You cannot copy content of this page

வாலைக் குமரி கன்னி ‘ய’ குமரி

வாலை கன்னி ‘ய’ குமரி

உலகீன்ற அன்னை. எவ்வுயிர்க்கும் தாய். எல்லா உயிரினுள்ளும் சக்தியாக ஒளிர்பவள். பராபரை. ஆதி சக்தி. அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி. சித்தர்கள் வணங்கும் வாலைக்குமரி. என்றும் கன்னி. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையிலே கையில் உருத்திராட்சமாலை ஏந்தி நின்று தவம் செய்யும் கோலத்தில் அருட்காட்சி தருபவள்.

வாலை அன்னையை பணியாத ஞானியர் , சித்தர் எவரும் இல்லை. வள்ளலார் , அகஸ்தியர், காகபுசுண்டர் அபிராமி பட்டர், திருமூலர், கொங்கணர் குமார குருபரர், ஆழ்வார்கள் , நாயன்மார்கள் ஆகிய அனைத்து ஞானிகளும் அன்னையின் அருள் பெற்று தான் அருட்பெரும் ஜோதி ஆண்டவரை அடைந்தனர்.

திருஅருட் பிரகாச வள்ளலார் 6ம் திருமுறையில் “ஆணி பொன்னம்பல காட்சியில்” தான் கண்ட தெய்வ காட்சியாக இறுதியில்

“அன்னையை கண்டேன் அவள் அருள் கொண்டேன், அமுதமும் உண்டேன் “ என்றும்

“தாங்கும் அவள் அருளலாலே நடராஜர் சந்நிதியை கண்டேன்” என்று தாயின் அருள் திறத்தால் தான் இறைவனை அடைந்ததாக கூறி மகிழ்கிறார்.

“ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அது தான் பாரு“

என்று கருவூரார் பாடி அருள்கிறார். ஆதியும் அந்தமும் வாலை இருப்பிடமே! அது எது? நம் சிரசில் உள்ளே மத்தியிலே , நம் இரு கண்ணும் உள் சேரும் இடத்திலே , நம் உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலே உள்ள அந்த இடமே, அந்த அரங்கமே – அந்தரங்கமான வாலை இடமாம்.

(‘ய’ தமிழ் எண்ணில் 10ஐ குறிக்கும். நமது உடலில் 10ம் ஸ்தானமே “அத்ம” ஸ்தானம். )இதுவே ஞான ரகசியமாம்.

முதலும் முடிவுமான அவளே வாலை என்பார். பாலா என்பார். சக்தி என்பார். ரொம்ப ரொம்ப ஆச்சரியமானது இது தான். உன்னை படைத்து உன்னுள்ளே ஒளிர்கிறாள் உலகத்தாய் வாலை. அதை பாரு என்கிறார் கருவூர் சித்தர். கண்ணால் தானே பார்க்க முடியும்?

ஆம் உன் கண்ணாலே மனதை அங்கே நிறுத்தி மனக்கண்ணாலே உணர்ந்து உணர்ந்து இருந்தாலே தவம் செய்தாலே காணலாம். உன்னுள் இருக்கும் வாலையை. இது தான் ஞானம் பெறும் வழி. அதற்கு விழி விழி என விழித்திருந்து தியானம் செய்ய வேண்டும்.

இந்தியாவின் தென்கோடி முனையிலே, ஆசியா கண்டத்தின் தென் கோடி முனையாம், இந்து மகா சமுத்திரம் , அரபிக் கடல், வங்காள விரிகுடா ஆகிய மூன்று கடல்களும் , ஒன்று சேரும் இடத்திலே கடற்கரையிலே அமைந்த அற்புத ஆலையமே கன்னியாகுமரி பகவதியம்மன் ஆலயம்.

எத்தனை ஆயிரம் வருடங்கள் முந்தய கோயில் இது என தெரியவில்லை. காகபுசுண்டரால் , பாடப்பட்ட புண்ணிய தலம் கன்னியாகுமரி.

காசி , ராமேஸ்வரம் , கன்னியாகுமரி என அனேக புராணங்களில் கூறப்படுள்ள புண்ணியத்தலம் கன்னியாகுமரி.

பண்டு, பண்டாசுரனை வதம் செய்ய, ஆதி சக்தியே கன்னியாக , சிறு பெண்ணாக இருந்து அசுரர்களை அழித்து, அருள்பாலிக்கும் தலம் இது என புராணங்கள் கூறும்.

கன்னியாகுமரி. பரசு ராமரால் பிரிதிஷ்டை செய்து கோவில் கட்டப்பட்டதாக இன்னொரு புராணம் கூறும் இந்த கன்னியாகுமரி.

