You cannot copy content of this page

உலகநீதி: ஓதாமல் ஒருநாளும்

இந்நூற் பெயர் உலகநீதி என்பதும், இதனை இயற்றியவர் உலகநாதன் என்னும் பெயருடையவரென்பதும் இதன் இறுதிச் செய்யுளால் விளங்குகின்றது.

இதிற் சொல்லப்பட்டனவெல்லாம் யாவரும் கைக்கொள்ள வேண்டிய சிறந்த நீதிகள் என்பதில் ஐயமில்லை. எளிய நடையில் ஓசை நலத்தோடு விளங்குவது இதற்குத் தனியாகவுள்ள சிறப்பியல்பு ஆகும்.

இதனை இயற்றியவர் முருகக் கடவுளிடத்திலும், வள்ளிநாய்ச்சியாரிடத்திலும் பக்தியுடையவரென்பது ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வள்ளிபங்கனாகிய முருகனை வாழ்த்துவாயாக என நெஞ்சை நோக்கிக் கூறுதலால் வெளியாகின்றது.

காப்பு

உலக நீதி புராணத்தை யுரைக்கவே
கலைக ளாய்வருங் கரிமுகன் காப்பு.


(பதவுரை) உலக நீதி – உலக நீதியாகிற, புராணத்தை – பழஞ் செய்திகளை, உரைக்க – நான் கூறுதற்கு, கலைகள் – வேதம் முதலிய நூல்களால், ஆய்வு அரும் – ஆராய்ந்து காண்டற்கு அரிய, கரிமுகன் – யானை முகத்தையுடைய விநாயகக் கடவுள், காப்பு – காப்பாவர் என்றவாறு.

(பொழிப்புரை) உலக நீதி என்னும் பழஞ் செய்திகளைச் சொல்லுதற்கு வேத முதலிய நூல்களாலும் அறியவொண்ணாத விநாயகக் கடவுள் காப்பாவர் எ-று.

உலகநீதி உலகத்தில் பண்டைக்காலந் தொடங்கி உயர்ந்தோர்களால் ஏற்கப்பட்டு வரும் நீதிகள். இவைதாம் புதியனவாகச் சொல்வனவல்ல, தொன்று தொட்டுள்ளனவே என்பது அறிவித்தற்குப் `புராணம்’ என்றார்; புராணம்-பழமை; பதினெண் புராணம் முதலியவற்றைப் போல் இதனையும் புராணமென்றாரென்று கொள்ளற்க. கலைகளாய் வரும் என்பதற்குக் கலைகளின் வடிவாகி வரும் என்றுரைப்பினும் அமையும்.காப்பு – காவல்; இடையூறு வராமல் பாதுகாப்பர் என்றபடி.


 1.ஓதாம லொருநாளும் இருக்க வேண்டாம்
    ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
    வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
    போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) ஓதாமல் – (நூல்களை) கற்காமல், ஒருநாளும்-ஒருபொழுதும், இருக்கவேண்டாம்- (நீ) வாளா இராதே.

ஒருவரையும்- யார் ஒருவர்க்கும், பொல்லாங்கு -தீமை பயக்கும் சொற்களை, சொல்ல வேண்டாம்- சொல்லாதே.

மாதாவை – (பெற்ற) தாயை, ஒருநாளும் – ஒருபொழுதும், மறக்க வேண்டாம் – மறவாதே.

வஞ்சனைகள் – வஞ்சகச் செயல்களை, செய்வாரோடு – செய்யுங் கயவர்களுடன், இணங்க வேண்டாம்- சேராதே.

போகாத – செல்லத்தகாத, இடந்தனிலே – இடத்திலே, போகவேண்டாம் – செல்லாதே.

போகவிட்டு – (ஒருவர்) தன்முன்னின்றும் போன பின்னர், புறம் சொல்லி – புறங்கூறி, திரியவேண்டாம்-அலையாதே.

வாகு- தோள்வலி, ஆரும் – நிறைந்த, குறவருடை -குறவருடைய (மகளாகிய), வள்ளி – வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை – மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே – மனமே, வாழ்த்தாய் -வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) எக்காலத்திலும் இடைவிடாது கல்வி கற்கவேண்டும்.

எவரையும் தீய சொற்களால் வையாதே. பகைவராயினும் என்பதற்கு ஒருவரையும் என்றார். பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்றமையால், நன்மைபயக்கும் சொற்களே சொல்ல வேண்டும் என்பதாயிற்று.

பெற்ற தாயை எக்காலத்தும் நினைந்து போற்றுதல் வேண்டும்.

வஞ்சகச் செயல்களைச் செய்பவர்களுடன் நட்புக்கொள்ளுதல் கூடாது. வஞ்சனை – கபடம்.

செல்லத்தகாத தீயோரிடத்தில் ஒன்றை விரும்பிச் செல்லாதே, தகுதியில்லாரிடத்தில் எவ்வகைச் சம்பந்தமும் கூடாது.

ஒருவரைக் கண்டபோது புகழ்ந்து பேசிக் காணாத விடத்தில் இகழ்ந்து பேசுதல் கூடாது. புறஞ் சொல்லல் – புறங்கூறல்; காணாவிடத்தே ஒருவரை இகழ்ந்துரைத்தல்.

குறவர் மகளாகிய வள்ளியம்மையின் கணவனாகிய முருகக் கடவுளை நெஞ்சே நீ வாழ்த்துவாயாக.

வாகு: ஆகுபெயர்; மான் வயிற்றிற்பிறந்து குறவர் தலைவனால் வளர்க்கப்பெற்றமையானும் குறவரெல்லாராலும் அன்பு பாராட்டப் பெற்றமையானும் ‘குறவருடை வள்ளி’ என்றார்.

உடைய என்னும் பெயரெச்சம் குறைந்து நின்றது. பெருமான் என்பது பெருமாள் எனத் திரிந்து நின்றது. வாழ்த்தாய்; முன்னிலையேவலொருமை வினைமுற்று.

