You cannot copy content of this page

நன்மை தரும் சூக்தங்கள்

நன்மை தரும் சூக்தங்கள்!

(செல்வம், ஆரோக்கியம், மன அமைதி, நீண்ட ஆயுள் பெற வழி!)

ஒருவன் இந்த உலகில் இப்பிறவியில் அனுபவிக்கும் சுகத்திற்கும் துக்கத்திற்கும் அவனது கர்ம வினைகளே காரணம் என்று நமது வேதங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன. “உனது உயர்வுக்கும் தாழ்வுக்கும் நீயே காரணம். ஆகவே உன்னை நீயே உயர்த்திக் கொள்” என்கிறார் கிருஷ்ணர். இந்த ஜன்மத்தில் விதிவசத்தால் தாழ்நிலையில் இருப்பவர்களுக்கு, ‘அப்படியெனில் எனக்கு உய்வே கிடையதா? தரித்திரனாக, படிக்க முடியாதவனாக, ஆரோக்கியம் குன்றியவனாக, மன அமைதியற்று இந்த ஜன்மம், பூராவும் இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. இதை மனதில் கருதி ரிஷிகளும் ஞானிகளும் வைதிக சூக்தங்கள் பலவற்றை அருளியுள்ளனர். தீர்க்க முடியாத சில கர்ம வினைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர ஏனையவற்றை சூக்தங்களை ஓதி அல்லது ஓதுவித்து கஷ்டங்களைத் தீர்த்து இப்பூவுலக வாழ்வை பரிபூரணமாக, ஆனந்தமாக அனுபவித்துக் கடைத் தேறலாம் என்பது வேதங்களின் தீர்ப்பு. இந்த வகையில் ஒவ்வொரு கஷ்டத்திற்கும் நிவாரணம் பெற ஒரு சூக்தம் உண்டு. இதை நன்கு ஓதி உணர்ந்தவர்களை அணுகி அவர்கள் மூலமாக பரிகாரம் தேட வழி வகை செய்திருப்பதே வைதீக மதத்தின் தனிச்சிறப்பு.

சூக்தங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றையும் அதன் சிறப்பும்: ஆயுளை நீடிக்க ஆயுஷ்ய சூக்தம், இறைவனை அறிய வழிகாட்டும் ஹிரண்ய கர்ப்ப சூக்தம், விஷ்ணுவைத் துதிக்கும் விஷ்ணு சூக்தம், கருத்துச் செறிவு மிக்க மிகப் பிரபலமான, மந்திர ஆற்றல் பெற்ற புருஷ சூக்தம், நல்லன எங்கிருந்தாலும் வரட்டும் என்று வரவேற்கும் ஆநோபத்ரா சூக்தம், அறிவை வளர்க்கும் சரஸ்வதி சூக்தம், நாராயணனைத் துதிக்கும் நாராயண சூக்தம், பாவத்தை போக்க வருணனை வேண்டும் அகமர்ஷண சூக்தம், பிராணனைப் போற்றும் ப்ராண சூக்தம், சகல வியாதிகளையும் போக்கும், உதவத் துடிக்கும் தேவதைகளான அஸ்வினி தேவதைகளை அழைக்கும் அஸ்வினி சூக்தம், நக்ஷத்திர அடிப்படையில் நலனை வேண்டி அவற்றைப் பெற நக்ஷத்ர சூக்தம் என்று சூக்தங்களுக்கு முடிவே இல்லை.

ஒவ்வொன்றும் (காரண்டியாக) நன்மை தரும் என்பதற்குப் பல்லாயிரக்கணக்கில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இவற்றை ஓதி அனுஷ்டித்துப் பலனைப் பெற்ற நம் முன்னோர்களே சாட்சி. முதல் படியாக இவற்றை அறிய வேண்டும்; பின்னர் இதை முறையாக ஓதும் வேத பிராமணர்களை அணுகி அவர்களிடம் உரிய அறிவுரை பெற வேண்டும். காப்பிக்கும், அன்றாட வாழ்க்கை நடத்த இன்றைய நாளில் ஊழலுக்கெனவே நாம் தரும் ‘கட்டிய பணத்திற்கும்’, இதர தேவையற்ற ஹோட்டல் ஆகியவற்றிற்காக ஆகும் செலவிற்கும் ஆகும் பணத்தை ஒப்பிட்டால் அதில் பல நூறு பங்கில் ஒரு சிறிது பங்கே இந்த ஓதலுக்கு நாம் செலவிடும் தொகையாக அமையும். நாம் தரும் பணத்திற்கு ஈடாகப் பெறும் பலனோ பெரிது.

