You cannot copy content of this page

விநாயகர் தரும் வரங்கள்

விநாயகர் தரும் வரங்கள் !

இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள்.

இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.

இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும், யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

விநாயகரின் வேறு பெயர்கள்

கணபதி – கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்று அழைக்கப் படுகின்றார்..

ஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்று அழைக்கப் படுகின்றார்.

கஜமுகன் – கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்று அழைக்கப் படுகின்றார்..

விக்னேஸ்வரன் – விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்

பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.

இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு .

’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.

கிருதயுகம்

காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.

திரேதாயுகம்

அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்

துவாபரயுகம்

கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.

கலியுகம்

சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது

திருமுறைகளில் விநாயகர்

‘தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி’ என்று திருஞானசம்பந்தர், துன்பம் போக்கும் கடவுளாகக் கணபதியைப் பாடுகிறார்.

அப்பரும் சுந்தரரும் விநாயகரைத் தேவாரத்தில் பாடியுள்ளனர். ரிக் வேதத்தில் கணபதி போற்றப்படுகிறார். திருமந்திரத்திலும் மற்றும் பதினோராம் திருமுறையில் கபிலதேவர், பரணதேவர், அதிராவடிகள், நம்பியாண்டார் நம்பிகள் ஆகியோரின் பாடல்களிலும் விநாயகர் சிறப்பாகப் போற்றப்படுகிறார்.

ஐந்து கரங்களும், யானை முகமும், சந்திரனைப் போன்ற தந்தங்களும் கொண்ட ஞானக் கொழுந்தான விநாயகரைப் போற்றினால் புத்தி வளரும், நலங்கள் பெருகும் என்று, 3000 ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் தனது திருமந்திரத்தில் பாடியுள்ளார்.

விநாயகர் தரும் வரங்கள்

”துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!’ என்று ஔவையார், விநாயகப் பெருமானை வேண்டி சங்கத் தமிழ்ப் பாடல்கள் பாடும் புலமை பெற்றார்.

விநாயகர் அகவலில் யோக தத்துவத்தையும், விநாயகர் தரும் இக, பர சௌபாக்கியங்களையும் பாடியுள்ளார்.

‘முன்னை வினையின் முதலைக் களைந்து, எல்லை இல்லா ஆனந்தம் அளித்து, அருள்வழி காட்டுபவர், அற்புதம் நின்ற கற்பகக் களிறு’ என்று போற்றுகிறார் ஔவையார்.

செல்வாக்கும் சொல்வாக்கும் தருவான், வெவ்வினையை வேரறுக்க வல்லான், நம் வேட்கை தணிவிப்பான் விநாயகன்.

‘வானுலகும், மண்ணுலகும் வாழ, நான்கு மறை வாழ, செய்ய தமிழ் பார்மிசை விளங்க, ஆனைமுகனைப் பரவு’ என்கிறார் சேக்கிழார்.

விருத்தாசல புராணம், பாதாள விநாயகரின் பெருமைகளைப் பாடுகிறது. ‘உலகத் தொல்லைகள், பிறவித் தொல்லைகள் போகவும், செல்வமும் கல்வியும் கருணையும் வந்து சேரவும் கணபதியைக் கைதொழ வேண்டும்’ என்கிறது இந்தப் புராணம்.

விநாயக புராணம்

திருவாவடுதுறை ஆதீன கச்சியப்ப முனிவர் விநாயக புராணத்தை விரிவாகப் பாடியுள்ளார். இதில் விநாயகரின் தோற்றம், பெருமை, விரதங்கள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

விநாயகரை வணங்கும் பக்தருக்குத் துன்பமில்லை, நோயில்லை, துக்கம், சோகம், மோகங்கள், பாவங்கள், பகைகள் எதுவும் இல்லை என்கிறது இந்தப் புராணம்.