நெஞ்சே என்றது விளி; இதனை ‘இருக்க வேண்டாம்’ என்பது முதலிய ஒவ்வொன்றோடும் கூட்டுக; பின்வரும் பாட்டுகளிலும் இங்ஙனமே கூட்டிக்கொள்க. 

___________________________________

*`வேண்டாம்’- என்னும் இச்சொல், `வேண்டா’ என்றிருத்தல்வேண்டுமெனப் பெரும் புலவர் சிலரால் கருதப்படுகின்றது.  

2.நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
    நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
    நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
    அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) நெஞ்சு ஆர – மனம் பொருந்த, பொய்தன்னை – பொய்யை, சொல்லவேண்டாம் – சொல்லாதே.

நிலை இல்லா – நிலைபெறாத, காரியத்தை – காரியத்தை, நிறுத்த வேண்டாம் – நிலைநாட்டாதே.

நஞ்சுடனே – விடத்தையுடையபாம்புடனே, ஒருநாளும் – ஒரு பொழுதும், பழக வேண்டாம்- சேர்ந்து பழகாதே.

நல்இணக்கம் – நல்லவர்களுடையநட்பு, இல்லாரோடு – இல்லாதவர்களுடன், இணங்கவேண்டாம்- நட்புக்கொள்ளாதே.

அஞ்சாமல்- பயப்படாமல், தனி-தன்னந்தனியாக,வழி போகவேண்டாம் – வழிச்செல்லாதே.

அடுத்தவரை – தன்னிடத்து வந்துஅடைந்தவரை, ஒரு நாளும் – ஒரு பொழுதும், கெடுக்கவேண்டாம்- கெடுக்காதே.

மஞ்சு ஆரும்- வலிமை நிறைந்த, குறவருடை – குறவருடைய (மகளாகிய) வள்ளி-வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்- பக்கத்தில், உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை – மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே – மனமே; வாழ்த்தாய்- (நீ)வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) மனமறியப் பொய் கூறுதல் கூடாது.

“தன்னெஞ் சறிவது பொய்யற்க” என்றார் திருவள்ளுவர். பொய்தன்னை என்பதில், தன்:சாரியை.

உறுதியில்லாததை நிலைநிறுத்த முயலுதல் கூடாது. நிலையின்மை – பொய்த்தன்மை.

பாம்பைப்போன்ற கொடியாருடன் பழகுதல் கூடாது. நஞ்சு, பாம்பிற்கு ஆகுபெயர் : அஃது ஈண்டுக் கொடியாரை உணர்த்திற்று.

நல்லோரினத்தைப் பெறாது தீயவருடன் நட்புடையோரை நட்பினராகக் கொள்ளுதல் கூடாது.

நல்லிணக்கம் இல்லார் என்றமையால்; தீயவரின் இணக்கமுடையவரென்று கொள்க.

நட்பிற்குரிய நல்ல பண்பில்லாதவர்களுடன் நட்புச் செய்ய வேண்டாம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆத்திசூடியில் `இணக்கமறிந் திணங்கு’ என்றதும் காண்க.

துணையில்லாமல் தனியாக வழிச்செல்லல் கூடாது. தனிவழி என்பதற்கு மனிதர் நடமாட்டமில்லாத காட்டுவழி என்றும் பொருள் சொல்லலாம்.

தன்னை அண்டினவர்களைக் கெடுக்காமல்காத்தல் வேண்டும்.

அடுத்தவர்- வறுமை முதலியவற்றால் துன்பமுற்று அடைந்தவர். கெடுக்க வேண்டாம் என்றமையால் காத்தல் வேண்டும் என்றும் கொள்க.

மைந்து என்பது மஞ்சு எனப்போலியாயிற்று. (2)  

3.மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
    மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
    தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
    சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
வனந்தேடுங் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) மனம்-உள்ளமானது, போனபோக்கு எல்லாம்- சென்றவாறெல்லாம், போக வேண்டாம்- செல்லாதே.

மாற்றானை – பகைவனை, உறவு என்று- உறவினன் என்று, நம்ப வேண்டாம் – தெளியாதே.

தனம்தேடி – பொருளை (வருந்தித்) தேடி, உண்ணாமல்- நுகராமல், புதைக்கவேண்டாம் – மண்ணிற் புதைக்காதே.

தருமத்தை – அறஞ் செய்தலை, ஒருநாளும்- ஒரு பொழுதும், மறக்க வேண்டாம் – மறக்காதே.

சினம்- வெகுளியை, தேடி – தேடிக்கொண்டு, அல்லலையும்- (அதனால்) துன்பத்தினையும் தேட வேண்டாம்-தேடாதே.

சினந்து இருந்தார் – வெகுண்டிருந்தாருடைய, வாசல்வழி -வாயில் வழியாக, சேறல் வேண்டாம்- செல்லாதே.

வனம் தேடும் – காட்டின்கண் (விலங்கு முதலியன) தேடித்திரியும், குறவருடை – குறவருடைய (மகவாகிய), வள்ளி- வள்ளி நாச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும்  பெருமாளை – மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே – மனமே, வாழ்த்தாய் – வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) மனம்போன வழியில் தான் போகாமல் தன்வழியில் மனத்தைநிறுத்த வேண்டும்.

“எந்தநாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே” என்பதுபோல நெஞ்சை விளித்து, `மனம்போன போக்கெல்லாம்’ என்றார்.

பகைவன் உறவினனாயினும் அவனை நம்பலாகாது.

பகைவன் நண்பன்போல் நடித்தாலும் அவனை நண்பனென்று நம்பிவிடக்கூடாது என்னலும் ஆம். உறவு: ஆகு பெயர்.

பொருளைத்தேடி அனுபவிக்காமல் புதைத்து வைத்தல் கூடாது. உண்ணாமல் என்பதனோடு அறஞ்செய்யாமல் என்பதும் சேர்த்துக்கொள்க.

