You cannot copy content of this page

சைவ சமயக் கோட்பாடுகள்

சைவ சமயக் கோட்பாடுகள்

தமிழர் சமயம் என்பது எது?

சைவ சமயம்

சைவ சமயம் என்றால் என்ன?

உமை, விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களைப் பொதுவாகவும் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகவும் கொண்டு சிவனை வழிபடும் நெறி.

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?


ந-ம-சி-வ-ய அல்லது சி-வ-ய-ந-ம

சைவ சின்னங்கள்:

1 திருநீறு
2 உருத்திராக்கம்
3 திருவைந்தெழுத்து சிவ மந்திரம்.
நமசிவய, சிவயநம !

திருநீறு எதனைக் குறிக்கும்?

உலகத்தில் இறைவனுடையத் திருவருளே நிலையானது, மற்றது நிலை இல்லாதது எனும் தத்துவத்தை உணர்த்துவது. இறைவனுடையக் கருணைத் திறத்தைக் குறிப்பது. நம் மும்மல நோயை நீக்க வல்லது.

திருநீறு அணிவது எப்படி?

திருநீறும், உருத்திராக்கமும், பஞ்சாக்கர மந்திரமும் (நமசிவய, சிவயநம, சிவசிவ மந்திரம்) முக்கியமான சைவ சமய சின்னமாகும்.

தீமைகளினின்றும் நம்மை பாதுகாத்து இறைவனின் பெரும் கருணையை நினைவூட்டும் சின்னங்கள் இவை.

குற்றமற்ற பசுவின் சாணத்தை நெருப்பினாலே சுடுவதனால் உண்டாகும் நீறே தூய திருநீறாகும். வெண்மை நிறத் திருநீறே அணியத்தக்கது.

சமய தீட்சை பெற்றோர் மாத்திரமே திருநீற்றை நீரில் கரைத்து திரிபுண்டரமாக அணியும் தகுதியுடையோர். மற்றோர் நீரில் கலவாது பொடியாக அணிதல் வேண்டும்.

திருநீற்றை மூன்று கோடுகளாக, இரண்டு கடைப்புருவ எல்லை வரை அணிய வேண்டும். ஒவ்வொரு கோட்டிற்கும் இடையே ஒவ்வொரு அங்குல இடைவெளி வேண்டும். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களை நீக்கும் என்ற குறிப்பு தோன்ற தரிப்பதே, மூன்று கோடுகளினால் திருநீறு அணிவதாகும்.

தலை, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் 16 இடங்களில் அணியலாம்.

திருநீற்றை வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ தரித்தல் வேண்டும். தரிக்கும் போது, சிவபெருமானை சிந்தையில் வைத்து திருநீறு நிலத்தில் சிந்தாத வண்ணம் நெற்றியை மேலே தூக்கி “சிவசிவ”, “நமசிவய” என்ற பஞ்சாக்கர மந்திரத்தை ஓதி அணிய வேண்டும்.

தூங்கி எழுந்த உடனும், தூங்குவதற்கு முன்னும், நீராடியவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், உணவுக்கு முன்னும் பின்னும், கடமைகளைச் செய்யும் போதும், சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் கட்டாயமாகத் திருநீறு அணிய வேண்டும்.

திருநீற்றை பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ மட்டும் வைக்க வேண்டும். குரு, சிவனடியார் திருநீறு கொடுத்தால், அவர்களை வணங்கி, அடக்கத்துடன் இரு கைகளையும் நீட்டி வாங்கிக் கொள்ள வேண்டும். திருநீற்றுக்கு மேலே குங்குமமேனும், சந்தனமேனும் அணியலாகாது. திருநீற்றுக்குக் கீழே, புருவ மத்தியில் குங்குமம் தரிக்கலாம். திருநீற்றை ஊதுவதோ, கோவில் தூண்களிலோ, வேறு இடங்களில் கொட்டுவதோ, கீழே சிந்துவதோ, கூடவே கூடாது.

உருத்திராக்கம் என்பதற்குறிய விளக்கம் என்ன?

உருத்திர + அக்கம் உருத்திராக்கம் என்றானது. உருத்திரன் எனில் சிவன். அக்கம் எனில் கண். உருத்திராக்கம் எனில் சிவனுடைய கண் என்று பொருள்.

உருத்திராக்கம் என்பது உருத்திரனது கண் எனப் பொருள்படும். பத்தினிப் பெண்களுக்கு திருமாங்கல்யம் எத்தனை முக்கியமோ, அது போல சைவர்களுக்கு உருத்திராக்கம் அணிவது மிக முக்கியம்.

உருத்திராக்கம் அணிந்து இறைவனிடம் அன்பு பூண்டார்க்கு உடல் நலமும், செல்வ வளமும், நெடு வாழ்வும், இன்ப வாழ்வும் இப்பிறப்பில் பெருகும். மறு உலகில் இறைவன் திருவடியினை எய்தி மாறா இன்பம் துய்த்து மகிழ்வர்.

உருத்திராக்கத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்து இருக்கலாம். தூங்கும் போதும், உண்ணும் போதும் எப்போதும் அணிந்திருக்கலாம்.

குழந்தைகள் முதல் பெண்கள், பெரியவர்கள் வரை, ஒரே ஒரு மணியாக, சிவப்பு கயிற்றில் கட்டி, கழுத்தில் தெரியும் படியாக எப்போதும் அணிந்திருக்க வேண்டும். கழற்றவே கூடாது.

பெண்கள் எல்லா நேரங்களிலும் அணிந்திருக்கலாம். நீத்தார் கடன், பெண்கள் தீட்டு, கணவன்-மனைவி தாம்பத்ய நேரங்களிலும்கூட அணியலாம்.

சிறுவர் சிறுமியர் அணியும் போது அவர்களின் படிப்புத்திறன் மேலோங்கும். பெண்கள் அணிந்திருக்கும் போது, தீர்க்க சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியும், இல்லத்தில் லட்சுமி கடாச்சமும் நிறைந்திருக்கும்.

ஆகையால், எல்லோரும் கண்டிப்பாக உருத்திராக்கம் அணிய வேண்டும். உருத்திராக்கம் அணிந்தால் தான் உடலும் உள்ளமும் தூய்மை அடையும். மருந்துக்குப் பத்தியம் எவ்வளவு அவசியமோ அது போல, உருத்திராக்கம் அணிபவர்களும் மது அருந்துதல், புலால் உண்ணுதல் ஆகியவற்றைப் படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு பன்றி மாமிசத்தை எப்போதும் சாப்பிடக்கூடாது.)

