You cannot copy content of this page

001 திருப்பிரமபுரம் நட்டபாடை

திருப்பிரமபுரம் நட்டபாடை

1

தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண் மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென்
னுள்ளங் கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட் பணிந் தேத்தவருள் செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானி வனன்றே. 1

பொழிப்புரை: தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச் சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!
குறிப்புரை: தோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்த கள்வனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, “பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர் பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து” என்ற சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி என்றதால்

இடப் பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்க மாதலின், அதனை முற்கூறினார். “தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்” என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப் புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று “குரு அருளும்” (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது.

மூன்று வயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப் பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொரு பாகனாக ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங் கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி – தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி – தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறுபோலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மைபுறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி பூசுதல்: சர்வ சங்கார காலத்து எல்லாவுலகமும் தத்தங்காரணத்துள் முறையே ஒடுங்க – காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும்.

உள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு – இதழ். மலரான் – பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு – பெருமை. மேவிய – தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான் – பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு.

இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் “விடையேறி” என்பது நித்யத்தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், “மதிசூடி” என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், “பொடிபூசி” என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், “கள்வன்” என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், “அருள்செய்த” என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள்.

2

முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு,
வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த,
பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

3

நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,
ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
“ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது” என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

பொ-ரை: கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச்

சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இது என்ற புகழைப் பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!

கு-ரை: நீர் – கங்கை, நிமிர்புன்சடை – நிறைந்த புல்லியசடை, ஓர் நிலா வெண்மதி – ஒரு கலைப்பிறை, ஏர் – அழகு. வெள்வளை – சங்குவளை. சோர – நழுவ, அவன் மதியைச் சூடியிருத்தலின் விரக மிக்கு உடலிளைத்து வளைசோர்ந்தது என்பதாம். ஊர் பரந்த உலகு – ஊர்கள் மிகுந்த உலகு. மகாப்பிரளய காலத்து உலகமே அழிக்கப் பெற்றபோது, இத்தலம் மட்டும் அழியாது இருத்தலின் உலகிற்கே ஒருவித்தாக இருக்கின்றது சீகாழி என்பது. பேர் – புகழ்.

4

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்
உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில்
பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

பொ-ரை: வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல், விளங்கிய பிரமகபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்தவரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ!

கு-ரை: விண்மகிழ்ந்தமதில் – ஆகாயத்தில் பறத்தலை விரும்பிய மதில். இவை திரிபுராரிகளின் பொன், வெள்ளி, இரும்பாலான கோட்டை. எய்தது – மேருவை வில்லாக்கி, வாசுகியை நாணாக்கித் துளைத்தது. உள்மகிழ்ந்து – மனமகிழ்ந்து, தேரிய – ஆராய, செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மண் மகிழ்ந்த அரவம் – புற்றினை விரும்பும் பாம்பு, இறைவன் அணிந்த பாம்பு புற்றில் வாழாததாயினும் சாதி பற்றிக் கூறப்பட்டது. அரவம் கொன்றை மலிந்த மார்பு – அச்சுறுத்தும் விஷம் பொருந்திய பாம்பையும், மணமும் மென்மையும் உடைய கொன்றையையும் அணிந்த மார்பு, என்றது வேண்டுதல் வேண்டாமையைக் காட்டும் குறிப்பாகும். பெண் – உமாதேவியார். பலிதேரவந்தார் எனதுள்ளம் கவர்ந்தார் என்றது என்னுடைய பரிபாகம் இருந்தபடியை அறிந்து ஒன்று செய்வார் போல வந்து உள்ளமாகிய ஆன்மாவை மலமகற்றித் தமதாக்கினார் என்பதை விளக்கியவாறு.

5

ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும்(ம்)
இவன்!” என்ன
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம்
கவர் கள்வன்-
“கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது” என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

பொ-ரை: ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடைமுடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப் படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக் கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.

கு-ரை: ஒருமை – ஒரு திருமேனியிலேயே, பெண்மை உடையன் – பெண் உருவத்தை உடையன்; என்றதால் பெண்ணுருவும் ஆணுருவுமாகிய இருமையும் உடையன் என்பது குறித்தவாறு. பெண்மை – பெண்ணுரு. உடையன் என்றதிலுள்ள விகுதியால் ஆணுருவாயினும் பெண்மை உடைமையும், சிவம் உடையானும் ஆம் என்றவாறு. சடையன் – பெண்மையுருவில் பின்னிய சடையும்

ஆணுருவில் அமைந்த சடையுமாயிருத்தலின் இரண்டிற்கு மேற்பச்சடையன் என்றார். உரைசெய்ய – தோழியர் தலைவன் இயல்பைச் சொல்ல. உரையின் வாயிலாக உள்ளத்தில் புகுந்து விரும்பி உள்ளத்தைத் தமதாக்கிக் கொண்டான் என்பார் ;அமர்ந்து எனது உள்ளம் கவர்கள்வன்; என்றார். ‘ஓர் காலம் கடல் கொள்ள மிதந்த தலம் இது என்னும் பெருமைபெற்ற பிரமபுரம்” என இயைத்துப் பொருள் காண்க. ஓர்காலம் – சர்வ சங்காரகாலம்.