 1. ஸ்ரீசூக்தம்: ஹிரண்ய வர்ணாம்…. என்று ஆரம்பிக்கும் சூக்தம் இது, வேதங்களிலும் புராணங்களிலும் காணப்படும் மஹாலக்ஷ்மியின் பல்வேறு துதிகளின் தொகுப்பே இது. இதனைப் பாராயணம் செய்வதன் மூலம் அளப்பரிய செல்வ வளத்தைப் பெறலாம். அனு தினமும் பல பக்தர்கள் ஓதும் சூக்தம் இதுவே.
 2. அக்னி சூக்தம்: அக்னியை வேதங்கள் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான ஒன்றாகப் புகழ்கிறது. பிரஜைகளின் உற்பத்தி, மனிதர்களின் பலம், வீர்யம் ஆகியவை அக்னியினாலேயே உருவாகிறது. அக்னியே அனைத்தும். ரிக்வேதத்தின் முதல் பாடலாக அமையும் இந்த சூக்தம் அக்னி மீளே…. என்று துவங்குகிறது. எளிதில் அணுகத்தக்க அக்னியால் புகழும் ஒளியும் பெருகும் (யசஸம், வீரவத் தமம், புகழை வளர்ப்பது, மனித குலத்தை வளர்ப்பது)
 3. வைஸ்வானர சூக்தம்: வேதங்களில் வைஸ்வானர அக்னியின் புகழ் எல்லையற்றதாக வர்ணிக்கப்படுகிறது. ஆனந்தம் தருபவன், சுவர்ணமய ரதம் கொண்டிருப்பவன், ஜலத்தில் வசிப்பவன், சர்வக்ஞன், சர்வ வியாபி, அனைவரிடமும் இருப்பவன். வைஸ்வானரோ …. என்று இந்த சூக்தம் ஆரம்பிக்கும். நல்ல ஆரோக்கியம், வாழ்நாள் முழுவதும் நிலைபெறவும், மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைவது வைஸ்வானர சூக்தமே. குறிப்பாக ஜீரண சம்பந்தமான வியாதிகளைக் கொண்டிருப்போர் நாட வேண்டியது இந்த சூக்தம்.
 4. கர்ப்ப சூக்தம்: கர்போஸ்ய …. என்று ஆரம்பிக்கும் இந்த சூக்தம் கர்ப்பகம் உற்பத்தியாகவும், கர்ப்பரக்ஷைக்காகவும், கர்ப்பம் உரிய விதத்தில் வளர்ச்சியுறவும் ஒதப்படுகிறது.
 5. நவக்ரஹ சூக்தம்: ஆஸத்யேன ரஜஸா வர்த்த மானோ… என்ற சூர்ய மந்திரத்துடன் ஆரம்பிக்கிறது இந்த சூக்தம். நவகிரகங்கள் அசுப பலன்களைத் தரும் விதத்தில ஒருவருக்கு அமைந்திருந்தால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளை அகற்ற நவகிரகங்களையும் பிரார்த்திக்கும் அற்புத சூக்தம் இது.
 6. மேதா சூக்தம்: யச்சந்தஸாம்… என்று ஆரம்பிக்கும் சூக்தம் இது. விஞ்ஞான உலகில் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் உள்ளூணர்வின் தூண்டுதலினாலேயே அமைகிறது. இந்த உள்ளுணர்வை நல்ல விதமாக ஆக்கவும் தூண்டி விடவும் ஓதப்படும் அற்புத சூக்தம் இது. உள்ளுணர்வு மேதா தேவியாக வர்ணிக்கப்படுகிறாள். தேவியின் அருள் பெற்றவன் ரிஷி ஆகிறான். பிரம்ம ஞானி ஆகிறான், செல்வந்தன் ஆகிறான், சிறந்த ஐஸ்வர்யங்களை அடைகிறான் என்று வர்ணிக்கும் இந்த மந்திரத்தின் மூலம் என்னென்ன பலன்களை நாம் அடைய முடியும் என்பதை எளிதில் ஊகித்து உணரலாம்.
 7. ச்ரத்தா சூக்தம்: சிரத்தை இல்லாமல் எதுவும் இல்லை; எந்த வெற்றியும் இல்லை. யமனிடம் நசிகேதன் யாருமே அறிய முடியாத ரகசியத்தை அடைந்ததற்குக் காரணமே அவனது சிரத்தைதான். வாழ்வின் நல்ல காரியங்களுக்கு அஸ்திவாரமாக அமைவது சிரத்தையே. இந்த சூக்தம் ச்ரத்தயாக்னி சமித்யதே…. என்று ஆரம்பிக்கிறது. சிரத்தையை நாடி அதன் மூலம் வெற்றிக்கு வழி கோலுவோர் ஓத வேண்டிய சூக்தம் இது.
