப்ரும்மத்தை அடையலாம். ஒன்று சாங்க்யம் என்ற ஞானம் மற்றொன்று கர்மம் அல்லது செயல், கடமையைச் செய்தல் – இரண்டுமே நல்ல வழிகளே. ஞான மார்கத்தில் செல்பவர்கள் சாங்கயம் என்ற சாதனைகளைச் செய்து ஞானம் பெறட்டும். யோகிகள் கடமையைச் செய்து அதே ஞானத்தை அடைந்து தன்னையறிவார்கள். தன்னையறிவது, என்பது தான் ப்ரும்ம நிலை. தத்வமஸி என்ற வேத வாக்யம்.

சங்கர பாஷ்யம்: ஞானம் கடமையை செய்வதை விட உயர்ந்தது, என்று அர்ஜுனன் நினைப்பது போல இந்த கேள்வி உள்ளது. சன்யாசிகளுக்குத் தான் ஞான யோகம் என்பதும் பொதுவான எண்ணம். ஆனால் பகவான் அப்படியல்ல எங்கிறார். இரண்டு வித்தியாசமான மனோ பாவம் கொண்ட மனிதர்களுக்கு இரண்டு விதமாக வழிகள் உள்ளதாகச் சொல்கிறார். அர்ஜுனனை கடமையைச் செய் என்றும், யுத்தம் செய் என்றும் வற்புறுத்திச் சொன்னவர், அதற்கு எதிராக ஒன்றைச் சொல்வதால் அர்ஜுனன் விளக்கம் கேட்கிறான். இரண்டு எதிரெதிரான வழிகள், ஒரு மனிதனால் இரண்டையும் கை கொள்ள முடியாது என்பது தெளிவு. நான் எதைத் தேர்ந்தெடுப்பது? வழிகள் வெவ்வேறானதால் சென்றடையும் இலக்கும் வேறு என்றாகிறது. கடமையைச் செய்து, அனுபவம் பெற்று ஞானம் அடைந்து பெறும் நன்மையை, ஞானம் பெற சாதனைகள் செய்தும் அடையலாம்,. முதலாவது சுற்று வழி, இரண்டாவது நேர் வழி. ஆனால் முதலாவது எளிது, இரண்டாவது கடினம்.

இதை அடுத்த ஸ்லோகத்தில் பகவான் சொல்கிறார்.

எந்த கடமையையும் செய்யவே ஆரம்பிக்காமலும், நான் சன்யாசி என்று மட்டும் சொல்லிக் கொள்வதாலும், ஒருவன் சித்தியை அடைய முடியாது.

ச.பா: கர்மா என்று இங்கு சொல்லப் படுவது வேத சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட யாகம் முதலானவை. முன் பிறவியில் செய்த பாபங்களைத் தொலைக்கவும், மனதை தூய்மையாக்கிக் கொள்ளவும் இவைகளைச் செய் என்று வேத சாஸ்திரங்கள் வகுத்துள்ள நெறிகளே இவை. மனம் தூய்மையானால் தெளிவான புரிதலும், அதைத் தொடர்ந்து நல்ல குணங்களும், அறிவும் வரும்.

இந்த கர்மாக்கள் சன்யாசிக்கு இல்லை. அதனால் சன்யாசி நைஷ்கர்ம்யன் – கர்மா என்ற பந்தம் இல்லாதவன் என்கிறார்கள். அதைத் தான் ‘கர்மணாமனாரம்பாத் ‘ எந்த செயலையும் செய்யவே ஆரம்பிக்காமல், நான் கர்ம பந்தத்தை தொலைத்து விட்டேன் என்பது அபத்தம் என்கிறார்.

ஒரு க்ஷண நேரம் கூட ஏதாவது செய்யாமல் மனிதன், மற்ற உயிரனங்கள் இருப்பதில்லை. அவனவன், அதனதன் இயல்பு படி ஏதோ செய்து கொண்டேயிருப்பதை அறிவோம்.

கர்மேந்திரியங்கள்- அவயவங்கள், கண் முதலானவை இவற்றை அடக்கி விட்டு மனதால் நினைத்துக் கொண்டே இருந்தால் அவன் செய்வது மித்யாசாரம்- ஏமாற்று வேலை எங்கிறார்.உண்மையாக செய்பவன் முதலில் மனதை அடக்க வேண்டும்.

உலகில் வாழவே, ஏதோ செய்து தான் ஆக வேண்டும். ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட தனக்கு முடிந்தை செய்வதே நன்று. யாக யக்ஞங்கள் செய்வது ஒரு பக்கம்- அதை வேத சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் செய்வார்கள். மற்றபடி சாதாரண மக்கள் செய்ய வேண்டியதும் சில உண்டு. ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதி யக்ஞங்களை செய்து தேவதைகளை திருப்தி செய்யுங்கள். அவர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். பரஸ்பரம் உதவி செய்து கொண்டு இஷ்ட காமங்களை அனுபவியுங்கள் என்றார். யாக யக்ஞங்கள் மூலம் தேவதைகள் மகிழ்ச்சியடைவார்கள். மழை பொழிவது, கால் நடைகள் பெருகுவது, பயிர் செழிப்பது போன்ற செயல்கள் தேவதைகள் அருளால் நடப்பது. இவைகளைப் பெற்றுக் கொண்டு தன் பங்கு செயலை- யாகத்தில் தேவதைகளை அழைத்து ஹவிஸ் என்பதைத் தருவதும், அதை அக்னி கொண்டு அவர்களிடம் சேர்ப்பிக்கும் என்பதும் யாகத்தில் ஹோமம் செய்வதன் பொருள். – செய்யாமல் விடுபவனை திருடன் என்கிறார்.

யாகத்தில் தேவதைகளுக்கு ஹவிஸ், மற்ற ஜீவன்களுக்கு அன்ன தானம் முதலியவை செய்து மீந்ததைத் தான் கர்த்தாவான வேத வித்துக்கள் உண்பார்கள். அதனால் அவர்கள் தூய்மையாகிறார்கள். அதுவே, தன் பொருட்டு மட்டும் சமைத்து உண்பவன், பாபத்தை உண்பவனாகிறான்.

அடுத்து உலகமே ஒரு சக்கரமாகவும், அது சுழலுவதையும் விளக்குகிறார்.

अन्नाद्भ्वन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव: | यज्ज्ञाद्भवति पर्जन्यो यज्ज्ञ कर्मसमुद्भव: |

कर्म ब्रह्मोद्भवम् विद्धि ब्रह्माक्षर समुद्भवम् | तस्माद्सर्वगतम् ब्रह्म नित्यम् यञ्जे प्रतिष्टितम् ||

அன்னம் – உணவே ஜீவன்களை வாழ வைக்கிறது. அன்னம் மழையினால் பெறப் படுகிறது. மழை வர யக்ஞங்கள் செய்யப் படுகின்றன- யக்ஞம் கர்மத்தை அடிப்படையாக கொண்டுள்ளது -கர்மா ப்ரும்மத்தில், ப்ரும்ம அக்ஷர சம்பவம் – இந்த சக்கரம் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கிறது.

இந்த சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். வேத வித்துக்களான அறிஞர்கள் மட்டுமன்றி, அனைவருமே இந்த சுழற்சியை பாதுகாக்கின்றனர். ஆத்மாவை அறிந்தவன், தனக்குள்ளேயே வாழ்பவன். அவனுக்குத் தான் செயல் என்று எதுவுமில்லை. அப்படி இருப்பவன் சன்யாசி அல்லது சாங்க்யன். எந்த செயலிலும் அவனுக்கு நாட்டமில்லை, பெறும் பலனும் இல்லை. எதைச் செய்யாமல் விடினும் நஷ்டமுமில்லை. நீ இன்னும் அந்த நிலையை எட்டவில்லை. அதனால் பற்றின்றி உன் செயலை செய். பற்றின்றி செயல்களைச் செய்தும் நல்ல கதியை அடையலாம். அப்படி சித்தி அடைந்தவர்கள் ஜனகர் போன்றவர்கள். ராஜரிஷி என்று அழைக்கப்படுபவர். தன் கடமையை விடாமல் செய்து மேன்மையடைந்தவர்கள் அவரைப் போன்றே வேறு சிலரும் உண்டு.

ச.பா: ஜனகர் ஏன் தன் கடமையை விடாமல் செய்தார், ப்ரும்மத்வம் எனும் மேல் படியை அடைய முயற்சிக்கவில்லை என்பதற்கு, சாந்தோக்ய உபனிஷதிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார் ஸ்ரீ சங்கரர்.

ஜனகர் போன்ற அறிஞர், நான்காவது வர்ணமான சன்யாசத்தை மேற்கொள்ள முடியாது. (பால்யம், யௌவனம், க்ருஹஸ்தம், சன்யாசம் என்ற நான்கு). க்ஷத்ரியர்களுக்கு அதற்கான ஒப்புதல் கிடையாது. ப்ராரப்த கர்மா-முன் வினை தான் ஒரு ஜீவனின் பிறப்பை நிச்சயிக்கிறது. அவருடைய முன் வினை காரணமாக ,க்ஷத்திரியனாக பிறந்தவர் அதே முன்வினையில் செய்த நற்காரியங்களின் பலனாகவோ, சாதனைகளாலோ ஞானத்துடன் பிறந்தவர். செய்யும் செயலை திருந்தச் செய்து தன் கடமையை செய்யும் பொழுதே அந்தராத்மா சுத்தமாக. ஆத்ம விசாரமும் செய்து வந்திருந்தவர். கடமையை அவர் விட்டால், மற்ற பிரஜைகளும் அவரை பின்பற்றுவர். அதனால் அவர் ப்ரும்மத்வம் என்ற அமரத்வம் அடையா விட்டாலும் மோக்ஷம் அடைவதில் தடங்கல் எதுவுமில்லை.

அர்ஜுனா! நீயும் க்ஷத்ரியன் – அதனால் எந்த காரணம் கொண்டும் ப்ரஜா ரக்ஷணம் என்ற செயலை விட முடியாது.

அரசனாக, அல்லது எதோ ஒரு துறையில் ஸ்ரேஷ்டனாக – முன்னிலையில் இருப்பவன் எதையெல்லாம் செய்கிறானோ, அதைப் பார்த்து சாதாரண ஜனங்கள் பின் பற்றுவார்கள். அவன் இது ப்ரமாணம்- இது நம்பத்தகுந்தது என்றால் அவர்களும் நம்புவார்கள்.

பார்த்தா! எனக்கு மூவுலகிலும் ஆக வேண்டிய காரியம் எதுவுமில்லை. இது வரை கிடைக்கப் பெறாததை இனி பெற வேண்டும் என்ற ஆசையும் இல்லை. ஆனாலும் நான் கர்ம மார்கத்தில் தான் இருக்கிறேன், செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

நான் எதுவும் செய்யாமல் விட்டால், உலகத்தார் என்னைப் பார்த்து பின்பற்றுவார்கள். உலகமே அழியும். உலகம் நிர்மூலமாக நானே காரணமாவேன்.

ஒரு விஷயத்தில் பற்று வைத்து உண்மையாக அதை நல்ல முறையில் செய்ய முயலும் சாதாரண மனிதனைப் போலவே சாதகனாக ஞான மார்கத்தில் உள்ளவனும் அந்த செயலைச் செய்ய வேண்டும். ஆனால் அவன் எதை எண்ணி செய்கிறானோ அந்த பற்றுதல், சுய நலம் இல்லாமல் செய்ய வேண்டும். அதனால் என்ன லாபம் என்றால், உலகத்தில் நன்மை பெருகும்.

இப்படி ஒரு முனைப்போடு செய்து காட்டினால், அதை பின் பற்றும் மற்றவர்கள் அதன் மதிப்பை உணர்வார்கள். இதில் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதும் தேவையில்லை. கடமையை செய்வார்கள் என்பதே பெரிய பலன். இயல்பாக செய்யும் செயல்களையும் கூட அக்ஞானி தான் செய்தேன் என்று சொல்லிக் கொள்வான். தத்வம் அறிந்தவர்கள், குணங்கள் (சத்வ, ரஜஸ், தமஸ்), குணங்கள், செயலை ஊக்குவிக்கின்றன, ஏதோ தானே செய்தாகச் சொல்கிறான் என்று அதை பொருட்படுத்துவதும் இல்லை.

இயல்பாக பிறவியில் வரும் குணம் சத்வமோ, ராஜஸமோ, தாமஸமோ அதற்கேற்ப அவனவன் செயல் இருக்கும். முற்றும் அறிந்தவனுக்கு அதன் பலா பலன் அல்லது உயர்வு, தாழ்வு தெரியும். மற்றவர்களுக்குத் தெரியாது.

என்னிடத்தில் உன் செயல்களை முழுவதுமாக ஒப்படைத்து விடு. நான் சேதனன், பரம் பொருள் என்னை ஆட்டுவிக்கிறது, என்ற அத்யாத்ம எண்ணத்துடன், யுத்தத்தைச் செய். எந்த பயமும், தயக்கமும் வேண்டாம்.

இது தான் என்னுடைய கொள்கை. இதை அறிந்து பின் பற்றுபவர்களும் நல்ல கதியை அடைவார்கள். சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவார்கள். அதுவன்றி, இதில் குற்றம் காண்பவர்கள், என் கொள்கையை ஏற்காதவர்கள், ஞானமும் பெறாமல், மூடனாக, அழிவார்கள்.

ஞானியானாலும் பிறந்த பிறப்புக்கு ஏற்றவாறு செயல்களைச் செய்கிறான். அவனை நிர்பந்தித்து என்ன பயன்? தன் போக்கில் இயற்கையை அடைகிறான்.

ச.பா: பிறப்பிலேயே அதனதன் இயல்பு தீர்மானிக்கப் பட்டு விடுகிறது, அதன்படி தான் நடக்கும் என்றால், மனித முயற்சி என்பதும், சாதனைகளும் என்ன பலன் தரும்? இந்த கேள்விக்கு அடுத்த ஸ்லோகத்தில் பகவான் பதில் சொல்கிறார்.

விருப்பும், வெறுப்பும் புலன்கள் மூலமே உணரப் படுகின்றன, செயல்களில் வெளிப்படுகின்றன, இவை தான் முதல் எதிரி, இதை அடக்க பழக வேண்டும்.

ச.பா: இந்த இரண்டு இடையூறுகளையும் அடக்கியவனே, அடுத்து என்ன என்று அறிய முயலுவான். அந்த சமயம் குரு உபதேசமும், சுய கட்டுப்பாடும் அவனை உயர்த்தும். விருப்பும், வெறுப்பும் அதைச் சார்ந்த கோபமும், லோபமும் ஒவ்வொன்றாக கழண்டு போக அவனுக்கு உபதேசத்தின் பலன் மனதில் உறைக்கும். நடுவழியில் எதிர்படும் திருடன் போல நன்மையை நோக்கிச் செல்லும் மனிதனின் சாதனையில் இந்த இரண்டு குணங்களும் எதிரில் வரும். அதைத் தவிர்த்து மேற் கொண்டு செல்ல மனோதிடம் வேண்டும். இந்த மனோ திடம் வரும் வரை இயல்பான ஆசை, மற்ற உலகியல் ஈர்ப்புகள், தர்மம் என்பதை தவறாக புரிந்து கொள்வது, எதையோ பின்பற்றி, தன் தர்மத்தை விடுவது போன்ற இடையூறுகள் வரும்.

தனக்கு விதிக்கப் பட்ட கடமையை செய்வது தான் தர்மம். பர தர்மம் – மற்றவர்கள் நன்மையை பெறுகிறார்களே, நாமும் அதை பின் பற்றுவோம் என்று வழி மாறிச் சென்றால் நன்மையைத் தராது. தன் கடமையை செய்து அதில் மரணமே வந்தாலும் நல்லது, மற்றவனின் தர்மத்தை அனுசரிப்பது அதை விட அதிக துன்பம் தரும்.

அர்ஜுனன் கேட்கிறான்: பாபம் செய் என்று தூண்டுவது யார்? அல்லது எது? பலமாக இழுத்து பாப காரியத்தில் ஈடுபடுத்துகிறதே ஏதோ ஒரு சக்தி, அது என்ன?

ஸ்ரீ க்ருஷ்ண பகவான் பதில் சொல்கிறார்: இதோ, காமம் அதாவது ஆசை, என்ற ஒன்று க்ரோதம் – ஆத்திரம் என்ற ஒன்று- இவை போதாதா மனிதனை பாபம் செய்யத் தூண்ட? இரண்டுமே ரஜோ குணத்தில் பிறந்தவை. இவைகளுக்கு தீனி போட்டு கட்டுப் படியாகாது – திருப்தியே அடையாத குணங்கள். பெரும் தீமையே உருவானவை. முதல் எதிரி இவை தான்.

ச.பா: உலகில் எல்லா தீமைகளுக்கும் காரணம் ஆசை தான். ஆசை நிறைவேறவில்லையெனில் கோபமாக, க்ரோதமாக மாறுகிறது. வாஸ்தவத்தில் ரஜோ குணம் செயலில் ஈடுபடத் தேவையே. ஆசையின்றி ஒரு செயலும் துவங்கப் பட மாட்டாது. அதிகமாகும் பொழுது ஆசையே விபரீதமாகிறது.

புகை மண்டி இருக்கும் இடத்தில் அக்னி இருப்பது முதலில் தெரியாது. அருகில் செல்லச் செல்ல புகை விலகி அக்னி கண்ணுக்குத் தெரியும். அதே போல புழுதி படிந்த கண்ணாடி அதன் குணம் தெரியாமல் புழுதி மறைக்கும் – சுத்தம் செய்தால் கண்ணாடி நம்மை ப்ரதி பலிக்கும். கருவை காக்கும் கருப்பை இயற்கை அளித்த பாதுகாப்பு. இவைகளை முதன் முறை காணும் பொழுது தென்படவில்லை.

இதம் ஆவ்ருதம்- இது சூழப் பட்டுள்ளது – இந்த ‘இதம்’ என்ற சொல் குறிப்பது என்ன?

அறிவுள்ளவன் இதை புரிந்து கொள்வான்- தன்னை ஆட்டுவிப்பது ஆசையே என்பதை. சாதாரண மனிதர்கள் உணர மாட்டார்கள். ஆசைப் பட்டு ஒரு பொருள் கிடைத்தவுடன் அடையும் மகிழ்ச்சியே பொதுவாக அனைவரும் அறிவோம். அடுத்த கட்டமாக பேராசை தான் கெடுதல் என்று சொல்வோம். ஆனால், ஆசையை கட்டுப் படுத்த நினைக்கும் சாதகனுக்கு ஆரம்பத்திலேயே இதன் தன்மை தெரிந்து விடும்.

