You cannot copy content of this page

ஸ்ரீ மகாவிஷ்ணு வழிபாடு

ஸ்ரீ மகாவிஷ்ணு வழிபாடு

இந்து மதத்தில் முப்பெரும் கடவுள்கள் மும்மூர்த்திகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆவார். இவர்களின் செயல்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்று பிரிக்கப்பட்டுள்ளன. இம்மூவரில் காத்தல் தொழிலோடு தொடர்புடையவர் விஷ்ணு எனப்படுகிறார்.

விஷ்ணு வாசுதேவன் என்றும் , நாராயணன் என்றும், பத்மநாபன் என்றும், ஸ்ரீனிவாசன் என்றும் ஜகன்நாதர், விதோபர், ஹரி என்றும் பல்வேறு பெயர்களில் அறியப் படுகிறார்.

இவர் நீல நிற மேனியும் கீழ் வலது கையில் கௌமேதகியும் கீழ் இடது கையில் பத்மாவும் மேல் வலது கையில் சுதர்சனமும் மேல் இடது கையில் பாஞ்சஜன்யமும் தாங்கிய தோற்றத்துடன் காணப்படுகிறார்.

விஷ்ணு சிவ பூஜை செய்து சுதர்சன சக்கிரம் பெற முயன்றபோது தனது கண்ணையே பூவாக அர்சித்து இறுதியில் சுதர்சன சக்கரம் பெற்றாரென்று வேதவியாசர் எடுத்தியம்புகிறார். இவருடைய வாகனமாக கருடனும், அருவ வடிவமாகக் சாளக்கிராமமும் கருதப்படுகிறது.

விஷ்ணு தொடர்புடைய இலக்கியச் சான்றுகள் ரிக்வேதம் தொடங்கி பல்வேறு உபநிஷத்துகளிலும், ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ளன.

விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் வியாபித்திருப்பர். (The Pervader) என்று பொருள் கொள்ளப்படுகிறது. விஷ்ணு சகஸ்ரநாமம் விளக்கவுரை எழுதிய ஆதிசங்கரர் எங்கும் நிறைந்திருப்பவர் என்ற வகையில் விளக்கியுள்ளார்.

இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்த கோலமுள்ளது.

இதிகாசங்களான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் விளக்குகிறது.

பாகவத புராணம், அரி வம்சம், விஷ்ணு புராணம், மச்சபுராணம், வாமன புராணம் உள்ளிட்ட பன்னிரு புராண நூல்கள் விஷ்ணுவின் பெருமைகளை விவரிக்கின்றன.

குணநலன்கள்

விஷ்ணுவின் குணங்களாக நான்கு குணங்கள் கூறப்பெறுகின்றன. அவையாவன,

வாத்சல்யம் – தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு.
சுவாமித்துவம் – கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும் சிறப்பு.
சௌசீல்யம் – ஏற்றத்தாழ்வின்றி நட்பு பாராட்டுவது.
சௌலப்யம் – கடவுளின் எளிமையை குறிப்பது.

இந்த நான்கு குணங்களும் விஷ்ணுவுடைய கிருஷ்ண அவதாரத்தில் வெளிப்பட்டதாகவும் கருதப்பெறுகிறது.

அர்ஜூனனின் தவறை நோக்காது, பாரத போரினை நிகழ்த்தியமை வாத்சல்யமாகவும், அர்ஜூனனுக்கு தன்னுடைய பரத்துவத்தை விளக்கியமை சுவாமித்தரமாகவும், அர்ஜூனனிடம் நட்பு பாராட்டியமை சௌசீல்யமாகவும், இறைவனாகிய விஷ்ணு மனிதனாக அவதரித்தது சௌலப்யமாகவும் சொல்லப்பெறுகிறது

ரிக்வேதம் இவரைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது இவர் தமது மூன்று அடிகளால் உலகினை அளந்தவர் என்று குறிப்பிட்டுள்ளது. விஷ்ணுவின் நிலைப்பாடு என்பது பிரபஞ்சத்தின் மூன்று நிலைகளோடு தொடர்புபடுத்தப்படுகிறது.

பூமியில் அக்னியாகவும், பெருவெளியில் இந்திரன் அல்லது வாயுவாகவும், வானத்தில் சூரியனாகவும் இருப்பவர் என்று விளக்கப்பட்டுள்ளது.

வைணவ சமயத்தின் படி, பரப் பிரம்மனான விஷ்ணு, உலகில் அதர்மம் தலை தூக்கும் போது தர்மத்தை நிலை நாட்ட பல்வேறு அவதாரங்கள் எடுப்பார் என்று கூறப்படுகிறது.