சிவனை நேரில் கண்டவர்கள் உண்டா? அவர்கள் யாவர்?
உண்டு.

சித்தர்கள், 63 நாயன்மார்கள்.

பதினெண்சித்தர்கள்:

1 திருமூலர்
2 இராமதேவ சித்தர்
3 கும்பமுனி
4 இடைக்காடர்
5 தன்வந்திரி
6 வால்மீகி
7 கமலமுனி
8 போகர்
9 மச்சமுனி
10 கொங்கணர்
11 பதஞ்சலி
12 நந்தி தேவர்
13 போதகுரு
14 பாம்பாட்டி சித்தர்
15 சட்டைமுனி
16 சுந்தரானந்தர்
17 குதம்பைச்சித்தர்
18 கோரக்கர்

அறுபத்து மூன்று நாயன்மார்:

1 அதிபத்தர்
2 அப்பூதியடிகள்
3 அமர்நீதி நாயனார்
4 அரிவட்டாயர்
5 ஆனாய நாயனார்
6 இசைஞானியார்
7 இடங்கழி நாயனார்
8 இயற்பகை நாயனார்
9 இளையான்குடிமாறார்
10 உருத்திர பசுபதி நாயனார்
11 எறிபத்த நாயனார்
12 ஏயர்கோன் கலிகாமர்
13 ஏனாதி நாதர்
14 ஐயடிகள் காடவர்கோன்
15 கணநாதர்
16 கணம்புல்லர்
17 கண்ணப்பர்
18 கலிய நாயனார்
19 கழறிற்ற்றிவார்
20 கழற்சிங்கர்
21 காரி நாயனார்
22 காரைக்கால் அம்மையார்
23 குங்கிலியகலையனார்
24 குலச்சிறையார்
25 கூற்றுவர்
26 கலிக்கம்ப நாயனார்
27 கோச் செங்கட் சோழன்
28 கோட்புலி நாயனார்
29 சடைய நாயனார்
30 சண்டேஸ்வர நாயனார்
31 சத்தி நாயனார்
32 சாக்கியர்
33 சிறப்புலி நாயனார்
34 சிறுதொண்டர்
35 சுந்தரமூர்த்தி நாயனார்
36 செருத்துணை நாயனார்
37 சோமசிமாறர்
38 தண்டியடிகள்
39 திருக்குறிப்புத் தொண்டர்
40 திருஞானசம்பந்தமூர்த்தி
41 திருநாவுக்கரசர்
42 திருநாளை போவார்
43 திருநீலகண்டர்
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர்
45 திருநீலநக்க நாயனார்
46 திருமூலர் இடையர்
47 நமிநந்தியடிகள்
48 நரசிங்க முனையர்
49 நின்றசீர் நெடுமாறன்
50 நேச நாயனார்
51 புகழ்சோழன்
52 புகழ்த்துணை நாயனார்
53 பூசலார் அந்தணர்
54 பெருமிழலைக் குறும்பர்
55 மங்கையர்க்கரசியார்
56 மானக்கஞ்சாற நாயனார்
57 முருக நாயனார்
58 முனையடுவார் நாயனார்
59 மூர்க்க நாயனார்
60 மூர்த்தி நாயனார்
61 மெய்ப்பொருள் நாயனார்
62 வாயிலார் நாயனார்
63 விறன்மிண்ட நாயனார்

மேற்கண்ட நாயன்மார்கள் பட்டியலில் பின்வருபவரும் நாயன்மார் எனப் போற்றத் தக்கவர்.

1 பத்தராய்ப் பணிவார்:

திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை முழுமுதற்கடவுளாய் வழிபட்ட தொகையடியார்கள்.

2 பரமனையே நாடுவார்:

சிவபெருமானை மட்டுமே நாடுபவர்கள், பிற தெய்வத்தைப் பாடாத தொகையடியார்கள்.

3 திருவாரூர்ப் பிறந்தார்:

திருவாரூரில் பிறந்து சிவநெறியில் சிந்தை ஒருமித்து வாழும் அனைவரும் திருக்கையிலாயத்தில் உள்ள சிவகணங்களே ஆவர்.

4 முப்போதும் திருமேனி தீண்டுவார்:

மூன்று காலங்களிலும் சிவபெருமானையே அபிஷேகம்,ஆராதனை செய்து அர்ச்சிப்பவர்கள்.

5 சித்தத்தை சிவன்பாலே வைத்தார்:

சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து சதா சிவ சிந்தனையுடன் சைவநெறி பிறளாது முக்தி ஞானம் பெற்ற சிவனடியார்கள்.

6 முழு நீறு பூசிய முனிவர்:

உடல் முழுவதும் திருநீறு பூசி உருத்திராட்சம் அணிந்து ஐந்தெழுத்து மந்திரம் ஓதி சிவபெருமானையே தியானித்து வருபவர்.

7 அப்பாலும் அடிசார்ந்தார்:

முத்தமிழ் நாடுகளுக்கு அப்பால் உள்ள அத்தனை நாடுகளிலும் உள்ள சிவனடியார்கள்.

சைவ சமயக் குரவர் யாவர்?

1 திருஞானசம்பந்தர்,
2 திருநாவுக்கரசர்,
3 சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
4 மாணிக்கவாசகர் ஆகிய நால்வர்.

சிவம் என்றால் என்ன?

சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் என்று பொருள்.சைவ சித்தாந்தத்தில் பரம்பொருளைக் குறிக்க சிவம் என்ற சொல் பயன் படுத்தப் படுகிறது. அன்பே சிவம் என்பது ஆன்றோர் கூறிய அருள் வாக்கு. இதனையே

திருமூலர் தமது திருமந்திரத்தில்

அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

திருமூலர் அன்பும், சிவமும் வெவ்வேறு என பிரித்துப் பார்ப்பவர்களை அறிவு இல்லாதவர்கள் என்கிறார். அன்பையும், சிவமாகிய இறை நிலையையும் பிரிக்கவே முடியாது, அவ்வாறு அன்பும் சிவமும் ஒன்று என்ற உண்மையை அறிந்தவர்கள் அன்பிலே தெய்வத்தைக் கண்டு அந்தப் பேரின்பத்திலே நிலைநிற்பர்.