ஆசை மறைத்திருப்பது அறிவை. ஞானம் சுலபமாக அடைய முடியாதது. பிறவியிலேயே ஓரளவு ஞானம் உள்ளவர்கள் உடனே தன்னை சுதாகரித்துக் கொள்வர்.

இதன் அடிப்படையாக அல்லது இருப்பிடமாக உள்ளவை புலன்கள், மனம், புத்தி. புகை போல சூழ்ந்துள்ளவை. எனவே, பரத குலத்து வீரனே, முதலில் இந்த இந்திரியங்களை கட்டுபடுத்து. இவைகள் தான் ஞானம், அதற்கு மேல் விக்ஞானம் என்பதை நாசம் செய்யும் இடர்.

இந்திரியங்கள் அதாவது புலன்கள் ஐந்தும், கேட்பது போன்ற உணர்வுகள், பௌதிகமான உடலை விட நுணுக்கமானவை. உடல் இயங்குவதை விட வேகமாகவும் பரவலாகவும் இயங்கக் கூடியவை. இதை விட அதிக நுணுக்கமானது மனம். எண்ணம், நினைவாற்றல், விருப்பு வெறுப்புகள் மனதின் கட்டுப் பாட்டில் உள்ளன. மனதில் சந்தேகங்கள், தவறுகள், ஆசைகள் ஏற்படலாம். மனதையும் ஆட்டி வைப்பது புத்தி. புத்தி தீர்மானமாக ஒரு வழியைச் சொல்லும். புத்தியைக் காட்டிலும் அதிக வல்லமையுடையது மனிதனது சரீரத்திலேயே உறையும் பரம் பொருளின் அம்சமான ஆத்மா.

இவ்வாறாக, வரிசையாக புத்தியின் தன்மையை உணர்ந்து, ஆத்ம சக்தியை உணர்ந்து கொள். பிறகு எதிரியான ஆசைகள் போன்றவைகளை முறியடிப்பாய்.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையில் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் கர்ம யோகம் என்ற மூன்றாவது அத்யாயம்).

ஸ்ரீமத் பகவத் கீதை

அத்யாயம்-3 கர்ம யோகம்

பரமார்தம் என்றால் என்ன – க்ருஷ்ணா ! விவரமாக சொல்லு- அதை அறிய நான் என்ன செய்ய வேண்டும்? நீயே என் குரு – உபதேசம் செய் எனவும்,

ஸ்ரீ க்ருஷ்ணர் விவரமாக சொல்கிறார். உன்னையே உணர்ந்து கொள் – அதற்கான தகுதியை பெற புலன்களை அடக்குவதே முதல் படி. உலகில் பிறவி எடுத்தவன் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டு – அதை சரிவர செய்ய வேண்டும். அதிலும் பலனை நினைக்காமல் செய்வதே நன்மை தரும் – அதன் பின் சாதகனாக ஒருவன் எப்படி இருப்பான் என்பதை விவரிக்கிறார்.

ஆசை, பயம், கோபம், இவற்றை விட வேண்டும். புலன்களை அடக்கி மனதை ஸ்திரமாக கட்டுக்குள் வைத்திருப்பான் – என்று “ஸ்தித தீ: “ என்று சாதகணை வர்ணிக்கிறார்.

பயப்படாதே, எடுத்த காரியத்தில் பின் வாங்காதே – என்பது தான் இரண்டாவது அத்தியாயத்தின் சாரம்.

அத்யாயம் -3

சாஸ்திரங்களிலும் மற்றும் வழக்கில் உள்ளதுமான பல கடமைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் சொல்லப் படுகிறது. ஒவ்வொருவருக்கும் இந்த சமூகத்தில் ஒரு கடமை உள்ளது கடமையை ஏன் செய்ய வேண்டும் ? மனிதனின் வாழ்வின் தேவைகள் பல – அதை நிறைவேற்ற உழைக்க வேண்டியது பொதுவானது. அது தவிர, தன் நலன், சமூக நலன், தேசத்தின் நலன், தெய்வ , முன்னோர்கள் – இவர்களுக்கு செய்ய வேண்டியவை இவைகளும் கடமைகளே. இது தவிர ஆத்யாத்மிகமாக , யோக சாதனைகள் செய்வதும் , அறிவை வளர்த்துக் கொள்வதும் ஒரு சிலரேனும் ஏற்று செய்ய வேண்டியுள்ளது. அதன் பொருட்டு சாமான்ய கடமைகளை விட்டு தவம் செய்வது, சன்யாசம் மேற்கொள்வது போன்றவைகளும் அவசியமாகிறது. இரண்டுமே யோகம் – முனைந்து செய்யப் படுவதே. இவையே, கர்ம யோகம் என்றும், ஞான அல்லது சன்யாச யோகம் என்றும் சொல்லப்படுகின்றன.

இந்த இடத்தில் அர்ஜுனன் தன் சந்தேகத்தை கேட்கிறான்.

இந்த இரண்டில் எது உயர்ந்தது? தனக்கு விதிக்கப்பட்ட செயலை விடாமல் செய்யும் கர்ம யோகமா, அல்லது தன் அறிவின் மேம்பாட்டுக்காக ஏற்றுக் கொள்ளும் சன்யாஸமா? ஏதோ ஒன்றை நான் ஏற்று நடக்க வேண்டும் என்று தீர்மானமாக சொல் – என் மனம் குழம்பி இருக்கும் நிலையில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார் .

என்னைப் பொறுத்தவரை , இந்த உலகில் இரண்டு விதமாகவும் பகவானை அல்லது பரப்ரும்மத்தை அடையலாம். ஒன்று சாங்க்யம் என்ற ஞானம் மற்றொன்று கர்மம் அல்லது செயல், கடமையைச் செய்தல் – இரண்டுமே நல்ல வழிகளே. ஞான மார்கத்தில் செல்பவர்கள் சாங்கயம் என்ற சாதனைகளைச் செய்து ஞானம் பெறட்டும். யோகிகள் கடமையைச் செய்து அதே ஞானத்தை அடைந்து தன்னையறிவார்கள். தன்னையறிவது, என்பது தான் ப்ரும்ம நிலை. தத்வமஸி என்ற வேத வாக்யம்.

சங்கர பாஷ்யம்: ஞானம் கடமையை செய்வதை விட உயர்ந்தது, என்று அர்ஜுனன் நினைப்பது போல இந்த கேள்வி உள்ளது. சன்யாசிகளுக்குத் தான் ஞான யோகம் என்பதும் பொதுவான எண்ணம். ஆனால் பகவான் அப்படியல்ல எங்கிறார். இரண்டு வித்தியாசமான மனோ பாவம் கொண்ட மனிதர்களுக்கு இரண்டு விதமாக வழிகள் உள்ளதாகச் சொல்கிறார். அர்ஜுனனை கடமையைச் செய் என்றும், யுத்தம் செய் என்றும் வற்புறுத்திச் சொன்னவர், அதற்கு எதிராக ஒன்றைச் சொல்வதால் அர்ஜுனன் விளக்கம் கேட்கிறான். இரண்டு எதிரெதிரான வழிகள், ஒரு மனிதனால் இரண்டையும் கை கொள்ள முடியாது என்பது தெளிவு. நான் எதைத் தேர்ந்தெடுப்பது? வழிகள் வெவ்வேறானதால் சென்றடையும் இலக்கும் வேறு என்றாகிறது. கடமையைச் செய்து, அனுபவம் பெற்று ஞானம் அடைந்து பெறும் நன்மையை, ஞானம் பெற சாதனைகள் செய்தும் அடையலாம்,. முதலாவது சுற்று வழி, இரண்டாவது நேர் வழி. ஆனால் முதலாவது எளிது, இரண்டாவது கடினம்.

இதை அடுத்த ஸ்லோகத்தில் பகவான் சொல்கிறார்.

எந்த கடமையையும் செய்யவே ஆரம்பிக்காமலும், நான் சன்யாசி என்று மட்டும் சொல்லிக் கொள்வதாலும், ஒருவன் சித்தியை அடைய முடியாது.

ச.பா: கர்மா என்று இங்கு சொல்லப் படுவது வேத சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட யாகம் முதலானவை. முன் பிறவியில் செய்த பாபங்களைத் தொலைக்கவும், மனதை தூய்மையாக்கிக் கொள்ளவும் இவைகளைச் செய் என்று வேத சாஸ்திரங்கள் வகுத்துள்ள நெறிகளே இவை. மனம் தூய்மையானால் தெளிவான புரிதலும், அதைத் தொடர்ந்து நல்ல குணங்களும், அறிவும் வரும்.

இந்த கர்மாக்கள் சன்யாசிக்கு இல்லை. அதனால் சன்யாசி நைஷ்கர்ம்யன் – கர்மா என்ற பந்தம் இல்லாதவன் என்கிறார்கள். அதைத் தான் ‘கர்மணாமனாரம்பாத் ‘ எந்த செயலையும் செய்யவே ஆரம்பிக்காமல், நான் கர்ம பந்தத்தை தொலைத்து விட்டேன் என்பது அபத்தம் என்கிறார்.

ஒரு க்ஷண நேரம் கூட ஏதாவது செய்யாமல் மனிதன், மற்ற உயிரனங்கள் இருப்பதில்லை. அவனவன், அதனதன் இயல்பு படி ஏதோ செய்து கொண்டேயிருப்பதை அறிவோம்.

கர்மேந்திரியங்கள்- அவயவங்கள், கண் முதலானவை இவற்றை அடக்கி விட்டு மனதால் நினைத்துக் கொண்டே இருந்தால் அவன் செய்வது மித்யாசாரம்- ஏமாற்று வேலை எங்கிறார்.உண்மையாக செய்பவன் முதலில் மனதை அடக்க வேண்டும்.

உலகில் வாழவே, ஏதோ செய்து தான் ஆக வேண்டும். ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட தனக்கு முடிந்தை செய்வதே நன்று. யாக யக்ஞங்கள் செய்வது ஒரு பக்கம்- அதை வேத சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் செய்வார்கள். மற்றபடி சாதாரண மக்கள் செய்ய வேண்டியதும் சில உண்டு. ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதி யக்ஞங்களை செய்து தேவதைகளை திருப்தி செய்யுங்கள். அவர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். பரஸ்பரம் உதவி செய்து கொண்டு இஷ்ட காமங்களை அனுபவியுங்கள் என்றார். யாக யக்ஞங்கள் மூலம் தேவதைகள் மகிழ்ச்சியடைவார்கள். மழை பொழிவது, கால் நடைகள் பெருகுவது, பயிர் செழிப்பது போன்ற செயல்கள் தேவதைகள் அருளால் நடப்பது. இவைகளைப் பெற்றுக் கொண்டு தன் பங்கு செயலை- யாகத்தில் தேவதைகளை அழைத்து ஹவிஸ் என்பதைத் தருவதும், அதை அக்னி கொண்டு அவர்களிடம் சேர்ப்பிக்கும் என்பதும் யாகத்தில் ஹோமம் செய்வதன் பொருள். – செய்யாமல் விடுபவனை திருடன் என்கிறார்.

யாகத்தில் தேவதைகளுக்கு ஹவிஸ், மற்ற ஜீவன்களுக்கு அன்ன தானம் முதலியவை செய்து மீந்ததைத் தான் கர்த்தாவான வேத வித்துக்கள் உண்பார்கள். அதனால் அவர்கள் தூய்மையாகிறார்கள். அதுவே, தன் பொருட்டு மட்டும் சமைத்து உண்பவன், பாபத்தை உண்பவனாகிறான்.

அடுத்து உலகமே ஒரு சக்கரமாகவும், அது சுழலுவதையும் விளக்குகிறார்.

अन्नाद्भ्वन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव: | यज्ज्ञाद्भवति पर्जन्यो यज्ज्ञ कर्मसमुद्भव: |

कर्म ब्रह्मोद्भवम् विद्धि ब्रह्माक्षर समुद्भवम् | तस्माद्सर्वगतम् ब्रह्म नित्यम् यञ्जे प्रतिष्टितम् ||

அன்னம் – உணவே ஜீவன்களை வாழ வைக்கிறது. அன்னம் மழையினால் பெறப் படுகிறது. மழை வர யக்ஞங்கள் செய்யப் படுகின்றன- யக்ஞம் கர்மத்தை அடிப்படையாக கொண்டுள்ளது -கர்மா ப்ரும்மத்தில், ப்ரும்ம அக்ஷர சம்பவம் – இந்த சக்கரம் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கிறது.

இந்த சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். வேத வித்துக்களான அறிஞர்கள் மட்டுமன்றி, அனைவருமே இந்த சுழற்சியை பாதுகாக்கின்றனர். ஆத்மாவை அறிந்தவன், தனக்குள்ளேயே வாழ்பவன். அவனுக்குத் தான் செயல் என்று எதுவுமில்லை. அப்படி இருப்பவன் சன்யாசி அல்லது சாங்க்யன். எந்த செயலிலும் அவனுக்கு நாட்டமில்லை, பெறும் பலனும் இல்லை. எதைச் செய்யாமல் விடினும் நஷ்டமுமில்லை. நீ இன்னும் அந்த நிலையை எட்டவில்லை. அதனால் பற்றின்றி உன் செயலை செய். பற்றின்றி செயல்களைச் செய்தும் நல்ல கதியை அடையலாம். அப்படி சித்தி அடைந்தவர்கள் ஜனகர் போன்றவர்கள். ராஜரிஷி என்று அழைக்கப்படுபவர். தன் கடமையை விடாமல் செய்து மேன்மையடைந்தவர்கள் அவரைப் போன்றே வேறு சிலரும் உண்டு.

ச.பா: ஜனகர் ஏன் தன் கடமையை விடாமல் செய்தார், ப்ரும்மத்வம் எனும் மேல் படியை அடைய முயற்சிக்கவில்லை என்பதற்கு, சாந்தோக்ய உபனிஷதிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார் ஸ்ரீ சங்கரர்.

ஜனகர் போன்ற அறிஞர், நான்காவது வர்ணமான சன்யாசத்தை மேற்கொள்ள முடியாது. (பால்யம், யௌவனம், க்ருஹஸ்தம், சன்யாசம் என்ற நான்கு). க்ஷத்ரியர்களுக்கு அதற்கான ஒப்புதல் கிடையாது. ப்ராரப்த கர்மா-முன் வினை தான் ஒரு ஜீவனின் பிறப்பை நிச்சயிக்கிறது. அவருடைய முன் வினை காரணமாக ,க்ஷத்திரியனாக பிறந்தவர் அதே முன்வினையில் செய்த நற்காரியங்களின் பலனாகவோ, சாதனைகளாலோ ஞானத்துடன் பிறந்தவர். செய்யும் செயலை திருந்தச் செய்து தன் கடமையை செய்யும் பொழுதே அந்தராத்மா சுத்தமாக. ஆத்ம விசாரமும் செய்து வந்திருந்தவர். கடமையை அவர் விட்டால், மற்ற பிரஜைகளும் அவரை பின்பற்றுவர். அதனால் அவர் ப்ரும்மத்வம் என்ற அமரத்வம் அடையா விட்டாலும் மோக்ஷம் அடைவதில் தடங்கல் எதுவுமில்லை.

அர்ஜுனா! நீயும் க்ஷத்ரியன் – அதனால் எந்த காரணம் கொண்டும் ப்ரஜா ரக்ஷணம் என்ற செயலை விட முடியாது.

அரசனாக, அல்லது எதோ ஒரு துறையில் ஸ்ரேஷ்டனாக – முன்னிலையில் இருப்பவன் எதையெல்லாம் செய்கிறானோ, அதைப் பார்த்து சாதாரண ஜனங்கள் பின் பற்றுவார்கள். அவன் இது ப்ரமாணம்- இது நம்பத்தகுந்தது என்றால் அவர்களும் நம்புவார்கள்.

பார்த்தா! எனக்கு மூவுலகிலும் ஆக வேண்டிய காரியம் எதுவுமில்லை. இது வரை கிடைக்கப் பெறாததை இனி பெற வேண்டும் என்ற ஆசையும் இல்லை. ஆனாலும் நான் கர்ம மார்கத்தில் தான் இருக்கிறேன், செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

நான் எதுவும் செய்யாமல் விட்டால், உலகத்தார் என்னைப் பார்த்து பின்பற்றுவார்கள். உலகமே அழியும். உலகம் நிர்மூலமாக நானே காரணமாவேன்.

ஒரு விஷயத்தில் பற்று வைத்து உண்மையாக அதை நல்ல முறையில் செய்ய முயலும் சாதாரண மனிதனைப் போலவே சாதகனாக ஞான மார்கத்தில் உள்ளவனும் அந்த செயலைச் செய்ய வேண்டும். ஆனால் அவன் எதை எண்ணி செய்கிறானோ அந்த பற்றுதல், சுய நலம் இல்லாமல் செய்ய வேண்டும். அதனால் என்ன லாபம் என்றால், உலகத்தில் நன்மை பெருகும்.

இப்படி ஒரு முனைப்போடு செய்து காட்டினால், அதை பின் பற்றும் மற்றவர்கள் அதன் மதிப்பை உணர்வார்கள். இதில் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதும் தேவையில்லை. கடமையை செய்வார்கள் என்பதே பெரிய பலன். இயல்பாக செய்யும் செயல்களையும் கூட அக்ஞானி தான் செய்தேன் என்று சொல்லிக் கொள்வான். தத்வம் அறிந்தவர்கள், குணங்கள் (சத்வ, ரஜஸ், தமஸ்), குணங்கள், செயலை ஊக்குவிக்கின்றன, ஏதோ தானே செய்தாகச் சொல்கிறான் என்று அதை பொருட்படுத்துவதும் இல்லை.

இயல்பாக பிறவியில் வரும் குணம் சத்வமோ, ராஜஸமோ, தாமஸமோ அதற்கேற்ப அவனவன் செயல் இருக்கும். முற்றும் அறிந்தவனுக்கு அதன் பலா பலன் அல்லது உயர்வு, தாழ்வு தெரியும். மற்றவர்களுக்குத் தெரியாது.

என்னிடத்தில் உன் செயல்களை முழுவதுமாக ஒப்படைத்து விடு. நான் சேதனன், பரம் பொருள் என்னை ஆட்டுவிக்கிறது, என்ற அத்யாத்ம எண்ணத்துடன், யுத்தத்தைச் செய். எந்த பயமும், தயக்கமும் வேண்டாம்.