 8. சங்கல்ப சூக்தம்: ஹிந்து மதத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் துவங்குவதற்கு முன்னர் சங்கல்பம் செய்வது இயல்பு. எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்கத் தேவை திட சங்கல்பம் அதை நமக்கு அருளுமாறு வேண்டவே இந்த சங்கல்ப சூக்தம், வீடு, பணி புரியும் இடம் உள்ளிட்டவற்றில் காரியம் துவங்கும் முன்னர் இது ஓதப்படுகிறது.
 9. தேவி சூக்தம்: எல்லையற்ற மஹிமையை உடைய தேவியின் அருளைப் பெற பல்லாயிரக்கணக்கானோரால் பாதமெங்கும் அனு தினமும் ஒதப்படும் அற்புத சூக்தம் இது. அஹம் ருத்ரேபிர்… என்று இது ஆரம்பிக்கும். இதை இயற்றியவர் ஒரு பெண் ரிஷி அம்ப்ருணர் என்ற ரிஷியின் மகளான வாக் என்பவர் கண்ட சூக்தம் இது. சகல நலன்களையும் தேவியின் அருளையும் அடைய உகந்த சூக்தம் இது.
 10. சூர்ய சூக்தம்: ரிக் வேதத்தில் வரும் அற்புத சூரியத் துதி இது. நமோ மித்ரஸ்ய…. என்று இது ஆரம்பிக்கும். சூரியனே எல்லாம்! புகழ், ஒளி, படிப்பு, செல்வம், நீண்ட ஆயுள், தீராத வியாதிகள் எல்லாம் தீர்ந்து பரிபூரண ஆரோக்கியம் பெறுதல், கணவன், மனைவி ஒற்றுமை உள்ளிட்ட அனைத்தையும் தரும் பிரத்யக்ஷ பகவான் சூரியனே. அனைத்து நலனையும் ஒருங்கே பெறச் சொல்ல வேண்டிய சூக்தம் சூரிய சூக்தம்.
 11. துர்க்கா சூக்தம்: மிகவும் சக்தி வாய்ந்த இந்த சூக்தம் தைத்திரிய ஆரண் யகத்தில் இடம் பெறும் ஒன்று. வாழ்க்கையில் வரும் எந்தக் கஷ்டத்தையும் அகற்றும். எதிரிகள் ஒழிவர். யுத்தத்தில் ஜெயம் நிச்சயம். பாரத பாகிஸ்தான் போரில் நாம் ஓதிய சூக்தம் இதுவே. எந்தக் காரியத்திலும் வெற்றி நிச்சயம், ஜாத வேதஸே … என்று ஆரம்பிக்கும் இது பரவலாக பல்லாயிரக்கணக்கானோரால் தொன்று தொட்டு இன்று வரை ஒதப்பட்டு வருகிறது.
 12. நாஸதீய சூக்தம்: விஞ்ஞானிகளே வியக்கும் சூக்தம் இது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பேயே இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் பிக்பேங் தியரியை விட உன்னதமான பிரபஞ்ச தோற்றம் பற்றிய கொள்கையை விளக்கும் சூக்தம் இது. ரிஷி பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் அதன் தலைவனையும் பற்றி வியந்து கூறும் அபூர்வ சூக்தம் இது. விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவருக்குமான இந்த சூக்தம் இயற்கை இரகசியங்களை அறியத் துடிப்போர் ஓத வேண்டிய ஒன்றாகும்.
 13. ஸம்வனன சூக்தம்: இது சமுதாயத்தின் மொத்த நலனுக்கான சூக்தம். அனைவராலும் சமுதாய நலனைக் கருதி ஓதப்பட வேண்டிய ஒன்று. ரிக் வேதத்தில் இடம் பெறும் இது ஸ்ம்ஸமித்யுவஸே… என்று ஆரம்பிக்கும். அனைவரின் பிரார்த்தனையும் ஒத்த கருத்துடன் அமையட்டும் என்ற இந்த வேத பிரார்த்தனை இன்றைய அமைதியற்ற உலகில் மிகவும் தேவைப்படும் ஒன்று. வேதம் உலகளாவிய விதத்தில் அனைவரது நலனையும் வேண்டுகிறது என்பதை நிரூபிக்கும் சூக்தம் இது.
 14. சாந்தி சூக்தம்: அதர்வண வேதத்தில் இடம் பெறும் இது, மகத்தான சாந்தி மந்திரம்… சாந்தா த்யௌ.. என்று ஆரம்பிக்கும் இது ‘நல்லன ஓங்கட்டும், தீயன விலகட்டும் ’ என்ற உயர்ந்த சிந்தனையை முன் வைக்கிறது. பொதுவாக சாந்தி சூக்தம், ஓதலின் முடிவில் இறுதியாகச் சொல்லப்படுகிறது.
Scroll to Top