You cannot copy content of this page

காய்கறிகள் வாங்குவது எப்படி ?

சமைத்த உணவு சுவையாக இருக்கவேண்டும் என்றால், வாங்கும் காய்கறிகள் நல்லதாக இருக்கவேண்டும். அதை சத்துள்ள, ஃப்ரெஷ்ஷான காய்களாகத் தேர்ந்தெடுப்பது ஒரு கலை.

சிலருக்கு காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும் என்பது பிடிபடுவதில்லை. ஒவ்வொரு காய்கறியையும் எப்படி தரம் பார்த்து வாங்கவேண்டும். அப்படி, நீங்கள் வாங்கும் காய்கறிகளில் அவசியம் கவனிக்க வேண்டியவை இதோ:

கீரை வகைகள்: கீரைகள் அன்று பறித்ததாய், புதியதாய், பசுமையாக, முகர்ந்து பார்த்தால் கெட்ட வாடை ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். கீரைக் கட்டில் நடுப் பகுதியைப் பிரித்துப் பார்க்க வேண்டும் ‘சொத சொத’வென்று வேர்கள் அழுகி ஈரப் பசை இல்லாமல் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். சாக்கடை ஓரங்களில் பறித்த கீரைகளை அழுகலும் வாசமும் காட்டிக் கொடுத்துவிடும். எந்தக் கீரையாக இருந்தாலும் பூச்சி அரித்ததாக இருக்கக்கூடாது. ஒன்று இரண்டு ஓட்டைகள் இருந்தால் பரவாயில்லை .

புதினா, கொத்தமல்லி இலைகள்: அதனதன் இயற்கை வாசத்துடன் இருக்கறதா என்று கவனித்து எடுக்க வேண்டும். கறிவேப்பிலை வாடாமல் புதியதாய், மணமாய், செங்காம்புடன் கூடிய தளிர் இலைகளாகப் பார்த்து வாங்கவும். வேப்பிலை போல இருக்கும் கறிவேப்பிலைகளில் மணம், ருசி இருக்காது.

தக்காளிப் பழம்: நாட்டுத் தக்காளி, பெங்களூரு தக்காளி இரண்டு வகைகளிலுமே நன்கு சிவந்து கெட்டியானதாகவும், காயாகவும் பார்த்து எடுக்க வேண்டும். தோல் பகுதி கொழகொழப்பாக இருந்தால் சீக்கிரம் கெட்டு போய் விடும். (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

பீட்ரூட்: நல்ல சிவப்பு நிறத்தில் கெட்டியாகவும் உருண்டையாகவும் இருக்க வேண்டும். கிள்ளினால் சிவப்பு நிறச் சாறு நம் கைகளில் ஒட்ட வேண்டும்.

பீர்க்கங்காய்: குண்டு ரகத்தை விட, கரும்பச்சையில் நீளவாக்கில் வரும் காய்களுக்குத்தான் ருசி அதிகம். பீர்க்கங்காய் பார்ப்பதற்கு பச்சைப் பசேல் என்று இருப்பதை வாங்கவேண்டும். மேலும் அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்கவேண்டும்.

கேரட்: நல்ல ஆரஞ்சு நிறத்தில் இளசாகவே தேர்வு செய்யுங்கள். பெரிய கேரட்களில் நடுப்பகுதி சுவையாக இருக்காது.

உருளைக்கிழங்கு: தழும்புகள், ஓட்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும். பச்சையாகவோ அல்லது பச்சை நிறத்தழும்புகள் இருந்தாலோ தவிர்க்கவும். தோல் சுருங்கியவற்றையும் வாங்கக்கூடாது. செம்மண் வாசத்துடன் உருண்டையாய், கெட்டியாகவும், மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும். மஞ்சள் நிறத்தின் இடையே நடுவில் பச்சை நிறத்தில் நரம்பு போன்ற வரிகள் இல்லாமல் இருக்க வேண்டும். முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து விரல் நகத்தினால் கீறினால் தோல் வரவேண்டும். எளிதாக சுரண்ட வந்தால் அதுதான் புதுக் கிழங்கு. இதுதான் நல்ல உருளைக் கிழங்குக்கு அடையாளம்.
கருணைக் கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. பெரிய அளவில் வெட்டினால், வெட்டிய பகுதி இளம் சிவப்பு நிறத்தில் கெட்டியாக இருக்க வேண்டும். வெட்டிய கிழங்கை வாங்கினால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும். நீண்டிருக்கும் கிழங்கு சுவை தராது. மேலே கீறிப் பார்த்தால் உள்ளே வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு.சின்ன உருண்டைகளாக ஒன்று போல் இருக்க வேண்டும்.

சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

முருங்கைக்காய்: கரும்பச்சை நிறத்திலும் சற்று உருண்டையாகவும் இருக்கும் முருங்கைக்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் உள்ளே சதை இருக்காது என்பதால் தவிர்க்கவும். இரு முனைகளைப் பிடித்து லேசாக முறுக்கினால் வளைத்துகொடுக்கவேண்டும். அதுவே இளசான காய். அதுவே முறுக்கும்போது மளமளவென்று சத்தம் கேட்டால், அது முற்றல். தவிர்க்கவும். முருங்கைக்காயை: இரண்டு நுனிகளையும் பிடித்து முறுக்கினால் நன்கு வளைந்து அதன் விதைகள் புடைத்துத் தெரியாமல் இருக்க வேண்டும்.

காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்.லேசான மஞ்சள் நிறத்தில் இருந்தால் மருந்து அடிக்காதது. பூ அடர்த்தியாக, பூச்செண்டு போல் இருக்க வேண்டும்.

பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது. இளம் பச்சையாய், உருண்டையாகவும், விதைகள் புடைத்துக் கொண்டு தெரியாமலும் இருக்க வேண்டும். மேல் தோலின் மேல் இருக்கும் செதில் போன்ற பகுதி அடர்த்தியாக இருக்க வேண்டும்.

முள்ளங்கி: காய் நீண்டு, தலைப்பகுதி காம்பு நிறம் மாறி வாடிவிடாமல் பச்சையாக இருக்க வேண்டும். நீளமாக, வெண்மையாக, கீரையுடன் கூடியதாக இருந்து, நகத்தால் கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு, சமைக்க உகந்தது.

பீன்ஸ்: ஃப்ரெஷ் பீன்ஸ் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். உடைத்தால் பட்டென்று உடையும். அதுதான் சமையலுக்குச் சுவையாக இருக்கும். வெளிர்பச்சை நிறத்தில் இருந்தால் அது முற்றிய பீன்ஸ். நாள்பட்ட பீன்ஸும் வதங்கி வெளிர்பச்சையாகக் காட்சியளிக்கும்; தவிர்க்கவும். டபுள் பீன்ஸ்ஸை தடவினால், அதனுள் இருக்கும் கொட்டைகள் நன்கு பெரியதாக இருக்க வேண்டும். பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

கத்தரிக்காய்: ஓட்டை இருந்தால் உள்ளே புழு இருக்கும் என்பதால், சிறு ஓட்டைகூட இல்லாமல் நன்றாகப் பார்த்து வாங்கவேண்டும். காம்பு நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல் என்று அர்த்தம். காய் முழுக்க ஒரே நிறத்தில் பளபளவென்று இருப்பது நல்ல காய். இளம் நீலத்துடன் பச்சை நிறம் கலந்து இருக்க வேண்டும். தோல் மிருதுவாய், காம்பு நுனி வரை பச்சை நிறத்துடன் இருக்க வேண்டும். பச்சை நிறத்தில் உள்ள கத்தரிக்காய் மீது வெள்ளை வரிகள் இருந்தால் அது கசக்கும்.

பெரிய கத்தரிக்காய்: நன்கு பெரிதாய், குண்டாய் தோல் மெத்தென்று இருக்க வேண்டும். இது சட்னிக்கு, மசியலுக்கு ருசியாக இருக்கும்.

வாழைப்பூ : இதழ்களை மேலாகப் பிரித்துப் பார்த்தால் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். பூக்களின் நுனியில் கறுப்பு அடிக்காமல், பூ இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

வாழைக்காய்: காம்பு ஒடிந்த இடத்தில் வெள்ளையாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது.கீழ் நுனி மஞ்சள் நிறம் இல்லாமல் இருக்க வேண்டும். காம்பு பச்சையாக இருக்க வேண்டும். காம்பு பழுத்து ‘பொத பொத’ வென்று இருந்தால், வாழைக்காய் பாதி பழுத்து விட்டதென அர்த்தம். வாங்கி வந்தபிறகு சுத்தமாகக் கழுவிவிட்டு தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்.

வாழைத் தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். அடிப்பகுதி பெரிதாய் இருந்தால் நார் அதிகம் இருக்கும். எளிதில் செரிக்க, நடுப் பகுதி, மேல் பகுதி எல்லாம் இளம் தண்டாக இருக்கணும்.

வெண்டைக்காய்: விரல் நீளத்திற்கு பச்சை நிறத்தில் இருக்கவேண்டும். நுனியை உடைத்தால் படக்கென்று உடையவேண்டும், அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்தாலோ, இரண்டாகப் பிளந்தாலோ அல்லது காம்பு சுருங்கியிருந்தாலோ அது முற்றல் வெண்டைக்காய்.