நாள்தோறும் அறத்தினை மறவாது செய்தல்வேண்டும். மறக்கவேண்டாம் என்றமையால், நினைந்து செய்தல்வேண்டும் என்பது ஆயிற்று.

கோபத்தை வருவித்துக்கொண்டு துன்பமடையலாகாது. உம்மை எச்சவும்மை.

சினங்கொண்டிருந்தாருடைய வீட்டின் வழியாக நடத்தல் கூடாது.

இல்வாய் என்பது வாயில் என்றாகி வாசல் என மருவிற்று. சினத்திருந்தார் எனவும் பாடம்.

தேடும் என்பதற்கேற்ப விலங்கு முதலியன என்பது வருவிக்கப்பட்டது; வனம் என்பதற்கு அழகு என்று பொருள் கூறி அழகைத் தேடிய வள்ளியென்று இயைத்துரைத்தலும் ஆகும், (3)  

4.குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
    கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம்
கற்றவரை யொருநாளும் பழிக்க வேண்டாம்
    கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோ டெதிர்மாறு பேச வேண்டாம்
    கோயிலில்லா ஊரிற்குடி யிருக்க வேண்டாம்
மற்றுநிக ரில்லாத வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) குற்றம் ஒன்றும்- (ஒருவர் செய்த) குற்றத்தை மாத்திரமே, பாராட்டி – எடுத்துச்சொல்லி, திரிய வேண்டாம்- அலையாதே.

கொலைகளவு – கொலையும் திருட்டும், செய்வாரோடு, செய்கின்ற தீயோருடன், இணங்கவேண்டாம்- நட்புச்செய்யாதே.

கற்றவரை – (நூல்களைக்) கற்றவரை; ஒரு நாளும் – ஒரு பொழுதும், பழிக்கவேண்டாம் – பழிக்காதே.

கற்பு உடைய மங்கையரை – கற்புடைய பெண்களை, கருத வேண்டாம் – சேர்தற்கு நினையாதே.

எதிர் – எதிரேநின்று, கொற்றவனோடு – அரசனோடு , மாறு – மாறான சொற்களை, பேசவேண்டாம்-பேசாதே.

கோயில் இல்லா – கோயில் இல்லாத, ஊரில் – ஊர்களில், குடிஇருக்க வேண்டாம்- குடியிருக்காதே.

மற்று – பிறிதொன்று, நிகர் இல்லாத – ஒப்புச்சொல்ல முடியாத, வள்ளி – வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்-பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை – மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே – மனமே, வாழ்த்தாய் -வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) ஒருவரிடத்துள்ள குற்றத்தையே எடுத்துத் தூற்றுதல் கூடாது. குற்றத்தை விட்டுக் குணத்தைப் பாராட்ட வேண்டும் என்பதாம். பிரிநிலை ஏகாரம் தொக்கு நின்றது.

கொலை செய்வாருடனும், களவு செய்வாருடனும் கூடுதல் கூடாது. செய்வாருடன் சேர்தல் கூடாது என்றமையால் அவை செய்தல் ஆகாது என்பது, தானே பெறப்படும்.

கல்விகற்ற பெரியாரை நிந்தித்தல் கூடாது. பழிக்கவேண்டாம் என்றமையால் புகழவேண்டும் என்பது பெறப்படும்.

கற்புடைய மாதர்மேல் விருப்பம் வைத்தல் கூடாது. இங்கே மங்கையர் என்றது தம் மனைவியல்லாத பிற மாதர்களை நினைத்தலும் செய்தலோடு ஒக்குமாகையால் நினைத்தல் கூடாது என்றார்.

அரசன் முன்னின்று அவனுக்கு மாறாகப் பேசுதல் கூடாது. மாறு- விரோதம்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருத்தல் கூடாது. திருக்கோயில் இல்லாத ஊர் கொடிய காட்டையொக்கும் (4)  

5.வாழாமற் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்
    மனையாளைக் குற்றமொன்றுஞ் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
    வெஞ்சமரிற் புறங்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
    தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாருங் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) பெண்ணை – மனையாளை, வைத்து – (வீட்டில் துன்பமுற) வைத்து, வாழாமல் – (அவளோடு கூடி) வாழாமல், திரியவேண்டாம் – அலையாதே.

மனையாளை – பெண்டாட்டியின் மீது, குற்றம் ஒன்றும் – குற்றமான சொல் யாதொன்றும், சொல்லவேண்டாம் – சொல்லாதே.

வீழாத – விழத்தகாத, படுகுழியில் – பெரும் பள்ளத்தில், வீழ வேண்டாம் – வீழ்ந்துவிடாதே.

வெஞ்சமரில் – கொடிய போரில், புறங்கொடுத்து – முதுகு காட்டி, மீள வேண்டாம் – திரும்பிவாராதே.

தாழ்வான – தாழ்வாகிய, குலத்துடன்-குலத்தினருடன், சேர வேண்டாம் – கூடாது.

தாழ்ந்தவரை – தாழ்வுற்றவர்களை, பொல்லாங்கு – தீங்கு, சொல்ல வேண்டாம் – சொல்லாதே.

வாழ்வு ஆரும் – செல்வம் நிறைந்த, குறவருடை – குறவருடைய (மகளாகிய) வள்ளி- வள்ளி நாச்சியாரை, பங்கன் – பக்கத்தில் உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை – மயிலின் மீது ஏறி

நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே – மனமே , வாழ்த்தாய் – வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) மனையாளோடு கூடி வாழாமல் அலைதல் கூடாது. திரிதல்- வேசையர் முதலியோரை விரும்பி அலைதல். இனி, பெற்ற பெண்ணைக் கணவனுடன் வாழாமல் தன் வீட்டில் வைத்து மாறுபட வேண்டாம் என்பதும் ஆம்.

மனைவியைப்பற்றி எவ்வகைக் குற்றமும் அயலாரிடத்துச் சொல்லுதல் கூடாது.

