You cannot copy content of this page

சூரிய வழிபாடு

சூரிய வழிபாடு

சூரியனைப் பரம்பொருளாக “ஆதித்ய ஹிருதயம்” கூறுகிறது. “மார்க்கண்டேய புராணம்”, “பவிஷ்ய புராணம்” முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன.

மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் “காயத்ரி” சூரியனுக்கு உகந்த மந்திரம்.

தை மாதம் முதல் நாள் – சூரியன் மகர ராசிக்குள் (உத்தராயணம்) பிரவேசிக்கும் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு சூரிய வழிபாடு நடத்துகிறார்கள்.

கீதையில் கண்ணபிரான் ‘ஜ்யோதிஷம் ரவிர் சும் சுமான்’ என்று கூறி, ஜ்யோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

எனினும் சூரியனை சிவசூரியன் எனும் பெயரில் சிவரூபமாகவும் குறிப்பிடுகின்றனர்.

சிவபெருமானின் அஷ்ட மூர்த்ங்களில் ஞானக்கண் உடைய ஒருவராகவும் சூரியன் கருதப்படுகிறார்.

அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரியனின் கனிந்த ஒளியிலே நாள் தவறாமல் திளைத்து வந்தார்கள். சூரிய கிரணங்களை “ஜீவத்திறல்” என்றும் “ஆயுளை வளர்க்கும் அன்னம்” என்றும் போற்றினார்கள்.

வெற்றிகளை குவிக்கும் சூரிய வழிபாடு

உத்தராயண புண்ணிய காலத்தின் முதல் மாதம் தை மாதம். சூரியன், சனீஸ்வரரின் வீடான மகர ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் வளர்பிறை ஏழாம் நாள் சூரிய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சப்தமி எனும் ஏழாம் நாளில் வருவதால் ரத சப்தமி என எல்லோராலும் அறியப்படுகிறது.

நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன். சகல ஜீவ ராசிகள், பயிர் பச்சைகளை தன் ஒளிக்கதிர்களால் வாழ வைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். ஆட்சி, அதிகாரம், தலைமைப் பதவி, ஆளுமை போன்றவற்றின் கர்த்தா.

ஜாதக அடிப்படையில் சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள், அதிகார மையங்கள், தலைமை செயலாளர்கள் ஆகியவற்றில் பணிபுரிய சூரியனின் அனுக்கிரகம் அவசியம். அத்தகைய சர்வ ஆதிக்கமும், அதிகாரமும் உடைய சூரிய பகவானுக்கு உகந்த நாள் இந்த ரத சப்தமி.

ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து கிழக்கு நோக்கி சூரியனை பார்த்து வணங்கியபின், தாய், தந்தையரை வணங்கி ஆசி பெறுவது இந்துக்களின் முக்கிய வழிமுறையாகும்.

அன்றைய தினம் குளிப்பதற்கு முன்பு ஏழு எருக்கம் இலைகளை தலை முதல் கை, தோள்பட்டைகள், காதுகள் என வைத்து சூரிய பகவானை பிரார்த்தித்து தலையில் நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

எருக்கன் இலை என்பது அருக்கன் இலை என்பதில் இருந்து மருவி வந்துள்ளது. அருக்கன் என்றால் சூரியன். இந்த இலையில் சூரியனின் சாரம் உள்ளது.

எனவேதான் ஆண்டுக்கு ஒருமுறை எருக்கன் இலை வைத்து குளிக்கும் வழிபாடு ஏற்பட்டது. சூரியனுக்கு பல்வேறு விதமான பெயர்கள் உண்டு.

தினகரன், பாஸ்கரன், அருக்கன், சூரிய நாராயணன் என பல காரணப் பெயர்கள் உண்டு. இதில் சூரிய நாராயணன் என்ற பெயர் விஷ்ணுவை குறிப்பதாகும்.

இந்த ரத சப்தமி நாளில் எல்லா வைணவ தலங்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், உற்சவங்கள் நடைபெறும்.