இதற்காக விஷ்ணு எடுத்த அவதாரங்களை தசாவதாரம் என எண்ணிக்கை அடிப்படையில் குறித்துவைக்கின்றனர்.

பாகவத புராணத்தில் விஷ்ணு இருபத்தைந்து அவதாரங்களை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

விஷ்ணுவின் அவதாரங்களை அவதாரம், ஆவேசம், அம்சம் என பிரிக்கின்றார்கள்.

அவதாரம் – முழு சக்தியை கொண்டது.
ஆவேசம் – தேவையின் போது மட்டும் சக்தி கொண்டவனாகுதல்.
அம்சம் – விஷ்ணு சக்தியின் ஒரு பகுதி ஓர் உருக்கொண்டு வெளிப்படுவது.

தசாவதாரம்

1. மச்ச அவதாரம்
2. கூர்ம அவதாரம்
3. வராக அவதாரம்
4. நரசிம்ம அவதாரம்
5. வாமண அவதாரம்
6. பரசுராம அவதாரம்
7. இராம அவதாரம்
8. பலராம அவதாரம்
9. கிருஷ்ண அவதாரம்
10. கல்கி அவதாரம்

பௌத்த மதத்தினை தோற்றுவித்தவரான கௌதம புத்தரும் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மத்சய கூர்ம வராஹஸ்ச நாரசிம்மஸ்ச வாமணஹ
ராமோ ராமஸ்ச ராமாஸ்ச புத்தக் கல்கீ தசாஸ்மிருதா:

ஸ்ரீவைஷ்ணவம் விஷ்ணுவின் ஐந்து நிலைகளைக் குறிப்பிட்டுள்ளது. இவை பர, வியூகம், விபவம், அர்ச்ச மற்றும் அந்தர்யாமி.

இதில் பர என்பது ஸ்ரீவைகுண்டத்தில் லெட்சுமி மற்றும் பூதேவியுடன் இணைந்து காணப்படும் உன்னத நிலையாகும். வியூகம் என்பது பிரபஞ்சத்தின் செயல்பாடுகளைச் செயலாக்குவதற்கும், உயிர் படைத்தல் முதலிய செயல்பாடுகளை நெறிப்படுத்தும் நிலையாகும். விபவம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களுடன் தொடர்புடைய ஒன்றாகும். அந்தர்யாமி என்பது உயிர் பொருத்தலும் ஆன்மா அல்லது உட்பொருளாக இருந்திடும் அற்புத நிலையாகும். அர்ச்சா என்பது சாதாரண மக்கள் திருக்கோயிலில் வைத்து வழிபடும் இறை உருவங்களுடன் தொடர்புடையதாகும்.

விஷ்ணு அச்சுதன் தொடங்கி ஆயிரம் நாமங்களைப் பெற்றவர். இப்பெயர்கள் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக அமைகின்றன.

பாண்டவர்களுக்கும் துரியோதனுக்கும் இடையே நடைபெற்ற குருஷேத்திரப் போரில் பீஷ்மர் கிருஷ்ணனின் முன்னிலையில் இப்பெயர்களை உச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இப்பெயர்கள் நிரந்தரமாக அல்லது முடிவுற்றது என்பதைக் குறிக்க அனந்தன் என்ற பெயரில் பிரபஞ்சமுடையவன் என்ற நிலையில் ஜகன்நாதன் என்ற பெயரில், விஷ்ணு அழைக்கப்படுகிறார்.

விஷ்ணுவின் வடிவம்:

விஷ்ணுவின் வடிவம் பொதுவாக நான்கு கைகளுடன் முன் கைகளில் அபய, வரத முத்திரையுடன், பின் கைகளில் சங்கு, சக்கரம் கொண்டு காணப்படும்.

விஷ்ணுவின் வண்ணம் மேகம் போன்ற நீல வண்ணம் ஆகும். நீல வண்ணம் என்பது வானம் முழுவதும் நிறைந்து முடிவில்லாது காணப்படுபவர் என்பதைக் குறிக்கிறது.

விஷ்ணுவின் மார்பில் தமது துணைவியான லட்சுமியைக் குறித்திடும் வகையில் ஸ்ரீவத்ச முத்திரை காணப்படுகிறது.

கழுத்தைச் சுற்றிலும் கௌஸ்தூபம் என்ற ஆபரணமும் வனமாலா என்ற மாலையும் தலையில் கீரிட மகுடமும் காணப்படும்.