மனைவிக்குள்ளது தனக்கும் உள்ளதாம் ஆகலானும், கேட்ட அயலார் ஒரு காலத்துப் பழிக்கக்கூடும் ஆகலானும் சொல்ல வேண்டாம் என்றார். கற்புடைய மனைவிமீது குற்றம் சுமத்துவது பாவம் என்பதுமாம்.

விழத்தகாத படுகுழியில் விழுதல் ஆகாது. படுகுழி என்பது கொடுந்துன்பத்திற்கு ஏதுவாகிய தீயசெய்கையைக் குறிக்கின்றது. மீளாத துன்பத்தை யுண்டாக்கும் தீச்செய்கையைச் செய்யலாகாது என்க.

போரில் அச்சத்தால் முதுகுகாட்டி ஓடுதல்கூடாது, ஆண்மையுடன் எதிர்த்து நின்று போர்புரிய வேண்டுமென்க. புறம் – முதுகு. சமர் – போர், யுத்தம்.

தாழ்ந்த குலத்தாருடன் சேர்தல் கூடாது. குலம், அதனை உடையார்க்கு ஆகுபெயர். தாழ்ந்த குலத்தார் – இழிதொழில் செய்யும் குடியிற் பிறந்தவர். சேர்தல் – நட்புக்கொள்ளுதலும் சம்பந்தஞ் செய்துகொள்ளுதலும்.

உயர்ந்தநிலையிலிருந்து தாழ்வெய்தியவர்களைத் தீமையாகப் பேசுதல்கூடாது. தாழ்ந்தவர் என்பதற்குக் கீழோர் என்றும், வணங்கினவர் என்றும் பொருள் கூறுதலும் பொருந்தும். (5)


 6.வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
    மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
    முன்கோபக் காரரோ டிணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம்
    வழிபறித்துத் திரிவாரோ டிணங்க வேண்டாம்
சேர்த்தபுக ழாளனொரு வள்ளி பங்கன்
    திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே

(ப-ரை.) வார்த்தை சொல்வார்- (பயனில்) சொற்கள் கூறுவாருடைய, வாய் பார்த்து – வாயைப் பார்த்துக் கொண்டு, திரியவேண்டாம் – அவரோடு கூட அலையாதே.

மதியாதார் – நன்கு மதிக்காதவருடைய, தலைவாசல் – கடை வாயிலில், மிதிக்க வேண்டாம்- அடியெடுத்து வைக்காதே.

மூத்தோர் – தாய், தந்தை, தமையன், ஆசான் முதலியவர்களும், அறிவிற்பெரியோர்களும் ஆவர்.

முன்கோபக்காரரோடு – முன்கோபமுடையாருடனே, இணங்க வேண்டாம் – சேராதே.

வாத்தியார்- (கல்வி கற்பித்த) ஆசிரியருடைய, கூலியை – சம்பளத்தை, வைத்திருக்க வேண்டாம் – (கொடுக்காமல்) வைத்துக்கொள்ளாதே.

வழி பறித்து – வழிப்பறி செய்து, திரிவாரோடு- திரிந்து கொண்டிருப்பவருடன், இணங்கவேண்டாம் – சேராதே.

சேர்த்த – ஈட்டிய, புகழாளன் – புகழுடையவனாகிய, ஒரு – ஒப்பற்ற, வள்ளி பங்கன்-வள்ளியம்மையாரைப் பக்கத்தில் உடையவனாகிய, திருகை – அழகிய கையின்கண், வேலாயுதனை-வேற்படையையுடைய முருகக்கடவுளை, நெஞ்சே – மனமே, செப்பாய் – புகழ்வாயாக.

(பொ-ரை.) வீண் பேச்சுப் பேசுவார் சொற்களைக் கேட்டுக்கொண்டு அவர்பின் அலைதல் கூடாது.

வாய், சொல்லுக்கு ஆகுபெயர். வாய்பார்த்தல் என்றது “பண்கண்டளவில்” என்பதுபோல நின்றது.

மதியாதாருடைய வீட்டிற்குச் செல்லுதல் கூடாது. மதியாதார் – அவமதிப்பவர்.

மிதித்தல்- அடியெடுத்து வைத்தல், சேர்தல்.

பெரியோர் கூறியனவற்றை மறத்தல் கூடாது; பெரியோர் சொன்னபடி நடக்க வேண்டும் என்க.

மூத்தோர் – தாய், தந்தை, தமையன், ஆசான் முதலியவர்களும், அறிவிற் பெரியோர்களும் ஆவர்.

மிக்க கோபமுடையாருடன் நட்புக்கொள்ளுதல் கூடாது.

முன்கோபம் – பொறுமையின்றி முதலெடுப்பில் உண்டாகும் சினம். கோபக்காரருடன் சேரவேண்டாம் என்றதனால் கோபம் கூடாது என்பதும் ஆயிற்று.

கல்வி கற்பித்த ஆசிரியன் காணிக்கையைக் கொடாமல் இருத்தல் கூடாது.

உபாத்தியாயர் என்பது வாத்தியார் எனத் திரிந்தது.

வழிப்பறி செய்யும் கள்வருடன் சேர்தல் கூடாது.

வழிப்பறி செய்தல்-வழியிற் பயணம் போகிறவர்களின் பொருளைப் பறித்துக்கொள்ளுதல்.

சேர்த்த – சம்பாதித்த; சேர்த்த என்பது வலித்தல் விகாரமாயிற்று என்னலுமாம்.  (6)  

7.கருதாமற் கருமங்கள் முடிக்க வேண்டாம்
    கணக்கழிவை யொருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம்
    பொது நிலத்தி லொருநாளும் இருக்க வேண்டாம்
இருதார மொருநாளுந் தேடவேண்டாம்
    எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன்
    குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே

(ப-ரை.) கருமங்கள்-(செய்யத்தக்க) காரியங்களை, கருதாமல் – (செய்யும்வழியை ) எண்ணாமல், முடிக்க வேண்டாம் – முடிக்க முயலாதே.