இது தான் என்னுடைய கொள்கை. இதை அறிந்து பின் பற்றுபவர்களும் நல்ல கதியை அடைவார்கள். சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவார்கள். அதுவன்றி, இதில் குற்றம் காண்பவர்கள், என் கொள்கையை ஏற்காதவர்கள், ஞானமும் பெறாமல், மூடனாக, அழிவார்கள்.

ஞானியானாலும் பிறந்த பிறப்புக்கு ஏற்றவாறு செயல்களைச் செய்கிறான். அவனை நிர்பந்தித்து என்ன பயன்? தன் போக்கில் இயற்கையை அடைகிறான்.

ச.பா: பிறப்பிலேயே அதனதன் இயல்பு தீர்மானிக்கப் பட்டு விடுகிறது, அதன்படி தான் நடக்கும் என்றால், மனித முயற்சி என்பதும், சாதனைகளும் என்ன பலன் தரும்? இந்த கேள்விக்கு அடுத்த ஸ்லோகத்தில் பகவான் பதில் சொல்கிறார்.

விருப்பும், வெறுப்பும் புலன்கள் மூலமே உணரப் படுகின்றன, செயல்களில் வெளிப்படுகின்றன, இவை தான் முதல் எதிரி, இதை அடக்க பழக வேண்டும்.

ச.பா: இந்த இரண்டு இடையூறுகளையும் அடக்கியவனே, அடுத்து என்ன என்று அறிய முயலுவான். அந்த சமயம் குரு உபதேசமும், சுய கட்டுப்பாடும் அவனை உயர்த்தும். விருப்பும், வெறுப்பும் அதைச் சார்ந்த கோபமும், லோபமும் ஒவ்வொன்றாக கழண்டு போக அவனுக்கு உபதேசத்தின் பலன் மனதில் உறைக்கும். நடுவழியில் எதிர்படும் திருடன் போல நன்மையை நோக்கிச் செல்லும் மனிதனின் சாதனையில் இந்த இரண்டு குணங்களும் எதிரில் வரும். அதைத் தவிர்த்து மேற் கொண்டு செல்ல மனோதிடம் வேண்டும். இந்த மனோ திடம் வரும் வரை இயல்பான ஆசை, மற்ற உலகியல் ஈர்ப்புகள், தர்மம் என்பதை தவறாக புரிந்து கொள்வது, எதையோ பின்பற்றி, தன் தர்மத்தை விடுவது போன்ற இடையூறுகள் வரும்.

தனக்கு விதிக்கப் பட்ட கடமையை செய்வது தான் தர்மம். பர தர்மம் – மற்றவர்கள் நன்மையை பெறுகிறார்களே, நாமும் அதை பின் பற்றுவோம் என்று வழி மாறிச் சென்றால் நன்மையைத் தராது. தன் கடமையை செய்து அதில் மரணமே வந்தாலும் நல்லது, மற்றவனின் தர்மத்தை அனுசரிப்பது அதை விட அதிக துன்பம் தரும்.

அர்ஜுனன் கேட்கிறான்: பாபம் செய் என்று தூண்டுவது யார்? அல்லது எது? பலமாக இழுத்து பாப காரியத்தில் ஈடுபடுத்துகிறதே ஏதோ ஒரு சக்தி, அது என்ன?

ஸ்ரீ க்ருஷ்ண பகவான் பதில் சொல்கிறார்: இதோ, காமம் அதாவது ஆசை, என்ற ஒன்று க்ரோதம் – ஆத்திரம் என்ற ஒன்று- இவை போதாதா மனிதனை பாபம் செய்யத் தூண்ட? இரண்டுமே ரஜோ குணத்தில் பிறந்தவை. இவைகளுக்கு தீனி போட்டு கட்டுப் படியாகாது – திருப்தியே அடையாத குணங்கள். பெரும் தீமையே உருவானவை. முதல் எதிரி இவை தான்.

ச.பா: உலகில் எல்லா தீமைகளுக்கும் காரணம் ஆசை தான். ஆசை நிறைவேறவில்லையெனில் கோபமாக, க்ரோதமாக மாறுகிறது. வாஸ்தவத்தில் ரஜோ குணம் செயலில் ஈடுபடத் தேவையே. ஆசையின்றி ஒரு செயலும் துவங்கப் பட மாட்டாது. அதிகமாகும் பொழுது ஆசையே விபரீதமாகிறது.

புகை மண்டி இருக்கும் இடத்தில் அக்னி இருப்பது முதலில் தெரியாது. அருகில் செல்லச் செல்ல புகை விலகி அக்னி கண்ணுக்குத் தெரியும். அதே போல புழுதி படிந்த கண்ணாடி அதன் குணம் தெரியாமல் புழுதி மறைக்கும் – சுத்தம் செய்தால் கண்ணாடி நம்மை ப்ரதி பலிக்கும். கருவை காக்கும் கருப்பை இயற்கை அளித்த பாதுகாப்பு. இவைகளை முதன் முறை காணும் பொழுது தென்படவில்லை.

இதம் ஆவ்ருதம்- இது சூழப் பட்டுள்ளது – இந்த ‘இதம்’ என்ற சொல் குறிப்பது என்ன?

அறிவுள்ளவன் இதை புரிந்து கொள்வான்- தன்னை ஆட்டுவிப்பது ஆசையே என்பதை. சாதாரண மனிதர்கள் உணர மாட்டார்கள். ஆசைப் பட்டு ஒரு பொருள் கிடைத்தவுடன் அடையும் மகிழ்ச்சியே பொதுவாக அனைவரும் அறிவோம். அடுத்த கட்டமாக பேராசை தான் கெடுதல் என்று சொல்வோம். ஆனால், ஆசையை கட்டுப் படுத்த நினைக்கும் சாதகனுக்கு ஆரம்பத்திலேயே இதன் தன்மை தெரிந்து விடும்.

ஆசை மறைத்திருப்பது அறிவை. ஞானம் சுலபமாக அடைய முடியாதது. பிறவியிலேயே ஓரளவு ஞானம் உள்ளவர்கள் உடனே தன்னை சுதாகரித்துக் கொள்வர்.

இதன் அடிப்படையாக அல்லது இருப்பிடமாக உள்ளவை புலன்கள், மனம், புத்தி. புகை போல சூழ்ந்துள்ளவை. எனவே, பரத குலத்து வீரனே, முதலில் இந்த இந்திரியங்களை கட்டுபடுத்து. இவைகள் தான் ஞானம், அதற்கு மேல் விக்ஞானம் என்பதை நாசம் செய்யும் இடர்.

இந்திரியங்கள் அதாவது புலன்கள் ஐந்தும், கேட்பது போன்ற உணர்வுகள், பௌதிகமான உடலை விட நுணுக்கமானவை. உடல் இயங்குவதை விட வேகமாகவும் பரவலாகவும் இயங்கக் கூடியவை. இதை விட அதிக நுணுக்கமானது மனம். எண்ணம், நினைவாற்றல், விருப்பு வெறுப்புகள் மனதின் கட்டுப் பாட்டில் உள்ளன. மனதில் சந்தேகங்கள், தவறுகள், ஆசைகள் ஏற்படலாம். மனதையும் ஆட்டி வைப்பது புத்தி. புத்தி தீர்மானமாக ஒரு வழியைச் சொல்லும். புத்தியைக் காட்டிலும் அதிக வல்லமையுடையது மனிதனது சரீரத்திலேயே உறையும் பரம் பொருளின் அம்சமான ஆத்மா.

இவ்வாறாக, வரிசையாக புத்தியின் தன்மையை உணர்ந்து, ஆத்ம சக்தியை உணர்ந்து கொள். பிறகு எதிரியான ஆசைகள் போன்றவைகளை முறியடிப்பாய்.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையில் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் கர்ம யோகம் என்ற மூன்றாவது அத்யாயம்).

அத்யாயம் -4 ஞான கர்ம சன்யாச யோகம்

ஸ்ரீ பகவான் தொடர்ந்தார் :-

இந்த யோகம் என்று இதுவரை நான் சொன்னதை ராஜ ரிஷிகள் அறிவார்கள். பரம்பரையாக வந்த ஞானம் இது. முதன் முதலில் நான் விவஸ்வான் என்னும் பெயர் பெற்ற சூரியனுக்கு உபதேசித்தேன். அவர் மனுவுக்கு சொன்னார். மனு இக்ஷ்வாகு அரசனுக்கு சொன்னார். காலக்ரமத்தில் பல யோக முறைகள் அழிந்து விட்டன. அதையே முன் விவஸ்வானுக்கு சொன்னபடி இன்று உனக்கு சொல்கிறேன். நீ என் பக்தன், சகா – நன்பன் என்பதால். உத்தமமான இந்த யோகம் பரம ரகஸ்யமாக காப்பாற்றப் பட்டு வந்துஇருக்கிறது. -1

அர்ஜுனனுக்கு சந்தேகம். கேட்கும் அனைவருக்குமே வரக் கூடியது தான்.நீ பிறந்து வளர்ந்தது வேறு யுகத்தில், விவஸ்வான் இருந்து கேட்டதாகச் சொல்கிறாய். அவருடைய காலம் வேறு – இது எப்படி சாத்தியம்? -2

(நான் அறிந்தவரை நீ வசுதேவரின் மகனாக சமீபத்தில் வந்தவன். விவஸ்வானுடைய காலமோ சிருஷ்டி ஆரம்பத்தில் என்று கேட்டிருக்கிறோம். வாசுதேவனாக அவதரித்தவன் பர ப்ரும்மமே என்பதை அறியாத நிலையில் வரும் சந்தேகமே )

ஸ்ரீ பகவான் பொறுமையாக பதில் சொல்கிறார்.

பல ஜன்மங்கள், பிறவிகள் கடந்து விட்டன அர்ஜுனா! எனக்கும், உனக்கும் தான். அவை அனைத்தையும் நான் அறிவேன். ஆனால் நீ அறிய மாட்டாய். -3

நான் அஜன் – அதாவது பிறவி அற்றவன். அழிவில்லாத பரமாத்மா. ஜீவன் களின் ஈஸ்வரன். இந்த உருவை நானே ஏற்றுக் கொண்டு என் மாயா சக்தியால், சம்பவாமி – தோன்றுகிறேன். -4

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத |

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம். ||

பரித்ராணாய சாதூனாம் வினாஸாய ச துஷ்க்ருதாம் |

தர்ம ஸம்ஸ்தாபனாய ஸ்ம்பவாமி யுகே யுகே||

यदा यदा हि धर्मस्य ग्लानिर् भवति भारत | अभ्युथ्थानम् अधर्मस्य तदात्मानम् श्रुजाम्यहम् ||

परित्राणाय साधूनाम् विनाशाय च दुश्क्रुथाम् | ध्र्म सम्स्थापनाय सम्भवामि युगे युगे ||

இந்த இரண்டு ஸ்லோகங்களும் ப்ரசித்தமானது.

தர்மத்திற்கு புறம்பாக உலகில் ஜனங்களின் நடத்தையோ, அல்லது தீய செயல்கள் அதிகமாகி கஷ்டங்கள் அதிகமானாலோ, நான் அவதரிக்கிறேன். (என்னை நானே சிருஷ்டி செய்து கொள்கிறேன்)

தீய செயல்கள் செய்பவரும் உலகில் பிறந்தவர்களே. அவர்களால் அவதிப் படுபவர்கள் சாதுக்களே. அவர்கள் தர்ம வழியில் நடப்பவர்கள். அவர்களை காக்க நான் வருவேன். யுகம் யுகமாக நான் அவதரித்து தர்மத்தை ஸ்தாபனம் செய்கிறேன்.

இப்படி நான் அவதரிப்பதை புரிந்துகொண்டவர்கள் – என் மாயை அது என்பதை அறிவார்கள். இவ்வாறு , என் செயல்களையும், என்னையும் தெளிவாக தெரிந்து கொண்டவர்கள் இந்த ஜன்மத்தில் மரணம் அடைந்தபின் திரும்ப பிறப்பதில்லை. மறுபிறவி எனும் பந்தத்தில் இருந்து விடுபடுகிறார்கள்.

ஆசை, பயம், க்ரோதம் இவைகளை விட்டவர்கள் என் நினைவாகவே இருந்து, என்னையே உபாசித்து வருபவர்கள் பலர். தவம் செய்வதிலும், ஞானம் பெறவுமே காலத்தை செலவழித்தவர்கள். இந்த ஞானமும், தவமும் அவர்களை பரிசுத்தமாக ஆக்கி விடுகிறது. எனக்கு சமமாக ஆகி விடுகிறார்கள்.

(ஞானம் பெறுவது தான் மோக்ஷம் பெற வழி. ப்ரும்மத்தை உணர்வது தான் சாதகனின் தவம். யோக சாதனைகளைச் செய்து நானே ப்ரும்மம்- அஹம் ப்ரும்மாஸ்மி என்ற நிலையை அடைகிறார்கள். )

ஏதோ சிலருக்குத் தான் உன் அருள் கிடைக்குமா? அதற்கு பதிலாக அடுத்த ஸ்லோகம்.

யோ யதா பஜந்தே மாம் தான்ஸ் ததைவ பஜாம்யஹம் |

மம வர்த்மானு வர்த்தந்தே மனுஷ்யா: பார்த சர்வஸ: ||

ये यथा भजन्ते माम् तान्स्तथैव भजाम्यहम् | मम वर्त्मानुवर्तन्ते मनुष्या: पार्थ सर्वश: ||

பார்த்தா! என்னை யார் எப்படி நினைக்கிறார்களோ, அவர்களுக்கு அதே விதத்த்தில் தென்படுவேன். நான் செய்வதை மனிதர்கள் அப்படியே அனுசரிக்கிறார்கள். வேண்டுபவர்களுக்கு தேவையானதை நான் தருகிறேன்.

தேவதைகளை திருப்தி செய்தால் தேவையானதை பெறலாம் என்று ஜனங்கள் யாகம் செய்கிறார்கள். மனித உலகில் கர்ம பலன் சீக்கிரமே கிடைத்து விடும் என்பது நடைமுறை.

(முன்னால் பரஸ்பரம் உதவி செய்து கொண்டு க்ஷேமத்தை அடைவீர்கள் என்று ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் சொன்னார் என்று பார்த்தோம்)

நான்கு வர்ணங்கள் என்று ஏற்பாடு செய்தும் நானே அதை தவிர்த்ததும் நானே. பிறவி குணம், செயல் இவைகளின் அடிப்படையில் நான் இந்த பாகுபாட்டை செய்தேன். அவ்யயன் -நான் – எனக்குத் தோற்றமோ, முடிவோ கிடையாது. தேவைகளும் இல்லை. மற்ற உலகங்களில் இல்லாத இந்த வர்ண பிரிவினை , மனிதனின் இயல்பின் அடிப்படையில் அமைப்பது அவசியம் ஆயிற்று.

கர்மா அல்லது வினைப் பயன் என்னை பாதிக்காது. வினையின் பலனில் எனக்கு அக்கறையும் இல்லை. இதை உணர்ந்தவர்கள் என்னை அறிந்தவர்கள். எனவே அவர்களும் வினைப் பயனால் பாதிக்கப் படுவதில்லை..

இப்படி என்னை அறிந்தவர்களும் யாகம் முதலான கர்மாக்களை விடாமல் செய்தனர். மோக்ஷத்தை விரும்பி செய்தனர். நீயும் அந்த பெரியவர்களையே பின் பற்றி உன் கடமையைச் செய்.

எது கர்மா- (கடமை) எது அகர்மா (எந்த செயல் பயனற்றது) என்பதை தீர்மானிக்க முடியவில்லை. பல அறிஞர்களும் ஆராய்ந்து தெ3ளிவாக எதுவும் சொல்லவில்லை.

அதனால் எது கர்மா அல்லது கடமை. எது தேவையற்றது. செய்யக் கூடாதது எது ? இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த கர்மா என்பது பல விதமாக விளக்கப்பட்டிருக்கின்றன.

கடமையை செய்யும் பொழுதே, தேவையற்றதை அறிந்து விலக்குபவனை புத்திசாலி எனலாம்.

(ஓருவருக்கு அவசியமாக தோன்றும் செயல் மற்றவருக்கு தேவையே இல்லாமல் இருக்கலாம். இதை நாம் பொதுவாக உலகில் பார்க்கிறோம். அவரவர் அளவில் அந்த செயலின் நன்மையோ தீமையோ அனுபவிக்கிறார். அதன் பொருட்டு வருந்துவதோ, மகிழ்வதோ அந்த ஒருவரின் செயல். லாபமோ நஷ்டமோ. அவரது தனிப்பட்ட அனுபவம். அப்படி இருக்க எதை குறிப்பிட்டு நல்ல செயல் என்றும் தீய செயல் என்றும் பெயரிட்டு அழைப்பது. இந்த விவாதம் முடிவில்லாதது.)

அடுத்த ஸ்லோகத்தில் ஓரளவு பதில் சொல்கிறார்.

எவனுடைய செயலில் சுய நலம் இல்லையோ, ஆசைகளோ பெரிய எதிர்பார்ப்புகளோ இல்லையோ, தனது அறிவால் , சாதனையால், மேம்பட்டு கடமையை கடமைக்காக மட்டுமே செய்கிறானோ, அவன் ஞானி, பண்டிதன் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

அவன் நித்ய திருப்தன், எப்பொழும் திருப்தியாக இருப்பான். பந்தங்கள் எதுவும் இல்லாமல், செயல்களை செய்யும் பொழுதே அதன் பலனில் பற்றில்லாமல் செய்வதால், எதுவுமே செய்யாதவன் போல கவலையற்று இருப்பான்.

(அலட்டிக் கொள்ளாமல் அனாயாஸமாக பெரும் செயல்களைச் செய்பவன் பொதுவாக போற்றப்படுகிறான்)

இந்த நிலையை அடைந்த ஞானி தன் உடலைக் காக்க அவசியமானதை மட்டுமே செய்வான். ஏனெனில் ஞானி என்பவன் நித்ய திருப்தன்- தன்னிடம் உள்ளதில் எப்பொழும் திருப்தியாக, ஆனந்தமாக இருப்பவன் – புதிதாக எந்த தேவையும் இல்லாதவன். எந்த கட்டுப்பாடும் இல்லாததால் தேவைகளும் இல்லை. அவன் தன் உடலை பாதுகாக்க வேண்டி செய்யும் தேவையான குறைந்த பக்ஷ செயல்களால் பாதிக்கப்படுவதில்லை.