சூரிய உதயமும் அஸ்தமனமும் ஒரே இடத்தில காணலாம் என்றால் அது இந்த கன்னியாகுமரியிலே தான்.

அசுரர்களை அழிக்க உக்கிரமாகும் தாய் ஆதி சக்தி, ஞானிகளுக்கு அருள குழந்தையாக வருகிறாள். ஞானிகள் இயல்பில் குழந்தையாகி விடுவதால் தானோ, என்னவோ, அந்த மாபெரும் ஆதிசக்தியும் குழந்தையாக வாலையாக பாலா திரிபுர சுந்தரியாக கன்னிகா பரமேஸ்வரியாக கன்னிகா காமஷேத்திரம் என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி ஊரில் கன்னியாகுமரி பகவதி அம்மனாக நின்று அருள்கிறாள். 51 சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்றாகும்.

மிகச்சரியாக கால நிர்ணயம் செய்ய முடியாதபடிக்கு கன்னியாகுமரி விளங்குகிறது. யுகங்கள் தாண்டியும் வரலாறு கூறப்படுகிறது.

சித்தர்கள் போற்றும் வாலை என்பர் இந்த கண்ணியாகுமரியயே! வாலையை வணங்காத சித்தனில்லை என்பதும் ஆன்றோர் மொழியே.

இன்றும் சித்தர்கள் எல்லாம் சூட்சுமமாக , கன்னியாகுமரியான வாலையை வந்து வணங்கி செல்வதாக ஐதீகம்.

இந்த பிரபஞ்சத்திலயே அதி அற்புத அழகு சுந்தரி கன்னியாகுமரியான இந்த வாலையே. அதானால் தான் ஆதி சங்கரர் சௌந்தர்யலகரி பாடிப்பரவினார் வாலையைப் போற்றியே. இந்த ஆதிசக்தியே மூம்மூர்த்திகளுக்கும் குழந்தையாக வாலையாக காட்சி தந்தருள்கிறாள், காஞ்சி காமாட்சி.

குமர குருபரருக்கும் குழந்தையாக வாலையாக காட்சி தந்து அருள்கிறாள் மதுரை மீனாட்சி. ஊர் மாறி பேர் மாறி நின்றாலும் எங்கும் விளங்கும் ஆதி சக்தியே அது என உணர்ந்தால் உண்மை ஞானம் தெளியும். அம்பாளை தெரிந்து தெளியணும். அம்மனை அடையாளம் கண்டு உணரணும். தாயை அடையாளம் காணணும்!

கன்னியாகுமரியிலே பாலசௌந்தரி தியாக சௌந்தரி என இரு தோழியர் சூழ வாலை மட்டுமே கன்னியாகவே குமரியாகவே குழந்தையாகவே கோவில் கொண்டிருக்கிறாள் கன்னியாகுமரியிலே. அது தான் சிறப்பு.

மற்ற எங்கும் சிவமும் சக்தியுமாக தானே காட்சி. கன்னியாகுமரியிலோ சக்திமயம். வாலை மட்டுமே. வாலை மட்டுமே! ஆதி சக்தியே! அகிலலோக அன்னை மட்டுமே.

கன்னியாம் குமரியே வாலையாம். காமத்தை வெல்ல அருளும் காமட்சியாம். கண்ணால் பார்த்து ஞானம் அருளும் வாலையை அவள் சக்தியை திருமூலரும் நாமறிய உரைக்கிறார்.

ஆத்ம சாதகர்கள் சக்தியை வாலயை போற்றி அருள் பெற்று அமுதம் உண்டே ஞானம் பெற முடியும். வாலையின்றி ஞானம் இல்லை. இந்த வாலையே நமக்கு முக்தியை அருள்பவள். மூன்று தீயை – சுரியன்தீ , சந்திரன்தீ , அக்னிதீ ஆகிய மூன்று தீயை அருள்பவள். இதுவே மூன்று தீ சேர்தலே , முத்தீயே முக்தி என்பதாம்.

