You cannot copy content of this page

இந்து சமயக்கதைகள்

மூலம்: கல்லாடம்

கல்லாடம்’ என்பது தமிழ்-இலக்கியத்தில் உள்ள சிறந்த நூல்களுள் ஒன்று. பாயிரமும் நூலும், பதினைந்து முதல் அறுபத்தாறு அடிகள் வரையில் உள்ள நூற்றிரண்டு ஆசிரியப்பாக்களைக் கொண்ட மூவாயிரத்து நானூற்று எட்டு அடிகளில், அடங்கியுள்ளன. பாயிரத்துள், யானைமுகன் வணக்கம் ஒன்றும், முருகன் வணக்கம் ஒன்றுமாக இரண்டு பாக்களும், நூலுள், தனித் தனி ஒவ்வொன்றும் ஒவ்வொரு அகப்பொருள்-துறைக்குப் பொருந்திய நூறு பாக்களும் இருக்கின்றன. செய்யுட்கள் சொல்லால் சங்கச் செய்யுட்களைச் சார்ந்தும், பொருளால் இடைக்கால இலக்கியத்துக்கு இயைந்தும், இருக்கின்றன; சொல், செறிவுடையன; பொருள், புராணக் கலப்புடையது.

கல்லாடத்துள் வரும் கதைக் குறிப்புக்கள்

இந்து சமயக்கதைகள்: 1

அகத்தியர்:

அகத்திய முனிவரைப் பற்றி பல கதைகள் நம் நாட்டின் பல பாகங்களிலும் வழங்குகின்றன. தேவர்களை வருத்திய விருத்திராசுரன் என்பவன், இந்திரனுடைய வைரப் படைக்குப் பயந்து கடலில் ஒளிந்திருந்த போது, அவனைப் பிடிப்பதற்காகக் கடல் நீரை வற்றச் செய்ய வெண்டுமெனத் தேவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இயைய, கடல் நீரைக் குடித்துக் கடலை வற்றச் செய்து, மீண்டும் நிறையச் செய்தவர். சிவபெருமானுக்கு உமையம்மையோடு திருமணம் நிகழ்ந்த காலத்தில், தேவர்கள் எல்லாரும் வட திசையில் ஒன்று சேர்ந்தமையால், அத் திசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது; இந்த ஏற்றத் தாழ்வைச் சமன் செய்வதற்காகச் சிவபெருமான் அகத்தியரைத் தென் திசைக்குச் செல்லும்படி கட்டளையிட்டார்; அக் கட்டளையை மேற்கொண்டு தென் திசைக்கு வரும் வழியில், வானளாவி வழி தடுத்து நின்ற விந்த மலையைத் தணியச் செய்தார். இவருடைய கரகத்திலிருந்த நீரை, மூத்த பிள்ளையார், காக்கை வடிவில் சென்று, கவிழ்த்துவிட, அது ‘காவிரி’ என்னும் ஆறாகப் பெருகியது. இவர் சிவபெருமானிடத்தும், முருகனிடத்தும், சூரியனிடத்தும், தமிழ் மொழியைக் கற்றார். பொதியமலையையும் பொருநையாற்றையும் தமக்கு உரிமையாகப் பெற்றவர். இராவணனைத் தென்னாட்டிலிருந்து வெளியேறச் செய்தார். முதற் சங்கத்திலும் இடைச் சங்கத்திலும் புலவராகத் திகழ்ந்தார். ‘அகத்தியம்’ என்ற ஒரு பெரிய தமிழ் இலக்கணத்தைத் தோற்றி, பன்னிரண்டு மாணவர்களுக்கு, சிறந்த தமிழ்ப் புலமையை உண்டாக்கியவர். இவர் செய்தனவாகச் சில நூல்கள் இக்காலத்தும் உலாவுகின்றனவெனினும், அவையெல்லாம் இவர் செய்தனவல்ல என்பது அறிஞர் துணிபு.

இந்து சமயக்கதைகள்: 2

அகப்பொருள் அருளியது: முன்பு ஒரு காலத்தில், தமிழ் நூற் பரப்பில், அகப்பொருள் இலக்கணம் அருகியது; பாண்டியனும் சங்கப்புலவரும் வருந்தினார்கள்; அப்பொழுது சிவபெருமான் ஒரு புலவராக வந்து, ‘அன்பின் ஐந்திணை’ என்று தொடங்கி, அறுபது சூத்திரங்களில் ஓர் அகப்பொருள் இலக்கண நூலை அமைத்துக் கொடுத்தார்; அந்த நூல், வேத வழக்கையும், உலக வழக்கையும், உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களையும், ஒரு வகையாகச் சேர்த்து, தமிழுக்கே உரிய ஐந்திணை இலக்கணத்துக்கு மாறுபடாமலும், வேண்டும் இடங்களில் வடமொழிப் புணர்ச்சி விதிகளை ஏற்றுக்கொண்டதாகவும் இருந்தது. தமிழ் முனிவராகிய அகத்தியனாரும், பாண்டியனும், நாற்பத்தொன்பது சங்கப் புலவர்களும், கடலிலிருந்த அமுது கரைக்கு வந்ததென மகிழ்ந்து தேறினார்கள்.

இந்து சமயக்கதைகள்: 3

அயன் தலையைக் கொய்தது:

திருமாலுடைய உந்திக் கமலத்தில் தோன்றிப் படைப்புத் தொழிலைச் செய்துவரும் அயனுக்கு, ஆதியில், சிவபெருமானைப் போல் ஐந்து தலைகள் இருந்தன. ஒரு காலத்தில், அவன் ஆணவம் கொண்டு சிவபெருமானை வணங்காது நின்றான். சிவபெருமானுடைய ஆணையால் வைரவக் கடவுள் அவனுடைய ஐந்தாவது தலையைத் தன் நகத்தால் கிள்ளிக் கொய்து, பலி கொள்ளும் திருவோடாகக் கையில் ஏந்தி, தேவர்களுடைய குருதியைப் பலியாகப் பெற்று, பிரமன் உள்ளிட்ட தேவர்களுடைய ஆணவத்தைப் போக்கினார்.

இந்து சமயக்கதைகள்: 4

அருச்சுனனுக்குப் பாசுபதம் அருளியது:

பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காகத் தெய்வப் படைக் கலங்களைப் பெற வேண்டித் தவம் செய்து கொண்டிருந்த அருச்சுனன் முன்னிலையில் வேடன் வடிவில் சிவபெருமான் தோன்றி, ஒரே சமயத்தில் ஒரு பன்றியைத் தாமும் அருச்சுனனுமாக எய்து வீழ்த்தி, அதனால் மாறுகொண்டு, இருவரும் ஒருவரோடொருவர் போர் செய்து, அருச்சுனன் வில்லால் அடித்த தழும்பினை ஏற்று, பின்னர், தம் தெய்வக் காட்சியோடு அவனுக்குப் பாசுபதக் கணையையும் அம்பறாத் தூணியையும் அருளினார்.

இந்து சமயக்கதைகள்: 5

இடைக்காடர்:

இடைக்காடர் என்னும் சங்கப் புலவரின் இனிய செய்யுட்களைப் பாண்டியன் பாராட்டாது பராமுகமாக இருந்ததால், அப் புலவர் உள்ளம் உடைந்து, ஆலவாய் அண்ணலிடம் முறையிட்டுக் கொண்டு, மதுரையைவிட்டு அகன்று, வடபுறமாய் வைகையின் தென் கரையில் தங்கினார். ஆலவாய் அண்ணலும் ஏனைய சங்கப் புலவர்களும் இடைக்காடரிடம் பரிவு கொண்டு, மதுரையை விடுத்து இடைக் காடர் தங்கிய இடத்திற்கே சென்று தங்கி விட்டார்கள். இது கண்டு, தன் பிழைக்காக வருந்தி, பாண்டியன் ஆலவாய் அண்ணலையும் சங்கப் புலவர்களையும் வணங்கி, இடைக்காடருடன் எல்ரோரையும் மதுரைக்கு அழைத்து வந்து, சிறப்புச் செய்தான்.