செவ்வாய் பிள்ளையார் விரதம்

பெண்கள் மட்டுமே விநாயகருக்குச் செய்யும் விரதபூஜை இது. ஆடிச் செவ்வாய் இரவு ஆண்கள் உறங்கிய பின்போ அல்லது ஆண்கள் இல்லாத ஒரு வீட்டிலோ பெண்கள் கூடி, நெல் குத்தி, அரிசியாக்கி, மாவாக்கி, உப்பில்லாது, இளநீரை விட்டுப் பிசைந்து உருண்டை ஆக்கி, நீராவியில் வைத்து எடுத்து, கன்று ஈனாத பசுவின் சாணத்தில் பிள்ளையார் செய்து, பூஜை செய்து, விடிவதற்குள் விரதம் முடித்து, காலையில் பிள்ளையாரை ஆற்றில் விட்டால் தாலி பாக்கியம் பெருகும், தன தான்யங்கள் வளரும் என்பது ஐதீகம்.

இது, விரத மகாத்மியம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ள 46 விரதங்களில், விநாயகரின் அருள் கிடைக்கச் செய்யும் ஒரு விரதம் ஆகும்.

தெய்வநாயகன் விநாயகன்

கடவுளர்களே போற்றும் கடவுள், கணபதி! திரிபுரங்கள் எரிக்கச் செல்லுமுன் தந்தை சிவன் தன்னைப் போற்றி வணங்க மறந்ததால், ‘அச்சிவன் உறைரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரன்’ விநாயகர்.

தம்பிக்கு வள்ளியை மணம் செய்து வைத்தவர்;

மதுகைடபர்களை வெல்ல மகாவிஷ்ணுவுக்கு உதவியவர்;

கிருஷ்ணரின் மனைவி ருக்மிணி சம்பாசுரனை வெல்லவும், பிரத்யும்னனை மீட்கவும் துணை நின்றவர்;

நம்பியாண்டார் நம்பிகளுக்குத் திருநாரையூரில் நிவேதனம் உண்டு, தரிசனம் தந்தவர்;

தில்லையில் திருமுறைகள் உள்ளதைக் காட்டி, திருமுறைகளை மீட்டவர்.

விருத்தாசலத்தில் ஆழத்துப் பிள்ளையார்; திருச்சியில் உச்சிப் பிள்ளையார்; சீர்காழியில் ஆபத்து காத்த விநாயகர்; திருந்துதேவன்குடியில் நண்டு பூசித்த கர்க்கடக விநாயகர்; திருவீழிமிழலையில் படிக்காசுப் பிள்ளையார். இவரை மணிமேகலை காப்பியம் ‘கரங்கவிழ்ந்த காவிரிப்பானை’ என்று போற்றுகிறது.

நோய் தீர்க்கும் விநாயகர்

பிருகு முனிவரிடம் சோமகாந்த அரசன் விநாயகர் மந்திர உபதேசம் பெற்று வேண்டிட, குஷ்ட நோய் தீரப் பெற்றான். கற்கன் என்ற அரச குமாரனும் முத்கல முனிவரால் விநாயக மந்திர உபதேசம் பெற்று, நோய் தீரப் பெற்றான்.

திருவானைக்காவலில் கவிகாளமேகம் விநாயகரைப் பாடும் போது ‘ஏரானைக் காவலில் உறை, என் ஆனைக் கன்று அதனைப் போற்றினால், வாராத புத்தி வரும், பக்தி வரும், புத்திர சம்பத்து வரும், சக்தி வரும், சித்தி வரும்தான்’ என்று புத்தி, சத்தி, சித்தி பெற விநாயகனைத் தொழச் சொல்கிறார்.

ஐம்புலன்தன்னை அடக்கும் யானை கட்டும் கயிறு, அங்குசம் இரண்டையும் தானே கொண்டு, மோன நிலையில் தியானம் செய்யும் விநாயகர் யோகம், நாதம், தாளம், ஞானம் எல்லாவற்றையும் தரும் நர்த்தன யோக கணபதி ஆவார்.

திருவுருவ விளக்கம்

திருவடி

ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.

பெருவயிறு

ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.

ஐந்துகரங்கள்

பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்

கொம்புகள்

மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.

தாழ்செவி

விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.