காமமகற்றி அருள் பாலிப்பதால் அவள் காமாட்சி. அண்ட கோடி அனைத்திலும் விரிந்து பரந்து நிறைந்து விசாலமாக இருப்பதால் தான் அவள் விசாலாட்சி. மீன் போன்ற கண்களில் இருந்து கொண்டு நம்மை ஆட்சி செய்து ஆட்டுவிக்கும் மாயையும் அவளே. மீன் போல பார்த்து கரு உருவாக்கும் கருணை தாயும் அவளே. அதனால் தான் மீனாட்சி. “உ” வின் மையத்தில் – உவாகிய இடது கண்மணி மத்தியில் இருப்பதால் உமை. அவின் மையத்தில் அவாகிய வலது கண்மணி மத்தியில் அவோடு இருப்பதால் அம்மை. அம்”மையத்தில்” இருந்து கொண்டு ஆட்சி புரியும் தாய்.அத்தாய் கொலுவிருக்கும் – நின்று தவக் கோலத்தில் தவம் செய்யும் – குழந்தையாக அருள்பாலிக்கும் கோயில்தான் கன்னியாகுமரி .

“மானுடக் கோட்டையை பிடித்தனளாம்” என்று கொங்கண சித்தரும் கோடிட்டு காட்டி உள்ளார். மானுட கோட்டை , மனித உடலே வாலை இருந்து நடத்தும் கோயிலாம். குழந்தை தாய். தாயே குழந்தையாக , கன்னியாகுமரியிலே வாலை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாள் குழந்தை தாய்.

குமார குருபரர் கூப்பிட ஓடோடி குழந்தையாக வந்து அருள் புரிந்தாள் மதுரையிலே வாலை மீனாட்சியாக!

மும்மூர்த்திகளுக்கும் குழந்தையாகவே காட்சி தந்து அருள் பாலித்தாள் காஞ்சியிலே வாலை காமாட்சியாக. திருசெந்தூரிலே பாலா – பாலசுப்பிரமணியமாகவும் , குருவாயுரிலே பாலா – பால கிருஷ்ணனாகவும் விளங்கும் வாலையே கன்னியாகுமரியிலே பாலா திரிபுர சுந்தரியாக பாலா பரமேஸ்வரியாக பாலாவாக ஆறு வயது குழந்தையாக நின்று அருள் பாலிக்கிறாள். கண்டவர் மனம் குளிர கண்ணிலே நின்று அருளும் கன்னியாகுமரி வாலையை பணிந்தால் பார்த்தல் உணர்ந்தால் கிட்டும் பேரின்பமே – முக்தியே.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலே , மூவுலகும் போற்றும் முத்தரும் சித்தரும் வணங்கும் தாயாம் வாலை மூக்குத்தி ஒளி வீச , முன்னிற்கும் பக்தரை காப்பவளாம். முத்தமிழ் புலமை அருள்பவலாம். முக்தியை தரும் முதலும் முடிவுமானவலாம்.

குபேரன் , “பேரழகை” காண விழைந்த போது தென்திசையிலே கடைகோடியிலே முக்கடலும் சங்கமிக்கும் குமரி கடற்கரையிலே கன்னியாம் வாலையை காண் என்றே அருள் வாக்கு கிட்டியதாம். அந்த கன்னியை வாலையை காண கண் கோடி வேண்டுமே. கனிவுடன் , கடலில் குளித்து , கண்ணீர் மல்க அன்றாடம் காலையிலே கன்னியாம் வாலைக்கோயிலை வலம் வந்தால் காணலாம் கன்னி அவளை ஆறுவயது குழந்தையாகவே. நம் முன்னே வருவாள். நலம் எலாம் அருள்வாள். நன் முக்தியும் தருவாள். நாடு அவளை, நாடு போற்ற வாழ்வருள்வாள். சத்தியம்.

நம் அன்னை வாலை அருள் பெற, ஞானம் பெற பக்தி வேண்டும். பரிபூரண நம்பிக்கையுடன் வைராக்கியத்துடன் தவம் செய்ய வேண்டும். பக்தியால் தான் நீ பண்படுவாய். பக்தி இல்லை என்றால் ஞானம் இல்லை. குருவிடம் பக்தி செலுத்து உருப்படுவாய். எப்படியோ பக்தி வேண்டும். அது தான் உனக்கு பணிவை கொடுக்கும். ஒழுக்கத்தை கொடுக்கும். நல்ல நெறியோடு வாழ்வாய். பத்தியே முக்திக்கு முதல் படி.

“பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் பரத்தை கூட்டும்” என்பதே ஆன்றோர் வாக்கு. பக்தி முத்தினால் ஞானம். ஞானம் முத்தினால் முக்தி. ஒளியுடல். கண்ணிலே மணியிலே ஒளியிலே பக்தி செலுத்து! பணி! அன்பு செலுத்து! அவிலே அன்பு – அன்பு உ செலுத்து. அவிலே உவை செலுத்து அதுவே ஞானத்தில் பக்தி. “அ” வாகிய சூரியன் ஊடுருவ வீணும் ‘உ” விலே சந்திரனிலே.

“சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவ முக்திக்கு மூலம் அது” – அவ்வையார் பாடியருளிய அமுத மொழி.

இறுதியான உறுதியான பக்தியே , அதனால் வரும் தவமே ஞானம் பெற எதூவாகும். பக்தி இல்லையேல் ஞானம் இல்லை.

“சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை,
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்,
பத்தியை பாழில் உருத்த அப்பாவிகள்
கத்திய நாய் போல கதறுகின்றனவே”

– திருமந்திரம் பாடல் 1199

சக்தி-வாலை-கன்னி ‘ய’ குமரி – பாலா- அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி – மானோன்மணி தாய் நமது இடது கண்ணாக சந்திர கலையாக மணி ஒளியாக துலங்கும் பெண் பிள்ளை. அவள் நமக்கு சாதகமாகவே இருப்பாள். அம்மா, தாயே நீயே கதி உன் பாதமே கதி என சரணடையுங்கள். அவள் சகாயத்தால் சற்குருவை பெற்று தவமுறை அறிந்து வைராக்கியத்துடன் தவம் செய்து அவளே முக்தியடைய அமுது தருபவள் , முக்திக்கு நாயகி என்பதை அறியலாம் உணராமல் அடையலாம். தாயை அறியாதவர்கள் தாயை பணியாதவர்கள் மாயையிற் சிக்குண்டு பக்தி நெறி அறியாமல் பாழாய் போவர். அது மட்டுமின்றி தான் தான் பெரியவன் என நாய் போல் கத்துவார் முட்டாள்கள். என திருமூலர் கூறுகிறார். சக்தியை பணிந்தால் உனக்குள் சக்தி பிறக்கும். ஞானம் பெறலாம்.

காமாட்சியாக துலங்கும் வாலை, லலிதாம்பிகையாக ராஜராஜேஸ்வரி தாயாக விளங்கும் வாலை தன் பிள்ளைகளை காக்க, கரும்பு வில்லும் புஷ்பபானமும் கொண்டு தானே இந்த மன்மதன் காமத்தை உண்டாக்குகிறான், அவனிடமிருந்து தன பக்தர்களை காக்க கரும்பு வில்லையும், புஷ்ப பாணத்தினையும் பறித்து தானே வைத்து கொண்டால். பக்தன், ஆத்ம சாதகன், தபசி காமத்திலிருந்து விடுபட வாலையின் பாதம் பணிந்தே தீர வேண்டும். குழந்தையான அவளே நமக்கு காமமே வராமல் காக்கும் தெய்வம். அவளே கன்னி ‘ய’ குமரியே காஞ்சி காமாட்சியாக கரும்பு வில் கைகொண்டு காட்சி தருகிறாள். காமத்தை ஆட்சி செய்வதால் நமக்கு காமம் வராமல் காக்கும் தாயாகிறாள். வாலையென குழந்தையாகிறாள்.குழந்தை தாய் அவளே. நாம் சிவனானால் நம் நெற்றிக்கண்ணால் காமனை எரித்து விடலாம். இல்லையேல் சவமாகி விடுவோம். நாம் சிவமாக காமாட்சி அருள் வேண்டும்.

வாலையாம் காமாட்சி அருளோடு தான் சிவத்தை சிவத்தின் மேல் காமுற்று சிவகாமியாக வேண்டும். சிவமாகிய ஒளியை அடைய ஆசைப்பட வேண்டும். இருளாகிய உலக பற்றுகளை, மாயையை விட்டு அதன் மேல் உள்ள மூவாசையை விட்டு, காமத்தை விட்டாலே சிவமாகிய ஒளியை பற்றிப் பிடிக்க முடியும்.

மூவாசையால் , மண்-பெண்-பொன் ஆசையால் அதன் மேல் கொண்ட காமத்தால் கிட்டுவது சிற்றின்பம். சிவம் என்ற ஒளி மீது மட்டுமே ஆசைப்பட்டு அடைய சிவகாமியாம் வாலையை பணிந்தால் கிட்டும் பேரின்பம்.சிவத்தின் மீது காமம் கொள். சீவனான நீயும் சிவமாவாய்.

குருவை பெற்று, ஞான உபதேசம் பெற்று , ஞான தீட்சை பெற்று ஆத்ம சாதனை புரியும் ஒவ்வொருவருக்கும் முதலில் கலை மகள் அருள் பெறுவான்.கவி மலை பொழிவான்.இதுவே உண்மை. மெய்ஞானம்.