இந்து சமயக்கதைகள்: 6

இந்திரன் பழி தீர்த்தது:

இந்திரன் ஒரு காலத்தில், தான் இயற்றிய வேள்விக்குத் தொடர்புடையவனாக இருந்த விச்சுவவுருவனைக் கொன்றமையால், குரவனைக் கொன்ற பெரும் பழியால் பற்றப் பெற்றான். அப் பெரும் பழி எவ்வித முயற்சியாலும் அகலாது துன்புறுத்திக்கொண்டே வந்து, அவன் மதுரையை அடைந்த அளவிலேயே விலகுவதாயிற்று. இந்திரன் ஆலவாய் அண்ணலின் பேரருளை வியந்து, எட்டு யானைகளின் பிடரிகளின்மேல் அமையப் பெற்ற ஒரு பேரழகு வாய்ந்த விமானத்தைத் தேவருலகிலிருந்து கொணர்ந்து, சோமசுந்தரக் கடவுளுக்கு அமைத்து வழிபாடு செய்தான்.

இந்து சமயக்கதைகள்: 7

இந்திரன் மலைகளின் சிறகை அரிந்தது:

ஒரு காலத்தில் மலைகள் எல்லாம், சிறகு உடையனவாக இருந்தது, மனம் போனபடி பறந்து சென்று, உலகுக்குப் பெரிய துன்பத்தை விளைவித்து வந்தன. அந்தத் துன்பத்தைப் போக்க வேண்டி, மலைகள் பறந்து நிலை பெயரா வண்ணம், அவற்றின் சிறகுகளை இந்திரன் அரிந்துவிட்டான். அப்போது இரத்தம் சிந்திய இடங்களில் பவளம் உண்டாயினவாம்.

இந்து சமயக்கதைகள்: 8

இராவணன் கயிலையை எடுத்தது:

ஒரு காலத்தில் இராவணன் கயிலை மலைக்குச் சென்று, தன் தோள்வலிமையை எண்ணி இறுமாந்து, அம் மலையை எடுக்க முயன்ற போது, அதன் முடியில் வீற்றிருந்த சிவபெருமான், தன் திருவடி விரல் ஒன்றால் அழுத்த, அம் மலையின் அடியில் நெரிபட்டு, பல காலம் கதறி அரற்றி, பின்னர், சாம கானம் பாடி, சிவபெருமானை மகிழ்வித்து, விடுதலைப் பெற்றான்.

இந்து சமயக்கதைகள்: 9

உக்கிரபாண்டியன் கடலில் வேல் விட்டது: முருகப் பெருமான் தடாதகைப் பிராட்டியாரின் திருமகனாகத் தோன்றி, உக்கிரபாண்டியன் என்னும் பெயருடன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வரும் காலத்தில், இந்திரனுடைய சூழ்ச்சியால், கடல் பொங்கிக் கரை கடந்து, மதுரை மாநகரைச் சூழ்ந்து அழிக்க எழுந்தது; அப்போது சீற்றத்துடன் பொங்கிவந்த கடலின்மேல், உக்கிரன் வேலை எறியவே, வேல் நுனி படுவதற்கு முன்பேயே கடல் வற்றி வணங்கிப் பின் செல்வதாயிற்று.

இந்து சமயக்கதைகள்: 10

உமை சிவபெருமான் கண்ணை மூடியது:

ஒரு காலத்தில், விளையாட்டாக, உமையம்மையார் சிவபெருமானுடைய திருக் கண்களைத் தம் வளையலணிந்த கைகளால் மூடியதால், எல்லா உலகிலும் உள்ள எல்லா ஒளிகளும் மறைய, எங்கணும் இருள் மூடிற்று. அப்போது, உலக இருளைப் போக்க வேண்டி, திருவருளால் சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணை நெற்றியில் தோற்றுவித்தார்.

இந்து சமயக்கதைகள்: 11

கண்ணன் ஆடை கவர்ந்தது:

கண்ணன் இளமையில் ஆயர்பாடியில் வளர்ந்தபொழுது, ஆயர் சிறுமியருடன் விளையாடியும், அச் சிறுமியர் நீராடும்போது கரையில் வைத்துச் செல்லும் அவர்களுடைய ஆடைகளைக் கவர்ந்தோடியும் மகிழ்ந்து வந்தான்.

இந்து சமயக்கதைகள்: 12

கருங்குருவிக்கு அருள் செய்தது:

முன்னைய தீவினையினால் காக்கைகளால் நலியப் பெற்று அஞ்சி வாழ்ந்த கருங்குருவி ஒன்று, மதுரையை அடைந்து, பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி, ஆலவாய் அண்ணலை வழிபட்டு, அவ் இறைவனால் மூன்று எழுத்தாலாய ஒரு மறை அறிவுறுத்தப் பெற்று, முறைப்படி ஓதி, தன் இனத்துடன் வலிமை பெற்றது.

இந்து சமயக்கதைகள்: 13

கருப்பைக்கு அருளியது:

திருமறைக் காட்டில், சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயிலில், இரவில் எரிந்து கொண்டிருந்த திருவிளக்கு தூண்டுவார் இல்லாதபடியால் ஒளிகுன்றி நின்று விடக் கூடிய நிலைக்கு வந்தபோது, அவ் விளக்கில் உள்ள நெய்யை உண்ணுவதற்காக வந்த எலி ஒன்றால் விளக்கு தூண்டப்பெற்று ஒளி பெருகியதைக் கண்டு மகிழ்ந்த இறைவன், ‘இந்த எலி பதினான்கு உலகமும் ஆளும் அரசனாகுக’ என அருள, அந்த எலி ‘மாவலிச் சக்கரவர்த்தி’யாகப் பிறந்து, பேரரசு புரிந்தது.

இந்து சமயக்கதைகள்: 14

கல்லானைக்குப் கரும்பு அருத்தியது:

பாண்டியன் ஒருவன் இறைவன் திருக்கோயிலை வணங்கச் சென்ற போத ஒரு சித்தரைக் கண்டு, அவருடைய ஆற்றலைச் சோதிக்க எண்ணி, தன் முன்னிருந்த கரும்பை அங்கிருந்த கல்லால் செய்த யானையிடம் கொடுத்து உண்ணச் செய்ய இயலுமோ எனக் கேட்டான்; அந்தச் சித்தர் உடனே அந்தக் கரும்பை உண்ணச் செய்ததோடு அவன் அணிந்திருந்த முத்து மாலையையும் பறித்து விழுங்கவும், உமிழவும் செய்து மறைந்தார்: அவர் சிவபெருமானே என பாண்டியன் தெரிந்து, திருவருளை வணங்கி வாழ்த்தினான்.

இந்து சமயக்கதைகள்: 15

காமனை எரித்தது: தேவர்கள் விரும்பிய வண்ணம் சிவபெருமான் மோன நிலையைக் கலைப்பதற்காக, காமன் சிவபெருமான் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அப் பெருமான் ஒருசிறிது தம் நெற்றிக் கண்ணை விழிக்கவும், அக் கண்ணிலிருந்து வந்த அனலால் அவன் எரிந்து சாம்பல் ஆயினன்.

இந்து சமயக்கதைகள்: 16

காரைக்கால் அம்மையார்:

காரைக்கால் அம்மையாரின் செயற்கருஞ் செயலைக் கண்டு அஞ்சி, அவர் கணவன் புறக்கணிக்கவே, அம்மையார் கணவனுக்கென எடுத்த எழில் உடல் தனக்கு வேண்டுவதில்லை எனத் தம் எழில் உகுத்து சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள்தோறும் சென்று வழிபட்டு, இறுதியாகத் திருவாலங்காட்டில் இறைவன் திருநடனத்தைக் கண்டு, பேரானந்தம் உற்று, என்றும் அத் திருநடனத்தையே காண வேண்டுமென்ற ஆராத காதலுடன் திருவருளில் கலந்தார்.

