You cannot copy content of this page

வித விதமான உணவு (குழந்தைக்காக)

[இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளை உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அவர் பரிந்துரை செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.]

திருக்குறள்

பால்: பொருட்பால்
அதிகாரம்: அறிவுடைமை குறள் 423:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

மு.வரதராசன் விளக்கம்:
எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
எதைபற்றியும் யார் யார் என்ன சொல்ல கேட்பினும் அதைப்பற்றிய உண்மையான பொருளை காண்பதே அறிவு.

தாய்மார்களின் பெரிய கவலையே தாய்ப்பாலை தவிர்த்து குழந்தைக்கு வேறு என்ன உணவு கொடுக்கலாம் என்பதே.

இந்த கவலையோடு சேர்ந்து கொள்வது அந்த உணவுகளின் தன்மை பற்றிய சந்தேங்கங்களும், அதில் உள்ள செயற்கை பொருட்கள் பற்றிய பயமும்தான். உங்களின் இந்த கவலையை போக்கவே, இங்கே எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய சத்தான உணவுகளின் செய்முறைகள் தரப்பட்டுள்ளது. இது உணவு குறித்த உங்களின் பயத்தையும் நீக்கும்.

முதலில் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்க கூடாது என்பதுதான். கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் குழந்தைக்கு அலர்ஜியை உண்டாக்கலாம்.

குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்
.

1. சிவிங் கம்

நிறைய சுவைகளில், நிறைய பிராண்ட்களில் சிவிங் கம் வருகிறது. 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதை வாங்கித் தர கூடாது.

தவறுதலாக குழந்தைகள் விழுங்கிவிட்டால் பின்னர் பிரச்னைதான். இந்த சிவிங் கம் வயிற்றில் செரிமானமாகாது, வயிறு வலி போன்ற தொல்லைகளை ஏற்படுத்தி குழந்தையின் உடலைக் கெடுத்துவிடும்.

மலம் மூலமாக வெளியே வரவில்லை என்றால் மருத்துவரின் சிகிச்சைதான் தீர்வாக இருக்கும். எனவே சிவிங் கம்களைக் குழந்தைகளுக்கு தரவே கூடாது.

2. சாக்லெட்

சாக்லெட்கள் இன்றைய குழந்தைகளின் விருப்பமான உணவு. இதைக் குழந்தைகளிடம் காண்பித்தாலே போதும். அடம் பிடிக்க தொடங்கி விடுவார்கள்.

அதிகபடியான சர்க்கரையும் சுவையூட்டிகளும் சேர்க்கப்படுவதால் முடிந்தவரை சாக்லெட்களை தவிர்த்துவிடுங்கள்.

முக்கியமாக பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட சாக்லெட்டை தவிருங்கள்.

3. பிஸ்கெட்

கடையில் அடுக்கி வைக்கப்பட்டு அழகாகக் காட்சி அளிக்கும் இந்த பிஸ்கெட்கள். எண்ணற்ற பிராண்டுகள் உள்ளன.

இதைக் குழந்தைகளுக்கு தராமல் வளர்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். எனினும் நீங்கள் தராமல் இருப்பதே நல்லது.

அனைத்து பிஸ்கெட்டும் மைதாவால்தான் செய்யப்படுகிறது. பிஸ்கெட்டுகான அடிப்படை பொருளே மைதாதான்.

குழந்தை பிஸ்கெட் கேட்டு அடம் பிடித்தால், ஆர்கானிக் சிறுதானிய பிஸ்கெட்களை வாங்கித் தாருங்கள்.

கடையில் விற்கும் க்ரீம் பிஸ்கெட்டில் கெட்ட கொழுப்பு உள்ளன. இவற்றைக் கட்டாயம் தவிர்க்கவும்.

4. கடையில் பொரித்த எண்ணெய் உணவுகள்

கடையில் விற்கும் பொரித்த எண்ணெய் உணவுகளான சமோசா, பக்கோடா, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற திண்பண்டங்களை வாங்கித் தர கூடாது.

வேண்டுமென்றால் வீட்டிலே செய்து கொடுங்கள்.

கடைகளில் விற்கும் இத்தகைய உணவுகளில் செயற்கை நிறம், சுவையூட்டிக் கலக்கப்படுகிறது.

மேலும் பொரிக்கும் எண்ணெயும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடியதாக இருக்கிறது.

இதனால் வயிறு கெடும். வயிறு தொடர்பான தொல்லைகள் வரும்.

நீங்கள் வீட்டிலே ஆரோக்கியமான முறையில் பஜ்ஜி, போண்டா, வடை செய்து கொடுக்கலாம்.

5. குளிர்பானங்கள்

இந்தக் குளிர்பானங்கள் மிகவும் ஆபத்தானது. இதன் லேபிள் கீழேயே இதைச் சாப்பிட கூடாது. குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குக் கொடுக்க கூடாது என எழுதி இருப்பார்கள்.

மேலும் பழங்களின் சுவைகளில் வரும் சில குளிர்பானங்கள், செயற்கை பழச்சாறுகள், செயற்கை மில்க் ஷேக் போன்ற அனைத்தையும் குழந்தைகளுக்கு தரக் கூடாது.

ஏனெனில் உணவுப் பொருட்கள் ஃப்ரெஷ்ஷாகதான் சாப்பிட வேண்டும். உணவுகள் 2-3 நாட்களில் கெட்டு போகும்.