விநாயகர் மூர்த்தங்கள்

பொதுவாக யானைமுகமும், மனித உடலுமாக காட்சியளிக்கும் விநாயகர், பல்வேறு வடிவங்களிலும் கோவில்களில் காட்சியளிக்கிறார்.

நரமுக விநாயகர் – மனித முகத்துடன் காட்சியப்பவர். சிதலப்பதி முத்தீசுவரர் கோயிலில் உள்ள விநாயகர் தும்பிக்கையின்றி மனித உருவில் உள்ளார்

நடன கணபதி, நர்ததன கணபதி – நடனமாடும் விநாயகர். சித்தி, புத்தி கணபதி – மனைவிகளான சித்தி மற்றும் புத்தி ஆகியோருடன் காட்சியளிப்பவர்.

முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்


உச்சிட்ட கணபதி
உத்தண்ட கணபதி
ஊர்த்துவ கணபதி
ஏகதந்த கணபதி
ஏகாட்சர கணபதி
ஏரம்ப கணபதி
சக்தி கணபதி
சங்கடஹர கணபதி
சிங்க கணபதி
சித்தி கணபதி
சிருஷ்டி கணபதி
தருண கணபதி
திரயாக்ஷர கணபதி
துண்டி கணபதி
துர்க்கா கணபதி
துவிமுக கணபதி
துவிஜ கணபதி
நிருத்த கணபதி
பக்தி கணபதி
பால கணபதி
மஹா கணபதி
மும்முக கணபதி
யோக கணபதி
ரணமோசன கணபதி
லட்சுமி கணபதி
வர கணபதி
விக்ன கணபதி
விஜய கணபதி
வீர கணபதி
ஹரித்திரா கணபதி
க்ஷிப்ர கணபதி
க்ஷிப்ரபிரசாத கணபதி

விநாயக சதுர்த்தி

வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.

துர்வா கணபதி விரதம் துர்வா யுக்மம் எனும் சொல்லானது அருகம்புல்லைக் குறிப்பதாகும். விநாயகருக்கு விரதம் இருந்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வதும், மாலையிடுவதும் இந்நாளில் செய்யப்படுகிறது.

விநாயகர் அகவல்

ஔவையார் விநாயகர் மேல் பாடிய அகவல் ’சீதக்களப செந்தாமரை..” எனத்துவங்கும் விநாயகர் அகவல்.விநாயகர் அகவலைத் தினமும் பாராயணம் செய்துவருவோரைத் தீவினை நெருங்காது, நல்லதே நடக்கும் என்பது தொன்நம்பிக்கை

கணேச பஞ்சரத்னம்

கணேச பஞ்சரத்னம் ஆதிசங்கரர் இயற்றிய, விநாயகப்பெருமானை வழிபடும் சுலோகம்.

பிள்ளையார் பற்றிய நாட்டுப்புறப்பாடல்

குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு

முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை

வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.

வாழ்வை வளமாக்கும் விநாயகர் நிவேதனம்

விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும்.

விநாயகருக்குரிய 11 விரதங்கள்

 1. சங்கட ஹர சதுர்த்தி விரதம்
 2. வெள்ளிக்கிழமை விரதம்
 3. செவ்வாய்க்கிழமை விரதம்
 4. சதுர்த்தி விரதம்
 5. குமார சஷ்டி விரதம்
 6. துருவ கணபதி விரதம்
 7. சித்தி விநாயகர் விரதம்
 8. துர்வாஷ்டமி விரதம்
 9. நவராத்திரி விரதம்
 10. வெள்ளிப்பிள்ளையார் விரதம்
 11. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்

இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதமே முக்கியமானது.

வளங்களை தரும் விநாயக பெருமானை வணங்கும் ஒரு சிறப்புக்குரிய நாள் தான் “சங்கடஹர சதுர்த்தி”. அந்நாளில் நாம் “சங்கடஹர சதுர்த்தி விரதம்” எப்படி அனுஷ்டிப்பது குறித்தும், அதனால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வருவது தான் சங்கடஹர சதுர்த்தி தினமாகும். ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில் சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வதை தொடங்க வேண்டும்.