இந்து சமயக்கதைகள்: 17

காலனை உதைத்தது:

பதினாறு ஆண்டுகளே தம் வாழ்நாளின் எல்லையாகப் பெற்ற மார்க்கண்டேயர், சிவபெருமானை வழிபட்டு, தாம் காலனுக்கு அஞ்சவேண்டுவதில்லை என்ற வரத்தைப் பெற்றார். இவ் வரத்தை நோக்காது, முன் விதித்த வாழ் நாள் முடிவில், மார்க்கண்டேயர்மேல் பாசத்தை வீசிய எமனை, சிவபெருமான் உதைத்துச் தள்ளித் தம் அடியவர்க்கு நிலையான வாழ்வை அருளினார்.

இந்து சமயக்கதைகள்: 18

கொக்கிறகு சூடியது:

முன் ஒரு காலத்தில் ஓர் அசுரன் மிகுந்த ஆற்றலும் வலியும் உடையவனாகிக் கொக்குருவங் கொண்டு, வானவர்களுக்குப் பேரிடர் செய்து, இந்திரன், நான்முகன் முதலியோர் வசிக்கும் இடங்களை எல்லாம் அழித்து வந்தான். வானவர்கள் வேண்டச் சிவபெருமான் அக்கொக்கைக் கொன்று, அதன் இறகை வெற்றிக்கு அறிகுறியாக அணிந்து கொண்டார்.

இந்து சமயக்கதைகள்: 19

கொடுமரக் கிராதன்:

வில் தாங்கிய வேடன் என்னும் பொருள்படும் இச் சொல் கண்ணப்பரைக் குறிக்கும். கண்ணப்பர் வேடர் குலத்தினர்; காளத்தி மலைக்கு அருகில் ஒரு நாள் வேட்டைக்குச் சென்றிருந்தார்; அப்பொழுது தற்செயலாகக் காளத்திநாதர் திருவுருவை மலை உச்சியில் கண்டு, அவரிடம் ஈடுபாடு கொண்டார்; மெய்யன்பினால் வழிபட்டார்; வழக்கமாக அங்குச் சிவகோசரியார் செய்து வந்த மறை விதி வழிபாடு ஏற்றது அன்று என்று எண்ணினார். தமக்கு உவப்பானவற்றையே இறைவனுக்கும் உவப்பாக எண்ணிப் படைத்தார். சிவபெருமான் கண்ணிலிருந்து குருதி வரக்கண்டு, தம் கண்ணைப் பெயர்த்துச் சிவபெருமான் கண்ணில் வைத்து மகிழ்ந்தார்; ஆறு நாட்களில் திருவருளுக்கு இலக்கானார்; அன்பின் எல்லையாகப் போற்றப் பெறுபவர்; அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.

இந்து சமயக்கதைகள்: 20

சகரர்:

காசியப முனிவர் வழித் தோன்றியவர்கள்; சகரனுடைய பிள்ளைகள்; அறுபதினாயிரவர்; தமது தந்தையின் யாகக் குதிரை இந்திரனால் ஒளிக்கப் பெற்றது; அதனைத் தேடிக் கொண்டு வரப் பூமியைக் கல்லினார்கள்; கல்லும்போது, அங்குள்ள கபில முனிவர் சாபத்துக்குள்ளாகிச் சாம்பராயினர்; இவர்கள் நற்கதி அடையும் பொருட்டே கங்கை பகீரதனால் கொண்டு வரப் பெற்றது; இவர்களும் நற்கதியுற்றனர்; இவர்கள் கல்லிய இடமே சாகரம் (கடல்) எனப் பெற்றது.

இந்து சமயக்கதைகள்: 21

சாக்கிய நாயனார்: இவர் புத்த சமயத்தைச் சார்ந்தவராக இருந்தும் பேரின்பப் பேற்றை அருளவல்லது சிவலிங்க வழிபாடே எனத் தேர்ந்து, தன் சமயத்துப் புறத்தோற்றத்தை மாற்றிக் கொள்ளாமலேயே சிவலிங்க வழிபாடு செய்து வந்தார். கல்லையே மலராகக் கொண்டு, ஒரு நாளும் தவறாமல் வழிபட்டு, சிவபெருமான் திருவருளில் கலந்தார். சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராகப் போற்றப் பெறுபவர்.

இந்து சமயக்கதைகள்: 22

சேரனுக்குத் திருமுகம் கொடுத்தது:

மக்கள் முன்னிலையில் பாடி மகிழ்விக்காது, தன் இசை வன்மை அனைத்தையும் ஆலவாய் அண்ணலின் திருமுன்னரேயே பாடிக்காட்டுவது என்ற கொள்கையையுடைய பாணர் குல அடியார் ஒருவர், வறுமையினால் வருந்துவது கண்ட ஆலவாய் அண்ணல், அவ் அடியாருக்குப் பொருள் வழங்குமாறு “மதிமலிபுரிசை” எனத் தொடங்கும் திருமுகச் செய்யுள் ஒன்று எழுதிப் பாணரிடம் கொடுத்தனுப்ப, அத் திருமுகத்தைக் கண்ட சேர மன்னன் பேரானந்தம் உற்று, பாணருக்குப் பெருநிதி வழங்கி வர விடுத்தான்.

இந்து சமயக்கதைகள்: 23

சோழனை மடுவில் வீட்டியது:

பாண்டியன் ஒருவன் தன் பொருளை எல்லாம் தெய்வத் திருப்பணிகளுக்கே செலவிட்டு, தன் நாட்டைக் காக்கும் படைகளைப் பெருக்காதிருந்தான். இவனது படைவலி இன்மையை உணர்ந்த சோழன் ஒருவன் பாண்டி நாட்டையும் தன் நாடாகச் செய்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பத்தால் மதுரை மாநகர்மீது படை எடுத்து வந்தான். அப் போரில் சோழனும் பாண்டியனும் குதிரை மீதேறி நேருக்கு நேர் போர் செய்யும்பொழுது, பாண்டியன் குதிரைக்கு முன் ஒரு வேடன் குதிரைமீதேறி வந்து, சோழனது குதிரை முகத்தில் ஒரு வேற்படையை எறிந்தான். சோழன் வெகுண்டு, வேடனைக் குதிரையோடும் பிடிப்பதற்குத் தன் குதிரையைச் செலுத்தவே, வேடன் அஞ்சி ஓடுவான் போலப் புறங்கொடுத்து ஓடி, ஒரு நீர்நிலையில் தன் குதிரையோடும் இறங்கினான். தொடர்ந்து வந்த சோழனும் அந் நீர்நிலையில் தன் குதிரையோடு இறங்கினான். இறங்கிய சோழன் குதிரையோடு தானும் அம் மடுவிலேயே மடிந்தான். வேடனாக வந்த சிவபெருமான் காட்டில் மறைந்தருளினார்.

இந்து சமயக்கதைகள்: 24

தக்கன் வேள்வி:

சிவபெருமானைப் புறக்கணித்துத் தக்கன் ஒரு வேள்வி தொடங்கினான். அதற்கு எல்லாத் தேவர்களும் வந்திருந்தார்கள். சிவபெருமான் சினம் கொண்டார்; அவர் நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரக் கடவுள் தோன்றி, தக்கன் வேள்விக்குச் சென்றார். அங்கிருந்த தக்கன், எச்சன், முதலியவர்கள் தலையை வெட்டினார்; இந்திரன் குயில் உருவம் கொண்டு ஓடினான்; மற்றத் தேவரெல்லாம் பலவாறு புண்பட்டு ஓடினர். பின்னர், தக்கன் இழந்த தலைக்காக ஆட்டுத்தலையை வைத்து அவனை உயிர்ப்பித்தருளினார்.