( சங்கர பாஷ்யம்: கேள்வி -1

இந்த பதிலால் என்ன பெறுகிறோம். சரீரத்தால், உடலால் செய்யும் செயல்கள் ஞானியை பாதிப்பதில்லை – செயல்கள் அதன் விளைவை ஏற்படுத்தியே தீரும் என்ற சாஸ்திர வாக்கியங்கள் என்னாகும்?

உடல் உழைப்பு மட்டும் – சாரீரம் கேவலம் – என்றால் எந்த செயலையும் – அது தர்மமோ, அதர்மமோ – செய்யலாமா? உடல் தானே செய்கிறது என்பது எந்த விதத்தில் சரியானது?
அவன் செயலால் ஏற்படும் தீமையோ, நன்மையோ, அவனை மட்டுமா, மற்றவர்களையும் தானே பாதிக்கும்.
ச.பா: விளக்கம். உயிர் வாழ்வதற்கு தேவையான குறைந்த பக்ஷ செயல்கள் –

நான் செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல் மனம், சொல், உடல் இவைகளால் மற்ற செயல்களை செய்தும், தனக்காக செய்வது உடலைப் பேணுவது மட்டுமே. என்று இருப்பவன்- ஞானி.

முன்னமே சொன்னபடி அவன் செயல்கள் சமூகத்துக்கு தேவையும் ஆகும். சன்யாசி என்று வீட்டை தியாகம் செய்த பின், தான் உண்ணவும் உடுக்கவும் , தங்கவும் ஏதோ செய்து தானே ஆக வேண்டும். அதைத் தான் சாரீரம் கேவலம் – என்று சொல்கிறார்.

22) கிடைத்ததில் திருப்திடைவது மட்டுமில்லாமல் இந்த வரை கிடைத்ததே என்று மகிழ்கிறான் ஞானி. விருப்பு வெறுப்பு இல்லாமல், பேராசையோ, பொறாமையோ இன்றி, செயல்களால் கிடைக்கும் பலன் எவ்வாறு இருந்தாலும், வெற்றியோ, தோல்வியோ, அதற்காக அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து செய்பவன், அதனால் அவனை வினைப் பயன் என்பது வாட்டாது.

23) ஞானி யாகம் முதலிய கர்மாக்களைச் செய்யும் பொழுதும் பற்றின்றி செய்கிறான். அவன் மனம், வாக்கு, காயம் என்று மூன்றும் ஒருமித்து, ஞானத்திலேயே அமைகிறது. அதனாலும் வினைப் பயன் அவனை அண்டாது.

24) ப்ரும்மார்ப்பணம் ப்ரும்மாக்னௌ ப்ரும்மஹவிர் ப்ரும்மணா ஹுதம் | ப்ரும்மைவ தேன கந்தவ்யம் ப்ரும்ம கர்ம சமாதினா ||

ब्रम्हार्पणम् ब्रह्माग्नौ ब्रम्ह हविर् ब्रम्मणा हुतम् | ब्रह्मैव तेन गन्तव्यम् ब्रह्म कर्म समाधिना ||

ஞானியானவன் தானே ப்ரும்மமும் என்பதை உணர்ந்தவன். அவன் செய்வதும் (யாகம் முதலான கர்மாவும்) ப்ரும்மத்துக்கே அர்ப்பணம். ப்ரும்மமே அக்னி, அதில் போடப்பட்ட ஹவிஸ், (பொருட்கள்) முதலானவைகளும் ப்ரும்மமே. செய்யும் கர்த்தாவும் ப்ரும்மாவே. அவன் அடைந்திருப்பதும் ப்ரும்ம கர்ம சமாதி என்ற நிலை. அவனது லட்சியமும் ப்ரும்மத்தை அடைவதே.

ச.பா: முன் சொன்ன ஸ்லோகங்களில் ஞானியை வினைப் பயன் அண்டாது என்றவர் ஞானி என்பவன் யார் என்பதை விளக்கும் வகையில் ப்ரும்ம ஞானம் அடைந்தவன் செய்யும் செயல்கள் தான் அவனை பாதிக்காது என்று சொல்கிறார்.

சாதாரண ஜனங்கள் ஹோமத்தில் இடுவது வெள்ளி என்றோ, முத்து என்றோ (வெண்மை நிறம் காரணமாக) நினைப்பது உண்மையில் கடவுள் சிருஷ்டியில் ஒன்றே, அதன் அடிப்படை ப்ரும்ம தத்வமே. ஏனெனில் நிலம் நீர்,வாயு, அக்னி, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களும் ப்ரும்மமே.

யாகம், ஹோமம் முதலானவை என்று மட்டுமல்ல விக்ரஹத்தில் ஆவாஹனம் செய்து பூஜிப்பது, தெய்வ காரியங்கள் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவை அனைத்துமே இந்த ஸ்லோகத்தால் பர ப்ரும்மம் , பரமாத்மா பரதத்வம் என்ற வார்த்தைகளால் வர்ணிக்கப் படுபவையே.

24) இதன் அடுத்த நிலையே ஆத்ம சமர்ப்பணம் என்றும் தான் என்றும் நான் என்றும் நினைப்பதை தியாகம் செய்வதே –

சிலர் யாக ஹோமாதிகளில் தெய்வத்துக்கு சமர்ப்பணம் என்ற எண்ணத்துடன் செய்கின்றனர். மற்றும் சிலர் தான் என்ற உணர்வையே ஆஹுதியாக ப்ரும்மாக்னியில் சமர்ப்பிக்கின்றனர்.

(ப்ரும்மம், ப்ரும்ம ஞானம், புத்தி, பரமானந்தம் என்பவை நம் அறிவுக்கு எட்டும் விதமாக விவரமாக பல அறிஞர்களால் பலவிதமாக நிரூபிக்கப் பட்டுள்ளன. ஸ்ரீ சங்கரே பல மேற்கோள்களை காட்டியிருக்கிறார்.

பலவிதமான தளைகளுடன் உள்ள ஆத்மா, எந்த வித தளையும் இல்லாத பரப்ரும்மத்தின் ஒரு அம்சமேயாகும்.

காஞ்சி பெரியவர் ஸ்ரீ பரமாசார்யர்கள் குறிப்பிடும் பொழுது இந்த நிலை லட்சத்தில் கோடியில் ஒருவருக்குத் தான் கை கூடும்- ஆனால் அந்த ஒரு ஞானி மூலம் லோகமே க்ஷேமத்தை அடையும் என்பார். )

25) யாக கர்மாக்களைச் செய்பவர்கள் பொதுவாக தெய்வ காரியமாக நினைத்து பொருட்களை தியாகம் செய்கின்றனர். ப்ரும்ம ஞானம் அடைய விரும்புபவர் தன் நான் என்ற எண்ணத்தையே தியாகம் செய்கின்றனர்.

சங்கர .பாஷ்யம்: ப்ரும்மத்தை அறிவது எளிதல்ல. இது அல்ல , இது அல்ல என்று விலக்கி விலக்கி ஒரு சித்தாந்தம் – நேதி நேதி ( नेति, नेति – न इति ) என்றே சொல்லி கடைசியில் கண்டு கொள்வது. இதற்கான சாஸ்திர அறிவும், அனுபவ அறிவும் , குரு அருளும் உள்ளவர்களே உணர முடியும். உபனிஷத்துக்கள் பல கதைகள் மூலமாக சொல்கின்றன.

26) செவி முதலான புலன் களை (ஐந்து- மற்றவை கண், நாசி, வாய், தோல்) ஸம்யமம் – அடக்கம் என்ற குணத்தால் ஜயிக்கிறார் – சப்தம் முதலான – புலன் களின் வேலையான ஒலியை கேட்டல், பார்த்தல், நுகர்தல், வாய் – ருசியை அறிதல், தொடு உணர்ச்சி இந்த செயல்களை கட்டுப்படுத்துவதன் மூலம் ஜயிக்கிறார்.

27) இந்த புலன் களின் செயலையும், ப்ராணன் என்ற உயிரின் ஓட்டத்தையுமே (உடலின் இயக்கமான ப்ராண வாயு சுருங்குவதும், விரிவதுமான செயல்) ஆத்ம சம்யமம்- தன்னடக்கம் – இதுவும் ஒரு யோக சாதனையே. – மனதை தன் வசத்தில் வைத்திருத்தல் – என்பதே அக்னியாக அதில் ஆஹுதி செய்கின்றனர் கரைத்து விடுகின்றனர். இதற்கு அவனுடைய ஞானம் அல்லது அறிவு, விளக்குத் திரி எரிய உதவும் எண்ணெய் போல உதவியாக இருக்கிறது.

(தன்னடக்கம், மனதை தன் வசத்தில் வைத்திருத்தல் என்பது யோக சாதனையின் பலனாக பெறக் கூடியது. இந்த சாதகன் தன் புலன்களை அடக்குவதோடு, ப்ராணனையும் சமன்வயப் படுத்திக் கொள்கிறான். மூச்சை அடக்கி ப்ராணாயாமம் செய்து சித்திகளை அடைகிறான்)

28) யாகம் செய்வோர் பல வகையினர். வசதியற்றவர்களுக்கு பொருள் தானம் செய்வோர் சிலர். தவம் செய்பவர், ப்ராணாயாம், ப்ரத்யாஹாரம் என்ற யோக சாதனைகளைச் செய்பவர், சாஸ்திரங்களைப் படித்து அதன் படி கர்மாக்களைச் செய்பவர் சிலர்.

இது தவிர ஸ்வாத்யாயம் – தன்னை அறிதல் என்ற ஞானத்தை அறிய செய்யும் யாகம். இந்த யாகத்தை செய்பவர் விரதங்களை, யாகத்தின் கட்டுப் பாடுகளை அறிந்து முழுமையாக அனுசரிப்பர்.

எந்த செயலானாலும், ஈடுபாட்டுடன் செய்வது ஒரு யாகமே என்பது பொருள்.

29) ப்ராணாயாமம் செய்வதில் பல வகை. சிலர் ப்ராணனை பூரகம் – உள் இழுத்து நிரப்புதல் என்ற முறையிலும், சிலர் ரேசகம் – முற்றிலும் வெளியேற்றி வெற்றிடமாக்குதல் என்ற முறையிலும், சிலர் கும்பகம் என்ற முறையில் ஒரு பக்க நாசி துவாரத்தை மூடி, மற்ற நாசித் துவாரம் வழியாக வெளிக் காற்றை உள்ளே செலுத்தி , முடிந்தவரை உள்ளேயே நிறுத்திக் கொண்டு பின் மற்றொரு நாசி த்வாரம் வழியாக வெளியேற்றுதல் –

30) மற்றும் சிலர் ஆகார நியமங்களை அனுசரிக்கின்றனர். ப்ராணாயமம் செய்கின்றனர்/ இவர்கள் எல்லோருமே யாக நியமங்களை அறிந்து செய்தவர்கள், அதனால் தூய்மை அடைந்தவர்கள்.

31) யாகத்தில் செலவிட்டது போக மிச்சத்தை தான் அனுபவிப்பவர்கள். இவர்கள் பழமையான ப்ரும்ம பதத்தை அடைகின்றனர். இடையிடையில் ப்ரஸாதம் – யாகத்தில் அர்ப்பணம் செய்த மீதி உணவு முதலியவை – இது தான் அம்ருதம் என்று உட்கொள்கின்றனர்.

32) இவ்வாறு பலவிதமாக யாக யக்ஞங்கள் ப்ரும்மா அறிவித்தார். இவை எல்லாமே கர்மா எனும் வகையைச் சேர்ந்தது. வேதத்தில் சொல்லப்பட்டவையே. இந்த செயல்களே சம்சார பந்தத்தை விட்டு வெளி வர, தன்னை அறிய உதவும்.

33) தானம் முதலானவைகளை விட ஞானம் சிறந்து. எதைச் செய்தாலும் அது முடிவில் ஞானத்தில் கொண்டு சேர்க்கும்.

34) நல்ல குருவை நாடி, அவருக்கு பணிவிடை செய்து, பணிந்து குறைவின்றி அவரிடம் பாடம் கேள். தத்வ தரிசிகளான ஞானிகள் உனக்கு உபதேசம் செய்வார்கள்.

தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஸ்னேன சேவயா |

உபதேக்‌ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வ தரிசின: ||

तद्विध्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया | उपदेक्ष्यन्ति ते ज्ञानम् ज्ञानिन: तत्व दर्शिन: ||

(இது ஒரு நல்ல ஸ்லோகம். மாணவர் ஆசிரியரிடம் எப்படி பாடம் கேட்க வேண்டும் – என்பதை விளக்கும். எந்த காலத்துக்கும், எந்த கலையை கற்கவும் பொதுவானது)

35) பேரறிஞர்களிடம் உடனிருந்து கல்வி கற்பதில் பல நன்மைகள். எதைக் கற்றால் உன் மனக் குழப்பம் தீருமோ அதை அறிவாய். அதன் பின் நீ உலகை காண்பதே மாறும். ஜீவன்கள் அனைத்தும் உன் அந்தராத்மாவில் உறையும் பர ப்ரும்மே -என்று உணர்வாய். அதன் பின் என்னைத் தெரிந்து கொள்வாய்.

ச.பா: அவர்கள் உபதேசிப்பதை சிரத்தையாக கேட்டு. அதில் உன் மனதில் தோன்றும் வினாக்களை வெளிப் படுத்தி உடனுக்குடன் தெளிவு படுத்திக் கொள்ளலாம். முடிவில் நீயே அது – ப்ரும்மா முதல் புல் பூண்டு வரை உன்னில் உறையும் ஆத்ம தத்வமே, – பரமாத்மாவே – அந்த பரமாத்மாவும் தானே என்று அறிவாய் – அதன் பின் என்னையும் அறிவாய் – அனைத்தும் வாசுதேவனான நானே – என்பதை தெரிந்து கொள்வாய்.

36) இந்த ஞானம் உன்னை எல்லா விதமான பாப எண்ணங்களில் இருந்தும் காக்கும். பாப செயல்களின் பலன் என்று நீ நினைப்பதில் இருந்தும் விடுவிக்கும். படகில் ஏறி பெரிய கடலைக் கடப்பது போல சம்சார சாகரத்தை கடந்து செல்வாய்.

37) விறகு முதலான எரியக் கூடிய பொருட்களை அக்னி எரித்து அழிப்பது போல ஞானம் என்ற அக்னி உன் வினைப் பயன்களை எரித்து அழித்து விடும்.

ச.பா: வினைப் பயன்கள் – முன்வினை, இப்பிறவியில் செய்பவை இன்னும் அறியாமையால் செய்யக் கூடியவை அனைத்தையுமே ஞானம் என்ற அக்னி அழித்து சாம்பலாக்கி விடும்.

38) ஞானத்துக்கு சமமான பவித்ரமானது மற்றொன்று இல்லை. இதை நீ செய்யும் சாதனைகள் மூலமாக உணர்ந்து கொள்வாய்.

39) இந்த ஞானம் யாருக்கு கிடைக்கும்? – சிரத்தையுள்ளவன் அடைவான். இந்த ஞானம் பெறுவதே குறிக்கோளாக புலனடக்கம் முதலான சாதனைகளைச் செய்பவன் அடைவான். அப்படி ஞானம் அடைந்து விட்டான் என்பது அவன் அடையும் பெரும் அமைதியில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

ச.பா: – குரு க்ருபையாலும், தன் முயற்சியாலும் ஞானம் அடைந்தவன் அமைதியாகி விடுவான். அதன் பின் குருவுக்கு பணிவிடை போன்ற செயல்களின் தேவை கூட இருப்பதில்லை. மோக்ஷம் அடைகிறான்.

(ஞானியானவன் மற்ற உயிர்களிடம் அன்பாகவும், மனிதர்களுக்கு வழி காட்டியாகவும் இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு உள்ளதே,

அவனுக்கு செயல்கள் தேவையில்லை என்றால் அவன் ஞானத்தால் உலகுக்கு என்ன நன்மை? இந்த கேள்விக்கு வரும் அத்யாயங்களில் பதில் சொல்கிறார். )

40) நம்பிக்கை இல்லாதவன், அறியாமையில் மூழ்கி இருப்பவன், எதிலும் சந்தேகம் கொள்பவன், அழிவான். அவனுக்கு இந்த உலகிலும் நன்மை இல்லை, பரலோகத்திலும் இடம் இல்லை.

41) உன் செயல்களை யோகத்தில் ஈடுபடுத்து. உனக்கு வரும் சந்தேகங்களை ஞானம்- அறிவினால் தெளிவாக்கிக் கொள். இவ்வாறு ஆத்மாவை அறிந்து கொண்டவனை வினைகள், வினைப் பயன்கள் தொடராது என்பது நிச்சயம்.

42) உன் மனதில் எழும் இந்த சஞ்சலமும், குழப்பமும் அறியாமையால் வருவதே. ஞானம் எனும் வாளினால் இந்த சந்தேகங்களை வெட்டி வீழ்த்தி எழுந்திரு. யோக மார்கத்தை கை கொள்வாய். வீரனாக எழுவாய் பாரதா.

ச.பா: ஆத்மன: என்ற சொல்லால் இதுவரை சொன்ன ஆத்ம ஞானம், தான் என்ற அறிவு என்பதையே குறிப்பிடுகிறார்.

(இதுவரை ஸ்ரீமத் பகவத்கீதா என்ற உபனிஷத்தில், ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் அர்ஜு னனுக்கும் இடையிலான சம்பாஷணையில் ஞான, கர்ம, சன்யாச யோகம் என்ற நாலாவது அத்தியாயம்)

அத்யாயம் -5 கர்ம சன்யாச யோகம்

சங்கர பாஷ்யம்: கேள்வியும் பதிலும்.

சென்ற அத்யாயத்தில் ஸ்ரீ பகவான் விவரமாக ஞானமே உயர்ந்தது என்றும், மோக்ஷம் பெற ஞானமே வழி என்றும் நிறையவே சொன்னார். திடீரென்று நினைத்து கொண்டவர் போல கேள்வி கேட்கும் அர்ஜுனனின் தற்கால நிலையை நினைத்தவர் போல -போர் முனையில் நிற்பவன், மனம் குழம்பி இருப்பவன் – இவனிடத்தில் மன அடக்கமோ, துறவோ சொல்லி பயனில்லை என்பது போல அடுத்த விஷயமாக குருவின் அவசியமும், செயல் என்பதன் அவசியமும் பற்றிச் சொல்கிறார். கர்ம யோகி ஆகச் சொல்கிறார். செயலில் ஈடுபாடும், துறவும் இரு வேறு நிலைகள்.