என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப்
பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க் கன்றி
என்போல் மணியினை எய்த ஒண்ணாதே! (திருமந்திரம்)


பசி, தாகம் ஆகியவற்றை மறந்து பல காலம் தவம் இயற்றி, உடலை வருத்தினால்தான் சிவன் அருளைப் பெறமுடியும் என பலரும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை திருமூலர் நிராகரிப்பதோடு சிவன் அருளைப் பெற எளிய வழி நெஞ்சம் உருகி அன்பு மயமாய் இருப்பதன் மூலம் மட்டுமே சிவனை அடைவது சாத்தியம் என்கிறார் திருமூலர்.

மேலும் எத்தகையவர் மீது இறைவன் அன்பு செலுத்துவார் என்பதையும் திருமூலர் பின் வருமாறு கூறுகிறார்.

’’கொழுந்து அன்பு செய்து கூரவல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் சாது ஆமே’’ (திருமந்திரம்)

எவர் ஒருவர் சக உயிர்கள் மீது அன்பு செலுத்துகிறாரோ, அவர் மீதே இறைவனும் அளப்பரிய அன்பு செலுத்துவார் என்கிறார் திருமூலர்.
அதாவது இறை அருளை நம் பக்கம் ஈர்த்துக் கொள்ளப், பிறர் மீது அன்பு செலுத்துவதை விட எளிய வழி வேறு எதுவுமே இல்லை என்கிறார் தெய்வச் சித்தர் திருமூலர்.

யார் சைவர் எனப் போற்றப் படுபவராவார்?

1 திருநீறு அணிதல்.
2 உருத்திராக்கம் அணிதல்.
3 திருவைந்தெழுத்து மந்திரமாகிய
நமசிவய எனும் மந்திரத்தை எப் பொழுதும் மனதில் இருத்தி தியானித்தல்.
4 சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குதல்.
5 தாய், தந்தை, ஆசான், குரு நால்வரையும் பேணுதல்,
6 சகல உயிரினங்களையும் நேசித்தல். (அன்பே சிவம்),
7 செய்நன்றி அறிதல்
8 புலால் மறுத்தல்: மாமிச உணவுகளை உண்ணாதிருத்தல்; சாத்வீக உணவுகளை மட்டும் உண்ணுதல்; எந்த ஜீவராசிகளையும் இம்சிக்காது இருத்தல்.
9 பெண்களைத் துன்பறுத்தாது அவர்களை அன்புடன் பேணுதல்.
10 அறநெறி வழுவாது பொருள் ஈட்டி தர்ம வழியில் உலக இன்பங்களை அனுபவித்து அவற்றின் மீது பற்றை விடுத்து இறை உணர்தல்.
11 சர்வம் சிவமயம் என்ற தத்துவத்திற்கு இணங்க காணும் அனைத்து உயிர்களையும், உயிரற்றவைகளையும் சிவமாகவே கண்டு போற்றி வணங்குதல்.
12 பன்னிரு திருமறைகளையும் காலை, மாலை இரு வேளையும் பொருள் உணர்ந்தோதுதல்.

என்ற மேற்கண்ட பன்னிரு அனுட்டானங்களையயும் அனுதினமும் கடைப்பிடிப்பவர்களே சிவனின் அன்புக்கு உரிய அன்பர்கள் ஆவர். இவர்களே சைவர் எனப் போற்றப்படுவர்.

இறைவனை அடையும் வழிகள் யாவை?

இறைவனை அடையும் வழிகள் ஒன்பது என்பர்:

(1) ச்ரவணம் – கேட்டல், இறைவன் புகழ் கேட்டல் – உதாரணம்: ஹனுமான்,

(2) கீர்த்தனம் – பாடுதல், நாதோபாஸனை – உதாரணம்: வால்மீகி, தியாகராஜ ஸ்வாமிகள்.

(3) ஸ்மரணம் – நினைத்தல், நின்றும் இருந்தும் கிடந்தும் அவனையே நினைப்பது – உதாரணம்; ஸீதாதேவி,
(4) பாதசேவனம் – சேவித்தல் – உதாரணம்: பரதன்,

(5) அர்ச்சனம் – பூஜித்தல் – உதாரணம்: சபரி, கண்ணப்ப நாயனார், சாக்கிய நாயனார்,

(6) வந்தனம் – நமஸ்கரித்தல், வந்தித்தல் – உதாரணம்: விபீஷணன்.

(7) தாஸ்யம் – தொண்டு புரிதல் – உதாரணம்: லக்ஷ்மணன், திருநாவுக்கரசர்.

(8) ஸக்யம் – சிநேக பாவம் – உதாரணம்: சுக்ரீவன், அர்ஜுனன், சுந்தரர்.

(9) ஆத்ம நிவேதநம் – தன்னையே அர்ப்பணித்தல் – உதாரணம்: ஜடாயு.

இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றை உறுதியாகப் பற்றுவதே இறைவனை அடைவதற்கு போதுமானது.

சைவர்கள் ஓத வேண்டிய தமிழ் வேதங்கள் யாவை?

பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள் என்பவை யாவை?

பன்னிரு திருமுறைகள்:

1,2,3-ம் திருமுறைகள்

திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் 1,2,3-ம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப்படுகிறது. சம்பந்தரின் பாடல்கள் தமிழ் இலக்கியத்தையும், இசையையும் மிளிரச் செய்கின்றன.

4,5,6-ம் திருமுறைகள்

திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பாடல்கள் 2,3,4-ம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. அப்பரின் பாடல்கள் தொண்டின் மூலம் இறைவனை அடையலாம் என்பதை விளக்குகின்றன.

7-ம் திருமுறை

சுந்தரர் பாடிய பாடல்கள் 7-ம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சுந்தரரால் பாடப்பட்ட பாடல்கள் திருப்பாட்டு என்று அழைக்கப்படுகிறது. சுந்தரர் பாடிய பாடல்கள் சுந்தரர் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது.

8-ம் திருமுறை

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. தேன்ரசம் கொட்டும் இவரின் பாடல்கள் இறைவனைச் சரணடைதல் மற்றும் பக்தி பற்றி விவரிக்கிறது.

9-ம் திருமுறை

திருமாளிகைத்தேவர், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருசோத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் ஆகிய ஒன்பது நபர்களால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டது.