இந்து சமயக்கதைகள்: 25

தடாதகைப் பிராட்டியார் திருமணம்:

தென் நாடு செய்த தவத்தால் உமாதேவியார் பாண்டியர் குலத்தில் பிறந்து, தடாதகை என்னும் பெயர் தாங்கி, கன்னி நாட்டு அரசியாகத் திகழ்ந்து, தன் வீரத்தால் உலகம் எல்லாம் வென்று, கயிலைக்குச் சென்று, சிவகணங்களை எல்லாம் வென்று, சிவபெருமானோடு நேரில் போருக்கெழுந்த சமயத்தில், தன் நிலைமையும் தலைவன் நிலைமையும் உணர்ந்து, கன்னி நாடு திரும்பி வந்து, சிவபெருமானை மணந்து, தன் ஆட்சியை அவரிடம் ஒப்புவித்தார். உக்கிரப்பெருவழுதி என்னும் பெயருடன் கூடிய முருகப் பெருமானைப் பிள்ளையாகப் பெற்றார். பின்னர் பாண்டி நாட்டு அரசுரிமையை மகனிடம் ஒப்புவித்து, பெருமானும் பிராட்டியும் திருவாலவாய்த் திருக்கோயிலுள் மறைந்தனர்.

இந்து சமயக்கதைகள்: 26

தயரதன் மகன்:

திருமால் தயரதன் மகனாகத் தோன்றி, விசுவாமித்திரன் வேள்வியை முற்றுவித்து, கௌதமர் சாபத்தால் கல்லான அகலிகைக்கு விடுதலை அளித்து, மிதிலையில் வில் முறித்து, அம் மிதிலை மன்னன் மகளை மணந்து, பரசுராமன் வலியை அடக்கி, சிற்றன்னை விருப்பால் தானும் சீதையும் தம்பியுமாகக் காடு சென்று, குகன் நதியைக் கடத்துவிக்க அப்பாற் சென்று, வனத்தில் எதிர்ந்த கரன், மாரீசன், முதலிய அரக்கர் உயிர்களைப் போக்கி, அங்கு மாயத்தால் இராவணன் தன் மனைவியைக் கவர்ந்து செல்ல, தம்பியும் தானும் தேடிச் செல்லும் வழியில், சடாயுவுக்கு உத்தரக் கிரியைகள் செய்து, சூரிய புத்திரனாகிய சுக்கிரீவனோடு நட்புக் கொண்டு, ஏழு மராமரத்திற்கும், வாலிக்கும், கடலுக்கும், ஒவ்வோர் அம்பு தொடுத்து, கடலை அடைந்து, இலங்கை சென்று, இராவணனை அடியோடு வீழ்த்தி, மனைவியை மீட்டு, அயோத்தி வந்து, அரசு புரிந்திருந்து, பின் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினார்.

இந்து சமயக்கதைகள்: 27

தருமிக்குப் பொற்கிழி அளித்தது:

பாண்டியன் ஒருவன், தன் உள்ளக் கருத்தினை விளக்கி எழுதும் கவிக்குப் பெரும் பரிசு அளிப்பதாகச் சங்கப் புலவரிடம் கூறி, ஒரு பொன் முடிப்பைப் பரிசுப் பொருளாகச் சங்க மண்டபத்தில் வைத்தான்; அவன் உள்ளக்கருத்து எது என்பது தெரியாது புலவர்கள் எல்லோரும் மயங்கினார்கள். அப்பொழுது வறுமையால் வாடிய தருமி என்பானுக்கு ‘கொங்கு தேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் ஒரு செய்யுளைக் கொடுத்து, அதன் வழி அவன் பரிசு பெற்று வறுமை நீங்குமாறு இறைவன் அருள் செய்தார். புலவரெல்லாம் ஒப்ப மகிழ்ந்து அச் செய்யுளே ஏற்புடைத்தெனக் கூறினார்கள். ஆனால் நக்கீரன் அச் செய்யுள் பொருட் குற்றமுடையதெனக் கூறி, சிவபெருமான் நெற்றிக்கண்ணுக்கும் அஞ்சாது சாதித்தான்.

இந்து சமயக்கதைகள்: 28

தாருகாவன முனிவர்களின் வேள்வி:

தாருகாவனத்திலிருந்த முனிவர்களும் அவர்களுடைய பெண்டிரும் தெய்வ உணர்ச்சி வேண்டுவதில்லை என்றும், சில நெறிகளையும் கடமைகளையும் மேற்கொண்டு வாழ்வதே போதுமானதென்றும், வாழ்ந்து வந்தார்கள். தெய்வ உணர்ச்சியில்லாத நெறிமுறைகள் நிலையற்றன என்பதை அவர்கட்கு அறிவுறுத்த வேண்டி, சிவபெருமான் பிச்சைத் தேவர் கோலங்கொண்டு, அழகிய வடிவில் அவ்விடம் சென்று ஐயம் ஏற்றார். அவருடைய வடிவழகைக்கண்ட முனிவரின் பெண்டிர் தங்கள் நிலையினின்றும் கலங்கினர். அதுகண்ட முனிவர்கள் சிவபெருமானை எதிர்த்து, ஒரு தீய வேள்வியைத் தொடங்கினர். அவ்வேள்வியினின்றும் தோன்றிய புலி, சூலம், மான், பாம்பு, பூதப்படை, வெண்தலை, உடுக்கை, முதலியவைகளை ஒவ்வொன்றாகச் சிவபெருமானைக் கொல்லுமாறு ஏவினர். அவ்வாறே அவை சென்று ஆற்றல் இல்லாதனவாகிச் சிவபெருமானுக்கு ஆடையாய், அணியாய், கருவியாய், ஆளாய் அடைக்கலம் புகுந்தன. இறுதியாக அவ் வேள்வியில் தோன்றிய முயலகனையும், வேள்வித் தீயையும் ஏவினார்கள். முயலகன் திருவடியில் அமர்ந்தான். வேள்வித் தீ ஒரு திருக் கையில் அமர்ந்தது. முனிவர்களும் நல்லறிவு பெற்று, சிவபெருமானை வணங்கினார்கள்.

இந்து சமயக்கதைகள்: 29

திருப்பாற்கடல் கடைந்தது: தேவர்களும் அசுரர்களும் மந்தரமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைத் தாம்பாகவும் கொண்டு, திருப்பாற்கடலைக் கடைந்தார்கள், மந்தரமலை நிலையாமல் இருந்தபடியால், திருமால் ஆமை உருக்கொண்டு, அதைத் தாங்கியும், ஒரு கையால் அசையாமல் அழுத்தியும், நிலைபெறச் செய்தார். கடையும்போது தோன்றிய கொடிய விஷத்தைக் கண்டு, தேவரெல்லாம் அஞ்சினார்கள். சிவபெருமான் அந்த விஷத்தை உண்டு, கண்டத்தில் இருத்தி, நீலகண்டனாகித் தேவர்கள் எல்லாம் மடியாமல் காப்பாற்றினார். பின்னர், திருப்பாற்கடலிலிருந்து, திருமகள், இந்திராணி, சந்திரன், உச்சைச்சிரவம் என்னும் குதிரை, ஐராவதம், கௌத்துவமணி, ஐந்தருக்கள், காமதேனு, தன்வந்திரி, வாருணி, தேவமாதர், அமுதகலசம், பிறந்தன. திருமகளையும் கௌத்துவமணியையும் திருமாலும், காமதேனுவை முனிவர்களும், வாருணியை அசுரரும், மற்றவற்றை இந்திரனும் எடுத்துக் கொண்டார்கள். திருமால் மாயத்தால் அசுரர்களை ஏமாற்றி, தேவர்களுக்கே அமுதத்தைப் பங்கிட்டுக் கொடுத்து, அவர்களை இறப்பில்லாத அமரர்களாக்கினார்.