எனவே இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே அர்ஜுனனின் கேள்வி,

, முதன் முதல் யோகம் பற்றி அறிபவன், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் இரண்டில் எது நல்லது என்று தெரிந்தால் தானே தொடர்ந்து அந்தந்த யோக மார்கத்தில் முன்னேற முடியும்.

அர்ஜுனன் கேட்கிறான்:
ஸன்யாசம் என்றும், கர்மா- செயல் என்றும் சொன்னாய், பின் யோகம் என்றும் சொல்கிறாய். இவற்றில் எது நல்லது. தீர்மானமாகச் சொல்லு. எதை அனுசரிப்பதால் எனக்கு நன்மை ?

ஈடுபாட்டுடன் கடமையை செய்யவா, அல்லது புலனடக்கி துறவு கொள்வதா? இரண்டும் வெவ்வேறு வழிகள்.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:
ஸன்யாசம், கடமையைச் செய்தல் இரண்டுமே நல்லதே – இரண்டு வழியிலும் மோக்ஷத்தை அடையலாம். ஆனால் கடமையை விட்டு துறவு கொள்வதை விட ஈடுபாட்டுடன் செயலை, கடமையை செய்வதே உயர்ந்தது.

ச.பா: சன்யாசம், கர்ம யோகம் இரண்டும் வெவ்வேறு மன நிலையில் , சூழ் நிலையில் உள்ள மனிதர்களுக்காக ஏற்பட்டது. உண்மையில் இரு முனைகளில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள்- இந்த இரண்டு கொள்கைகளும் அவ்வாறே தனித் தனியாகவே நடைமுறையில் சாத்தியமாகும். எனவே அவற்றின் லட்சியமும், முடிவும் வெவ்வேறாகவே இருக்க முடியும். இரு வழியும் மோக்ஷத்தை தரும் என்பது எப்படி சரியாகும்.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்.
சாங்க்யம் ஞானம் = கர்ம யோகம் – இரண்டும் வெவ்வேறு என்று பண்டிதர்கள், அறிஞர்கள் சொல்வதில்லை. சிலரே, சிறுவர்கள் போல இந்த பேத உணர்வை கொண்டுள்ளார்கள். யோக முறைகள் இரண்டிலும் ஒரு யோகத்தில் சிறப்பாக பயின்று முழுமையாக அறிந்தவன் இரு வகை யோகங்களின் பலனையும் அடைகிறான். அல்லது இரண்டின் முடிவான நிலையை அடைகிறான். செல்லும் வழி தான் வேறு. லட்சிய சித்தி ஒன்றே.

ச.பா: இது வரை ஞான யோகம் என்று சொல்லி வந்தவர் இப்பொழுது சாங்க்யம் என்ற சொல்லை பயன் படுத்துகிறார்.

என்ன வித்தியாசம்?

அர்ஜுனன் பொதுவான சன்யாசம், கடமை என்று பேசினான். பகவான் சொல்லும் பொழுது அதன் சிறப்புகளை விளக்கும் சாங்க்யம், யோக என்ற சொற்களைச் சொல்கிறார். சாங்க்யம்- ஞானம் என்றும் யோக என்பது கர்ம யோகம் – செயல்-கடமை என்றும் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு பதில் சொல்வது போலவே, பகவான் தொடர்கிறார்.

சாங்க்யம் என்பதில் அடையும் பலனை யோக முறையிலும் அடையலாம். இரண்டும் ஒரே பலனைப் பெற இரு வழிகள் என்று அறிவதே அறிவுடையவன் செயல்.

ச.பா: சாங்க்யர்கள் என்பவர்கள் உலகைத் துறந்தவர்கள். ஞானம் பெறுவதே அவர்கள் குறிக்கோள். சாங்க்யம் என்பது கணக்கு என்று பொருளுடையது. ஆராய்ச்சி செய்பவர்கள் என்றும் சொல்லலாம். அவர்கள் தன் ஆராய்ச்சியில் வெற்றி பெறுவது என்பதே மோக்ஷம். இந்த நிலையை கடமையைச் செய்து, யாக யக்ஞங்களைச் செய்யும் கர்ம யோகியும் அடைகிறான்.

(அது ஒரு சுற்று வழி என்று வேண்டுமானால் சொல்லலாம். தொடர்ந்து செய்வதால் பெறும் அனுபவம், அதன் கஷ்ட நஷ்டங்களை அறிந்து முன்னேற வேண்டும். செயலில் இருந்து அதன் பல நெளிவு, சுளிவுகளை அறிந்து கொள்கிறான் – அனுபவம் தந்த பாடம் – அதே காரியமாக ஆராய்ந்து தெரிந்து கொள்வதற்கு சற்றும் இளைத்ததல்ல என்று நாம் நடை முறையில் பார்க்கிறோம்).

சன்யாசம் என்பது சுலபமல்ல. சாதனைகள் செய்த முனிவர்கள் அறிவார்கள். யாக காரியங்களை வேதம் சொல்லும் முறையில் இடைவிடாது செய்து பக்குவப் பட்டவர்கள் தியாகம் என்பதை அனுபவ பூர்வமாக செய்கிறார்கள். அவர்கள் கூட பலகாலம் முயன்ற பிறகே சன்யாசம் என்பதை முழுமையாக அறிகிறார்கள்.
ச.பா: ந்யாசம் என்பது ப்ரும்மமே – அதில் சம் – முழுமையாக மனம் ஒன்றுவது. ஈஸ்வர தியானமாக யாகங்கள் செய்பவர்கள் நாளா வட்டத்தில் எந்த விருப்பமும் இல்லாமல் யாகம் யாகத்திற்காகவே என்ற உணர்வோடு செய்கிறார்கள். மனனம் – இடைவிடாது சிந்திப்பவர்கள் என்பதால் முனி எனப் படுபவர்கள்- உயர்ந்த ஞானமாகிய ப்ரும்ம வித்தையை தியானம் செய்து அதே நினைவாக மனனம் செய்து உணர்வது பரப்ரும்ம தத்வம்.

சன்-நியாசம் என்பது ப்ரும்மமே என்பது ஸ்ருதி என்ற வேத வாக்யம். அனைத்துக்கும் அப்பாற்பட்ட , அனைத்துக்கும் காரணமான பரப்ரும்மம் என்றும் பரமாத்மா என்றும் அழைக்கப்படும் பரம் பொருள். சன்யாசத்தின் பயன் இந்த அறிவே.

யோக சாதனையை செய்யும் முனிவன் உண்மையான பக்தியுடன், ஈடுபாட்டுடன் கடமையை செய்து ப்ரும்மத்தை அறிகிறான். எனவே கர்ம யோகம் சிறந்தது என்றேன் – என்று பகவான் சொல்கிறார்.

இவ்வகையில் யோக சித்தி அடைந்தவர்கள் சுத்தமான ஆத்மாக்கள். புலனடக்கம் கொண்டவர்கள். எல்லா உயிரினங்களிலும் தன்னையே காணும் அளவுக்கு சித்தி பெற்றவர்கள். இவர்கள் செயலில்- கர்மாவில் உழன்றாலும் களங்கம் இவர்களை அண்டாது. வினைப் பயன் தொடராது.
ச.பா: யோகி தன்னை அறிந்து கொள்வதோடு, உலகில் புல் பூண்டு முதல் ப்ரும்மா வரை ஒரே பரப்ரும்மத்தின் அம்சமே என்பதை மனப் பூர்வமாக நம்புகிறான். உலகில் மற்றோருக்கு உதவும் வழிகாட்டியாக இருப்பான்.

7.&8 எதுவுமே செய்ய மாட்டேன் என்று என்று ஒருவன் இருக்க முடியுமா? அதே தான் ஞானம் அடைந்தவனும் உலகில் இருக்கும் வரை, பஸ்யன்- பார்த்துக் கொண்டும், ஸ்ருண்வன் – கேட்டுக் கொண்டும், ஸப்ருஸன், தொடுதலும் , ஜிக்ரண் – முகர்ந்தும், அஸ்னன் – உண்பதும், கச்சன். நடந்து போய்க் கொண்டும், ஸ்வஸன், மூச்சு விட்டுக் கொண்டும், ஸ்வபன்- தூங்கியும், ப்ரலபன்- ஏதேதோ பேசியும், விஸ்ருஜன்- விட்டும், க்ருஹ்ணன்- பிடித்தும், கண் இமைகளை மூடியும், திறந்தும் – இந்த செயல்களை செய்யத் தான் வேண்டும். இவை இந்திரியங்களின் செயல்பாடுகள். ஆனால் சாதாரண மக்கள் இவைகளையே பெரிதாக நினைக்கும் பொழுது, ஞானி, இது இவைகளின் நியமிக்கப் பட்ட செயல்- செய்கின்றன என்று தான் ஒதுங்கி நின்று கவனிப்பான்.

ச.பா: கானல் நீரைக் கண்டவன், மறுமுறை அதனருகில் நீர் அருந்த செல்ல மாட்டான். அது போலவே யோகிகள் இந்த புலன்கள் பற்றி அறிந்த பின் அதன் செயலில் மயங்க மாட்டார்கள்..

இது போல கர்ம மார்கத்தில் செல்பவர்கள், சுற்றம், முதலிய எந்த தளையிலும் கட்டுப் படாமல், தாமரை இலைத் தண்ணீரைப் போல ஒதுங்கியே இருப்பர். பாபம் இவர்கள் மேல் படியாது.
உடலால், வாக்கினால், மனதால் நினைத்து செய்யும் செயல்களை இவர்களும் செய்வார்கள், ஆனால் தனித்தே இருப்பர். பார்த்தும், கேட்டும், புலன்களை பயன் படுத்துவதும் தன் ஆத்மாவை பரிசுத்தம் செய்யும் விதமாகவே இருக்கும்.
இப்படி யோகிகள் செயல்களை செய்யும் பொழுதும் பலனை எண்ணாமல் செய்வதால் சாந்தமாக இருப்பார்கள். அதுவே மற்ற சாதாரண ஜனங்கள் பலனைப் பற்றியே எண்ணிச் செய்வதால் கட்டுப் படுகிறார்கள்.
ச.பா: ஈஸ்வரார்ப்பணம் என்று எண்ணி செய்வதற்கும், நான் செய்கிறேன் என்று செய்வதற்குமான வித்தியாசம் இதுவே. செயலில் நேர்மை, புதியன தெரிந்து கொள்வது, அப்படி பெறும் அறிவையே பெரிதாக நினைப்பது இவை உயர்ந்த குணங்கள். இதைச் செய்வதால் பெறும் லாபத்தையே எண்ணி இருப்பவன் கட்டுப் படுகிறான்.

(பலே சக்தோ நிபத்யதே – பலனில் கண் வைத்தால் கட்டுப்படுவாய் என்பது ஒரு நல்ல உபதேசம். இதையே தமிழில் பேராசை பெரு நஷ்டம் என்றனர். )

மனம் தான் ஆசைக்கும் மற்ற லௌகிகமான பற்றுதல்களுக்கும் காரணம். மனதை அடக்கியவனே உண்மையில் பற்றைத் துறந்தவன். அவன் தன் உடலால் தானும் எதுவும் செய்வது இல்லை மற்றவர்களையும் செய்ய விடுவதில்லை.
ச.பா: உண்மையான துறவி மனதளவிலும் சன்யாசம்- துறவை ஏற்க வேண்டும். அவன் செய்யும் செயல்கள் , மற்றவர்களைக் கொண்டு செய்விக்கும் செயல்கள் அவனளவில் சுக துக்கங்களுக்கு காரணமாகாது.

சிருஷ்டி செய்யும் பொழுதே, இப்படி ஒருவன் செய்பவன், இது இவன் கடமை என்று பகவான் திட்டமிட்டு செய்யவில்லை. வினைப் பயன், என்பதும் அதனால் ஏற்படும் சுக துக்கங்கள் முதலிலேயே தீர்மானிக்கப் பட்டதுமல்ல. இயற்கையில் செயலுக்கும், பலனுக்கும் உள்ள சம்பந்தம் அதனதன் இயல்பே.
ப்ரபுவான பகவான் யாரையும் பாபியாக, குற்றம் செய்தவனாக பிறக்கச் செய்வதில்லை. அல்லது யாருக்கும் பாபம் பிறப்பினால் வருவதல்ல. ஒருவனுடைய சுக்ருதம் – நல்ல செயல் என்பதும் உடன் பிறப்பதல்ல. அக்ஞானம்- அறியாமை என்பதில் மூழ்கி இருக்கும் ஜீவன்கள் – அதனாலேயே மோஹத்தை அடைகிறார்கள்.
ச.பா: நீ சுகமாக இரு, நீ கஷ்டத்தை அனுபவி என்று திட்டமிட்டு சிருஷ்டியை பகவான் செய்வதில்லை. அக்ஞானம்- அறியாமை கண்களை மறைக்கிறது. அதனால் ஒரு தவறு, அதன் மேல் மற்றொன்று என்று தொடர்ந்து செய்து மோக வசம் சிக்குகின்றன ஜீவன்கள்.

ஒரு சிலர் அறிவினால், தங்கள் அறியாமையை போக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆதித்யன் இருளை ஒழித்து ஒளியைத் தருவது போல ஞானம்- அறிவு ப்ரகாசத்தை கொடுக்கிறது.
இப்படி புத்தியுடையவர்கள் ஒன்றேயான பரம் பொருளை கண்டு கொள்கிறார்கள். மனப் பூர்வமாக நம்புகிறார்கள். மாற்று எண்ணம் இன்றி அதனிடம் பணிகிறார்கள் (நிஷ்டா: -ஸ்திரமாக இருத்தல்) அதுவே தியானமாக, ததாத்மா , தானும் அதே ஆத்மா என்ற உணர்வோடு இருந்து, ஞான ஒளியினால் பரிசுத்தமாகி மறு பிறவியற்ற நிலையை அடைகிறார்கள்.
(எப்படி இது சாத்தியம். ஜீவன்களைச் சூழ்ந்த அறியாமை அவர்களுக்கும் தானே. இது அக்ஞானம் இது அறிவு என்று எப்படி தெரிந்து கொள்வார்கள். அவர்கள் ஞானம்- அறிவை கண்டு கொண்டவர்கள் என்பதை மற்றவர்கள் எப்படி அறிவார்கள்?)

இதற்கு பதில் சொல்வது போல அடுத்த ஸ்லோகம்:

18) கல்வியில் சிறந்த அறிஞர்கள், வினயம் உடைய பெரியவர்கள், ப்ராம்மணனோ, பசுவோ, யானையோ, திரியும் நாயோ, அந்த நாயையே தின்னும் வேடன் போன்றவர்களோ, அவர்கள் பார்வையில் ஒன்றே. அவர்களே பண்டிதர்கள்.

19) இவர்களுடனே இருந்து பழகுபவர்கள் கூட இந்த தன்மையை உணர முடியாது. எல்லோரிடமும் சகஜமாக நடந்து கொள்வதில் நட்பும் அன்பும் வெளிப்படும். ப்ரும்மம் களங்கமற்றது. அந்த ப்ரும்மா என்ற பாவத்திலேயே இருப்பவர்கள்.

20) வெளிப்படையாக மற்றவர்கள் காண்பது சுகம் என்று துள்ளி குதிக்காமலும், துக்கம் என்று வீழ்ந்து விடாமல் இருப்பதுமான பண்பு. எதிலும் தங்கள் ஸ்திர புத்தியை இழக்காமல், கலங்காத தன்மையுடன் இருப்பதற்கு காரணம் அந்த ப்ரும்மத்தில் கலந்திருப்பதே.

சாதாரண ஜனங்கள் உலகியலில் அடையும் மகிழ்ச்சியை இவர்கள் ப்ரும்மத்தை தேடுவதில் அடைகிறார்கள். ப்ரும்ம ஞானம் என்பதே பேரானந்தம். இந்த சாதனையில் ஈடுபடும் யோகிகள் உலகியல் வாழ்க்கையில், நாட்டம் இல்லாமல் அதைக் கடந்து சென்று, இந்த பேரானந்தத்தை பெற்ற பின் அதன் (உலகியல் இன்பங்கள்) தேவையே இல்லாமல் ஆகி விடுகிறது.
ச.பா: அந்த:கரணம் அதாவது ஆத்மா. ஸப்தம் முதலான புலனால் அறிந்து கொள்வதையும் அதன் மூலம் பெறும் உணர்வையும் அந்த:கரணம் – மனசாட்சி அல்லது ஆத்மா அனுபவிப்பதில்லை. அதைத் தாண்டி தன் லட்சியமான ப்ரும்மானந்தத்தை தேடுபவன் சாதகன் – அவனுக்கு இந்த சுகங்கள் பொருட்டல்ல.

22.ஸ்பர்ஸம் முதலான புலன்களால் பெறும் சுகம் முடிவில் துக்கத்தையே கொடுக்கும். ஆரம்பத்தில் சுகமாகவும், போகப் போக வேறு விதமாகவும் ஆகும். எனவே புத்திமான்களான பெரியவர்கள் இதில் லயிப்பதில்லை.

தன் அத்யாத்ம தேடலுக்கு ஊறு விளைவிக்கும் இந்த உணர்ச்சிகளை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு கை விட்டவன் சம்சாரத்தில் சாரம் இல்லை என்கிறான். அத்யாத்ம வழியில் செல்பவன் தன்னடக்கம் கொள்கிறான். இந்த உலகிலேயே, தன் வாழ் நாளிலேயே காமம், க்ரோதம் இவைகளை அடக்கியவன் தான் யோகி அவன் தான் சுகி- சுகமாக இருப்பவன்.
தன்னுள் ஆத்மாவைத் தேடி கண்டு கொண்ட பின் ப்ரும்ம ஜோதி என்பதை காண முடிகிறது. இதற்கு அடுத்த நிலை ப்ரும்மமே ஆவது. ப்ரும்ம நிர்வாணம் என்பது இதுவே.
இந்த நிலையை ரிஷிகள் தவம் செய்து அடைந்துள்ளனர். மாசில்லாத மனதுடன், சுகம் துக்கம் போன்ற இரட்டைகளிலிருந்து விடுபடுகிறார்கள். பாரபக்ஷம் இல்லாமல் ஜீவன் கள் அனைத்தையும் நேசிக்க இவர்களால் முடிகிறது.
26, ஆசை, கோபம் இல்லாமல் இருப்பதால் இந்த யதி-ரிஷிகள், தங்களைச் சுற்றி இருக்கும் பொதுவான விஷயங்களிலேயே பேரானந்தம் அனுபவிக்கிறார்கள்.