இத்திருமுறையில் உள்ள நூல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவை ஆகும். சேந்தனார் மட்டும் திருப்பல்லாண்டு, திருவிசைப்பா இரண்டையும் பாடியுள்ளார். ஏனையோர் திருவிசைபாவினை மட்டும் பாடியுள்ளனர்.

10-ம் திருமுறை

திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் பக்தியோடு யோக முறைகளையும் எடுத்துக் கூறுகிறது.

11-ம் திருமுறை

திருஆலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகிய பதினோரு நபர்களால் பாடிய பாடல்கள் 11-ம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

11-ம் திருமுறையில் உள்ள நூல்கள் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

12-ம் திருமுறை

64 நாயன்மார்களின் வரலாற்றைப் பற்றிய சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் 12-ம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது.

முதல் திருமுறையின் முதல் பாடல் ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்குகிறது. இப்பாடலின் முதல் எழுத்தான தோ என்பது த் + ஓ எனப் பிரிக்கப்படுகிறது. இதில் ‘ஓ’ என்பது பிரணவ மந்திரமான முதல் எழுத்தைக் குறிக்கிறது.

பன்னிரெண்டாவது திருமுறையான திருத்தொண்டர் புராணத்தின் முதல் பாடல் ‘உலகெல்லாம்’ என்று தொடங்குகிறது. இதில் கடைசி எழுத்து ‘ம்’ என்பது பிரணவ மந்திரமான கடைசி எழுத்தைக் குறிக்கிறது.

எனவே இப்பாடல்கள் வேதங்களின் விளக்கங்கள் எனப் போற்றப்படுகின்றன.

பன்னிரு திருமுறைகளில் முதல் ஒன்பது திருமுறைகள் இறைவனை வாழ்த்திக் கூறுவதால் இவை தோத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

10-ம் திருமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக உள்ளதால் சாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

11-ம் திருமுறை பாடல்கள் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

12-ம் திருமுறை பாடல்கள் 63 நாயன்மார்களின் வாழ்க்கையை விளக்குவதால் இது வரலாறு என்று அழைக்கப்படுகிறது.

எல்லாம் சிவமயம் என்பதன் கருத்தென்ன?

உலகமும் உயிர்களும் அவரிடத்தே பொலிவுறுகின்றன. சிவனையே எல்லாமுமாகக் வணங்குவதும், அனைத்தும் அவருடன் சேர்ந்து விளங்குவதால் எல்லாவற்றைமும் சிவனாக காண்பதுமே “எல்லாம் சிவமயம்” என்பதன் பொருள்.

சிவபெருமானின் சின்னங்கள்:

எண்ணிக்கை அடிப்படியில் ஏழு சிவ சின்னங்கள் பட்டியலிடப்படுகின்றன. அவையாவன.

1 கங்கா தேவி
2 மூன்றாம் பிறை
3 நெற்றிக் கண்
4 வாசுகி – கழுத்தினைச் சுற்றி யிருக்கும் நாகம்
5 உடுக்கை
6 திரிசூலம்
7 திருக்கழல் – திருப்பாதத்தில் உள்ளது

லிங்கம் என்பதற்கு என்ன பொருள்?

லி + கம் என்னும் இரண்டும் சேர்ந்து லிங்கம் என்றாயிற்று. இலிங்கம் என்றால் இந்த உலகம் ஒடுங்குவதற்கும் மறுபடியும் தோன்றுவதற்கும் காரணமாயுள்ள ஓர் அடையாளம் என்பது பொருள்.

பஞ்சபூதத் தலங்கள் எவை?

காஞ்சீபுரம் (பிருதுவித்தலம்), திருவானைக்கா (அப்புத்தலம்), காளத்தி (வாயுத்தலம்), திருவண்ணாமலை (தேயுத்தலம்), சிதம்பரம் (ஆகாயத்தலம்). பிருதுவி – மண், அப்பு – நீர், வாயு – காற்று, தேயு – தீ, ஆகாயம் – பரவெளி.

சோமவார விரதம் என்பது யாது?

சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் தலையாய சிவ விரதங்களில் ஒன்று. வார நாட்களில் திங்கட்கிழமை தோறும் சிவபெருமானை வேண்டி அநுட்டிக்கப்படும் விரதம் சோமவார விரதம் ஆகும். இவ்விரதத்தை உபவாசமாக அநுட்டிப்பது உத்தமமானது. இவ்விரதத்தை மூன்று வருட காலமாயினும், பன்னிரண்டு வருட காலமாயினும், வாழ்நாள் முழுவதும் கூட அநுட்டிக்கலாம்.

பிரதோச விரதம் என்பது யாது?

பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று.

இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.

இவ்விரதத்தை நோற்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத அநுட்டானத்தைத் தொடங்குதல் மரபு.

பிரதோச விரதம் அநுட்டிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அசுதமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் போசனம் செய்தல் வேண்டும்.

சிவராத்திரி விரதம் என்பது யாது?

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

1 நித்திய சிவராத்திரி
2 மாத சிவராத்திரி
3 பட்ச சிவராத்திரி
4 யோக சிவராத்திரி
5 மகா சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

சிவராத்திரி விரதமிருந்து சிவனை நினைத்து வழிபட்டு ‘சிவய நம’ என சிந்தித்திருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலை உயரும். கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும். ஒரு நாளும் ‘அபாயம்’ ஏற்படாது, உபாயமே என்றும் நமக்கு ஏற்படும்.

இரு கைகளையும் குவித்து வணங்குவது ஏன்?

‘வணக்கம்’ கூறி ஒருவரை வணங்குதல் என்பது அவருடைய உயிரில் கலந்திருக்கின்ற இறைவனை வணங்குதல் ஆகும்.

வணக்கம் மூவகைப் படும் அவை வருமாறு:-

தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் – இது இறைவனுக்கு மட்டுமே செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.
புருவ மத்தியில் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் – இது குருவிற்கு செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.
நெஞ்சில் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் – நம் வயதை ஒத்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.

‘முக்தி’ என்பது யாது?


உயிர்க்குள்ள ஆணவமல மறைப்பு அறவே நீங்கப் பெற்று, உயிர் சிவமாம் தன்மை பெற்று இறைவன் திருவடியில் பேரின்பத்தில் இருப்ப என்பதாகும்.

ஏன் கோயில் வாசலில் குனிந்து, படியைத் தொட்டு வணங்கி உள்ளே செல்கிறோம்?