அழிவு கணக்கை – பொய்க்கணக்கை, ஒருநாளும்- ஒருபொழுதும், பேச வேண்டாம் – பேசாதே.

பொருவார் – போர் செய்வாருடைய, போர்க்களத்தில்- போர்(நடக்கும்) இடத்தின்கண், போக வேண்டாம் – போகாதே.

பொது நிலத்தில்- பொதுவாகிய இடத்தில், ஒருநாளும் – ஒரு பொழுதும், இருக்க வேண்டாம் – (குடி) இராதே.

இருதாரம் – இரு மனைவியரை, ஒருநாளும் – ஒருபொழுதும், தேடவேண்டாம் – தேடிக் கொள்ளாதே.

எளியாரை – ஏழைகளை, எதிரிட்டுக் கொள்ளவேண்டாம் – பகைத்துக் கொள்ளாதே.

குருகு – பறவைகள், ஆரும் – நிறைந்த, புனம் – தினைப்புனத்தை, காக்கும் – காத்த, ஏழை – வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் – பக்கத்தில்

உடையவனாகிய, குமரவேள் – குமரவேளின், பாதத்தை- திருவடியை, நெஞ்சே – மனமே, கூறாய் – புகழ்வாய்.

(பொ-ரை.) செய்யப்படும் காரியங்களை முடிக்கும் வழியை ஆராய்ந்து செய்தல் வேண்டும். ஒரு காரியத்தை அதனால் வரும் நன்மை தீமைகளை ஆராயாமற் செய்தல் கூடாது என்பதும் ஆகும்.

பொய்க்கணக்குக் கூறுதல் கூடாது.

வேற்றுமை உருபைப் பிரித்துக் கூட்டுக. பொய்நிலை பெறாதாகலின் அஃது அழிவு என்று சொல்லப்பட்டது.

பிறர் போர் செய்யும் இடத்தில் குறுக்கே செல்லலாகாது. வீணாகப் போரிலே கலந்து கொள்ளக்கூடாது என்றுமாம். தம் : சாரியை.

பலர்க்கும் உரிய பொது நிலத்தில் குடியிருத்தல் கூடாது.

பொது நிலம்-மந்தை, சாவடி முதலியன. பொதுவிடத்தில் பலரும் வருவார்களாகையால் அங்கே குடியிருப்பின் துன்பமுண்டாகும் என்க.

இரண்டு மனைவியரை மணந்து கொள்ளல் கூடாது. இரு மனைவியரைக் கொண்டால் பெரும்பாலும் அவர்களுக்குள் போராட்டமுண்டாகுமாதலின் தனக்குத் துன்பமேயன்றி இன்பம் இராதென்க. தாரம் – மனைவி.

ஏழைகளிடத்துப் பகைத்தல் கூடாது.

எளியார்- இடம் பொருள் ஏவல் இல்லார், எதிர்-பகை. மறுமையில் நரகத்திற் கேதுவாகலின் எதிரிட்டுக் கொள்ளவேண்டாம் என்றார்.

காத்த என்பதைக் காக்கும் என்றது காலவழுவமைதி, ஏழை – பெண், குமரவேள் – குமரனாகிய வேள்; குமரன் – இளைஞன்; முருகன். (7)  

8.சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
    செய்தநன்றி யொருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடுங் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
    உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
    பிணைப்பட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) சேராத இடந்தனில் – சேரத்தகாத இடங்களில், சேரவேண்டாம் – சேராதே.

செய்தநன்றி – ஒருவன் செய்த உதவியை, ஒருநாளும் – ஒருபொழுதும் மறக்க வேண்டாம் – மறக்காதே.

ஊரோடும் – ஊர்தோறும் ஓடுகின்ற, குண்டுணியாய் – கோட் சொல்பவனாகி, திரிய வேண்டாம் – அலையாதே.

உற்றாரை – உறவினரிடத்து, உதாசினங்கள் – இகழ்ச்சியுரைகள், சொல்ல வேண்டாம் – சொல்லாதே.

பேர்ஆன – புகழ் அடைதற்குக் காரணமாகிய, காரியத்தை – காரியத்தை, தவிர்க்க வேண்டாம்- (செய்யாது) விலக்க வேண்டாம்.

பிணைபட்டு – (ஒருவனுக்குப்) பிணையாகி, துணைபோகி – துணையாகச் சென்று, திரியவேண்டாம்-அலையாதே.

வார்ஆரும் – பெருமை நிறைந்த, குறவர்உடை – குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி – வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் – பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை – மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே – மனமே, வாழ்த்தாய் – வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) சேர்தற்குத் தகுதியில்லாதவருடன் சேர்தல் கூடாது.

தகாதவர் – கள்ளுண்போர், தூர்த்தர் முதலாயினார், தன்: சாரியை.

ஒருவர் செய்யும் உபகாரத்தை எப்பொழுதும் மறத்தல் கூடாது.

நன்றி மறப்பது தீராக் குற்றமாகும்;

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

என்பது திருக்குறள்.

“நன்றி மறவேல்”

என்றார் ஒளவையாரும்.

ஊர்தோறும் சென்று புறங்கூறுதல் கூடாது.

ஓடும் என்னும் பெயரெச்சம் குண்டுணி என்னும் பெயருடன் முடிந்தது. குண்டுணி-கோட் சொல்வோன் என்னும் பொருளில் வழங்குகிறது. ஊரோடும் என்பதற்கு ஊரிலுள்ள தீயவர்களுடன் சேர்ந்து என்று பொருளுரைத்தலும் ஆம்.

உறவின் முறையாரை மதியாது இகழ்தல் கூடாது.

புகழைத் தருதற்குரிய வினையைச் செய்யாதிருத்தல் கூடாது.

பேர், பெயர் என்பதன் மரூஉ ; பெயர் – புகழ்.

ஒருவனுக்குப் பிணையாகித் திரிந்துகொண்டிருத்தல் கூடாது.