அடுத்து தியானம் செய்வது எப்படி என்பதை விளக்குகிறார்.

& 28) புற உலகை நினைக்காமல், புருவங்களூக்கு இடையில் பார்வையை இறுத்தி, ப்ராணன், அபானங்களை சமமாக இருக்கச் செய்து, நாசி துவாரங்களின் வழியே மூச்சை முறையாக செலுத்தி, சீராக மூச்சை விட்டு, ஐந்து இந்திரியங்கள், மனம், புத்தி இவற்றின் செயலை கட்டுப்படுத்தி, வேறு எதையும் எண்ணாமல், இடையில் தோன்றும் காமம், க்ரோதம் முதலியவைகளுக்கு இடம் கொடுக்காமல், ஒரே தியானமாக சாதனை செய்ய வேண்டும். இப்படி செய்பவன் எப்பொழுதும் சுதந்திரனாக இருக்கிறான். நாளடைவில் (பர வாசு தேவனான) என்னை யார் என்று அறிகிறான்.
29) போக்தாரம் யக்ஞ தபசாம் சர்வலோக மஹேஸ்வரம் | சுஹ்ருதம் சர்வ பூதானாம் க்ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி ||

भोक्तारम् यज्ञ तपसाम् सर्व लोक महेश्वरम् | सुह्रुदम् सर्व भूतानाम् ज्ञात्वा माम् शान्तिमृच्छति ||

சர்வ லோக மஹேஸ்வரன் நானே. யக்ஞம் தவம் இவைகளின் உட்பொருளும் நானே. யாகங்களில் ஹோமம் செய்யப்படும் பொருள்கள் என்னையே வந்தடைகின்றன. எல்லா உயிர்களுக்கும் நண்பன் நானே. இவ்வாறு என்னை அறியும் யோகிகளும் தவம் செய்யும் ரிஷிகளும் நிறைவான மன சாந்தியை அடைகிறார்கள்.

(இது வரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில் ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷணையில், கர்ம சன்யாச யோகம் என்ற ஐந்தாவது அத்தியாயம்).

அத்யாயம்-6 ஆத்ம சம்யம யோகம்

முன் அத்யாயத்தில் சொன்ன தியான யோகம் மேலும் விவரமாக சொல்லப் படுகிறது.

சங்கர பாஷ்யம் : த்யானம் செய்வதன் மூலம் தன்னை அறிவது என்பது ஒரு வழி. க்ருஹஸ்தன் – இல்லறத்தான் தன் கடமைகளை செய்வதன் மூலமே நல்ல கதியை அடைகிறான் என்று சொன்ன பின் அவனுக்கு தியானம் எதற்கு? என்ற கேள்வி:

கடமையை செய்பவன் அதன் மூலமே உயர் கதியை அடைவான் என்பதில் மாற்றமில்லை. அதற்கு மேலும் இல்லறத்தான் ஒருவன் தன்னை மேம்படுத்திக் கொள்ள தியானம் உதவும். தியானத்தால் உடலும் உள்ளமும் உறுதியாகும் என்பது அதன் பலன்.

தொடர்ந்து அக்னிஹோத்ரம் முதலான கடமைகளை முறையாக செய்து வரும் பொழுது அதன் பலனில் பற்று விடுபடுகிறது என்று பார்த்தோம். வேத மந்திரங்களும் சாஸ்திரங்களும் சொல்லும் பல பல செயல்களை அப்படியே ஏற்று செய்யும் க்ருஹஸ்தர்கள், அதற்கான பலனை பெற வேண்டும். பகவான் அதை மறுக்கவில்லை. அடுத்த வகுப்புக்கு செல்லும் மாணவன் போல சித்த சுத்திக்கு தியானம் என்று சங்கர பாஷ்யம் சொல்கிறது.

(செய்யும் தொழிலே தெய்வம் என்று பாரதியார் சொன்னது கடமையைச் செய் என்று பகவான் சொன்னதும் ஒன்றே. அந்த முறையில் இல்லறத்தான் அற வாழ்க்கையை மேற்கொண்டு நல்லறம் நடத்தி வரும் பொழுது அவனும் ஞானியும் ஒன்று என்றார். இந்த கருத்தையே நமது புராணங்களும், இதிகாசங்களும் கூட வலியுறுத்துகின்றன. இப்பொழுது தியானம் என்பது பற்றி விவரிக்கிறார். )

முதல் ஸ்லோகம் இதையே சொல்கிறது. எந்த செயலும் செய்யாமல் இருப்பவனோ, அக்னி ஹோத்ரம் முதலிய தெய்வ காரியங்களை செய்யாமல் சன்யாசி என்று சொல்லிக் கொள்பவனோ கர்ம யோகி என்றோ சன்யாசியோ ஆக மாட்டார்கள்.

பற்றின்றி செய் என்றால், அதனால் என்ன பயன், நான் செய்யாமலே இருக்கிறேன், அதனால் எதிலும் எனக்கு பற்றில்லை என்று வாதம் செய்பவன்,

சன்யாசிக்கு அக்னி காரியம் இல்லை- நான் அந்த அக்னி காரியம் முதலான பந்தங்களை விட்டு விட்டேன் அதனால் நான் சன்யாசி, என்பவனோ,

உண்மையில் சன்யாசியுமல்ல, கர்ம யோகியுமல்ல.

சன்யாசம் என்று எதை சொல்கிறோமோ அதுவே யோகம். பாண்டவா, இதை எண்ணி செய்கிறேன், எனக்கு இந்த பலனைக் கொடு என்று சங்கல்பம் செய்து தான் வேத பாராயணமோ, பூஜையோ, யாகம் முதலிய செயல்களோ- செய்யப் படுகின்றன. உலக க்ஷேமத்திற்காக எனும் பொழுதும் சங்கல்பம் உண்டு. செயல் தான் தியான யோகத்திற்கு முதல் படி.
யோகம் என்பதை தெரிந்து கொள்ளவே கடமை அல்லது செயல்- கர்மாவை தெரிந்துகொள்ள வேண்டும். சாதனை என்ற படிகளில் ஏற கர்ம யோகம் காரணமாக இருக்கும். அதுவே அந்த யோக நிலையை எட்டி விட்டவனுக்கு அடக்கம் காரணமாக சொல்லப் படுகிறது.
யோக நிலையை எட்டி விட்டவன் என்பவன் யார்? என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார். புலன் அடக்கியவன், எந்த செயலையும் சுய நலமாக செய்யாதவன், சங்கல்பம்- தேவை எதுவும் இல்லாதவன் யோக நிலையில் ஏறி விட்டவன் எனப்படுகிறான்.
ச.பா: தான் எதுவாக இருக்க வேண்டும் என்று மனதில் நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான். அதை அனுசரித்து அவன் செயல்கள் இருக்கும் என்று உபநிஷத்.

(உலகியல் படி யோசித்து பார்த்தாலும் இதுவே சரி. உபநிஷத் வாக்கியம் அதிக பொருத்தமாக தெரிகிறது.)

ச.பா: கேள்வி:

சங்கல்பமே இல்லை என்றால் ஏன் செயலை செய்கிறான். எண்ணங்களே இல்லையென்றால், அடுத்து என்ன செய்வது என்று ஏன் யோசிக்கிறான். ஒரு பொருளில் ஈடுபாடு தான் அதை பெற வழிகளைத் தேடும், அதை அடைய முயற்சிகளைச் செய்யும். எந்த பொருளும் தேவை இல்லாதவன் வாழ் நாளில் என்ன சாதிப்பான்?

மிக விரிவாக இதற்கு சமாதானம் தரப் பட்டுள்ளது.

இது ஒரு நல்ல ஸ்லோகம். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்.
உத்தரேதாத்மனா ஆத்மானம் -நாத்மானமவசாதயேத் | ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன: ||

उद्ध्रेदात्मनात्मानम् नात्मानमवसादयेत् | आत्मैवात्मनो बन्धुरात्मैव रिपुरात्मन: ||

தன்னைத் தானே தான் உயர்த்திக் கொள்ள வேண்டும் தான் எதை சாதிக்க நினைக்கிறானோ, அந்த வழியில் முன்னேற தடைகளை களைந்து செல்ல உத்ஸாகம் வரும். தன்னை குறையுள்ளவனாக நினைத்து கலங்க கூடாது. தானே தான் தனக்கு நண்பன். பந்து. தானே தனக்கு எதிரியாவதும் உண்டு.

ச.பா: கடலில் மூழ்கியவன் கரையேற முயல்வது போல மனிதன் சம்சார கடலைக் கடக்க தானாகவே உகந்த வழியை தேந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி தானே நண்பன், பந்து-உறவினன் என்று சொன்னபின் அந்த நண்பன் அல்லது உறவினன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார். சம்சாரக் கடலைக் கடக்க உதவும் நண்பன்வெளியாளாக இருந்தாலும் சரி தானேயானாலும், தன் ஆத்மாவை தானே ஜயித்தவனாக இருக்க வேண்டும். தன்னையறிந்த யோகி. அப்படியின்றி தன்னையறியாதவன் தான் தனக்கே எதிரி.
(தானே தனக்கு உதவி என்றாலும், தன்னையறியாதவரை குரு என்று ஒருவரை நாடி, யோக சாதனைகளைக் கற்றுக் கொள்வதே நல்லது. அறியாமல் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதைத் தவிர தனியாக இருந்து பெறும் நண்மை எதுவும் இல்லை.)

பனி, வெய்யில் என்று அந்தந்த பருவ காலத்தில் அதிக குளிரோ, உஷ்ணமோ உடலை வாட்டுவதைப் போல சுக துக்கங்கள் மனிதனை வாட்டுகின்றன. அதைவிட அதிகமாக மனதை, மற்றவர்கள் செய்யும்மான, அவமானங்கள் அலைக்கழிக்கின்றன. மான- மதிப்பை பெறும் பொழுது மகிழ்ச்சியும், அவமானத்தால் வருத்தமும் தவிர்க்கமுடியாத உணர்வுகள்.
இந்த உடலை பாதிக்கும் சீதோஷ்ணமோ, மனதை பாதிக்கும் மான அவமானங்களோ யோகி எனும் நிலையை அடைந்த சாதகனை வருத்தாது. அப்படி உள்ள சாதகனே

ஜிதாத்மா- தன்னையறிந்தவன் – தன் ஆத்ம சக்தியை உணர்ந்தவன் -அமைதியாக இருப்பான். ப்ரசாந்தாத்மா. ஏனெனில், அவனிடத்தில் பரமாத்மா உள் உறைகிறார்.

(இது ஒரு அழகான ஸ்லோகம். நடு நடுவில் பகவான், தான் யார் என்பதை கோடி காட்டி தெரிவிக்கும் விதமாக இப்படி ஒரு வார்த்தையால் விளக்கி விடுகிறார். ஏதோ சொல்கிறார் என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே ஜிதாத்மா – பரமாத்மா என்ற சொற்கள் அமைந்திருப்பது அழகு.

தியானம் பற்றி சொல்ல வந்தவர், தானே தனக்கு எல்லாம் என்று எண்ணி இறுமாந்து இருக்க விடாமல், தன்னையறிந்தவனுக்குத் தான் அது – தானே தனக்கு பந்து என்றார். அப்படி தன்னையறிந்தவன் என்ன உயர்வு என்ற கேள்விக்கு பதிலாக அவனிடத்தில் பரமாத்மாவாக (தானே) உறைகிறா(றே)ன் என்கிறார்.

அப்படி தனியாக இருக்கும் தகுதி பெற்ற சாதகன், ஞானம், அறிவதிலும், மேன்மேலும் தன் அறிவை வ்ருத்தி செய்து கொள்வதிலும் கவனமாக இருப்பான். அவன் தனிமையில் இருந்தாலும், புலன் அடக்கியவன் . அவனுக்கு காஞ்சனம் எனும் தங்கமோ, ஓட்டாஞ்சில்லோ ஒன்றுதான்.
சினேகிதன், நண்பன் (சுஹ்ருத்- மனதுக்குகந்த நண்பன் என்றும் மித்ரன்- நண்பன் என்றும் பொருள்) உதாசீனம் செய்பவன், மதிப்பவன், நடு நிலையாக இருப்பவன், விரோதம் பாராட்டுபவன், பந்து, உறவினன், சாதுவோ, பாபியோ, எல்லோரிடமும் சமமாக இருப்பவன்- அப்படிப் பட்டவன் தான் சிறப்பிக்கப் படுகிறான்.
சன்யாசி என்றும் யோகி என்றும் சிறப்பித்துச் சொல்லும் சாதகன் தனிமையில் தன் சாதனையை செய்கிறான். குறைந்த பக்ஷ வாழ்வாதாரங்களேபோதும் என்று தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழ்கிறான்.
11.சுத்தமான இடத்தில் அதிக உயரமும் இல்லாமல், தாழ்வாகவும் இல்லாமல் தனக்கு உகந்த திடமான ஆசனத்தில், துணியோ, மான் முதலிய மிருகங்களின் தோலோ, வெறும் குசம் எனும் புல்லோ விரிப்பாகக் கொண்டு, தியானம் செய்ய வேண்டும்.

மனதை ஒருமுகப் படுத்தி, புத்தி அலைபாயாமல், வசதியாக அமர்ந்து தியானத்தை ஆத்ம சுத்திக்காக செய்ய வேண்டும்.
உடல் நேர்க் கோட்டில் இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து கழுத்தின் மேல் தன் தலை நேராக இருக்க, சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தாமல், தன் நாசி நுனியையே பார்த்தபடி அசையாமல்
சாந்தமான ஆத்மா, பயம் இன்றி, ப்ரும்மசாரி விரதம் மேற்கொண்டவனாக, என்னிடத்தில் மனதை வைத்தவனாக, என்னையே தியானம் செய்தபடி அமர்ந்து யோக சாதனையை செய்ய வேண்டும்.
இப்படி மனப் பூர்வமாக என்னையே நினைத்து, யோக சாதனையை விடாமல், செய்பவன் என்னையே அடைகிறான்.
அதிகமாக உண்பவனுக்கும் யோகம் கை வராது. பட்டினி கிடப்பவனும் யோக சாதனையை முனைப்புடன் செய்ய முடியாது. கனவுலகிலேயே இருப்பவனோ, தூக்கத்தையே விட்டவனோகூட யோக சாதனையில் வெற்றி பெற முடியாது.

யோக சாதனையே கஷ்டமானது தான். சுலபமாகதேர்ச்சி பெற முடியாது. ஆகவே, அளவாக உண்டு, அளவாக உறங்கி. உடலை அளவுக்கதிகமாக போஷிக்கவும் வேண்டாம், வருத்தவும் வேண்டாம். இப்படி சாதனையை செய்பவனுக்கு யோகம் துன்பத்தை விலக்கி மகிழ்ச்சியையே அளிக்கும்.
யோகி சாதனையை செய்யும் நிலையை, காற்று இல்லாத இடத்தில் விளக்கு ஒரே நிலையில் ஆடாது அசையாது எரிவதைப் போல என்று உவமானம் சொல்கிறார்.
இப்படி யோக சாதனையை முறையாக செய்தால் மனம் ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையைப் பெறும். இயல்பான பார்வை முதலானவைகளே கூர்மையாகும். தன்னுள் உறையும் ஆத்மசக்தியை உணர்ந்து மகிழ்ச்சி கொள்வான். பேரானந்தம் என்பது இதுவே.
& 21. எண்ணங்கள் சீராக இருக்கும். தன் ஆத்மாவை அறிந்ததால் மனம் விருப்பு வெறுப்புகள் அற்று எப்பொழும் மகிழ்ச்சியான நிலை எய்தும். பேரானந்தம் கை கூடிய பின் வேறு தேவைகள் ஏது ? செயலிலும், வாக்கிலும் உறுதியாக இருக்க இயலும். பெரிய இழப்புகளோ, துக்கமோ அசைக்க முடியாது.
22 & 23.24. உலகியலின் அல்ப சந்தோஷங்களைத் துறந்து – யோகம்- என்ற சொல்லின் பொருள் இணைத்தல்- இங்கு அதுவே விடுவித்துக் கொண்டு என்ற பொருளில் உலகியலில் நாட்டம் கொள்ளாமல், பேரின்பத்தோடு இணையச் சொல்லப் படுகிறது.

சஞ்சலமான மனதின் கட்டுப்பாட்டில் இருந்து விலக விலக, புத்தியை தன் பக்கமாக ஆத்ம விசாரம் செய்ய பயன்படுத்துவது எளிது. மெள்ள மெள்ள இந்த மாற்றம் நிகழும். புத்தியால் த்ருதி – உறுதி – (அனுமனின் குணங்களில் ஒன்று) இழுத்து பிடித்து தன் வசம் ஆக்கிக் கொண்ட பின், பிற சிந்தனைகள் தானே விட்டுப் போகும்.
இவ்வளவு சிரமப் பட்டு அடைந்த ஸ்திரமான மன நிலையை காப்பாற்றிக் கொள்ளவும் வேண்டும். அதனால் சாதனைகளை விடாமல் செய்தபடி மனதை எங்கும் அலைய விடாமல் தன் வசத்திலேயே வைத்திருக்க வேண்டும்.
ப்ர சாந்தம் – அத்யந்த சாந்தமான மனதை அடைந்தவனை, யோக மார்கத்திலேயே இருப்பவனை, அந்த யோகி தற்சமயம் சாந்த ரஜஸ் – ரஜஸ் என்ற குணத்திலிருந்து விடுபட்டவன். (ரஜோ குணம் துடிப்பான செயல்களுக்கு ஆதாரம் என்பதோடு காம, க்ரோதங்களுக்கும் காரணம்) அதனால் காமக் குரோதங்கள் அடங்கி விலகி விட்டன. அகல்மஷம் – மாசுகள் இல்லாதவன்,ப்ரும்ம பூதம்- தானே ப்ரும்மம் என்று உணர்ந்தவன். – இப்படிப் பட்டவனை, எல்லா உத்தமமான சுகங்களும் தேடி வரும்.
ப்ரும்ம ஞானம் அடைந்தவன் கவலையின்றி சதா ஆனந்தமாகவே இருப்பான்.
எல்லா உயிர்களிலும் தன்னைக் காண்பான். தன்னில் மற்ற உயிர்கள் அனைத்தும் உள்ளன என அறிவான். அனைத்தையும் சமமாகநினைப்பான்.
யோ மாம் பஸ்யதி சர்வத்ர, சர்வம் ச மயி பஸ்யதி |
தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி, ஸ ச மே ந ப்ரணஸ்யதி ||

यो माम् पश्यति सर्वत्र सर्वम् च मयि पश्यति | तस्याहम् न प्रणस्यामि स च मे न प्रणस्यति ||

இது போல எவன் என்னையே எங்கும் காண்கிறானோ, உலகனைத்திலும் என்னைக் காண்கிறானோ, அவனுக்கு நான் என்றும் உடனிருப்பேன். அவனும் என் மீதான அன்பை அல்லது நம்பிக்கையை விட மாட்டான். அழிவின்றி இந்த பந்தம் தொடரும்.