குனிந்து செல்வது பணிவைக் குறிக்கும். அப்போது நமது மனத்திலுள்ள அகங்காரமும், ஆணவமும் சற்று குறையத் தொடங்கும். எல்லாவற்றிற்கும் தலைவனான இறைவன் கோயிலினுள் இருப்பதால், வாயிற் படியை வணங்குகின்றோம்.

கொடிமரம் பற்றிய விளக்கம் என்ன?

கொடிமரம் சிவத்தை குறிக்கும். அதிலுள்ள கொடி ஆன்மாவைக் குறிக்கும். கொடிக்கயிறு பாசம் ஆகும்.

கொடிமரம் எதனைக் குறிக்கிறது?

உயிர் பாசத்தை விட்டு இறைவனை அடைவதைக் குறிப்பது கொடிமரம்.

கற்பூர தீபம் எதனைக் குறிக்கிறது? ஏன் கண்களில் தொட்டு ஒற்றிக் கொள்கிறோம்?

இறைவனுடைய அருள் ஒளிசக்தியாக நம்மிடம் வருவதைக் கற்பூர தீபம் குறிக்கிறது. தீபத்தைத் தொட்டு கண்களில் ஒற்றி கொள்ளும் பொழுது, இறையாற்றல் நம் கண்களின் வழியே நம் உடலுக்குள் செல்கிறது.

இறைவன் திருமுன் இருக்கும் வாகனம் எதனைக் குறிக்கின்றது?

வாகனம் பக்குவம் பெற்ற உயிரைக் குறிக்கும். அது என்றும், எப்பொழுதும் இறைவனையே நோக்கிக் கொண்டிருக்கும்.

ஏன் தரையில் வீழ்ந்து வணங்க வேண்டும்?

தரையில் வீழ்ந்து வணங்குவது பரிபூரண சரணாகதியைக் குறிக்கும். இறைவனின் திருமுன்னால் நம்முடைய ஆன்மாவைக் கிடத்தி, அவர் அருளை வேண்டுவதற்காகவே தரையில் வீழ்ந்து அவர் திருவடியைச் சரணாகதி அடைகிறோம்.

பஞ்சாங்க வணக்கம் என்பது யாது?

பஞ்சாங்கம் – ஐந்து உறுப்பு தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்திலே பொருந்தும் படி வணங்குதலே பஞ்சாங்க வணக்கம் எனப்படும். பெண்கள் இப்பஞ்சாங்க வணக்கத்தினைச் செய்வர்.

அட்டாங்க வணக்கம் என்பது யாது?

அட்டாங்கம் – எட்டு உறுப்பு தலை, கையிரண்டு, செவியிரண்டு, மேவாய், தோள் பட்டைகள் என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்திலே பொருந்தும் படி வணங்குதலே அட்டாங்க வணக்கம் எனப்படும். ஆண்கள் இவ்வாட்டாங்க வணக்கத்தினைச் செய்வர்.

கோவிலை ஏன் வலது புறமாக வலம் வருகிறோம்?

பூமி வலது புறமாக சுழழுவதால், கோவிலை வலது புறமாக வலம் வருகிறோம்.

கோயிலின் கருவறை ஏன் இருட்டாக இருக்கின்றது?

கோயிலின் கருவறை ஒலி அலைகளின் (இறை ஆற்றலை கடத்தும்) கலமாகும். விமானக் கலசம் மூலவரின் திருவுருவச் சிலைக்குச் சூரிய கதிர்களின் மூலமாகக் கிடைக்கப் பெறும் ஒலி அலைகளைக் கடத்துகிறது. மூலவரின் சிலைக்கு அடியிலுள்ள உள்ள நவரத்தினக் கற்களும், யந்திரத் தகடும் பூமிக்கு அடியில் இருந்துக் கிடைக்கப்பெறும் ஆற்றலை மூலவரின் திருவுருவச் சிலைக்குக் கடத்துதுகின்றன. எல்லா ஆற்றல்களையும் ஒருங்கே பெற்றுக் கொண்ட மூலவரின் திருவுருவச் சிலை, அதனை இறை ஆற்றலாக மாற்றி இறைவன் திருமுன்பு இருக்கும் வாகனம்,பலி பீடம், மற்றும் உற்சவ மூர்த்தங்கள் மீது அவ்வாற்றலைக் கடத்துகிறது. பிறகு கோயில் முழுவதும் அவ்விறையாற்றல் பரவுகிறது. அங்கே வழிபட வருகின்ற அடியவர்கள் மீதும் அவ்விறையாற்றல் பதிகின்றது. கருவறையில் இருந்து வரும் அருள் ஒலி அலை எப்பொழுதும் கிடைக்க, கருவறை இருட்டாக இருத்தல் அவசியம். அதோடு பெருமானுக்கு முறையான பூசைகளும், நிறைவான திருநீராட்டுதலும், அவசியம் நடைபெறவேண்டும்.

தடத்த நிலை என்பது யாது?


இறைவன் தன்னுடைய சொரூப நிலையிலிருந்து இறங்கி வந்து படைத்தல், காத்தல், ஒடுக்கல், மறைத்தல், அருளல், ஆகிய ஐந்தொழில்களையும் நிகழ்த்துகின்றார். இப்படி நிகழ்த்தும் நிலை தடத்த நிலையாகும்.

உருவ வழிபாடு ஏன்?

இறைவன் எங்கும் நிறைந்தவன். அவனை ஒரு மனப்பட்டு நினைப்பது எல்லோராலும் முடியாது. அஃது அரிய செயல். ஓர் இடத்தில் மனத்தைப் பதித்து வழிபாடு செய்வதற்காகவே இறைவனை உருவத்தில் அமைத்து வணங்குகிறோம். உருவம் இருந்தால் தான் மனத்தை அதில் செலுத்த இயலும்.

இறைவனை அடைவதற்கு வழிகள் எவை?

இறைவனை அடைவதற்குச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வழிகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும்.

‘சச்சிதானந்தம்’ எதனை உணர்த்துகிறது?

சக்தியோடு சேர்ந்திருக்கும் இறைவன், தன்னளவில் எவ்வித மாற்றமும் இன்றி முழு அறிவோடும் பேரானந்தமும் உடையவராக இருக்கிறார்.

சிவபுராணத்தில் பல பிறவிகள் பற்றிக் கூறும் மணிவாசகர், ‘கல்லாய்’ என்றும் சொல்கிறார், ‘கல்’ பிறப்பா?