சௌசௌ: காயின் மேல் பகுதியில் விரிசல்கள் பெரியதாக இல்லாதபடி பார்த்து வாங்கவும். விரிசல்கள் பெரியதாக இருந்தால் அது முற்றிய காய். சௌ சௌ பெரியதாக இல்லாமல் நடுத்தரமாகவும், இளம் பச்சை நிறத்தில் பிளவுகள் அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும்.

அவரைக்காய்: ஒவ்வொரு காயையும் தொட்டுப் பார்க்கவும். அதில் விதைகள் பெரியதாக இருக்கும் காய்களைத் தவிர்க்கவும். இளசாக இருக்கும் காய்களில் விதைகள் சிறியதாக இருக்கும், நார் அதிகம் இருக்காது.காய்களுக்குள் விதைகள் புடைத்து தெரியக்கூடாது. நாட்டுக் காயாக இருக்க வேண்டும்.

முட்டைக்கோஸ்: இலைகள் வெள்ளையாக இருக்கக்கூடாது; பச்சை உள்ளவையாகப் பார்த்து வாங்கவேண்டும். அதுதான் இளசு. முட்டைக்கோஸ் அளவில் சிறியதாகவும் கனமாகவும் இருந்தால் சுவையாக இருக்கும். நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருக்கவேண்டும். தவறினால் அது பழையது என்று அர்த்தம். கெட்டியாக, உருண்டையாக, பசுமையாக இருக்க வேண்டும். நடுத்தண்டு புதியதாக இருக்கும்படி பார்த்து வாங்கவும்.

புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

கொத்தவரை: காயை லேசாக வளைத்தால் வளைய வேண்டும். பட்டுனு உடைந்தால் அது முற்றல்தான். தவிர்த்து விடுங்கள்.

சுண்டைக்காய்: வாங்கும்போது, பால் சுண்டைக்காய் என்று கேட்டு வாங்கவும். இளம் பச்சையாக அதிகம் முற்றாததாக இருக்க வேண்டும்.

சுரைக்காய்: நீள வடிவு, குண்டு ரகம் என இரண்டு வகைகளில் கிடைக்கும். தோல் பசுமையாக இருந்து நகம் சுலபமாக பதிய வேண்டும். நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

மாங்காய்: தேங்காயைக் காதருகே வைத்து தட்டிப் பார்ப்பது போல மாங்காயையும் தட்டிப் பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போது சத்தம் வந்தால் அந்த மாங்காயில் கொட்டை சிறியதாக இருக்கும், சதைப்பகுதி நிறைந்திருக்கும்.

மாங்காய் ஊறுகாய்: போடுவதற்கு கிளி மூக்குமாங்காயில் பெரியதாக அடர் பச்சை நிறத்தில் வாங்க வேண்டும். தட்டிப் பார்த்தால் சத்தம் வரும்.

வடுமாங்காய்: காம்புகளுடன் கூடிய, உருண்டையான, வெம்பாத, பழுக்காத பிஞ்சுகளாக ஒரே சைஸில் இருக்க வேண்டும்.

பச்சை மிளகாய்: காயும் காம்பும் பச்சையாக இருந்தால் ஃப்ரெஷாக இருக்கும். காம்புகள் சுருங்கி, கறுத்தப் போயிருந்தால் பழையது என்று அர்த்தம். மிளகாய் நீளமாக இருந்தால் காரம் குறைவாக இருக்கும். அதுவே குண்டாக இருந்தால் காரம் அதிகமாக இருக்கும்.

கோவைக்காய்: முழுவதும் பச்சையாக இருக்கவேண்டும். இளம் சிவப்பு, மஞ்சள் இருக்கும் காய்களை வாங்க வேண்டாம். முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்.அது பழுக்கும் நிலையில் இருப்பதால் ருசி இல்லாமல் இருக்கும். காயின் நடுவே சிவப்பு நிறம் காணப்பட்டால் உள்ளே பழுத்திருக்கும். ருசியாகவும் இருக்காது. அதன் மருத்துவக் குணமும் நமக்குக் கிடைக்காது.

மணத்தக்காளிக்காய்: சிறு சிறு குந்து மணிகளாய் பசுமையான நிறத்தில் இருக்க வேண்டும். காய்கள் பழுத்திருக்கக்கூடாது.

வெள்ளரி: மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும். நகத்தில் கிள்ளிப் பார்த்தால் நகம் சுலபமாக உள்ளே இறங்க வேண்டும். சாலட் செய்ய விதைகள் குறைவாக உள்ளதை வாங்க வேண்டும்.

சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்.ரோஜா நிறத்தில், குட்டி குட்டியாய், வெங்காயத்தின் நுனி அழுகாமலும், நுனி முளை விடாதபடியும் இருக்க வேண்டும்.

பெரிய வெங்காயம்: மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

பெல்லாரி வெங்காயம்: மேல் தோல் ரோஜா நிறத்துடன், நுனிப் பகுதி அழுத்தினால் கெட்டியாகவும் இருக்க வேண்டும்.

பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

குடை மிளகாய் : காம்பு நல்ல அடர் பச்சை நிறத்தில் தோல் சுருங்காமல் இருக்க வேண்டும்.
கரும் பச்சையில் வாங்க வேண்டாம். அடிபட்டிருக்கும்.

பூண்டு: நாட்டுப் பூண்டு, மலைப் பூண்டு எதுவாக இருந்தாலும் மேல் தோல் ஈரம் இல்லாமல் சருகாயும், பல், பல்லாகவும் இருக்க வேண்டும். சில பூண்டுகளில் விரல்களை வைத்தால் அமுங்கும். சொத்தையும் இருக்கும். அவைகளைத் தவிர்த்து விட வேண்டும்.பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்.

இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார்ப் பகுதி குறைவாக இருக்கும். கணுக்கள் குறைவாக, நடுப்பகுதி இஞ்சியாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் நார் குறைவாக இருக்கும். தோலை சுரண்டினால் எளிதில் உரிந்து வரவேண்டும்.

வெண் பூசணி: காய் நன்கு விளைந்ததாய், நுடத்தர அளவில் விதைகள் முற்றி சதைப் பகுதி மிருதுவாய் இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.

சிவப்பு பூசணி: நல்ல அடர் ஆரஞ்சும், மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்க வேண்டும். விதைகள் முற்றி இருந்தால்தான் இருப்பு ருசியாக இருக்கும்.

பச்சை பட்டாணி: விதைகள் நன்கு முற்றி பெரிதாகவும், நெருக்கமாகவும் இருந்தால் நல்லது.

மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

புரோக்கலி: அடர்த்தியாய் கரும் பச்சையில் புதிய பூவாக வாங்க வேண்டும்.

கற்றாழை: சதைப் பற்றுடன் தடிப்புடன் இருந்தால்தான் நடுவில் உள்ள ஜெல் பகுதி அதிகம் இருக்கும்.

மரவள்ளிக் கிழங்கு: மண்துகள்கள் ஒட்டிய நிலையில் உருண்டு திரண்ட கிழங்குகளை தேர்வு செய்யுங்கள். தோலைச் கீறினால் மஞ்சள் நிறம் இருக்ககூடாது. பால் போல் வௌ்ளையாக இருந்தால் அது தான் புதுக் கிழங்கு.

மக்காச் சோளம்: வாங்கும்போது, மேலே போர்த்தியிருக்கும் சருகு போன்ற பகுதிக்கு அடியில் இருக்கும் சோள முத்தை நகத்தை வைத்து லேசாக அழுத்திப் பார்க்க வேண்டும். நகம் மெதுவாகச் சென்றால், சோளம் சரியான பதத்தில் விளைந்திருக்கிறது என்று அர்த்தம். இதுவேக வைத்து உதிர்த்துச் சாப்பிடுவதற்குச் சரியான பதம். இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

சோயா பீன்ஸ்: விதைகள் முற்றி இருப்பதைத் தான் தேர்வு செய்ய வேண்டும்.

காளான்: நல்ல வெண்மை நிறமாக இருக்க வேண்டும். முழுக்காளானிலும் கறுப்பு பகுதி இல்லாமல், திடமாக இருக்க வேண்டும். லேசான பழுப்பு நிறம் இருந்தாலும் அந்தக் காளான் வேண்டாம்.

எலுமிச்சம் பழம்: நல்ல பசு மஞ்சள் நிறத்தில் மெல்லிய தோல் உடையதாகவும், தோலின் மேல் கரும்புள்ளி இல்லாததாகவும் இருக்க வேண்டும்.

காராமணிக்காய்: பசுமையுடன் கூடிய இளம் காய்களாகத் தேர்வு செய்ய வேண்டும். முற்றிய காய்களில் நார் அதிகம் இருந்து ருசியைக் கெடுக்கும்.

நார்த்தங்காய்: பெரியதாய், கரும்பச்சை நிறத்தில் கனமுள்ளதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் காயினுள் சாறு அதிகம் இருக்கும்.

நெல்லிக்காய்: பச்சையாக, பெரியதாக இருக்க வேண்டும். கரும்புள்ளி இருக்கக்கூடாது.

தேங்காய்: பெரிதான சட்டி போன்ற காய்கள் வேண்டாம். நீளவாக்கில் உள்ள காய்களின் பருப்பு, கூடுதலான இனிப்பு சுவையுடன் இருக்கும். மூன்று கண் உள்ள பகுதி கறுப்பு தட்டாததாகப் பார்த்து எடுக்கவும். காயை காதருகில் வைத்து ஆட்டினால் நீர் ஆடும் சத்தம் கேட்க வேண்டும்.

Scroll to Top