இந்து சமயக்கதைகள்: 30

திருமால் பாம்பின் வாயைக் கீண்டது: கண்ணன், கஞ்சன் ஏவலால், தன்னை விழுங்குவதற்காக மலைப்பாம்பு வடிவத்துடன் பிருந்தாவனத்துக்கு வந்த பகாசுரன் தம்பியாகிய அகாசுரனை வாயைக் கிழித்துக் கொன்றான்.

இந்து சமயக்கதைகள்: 31

திருமாலுக்கு ஆழி அருளியது:

சலந்தரனைத் தடிந்த ஆழிப்படையைப் பெறுவதற்காக, திருமால் சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்கொண்டு வழிபட்டு வந்தார். ஒரு நாள் ஒரு மலர் குறையவே, குறைந்த மலருக்குத் தம் கண்ணையே ஈடு செய்து இடந்து சாத்தினார்; அவருடைய வழிபாட்டின் சிறப்பைக் கண்டு, சிவபெருமான் ஆழிப்படையை அருளினார்.

இந்து சமயக்கதைகள்: 32

தூணம் ஈன்ற குழவி: இரணியன் என்னும் ஓர் அரக்கன், ‘திருமாலின் பெயர்கூடத் தன் ஆட்சியில் வழங்கக் கூடாது’ என்று கட்டளையிட்டான். ஆனால், அவன் மகனாகிய பிரகலாதன் திருமாலுக்கு வழிபாடு செய்பவனாகவும், அவர் பெயரையே இடைவிடாது கூறுபவனாகவும், தோன்றினான். அதற்காகத் தன் மகனை இரணியன் பலவாறு துன்புறுத்திக் கொல்ல முயன்றான்; முடிவாக, ‘நீ வணங்கும் திருமால் யாண்டையன்?’ என வினவினான். மைந்தன் ‘யாண்டும் உளன்’ எனக் கூற, தந்தை வெகுண்டு, ‘முன் நின்ற தூணத்திலும் உளனோ?’ எனக் கூறி, தூணைத் தன் கையால் அடிக்க, திருமால் அங்கிருந்து நரசிங்க உருவத்தில் வெளித்தோன்றி, இரணியனைக் கிழித்துக் கொன்றார்.

இந்து சமயக்கதைகள்: 33

நக்கீரன் பனுவல் கேட்டது:

சிவபெருமான் நெற்றிக் கண்ணின் வெப்பத்தைத் தாங்கவியலாது, நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் விழுந்து, தான் சிவபெருமானிடம் மாறுகொண்டு வாதாடியது தவறு என உணர்ந்து, சிவபெருமான்மீது பாடிய செய்யுட்களை, மற்றச் சங்கப் புலவர்களால் அறிந்து, சிவபெருமான் பொற்றாமரைக் குளத்தில் நக்கீரனுக்குக் காட்சி கொடுத்து, அவன் பாடிய திருமுறைச் செய்யுட்களையும் கேட்டு, தம் திருக்கைகளால், கீரனைக் கரையேற்றி அருள் செய்தார்.

இந்து சமயக்கதைகள்: 34

நரி பரியாக்கியது:

சிவபெருமான் நரியைப் பரியாக்க வல்லவர் என்பதும், அவ்வாறே செய்கின்றார் என்பதும், இறைவனுடைய செயற்கருஞ் செயலை மக்களுக்குத் தெரிவிக்கும் கருத்துடன் வேதகாலம் முதல் நம் நாட்டில் வழங்கி வருகின்றன. இங்கு, அச் செய்தி மாணிக்கவாசகருக்காகச் சிவபெருமான் நரியைப் பரியாக்கினார் என்று உருவகச் சுவைபடக் கதையாக வழங்குவதாயிற்று.

இந்து சமயக்கதைகள்: 35

நால்வர்க்கு அருளியது: மெய்ப் பொருள் காண விரும்பிய சநகர், சநந்தனர், சநாதனர், சநற்குமாரர் என்னும் நான்கு முனிவர்களுக்கும், சிவபெருமான் தென்முகக் கடவுளாகக் கல்லால நிழலில் அமர்ந்து, சரியை, கிரியை, யோகம், என்னும் முதல் மூன்று பகுதிகளையும் உபதேசம் செய்து, நான்காவதாகிய ஞானத்தை, இருந்தபடி இருந்து, மோனமுத்திரையினால் அருளிச் செய்தார்.

இந்து சமயக்கதைகள்: 36

பகீரதன்: கபில முனிவரின் சாபத்தால் நீறாகிக் கிடந்த சகரர்கள் நற்கதிபெற வேண்டி, வானுலகத்திலிருந்து கங்கையைத் தன்னுடைய சொல்லுதற்கரிய தவ முயற்சியால், நிலவுலகிற்குக் கொண்டு வந்து, மடிந்தார் சகரரைத் தூய்மை ஆக்கி, அவர்கள் வீடுபெறுமாறு செய்தவன். இவன் சகரர் மரபில் தோன்றியவன்.

இந்து சமயக்கதைகள்: 37

பசுக்காவலர்:

அருக சமயத்தைச் சார்ந்தவரான கருநடரின் எழுச்சியால் மதுரை முற்றுகை செய்யப் பெற்றது; அதனால் இறைவன் வழிபாடுகள் தடையுற்றன; அக் காலத்தில் தாம் வழக்கமாகச் செய்து வந்த சந்தனக் காப்புப் பணியைத் தம் முழங்கையையே சந்தனக் கட்டையாக வைத்து, அரைத்துத் தம் தொண்டினைச் செய்து வந்தார். ஆருகதர் ஆதிக்கம் ஒழிந்தபின், ஆலவாய் அண்ணல் அருளால், மணிமுடி கொள்ளாது சடைமுடி கொண்டு, மணிக்கலன் அணியாது உருத்திராக்கம் அணிந்து, நறுங்கலவை பூசாது திருநீறு அணிந்து, பாண்டி நாட்டை ஆண்டு வந்தார்; இவரே அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராய ‘மும்மையால் உலகாண்ட மூர்த்தி’ என்னும் பெரியார்.

இந்து சமயக்கதைகள்: 38

பதஞ்சலி:

மதுரையில் இறைவனது திருமணம் காணச் சென்ற பதஞ்சலி முனிவர், இறைவனது தில்லையம்பலத் திருக்கூத்தைக் கண்டு வணங்கியே உண்ணும் நியமம் உடையவராகையால், திருமண விருந்தில் உண்ணாது விடைபெற்றார். சிவபெருமான் அவருக்காக வேண்டித் தில்லையில் ஆடும் திருக்கூத்தை வெள்ளியம்பலத்தில் ஆடித் திருவருள் செய்தார். இறைவன் திருநடக் காட்சியில் என்றும் திளைத்து இன்புறும் இயல்பினராய வியாக்கிரபாதர் என்னும் முனிவரையும் இவருடன் இணைத்துப் பதஞ்சலி வியாக்கிரபாதர் என்று வழங்குவது மரபு.

இந்து சமயக்கதைகள்: 38

பன்றிக் குட்டியைப் படைத் தலைவராக்கியது:

தவம் செய்துகொண்டிருந்த ஒரு முனிவனிடம் குறும்பு செய்த பன்னிரண்டு இளைஞர்கள் அம் முனிவனது சுடுமொழியால், காட்டில் பன்றிக் குட்டிகளாகப் பிறந்தார்கள். தாய்ப் பன்றி அம்பு பட்டு இறந்தது. இந்தக் குட்டிகள் தவித்தன. சிவபெருமான் அவைகளுக்கு இரங்கி, தாம் பன்றி உருவில் வந்து, பால் கொடுத்துக் காப்பாற்றினார். இறைவன் திருவருளுக்கு இலக்காகிய இந்த ஏனக் குருளைகள் நல்லுணர்வும், தொல்லறிவும் வரப்பெற்று, பிற்காலத்தில், பாண்டியன் படைத் தலைவராயின.

