தமிழர் திருநாள் பொங்கல்
தை மாதம் முதல் தேதியன்று, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
தை மாதத்தைத் தமிழர்கள் மங்கள மாதம் என்றும் போற்றுகின்றனர். அதிகாலையில் பிரம்மாவாகவும், மதிய வேளையில் சிவனாகவும், மாலையில் விஷ்ணுவாகவும், மும்மூர்த்தி ஸ்வரூபமாக விளங்கும் சூரிய பகவானை இந்நாளில் வணங்குவதே தைப்பொங்கல்.
பொங்கல் விழாவைத் தமிழர் அனைவரும் சமயங்களைக் கடந்து கொண்டாடுகின்றனர்.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பழமொழி. தை முதல் தேதியில் உழவுக்கு உதவியாய் இருந்த இயற்கைக்கு நன்றி சொல்லும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாளில் தான் தை மாதம் பிறக்கிறது. இதிலிருந்து உத்திராயன காலம் ஆரம்பமாகிறது. இந்தப் புண்ணிய காலத்தில் பொங்கல் வழிபாடு செய்வதால் வருடம் முழுவதும் நன்மையான பலன்களை பெறலாம்.
இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது.
மகரம் என்றால் சூரியன் என்று பொருள். எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.
உழவர் திருநாள்
உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாபொங்கல் விழா.
பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது.
போகி
பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.
பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். இதை ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம்.
தைப்பொங்கல்
தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் நாளன்று சூரியன் உதிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே துயிலெழுந்து, குளித்து முடித்து விட்டு வீட்டின் முற்றத்தில் நீர் தெளித்து கோலமிட வேண்டும். பின்பு முற்றத்தின் ஒரு பகுதியை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு, காவி நிறம் பூச வேண்டும்.
முற்றப் பகுதியை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் மலர்களால் அலங்கரித்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பின்னர் குத்து விளக்கேற்றி, பூரண கும்பம் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், பனங்கிழங்கு முதலிய மங்கல பொருட்களையும் வைக்க வேண்டும்.
முதலில் விநாயகர் பெருமானை மனதில் நினைத்து வழிபட்டு, குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை பிரார்த்தனை செய்த பின்பு, ஒரு புது மண்பானையை எடுத்து அதன் வாய்ப்புறத்தில் மஞ்சள் இலை மற்றும் மாவிலைகளை கட்ட வேண்டும். அந்த மண்பானையின் மேற்புறத்தில் திருநீறை குழைத்து, 3 இடங்களில் பூசி, சந்தனம், குங்குமத்தால் திலகமிட வேண்டும்.
பானைக்குள் பசும்பால் மற்றும் தண்ணீர் விட்டு நிரப்பி, தூபங்கள் கொளுத்தி, தீபம் காட்டி, கற்பூர ஆரத்தி காட்டி அந்த கற்பூர நெருப்பை அடுப்பில் போட்டு நெருப்பு வைக்க வேண்டும்.
சூரிய பகவான் மற்றும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி பானையைத் தூக்கி அடுப்பில் வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என்று குரல் எழுப்பியவாறே பச்சரிசியை இருகைகளாலும் அள்ளி சூரிய பகவானை வணங்கியபடி பானையை 3 முறை சுற்றி பானையில் போட வேண்டும்.
பொங்கல் பொங்கி வரும்போது அனைவரும் கூடி
“பொங்கலோ பொங்கல்!பொங்கலோ பொங்கல்!”
என குலவையிட்டு நன்றி பொங்க சூரியனை வழிபடவேண்டும்.
“பொங்கலோ பொங்கல்!”
என்னும் வரிகளை ஔவையார் பாடியுள்ளார்.
சூரியனுக்குப் படையலிட பொங்கலுடன் வெற்றிலை, பாக்கு, தேங்காய் மற்றும் முக்கனிகளுடன், இஞ்சி, மஞ்சள், கரும்பு, அருகம்புல், பூசணி, பனங்கிழங்கு முதலியன முதன்மையானவை ஆகும்.
சூரியனுக்குப் படையல்:
கதிரவனுக்குப் பொங்கலை தலைவாழை இலையில் இட்டு பழம், கரும்பு முதலியவற்றை கொண்டு வணங்கி, தூபதீபம் காட்டி குலதெய்வத்தையும், முன்னோர்களையும் சூரியனையும் போற்றி வணங்கிய பின் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் கூடி மகிழ்ந்து உண்ண வேண்டும்.
மாட்டுப் பொங்கல்:
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப் படும் பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படு கிறது.
மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கும், உழவுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைக்கும் நன்றி தெரிவிப்பதற்காக இதை வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை நம் தாயாகவும் தெய்வமாகவும் வணங்கி வழிபடும் நாளாகவும் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
மாட்டுப் பொங்கலன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
காணும் பொங்கல்
இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.
காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணப்பொங்கல் என்றும் அழைப்பார்கள்.
பெரியோர்களை, நண்பர்களை, உறவினர்களை அவர் தம் இல்லம் சென்று கண்டு மகிழ்தலே காணும் பொங்கல்.
இந்நாளில் இளம் பெண்களின் கோலாட்டம், கும்மி முதலானவை இடம்பெறும். உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் எனப் பல்வேறு வீரப் போட்டிகள் இடம்பெறும்.
ஏறுதழுவுதல்:
மாட்டுப் பொங்கலைத் தொடர்ந்து எருதுவிடும் திருவிழா நடைபெறும். இவ்விழா மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு எனவும், தமிழ்நாடு வட மாவட்டங்களில் எருதுகட்டு எனவும் வழங்கப்பட்டுத் தொன்றுதொட்டு மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்ற விழாவாக திகழ்கிறது.
ஏறுதழுவுதல் பற்றிய சங்க இலக்கியம்:
முல்லை நில மகளிரை மணக்க விரும்புவோர், அவளுக்காக வளர்க்கப்பட்ட காளையை அடக்குவர். அதை அடக்கியவர்க்கே அப்பெண்ணை மணம்முடித்து வைப்பர்.
காளைக்குப் பயந்து பின்வாங்கும் ஆண்களை பெண்கள் மணக்கமாட்டர்கள்.
ஏறுதழுவுதல் பற்றி சங்க இலக்கியங்கள் உணர்த்துகிறது. எட்டுத்தொகை நூலில் ஒன்றான கலித்தொகையில்,ஒரு பிரிவான “முல்லைக்கலி” உள்ளது. அதில் காளையின் கொம்புகளுக்குப் பயந்தவனை மறு பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டார்களாம்.
இதை
“கொல்லேற்றுக் கோடு அஞ்சு
வானை மறுமனையும்
புல்லாளே ஆய மகள்”
என்கிறது கலித்தொகை.
சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
தமிழ் இணையக் கல்விக்கழகம்-செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி- ஆறாம் படலம் – மூன்றாம் பாகம் – பக்கம் -140,141