அடுத்து அருள் புரிவாள் அலைமகள். வேண்டாம் என்று சொன்னாலும் வந்து குவியும் செல்வமெல்லாம். ஒன்றுக்கு பத்தாக, பதினாறாக வந்து சேரும். நாம் பதினாறு கலையுடைய சந்திர கலையில் நம் இடக்கண்ணில் ஆரம்பித்து சூரிய கலை வழியே ஒன்றான பத்தாமிடத்தை சேர்வோம். இதுவே ஆத்ம சாதனை.

தெய்வம் ஒன்றே. அது பத்தாமிடத்தில் ய காரத்திலே. அவள் கன்னி ‘ய’ குமரியிலே. நாம் நம் இடப்பாக சக்தியை பிடித்து சிவத்தின் வழி வாலையை அடையலாம். எல்லாம் மெய்ஞானமே.

பாடு! பிதற்று! கத்து! கதறு! உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்.நம் தாய்க்கு நம் பிதற்றல் மழலையே. ரசிப்பாள். நிச்சயம் அருள்வாள். நம் வாழ்வு நிச்சயம் – உறுதி – மரணமிலாதது என்று கண்டிப்பாக அருள் தருவாள். இறைவனை தாயும் ஆனவன் என்று தான் சொன்னார்கள். கருவிலே திருவான தாயை வாலையை போற்றுவோம்.

“நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைபதுன்னை
என்றும் வணங்குவன் மலர்த்தாள் எழுதா மறையின்
ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே இமையத்து,
அன்றும் பிறந்தவளே அழியா முக்தி ஆனந்தமே.”

என்கிறார் அபிராமிபட்டர். அம்பிகையின் செல்லப்பிள்ளை.

“எச்செயலை செய்தாலும் ஏதவஸ்தைப் பட்டாலும் முக்தர் மனம் இருக்கும் மோனத்தே” என்கிறார் ஒரு சித்தர்.

தாயின் மலர்த்தாள் தான் மோனம். திருவடி ஒரு கணமும் மறவாமல் அதிலயே இருப்பதுவே மேலான நிலையாம். அவன் தான் ஞான சாதகன். வாலை அருள் பெறுவான். இதெல்லாம் எதற்காக? கோவிலிலே பார்த்த கல் உருவமாக விளங்கும் தாயே நம்முள் காணவே. எங்கும் இருக்கும் அவள் நம்முள்ளும் இருக்கிறாள் வாலையாக!! வழிபாட்டால் , வழிபட்டால் அறிந்தால் வழி கிடைக்கும் வாலையை அடைய. அது தானே நமக்கு வேண்டும் ஞானம் பெற. “அகம் பிரம்மாஸ்மி” வேதத்தின் சுருதி வாக்கியம் இது தானே. நம் அகத்தில் தான் பிரம்மம்.

வாலையின் அருள் பெற மந்திரம் தந்திரம் ஒன்றும் தேவை இல்லை?! பின். அம்மா என்று உள் உருகி கூப்பிட்டாலே போதும். கல்லாதவனுக்கும், பொல்லாதவனுக்கும் தாய் தாய்தானே. அந்த தாய் வாலைத் தாய்தான். கன்னியாகுமரி தான். பகவதி தான்.

பக்தியோக மார்க்கத்தில் அம்பிகையை நம் உடலில் எல்லா ஆதாரங்களிலும் பாவித்து 51 அட்சரங்களால் பூஜிப்பது ஒரு முறை. நம் ஞான மார்கத்தில் என்ன தெரியுமா? நம் கன்னியாகுமரி மாவட்டம் பெற்ற ஞானக்கடல் தக்கலை பீர்முகமது தன ஞானரத்தின குறவஞ்சியில் பாடுகிறார் பாருங்கள்!

“அம்பத்தோ ரட்சரம் அறிய நீ சொல்லடிசிங்கி – அது வஞ்ச மகார நடுச்சுழி மூன்றுமே சிங்கா”

51 எழுத்து , அட்சரம் என எண்ணிக் கொண்டிருப்பது பக்தி! கதை ! புராணம்! ஞானத்திற்கு விளக்கம் என்ன தெரியுமா? “அன்பு ஒத்த ஓர் அட்சரம்” – ஐம்பத்தொரட்சரம் ! அது ஓம் என்னும் பிரணவம் தான் ஓங்காரம் தான். எங்கே? நாம் நம் இரு கண்களில் அ + உ , உணர்வுடன் தவம் செய்தால் உள்ளே ‘ம’ வாகிய மூன்றாம் கண்ணான வாலை இடத்தை அடையும். அப்போது அ + உ + ம = ஓம் ஆகிவிடும். அன்பு ஒத்த அட்சரம் , ஒரே அட்சரம் ஓங்காரமே. இது தான் ஞானம். நாம் நம் கண்ணை அன்பாக நேசித்தால் கண் ஒளி பெருகி உள்ளொளி பெருகும். அன்பு மூன்று கண்ணும் ஒன்றாவதால் நாதமான ஓங்காரம் பிறக்கும்.
திருமந்திரத்தில் பல இடங்களில் தாயை போற்றி பாடல் எழுதிஉள்ளார் திருமூலர் பெருமான். அவற்றில் சிலவைகளை இங்கு பாப்போம்.

“நாதமுடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே”

– திருமந்திரம் பாடல் 609

தவம் செய்து தசவித நாதமும் கேட்டு பேரானந்தம் பெறுவர். ஒளியை கண்டு ஒலியை கேட்டு ஆனந்தம் அடைந்தவர் அம்மையை காண்பர். அதுவே அவருக்கு நல்ல யோகம் – அதிர்ஷ்டம் ஆகும். தாய் வாலை அம்மை தானே அமுதம் தருகிறாள். அப்போது அது மிகப் பெரும் பாகியமல்லவா? தவம் புரிவோர் பின் அவ்விடத்திலே நிலைத்து இருக்க வேண்டும். அப்போது தான் விடமுண்டகண்டனை சிவனை காண முடியும். நாத முடிவில் தானே இவை அனைத்தும். ஞான அனுபவங்களை கூறி நமக்கு நல்வழி – விழி ஒளி ஒலி காட்டி அருள்கிறார் திருமூல நாயனார். இதையே வள்ளலார் வானத்தின் மீது மயிலாடகண்டேன் மயில் குயில் ஆச்சுதடி என தவ அனுபவத்தை கூறுகிறார். தவம் செய்கையில் மயில் தோகை போல் பல வர்ண ஒளி கண்டேன் பின் ஒலி – நாதம் கேட்டேன் என்கிறார். மயில் ஒளிக்கும் குயில் ஒலிக்கும் உதாரணமாயிற்று.

“அவளை யறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இலலை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி யூர்புகு மாறறி யேனே”

– திருமந்திரம் பாடல் 1053

அவள்- சக்தி – வாலை – தாய் – ”உ” இடது கண்மணி ஒளி. சக்தியை அறியாத தேவர் யாருமில்லை? ஏன் தெரியுமா? சக்தி அருளால் அமுதம் உண்டு தான் அமரத்துவம் பெற முடியும். அப்படியாயின் அமரர் சக்தியை வாலையை அரியாமலிருப்பாரா? சக்தியில்லையேல் நம்மால் எதுவும் செய்ய முடியாதே! உடல் சக்தி இருந்தால் தான் நடமாட முடியும். பின்னர் அல்லவா தவம் செய்வது?! ஆக நமக்கு சக்தி இல்லையென்றால் ஒன்றும் இயலாது! சக்தி – வாலை துணை இன்றி பஞ்ச கிர்த்தியம் புரியும் மூர்த்திகள் ஆனாலும் ஒன்றும் செய்ய இயலாது. பஞ்ச பூதங்கள் இயங்க சக்தி வேண்டும். நம் ஐம்புலன்கள் இயங்க சக்தி வேண்டும். ஏன்? சிவத்தோடு சக்தி இருந்தாலே இயக்கம். எங்கும் சிவா மாயம். சிவம் சக்தி மாயம். அவளே வாலை. தாய். கன்னி ‘ய’ குமரியிலே குடிகொண்டு முக்கடல் தீர்த்தத்தில் நின்று நித்தம் தவம் செய்யும் தாய். பாலா பரமேஸ்வரி. சக்தி இல்லையேல் ஒன்றும் இல்லை. அசைவற்றிருக்கும் சிவம் அசைய கல்போன்ற ஒளி களிநடம் புரிய சக்தி தான் தேவை. அந்த தாய் வாலை அருள் தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசி பெற்றே சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும். சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும். நம்மை கருவாய் வயிற்றில் சுமந்து பெற்ற தாயை விட கோடி கோடி பங்கு நம்மை அன்பு காட்டி அமுதூட்டி அரவணைப்பவள் வாலைதாயே. நம் உடலுக்கு சக்தி ஊட்டிய தாய். உலக அன்னை. அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி. ஆதி பராசக்தி. கன்னிகா பரமேஸ்வரி. நம் கண்ணுக்கு கண்ணாக விளங்குபவள். நம் உயிர் துலங்க உருதுனையானவள் சக்தியே. தாயே. தாயை வணங்கு. முதல் தெய்வம் தாயே என இன்று.