ஆனால் கடைகளில் விற்கப்பட்டும் பாட்டில் பழச்சாறுகள், மில்க் ஷேக் 2 -6 மாதங்கள் வரை கெட்டுப் போகாது. அவ்வளவும் கெமிக்கல்கள். இது குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் ஆபத்துதான்.

6. ஐஸ்கிரீம்

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் தரக் கூடாது.

சளி, காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

ஐஸ்கிரீம் தயாரிக்கும் தண்ணீர் சுகாதாரமின்றி இருந்தால் குழந்தைகளை நிச்சயம் பாதிக்கும்.

குழந்தைகளுக்கு நீங்கள் வீட்டிலே தயாரித்த பழக்கூழை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொடுக்கலாம்.

7. நூடுல்ஸ்

முழுக்க மைதாவில் செய்யப்படும் உணவு. இதனுடன் வரும் மசாலாவில் சுவையூட்டியும் அதிகபடியான உப்பும் மோனோ சோடியம் குளுட்டமேட் எனும் கெமிக்கலும் கலக்கப்படுகின்றன.

இதில் கலக்கப்பட்டிருக்கும் அதீத உப்பால் உடல்நலக் கோளாறுகள் வரும்.

இந்த நூடுல்ஸ் செரிக்க 2-3 நாட்கள் ஆகும். அவ்வளவு நாள் வயிற்றுக்குள் இருந்து கெட்டு போய், மலக்காற்று துர்நாற்றமாக வரும். இதைக் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.

ராகி சேமியா, இடியாப்ப சேவை போன்றவற்றில் காய்கறிகள் சேர்த்து வீட்டிலே அரைக்கக் கூடிய மசாலா சேர்த்து நூடுல்ஸ் எனச் சொல்லி குழந்தைக்கு கொடுக்கலாம்.

8. பாக்கெட் உணவுகள்

ஒரு வாய் வைத்த உடனே சட்டென்று சுவை நாவில் ஒட்டிக் கொள்ளும். அந்த அளவுக்கு சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சில பாக்கெட் நொறுக்கு தீனிகளில் மெழுகு சேர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நெருப்பில் இட்டால் அவை எரியும்.

இது குழந்தைகளின் வயிற்றுக்குள் சென்று பல்வேறு உபாதைகளை உருவாக்கும்.

பாக்கெட் நொறுக்கு தீனிகளைத் தவிர்த்து விட்டு வீட்டிலே செய்யகூடிய ஆரோக்கிய நொறுக்கு தீனிகளைக் கொடுக்கலாம்.

கடலைமிட்டாய், எள்ளு உருண்டை, முறுக்கு போன்றவற்றை வீட்டிலே செய்து கொடுக்கலாம்.

9. சிப்ஸ் வகைகள்

ஏராளமான சிப்ஸ்கள் தற்போது கிடைக்கின்றன. உருளை, மரவள்ளிகிழங்கு, பாகற்காய், பலா, வெண்டைக்காய் போன்ற நிறைய சிப்ஸ்கள் உள்ளன.

இவையெல்லாம் காய்கறிகளாக இருந்தாலும் இதைப் பொரிக்க கூடிய எண்ணெயில்தான் பிரச்னை இருக்கிறது.

மீண்டும் மீண்டும் சுட கூடிய எண்ணெயில் கெட்ட கொழுப்பு மிகுதியாக இருக்கும். இதனால் உடல்பருமன், தொப்பை, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற தொல்லைகள் வரும்.

குழந்தைகள் விருப்பப்பட்டால் வீட்டிலே தரமான எண்ணெயில் பொரித்து, கொஞ்சமாக மிளகுத் தூள் தூவி கொடுக்கலாம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தரலாம்.

10. பல வண்ண ஸ்வீட்ஸ், கேக்

கேக்கும் ஸ்வீட்டும் பலருக்கும் பிடித்தமான உணவு. தற்போது கடைகளில் இவை குவிக்கப்பட்டு வருகின்றன.

கண்களைப் பறிக்கும் நிறங்கள், வடிவங்களில் இவை உள்ளன.
5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு இவற்றை முடிந்தவரை கொடுக்காமல் தவிர்க்கப் பாருங்கள்.

குழந்தைகள் வாங்கித் தர சொல்லி அடம் பிடித்தால், பிளெயின் கேக், வால்நட் கேக், ப்ளம் கேக், வெள்ளை நிற கேக்கள் வாங்கித் தரலாம். மஞ்சள், நீலம், பச்சை எனப் பல வண்ணங்களில் வருவதைத் தவிர்க்கலாம்.

அதுபோல ஸ்வீட்களில் வெள்ளை நிற ஸ்வீட்களான காஜூகத்லி, பால் கோவா, ரசகுல்லா, பாசூந்தி, பாதாம் பால் இவற்றை வாங்கித் தரலாம். வீட்டிலே செய்ய கூடிய குலோப் ஜாமுன் தரலாம்.

பல வண்ணங்களில் ஃபுட் கலர் சேர்க்கப்பட்டுள்ள ஸ்வீட்களைத் தவிர்ப்பதே நல்லது.