கடன் வாங்குவோர்க்கும் குற்றஞ் செய்வோர்க்கும் பிணையாதல் துன்பத்தை யுண்டாக்கும்.

பிணை – புணை ; ஈடு – ஜாமீன்.

வார் – விலங்கு, பறவை முதலிய பிடித்தற்குரிய வலையும் ஆம். (8)  

9.மண்ணின்று மண்ணோரஞ் சொல்ல வேண்டாம்
    மனஞ்சலித்துச் சிலுக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
    காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம்
    புறஞ்சொல்லித் திரிவாரோ டிணங்க வேண்டாம்
மண்ணளந்தான் தங்கையுமை மைந்தன் எங்கோன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) மண்ணில் நின்று – நிலத்தில் நின்று, மண்-மண்ணைப்பற்றி, ஓரம் – ஒருதலைச் சார்பாக, சொல்ல வேண்டாம் – பேசாதே.

மனம் – உள்ளம், சலித்து – இளைத்து, சிலுகிட்டு – (யார் மாட்டும்) சண்டையிட்டு, திரிய வேண்டாம் – அலையாதே.

கண் – அருளை, அழிவு செய்து- அழித்து, துயர் காட்ட வேண்டாம் – (பிற உயிர்கட்குத்) துன்பஞ் செய்யாதே.

காணாத-காணாதவற்றைப் பற்றி, கட்டுவார்த்தையை- கட்டுவார்த்தைகளை, உரைக்க வேண்டாம் – சொல்லாதே.

புண்பட – (கேட்போர் மனம்) புண்படுமாறு, வார்த்தைதனை – சொற்களை, சொல்ல வேண்டாம்-சொல்லாதே.

புறம் சொல்லி – புறங்கூறி, திரிவாரோடு – அலைபவருடன், இணங்க வேண்டாம் – சேராதே.

மண் அளந்தான் – நிலத்தை (மூவடியால்) அளந்த திருமாலுக்கு, தங்கை – தங்கையாகிய, உமை – உமாதேவிக்கு ; மைந்தன்-மகனும், எம்கோன் – எமக்குத் தலைவனும் ஆகிய, மயில் ஏறும் பெருமாளை – மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே – மனமே, வாழ்த்தாய் – வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) நிலத்தின்மீது நின்று நிலத்தைப்பற்றிய வழக்கில் ஓரஞ் சொல்லுதல் கூடாது.

“ஓரஞ்சொல்லேல்” என்பது ஆத்திசூடி.

ஓரம்- நடுநிலையின்மை, பட்சபாதம்.

மனத்திட்ப மில்லாது கோபத்தால் யாருடனும் சண்டையிடுதல் கூடாது.

அருளின்றிப் பிற உயிர்களை வருத்துதல் கூடாது.

கண், கண்ணோட்டத்திற்கு ஆகுபெயர். ஈண்டு அருளைக் குறித்து நின்றது. இனி, கண்ணீர் ஒழுகுமாறு தனக்குள்ள துயரைப் பிறரிடத்துப் புலப்படுத்தல் வேண்டா என்பதும் ஆம். கண்ணழிவு என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு தடுத்து என்றும், பிரித்து என்றும் பொருள் சொல்லலுமாம்.

பிறர் செய்யும் நற்காரியத்தைத் தடுத்துஎன்றும், சேர்ந்திருப் போரைப் பிரித்து என்றும் கொள்ளவேண்டும்.

காணாதவற்றைக் கண்டதுபோல வைத்துப் பொய் கூறல் கூடாது.

கட்டு வார்த்தையை என மாற்றப்பட்டது. கட்டுவார்த்தை – கற்பனை வார்த்தை.

இனி, வார்த்தை என்பதற்குச் செய்தி என்று பொருள் கூறி, காணாத செய்தியைக் கண்டதுபோல உறுதியாகப் பேச வேண்டாம் என்று உரைத்தலுமாகும். கட்டுரைத்தல்- உறுதியாகப்பேசுதல்.

கேட்போர் மனம் வருந்துமாறு கொடுஞ்சொற் கூறலாகாது.

புண்படல் – புண்பட்டாற்போல் வருந்தல்.

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு”

என்பது திருக்குறள்.

புறங்கூறுவாருடன் சேர்தல் கூடாது.

புறஞ்சொல்லல் இன்னதென்பது முன்பு உரைக்கப்பட்டது. (9)  

10.மறம்பேசித் திரிவாரோ டிணங்க வேண்டாம்
    வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரியவேண்டாம்
    தெய்வத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
    ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
    குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே

(ப-ரை.) மறம்பேசி- வீரமொழி கூறி, திரிவாரோடு (போருக்கு)அலைபவருடன், இணங்கவேண்டாம் – நட்புக்கொள்ளாதே.

வாதாடி- வாதுகூறி, அழிவு வழக்கு – கெடுவழக்கு, சொல்ல வேண்டாம் – கூறாதே.

திறம்பேசி – வலிமைகூறி, கலகம் இட்டு – கலகம் செய்து, திரிய வேண்டாம் – அலையாதே.

தெய்வத்தை – கடவுளை, ஒருநாளும் – ஒருபொழுதும், மறக்க வேண்டாம் – மறவாதே.

இறந்தாலும் – (கூறாதிருப்பின்) இறக்கநேரிடுமாயினும், பொய்தன்னை – பொய்யை, சொல்லவேண்டாம்- சொல்லாதே.

ஏசல் இட்ட – இகழ்ச்சி செய்த, உற்றாரை – உறவினரை, நத்த வேண்டாம் – விரும்பாதே.

குறம்பேசி – குறிசொல்லி, வாழ்கின்ற – வாழும், வள்ளி – வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்-பக்கத்தில் உடையவனாகிய, குமரவேள் – முருகவேளின், நாமத்தை – பெயர்களை, நெஞ்சே – மனமே, கூறாய் – சொல்லித் துதிப்பாயாக.