திருப்பதியில் அதிகாலை சூரிய உதயத்தில் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை எந்த நாளும் இல்லாத வகையில் பெருமாள் சப்த வாகனங்களில் அமர்ந்து அருள் பாலிப்பார்.

முதலில் சூரிய பிரபையில் ஆரம்பித்து, சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், கடைசியாக சந்திர பிரபையில் எழுந்தருளி நாள் முழுவதும் சேவை சாதிப்பார். இந்த நாள் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்போல் புண்ணிய பலன்களை தரும் நாளாக புராணங்கள் போற்றுகின்றன.

இந்நாளில் துவங்கும் புதிய முயற்சிகள், அரசாங்க விஷயங்கள், முக்கிய சந்திப்புக்கள். தொழில், வியாபாரம் ஆரம்பித்தல் எல்லா சுப விஷயங்களுக்கும் பிள்ளையார் சுழி போடுதல் போன்றவை வெற்றிகரமாக முடியும்.

தியானம், மந்திரஜெபம், யோகா, கல்வி, கலை, பயிற்சிகள் போன்றவற்றை துவக்குவதற்கு நல்ல நாளாகும். இன்று செய்யப்படும் தானங்கள், தர்மங்கள், உதவிகள் ஒன்றுக்கு பத்தாக புண்ணியத்தை சேர்க்கும்.

வழிபாடு பரிகாரம்

தினசரி சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம்.

கோதுமையில் செய்த சப்பாத்தி, கோதுமை ரவை போன்றவற்றை நோயாளிகளுக்கு தரலாம்.

கோதுமை பலகாரத்துடன் பழங்கள், கீரை சேர்த்து பசுவுக்கு கொடுக்கலாம்.

தினசரி சூரிய காயத்ரி மந்திரம் 108 முறை சொல்லி வரலாம். ஓம் அம் நமசிவாய சூரிய தேவாய நம என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.

சூரிய தலமான ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம்.

நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரியனுக்குரிய பிரார்த்தனை தலமாகும்.

ரத சப்தமி மற்றும் ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை சப்தமியில் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று பிரார்த்திக்கலாம்.

சூரியனின் அம்சங்கள் (ஆதிக்கம்)

கிழமை : ஞாயிறு
தேதி : 1, 10, 19, 28.
நட்சத்திரம் : கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி
ராசி : சிம்மம்
நிறம் : சிவப்பு
ரத்தினம் : மாணிக்கம் (சிவப்பு)
தானியம் : கோதுமை
ஆடை : சிவப்பு

காலையில் நீராடிவிட்டு இளஞ்சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று. இயற்கை வழிபாட்டில் சூரியவழிபாடே முதல் வழிபாடாகும்.

அதிகாலை சூரியனை வணங்கி அவனது ஆற்றலை நாம் பெற்றுக்கொள்வது என்பது பல வியாதிகளை நீக்கும் என்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில் சூரிய வழிபாடு நடைபெறுகிறது. மேலும் சூரியபகவானுக்குக்கென்று அங்கு கோயில்களும் உள்ளன.

சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே சூரிய வழிபாடு உலகெங்கும் இருந்தது என்பதை எகிப்திய, கிரேக்க, சுமேரிய, ஐரோப்பிய, மெசபடோமிய நாகரிகங்கள் எடுத்துச் சொல்கின்றன.

‘சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு’ என்பது ஆன்றோர்கள் வாக்கு. வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் அருளும் சூரியனை நாம் கடவுளாக வணங்குகிறோம்.

வேதங்கள் சூரியனை ‘ஆயுளை வளர்க்கும் அன்ன ரூபம்’ என்று போற்றுகின்றன.

நம்முடைய பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் தமிழகத்தில் ‘உச்சிகிழான் கோட்டம்’ என்ற பெயரில் சூரியபகவானுக்கான கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது.

சூரியனை வழிபடத் தை மாதம் முதல் நாள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதிலும் தை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ‘பானுவார விரதம்’ இருந்தால், சூரியனின் அருளினைச் சிறப்பாகப் பெறலாம் என்பது ஆன்மிக நம்பிக்கை.