இயற்கை உணவுகளே உங்கள் குழந்தைக்கு கொடுக்க கூடிய சிறந்த உணவாகும். உதாரணமாக, பழங்கள், சில காய்கறிகள் குறிப்பாக உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் போன்றவை,
.
குழந்தைகளுக்கு முதல் முதலாக உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது மூன்றுநாள் விதிமுறையை கடைபிடிப்பது அவசியம்.

குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல்.

வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை.

பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன.

எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.

6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.

குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.

குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது.

குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது.

அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம்.

வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.

பலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது.

குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம்.

7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம்.

இது மிகவும் சத்தானது.
முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும்.

பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும்.

குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்
வாழைப்பழம் – ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.

ஆப்பிள் – ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.

அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம்.

பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.
சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.

வேக வைத்து மசித்த காய்கறிகள்:
பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம்.

அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.

இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது.

புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.

ஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்குப் பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.

எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும்.

அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும்.

பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.

ஒவ்வாமை
குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள்.

சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.

குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது.

உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும்.

குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

தேனைக் குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.

பெரும்பாலான தாய்மார்களின் கேள்வி என் குழந்தைக்கு என்ன அரிசி கொடுக்கலாம் என்பதே.

நாம் வீட்டில் வழக்கமாக உபயோகிக்கும் அரிசியே கொடுக்கலாம் என்பதே அதற்கான பதில்.ஏனென்றால் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்பொழுதே நாம் உபயோகிக்கும் அரிசிக்கு பழக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் மேலும் ஆரோக்கியமான ஒன்றை கொடுக்க விரும்பினால் பட்டை தீட்டப்படாத கைக்குத்தல் அரிசியை கொடுக்கலாம்.

கைக்குத்தல் அரிசியின் நன்மைகள்:

கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு.இதில் ஏராளமான நன்மைகள் பொதிந்துள்ளன.

சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன.

நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் மிகுதியாக உள்ளது.

கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்சத்துக்கள் உணவினை எளிதாக செரிக்க செய்து மலசிக்கலை தடுக்கின்றது.

மெக்னீசியம் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது

முதலில் சாதாரண அரிசியை பயன்படுத்துங்கள். இது குழந்தைக்கு ஒத்துக் கொண்ட பிறகு ப்ரெளன் ரைஸை பயன்படுத்துங்கள்.

சாதாரண அரிசியுடன் ஒப்பிடும் போது ப்ரெளன் ரைஸ் குழந்தைகளின் வயிற்றுக்கு ஒருவித மந்தமான சூழலை உருவாக்கும்.ப்ரெளன் ரைஸில் செலினியம், மெக்னீசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துகள் அதிகம் இருக்கிறது.

எந்த உணவாக இருந்தாலும் நன்கு மசித்த பின்னரே கொடுக்கவேண்டும். குறிப்பாக ஆப்பிள் கூழ், அவோகேடோ கூழ் போன்றவை கொடுக்கப்படும்போது சிறிய அளவு தோல் கூட அதில் இருக்கக்கூடாது. ஏனெனில் சிறிய தோல் கூட உங்கள் குழந்தையின் மென்மையான வாயில் காயத்தை ஏற்படுத்தும்.

தயிர் உடலுக்கு நல்லது… குழந்தைகள் உண்ணும் உணவில் தயிர் இருப்பதால் குழந்தைகளுக்கு நன்மையே. இதில் கால்சியம் நிறைந்துள்ளது. வயிற்றுக்குச் சிறந்த உணவு. பசும்பாலில் தயாரித்த தயிராக இருப்பது கூடுதல் சிறப்பு.

ஆப்பிள் அரிசி கஞ்சி

தேவையானவை :
வீட்டில் செய்த அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் – பாதி அளவு
தண்ணீர் – அரை கப்
செய்முறை :
ஆப்பிளை நன்றாக கழுவி தோல் உரித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் அரிசி மாவை கொட்டி கட்டியில்லாமல் கிளறிக் கொள்ளவும்.
இத்துடன் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். நன்றாக கெட்டியாக வரும் போது இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

தெரிந்து கொள்ள வேண்டியது :
“ஆப்பிளை தனியாக வேகவைத்து கூழ் போல் ஆக்கியும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்”

அரிசிப் பொரி கஞ்சி

இந்த இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சியை 7-வது மாத குழந்தைகளிடமிருந்து கொடுக்கத் தொடங்கலாம். இதுவும் பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு.

வீட்டிலே இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி மிக்ஸ் செய்வது எப்படி?

தேவையானவை

அரிசி பொரி – 100 கி
பொட்டுக்கடலை (வறுகடலை) – 30 கி
தோல் நீக்கிய, வறுத்த கடலையாக இருக்க வேண்டும்.
செய்முறை

அரிசி பொரியை பவுடராக அரைத்துக் கொள்ளவும்.
அதுபோல வறுகடலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த இரண்டு பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து கலந்துகொள்ளவும்.
உலர்ந்த, காற்று புகாத டப்பாவில் இதைச் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸை ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு எடுத்து, வெந்நீரில் கலக்கி கொடுத்தாலே போதுமானது.

தேவையானவை :
அரிசி – 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 9 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
அரிசியை 15 முதல் 20 நிமிடம் வரை ஊறவைக்கவும்.