“சூடிடும் அங்குச பாசத் துளைவழி” – திருமந்திரம் பாடல் 1207

அம்பாள் கையில் அங்குசம் பாசம் அது ஆயுதம் புறத்தே , பக்தியில்! ஞானத்தில்!? துளை உள்ள அங்குசம் பாசம் இரு கண் மண்களேயாகும் ! பரிபாசை! பகுத்து அறி! துலங்கும் ஞானம்!

“சன்மார்க்கத் தேவியும் சக்தியென் பாளே” – திருமந்திரம் பாடல் 1229

சன்மார்க்க தேவி தான் – சக்தி தான் – வாலை தான் – நமது இடது கண்மணி ஒளி தான் – கன்னி’ய’குமரி தான் – அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி தான் – ஆதி சக்தி – பராபரை – சிவசக்தி – மனோன்மணி – எவ்வுயிர்க்கும் தாய் – ஆதிபாரசக்தி – பார்வதி – பாலா பரமேஸ்வரி! கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன்.இவளே சன்மார்க்க தேவி.

“ஈறான கன்னி குமரியே காவேரி
வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள் ,
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகஞ் சுத்தமே” – திருமந்திரம் பாடல் – 2755

கன்னியாக வாலைக்குமரி நின்று தவம் செய்யும் , முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு ஈடான புண்ணிய தலம் உலகில் இல்லை. காவேரி முதலான நவதீர்த்தமும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சங்கமம். கங்கை , யமுனை, சரஸ்வதி, பிரமபுத்திரா, சிந்து, காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதை என்ற நவ நதியும் கலக்கும் வங்காளவிரிகுடா , அரபிக்கடல் , இந்துமகாசமுத்திரம் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் ஒரே புண்ணிய தலம் தான் கன்னியாகுமரி. வாலை கன்னியாக குமரியாக உருத்திராட்ச மாலை சூடி உருத்திராட்ச மாலை கையில் ஏந்தி நின்று தவம் செய்யும் அருள் காட்சி காண கன்னியாகுமரிக்கு வாருங்கள். இதை தெரிந்து கொள்வதற்கே நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். தென்திசை கடைசியில் முக்கடல் கரை அருகே நமக்கு ஞானம் அருள காத்திருக்கிறாள் வாலை. உலகிலையே வாலைக்குரிய கோயில் இது ஒன்றே. ஏழு கடலும் நவ ஆறுகளும் கூடும் துறை முக்கடல் சங்கமம். வேதாகமும் இதன் மகத்துவத்தினை உரைக்கிறது. இறைவனை அறிய , உணர அடைய வழிகாட்டும் வேதாகமம் ஒவ்வொரு படியாக மேலேறி , இரு கண்மணி ஒளி வழி உள் சென்று ஆத்ம ஸ்தானத்தினை அடைந்து வாலை அருள் பெற்று தன்னை அறியலாம். தாயை சரணடைந்தவனே காமத்திலிருந்து விடுபடுவான். தாய் அருள் பெற்ற பின்னரே தந்தையை காண முடியும். இந்த ஞான இரகசியத்தினை சொல்லத்தான் வேதம், ஆகமம் புராணம் உபநிசத்து எண்ணற்ற சித்தர் ஞானிகள் பாடல்கள் தோன்றின. அருளப்பட்டது. உலகிலேயே சுத்தமான ஞான பூமி தென்திசை இந்தியாவின் தென் கோடி முனை ஆசியாவின் தென் கோடி முனை கன்னியாகுமரியே.

திருவருட்பாவில் 5ம் திருமுறையில் “சௌந்தர்யா மாலை” என்னும் அதிகாரத்தில் தாயை போற்றி வள்ளல் பெருமான் பாடி உள்ளார்.

“தெய்வம் எல்லாம் வணங்குகின்ற தேவி எனை அளித்தால்” – பாடல் 5

“சிற்றிடை எம் பெருமாட்டி தேவர் தொழும் பதத்தாள்” — பாடல் 7

“பொற்பதத்தாள் என்னளவிர் பொன்னாசை தவிர்த்தல்” – பாடல் 9

“என் பிழை யாவையும் பொறுத்தால் ” — பாடல் 10

“கரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தால்” — பாடல் 11

சின்ன இடையுடையவள் பெருமாட்டி. பெருமானின் பெண்பால் பெருமாட்டி. அவள் தேவர்களும் பணிந்து தொழும் ஆதி பராசக்தி. இடை சின்னது – முதல் இடை கடை என மூன்று நிலை உள்ளது அல்லவா? நமது இடது கண் சக்தியம்சம். முதலில் கண்மணி ஒளி பெரிதாக உள்ளது. உள்ளே இரு கண்ணும் சேரும் கடை ஒளி பெரிதாகவே உள்ளது. கண்ணுக்கும் கடை கண்ணுக்கும் நடுவே முதலிலும் கடைசிக்கும் நடுவே இரண்டையும் இணைக்கும் நாடி மெல்லிய ஒரு மயிரளவு உடையதாகும். அதாவது நடுவில் – இடையில் உள்ளது சின்னது. இடை சிறிது என்பதை இதைச் சொன்னதாகும். சிற்றிடை.