அகிலத்தை எல்லாம் காக்கும் ஸ்ரீமன் நாராயணன் மானிட வடிவெடுத்து ஸ்ரீராமனாக வந்தபோது, அவர் ராவணனைப் போரில் வெல்வதற்குத் துணைபுரிந்ததும் சூரிய பகவான்தான்.

சூரிய வம்சத்தில் தோன்றிய ஸ்ரீராமரை ‘ஆதித்ய ஹிருதயம்’ எனும் சூரிய ஸ்தோத்திரம்தான் ராவணனை வெற்றிகொள்ளச் செய்தது என்று ராமாயணம் சொல்கிறது.

ராவணனுடனான யுத்தத்தில் ஸ்ரீராமர் களைப்புற்றபோது, அகத்திய முனிவர் ஸ்ரீராமருக்கு அருளிய `ஆதித்ய ஹிருதயம்’ எனும் மந்திரம்தான் சோர்வை நீக்கி வெற்றியைத் தந்ததாக வால்மீகி ராமாயணம் குறிப்பிடுகிறது.

அதிகாலையில் தொடர்ந்து ஒன்பது முறை ஆதித்ய ஹிருதய மந்திரத்தை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். தொடர்ந்து வெற்றிகள் கிட்டும்.

மாதங்கள்தோறும் சூரியன்…

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சூரிய பகவான் ஒவ்வொரு திருநாமம் கொண்டு நம்மைக் காத்துவருகிறார் என்று வேதங்கள் சொல்கின்றன.

சித்திரை மாதத்தில் விஷ்ணு என்னும் திருநாமம் கொண்டு ஆயிரம் சூரியக்கதிர்களை வீசுகிறார். வைகாசியில் அர்யமான் என்னும் திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களை அனுப்புகிறார். ஆனி மாதம் விஸ்வஸ் என்ற பெயர் கொண்டு ஆயிரத்து நானூறு கதிர்களை வீசுகிறார். ஆடி மாதம் அம்சுமான் என்று ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டிருக்கிறார். ஆவணி மாதம் பர்ஜன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து நானூறு கதிர்களும்; புரட்டாசியில் வருணன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களுடனும் காட்சி தருகிறார். ஐப்பசியில் இந்திரன் என்னும் திருநாமம் சூடி, ஆயிரத்து இருநூறு கதிர்களால் ஜொலிக்கிறார். கார்த்திகை மாதத்தில் தாதா எனும் பெயர் கொண்டு ஆயிரத்து நூறு கதிர்களை வீசுகிறார். மார்கழி மாதத்தில் சூரியநாராயணனாக ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டுள்ளார். தை மாதத்தில் பூஷாவான் என்ற திருநாமத்தில் ஆயிரம் கதிர்களைக் கொண்டுள்ளார், மாசி மாதம் பகன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரம் கதிர்களை பரவச் செய்கிறார். பங்குனியில் துவஷ்டா என்ற பெயரால் ஆயிரத்து நூறு கதிர்களை அனுப்பி உலகைக் காக்கிறார் என்று வேதங்கள் சொல்கின்றன.

ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்

வாழ்நாளை நீட்டிக்கும், வளங்களை அளிக்கும் சூரிய பகவானை எப்போதும் போற்றுவோம்.

சூரியக் கடவுள் ‘கொடிநிலை’ என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் சூரிய கோவில் உச்சிகிழான் கோட்டம் என்ற பெயரால் குறிக்கப் பெறுகிறது.

உலகில் எழுந்த பழமையான நூலான ரிக் வேதத்தில் சூரிய வழிபாடு குறிக்கப்பட்டிருக்கிறது. சௌராஷ்டிரம் என்ற பாரத வர்ஷத்தின் ஐம்பத்தி இரண்டு நாடுகளில் ஒன்று சூரிய வழிபாட்டின் அடிப்படையில் எழுந்த பெயராகும்.

ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா முதலிய நாடுகளில் சிதைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் உள்ளன.