 1. இதனை நன்றாக கழுவி தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும்.
 2. அரிசி நன்றாக வெந்த பிறகு சூடாக இருக்கும் போதே கரண்டி அல்லது மத்தால் மசிக்கவும்.
 3. கூடுதலாக உள்ள தண்ணீரை வடித்துவிடுங்கள். கூடுதல் சுவைக்கு கொஞ்சம் சீரகத்தூளை சேர்த்துக் கொள்ளலாம்..

ஓட்ஸ் கஞ்சி

ஓட்ஸ் கஞ்சி
(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்)

தேவையானவை :
தூளாக அரைத்த ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – ஒரு கப்
செய்முறை :
பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

பின் அதில் ஓட்ஸ் பொடியை சேர்த்து நன்றாக வேக விடவும்.

இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து நன்றாக கலந்து கொடுக்கவும்.

தெரிந்து கொள்ள வேண்டியது :
ஓட்ஸ் பெரும்பாலான குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதில்லை.

கடைகளில் ஓட்ஸ் வாங்கும்போது அதில் கலந்திருக்கும் பொருட்களை பற்றி தெரிந்து கொண்டு வாங்குங்கள்.

மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது நார்ச்சத்து அதிகம் நிரம்பிய உணவு இது. உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் கொழுப்புகள் இதில் குறைவு. மேலும் குறைவான கொழுப்புச்சத்தும் சோடியம் சத்தும் உள்ளன.

மேலும் இதில் மாங்கனீசு, தயாமின், மக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகளும் உள்ளன.

ஓட்ஸில் மட்டும் தான் புரதச்சத்துகளை உருவாக்கும் தன்மை இருக்கிறது.

சோயா, பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் கிடைக்கும் புரதச்சத்துகளுக்கு இணையாக இதிலும் இருக்கிறது .

அரிசி அவல் கஞ்சி

அரிசி அவல் 6-வது மாத குழந்தையிடமிருந்தே தொடங்கலாம். சிறு குழந்தைகள் சாப்பிட அரிசி அவல் ஏற்றது. 6 மாதத்துக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கும்போதிலிருந்தே குழந்தைகளுக்கு அவல் கொடுத்து பழகலாம்.

அவல் பொடி மிக்ஸ்

தேவையானவை
அவல் – 100 கிராம்
சிறு பயறு – 30 கிராம்
செய்முறை
அவல், சிறு பயறு ஆகியவை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொருட்களைத் தனித் தனியாக எடுத்து அரைத்துக்கொள்ளவும்.

அரைத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
உலர்ந்த, காற்று புகாத டப்பாவில் இவற்றைப் போட்டு சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தைக்கு உணவு தயாரிக்கும் முன் இந்த அவல் பொடி மிக்ஸை எடுத்துக் கிண்ணத்தில் போட்டு, அதில் வெந்நீர் ஊற்றி கலந்து கொள்ளவும். மேலும், சுவையைக் கூட்ட பழக்கூழைக் கலந்து கொள்ளலாம்.

பயணத்துக்கான சிறந்த உணவாகவும் இது அமையும்.
குழந்தையின் பசி, சாப்பிடும் அளவு பொறுத்து 1-3 ஸ்பூன் வரை இந்தப் பொடி மிக்ஸை கலந்து சாப்பிட கொடுக்கலாம்.

சத்துமாவு கஞ்சி

(குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம்)

தேவையானவை :
வீட்டில் தயாரித்த சத்து மாவு – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – அரை கப்
வெல்லப்பாகு – சுவைக்கேற்ப

செய்முறை :
தண்ணீரில் சத்துமாவை கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

இதனை மிதமான தீயில் நன்கு கிளறி ருசிக்காக வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும்.

தெரிந்து கொள்ள வேண்டியது :

இதில் பருப்புகள், தானியங்கள் மற்றும் பல்வேறு சத்துகள் நிரம்பிய பொருட்கள் இருப்பதால் குழந்தையின் உணவில் சிறப்பான ஒன்றாக உள்ளது.

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளில் முதன்மையானது.

தெரிந்து கொள்ள வேண்டியது:

இதில் பருப்புகள், தானியங்கள் மற்றும் பல்வேறு சத்துகள் நிரம்பிய பொருட்கள் இருப்பதால் குழந்தையின் உணவில் சிறப்பான ஒன்றாக உள்ளது

பார்லி கஞ்சி


குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம்

தேவையானவை:
பார்லி – ஒரு டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்

செய்முறை:
பார்லியில் 2 கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக விடவும்.
இதன்பிறகு அதனை ஆறவைத்து மசித்துக் கொள்ளுங்கள்.

இதனை நன்றாக வடிகட்டி ஆறவைத்து பிறகு சிறிது வெந்நீர் சேர்த்து கொடுக்கவும்.

குழந்தை வளர்ந்த பிறகு இத்துடன் வெல்லம் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து தரலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியது :
உமி நீக்காத முழு பார்லி(இது அதிகம் கடைகளில் கிடைக்காது), உமி நீக்கம் செய்யப்பட்ட பார்லி(இது கடைகளில் கிடைக்க கூடியது) இந்த இரண்டையுமே நீங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு வகை இது.
அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை இதில் இல்லை என்பதால் குழந்தைகளுக்கு
முதல் உணவாக இதனை கொடுக்கலாம்.
இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்து அதிகம் இருக்கிறது.
குடல் சார்ந்த பிரச்சினை மற்றும் வயிறு சார்ந்த அலர்ஜி இருந்தால்
ஆரம்ப காலத்தில் இதனை தவிர்க்க வேண்டும்.