எல்லா பூத- பிறப்பையடைந்த ஜீவன்களிலும் என்னையே காண்பவன், எந்த இடத்தில் வசித்தாலும் என்னிடத்தில் இருக்கிறான்.
அர்ஜுனா! காணும் உயிர்கள் அனைத்தையும், தன்னுடன் ஒப்பிட்டுதன்னைப் போலவே இருப்பதாக கண்டு கொள்பவன் – அடுத்தவர்களின் சுகமோ, துக்கமோ, தானும் அதே போல உணருபவன் யாரோ, அந்த யோகி சிறந்தவன்.
இதுவரை கேட்டு வந்த அர்ஜுனுக்கு சந்தேகம் வருகிறது.

33.மது சூதனா! இது வரை நீ விவரித்த யோகம் – நடை முறையில் சாத்யமா? மனதை அடக்குவது மிக கஷ்டமான செயல் அல்லவா? ஸ்திரமாக இருப்பது எப்படி?

க்ருஷ்ணா! சஞ்சலம் கொண்ட மனதை கட்டுபடுத்துவது காற்றை அடக்குவது போல – அடங்குமா? முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.
ஸ்ரீ பகவான் பதில் சொல்கிறார்.

சந்தேகமில்லாமல் இது கஷ்டமான செயலே. மனதைக் கட்டுப்படுத்துவது சுலபமல்ல. மஹாபாஹோ என்று அர்ஜுனனை அழைத்து (பலசாலியே, உன்னால் முடியாதா என்பது போல ) பயிற்சியாலும், வைராக்யத்தாலும் மனம் அடங்கும். முயன்று பார்.

(பயிற்சி என்பது ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப நினைத்தும், செய்தும் அதில் திறமையை வளர்த்துக் கொள்ளுதலாகும். இதில் வைராக்யம் என்பது அப்படி செய்யும் பொழுது அலுப்போ சலிப்போ வந்தாலும் தன் பயிற்சியை விடாது செய்யத் தேவையான மன திடம்)

விடா முயற்சியின்றி யோகம் வராது. வழக்கமான சில செயல்களை விடுவதால் அன்றாட தேவைகளுக்கு உழைக்க முடியாமல் போகலாம். அந்த சமயம் தேவைகளை குறைத்துக் கொள்ள பழக வேண்டும். இப்படி சிரமப் பட்டு தான் தன் இலக்கை அடைய முடியும். இப்படி உழைப்பவனுக்கு சுலபமாக யோகசித்தி அமையும் என்பதே என் கருத்து.

  1. அர்ஜுனுனக்கு சந்தேகம் : இப்படி சிரமப் பட்டு தியாகங்கள் செய்தும், சித்தி கிடைக்கவில்லை, என்றால் என்ன செய்வது. அந்த சாதகன் பாதி கிணற்றைக் கடந்தவன் போல அழிவானா (சின்னாப்ரமிவ – வானம் இடிந்து விழுந்து போல என்று பதத்தின் பொருள்- தமிழில் இதற்கான பழமொழி இது) இதுவரை கடை பிடித்த சாஸ்திர சம்மதமான செயல்களிலும் இனி இடம் இல்லை. யோகம் சலித்து விட்டது. உலகில் என்ன செய்வான்? காலமும் கடந்து, யோகம் சித்தி என்று எண்ணி செலவழித்த உடல் உழைப்பும் வீண் என்றால் வாழ்க்கையே வீண் தானா?
    க்ருஷ்ணா! நீ தான் இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் வேண்டும். நான் வேறு யாரிடம் போவேன்.
    ஸ்ரீ க்ருஷ்ண பகவான் பதில் சொல்கிறார்.
    பார்தா! (அர்ஜுனனின் பெயர்) – இந்த உலகிலும் சரி, மறு உலகிலும் சரி அவனுக்கு துன்பமே வராது. நல்ல செயலைச் செய்பவன் என்றுமே கஷ்டப் பட மாட்டான்.

நல்ல இடத்தில் பிறப்பான். புண்யம் செய்து நற்கதி அடைந்தவர்கள் நட்பு கிடைக்கும். நீண்ட காலம் நல்ல படியாக வாழ்வான்.

(‘ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் கச்சதி’ – न हि कल्याणकृत् कस्श्चित् दुर्गतिम् तात गच्छति || – நன்மை தரும் செயல்களைச் செய்பவன் என்றும் துன்பத்தையடைய மாட்டான்)

இது ஒரு நல்ல ஸ்லோகம். தனக்குரிய அந்தஸ்தை பெறவில்லை என்பதற்காக செய்து வரும் நற்செயல்களில் கவனம் குறைவது இயல்பு. அப்படிப் பட்டவர்களை உத்ஸாகப் படுத்தும் )

அல்லது புத்திமான்கள் நிறைந்த குடும்பத்தில் பிறப்பான். இம்மாதிரி பிறப்பு அமைவதும் அரிதே. அந்த சூழ்நிலையில் முன் பிறப்பின் விட்ட குறையாக அவனது ஆர்வம் சாதனையில் செல்லும். முன் பிறவியில் செய்த பயிற்சிகள் கை கொடுக்கும். அவனே அறியாமல் விட்ட இடத்திலிருந்து தொடருவது போல அவனது சாதனைகள் எளிதாக இருக்கும்.

ச.பா: பிறப்பிலேயே அமைந்த அதீத அறிவும், திறனும் சரியான வழி நடத்தல் இல்லையெனில் அதர்மமாக கூட போகும் வாய்ப்பு உள்ளது. அந்த சமயம், ப்ரும்மம் என்ற சொல் காதில் விழுந்தாலே போதும், பழைய சாதனையின் பலம் அவன் அதர்மத்தில் செல்லாமல் நல்வழிப் படுத்தும்.

அவனது தேடல் ப்ரும்ம வித்தையாகவே இருப்பதால், முந்தைய பல பிறவிகளில் செய்த முயற்சிகள் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். எனவே மிகச் சிறந்த சாதகனாக உயர்வான்.

ஏதோ ஒரு பலனைக் கருதியோ, கருதாமலோ தவம் செய்பவன் சிறந்தவன். ஞானம் தான் பெரிது என்பவன் ஒரு படி மேல். கர்ம மார்கி- அல்லது யாகாதி காரியங்களை நியமத்துடன் செய்பவன் அதை விட மேல். அதையும் விட யோகி சிறந்தவன் என்பது என் கருத்து. எனவே, அர்ஜுனா! யோகி ஆவாய்.

அதிலும் யோகியானவன் எவன் என்னிடம் சிரத்தையுடன் பூஜித்து,என்னிடத்திலேயே முழுமையாக நம்பிக்கையுடன் இருக்கிறானோ, அவன் மிகச் சிறந்த யோகி என்று நான் ஏற்கிறேன்.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தை என்ற யோக சாஸ்திரத்தில், க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், ஆத்ம சம்யம யோகம் என்ற ஆறாவது அத்தியாயம் )

அத்யாயம் 7 – ஞான விக்ஞான யோகம்

ஸ்ரீ பகவான் க்ருஷ்ணர் தானே பேசிக் கொள்வது போல அர்ஜுனன் எதுவும் கேட்காமலே

தொடர்ந்து சொல்லலானார்.

1.என்னிடம் ஈடுபாடு கொண்டவர்கள், யோக மார்கத்தில் முயற்சியுடையார், என்னையே நம்பி இருப்பவர், அவர்கள் என்னை எப்படி, எந்த விதமாக அறிகிறார்கள் என்று சொல்கிறேன், கேள்,

அதைப் பற்றி முழுவதுமாக இப்பொழுது உனக்கு சொல்லப் போகிறேன். இதைக் கேட்டபின் உன் சந்தேகங்கள் தீரும். அதன் பின் நீ அறிய வேண்டியது எதுவும் இருக்காது.
பல்லாயிரக் கணக்கான மனிதர்களில் ஒரு சிலரே என்னை அறிய முயற்சிக்கின்றனர். அவர்களிலும் ஒரு சிலரே என்னை உணர்ந்து கொள்கிறார்கள்.
பூமிராபோரனலோவாயு: கம் மனோ புத்திரேவ ச | அஹங்காரம் இதீயம் மே பின்னா ப்ரக்ருதிரஷ்டதா || (1)
भूमिरापोऽनलोवायु: खं मनो बुद्धिरेव च | अहंकारं इतीयं मे भिन्ना प्रकृतिरष्टदा ||

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் என்ற எட்டும் என் ப்ருக்ருதியே.

பஞ்ச தன்மாத்ரங்கள் என்ற இந்த பஞ்ச பூதங்கள், எண்ணங்களைக் கொண்ட மனது, அறிவு- புத்தி, அஹங்காரம் தான் எனும் உணர்வு.

இவை எட்டும் நானே, அல்லது என்னிலிருந்து தோன்றியவையே.

இதைத்தவிர இன்னொன்று உண்டு. மஹா பாஹோ! அதுவும் என் ப்ரக்ருதியே-இயல்பே.
இதனால் உலகில் உயிர்த் தத்துவம் தோன்றியது, வளர்ந்து நிலைத்து இருக்கிறது.

இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தாயின் கருவிலிருந்து வெளிப்படுவதே என்று அறிந்திருப்பாய். அதன் மூலம்-அடிப்படை நானே. அதன் வளர்ச்சியும், இருப்பும், பின் அழிவதும் என் செயலே.

என்னிலிருந்து மாறுபட்ட பொருள் எதுவுமே அண்ட சராசரங்களிலும் இல்லை. உயர் மணிகளை உள் இருந்து இணைத்து மாலையாக்கும் நூல் அல்லது கயிறு போன்று இந்த சராசரங்களை ஒன்றாக இருக்கும்படி கட்டி வைத்திருக்கிறேன்.

கௌந்தேயா, மேலும் கேள்: நானே
தண்ணிரில் சுவையாக இருப்பவன் , சந்திர சூரியர்களின் ஒளியாக இருப்பவன், வேத மந்திரங்களில் பிரணவமாக, ஆகாயத்தில் ஒலியாக, மனிதர்களில் சக்தியாக,

பூமியில் உள்ள புண்யமான வாசனையாக, நெருப்பில் (விபாவசு) – உஷ்ணமாக, ஒளியாக, உயிர்களில் ஜீவனாக, தவம் செய்பவர்களின் தவமாக,
அழியாத, பரம்பரையான அனைத்திற்கும் தாவர, ஜங்கம – எனும் அசையும் அசையா பொருட்களின் பீஜம் – விதையாக, நான் இருக்கிறேன் என்று அறிந்து கொள். பார்த்தா! புத்திமான் என்பவர்களின் புத்தியாக, தேஜஸ்வி- ஆற்றலுடையவனின் ஆற்றலாக,
பலசாலி என்பவனின் பலமாக, இதிலும் ஆசையோ, ஈடுபாடோ அன்றி இருப்பவன், தர்ம சம்மதமான ஜீவன்களின் காமமாக, இவை தவிர,
பரதர்ஷப, (பரத வம்சத்து அரசர்களுள் காளைக்கு சமமான வீரனே) உலகில் சாத்விகமான பாவங்கள், ராஜஸ, தாமஸ எனும் குணங்கள், இவை என்னிடமிருந்தே பிறந்தவை. என்னிடமிருந்து தோன்றியவை என்பதால் நான் அதனிலும் இருப்பதாக எண்ணாதே. அவை தான் என்னிடம் அடங்கும். நான் குணங்களுக்கு அப்பாற்பட்டவனே.

இந்த உலகை இயக்குவதே இந்த மூன்று குணங்களும் தான். இந்த முக்குணங்களும் தெய்வீகமானவை. அறியாதவர்கள் உலகம் தன்னாலேயே இயங்கும் – இயற்கையில் உள்ள பரிணாம வளர்ச்சியே என்பர். இந்த பரணாம வளர்ச்சிக்கும் ஆதாரமான பர தத்வம் நான் என்பதை உணர்ந்து கொள். அவர்கள் அறிவை மறைப்பதும் மாயையே. என்னையே நம்பி வணங்குபவர்கள் தான் இந்த மாயயை கடந்து செல்வர்.

(மம மாயா துரத்யயா – என் மாயை – அதை சாதாரணமாக கடக்க இயலாது. இதையே தேவி மாஹாத்ம்யம்-

ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஸா | பலாதாக்ருஷ்ய மோஹாய – மஹா மாயா ப்ரயச்சதி || ஞானியேயானாலும் பகவதியான இந்த தேவி. பலவந்தமாக அவர்களின் மனதை அபகரித்து தன் மாயையிடம் கொடுத்து விடுவாள்)

ज्ञानिनामपि चेतांसि देवी भगवती सा | बलादाकृष्य मोहाय महा माया प्रयच्छति ||

அதில் என்ன கஷ்டம், உன்னை நம்பி பயனை அடையலாமே என்றால், அதற்கு பதில் சொல்வது போல பகவான் தொடருகிறார்.
அது அவ்வளவு சுலபமல்ல. அதமன் எனும் படியான பிறவிகள் என்னை வணங்குவதில்லை. அவர்கள் மூடர்களாய் அசுரத் தன்மையை அடைந்து விடுகிறார்கள். யார் இவ்வாறு இருப்பவர்கள் என்று பார்த்தால் துஷ்க்ருதின: – தவறான. பிறருக்குத் துன்பம் விளைவிப்பதான செயல்களை செய்தவர்கள், ஓரளவு ஞானம் உள்ளவர்களும், என்னை அறிவதில்லை. மாயை அவர்கள் ஞானத்தை அபகரித்து விடுகிறது .

சுக்ருதின: – நற்செயல்களை செய்தவர்களும் நான்கு விதமாக என்னை நினைக்கிறார்கள்.

சதுர்விதா பஜந்தே மாம் சுக்ருதினோ அர்ஜுனா | ஆர்த்தொ, ஜிக்ஞாசுர் அர்தார்தி, ஞானி. சைவ பரந்தப||

चतुर्विदा भजन्ते मां सुकृतिनोऽर्जुन | आर्तो जिग्ज्ञासुरथार्ति ज्ञानी चैव परंतप ||

மிகுந்த கஷ்டத்தில் இருப்பவன், புதிதாக அறிந்து கொள்ள விரும்புபவன், கல்வியறிவு பெற விரும்புபவன், கலையோ, தொழிலோ கற்றுத் தேற விரும்புபவன், செல்வம் வேண்டுபவன், கடைசியாக ஞானம் பெற சாதனை செய்பவன்.
16&17. இந்த நால் வகையினருமே உதாரா: – நல்லவர்களே. ஏதோ ஒரு விதத்தில் என்னை ஏற்றுக் கோண்டவர்கள். ஆனாலும், . இவர்களில் ஞானி எனக்கு அதிக நெருக்கமானவன். ஞானியின் சாதனையும், பக்தியும் எனக்கு பிடித்தமானவை. ஞானி நானே என்பதும் காரணம்.

பல பிறவிகளின் முடிவில் ஜனங்கள் என்னை அறிகிறார்கள். அவர்களிலும் எல்லாம் வாசுதேவனே என்ற எண்ணம், நம்பிக்கை ஒரு சிலருக்கே அமைகிறது.
(தான் யார் என்று தன்னை வெளிப் படுத்திக் கொள்வதாக அமைந்த மற்றொரு இடம்.)

அந்தந்த சமயங்களுக்கு ஏற்றாற் போல ஜனங்களின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் மாறுகின்றன. வெவ்வேறுதேவதைகளை வணங்கி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள விழைகிறார்கள். அதற்கான சடங்கு சம்பிரதாயங்களை நியமமாக செய்வார்கள்.
20)&21) ஆனால் அவர்கள் அறியாதது, – யார் யார் எந்த விதமாக நம்பிக்கையுடன் எந்த தெய்வத்தை வணங்குகிறார்களோ, அதற்கான சிரத்தையை நான் அளிக்கிறேன் என்பது. சிரத்தையுடன் செய்வதால், அதற்கான பலனை அடைகிறார்கள். அந்த பலன் என்பதும் என் அருளாலேயே சித்திக்கிறது.

22) இந்த நடவடிக்கைகளும், அதனால் பெறும் பலனும் ஒரு நாள் முடியும். அதை நாடியவர்கள் அல்பமான புத்தியும், ஆசையும் தானே வேண்டினார்கள். தேவதைகளை வேண்டி அதற்குண்டான பலன் பெற்றார்கள். என்னிடம் பக்தியுடையவர்கள் என்னையே அடைவார்கள்.

23) கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ இருந்தவன், அவதாரம் எடுத்து கூடவே இருக்கும் பொழுது என்னை அறியாமல் புத்தியற்றவர்கள், விமர்சிக்கிறார்கள். என்னுடைய பரத் தன்மையை எப்படி அறிவார்கள். நான் அவ்யயன் அழிவற்றவன் என்பதும் இந்த அவதாரம் என் சங்கல்பமே என்பதும் ஞானிகளே அறிவார்கள்.

24) கண்ணெதிரில் காணும் பொழுதும் ஏன் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு பதிலாக, அனைவருக்கும் நான் தென் படுவதில்லை. மூடர்கள். அறிவில்லாதவர்கள். இவர்கள் எதிரில் நான் என் யோக மாயையால் என் பர தத்வத்தை மறைத்துக் கொள்கிறேன்.

25) அர்ஜுனா! நடந்ததும், நடப்பதும், நடக்கப் போவதையும் நான் அறிவேன். என்னை அறிந்தவர்கள் எவருமில்லை.

26) அசை, துவேஷம் நிரம்பியிருக்க, சுக துக்கங்கள் போன்ற இரட்டைகள், தொடர்ந்து அலைக்கழிக்க இது தவிர மோஹம்- இந்த குணங்கள் கண்களை மறைக்க ஜீவன்கள் என்னை மறக்கிறார்கள். திரும்பத் திரும்ப பிறப்பதும், மறைவதுமாக இருப்பதும் அதனால் தான். .