சூரியன் காலையில் ரிக் வேத சொரூபியாகவும் மதியத்தில் யஜுர் வேத சொரூபியாகவும் மாலை வேளையில் சாம வேத சொரூபியாகவும் திகழ்கிறான்.

ஆதித்யானாம் அஹம் விஷ்ணு’ என்கிறார் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர். இதன் அர்த்தம் “நானே சூரியனாகத் திகழ்கிறேன் என்பதாகும்.

சூரியன், ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகிறார். வசந்த காலத்தில் தங்க நிறத்திலும், வெயில் காலத்தில் செண்பகப்பூ நிறத்திலும், மழைக்காலத்தில் வெண்மை நிறத்திலும், கார்காலத்தில் கருமை நிறத்திலும், முன்பனிக் காலத்தில், தாமரை நிறத்திலும், பின்பனிக் காலத்தில் சிவப்பு நிறத்திலும் விளங்குவதாக வேதங்கள் கூறுகின்றன.

சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய “காலம்‘ என்ற ஒற்றைச் சக்கர தேரில் பவனி வருபவராக புராணங்கள் கூறுகின்றன. இந்த ரதத்தை ரதசப்தமியன்று விஷ்ணு சூரியனுக்கு அளித்தார்.

ரத சாரதியாக காசியப முனிவரின் மகனான அருணன் விளங்குகிறார். இவருக்கு இடுப்புக்குக் கீழே அங்கங்கள் கிடையாது. வைரோஜன யோகத்தில் ரதத்தைச் செலுத்தி, சூரிய பகவானுக்கு உறுதுணையாக இருக்கிறார்.

சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்று அழைப்பர். இவை, வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன.

ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கு சங்கும், சக்கரமும் உண்டு. அதனால் வைஷ் ணவர்கள் சூரியனை “சூரியநாராயணன்’ என்று போற்றுகின்றனர்.

சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன. சூரியன் சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார். அதனால் தான் சைவர்கள் “சிவசூரியன்’ என்று போற்றுகின்றனர்.

சூரியனின் தேர் தெற்கில் பயணிக்கும் காலத்தை தட்சிணாயனம் என்றும், வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை உத்ராயணம் என்றும் கூறுவர்.

தைமாதம் சூரியனின் தேர் பாதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் அன்றைய நாளுக்கு “ரதசப்தமி’ என்று பெயர். அன்று சூரியனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டும்.

ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி உலகின் நலனைக் கருதி ராவணனை வெல்ல முனைந்தபோது ஸ்ரீ ராமனுக்கு கவசமாக, பாதுகாப்பாக, ஆதித்ய ஹ்ருதயத்தை அகஸ்தியர் உபதேசித்தார்.

வேதியர்கள் தினமும் ஓதும் காயத்ரி மந்திரம் சூரியனுக்குரியதே. ஆதித்ய ஹ்ருதயமும் காயத்ரி மந்திரமும் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் வாழ்வில் வெற்றியையும் கொடுக்கக் கூடியவையாகும்.

இந்தியாவில் சூரியனுக்கென்று தனியே ஒருசில ஆலயங்களே உள்ளன. இவற்றுள் மிக முக்கியமானது, ஒரிசாவில் கோனார்க், கயாவில் தட்சிணார்க்கா, ஆந்திராவில் அரசவல்லி, குஜராத்தில் மொதேரா, அஸ்ஸலமில் சூர்யபஹார், மத்திய பிரதேசத்தில் உனாவோ, கேரளாவில் ஆதித்யபுரம், காஷ்மீர், ஸ்ரீநகரில் 2000 ஆண்டுகள் பழைமையான “மார்த் தாண்டா’ ஆலயம் ஆகியவையாகும்.

நம் ஆரோக்கியத்துக்கும் அதி பதியாக இருப்பவர் சூரிய பகவான்! ‘சுகத்துக்கு சூரிய பகவானை வணங்கு’ என்று மந்திர சாஸ்திரங்கள் சொல்கின்றன. சூரியனை வழிபடுபவர்கள் இதய நோயிலிருந்து விடுபடுவர்.