பின் குறிப்பு:
குழந்தைகளுக்கு முதல் முதலில் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் அலர்ஜியை ஏற்படுத்தாத உணவு இது.

ரவைக் கஞ்சி

(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்)

தேவையானவை :
ரவை – ஒரு கப்
நெய் – 2 டீஸ்பூன்
பனங்கல்கண்டு அல்லது வெல்லம் – தேவையான அளவு
ஏலக்காய் தூள் – சிறிது
தண்ணீர் – 3 கப்

செய்முறை :
1.பாத்திரத்தில் ரவையை கொட்டி நன்றாக வறுத்துக் கொள்ளவும். இதனை பொடித்துக் கொள்ளலாம் அல்லது அப்படியே சமைக்கலாம்.

 1. ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை ஊற்றி அதை நன்றாக கொதிக்கவிடவும்.
 2. அதில் வறுத்த ரவையை சிறிது சிறிதாக கொட்டி கட்டிகளில்லாமல் நன்றாக கிளறவும்.
 3. ரவை பாதி வெந்து கொண்டிருக்கும்போது பனங்கல்கண்டை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும்.
 4. ரவையும் பனங்கல்கண்டும் நன்றாக சேர்ந்து இறக்குவதற்கு முன் நெய்யை சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
 5. குழந்தைகள் எளிதாக சாப்பிடுவதற்கு ஏற்றவகையில் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து தரவும்.

தெரிந்து கொள்ள வேண்டியது :
கடைகளில் ரவை வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்குங்கள்.

எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வயிற்றுக்கு போதுமான உணவு என்பதால் இதனை இரவு நேர உணவாக கொடுக்கலாம்.

கோதுமை மற்றும் கோதுமை மாவு தயாரிப்பின் போது கிடைக்கும் பொருள்தான் ரவை.

இதில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தயாமின், செலினியம் உள்ளது. மேலும் கொலஸ்ட்ரால் இதில் இல்லை என்பதால் குழந்தைக்கு ஏற்றது.

கேரட் சாதம்

தேவையானவை :
அரிசி – 2 கப்
துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
துருவிய கேரட் – 1
சீரகம் அல்லது சீரகத்தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
பூண்டு – 2 தேவையெனில்
நெய் – சிறிது

செய்முறை :
அரிசி மற்றும் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து கழுவிக் கொள்ளவும்.

தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் நெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். நிறம் மாறும் வரை வதக்கிய பிறகு தக்காளி, கேரட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூளையும் சேர்க்கவும்.

இதன்பிறகு அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை விடவும்.

இதனை மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

தக்காளி சாதம்

தேவையானவை :
அரிசி – 2 கப்
துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
சீரகத்தூள் அல்லது சீரகம் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
பூண்டு – 2 தேவையெனில்
நெய் – சிறிது

செய்முறை :
அரிசி மற்றும் பருப்பை அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.

 1. தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்றாக வெட்டிக் கொள்ளவும்.
 2. பிரஷர் குக்கரில் நெய் சேர்த்து அதில் சீரகம் சேர்த்து பொறிக்கவும்.
 3. இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி பிறகு தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
 4. நெய் பிரிந்து வரும் வரை வதக்கியபிறகு அரிசி மற்றும் பருப்பை இதில் போட்டு 3 கப் தண்ணீரை ஊற்றி 3 விசில் வரும் வரை விடவும்.
 5. இதனை மசித்து குழந்தைக்கு தரலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியது :
“சில குழந்தைகளுக்கு தக்காளி ஒத்துக்கொள்ளாமல் டயாபர் ரேஷ்களை உருவாக்கும். எனவே முதன்முதலில் தக்காளியை சூப் வடிவிலோ ஜூஸாகவோ கொடுத்தபிறகு மற்ற உணவுகளை செய்யவும். ஒருவேளை குழந்தைக்கு தக்காளி ஒத்துக் கொள்ளவில்லை என்றால் 2 ஸ்பூன் புளிக்கரைசலை இதில் ஊற்றினால் புளிப்பு சுவை கிடைக்கும்”

நெய் சாதம்

தேவையானவை:
வேகவைத்த சாதம் – அரைகப்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:
சாதம், சீரகத்தூள், நெய் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

தேவையெனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இதனால் குழந்தைகள் எளிதாக சாப்பிட முடியும்.

நெய்யின் நன்மைகள் :
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சளி மற்றும் இருமலை விரட்டும்

குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு நெய் பேருதவியாக உள்ளது.

தினமும் ஒரு டீஸ்பூன் நெய் கொடுத்து வந்தால் குழந்தைக்கு போதிய வைட்டமின் சத்துகள் கிடைக்கும்.

பால்சார்ந்த பொருட்களை விரும்பாத குழந்தைக்கு நெய் கொடுக்கும் போது கவனமாக இருங்கள்.

பருப்பு சாதம்

குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம்

தேவையானவை
அரிசி – 2 கப்
துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு கப்
பூண்டு – 2 பல்
பெருங்காயம் – தேவையெனில்
நெய் – சிறிது

செய்முறை :
அரிசி மற்றும் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கழுவவும்.