இந்து சமயக்கதைகள்: 40

பன்றியும் பறவையும்:

ஒரு காலத்தில் நான்முகன் தானே பெரியவன் என்று செருக்கடைந்து, திருமாலிடம் கூற, திருமால் தானே பெரியவன் என்று கூற, இருவர்க்கும் போர் நிகழ்ந்தது. அப்பொழுது ஒளிவடிவமான பெரிய தோற்றம் ஒன்று அவர்கள் முன் தோன்றியது. இருவரும் தம் போரை நிறுத்திக்கொண்டு தம் முன் தோன்றிய ஒளிப்பிழம்பு இன்னதென ஆராய வேண்டி, திருமால் பன்றி உருவங்கொண்டு அடியின் முடிவாய எல்லை நோக்கியும், நான்முகன் அன்னத்தின் உருக்கொண்டு முடிநோக்கியும், புறப்பட்டார்கள். பல ஊழிகள் முயன்றும் காண முடியாதவர்களாய்க் களைத்து, முன் நின்ற தோற்றம் சிவபெருமானே என்பதை உணர்ந்து, திருஐந்தெழுத்தை முறையாகப் பல காலம் ஓதினர். இறைவன் அந்த அனற்பிழம்பினின்றும் வெளிப்பட்டுக் காட்சி கொடுத்து மறைந்தான்.

இந்து சமயக்கதைகள்: 41

பாண்டவர் தூது:

பாண்டவர்கள், துரியோதனனால் மதிக்கப் பெற்ற சகுனியின் சூழ்ச்சியால் சூதாடி, வளப்பமுள்ள தங்கள் குருநாட்டைத் தோற்று, காட்டில் தங்கியிருந்து, பின்னர், அதனைப் பெற வேண்டிக் கண்ணனைத் துரியோதனன் பால் தூது விடுத்தனர். அதனால், திருமாலுடைய அவதாரமாகிய கண்ணனுக்குப் ‘பாண்டவர் தூதன்’ என்ற பெயராயிற்று.

இந்து சமயக்கதைகள்: 42

பாண்டியன் மேகங்களைச் சிறையிலிட்டது:

இந்திரனுக்கும் பாண்டியனுக்கும் ஏற்பட்ட பகைமையினால், மேகங்கட்குத் தலைவனான இந்திரன் அவை பாண்டிய நாட்டில் மழை பொழியாவண்ணம் கட்டளையிட்டான். சேர, சோழ நாடுகள் மழை பெய்து செழிப்புற்றோங்க, பாண்டியநாடு மழையின்றி வற்கடம் (பஞ்சம்) மிகுவதாயிற்று. ஒரு நாள் பாண்டியன் வேட்டைக்குச் சென்றிருந்தபோது பொதிய மலையில், புட்கலாவர்த்தம், சங்கரித்தம், துரோணம், காளமுகி, ஆகிய மேகங்கள் நான்கையும் விலங்கிட்டு, மதுரைக்குக் கொண்டு வந்து சிறை செய்தான்.

இந்து சமயக்கதைகள்: 43

புலி முலை புல்வாய்க்கு அருளியது:
ஒரு கடப்பங் காட்டில் தனித்து வாழ்ந்து வந்த பெண்மான் ஒன்று தன் கன்றை ஒரு புதரில் மறைத்து வைத்து, நீர் பருகும் போது, வேடன் அம்பால் மாண்டது. தாயை இழந்த மான்கன்றுக்குச் சிவபெருமான் அருளால் அங்கிருந்த ஒரு பெண்புலி பால் கொடுத்து வளர்த்தது.

இந்து சமயக்கதைகள்: 44

பொற்கைப் பாண்டியன்:

பாண்டிய மன்னன் ஒருவன் ஓரிரவு நகர் சோதனை செய்யும்பொழுது, ஓர் அந்தணப் பெண் தனியாக வாழும் இல்லில் ஆண் பிள்ளைக் குரல் கேட்பதறிந்து, ஐயுற்றுக் கதவைத் தட்டினான். கங்கைக்கு நீராடச் சென்றிருந்த அந்தணன், அப்பொழுதுதான் திரும்பி வந்து மனைவியோடு பேசிக் கொண்டிருந்தான். தட்டியது கேட்டு அந்தணன் ஐயுற, இவ்வாறு அந்தணனுக்கு ஐயுறவு நேர்ந்தது தன் அறியாமையே என்று, அக் குறைக்கு முறை செய்ய வேண்டி, கதவு தட்டிய தன் கையைத் தானே வெட்டி எறிந்தான். வெட்டுப்பட்ட அவனது கைக்கு மாறாக, அந்த இடத்தில், இறைவன் அருளால், பொன்னிறக் கையொன்று மீண்டும் வளர்ந்து தோன்றி, அவனது செங்கோலின் சிறப்பை வெளிப்படுத்தி நின்றது. அதுமுதலாக உலகம் அவனைப் பொற்கைப் பாண்டியன் எனப் புகழலாயிற்று.

இந்து சமயக்கதைகள்: 45

மண் சுமந்தது:

வையை நதியில் வெள்ளம் பெருகி, மதுரையை அடுத்து வந்தது. அரசன் ஆணையால் குடிமக்கள் எல்லாரும் கரையைப் பங்கிட்டு, அணையிட்டார்கள், வந்தி என்னும் கிழவிக்கு ஆள் இல்லாமையால், அவள் கூலிக்கு ஆள் தேடினாள். அப்பொழுது அவள் விற்கும் பிட்டையே கூலியாக ஏற்றுக் கொண்டு, கரையிடுவதாக ஒரு கூலி ஆள் கிடைத்தான்; ஆனால் மற்றையார் பங்கெல்லாம் அடைபடவும், வந்தியின் பங்கு மட்டும் அடைபடாதிருந்தது. அவள் அனுப்பிய ஆள் ஆடுவதும் பாடுவதும் பிட்டு உண்பதும் ஆக இருக்கின்றானே அல்லாமல், வேலை செய்யவில்லை என்பதைக் கேட்ட பாண்டிய மன்னன், அந்தக் கூலி ஆளை வெகுண்டு, முதுகில் அடித்தான். அந்த அடி எல்லா உலகிலும் எல்லார் மேலும் பட்டது; வெள்ளமும் வடிந்தது; கூலிஆளும் மறைந்தான். இது இறைவன் திருவிளையாடல் என்பதை யாவரும் உணர்ந்தனர்.

இந்து சமயக்கதைகள்: 45

மத்தியந்தணன்: வியாக்கிரபாத முனிவரின் தந்தை. இவருடைய கட்டளையால் தில்லையில் வந்து தவம் புரிந்து, வியாக்கிரபாதர் நற்பேறு பெற்றார். இவரது வரலாற்றைக் கோயிற்புராணத்தில் வியாக்கிரபாதச் சருக்கத்திலே விரிவாகக் காணலாம்.

இந்து சமயக்கதைகள்: 47

மதுரை ஆலவாய் ஆனமை:

பிரளயத்தின் பின்னர் மதுரை மாநகரை நிர்மாணிக்கக் கருதிய பாண்டியன் ஒருவன், புது நகரின் எல்லையை அளவிட்டுக் காட்டவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டான். இறைவன் ஒரு சித்தரது வடிவில் தோன்றி, தான் அணிந்திருந்த பாம்புகளில் ஒன்றை எல்லையைக் குறிக்கும்படி பணிந்தார். இவர் கட்டளைப்படி பாம்பும் நகரைச் சுற்றிலும் வளைந்து கிடந்து எல்லையைக் குறித்துக் காட்டியது. பாம்பு எல்லைக் குறித்தமையால் மதுரைக்கு ஆலவாய் என்று ஒரு பெயரும் பின்னர் வழங்குவதாயிற்று.