காதுகளில் காணப்படும்.காதணிகள் என்பது தானம் மற்றும் அறியாமை, மகிழ்ச்சி மற்றும் துன்பம், ஆனந்தம் மற்றும் வலி ஆகியவற்றின் குறியீடாக அமைகிறது.

மேல் இடது கையில் காணப்படும் சங்கு பஞ்சஜன்யம் என்று அழைக்கப்படுகிறது.

விஷ்ணு பிரபஞ்சத்தினைத் தோற்றுவித்து இயக்கும் ஆற்றலின் குறியீடாக பஞ்சஜன்யம் அமைக்கப் பட்டுள்ளது. பஞ்சபூதங்கள் ஆகியவை இச்சங்கின் மூலம் உணர்த்தப்படுகிறது.

வலது கையில் காணப்படும் சக்கரம் சுதர்சனா என்று அழைக்கப்படுகிறது. இது தூய்மையான மனத்தின் அடையாளமாகும். இதன் செயல்பாடு என்பது ஆணவத்தை அழித்து ஆன்மாக்களின் உட்பொருளை உணர்த்துவதாகும்.

விஷ்ணு வழிபாடு செய்வதால் விரும்பிய பலன்களை அடைய முடியும். வருடத்தில் எல்லா தினங்களும் விஷ்ணுவை விரதம் இருந்து வழிபாட்டிற்குரிய தினங்களாக இருக்கிறது. ஆனபோதிலும் வாரந்தோறும் வருகின்ற புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வீட்டில் பெருமாளுக்கு வாசமிக்க மலர்கள் சாற்றி ஏதேனும் இனிப்பு உணவுகளை நைவேத்தியம் வைத்து, பெருமாள் மந்திரங்கள் துதித்து வழிபடுவது பலன்களை விரைவாக கொடுக்க வல்லதாகும்.

பௌர்ணமி தினங்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பானதாகும். பெருமாளுக்கு விரதம் மற்றும் வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் இருக்கிறது.

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்படுவதை காணலாம்.

மகா விஷ்ணுவுக்கு உகந்த விரதங்கள் :

ஸ்ரீராம நவமி :

ராமர் அவதரித்த தினம், ஒவ்வொரு ஆண்டின் சித்திரை மாதம் நவமியும் புனர்வசு நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளில் வரும். அதையே ஸ்ரீராம நவமி என்பார்கள்.

ராமபிரான் திருமாலின் அவதாரங்களில் ஒரு அவதாரத்தில் உதித்தவர். மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை அவர் உலகுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஸ்ரீராம நவமியை வடநாட்டிலும் தென்னாட்டிலும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். கொண்டாட்டங்கள் பத்து நாட்கள் நடைபெறுவதுண்டு.

பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்கள் முன் பத்து எனப்படும். பிறந்த தினத்திலிருந்து கொண்டாடப்படும் பத்து நாட்கள் பின் பத்து எனப்படும்.

இந்த நாட்களில் பஜனைகள், ராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெறும். ராமாயணம் படித்து பட்டாபிஷேக விழா நடத்துவார்கள். எல்லோருக்கும் பானகம், நீர், மோர், சந்தனம், சுண்டல் முதலியன வழங்கப்படும்.

அனந்த பத்மநாப விரதம் :

ஆவணி மாதம் சுக்கில பட்ச சதுர்த்தசியில் இந்த விரதம் வரும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு சகல பாவங்களும் நீங்கி, செல்வம் பெருகும். முறைப்படி விரதம் இருந்து, பூஜை செய்து, பதினான்கு முடி போட்ட மஞ்சள் கயிற்றை குங்குமத்தில் நனைத்து, பத்மநாப சுவாமியிடம் வைத்து, அதிரசம் வைத்துப் படைத்த பின், அந்தக் கயிற்றை இடது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து பதின்மூன்று ஆண்டுகள் செய்து பதினான்காம் ஆண்டில் அன்னதானம் செய்ய வேண்டும்.

பின்னர் ஆயுள் பூராவும் அனுஷ்டிக்கலாம். அனந்த பத்மநாபன் அருளால் ஆனந்தமான பாக்கியத்தைப் பெறலாம். பாண்டவர்கள் நாட்டையும் சகலத்தையும் துறந்து துன்பப்பட்ட போது, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, தர்ம புத்திரரிடம் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும்படி கூறினார். அவர்களும் அனுஷ்டித்து, மீண்டும் நாட்டையும் இதர பாக்கியத்தையும் அடைந்தார்கள்.