பொற்பதத்தாள் – பொன்னான திருவடியை உடையவள் என்னுடைய பொன்னாசையை பொருளாசையை தவிர்த்தாள். நான் என் தாயை எண்ணி பக்தி செய்யும் போது என் தாய் அருள் மட்டும் கிடைத்தால் போதும் என்றே மனம் கூறுகிறது. கிட்டவும் செய்யும். தாயல்லவா, பிள்ளையை காக்க ஓடோடி வருவாள். தாய் அன்புக்கு நிகர் எது? எனக்கு என்ன தேவையோ எப்போது தேவையோ தருகிறாள். இதை அறிந்த பின் எனக்கு பொன்னாசை வருமா என்ன? என் சொந்த அனுபவம் இது. “நானல்லவா படியலக்கிறேன் என வாலை தாய் பகர்ந்தாள்” என்றும் அவளே படியலக்கிறாள் என்று அறிந்தேன். உணர்ந்தேன். இப்பொது எனக்கு பயமில்லை. பதட்டமில்லை. என்னை காக்க என் தாய் இருக்கிறாள். அப்புறமென்ன கவலை?! இன்னுமொரு பெரிய விஷயம்!

காணும் பெண்ணையெல்லாம் அந்த தாயாகவே பார். காமம் வராது. அபிராமி பட்டர் எல்லா பெண்களையும் அபிராமித்தாயகவே பார்த்தார். அம்மாவாசை அன்று முழு நிலவு காட்டினாள் தாய். அகத்திலும் புறத்திலும் தான்! அற்புதந்தான்.

தாயைப் பணிந்தவன் தவ சீலன் என பார் போற்ற வாழ்வான். காமமகற்றி அருள் பாலிப்பதால் அவள் காமாட்சி. அண்ட கோடி அனைத்திலும் விரிந்து பரந்து நிறைந்து விசாலமாக இருப்பதால் தான் அவள் விசாலாட்சி. மீன் போன்ற கண்களில் இருந்து கொண்டு நம்மை ஆட்சி செய்து ஆட்டுவிக்கும் மாயையும் அவளே. மீன் போல பார்த்து கரு உருவாக்கும் கருணை தாயும் அவளே. அதனால் தான் மீனாட்சி. என்றும் கன்னி. பாலா.குமரி. வாலை. உலகில் பல இடங்களில் கோயில் கொண்டு இருந்தாலும் கன்னி’ய’குமரியிலே இருக்குமிடம் அறிவித்து உணர்த்தி தவக்கோலம் கொண்டு இருப்பவள். அந்த தாயை பணிந்ததால் தான் அடியேன் குருவானேன். உருவானேன். நூல் பல எழுதலானேன். சீரானேன். சீடர் பல பெற்றேன். தங்க ஜோதி ஞான சபை கண்டேன். அனைத்தும் வாலை அருளாலே.

என் பிழை யாவையும் பொருத்து எனை மன்னித்து காத்தருளினாள். பொறுக்கும், மன்னிக்கும் அரவணைக்கும் குணம் கொண்டவள் தான் தாய். என் பிழை பொறுத்தாள். மன்னித்தாள். மகிமை தந்தாள். மனித குலமுய்ய மரணமிலா பெருவாழ்வு பெற மருந்தான திருவடி உபதேசம் திருவடி தீட்சை புரிய வைத்து காக்கிறாள்.

கரும்பனையாள். எந்நிலையிலும் காக்கும் தாய். நமக்கு அன்பையே தருபவள். “கரும்பு” அனையாள். கரும்பு போன்றவள். என் இரண்டு கண்களில் இருந்தவள். கண் என காக்கும் தாய். மகா மாயையான அந்த தாயை பணிந்தவர் சரணடைந்தவர் அவள் பிள்ளையே. நாமும் வாலையின் செல்லபிள்ளை ஆக வேண்டாமா? வாருங்கள் கன்னியாகுமரிக்கு! பணிவோம்.

Scroll to Top