பிரஷர் குக்கரில் அரிசி, பருப்பு, பூண்டு மற்றும் பெருங்காயம் இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரை விடவும்.

பிறகு இத்துடன் நெய் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கவும்.

தோசை

தேவையானவை:
தோசை மாவு – ஒரு கரண்டி
நெய் – ஒரு டீஸ்பூன்
தோசை மாவை தயாரிப்பது எப்படி?
தோசை மாவை தயாரிப்பது எளிதானது. இதனை 2 வழிகளில் நீங்கள் செய்யலாம்.

முறை 1:
இட்லி அரிசி – 4 கப்
முழு உளுந்து – ஒரு கப்
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்

அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைத்து தனித்தனியாகவே அரைத்துக் கொள்ளவும்.

ஒருவேளை முழு உளுந்து உங்களுக்கு சரியாக வரவில்லை என்றால் பாதியாக உடைத்த உளுந்தை பயன்படுத்துங்கள்.

முதலில் உளுந்தை நன்றாக அரைத்துவிட்டு அதன்பிறகு அரிசியை அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும்.

தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
மாவு பொங்கி வரும் என்பதால் இதனை பெரிய அளவிலான பாத்திரத்தில் வைக்கவும். மிதமான வெப்பநிலை உள்ள இடத்தில் 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்து மாவு நன்றாக பொங்கி வந்த பிறகு பயன்படுத்தவும்.

முறை 2:
இட்லி அரிசி கிடைக்கவில்லை என்றால் சாதாரண அரிசியை பயன்படுத்தலாம்.

அரிசி – 3 கப்
உளுந்து – 1 கப்
அவல் – 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்

அரிசியை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள்.
உளுந்தை சாதாரண நீரில் ஊறவைத்து மேற்கண்ட முறையை பின்பற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் அவலை ஊறவைத்தால் போதுமானது

தோசை செய்முறை:
தோசை செய்வதற்கு பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் சாப்பிடும் பாத்திரங்கள் அனைத்தையும் வெந்நீரை கொண்டு நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி மாவை சிறிய அளவில் வட்டமாக ஊற்றிக் கொள்ளுங்கள்.

தோசையில் துளைகள் வரும் போது நெய்யை ஊற்றி மேலாக ஊற்றி அதனை மூடி போட்டு வேக விடவும்.

சில நிமிடங்கள் ஆனபிறகு மூடியை எடுத்துவிட்டால் மிருதுவான தோசை கிடைக்கும்.

குழந்தைகளுக்கு தோசையை முதலில் கொடுக்கும் போது வெந்நீரை கலந்து மசித்து தரலாம். 7 மாதங்களுக்கு பிறகு சட்னி பொடி அல்லது தக்காளி வெங்காய சட்னி ஆகியவையுடன் சேர்த்து தோசையை கொடுக்கலாம்…

பால் ஓட்ஸ் கஞ்சி

இதை செய்ய, தேவையானது 1/4 கப் இயற்கை ஓட்ஸ், 3/4 கப் தண்ணீர் , இனிப்பு பொருள் எதாவது மற்றும் பால்.

4-6 மாத குழந்தைக்கு ஓட்ஸை நன்கு பொடியாக்கி தண்ணீரில் கலக்க வேண்டும். பின் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்தவுடன் பாலை கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

பட்டாணிக் கஞ்சி

இதற்கு தேவையானது, மூன்று கப் இயற்கை பட்டாணி மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் மட்டும்தான். பட்டாணியை ஊறவைத்து பின் 2 நிமிடம் வேகவைக்க வேண்டும். பின் தண்ணீர் கலந்து பதமாக வந்தவுடன் குழந்தைக்கு ஊட்டுங்கள்.

மசிக்கப்பட்ட வாழை

இது மிகவும் எளிமையான ஒன்று. உங்களுக்கு தேவையெல்லாம் வாழைப்பழங்கள் மட்டும்தான், பழங்களை உரித்து நன்கு பிசைந்துகொள்ள வேண்டும். 4-6 மாத குழந்தைகளுக்கு இது மிகவும் உகந்த உணவாகும்.

கேரட் கூழ்

இதைச் செய்ய முதலில் கேரட்டை கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் அதை அரைமணி நேரம் நன்கு வேகவைக்கவும். நன்றாக வெந்தபின் அதை மசித்து கொள்ளவேண்டும். இதை 6 மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு கூட கொடுக்கலாம்.

அவோகேடோ

இதுவும் வாழைப்பழ மசியல் போன்றதுதான். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் அவோகேடாவை நன்கு சுத்தம் செய்து விதைகளை எடுக்க வேண்டும். தோலை உரித்த பின் நன்கு பிசைந்துகொள்ள வேண்டும். 10-12 மாத குழந்தைகளுக்கு சற்று சிறிய துண்டுகளாக கொடுக்கலாம் ஆனால் 4-6 மாத குழந்தைகளுக்கு கூல் போல பிசைந்து கொடுக்கவேண்டும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

இது குழந்தைகளுக்கு மிகவும் சுவையான மற்றும் சத்தான உணவாகும். இதை செய்ய முதலில் கிழங்கின் தோலை சீவி, நன்கு கழுவ வேண்டும்.

பின் அதை பாத்திரத்தில் போட்டு மென்மையாக வேகும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் வற்றியவுடன் கிழங்கை எடுத்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். எந்த அளவு முடியுமோ அவ்வளவு கூல் போல பிசைந்து குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.