27) ஒரு சிலர் சாதனையால் அடைந்த ஞானம் கை கொடுக்க, நல் வினைகளாலும், மனத் திண்மையாலும், சுகம் துக்கம் போன்ற இடையூறுகளைக் கடந்து, முன் செய்த தீவினைப் பயன் தீர, பக்தியுடன் என்னை பஜிக்கிறார்கள்.

(யேஷாம் அந்த கதம் பாபம் – சிறிது சிறிதாக கரைத்து முடிவில் தீர்ந்தது எனும் கருத்து. பஹூனாம் ஜன்மனாம் அந்தே என்றாரே முன்னால். அதன் படி ஒவ்வொரு பிறவியிலும் நல் வினை செய்து கடந்த கால தீவினையை கழித்துக் கொண்டே வர ஞானம் வந்து இணைந்து கொள்கிறது. தீவினையின் பலன் இனி இல்லை என்பதால். )

28) முதுமை, மரணம் இவற்றிலிருந்து விடுபட சிலர் என்னை பஜிக்கிறார்கள். அதன் பலனாக , அவர்கள், ப்ரும்மம் என்பதையும், தன் ஆத்மா, பரமாத்மா என்பவைகளையும். அத்யாத்மா, கர்மா- கடமை என்பதன் முழு பரிமாணத்தையும் அறிந்து கொள்வார்கள்.

அவர்கள் என்னை (ஸ) அதி பூதம், (ஸ) அதி தைவம். (ஸ)அதி யக்ஞம் – பௌதிக உலகில் இருக்கும் என்னையும், தெய்வீகமாக என் நிலையையும், யாக கர்மாவில் என் ரூபத்தையும் தெரிந்து கொள்கிறார்கள். உடலைத் துறந்து செல்லும் அந்திம காலத்திலும் என்னை அதே போல நினைவில் இருத்திக் கொள்கிறார்கள்.

(ஸ என்ற பகுதி உடன் எனும் பொருளில் வரும். பௌதிகத்துடன் கூடிய எனலாம்.)

(இது வரை, உபநிஷதான் ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்தையின், யோக சாஸ்த்ரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், ஞான விக்ஞான யோகம் என்ற ஏழாவது அத்தியாயம்)

அத்யாயம் -8 அக்ஷர ப்ரும்ம யோகம்

சென்ற அத்யாயத்தில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் நிறைய விஷயங்கள் சொன்னார். அர்ஜுனனுக்கு சந்தேகமும் நிறையவே – சரமாரியாக கேட்கிறான்.

கிம் தத் ப்ரம்ம ? கிம் அத்யாத்மம் ? கிம் கர்ம? அதிபூதம் ச கிம்? அதிதைவம் கிமுச்யதே ? அதி யக்ஞம் கதம்? ப்ரயாணகாலே ச கதம் க்ஞேயோ (அ) ஸி?

किं तद्ब्रह्न ? किं अध्यात्मं ?किं कर्म ?अधिभूतं च किं? अधि दैवं किमुच्यते ?

अधि यज्ञं कथं ? प्रयाण काले च कथं ज्ञेयोऽसि ?

ஏழு கேள்விகள். பகவானும் சளைக்காமல் அதே போல பதில் சொல்கிறார்.

1.அக்ஷரம் பரம் ப்ரும்ம 2. ஸ்வபாவம் என்ற இயல்பு தான் அத்யாத்மம் 3. பூத -பாவோத்பவ கரோ – உயிர்கள் தோன்ற காரணமாக இருக்கும் பீஜம் அல்லது விதை – முளைப்பது முதல், உலகில் நடக்கும் யாக யக்ஞாதி செயல்கள் கர்மம் என்பதில் அடங்கும்.

அதி பூதம் என்பது பௌதிகமான உடல் அழியக் கூடியது. 5. புருஷன்- ஆத்மா என்பது அழியாதது. அது தான் அதி தைவம் .6. மனித உடலில் அதி யக்ஞம் என்பது நானே. 7. மரணத் தறுவாயில் என்னை எப்படி அறிவது என்பதையும் சொல்கிறேன்.
சங்கர பாஷ்யம்: அதி பூதம் என்ற உடல் அழியக் கூடிய வஸ்துக்களால் ஆனது. சிருஷ்டியில் அனைத்து உயிரினங்களும் இதில் அடங்கும்.

புருஷ – என்ற சொல் – அதன் பொருள் படி – நிரப்பும் ஒரு வஸ்து – எது ஒன்று உலகை நிறைவாக செய்கிறதோ – (ப்ரு என்ற தாது – நிரப்புதல்) பௌதிகமாக உண்டான உடலை நிரப்பும் வஸ்து- ஆத்மா – ஹிரண்ய கர்ப எனப்படும், சூரிய ஒளியில் இருப்பவன், பரமாத்மா, ஒவ்வொரு உயிருக்கும் சக்தியை அளிப்பவன். புலன்கள் வேலை செய்வதும் இதன் தூண்டுதலால், அனைத்து ஜீவன்களிலும் உயிரை உடலில் நிலை நிறுத்தி காப்பவன், யாக புருஷன் எனப்படும் விஷ்ணு. வெளி உலகில் யாக கர்மாக்கள் என்றால், உடல் இயங்குவதே ஒரு யாகம், அதன் கர்த்தாவும் விஷ்ணுவே- அதாவது நானே.

தன் இறுதி காலத்தில், மரணத் தறுவாயில் என்னை நினைத்து உயிரை விடுபவன் என்னை அடைகிறான். இறுதி காலத்தில் எதைநினைத்து. எந்த மனோ பாவத்துடன் இறக்கிறானோ அதை, அந்த பாவத்தை மறு பிறவியில் அடைகிறான்.
அதனால் அர்ஜுனா! எப்பொழுதும் என் நினைவாகவே இரு. இறுதிக் காலம் எப்பொழுது வரும் என்பது தெரியாது. அதனால் சதா சர்வ காலமும் மனதில் என் நினைவாகவே இரு. என்னிடம் உன் மனம், புத்தி இவைகளைசமர்ப்பித்து விடு. என்னையே வந்தடைவாய்.
அது எப்படி முடியும்? எப்பொழுதும் நினைக்க முடியுமா? மற்ற எண்ணங்கள் வராதா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது போல அடுத்த ஸ்லோகம்.
அர்ஜுனா! யோக சாதனைகளை ஒரே முனைப்புடன் செய்து பழகிக் கொள். மனதை அலைபாய விடாமல் கட்டுப்படுத்து. திரும்பத் திரும்ப நினைத்து மனதில் உருவேற்றிக் கொள். திவ்யமான பரப்ரும்மத்தை அடைவாய்.
ச.பா: தியானம் என்பது அதுவே. பயிற்சி – ஒரே குறிக்கோளுடன் திரும்பத் திரும்ப செய்து மனதில் இருத்திக் கொள்வதே யோகம். யோகியானவன் குருவிடம் கற்றதை, சாஸ்திரங்களில் படித்துத் தெரிந்து கொண்டதை இடை விடாமல் மனனம் செய்து வருவான். தன் யோக சக்தியால், அழிவில்லாத பெரும் சக்தியும், சூரியனின் ஆதிக்கத்துக்குள் வரும் பேரண்டத்தின் மூல புருஷணுமான (என்னை) அடைகிறான்.

9.&10. புருஷன் என்ற சொல் முன்பு சொன்னதையே மேலும் விவரிக்கிறார்.

கவிம் புராணமனுசாஸிதாரம் அணோரணீயாம்சம் அனுஸ்மரேத் ய:|

சர்வஸ்ய தாதாரமசிந்த்ய ரூபம் ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத் ||

ப்ரயாண காலே மனஸாசலேன பக்த்யா யுக்தோ யோக பலேன சைவ |

ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஸ்ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம்||

कविं पुराणमनुशासितारं अणोरणीयांशं अनुस्मरेद्य: | सर्वस्य दातारमचिन्त्य रूपं आदित्य वर्णं तमस: परस्तात् ||

प्रयाण काले मनसाचलेन भक्त्या युक्तो योग बलेन चैव | भ्रुवोर्मध्ये प्राणमावेश्य संयक् स तं परं पुरुषमुपैति दिव्यम् ||

கவி- இந்த பதத்திற்கு பல பொருள்கள் உண்டு. இந்த இடத்தில் குரு. கட்டளையிடுபவன்- உலகில் அசையும் அசையா பொருட்கள் அனைத்தும் எங்கு எப்படி எந்த உருவத்தில் இருக்க வேண்டும் என்பது வரை ஆணையிட்டு நடத்துபவன், அணுவிலும், அணுவாக இருப்பவன், நினைத்து பார்க்க முடியாத அத்புதமான ரூபம், வேண்டிய அனைத்தையும் தருபவன், ஆதித்யன் போன்ற நிறம், இருட்டு அல்லது அறியாமை நெருங்க முடியாதா பெரும் ஜோதி.

இவனை அருகில் இருப்பது போல எண்ணி, தன் வாழ்வின் இறுதி காலத்தில் நினைக்க வேண்டும். பக்தியுடன், யோக பலமும் சேர, புருவங்களின் இடையில் ப்ராணனை நிறுத்தி, (யோகம்) நல்ல முறையில் கற்றதை நினைவு கூர்ந்து ப்ராணத் தியாகம் செய்பவன் அந்த பர புருஷனை சென்றடைகிறான்.

எந்த அக்ஷரத்தை – ஓம் எனும் ப்ரணவாக்ஷரம் –அல்லது அழிவில்லாத பரம் பொருள், வேதம் அறிந்தவர்கள் ஓதிக் கொண்டே இருக்கிறார்களோ, ஆசைகளை அடக்கி தவம் செய்த யதிகள் எதனுள் ஐக்கியமாகிறார்களோ, எதை விரும்பி ப்ரும்மசர்யம் – ப்ரும்மத்தை அடைய சாதனைகள் செய்கிறார்களோ- அந்த பதவியை சுருக்கமாக சொல்கிறேன் கேள்.
12 &13. புலன் களின் வாயிலை அடைத்து- புலன் களை கட்டுப்படுத்தி, ஹ்ருதயத்தில் மனதை நிறுத்தி, உச்சந் தலையில் ப்ராணனைக் கொண்டு சென்று, யோக தாரணை என்பதை செய்து கொண்டு, என்னை மனதில் நினைத்தபடி, ப்ரும்மமேயான ஓம் எனும் ஒரு அக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு, பிராணனை விடுபவன் பர கதியை அடைகிறான்.

நித்யம் சாதனைகள் செய்து யோகியானவன், மாற்று கருத்து எதுவுமின்றி, என்னை நம்புபவன், என்னையே சகலமும் என்று நினைத்திருப்பவன் யாரானாலும் அவனுக்கு நான் சுலபமாக காணக் கிடைப்பேன்.
என்னை அடைந்தவன், நிலையற்ற, துக்கம் நிறைந்த இந்த உலகில் மறு முறை பிறவி எடுக்க மாட்டான். அவன் மஹாத்மா எனப்படுபவன். எந்த துக்கமும் அவனை அண்டாது. உயர்ந்த நிலையான சம்சித்தியை அடைவான்.

ப்ரும்மா முதலான உலகில் அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பிறப்பும் இறப்பும் ஒரு சுழற்சியாக தொடர்ந்து வருவது. என்னை அடைந்தவன் இந்த சுழலிலிருந்து விடுபடுகிறான்.

17.. ஆயிரம் யுகங்கள் பகலும், ஆயிரம் யுகங்கள் இரவுமாக ப்ரும்மாவின் ஒரு நாள். அவரது இரவின் முடிவில் யுகாந்தம் – ஒரு யுகம் முடிவடையும்.

கணிதம் அறிந்தவர்களின் கணக்கு இது. இதை எப்படி கணக்கிடுவது.

இரவில் மறைந்திருக்கும் அனைத்தும் பகலில் தென்படும். மறுபடியும் இரவில் மறைந்து பகலில் வெளிப்படும். இதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

அவ்யக்தாத் வ்யக்த்ய: சர்வா: ப்ரபவந்த்யஹராகமே |

ராத்ரியாகமே ப்ரலீயந்தே த த்ரைவ (அ)வ்யக்த சஞ்ஞகே ||

अव्यक्तात् व्यक्तय: सर्वा: प्रभवन्त्यहरागमे | रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्त सज्ञके ||

சங்கர பாஷ்யம்:

ப்ரும்மா – ப்ரஜாபதி. சிருஷ்டிகர்த்தா எனப்படுபவர். அவருடைய இரவில் அவர் தூங்கும் நேரம், மறைந்திருக்கும் சராசரம், அசையும் அசையா பொருட்கள், பகலானதும் தெளிவாக வெளி வரும்

அனைத்தும் என்றால்,

சாஸ்திரங்கள், பந்தம் என்றும் விடுதலை என்றும் சம்சாரத்தை சொல்வதன் பொருள் இதன் மூலம் மறுக்கப்படுகிறதே- அனைத்தும் ப்ரும்மாவின் நித்ரையுடன் மறையும், அனைத்தும் அவரது விழிப்புடன் அதே போல தோன்றும் என்றால், சம்சார பந்தம் என்பது என்ன? உலகில் இருக்கும்வரை செய்த நல்வினை, தீவினை இவைகளுக்கு எந்தவித பலாபலனும் இல்லை என்றாகிறதே – இந்த கேள்விக்கு பதில் சொல்வது போல அடுத்த ஸ்லோகம்:

இது தான் சக்கரம் சுழலுவது போல சுழன்று கொண்டேயிருக்கும் – பலவிதமான உயிரினங்கள், தாவரங்கள், ஒட்டு மொத்தமாக மறைவதும் பின் தோன்றுவதுமாக இருக்கின்றன.

ச. பா: இதில் அந்த ஜீவன்களின் விருப்பமோ, வெறுப்போ பொருட்டல்ல. இது ஒரு நியதி. இதிலிருந்தும் யோகி விடுபடுகிறான் என்பது தாத்பர்யம்.

20.. இந்த சுழற்சியில் அகப்படாமல், சனாதனமான ஒரு பரம்பொருள் உண்டு. அவ்யக்தமோ, வ்யக்தமோ, பாதிக்கப் படாமல் மற்ற அனைத்தும் அழியும் பொழுதும் தான் அழிவதில்லை.

புலன் களுக்கு புலப்படாத அந்த பரம் பொருளைத் தான் அக்ஷர என்கிறார்கள். க்ஷர – குறையக் கூடியது, அக்ஷர – என்றும் நிறைவானது. அழிவற்றது – எதை அடைந்தபின் திரும்பி வருவதில்லையோ அந்த ஒளி மயமான இடம் தான் என்னுடையது.

22) மாற்று எண்ணமில்லாத பக்தியால் அந்த பர தத்வத்தை, புருஷன் என்றும் பரம் பொருள் என்றும் போற்றப் படும் பரமாத்மாவை உணரலாம். அண்ட சராசரங்களும் அதனுள் அடக்கம். இவற்றை உருவாக்கியதும் அதுவே.

23 & 25) யோகிகள் ப்ராணத்யாகம் செய்வதற்கும் சில வரை முறைகள் உள்ளன. அது பற்றி சொல்கிறேன் கேள்.

உத்தராயணம் என்பது ஆறுமாதங்கள், அந்த சமயம் பகல் நேரம் அதிகம். அதில் சுக்ல பக்ஷம், பகல் நேரம் உயிரை விடுபவன், ப்ரும்ம லோகத்தை அடைகிறான் என்று ப்ரும்மத்தைப் பற்றி அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

புகை மண்டி இருப்பது போல் சூரிய ஒளி குறைந்த சமயம், இரவு நேரம் அதிகமாக இருக்கும் தக்ஷிணாயணம். அதில், க்ருஷ்ண பக்ஷம், இரவு நேரத்தில், சந்திரனின் ஒளியில் உயிர் துறப்பவன் திரும்பி வருகிறான், மறு பிறவியை அடைகிறான்.

சுக்ல பக்ஷம் அதாவது வளர்பிறை, க்ருஷ்ணபக்ஷம் – தேய்பிறை என்பது சந்திரனின் கதியை வைத்து உருவான கால அளவுகள். சாஸ்வதமானது. மாற்றமில்லாத இயற்கையின் நியதி. இதன் வளர் பிறையில் மறைந்தவன் திரும்பி வருவதில்லை, தேய்பிறையில் சென்றவன் திரும்பி பூமியில் பிறக்கிறான். தியானம் செய்து யோகியானவர்கள் இந்த உண்மையை அறிவார்கள். அர்ஜுனா! தியானம் செய். யோகியாவதே உனக்கு நன்மை.
ச.பா: இவற்றை தேவ யானம், பிதுர் யானம் என்றும் அழைப்பர். யானம்- வாகனம். தேவ யானத்தில் செல்பவன் தெய்வ லோகமான ப்ரும்ம லோகத்தையும், பிதுர் யானத்தில் செல்பவன் பித்ருக்கள்- முன்னோர்கள் உலகம் – சென்றடைகிறார்கள். தேவ லோகம் போகும் வழி ப்ரகாசமாக – ஞான மார்கம் ப்ரகாசமாக உருவகப் படுத்தப் படுகிறது – இருக்க பிதுர் மார்கம் – ஒளியின்றி காணப்படும். காரணம் இங்கு ஞானம் ப்ரதானமாக இல்லை.

வேதங்களில், யாக கர்மாக்களில், தானம் முதலான நல்ல காரியங்களில், புண்யம் என்று எதைச் சொல்கிறோமோ, அவற்றை, தியானம் செய்து யோகியானவனும் அடைகிறான்.
வேதத்தை முறையாக கற்றுத் தேர்ந்தவன், யாக கர்மாக்களை சாஸ்திர விதிப்படி சிரத்தையாக செய்பவன், பாத்திரம் அறிந்து தானம் செய்பவன் இவர்கள் உலகில் சிறந்தவர்களாக கருதப் படுகிறார்கள். தியானம் செய்து தன்னையே உயர்த்திக் கொண்டு ப்ரும்ம ஞானம் அடைந்தவனும் இவர்களுக்கு தாழ்ந்தவனல்ல.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதை என்ற ப்ரும்ம வித்யையில், யோக சாஸ்திரம் என்ற பகுதியில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் அக்ஷர ப்ரும்ம யோகம் என்ற எட்டாவது அத்யாயம்.)

Scroll to Top