(பொ-ரை.) வீரவாதம் பேசித் திரிவாருடன் நட்புக் கொள்ளுதல் கூடாது. மறம் பேசல் – தம் வீரத்தைத் தாமே புகழ்ந்து பேசுதல். திரிவார் – வீணே அலைகின்றவரும் ஆம்.

இனி, மறம்பேசி என்பதற்குக் கொலை முதலிய கொடிய காரியங்களைப் பேசி என்று உரைத்தலும் பொருந்தும்.

மன்றம் ஏறி அழிவழக்குப் பேசுதல் கூடாது.

அழி வழக்கு – வழக்கல்லாத வழக்கு ; பொய் வழக்கு.

வல்லமை பேசிக் கலகஞ் செய்தல் கூடாது. திறம்பேசல்-தன் வலிமை முதலியவற்றைப் புகழ்ந்து பேசுதல். கலகம் – சிறு சண்டை.

“வல்லமை பேசேல்” என்பது ஆத்திசூடி.

கடவுளை எப்பொழுதும் மறத்தல் கூடாது. சிந்தித்து வணங்கவேண்டும் என்க. ஒருநாளும் என்றது இன்பத்திலும், துன்பத்திலும் என்றபடி.

உயிர்நீங்க நேர்ந்தவிடத்தும் பொய் கூறுதல் கூடாது.

உயிரைக் கொடுத்தாயினும் உண்மையை நிலைநாட்டுதல் வேண்டும் என்பது கருத்து.

மதியாது இகழ்ந்த உறவினரை விரும்பிச் சேர்தல் கூடாது, நத்தல் – விரும்பல்.

குறமகளிர் சொல்லும் குறியைக் குறம் என்பர். குறி – சோதிடம்; ஒருவர் மனத்து நினைத்ததனைக் குறித்துக் கூறல். குறப் பெண்டிர் செய்கையை வள்ளிக்கு ஏற்றிக் கூறினார்.(10)


 11.அஞ்சுபேர்க் கூலியைக்கைக் கொள்ள வேண்டாம்
    அதுவேதிங் கென்னின்நீ சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்றன் கூலி
    சகலகலை யோதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சி கூலி
    மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்றன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
    ஏதேது செய்வானோ ஏமன் றானே

(ப-ரை.) அஞ்சுபேர் கூலியை – ஐவருடைய கூலியை ; கைக்கொள்ள வேண்டாம் – கைப்பற்ற வேண்டாம் (கொடுத்து விடவேண்டும்), அது – அக்கூலி, ஏது என்னின் – யாது என்று கேட்பின், சொல்ல – நான் சொல்கின்றேன், நீ – நீ, கேளாய் – கேட்பாயாக, வண்ணான் கூலி – வண்ணானுடைய கூலியும், நாவிதன் கூலி – அம்பட்டன் கூலியும், சகலகலை – பல கலைகளையும், ஓதுவித்த – படிப்பித்த, வாத்தியார் கூலி – ஆசிரியர் கூலியும், வஞ்சம் அற – வஞ்சனை நீங்க, நஞ்சு அறுத்த – நச்சுக் கொடி அறுத்த,

மருத்துவிச்சி கூலி – மருத்துவிச்சியின் கூலியும், மகாநோவுதனை (நீக்குவதற்குஅரிய) கொடிய நோயினை, தீர்த்த – நீக்கிய, மருத்துவன் கூலி-வைத்தியன் கூலியும், (ஆம்); இவர் கூலி இவருக்குக் கொடுக்க வேண்டிய கூலியை, தஞ்சமுடன்- அன்புடனும், இன்சொல்லுடன் – இன்சொல்லோடும், கொடாத பேரை – கொடுக்காதவர்களை , ஏமன் – இயமன், ஏது ஏது – என்ன என்ன துன்பம், செய்வானோ- செய்வானோ, (நான் அறியேன்).

(பொ-ரை.) வண்ணான், அம்பட்டன், ஆசிரியர், மருத்துவிச்சி, மருத்துவன் என்னும் ஐவரின் கூலியையும் கொடுத்துவிட வேண்டும். இன்றேல் எமனால் துன்புறுத்தப்படுவார்கள். 

அஞ்சு ஐந்து என்பதன் போலி. கூலியென்னும் பொதுமை பற்றி அது என ஒருமையாற் கூறினார். கூலி என்பதை வண்ணான் என்பதோடும் ஒட்டுக. மருத்துவிச்சி, மருத்துவன் என்னும் ஆண்பாற் பெயர்க்குப் பெண்பாற் பெயர். ஏது ஏது என்னும் அடுக்குப் பன்மைபற்றி வந்தது; குறிப்புச் சொல். ஓ : இரக்கம். யமன் என்பது ஏமன் எனத் திரிந்தது. இங்கு தன், தான், ஏ, என்பன அசைகள்.   (11)  

12.கூறாக்கி யொருகுடியைக் கெடுக்க வேண்டாம்
    கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
    துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை யிகழ வேண்டாம்
    வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) ஒரு குடியை – ஒரு குடும்பத்தை, கூறு ஆக்கி – பிரிவுபடுத்தி, கெடுக்கவேண்டாம் – கெடுக்காதே. 

பூ தேடி – பூவைத் தேடி, கொண்டைமேல்- கொண்டையின் மீது, முடிக்க வேண்டாம் – முடித்துக் கொள்ளாதே.

தூறு ஆக்கி – (பிறர்மீது) பழிச்சொற்களை யுண்டாக்கி, தலையிட்டு – தலைப்பட்டுக்கொண்டு, திரியவேண்டாம் – அலையாதே.

துர்ச்சனாய் – தீயவர்களாகி, திரிவாரோடு – (ஊர்தொறும்) அலைவருடன், இணங்கவேண்டாம் – சேராதே.

வீறு ஆன – பெருமையுடையனவாகிய, தெய்வத்தை – தெய்வங்களை இகழவேண்டாம் – இகழாதே.

வெற்றி உள்ள – மேன்மையுடைய, பெரியோரை – பெரியோர்களை, வெறுக்கவேண்டாம் – வெறுக்காதே.