ஆப்பிள் கூழ்

இது மிகவும் விரைவாக செய்யக்கூடிய சுவையான உணவாகும். முதலில் ஆப்பிளை நான்காக வெட்டி விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் இந்த துண்டுகளை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொடுக்க வையுங்கள். 10-15 நிமிடம் கழித்து ஆப்பிள் துண்டுகளை எடுத்து நன்கு ஆறவையுங்கள்.

இதை நன்கு பிசைந்து பிரிட்ஜ்-ல் வைத்து வேண்டும்பொழுது எடுத்து குழந்தைக்கு ஊட்டுங்கள்.

தயிர்க் கிச்சடி

தேவையானவை
அரிசி – 1 கப்
சிறு பயறு – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – 5 இலைகள்
தயிர் – ¼ கப்
நெய் – தாளிக்க சிறிதளவு

செய்முறை
அரிசியையும் சிறுபயறையும் நன்றாகக் கழுவி வேக வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் பிளெயின் கிச்சடி.

பிளெயின் கிச்சடி ஆறியதும் அதில் தயிரைச் சேர்த்துக் கலக்கவும்.

தவாவில் நெய் ஊற்றி, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.கடுகு வேண்டுமென்றால் சேர்த்து கொள்ளலாம்.

மேலும், அதில் கறிவேப்பிலையைப் போட்டு தாளிக்கவும். (குழந்தைக்கு வாயில் சிக்காதபடி சிறிது சிறிதாகக் கிழித்துப் போடுங்கள்)

தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கலாம்.

இதே தாளித்த பாத்திரத்தில், தயிர் சேர்த்த கிச்சடியைக் கலந்து ஓரிரு நிமிடம் சூடேற்றி இறக்கிவிடவும்.
வெதுவெதுப்பான சூட்டில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

பலன்கள்
தயிரில் உள்ள நல்ல பாக்டீரியா குழந்தைகளின் வயிற்றுக்கு நல்லது செய்யும்.

கால்சியம் இருப்பதால் எலும்புகள், பற்கள் வளர்ச்சிக்கு உதவும்.

உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வெப்பக் காலத்துக்கு மிகச்சிறந்த உணவு.

செரிமானச் செயல்பாடுகள் சீராக நடக்கும்.

மாவுச்சத்து, புரதம் இரண்டும் சேர்வதால் தசை வளர்ச்சிக்கு நல்லது.

ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு இது.

மதிய உணவாக இந்தத் தயிர் கிச்சடியைக் கொடுக்கலாம். இரவில் இதைச் செய்து கொடுப்பதைத் தவிர்க்கவும்.

குழந்தைகளுக்கு ஆறுமாத காலமாகிவிட்டால் நன்கு சத்தான,எளிமையான திட உணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.ஏனென்றால் அதுவரை தாய்ப்பால் மட்டுமே அருந்திய குழந்தைகள் திட உணவினை புதிதாக ருசிக்க ஆரம்பிக்கும் காலமது.

நாம் கொடுக்கும் உணவு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருந்தால் குழந்தைகளுக்கு அஜீரணக்கோளாறுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கலாம்.

மேலும் குழந்தைகளுக்கு திட உணவினை ருசிப்பதற்கான ஆர்வத்தை அதிகப்படுத்தும்.

பொரிகடலை அரிசி கஞ்சி

தேவையானவை
கைக்குத்தல் அரிசி – 4 டே.ஸ்பூன்
பொரிகடலை – 2 டே.ஸ்பூன்
சுக்குத்தூள் – ½ டீ.ஸ்பூன்

செய்முறை

1.அரிசியை கழுவி நன்றாக வெயிலில் காயவைக்கவும்.

2.காய்ந்த அரிசியை பானில் பொன்னிறமாக உப்பி வரும்வரை மிதமான தீயில் வறுக்கவும்.

3.ஒரு ஓரமாக வைக்கவும்.அதே பானில் பொரிகடலையை பொன்னிறமாகும்வரை அரைக்கவும்

மிக்சி ஜாரில் வறுத்த அரிசி,பொரிகடலை மற்றும் சுக்குத்தூள் சேர்த்து அரைக்கவும்.

பானை சூடாக்கி அதில் 2 கப் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.

2 டே.ஸ்பூன் கஞ்சிப்பொடியை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.

மிதமான தீயில் 5-10 நிமிடங்களுக்கு கஞ்சி பதம் வரும் அளவிற்கு கலக்கவும்.

இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் சில உணவுப் பொருட்கள்

அதிக கலோரிகள் நிரம்பிய சத்தான உணவுகள் :

கெட்ட கொழுப்புகளை உருவாக்கி உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளை விட, கலோரிகள் அதிகம் நிரம்பிய சத்தான உணவுகளை கொடுப்பது ஆரோக்யமானதும் கூட. ஐஸ்க்ரீம், சாக்லேட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் இவற்றை கொடுக்க வேண்டாம்.

வாழைப்பழம் :

குழந்தையின் 6 மாதத்தில் இருந்து வாழைப்பழத்தை தரலாம். ஏனெனில் குழந்தையின் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 உள்ளிட்ட ஏராளமான சத்துகள் வாழைப்பழத்தில் உள்ளது.