காலை 7 மணிக்குள்ளும் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளும் சூரிய வெளிச்சத்தில், சிறிது நல்லெண்ணெயை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் நெடுநாட்களாக நம்மை விட்டு விலகாத நோய்கள் குணமாகி விடும்.

சூரிய வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கும் சீனர்களும் ஜெர்மானியர்களும் தங்கள் வாழ்நாளை அதிகப்படுத்திக் கொள்கின்றனர்.

நல்ல ஆரோக்கியத்துடன் திகழ்பவர்கள் மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக தீராத வியாதியால் அவதிப்படுகிறவர்களும், பூப்படையாத பெண்களும், முக்கியமாக கண்பார்வை மங்கியவர்களும் ஞாயிற்றுக்கிழமைதோறும் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் நல்லது.

கி.மு.2000-க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை உலகத்தினர் வழிபட்டு வந்துள்ளனர்.

உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன.

வேதகால ரிஷிகள், “சூரியனே தண்ணீருக்கெல்லாம் ஆத்மா” என்று குறிப்பிடுகிறார்கள்.

சூரிய ஒளியில் நிறப்பிரிகை ஏற்பட்டால் ஏழு வண்ணமாகப் பிரிகிறது. ஏழு வண்ண ஒளியின் சேர்க்கையே சூரிய ஒளி. சூரியனுக்கு ஏழு குதிரைகள் என்று வேதம் வர்ணிப்பதன் சூட்சுமம் இதுவே. குதிரையை அசுவம் என்பர். அசுவம் என்ற சொல்லுக்கு வர்ணம் என்றும் பொருளுண்டு.

சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று பாரசீகர்கள் நம்பினார்கள். பாரசீக மத குருக்களான மாகாஸ்கள், சூரிய வழிபாட்டின் மூலம் சிகிச்சை செய்யும் மருத்துவர்களாக விளங்கினர்.

சூரியனைப் பரம்பொருளாக “ஆதித்ய ஹிருதயம்” கூறுகிறது. “மார்க்கண்டேய புராணம்”, “பவிஷ்ய புராணம்” முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் “காயத்ரி” சூரியனுக்கு உகந்த மந்திரம்.

சூரிய வழிபாடு “சௌர மதம்” என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சௌர மதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும் பரவியிருந்தது.

அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரிய கிரணங்களை “ஜீவத்திறல்” என்றும் “ஆயுளை வளர்க்கும் அன்னம்” என்றும் போற்றினார்கள்.

சூரிய வழிபாட்டினை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கிறார்கள். எகிப்தியர்கள் சூரியனை ஆமன்-ரா (ஆரோக்கியம் தருபவன்) என்று போற்றுகிறார்கள். கிரேக்கர்கள் “போபஸ்- அப்போலோ’ என்றும், ஈரானியர்கள் “மித்ரா’ என்றும் அழைக்கிறார்கள்.

நைல் நதிக்கரையில் வாழ்பவர்கள் சூரிய வழிபாடு செய்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.

கருங்கடல் கரையோர நாடுகளில் கி.மு. 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

எகிப்தில் கி.மு. 14-ஆம் நூற்றாண்டிலேயே சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டதற்குச் சான்றாக பிரமிடுகள், புராதனக் கலைப்பொருட்கள், கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஈரானில் கி.மு. 551-லும், சுமேரியாவில் கி.மு. 4000-லும், மேற்கு ஐரோப்பாவில் கி.மு. 2000-லும் சூரிய வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன..

கேரளாவில் தைப்பொங்கலை முன்னிட்டு பகவதி அம்மன் கோவில்களில் பொங்கல் படைத்து வழிபடுவர்.

ஆந்திராவில், பெருமாள் கோவில்களில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் நடைபெறும்.

கர்நாடகாவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்புகளினால் பந்தலிட்டு சூரியனுக்குப் பொங்கல் படைத்து வழிபடு வது வழக்கம்.

மகாராஷ்டிராவில் மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடுவர். அப்போது எள்ளுருண்டை முக்கியத்துவம் பெறுகிறது.