ஒவ்வொரு பிறவிகளிலும் உயிர் பல வகையான உடம்புகளைத் தமக்கு இடமாய் கொள்வது போல கல்லையும் தமக்கு இடமாய் கொள்ளும். கல் அசையாமல் கிடக்கும். அதன் உள்ளே உள்ள உயிர்களும் அசைவு இன்றிச் செயலற்றுக் கிடக்கும். இந்நிலையைக் கல்லாய் என்று மணிவாசகர் குறிக்கின்றார்.

சிந்தாந்த சாத்திரங்கள் யாவை?

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் இப்பதினான்கு நூல்களும் சித்தாந்த சாத்திரங்களாகும்.

சிந்தாந்த சாத்திரங்கள் எதைப் பற்றி பேசுகின்றன?

அவை (பதி), பசு (உயிர்), பாசம் (உலகம்) என்னும் முப்பொருள்களைப் பற்றிப் பேசுகின்றன.

அம்பிகை அல்லது சக்தி தனித் தெய்வமா?

சிவபிரானுடைய அருளையே நாம் அம்பிகை அல்லது சக்தி என்று சொல்லிவணங்குகிறோம். சிவமும் சக்தியும் வேறல்ல. இரண்டும் ஒன்றே.

சிற்சபை என்பது என்ன?

தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் நடராசப் பெருமான் எழுந்தருளியுள்ள இடம் சிற்சபையாகும். இதனைச் சிற்றம்பலம் என்றும் சொல்வர்.

நடராசரின் நடனம் எதை விளக்குகிறது?

அவருடைய நடனம் படைத்தல், காத்தல், ஒடுக்கல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களை விளக்குகிறது. இந்த உலகம் சதா இயங்கியப்படியிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது.

ஆகமங்கள் எதைப்பற்றிக் கூறுகின்றன?

ஆகமங்கள் சிவபெருமானையும் அவர் எடுத்த மூர்த்தங்களான சக்தி,விநாயகர், முருகர் முதலாய கடவுளரை வழிபடும் முறைகளையும் கூறுகின்றன.

இறைவனுக்குள்ள திருமேனிகள் எவை?

இறைவனுக்கு அருவத் திருமேனி, அருவுருவத் திருமேனி, உருவத் திருமேனி, என்னும் முத்திருமேனிகள் உள்ளன.

இறைவன் பல மூர்த்தங்களாக இருப்பது ஏன்?

உருவமில்லாதவனாகிய இறைவன், உயிர்கள் (ஆன்மாக்கள்) தம்மைத் தியானம் செய்வதும், பூசித்தும் முத்தியின்பம் அடைவதற்காகவே பல மூர்த்தங்களாக விளங்குகின்றார்.

பஞ்சகிருத்தியக் கர்த்தாக்களின் சத்திகள் யாவர்?

பிரமனுக்கு பிராமி (கலைமகள்). திருமாலுக்கு நாராயணி (திருமகள்). உருத்திரனுக்கு உமை (பார்வதி). மகேசுவரனுக்கு மகேசுவரி. சதாசிவனுக்கு மனோன்மனி.

பஞ்சகிருத்தியங்களைச் செய்யும் கர்த்தாக்கள் யாவர்?

பிரமன் படைத்தல் தொழிலைச் செய்கிறான். திருமால் காத்தல் தொழிலைச் செய்கிறான். உருத்திரன் அழித்தல் தொழிலைச் செய்கிறான். மகேசு மறைத்தல் தொழிலைச் செய்கிறான். சதாசிவன் அருளல் தொழிலைச் செய்கிறான்.

பஞ்சகிருத்தியங்கள் எவை?

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தும் (பஞ்ச = ஐந்து, கிருத்தியம் = தொழில்). இந்த ஐந்து தொழில்களையும் குறிப்பதே சிவன் ஆடும் நடனம்.

பஞ்ச கிருத்தியம் என்பது என்ன?

சிவன் செய்யும் ஐந்து தொழில்களுக்கும் பஞ்ச கிருத்தியம் என்று பெயர்.

உயிர், உடம்பு இவற்றில் அழியக்கூடியது எது? அழியாதது எது?

உயிர் அழிவதில்லை; உடம்பு அழியக்கூடியது.

மாயை என்பது என்ன?

எல்லாக் காரியங்களுக்கும் தன்னிடத்தில் ஒடுங்குவதற்கும் அவை தோன்றுவதற்கும் காரணமாய் இருப்பது எதுவோ அதற்கு மாயை என்று பெயர். மா = ஒடுங்குதல், யா = விரிதல். மாயா என்பது மாயை (பொய்த் தோற்றம்) எனப்பட்டது.

கன்மம் என்பது என்ன?


நாம் செய்கின்ற வினை அல்லது செயல் கன்மம் எனப்படும். இது மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் ஏற்படும்.

ஆணவ மலம் உயிர்களுக்கு எவ்வாறு அமைந்துள்ளது?

அஃது செம்பில் களிம்பு போலவும் நெல்லில் உமியைப் போலவும் அமைந்திருக்கிறது.

ஆணவத்தின் தன்மை என்ன?

இஃது உயிர்களைப் பற்றி நிற்கிறது. இதனால் உயிர்கள் மெய்யறிவு பெற்று இறைவனை உணர முடிவதில்லை. உணர முடியாதபடி ஆணவம் உயிருக்கு அறியாமையை ஏற்படுத்துகிறது.

மலம் எத்தனை வகைப்படும்?

அஃது ஆணவம், கன்மம், மாயை என மூன்று வகைப்படும்.

பாசத்துக்கு வேறு பெயர்கள் என்ன?
தளை, கட்டு, பந்தம், மலம் என்பன

பாசம் என்பது யாரைக் குறிக்கும்?

உயிர்களைத் தொன்றுதொட்டுப் பற்றிக்கொண்டு நிற்கும் ஆணவத்தை ஆன்மா (உயிர்) செய்யும் பாவம், புண்ணியம் என்னும் இரு வினைகளையும் போக்குவதற்குக் காரணமாக அமைந்துள்ள உடம்பு, உலகம், அநுபவிக்கும் பொருட்கள் ஆகியவற்றுக்குப் பாசம் என்று பொருள்.

பசு என்பது யாரைக் குறிக்கும்?

உயிர்களைக் குறிக்கும். ஆன்மா என்றும் அதனைச் சொல்லலாம்.