பேரிக்காய் :

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளில் பிரதான இடம் பேரிக்காய்க்கு உண்டு. குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு தேவையான இரும்பு சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற சத்துகள் எல்லாம் இந்த பழத்தில் அதிகம் காணப்படுகிறது.

பச்சைப்பட்டாணி :

பச்சைப்பட்டாணியை 6 மாதங்களுக்கு பிறகு நீங்கள் தரலாம். குழந்தைக்கு தரும் திட உணவுகளில் சத்துகள் அதிகம் நிரம்பியதாக இது இருக்கிறது. அதிகளவிலான நார்ச்சத்து, தயாமின், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற எல்லா சத்துகளும் இதில் ஒருங்கே கிடைக்கிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு:

குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் சுவை மிகுந்த சத்தான கிழங்கு வகை இது. இதனை நீங்கள் 6வது மாதத்தில் இருந்து தரலாம்… இதில் குறைந்த அளவில் கொழுப்பும், அதிகளவிலான நார்ச்சத்தும், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகியன இருக்கிறது.

நெய்:

உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளில் சிறந்த ஒன்றாக இருக்கிறது நெய். 7 மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கும் எல்லா உணவுகளிலும் ஒரு டீஸ்பூன் நெய்யை சேர்த்துக் கொள்ளலாம். முதலில் சிறிதளவு கொடுத்து அதன் பிறகே அளவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும்.

உலர் பழங்கள் :

உலர் பழங்களான பாதாம், பிஸ்தா, அத்தி, முந்திரி ஆகிய பொருட்கள் குழந்தையின் எடையை அதிகரிக்க உதவுகிறது. இதனை எல்லாம் தூள் செய்து அனைத்து விதமான உணவுகளிலும் சேர்த்து குழந்தைகளுக்கு தரலாம்..

கோதுமை :

முழு கோதுமையை பெரும்பாலானோர் கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை .ஆனால் அதில் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான நார்ச்சத்தும் கூடவே நல்ல கொழுப்புச்சத்தும் அதிகம் இருக்கிறது. கோதுமையை பாதியாக உடைத்து ரவை போல கிடைக்கும் சம்பா கோதுமை ரவையை பயன்படுத்துவதும் நல்லது.

ஓட்ஸ்:

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிகளுக்கும் உணவுகளில் ஓட்ஸூக்கு சிறப்பிடம் உண்டு. இதில் குறைவான அளவில் கொழுப்பு, மக்னீசியம், தயாமின், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் இருக்கின்றன. புரோட்டீன் சத்துகள் அதிகம் நிரம்பிய உணவு இது. இதனை ஓட்ஸ் கஞ்சி, கீர் போல தரலாம்.

பட்டர் ப்ரூட்:

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான நார்ச்சத்துகள் மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய கொழுப்பு சத்துகளும் அதிகம் நிரம்பிய பழம் இது. இதனை 6 மாதங்களுக்கு பிறகு கொடுக்கலாம்.

கேழ்வரகு :

குழந்தைகளின் உடல் எடையை அதிகமாக்குவதோடு அதிகளவிலான சத்துகளை தரும் உணவாக இருக்கிறது கேழ்வரகு. இதில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் பி1, பி2, பி6 ஆகிய சத்துகள் அதிகம் உள்ளன. இதனை கஞ்சியாக செய்து கொடுக்கலாம். ஆப்பிளுடன் சேர்த்து கொடுத்தால் சுவையாக இருக்கும். வெறும் கேழ்வரகை விட முளைக்கட்டிய கேழ்வரகு தான் சிறந்தது.

சத்துமாவு :

வீட்டில் தயாரிக்கப்படும் சத்துமாவு குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ற ஒன்று. இதில் பருப்பு வகைகள், தானியங்கள் உள்ளிட்டவை சேர்க்கப்படுவதால் சத்துகள் அதிகம் நிரம்பியது. இதில் சேர்க்கப்படும் பொருட்களையும் நீங்கள் முளைக்கட்டிய பிறகு வறுத்து அரைத்து பயன்படுத்தினால் பலன் அதிகம் கிடைக்கும்.

ஆலிவ் ஆயில் :

குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் உணவுகளை எல்லாம் ஆலிவ் எண்ணெயில் சமைப்பது சிறந்தது. காரணம் மற்ற எண்ணெய்களில் இருக்கும் சத்துகளை விட ஆலிவ் எண்ணெயில் உடல் நலத்துக்கு ஏற்ற கொழுப்பு சத்துகள் அதிகம்.

உருளைக்கிழங்கு

குழந்தைகளுக்கு திட உணவை அறிமுகப்படுத்தும் போது முதலில் கொடுக்க ஏற்றவை உருளைக்கிழங்கு. குழந்தைகள் இதனை சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் மிருதுவாக இருப்பதுடன், எளிதான முறையில் மசிக்க கூடியது. இதில் தாதுச்சத்துகள், வைட்டமின் சத்துகள் உள்ளன. ஆனால் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகம் நிரம்பிய காய் இது.

சுத்தமான தேங்காய் எண்ணெய்:

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கவும், எளிதில் ஜீரணிக்கவும் தேங்காய் எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. குழந்தைகளுக்கான சமையலில் இந்த எண்ணெயை சேர்த்துக் கொண்டால் நீங்கள் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்…

[வயதானவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த உணவு முறை நன்மை தரக்கூடியது.]

Scroll to Top