சிரவண விரதம் :

சிரவண நட்சத்திரம் மகா விஷ்ணுவுக்கு உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு. துவாதசி தினமும் விஷ்ணுவுக்கு உகந்த தினம். இவை இரண்டும் கூடுவது சிரவண துவாதசி ஆகும். இத்தினத்தில் உபவாசம் இருந்து மகா விஷ்ணுவைப் பூஜித்தால் பாவங்கள் நீங்கி புண்ணியத்தை அடையலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

இதனால் ஒவ்வொரு ஏகாதசிக்கு அடுத்த நாள் வரும் துவாதசி அன்றும் திருவோணத்தன்றும் மகா விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும்.

பொதுவாக ஏகாதசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் துவாதசி அன்று பாரணம் செய்ய வேண்டியிருப்பதால் அன்று உபவாசம் இருக்க வேண்டியதில்லை.

ஆனால் சிரவண துவாதசி அன்று விசேஷ விதியாக உபவாசம் இருக்க வேண்டும். இதனால், நம் பாவங்கள் விலகி நம் குழந்தைகள் வாழ்க்கையில் உயர்வு பெற்று நலமாக வாழலாம்.

புரட்டாசி சனிக்கிழமை :

புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டில் மிக, மிக சக்தி வாய்ந்ததாகும். புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட்டால் அவர் மனதில் இடம் பிடிக்க முடியும். அன்றைய தினம் வீட்டில் பூஜை அறையில் கோலம் போட்டு, அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும்.

இரு பக்கங்களிலும் குத்து விளக்கை ஐந்து முகம் ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரிய பொருட்களை சேகரித்து வைத்து ராகுகால, எமகண்ட நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கு ஏற்றி, பக்தியுடன் பூஜிக்க வேண்டும்.

நிவேதனம்: சர்க்கரை பொங்கல் வடை, எள் சாதம் ஆகும்.

புரட்டாசி மாதம் முதல் வார சனி இரண்டாவது சனிவாரம், மூன்றாவது வாரம், ஐந்தாவது வாரம் இவைகளில் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் அனுஷ்டிக்க வேண்டும். திருமலையில் பகவானின் நவராத்திரி உற்சவம் நடக்கும்போது சனிக்கிழமை விரதம் அனுஷ்டிக்க கூடாதென்றும், எனவே மற்ற சனிக்கிழமை ஏதாவது ஒன்றில் நடத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று, மாவிளக்கேற்றி விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும்.

ஏகாதசிகளில் மார்கழி மாதம் வரும் இந்த ஏகாதசியைப் பெரிய ஏகாதசி என்றும் வைகுண்ட ஏகாதசி என்றும் கூறுவர். இந்த நாளில் விஷ்ணு ஆலயங்களில் சொர்க்க வாசல் திறப்பார்கள். அன்று ஆலயங்களுக்கு செல்வோர் இந்த சொர்க்க வாசல் வழியே உள்ளே செல்ல வேண்டும். இந்த வாயில் மூன்று நாட்களுக்குத் திறந்திருக்கும். அதன்பிறகு மூடிவிடுவார்கள்.

அன்றைய தினம் உபவாசமிருந்து இரவு கண் விழித்து மறுநாள் விடியற்காலையில் பாரணை செய்து விரதம் முடித்தால் பரமபதம் செல்வர் என்று கூறுவர்.

விஷ்ணு செல்வத்திற்குரிய சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவர் என்பதால் பெருமாளுக்கு விரதங்கள் பூஜைகள் வழிபாடுகள் செய்பவர்களுக்கும், விஷ்ணு காயத்ரிமந்திரம் துதிப்பவர்களுக்கும் செல்வச் சேர்க்கை உண்டாகும்.

விஷ்ணு காயத்ரி மந்திரம்.

ஓம் நிரஞ்சனாய வித்மஹே

நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினம்தோறும் 108 முறை ஜெபிப்பதன் பலனாக நம் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழலாம்.

தொழில், வியாபாரம் ஆகியவற்றில் லாபங்கள் பெருகும். சொந்த வீடு, வாகனம் போன்ற யோகங்கள் அமையும். வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தும் அமைப்பு உருவாகும்.

இந்த உலகில் வாழும் ஜீவ ராசிகள் அனைத்தையும் காக்கும் கடவுளாக பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார் பகவான் விஷ்ணு.

விஷ்ணுவை வழிபடுவதன் பலனாக தனப் பிராப்தி, தொழில் விருத்தி உண்டாகும். லாபம் பெருகும், நல்ல உணவு, புத்தாடைகள், வாசனை திரவியங்கள், போன்ற சுகபோக பொருட்களின் சேர்க்கை உண்டாகும். அதோடு வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.

Scroll to Top