பதி என்பது யாரைக் குறிக்கும்?

பதி என்பதற்குத் தலைவன் என்று பொருள். அது முழுமுதற் பொருளான சிவனைக் குறிக்கும்

பதி, பசு, பாசம் இவற்றுக்குள்ள வேறு பெயர்கள் எவை?

கடவுள், உயிர், உலகம் என்பன.

தேவாரம் அருளியவர்கள் யாவர்?


திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள்

தேவாரம் என்பதற்கு என்ன பொருள்?

தெய்வத்தைப் போற்றிப் பாடப்பட்ட பாடல்கள் என்று பொருள். தெய்வ ஆரம், தெய்வப் பாமாலை என்றும் சொல்லலாம்.

சித்தாந்த சாத்திரங்களின் எண்ணிக்கை என்ன?

சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு.

சித்தாந்தம் என்றால் என்ன?

சிந்தித்த முடிவு. ஒன்றைப் பற்றி நன்கு சிந்தித்ததால் கிடைத்த முடிவு சித்தாந்தம். சித்தம் + அந்தம் என்னும் சொற்கள் சேர்ந்ததே சித்தாந்தம் என்னும் சொல்.

சித்தாந்த சாத்திரங்கள் என்றால் என்ன?

ஆராய்ச்சி, அநுபூதி (அநுபவ ஞானம்) இவற்றால் கிடைக்கப்பெற்ற முடிவு நூல்கள் சித்தாந்த சாத்திரங்கள் ஆகும்.

திருமுறைகளைப் பாடியவர்கள் யாவர்?

இருபத்தேழு பெருமக்கள் திருமுறைகளைப் பாடியுள்ளனர்.

சைவ சமயத்துக்கு அடிப்படை நூல்கள் எவை?

சைவ ஆகமங்கள், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் என்பன.

வீட்டில் சுவாமி அறையை எந்தப் பக்கம் வைக்கலாம்?

இறைவன் திருவுருவங்கள் கிழக்கு நோக்கி இருக்கும் படி அமைத்துக் கொள்ளலாம். அறை இல்லை என்றால் இருக்கும் அறையில் பொருத்தமான இடத்தில் பூசை மேடையை அமைத்துக் கொள்ளலாம்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் யாவை?

பழநி, சுவாமி மலை, பழமுதிச் சோலை, திருத்தணிகை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம்

வீட்டில் திருவிளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம் யாது?

‘இல்லக விளக்கது’ எனும் தமிழ் மந்திரத்தை ஓதியவாரே விளக்கு ஏற்ற வேண்டும். அல்லது ‘நமசிவய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியும் விளக்கு ஏற்றலாம்.

63 நாயன்மார்களுடைய கதைகளைக் திருமுறையில் எந்த பகுதியில் காண முடிகிறது?

12-ஆம் திருமுறை / பெரிய புராணம்

‘சங்கர்ப்ப நிராகரணம்’ எனும் சாத்திர நூலை அருளியவர் யார்?

உமாபதி சிவம்

சிவாலயத்தில் சதா யோக நிலையில் இருக்கும் மூர்த்தி யார்?

சண்டிகேசுவரர்

நினைத்தாலே முக்தி தரும் கோவில் எது?

திருவண்ணாமலை

சங்கத்தமிழ் புலவரான நக்கீரர் இயற்றிய நூல் எது?

திருமுருகாற்றுப்படை

திருத்தொண்டர் தொகையை அருளியவர் யார்?

சுந்தர மூர்த்தி நாயனார்.

பன்னிரு திருமுறைகளில் சாத்திரப் பாடல்களாக உள்ளது எது?

10-ஆம் திருமுறை / திருமந்திரம்.

நடராச பெருமானின் திருநடனம் எதனை விளக்குகின்றது?

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலும் பெருமானின் அற்புதக்கூத்தில் அமைந்துள்ளது. வலக்கையிலுள்ள (துடி) உடுக்கை ஒலியை உண்டாக்கும்; அதுவே ஓசையைக் காட்டுகின்றது. ஓசையே உலக படைப்பிற்கு அடிப்படை. எனவே இந்த உடுக்கை படைப்பு தொழிலைக் குறிக்கின்றது. மற்றோரு வலக்கை அபய கரம் (அமைந்த திருகரம்). இந்த அமைந்த திருகரம் காத்தல் தொழிலைக் காட்டும். தூக்கிய இடக்கையில் உள்ள நெருப்பு உலகை அழிக்கும் கருத்தைக் குறிக்கும். முயலகன் மீது ஊன்றியத் திருவடி மறைத்தல் தொழிலைக் குறிக்கும். எடுத்தத்திருபாதம் (தூக்கிய திருவடி) அருளல் தொழிலைக் குறிக்கும். இக்குறிப்பினைத் திருமூலர் திருமந்திரத்திலே இவ்வாறு கூறுகின்றார். அரன்துடி தோற்றம்; அமைத்தல் திதியாம்; அரன் அங்கிதன்னில் அறையிற் சங்காரம்; அரன் உற்றணைப்பில் அமரும் திரோதாயி; அரனடி என்னும் அனுக்கிரகம்மே

விநாயகப் பெருமானின் கையில் இருக்கும் மோதகம் எதனைக் குறிக்கின்றது?

இறைவன் நமக்குப் போகங்களைத் தருபவர், என்பதனைக் குறிக்கின்றது. இக்கருத்தினை, பொன்னும் மெய்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்பானைப்’ எனும் சுந்தரரின் பாடல் வரிகளோடு ஒப்பு நோக்கி மகிழலாம்.

திருவாதிரை பற்றிய குறிப்புகள் நம் திருமுறைகளிலோ, அல்லது தமிழ் இலக்கியங்களிலோ இடம் பெற்றிருக்கின்றனவா?

இடம் பெற்றிருக்கின்றன. திருஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்புவதற்காகப் பாடிய பதிகத்தில் சைவசமயத் தொடர்பான பல விழாக்களைக் குறிப்பிட்டு அவற்றைக் ’காணாதே போதியோ பூம்பாவாய்’ எனக் கூறுகின்றார். அப்பதிகத்தில் ஒரு பாடலில் ’காபலீச்சுரம் அமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்’ என்கின்றார்.