இந்து சமயக்கதைகள்: 48

மரக்கால் ஆடியது:

உலகத்துக்குத் துன்பம் இழைக்க வேண்டிப் பாம்பு தேள் முதலிய நச்சுப் பூச்சிகளின் உருவெடுத்துப் பெருகிய அவுணர்களை இறைவி மரத்தாற் செய்த கால்களின் மேல் ஏறி நின்று கூத்தாடி உழக்கி அழித்தாள். இவ்வாறு ஆடிய கூத்திற்கு ‘மரக்கால் கூத்து’ என்பது பெயர்.

இந்து சமயக்கதைகள்: 49

மாணிக்கம் விற்றது:

வீரபாண்டிய மன்னன் வேட்டைக்குச் சென்ற காலத்து, புலியால் தாக்குண்டு இறந்தான். அவன் மகனாகிய இளவரசனுக்கு உரிய முடி, கலன்கள், முதலியவற்றைத் தாயாதிகள் கவர்ந்து, வேறு தேசம் சென்றனர். இதனால் இளவரசனுக்கு முடி சூட்ட வேறு கிரீடம் செய்ய வேண்டியதாயிற்று. அமைச்சர்கள் பெருங் கவலையுடன் அரசிளங் குமரனையும் உடன்கொண்டு, ஆலவாய்ப் பெருமான் கோயிலுக்குச் செல்ல, கோபுர வாயிலில் இறைவனே வணிகனாய் வந்து, மன்னனுக்கு வேண்டும் மாணிக்கம் கொண்டு வந்து விற்று, ‘இந்த மணிகளால் முடிசெய்து சூட்டி, இவ்வரசனை அபிடேக பாண்டியன் என வழங்குக’ என்று அருளினார். வணிகனுக்கு உரிய பொருளைக் கொடுக்க முற்படும்பொழுது வணிகனாய் வந்த பெருமான் மறைந்தருளினார். அரசிளங்குமரனும் அமைச்சர் முதலியோரும் பெருமானுடைய கருணையை வியந்து போற்றினர்.

இந்து சமயக்கதைகள்: 50

மாமனாக வந்தது:

ஒரு வணிகன் தன் மருமகனைப் பிள்ளையாகக் கொண்டு, தன் செல்வம் முழுவதையும் அவனுக்கே கொடுத்து, வடநாடு சென்று மறைந்தான். அப் பொருளைக் கவர வேண்டி அவன் தாயத்தார் வழக்குத் தொடுத்தனர். துணை ஒன்றும் இல்லாத அம் மருமகன் ஆலவாய் அண்ணலிடம் முறையிட, அப் பெருமானே அவனுடைய மாமனாக எழுந்தருளி, வழக்கைத் தீர்த்துப் பெற்ற பொருளை நிலைநிறுத்தினார்.

இந்து சமயக்கதைகள்: 51

மாமியாடக் கடல் அழைத்தது:

தடாதகைப் பிராட்டியார், தன் தாய் காஞ்சனமாலை கடலாட விழைந்ததை நிறைவேற்ற எண்ணி, ஆலவாய் அண்ணல்பால் தெரிவித்தாள். இறைவனும் அம்மை விருப்பத்திற்கு இணங்கிக் கடலை மதுரையிலே வரவழைத்தருளினார்.

இந்து சமயக்கதைகள்: 52

மார்க்கண்டர்: 17 ஆவது கதை பார்க்க.

இந்து சமயக்கதைகள்: 53

மாறி ஆடியது:

பல கலைகளிலும் வல்லவனாக இருந்த பாண்டியன் ஒருவன் நாட்டியக் கலையிலும் வல்லவனாக வேண்டும் என்ற நோக்கத்தோடு பயின்றபோது, பயிற்சியால் உடலுக்குளதாம் அயர்ச்சியைத் தானே நேரில் கண்டு, எப்பொழுதும் கால்கள் மாறாது ஒரே வண்ணமாக ஆடுகின்ற வெள்ளி அம்பலக்கூத்தன் மேல் பரிவு கொண்டு, கால்மாறி ஆட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதற்கு இரங்கி, வெள்ளியம்பலக்கூத்தன் அவ்வாறே செய்தருளினான்.

இந்து சமயக்கதைகள்: 54

முப்புரம் எரித்தது:
வானத்தில் பறக்கும் வலிமை பெற்ற பொன், வெள்ளி இரும்புக் கோட்டைகளைக் கொண்டு, மூன்று அரக்கர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தார்கள். தேவர்கள் எல்லாம் தேராகவும் படைக்கலமாகவும் மாறி, சிவபெருமானைத் தேரில் ஏற்றிக்கொண்டு, அவ்வசுரர்களோடு போருக்குப் புறப்பட்டனர். சிவபெருமான், தேவர்களுடைய துணையை வேண்டாமலே, நகைத்து அம் முப்புரங்களையும் எரித்தார்.

இந்து சமயக்கதைகள்: 55

முருகன்: குறிஞ்சிநிலத் தெய்வம்; சிவபெருமானுடைய இளைய பிள்ளை; சரவணப் பொய்கையில், கார்த்திகையாகிய ஆறு தாயர்களால் வளர்க்கப்பெற்றவர்; நாரதன் வேள்வியில் தோன்றிய ஆட்டுக்கிடாயை அடக்கி, வாகனமாகக் கொண்டு விளையாடியவர்; பிரணவத்தின் பொருளைத் தந்தைக்கு உபதேசித்தவர்; பிரமனைக் குட்டிச் சிறையிலிட்டு, பின் தேவர்கள் வேண்ட விடுதலை செய்தவர்; நேரிமலையைத் தணித்தவர்; அகத்தியருக்குத் தமிழ் அறிவுறுத்தியவர்; உமாதேவியாரிடமிருந்து வேற்படையைப் பெற்றவர்; தேவர்களுக்கு இடுக்கண் செய்த சூரபதுமனை வென்று, தலைகீழ் நிற்கும் ஒரு மாமரமாக அவன் உருவெடுத்துக் கடலில் மறைந்தபோது, கடல்வற்ற வேல் விடுத்து, மாமரத்தை இரு துண்டமாக வெட்டிச் சாய்க்க, ஒரு துண்டு மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் வந்து போர் செய்ய, அவற்றை அடக்கி, முறையே வாகனமாகவும் கொடியாகவும் கொண்டவர்; இந்திரன் மகளாகிய தேவ யானையையும், குறிஞ்சி நிலமகளாகிய வள்ளியம்மையாரையும் மணந்து, அடியவர் வேண்டும் இடங்களில் அமர்ந்து அருள் செய்பவர்; தென் நாடும், தமிழ் மொழியும் ஏற்றமடைய வேண்டி, பாண்டியர் குடியிலும் மதுரை மணிவணிகர் குடியிலும் தோன்றி, நாடாண்டும் தமிழாய்ந்தும், அருள் செய்தவர்.

இந்து சமயக்கதைகள்: 56

யானைமுகக் கடவுள்:

சிவபெருமானின் மூத்த பிள்ளையார்; களிறும் பிடியுமாக எழுதியிருந்த ஓவியத்தில் இறைவன், இறைவியுடைய திருக்கண் பட, அங்கிருந்து யானை முகத்துடன் தோன்றியவர்; தேவர்களுக்கு இன்னல் விளைத்து வந்த யானைமுக அசுரனைத் தம் கொம்பால் எறிந்து கொன்று, தம் பெருமூச்சினால் அவனுடைய படையையும் கிளையையும் வேரறுத்து, வானவர்கள் துன்பத்தைத் தீர்த்தவர்; சிவபெருமான் தன் இரு பிள்ளைகளுள் உலகத்தை வலம் செய்து முதலில் வருபவருக்கு ஒரு மாங்கனி அளிப்பதாக கூற, இறைவனல்லாது ஞாலமில்லையாகையால் இறைவனே உலகம் என்று கண்டு, இறைவன் இறைவி திருவுருவங்களை வலம் வந்து வணங்கி, மாங்கனியைப் பெற்றவர்; இந்திரன் வேண்ட, அகத்தியரது கமண்டலத்திலிருந்த நீரைக் காகமாகச் சென்று கவிழ்த்து, காவிரியாகப் பெருகச் செய்தவர். தம்மை வழிபடும் அடியவர்களது துன்பத்தைப் போக்கி, இன்பத்தைத் தந்து வாழ்விப்பவர்.