முதல் நாள் போகி அன்று எள் சேர்த்து கேழ்வரகு மாவு ரொட்டியும், காய்கறி கூட்டும் சமைத்து இறைவனுக்குப் படைத்து உண்பர். இரண்டாம் நாள் சங்கராந்தியன்று இனிப்பு, பழங்கள், கரும்புகள், பொங்கல் படைப்பர். மூன்றாம் நாள் கிங்கராந்தியன்று வடை செய்வார்கள்.

தை மாதம் குளிராக இருப்பதால் வழிபாட்டில் எள்ளுருண்டை முதலிடம் பெறுகிறது.

அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங் களில் “போகாலிபிஹூ’ என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடுவர்.

உத்திரப்பிரதேசத்தில் பொங்கலன்று வீட்டுக்கு வருபவர்களை கரும்புத்துண்டுகள் மற்றும் தாம்பூலத்துடன் ஆசீர்வதிப்பர்.

உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள், மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் சாணத்தால் பிள்ளையார் பிடித்துவைப்பர். அதனைச் சேர்த்து வைத்து பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையார் பொங்கல் கொண்டாடுவர். சாணப்பிள்ளையாரை ஆற்றில் கரைத்துவிடுவார்கள்.

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது. மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய்வங்கள் சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன.

சூரியனுக்கு 12 பெயர்

ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என்று சூரியனுக்கு பலபெயர்கள் உண்டு. ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது. மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்யகர்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவையே அவை.

புராணங்களில் குறிப்பிட்டுள்ள பஞ்ச சூரிய ஸ்தலங்கள்

  1. ஞாயிறு ஸ்தலம் – சென்னைக்கு அருகில்
  2. திருச்சிறுகுடி- நன்னிலம் அருகில்
  3. திருமங்களகுடி- ஆடுதுறை அருகில்
  4. திருப்பரிதி நியமம்- நீடாமங்கலம் அருகில்
  5. தலைஞாயிறு- திருவாரூர் அருகில்

பஞ்ச பாஸ்கர ஸ்தலம் என்பது சூரியனை மையமாக வைத்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள ஸ்தலங்களாகும். அதில் ஒன்று ஞாயிறு ஸ்தலம்.

சூரிய பகவான் பூசித்தால் இத்திருநாமம் பூண்டது. வாரங்களில் முதல் நாளை ஞாயிறு என்றும், மாதங்களில் முதல் நாளை ஆதித்ய என்றும் குறிப்பிடுவார்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45-க்குள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

சூரியனின் பீஜ மந்திரங்கள் ஆறு

  1. ஹ்ராம்
  2. ஹ்ரீம்
  3. ஹ்ரூம்
  4. ஹ்ரைம்
  5. ஹ்ரௌம்
  6. ஹ்ர

சூரிய தோஷம் நீங்க தியான மந்திரம்

தியாயேத் ஸுர்யம் அனந்தகோடி கிரணம்!
தேஜோமயம் பாஸ்கரம்!!
பக்தானாம் அபயப்ரதம் தினகரம்!
ஜ்யோதிர்மயம் சங்கரம்!!
ஆதித்யம் ஜகதீசம் அச்யுதம் அஜம்!
த்ரைலோக்ய சூடாமணீம்!!
பக்தா பீஷ்டவரப்ரதம் தினமணீம்!
மார்த்தாண்டம் ஆதித்யம் சுபம்!!

ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலையில் சூரியனுக்கான கோலமிட்டு, கோதுமையில் செய்த பலகாரம் படையலிட்டு இந்த ஸ்லோகத்தை சொல்லிவந்தால் சூரிய கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி, நற்பலன் பெறலாம்.

சூரிய பகவானை தினமும் வழிபட்டால் ஆரோக்கியமான வாழ்வு கிட்டும். கண்பார்வை நன்கு தெரியும். சரும நோய்கள் வராது. மன சஞ்சலங்களையும் மற்ற துன்பங்களையும் தீர்த்து வைப்பார் சூரிய பகவான்.

Scroll to Top