மாறு ஆன – (மற்ற நிலத்தில் உள்ளாருடன்) பகைமையுடையராகிய, குறவர் உடை – குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி – வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்-பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை – மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே-மனமே, வாழ்த்தாய் – வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) ஒரு குடியின்கண் ஒற்றுமையுடன் வாழ்பவர்களைப் பிரிவு செய்தல் கூடாது.

கூறு – பிளவு; பிரிவு. குடி: குடியிலுள்ளார்க்கு ஆகுபெயர்.

கொண்டைமேல் பூ முடித்தல்கூடாது.

பிறர் காணும்படி கொண்டைமேற் பூ முடித்துக்கொண்டு தூர்த்தர்போலத் திரியலாகாது என்க. மலர் பறித்துக் கடவுளுக்குச் சாத்தவேண்டும் என்னுங் கருத்துங் கொள்க.

பிறர்மேல் பழிச்சொற்களைக் கட்டிவிட்டு, அதுவே தொழிலாகத் திரிதல் கூடாது.

தலையிடல் – தொடர்பு வைத்துக் கொள்ளுதல்; பொறுப்பேற்றல்.

தீத்தொழில் உடையாருடன் சேர்தல் கூடாது.

துர்ச்சனர் – துட்டர், தீயோர்.

பெருமையுள்ள தெய்வங்களை இகழ்ந்துரைத்தல் கூடாது.

கூறு – பெருமை, வெற்றியுமாம்.

“தெய்வ மிகழேல்”என்பது ஆத்திசூடி.

பெரியோரை வெறுத்தல் கூடாது.

வெற்றி – பிறரினும் மேம்படுதல்; வாழவும் கெடவும் ஆற்றலுடைமையுமாம். வெறுத்தல்- இகழ்தல்.

மாறு – பகை : மாறுபட்ட நடையுமாம்; முருகக்கடவுளின் பெருமைக்கு மாறான என உரைப்பினும் அமையும்.   (12)  

13.ஆதரித்துப் பலவகையாற் பொருளுந் தேடி
    அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
    உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோருங் கேட்ட பேரும்
    கருத்துடனே நாடோறுங் களிப்பி னோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழுந் தேடிப்
    பூலோக முள்ளளவும் வாழ்வர் தாமே

(ப-ரை.) ஆதரித்து – விரும்பி, பலவகையாய் – பல (நல்ல) வழியால், பொருளும் தேடி – பொருளையும் ஈட்டி, அறுமுகனை – ஆறுமுகங்களையுடைய முருகக்கடவுளை, அரும்தமிழால் – அரிய தமிழ்மொழியால், பாடவேண்டி – பாடுதலை விரும்பி, ஓதுவித்த – அவ்விறைவன் அறிவித்தருளிய, வாசகத்தால் – வாசகங்களினால், உலகநாதன் – உலகநாதன் என்னும் பெயருடையான், உண்மையாய் – மெய்ம்மையாக, பாடிவைத்த – பாடிய, உலகநீதி – உலகநீதி என்னும் இந்நூலை, காதலித்து – விரும்பி, கற்றோரும் படித்தவர்களும், கேட்டபேரும் – கேட்டவர்களும், நாள்தோறும் – ஒவ்வொருநாளும், கருத்துடன் – நல்லெண்ணத்தோடும், களிப்பினோடு – மகிழ்ச்சியோடும், போதம் – அறிவும், உற்று – உறப்பெற்று, மிகவாழ்ந்து – மிகவும் வாழ்வுடையராய், புகழும் தேடி – புகழையும் பெற்று, பூலோகம் உள்ளளவும் – ஊழிக் காலம் வரையிலும், வாழ்வர் – வாழ்வார்கள்.

(பொ-ரை.) உலகநாதன் என்னும் புலவன் பல நல்வழியாற் பொருள் சேர்த்து, பின்பு, தமிழ்மொழியால் முருகக் கடவுளைப் பாடவிரும்பி, அப்பெருமான் உணர்த்திய வாசகங்களாற் பாடிவைத்த ‘உலக நீதி’ என்னும் இந்நூலை விருப்புடன் கற்றவரும், கேட்டவரும் நல்லெண்ணமும், மனமகிழ்ச்சியும், ஞானமும், வாழ்வும், புகழும் உடையவர்களாய் உலகமுள்ளவரையும் வாழ்வார்கள்.

இப்பாட்டின் முற்பகுதியால் இந்நூலைப் பாடியவர் உலகநாதன் என்னும் பெயரினர் என்பதும், அவர் பல வழியாலும் பொருள் தேடியதுடன் முருகக் கடவுளிடத்தில் அன்புடையவராயிருந்தார் என்பதும் உலகநீதி என்பது இந்நூற்பெயரென்பதும் விளங்குகின்றன. பிற்பகுதியில் இதனைக் கற்றவரும் கேட்டவரும் அடையும் பயன்கள் கூறப்பட்டன. பொருளும் தேடி என்பதிலுள்ள உம்மை கல்வியும் தேடினார் என்பதைக் குறிப்பிடுகின்றது. பொருள் தேடி என்பதற்கு முருகக் கடவுட்குப்பொருள் தேடிவைத்து என்றும், ‘ஓதுவித்த’ என்பதற்குத் தனக்கு ஆசான் கற்பித்த என்றும் கூறுதலுமாகும். இனி, உலகநாதன் ஓதுவித்த வாசகத்தால் எனக் கொண்டு கூட்டி, உலகநாதன் கேட்டுக்கொண்டபடி என்றுரைத்தலுமாகும்; அப்பொழுது இந்நூலைச் செய்தோன் பெயர் விளங்கவில்லை. கேட்டவர் என்பது உலக வழக்கின்படி கேட்ட பேர் என்றிருக்கிறது. உள்ள அளவும் என்பது உள்ளனவும் என்றாயிற்று. தாம்,ஏ: அசைகள். 

உலக நீதி

முற்றிற்று

Scroll to Top