இதிலிருந்து மாதந்தோறும் வருகிற சதுர்த்தி நாள்களில் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து 11 சங்கடஹர சதுர்த்தி தின விரதம் அனுஷ்டித்து சதுர்த்தி விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்குச் சென்று, அங்கிருக்கும் பிள்ளையார் சந்நிதிக்கு சென்று, அச்சந்நிதியை 11 முறை வலம் வந்து வழிபட வேண்டும். பின்பு விநாயகருக்கு அறுகம்புல் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து வழிபட்ட பின்பு நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்.

வீட்டுக்கு வந்ததும், ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுமாட்டிற்கு உணவாக கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி விரத தினத்தன்றும் பசுமாட்டிற்கு உணவு கொடுப்பதால் விரதத்திற்கு பலன் அதிகரிக்கும்.

பின்பு வீட்டிலேயே விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை, இனிப்பு, சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், சுண்டல் என்று பலவிதமான உணவு பொருட்களை விநாயகருக்கு நைவேத்தியம் வைத்து, விநாயகருக்குப் பிடித்த வன்னி இலைகளால் விநாயகரை அர்ச்சித்து, விநாயகருக்குரிய மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் கூறி வழிபட வேண்டும்.

இந்த சதுர்த்தி விரத தினத்தன்று உணவேதும் அருந்தாமல் இருப்பது சிறப்பு. அது முடியாவிட்டால் பால், பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் நடக்கும் சங்கடஹர பூஜையின் போது, விநாயகரின் அபிஷேகத்திற்கு தூய்மையான பசும் பாலை வழங்க வேண்டும். பின்பு விநாயகருக்கு நடக்கும் அபிஷேகங்களையும், பூஜையையும் கண்குளிர கண்டு வணங்க வேண்டும்.

வீடு திரும்பியதும் பூஜையறையில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலை, படத்தை வணங்கி, அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்தியங்கள் பிரசாதமாக எடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து நீங்களும் சாப்பிட்டு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை முடிக்க வேண்டும்.

ஓவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும்.

குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்

இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானதாகும்.

பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபடுதல் சர்வ சித்திகளையயும் தரும்.

விநாயகர் துதி மந்திரம்

ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம

அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆறெழுத்து மந்திரம் முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் போல, விநாயகப்பெருமானுக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. ஓம் வக்ர துண்டாய ஹும் என்பதே அது.
இதனை ஓதி வந்தால் பகைத்துன்பம் நீங்கும். முருகப் பெருமான் இந்த மந்திரத்தை ஓதியே தாராகாசுரனை வதம் செய்தார். வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று, மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் விநாயகரின் இம்மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார். இந்திரன் கவுதமரின் சாபத்தால் உண்டான ஆயிரங்கண்களை இம்மந்திரத்தை ஜெபித்தே நீங்கப்பெற்றார்.

லட்சுமி கணபதி காயத்ரி

28 எழுத்து மந்திரம்

‘ஓம் ஸ்ரீ ம் ஸௌம்யாய கணபதயே வரவரத
சர்வ ஜநம்மே வசமாநய ஸ்வாஹா’

குடும்ப க்ஷேம காயத்ரி

‘ஓம் ஸ்ரீ ம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மீ கணபதயே
மம மம குடும்பஸ்ய யாவத்ராநாம் துரிதம்
ஹர ஹர க்ஷேமம் குருகுரு ஸர்வசௌபாக்யம்
தேஹி தேஹி ஐம்கம் கணபதயே ஸ்வாஹா’

காரிய ஸித்தி காயத்ரி

‘ஓம் க்லெளம் ஸ்ரீ ம் ஸர்வவிக்ன ஹந்த்ரே பக்தானுக்ரஹகர்த்ரே
விஜய கணபதயே ஸ்வாஹா’

வேழ முகத்தானைப் போற்றுவோம்; வெற்றி பெறுவோம்!

Scroll to Top