இந்து சமயக்கதைகள்: 57

வடுகக் கடவுள்: இவர்க்கு வைரவக் கடவுள் என்பது மற்றொரு பெயர். ஐந்து முகங்களோடு இருந்த பிரமனது அகந்தையைச் சிவபெருமான் ஏவலால் அடக்கி, ஐந்தாவது தலையை நகத்தால் கிள்ளி, பலியேற்கும் கலனாகக் கையில் ஏந்தி, தேவர்களுடைய குருதியைப் பலியாக ஏற்று, அவர்கள் இறுமாப்பையும் அடக்கித் தூய்மைப்படுத்தியவர்; வைரவ புவனத்துக்கு அதிபராக இருந்து மக்களுக்குத் துன்பத்தைப் போக்கி இன்பந் தருபவர். நீல நிறமுடையவர்; சிவபெருமானுக்கு உள்ள அடையாளங்களும் படைக்கலங்களும் பெரும்பாலும் இவர்க்கும் உண்டு. வேதங்கள் நாய் உருக்கொண்டு வாகனமாக இவர்க்கு அமைந்தன. பிள்ளை என்றும், மகன் என்றும் இவரைக் கூறுவதுண்டு.

இந்து சமயக்கதைகள்: 58

வந்தியாளாக வந்தது: 45 ஆவது கதை பார்க்க.

இந்து சமயக்கதைகள்: 59.

வலை வீசியது:

சிவபெருமானது சுடு மொழியால், உமைஅம்மையார், பாண்டி நாட்டில் ஒரு வலைஞன் மகளாகவும், தென் கடலில் நந்திதேவர் ஒரு சுறா மீனாகவும் பிறந்தனர். வலைஞர் குலத்து இளைஞன் உருவில் சிவபெருமான் எழுந்தருளி, சுறாமீனாகத் திரிந்த நந்திதேவரைப் பிடித்தும், அவர் சுமந்திருந்த ஆகமங்களை வாங்கியும், வலைஞர் மகளாக வளர்ந்த உமையம்மையாரை மணந்தும், திருவருள் செய்தார்.

இந்து சமயக்கதைகள்: 60

வழுதியாகி முழுதுலகு அளித்தது: சிவபெருமான் தடாதகைப் பிராட்டியாரை மணந்து, பாண்டி நாட்டில் அரசு செலுத்தியதால், ‘வழுதியாகி முழுதுலகளித்தது’ என வழங்கப் பெறுகிறது. இவர் வழுதி ஆகி ஆட்சி செய்யும்பொழுது மக்களுக்கும் அரசர்களுக்கும் தெய்வ வழிபாட்டின் இன்றியமையாமையைத் தெளிவுறுத்த வேண்டித் தம் நகரமாகிய மதுரை மாநகரின் நடுவூரில் ஒரு திருக்கோயில் அமைத்துத் தெய்வ வழிபாடு செய்து வந்தார்.

இந்து சமயக்கதைகள்: 61

வள்ளுவமாலையின் முதற்கவி பாடியது:

திருவள்ளுவர் அருளிய திருக்குறள் என்னும் அரிய நூலை மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் முதலில் புறக்கணித்து, பின்னர், தெய்வநிகழ்ச்சி ஒன்றால் அதன் பெருமையை உணர்ந்து பாராட்டினர் என்றும், அவ்வாறு பாராட்டும் பொழுது சிவபெருமானே புலவராக எழுந்தருளி முதற்கவி பாடினார் என்றும், அதுவே திருவள்ளுவமாலையின் முதற் செய்யுளாக அமைந்துளது என்றும் கூறுகிற செவி வழக்கான செய்தியைக் கொண்டு எழுந்தது இக் கதை.

இந்து சமயக்கதைகள்: 62

வளையல் விற்றது:

தாருகாவன முனிவர்களுடைய பெண்டிர் பழவினையால் மதுரையில் வணிகர் புதல்வியர்களாகப் பிறந்தார்கள். அவர்களை ஆட்கொள்வதற்காக, சிவபெருமான் வளையல் விற்கும் வணிகனது கோலத்தில், மதுரைத் தெரு வீதிகளில் நடந்து, வளையல் விற்றார்.

இந்து சமயக்கதைகள்: 63

வாள் எடுத்தது:

வாள் வீச்சில் வல்லவனான சித்தன் என்பான், தன் ஆசிரியர் மனைவிபால் தகாதது எண்ணித் தனித்துக் கூற, அவ்வம்மையார், மனம் நடுங்கி, ஆலவாய் அண்ணலை நினைந்தார்; அப் பெருமான் ஆசிரியர் வடிவில் வந்து, அத் தீயோனைப் பலவாறு வாளால் மலைந்து சிதைத்தார்.

இந்து சமயக்கதைகள்: 64

விறகு விற்றது:

பாண்டியன் செய்த சிறப்பால் இறுமாப்புற்று, மதுரையில் தங்கியிருந்த ஒரு வடபுலப் பாணனோடு, ஆலவாய் அண்ணலின் அடியவனான பாணன் ஒருவன் இசைவாது செய்ய நாள் குறிப்பிட்டிருந்தபோது, வட புலப்பாணனின் தான் தாழ்ந்தவன் என எண்ணங் கொண்டிருந்த தன் பக்தனாகிய மதுரைப் பாணனுக்கு ஆலவாய் அண்ணல் இரங்கி, இசைபயிலத் தகுதியற்றவன் என மதுரைப் பாணனால் புறக்கணிக்கப்பட்டதால் விறகு விற்கும் தொழிலை மேற்கொண்டு ஒரு முதியவன் போல் வடபுலப் பாணனின் இருப்பிடம் வந்து சாதாரிப் பண்ணைப் பாட, அதன் இனிமை, உயர்வு இவற்றைக் கண்டு அஞ்சி, அந்த வடபுலப் பாணன் மதுரையை விட்டு அகன்றான்.

இந்து சமயக்கதைகள்: 65

வீரனை அருளியது: தக்கன் சிவபெருமானைப் புறக்கணித்து வேள்வி செய்ய முயன்றதற்காக உமையம்மை உள்ளம் வருந்திச் சினங்கொண்டு, அவ் வேள்வியை அழிக்க எண்ணியபோது, சிவபெருமானது நெற்றிக்கண்ணினின்றும் வீரபத்திரக் கடவுள் தோன்றி, தக்கன் வேள்வியை அழித்தார்.

இந்து சமயக்கதைகள்: 66

வையை நதியை அழைத்தது:

தடாதகைப் பிராட்டியார் திருமணவிழாவிற்குச் சிவபெருமானொடு வந்த பூத கணங்களில் ஒருவனாகிய குண்டோதரன் மலை மலையாகக் குவிந்துள்ள சோற்றை ஒருங்கே உண்டு, மிக்க நீர் வேட்கைகொண்டு, மதுரையில் உள்ள நீரெல்லாவற்றையும் பருகிப் போதாது வருந்த, சிவபெருமான், அவன் நீர்வேட்கை தணியுமாறு ஒரு பேராற்றை மதுரைக்கு வரச் செய்தார். அங்ஙனம் வந்த ஆறே வையை எனப் பெயர்பெற்றது.

Scroll to Top