அப்பர் தேவாரத்தில் ’திருவாதிரைத் திருப்பதிகம்’ என்று ஒரு பதிகமும் (10 பாடல்கள்) அமைந்துள்ளது. திருவாதிரையின் சிறப்பினைக் கூறும் இப்பதிகத்தின் ஒவ்வோரு பாடலின் இறுதி வரியிலும் ’ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்’என முடிகின்றது.

சேக்கிழாரின் பெரிய புராணத்தில் அப்பர் புராணம் (2398), சம்பந்தர் புராணம்(1505) ஆகியப் பாடல்களில் திருவாதிரைப் பற்றிய குறிப்பு வருகின்றது.

9ம் திருமுறையான திருப்பல்லாண்டும், கொடிக்கவி என்னும் சாத்திர நூலும் எழுந்த நாள் திருவாதிரை நன்னாநாளே ஆகும்.

தமிழ் இலக்கியத்தில் பரிபாடலில் 8வது செய்யுளில் ”ஆதிரை முதல்வன்’ என்னும் சிவபெருமானைக் குறிக்கும் ஒர் தொடர் வருகின்றது.

கலித்தொகை அதன் பகுதியாகிய நெய்தற்கலியில் ’அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த’ என்னும் தொடர் (கலி 150-20), திருவாதிரை நாளன்று சிவபெருமான் அணிகளை அணிதிருப்பதுப் போல அமைந்த ஒரு செண்பக மரம் பற்றிய தொடர் வருகிறது.

இறைவன் கனவில் காட்சிக் கொடுப்பாரா?

கொடுப்பார். ஒரு சமயம் திருவீழிமிழலையில் பஞ்சம் போக்குமாறுப் பணிக்க திருஞானசம்பந்தர், மற்றும் அப்பர் பெருமான் கனவில் இறைவன் தோன்றினார், என்பதனை பெரியபுராணத்தில் சேக்கிழார் ’பிள்ளையார் தமக்கும் நாவுக்கரசருக்கும் கையில் மானும் மழுவுமுடன் காணக் கனவில் எழுந்தருளி… என மொழிகின்றார். பெருமானின் திருவருள் சுரக்கும் திருவடிகளை இடைவிடாமல் சிந்தித்துச் சைவத்திற்கும் தமிழுக்கும் முனைப்பு இல்லாதப் பணியைச் செய்து வந்த பெரியவர்களுக்கு இறைகாட்சி கிடைத்தது. அது போல நாமும் இறைவனை இடைவிடாமல் சிந்தித்து நமது தொண்டினைச் செவ்வனவே செய்து வந்தால் நமக்கும் இறை காட்சி கிடைக்கும். இதனைத் ’தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயம் சாரும் ஊழ் பெறல் அரிது’ என்கிறது சிவஞான சித்தியார்.
வழிபாட்டில் ஏன் இறைவனுக்குத் திருவமுது வைக்கின்றோம்?
தமது கருணையினால் பொது நிலைக்கு வரும் இறைவன் ஆனந்த கூத்தாடி நம்மை ஆட்கொள்ள விழைகின்றார். இப்படி நமக்கு அருளைப் பொழிந்துக் கொண்டிருக்கின்றப் பெருமானுக்கு நம்மால் கைமாறு ஒன்றும் செய்ய முடியாது. இதனை மணிவாசகர்’யான் இதற்கு இலன் ஓர் கைமாறே’ என்கிறார். தவிர பெருமானும் நம்மிடம் இருந்து எதையுமே எதிர்பார்பதில்லை. இதனை வேண்டுதல் வேண்டாமை இலான்’ எனும் குறள் வழித் தெளிவுப் படுத்துகின்றார் வள்ளுவ பெருந்தகை. இவ்வாறு நமக்கு எந்நேரமும் நன்றே செய்துக் கொண்டிருக்கின்றார் பெருமான். உயிரினங்கள் வாழ்வதற்காக இறைவன் அருளிய உணவு பொருட்களை இறை வழிபாட்டில் திருவமுதாக வைத்து அவருடையப் பேரருள் திறத்திற்கு நன்றி பாராட்டுகின்றோம்.

தைபூசத்தில் காவடி எடுப்பதின் நோக்கம் என்ன?

முருகன் குறிஞ்சி நிலமாகிய மலை நிலத் தெய்வம் என்பதால் மலை மீது கோயில் கொண்டிருந்தார். முருகப் பெருமானின் அடியவரான இடும்பன் என்பவர் இறைவனுக்கு அபிடெகப் பொருட்களை ஒரு கோலின் இருமுனைகளில் கட்டி தோள்களில் சுமந்துச் சென்று மலை மீது இருக்கும் அப்பெருமானைத் திருநீராட்டி வந்தார். அவருடைய அன்பிற்கு மகிழ்ந்த இறைவன் தை மாதத்தில் பூச நட்சத்திரதன்று இடும்பனுக்கு முக்தி இன்பம் அளித்தார். ஆகவே தைபூசத்தன்று இறைவனைத் திருநீராட்டுவதற்கு அபிடேகப் பொருட்களைக் கொண்டுச் செல்வதே காவடியின் நோக்கமாகும். தோளில் தூக்குவதைக் ’காவுதல்’ என்றும் கூறுவர். ஆகவே தோளில் சுமக்க உதவிய தடி ’காவு’ என சொல்லப்பட்டது. காவு தடி ’காவடி’ ஆனது.

திசைத் தெய்வங்களை வழிபடுவதினால் ஏற்படும் நன்மைகள் யாது?

திசைகள் பத்து என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பத்துத் திசைகளையும் இறைவனின் திருவருள்தான் நின்று ஆளுகின்றது. இறைவன் திருவருள் ஆணையைப் பெற்று ஏவல் செய்யும் திக்குப் பாலகர்களும், திசைத் தெய்வங்களும், அந்த-அந்த திசைக்கு உட்பட்டே தத்தமக்கு இட்ட பணிகளைச் செய்ய முடியும். இத்திசைத் தெய்வங்கள் எல்லாவற்றையும் செலுத்துவதாகவும், அவற்றிற்கு மேம்பட்டும் விளங்குவது பரம்பொருளான சிவம். அந்தந்த திசைத் தெய்வங்களை மட்டும் வழிபடுகின்றவர்கள். அதற்குரிய பலன்களை மட்டுமே அடைவர். பரம்பொருளை வழிபடுவதனால், எல்லாத் திசைத் தெய்வங்களினால் கிடைக்கும் பலனும் அவற்றிற்கு மேலும் கிட்டும்.

Scroll to Top