6

மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப்
பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

பொ-ரை: ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக் கொண்டும் வந்து எனது முன் கையில் உள்ள ஓரினமான வெள்ளிய வளையல்கள் கழன்று விழ என்னை மெலிவித்து உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இருள் செறிந்த, மணமுடைய பொழில்களிடத்தும் நீண்டு வளர்ந்த மரங்களை உடைய சோலைகளிடத்தும் நிலவைப் பொழியும் பிறையைச் சூடியவனாய்ப் பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

கு-ரை: பாடுவது வேதம், செய்வது கள்ளம் என்ற நிலையில் பெருமான் இருக்கின்றார் என்பதைக் காட்டுவன முன் இரண்டு அடி. ஒலி கலந்த மறை பாடலோடு எனக் கூட்டி ஒலிவடிவாய வேதத்தைப் பாடுதலை உடையவர் எனப் பொருள் காண்க.

மழு – தவறிழைத்தாரைத் தண்டித்தற்காக ஏந்திய சங்கார காரணமாகிய தீப்பிழம்பு; ஆயுதமுமாம். இறை – மணிக்கட்டு. வெள்வளை – சங்க வளையல்கள். முன்கையில் செறிந்து கலந்திருந்த சங்க வளையல்கள் சோர்ந்தன என்பதால், ‘உடம்புநனி சுருங்கல்” என்னும் மெய்ப்பாடு உணர்த்தியவாறு. கறை – இருள். கடி – மணம். பொழில் – நந்தனவனத்தும், சோலை – தானே வளர்ந்த சோலைகளிடத்தும். கதிர்

சிந்த என்றதால் நிலவொளி அங்குமிங்குமாகச் சிதறியிருந்தமை அறியப்படும். கதிர் சிந்து அப்பிறை எனப்பிரிக்க

7

சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த,
உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம்
கவர் கள்வன்-
கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம்
சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

பொ-ரை: சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில் அனலைஉடையவனும், ஆடையின் மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித் திரிந்து வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கடலைத் தழுவிய உப்பங்கழிகளால் சூழப் பெற்றதும், குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடையதும், தம்முடைய பெடைகளை முயங்கித் திரியும் அழகிய சிறகுகளோடு கூடிய அன்னங்களை உடையதும், ஆகிய பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

கு-ரை: சடைமுயங்கு புனலன் – சடையில் கலந்திருக்கின்ற கங்கையை உடையவன். அனலன் – திருக்கரத்தில் அனலை உடையவன், உடைமுயங்கும் அரவு – ஆடையின்மேல் இறுகக் கட்டிய கச்சையாகிய பாம்பு.

சதிர்வு – பெருமை. உழிதந்து – திரிந்து. ஊடத்தக்க ஒரு பெண்ணையும், அஞ்சத்தக்க எரி அரவு முதலியவற்றையும் அணிந்து திரிபவராயிருந்தும் எனது உள்ளத்தைக் கவர்ந்தார் என்றது, அவர்க்குள்ள பேரழகின் திறத்தையும், கருணையையும், எல்லாவுயிரையும் பகைநீக்கியாளும் வன்மையையும் வியந்தவாறு.

கழி – உப்பங்கழி. கானல் – கடற்கரைச் சோலை. பிரமபுரத்தில் சடைமுயங்கு புனலனாய் உள்ளம் கவர்கின்ற தன்மையால் போகியாயிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிய, சிறகன்னங்களும் தத்தம் பெடைகளை முயங்குகின்றன எனல், ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது” என்பதை அறிவித்தவாறு.

8

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம்
கவர் கள்வன்-
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

பொ-ரை: கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம்கவர் கள்வன், துயர் விளங்கும் இவ்வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

கு-ரை: வியர் இலங்கு தோள் – வியர்வை விளங்குகின்ற தோள். வியர் அகலம் எனவும் பொருள் கொள்ளலாம். இலங்கை அரையன் – இராவணன். அரையன் தோள்களை வலிசெற்று என மாறிக் கூட்டுக. துயர் இலங்கும் உலகு – துன்பம் விளங்குகின்ற கன்மபூமி. இதனைத் துன்ப உலகு என்றது வினைவயத்தான் மாறித் துய்க்கப்படும் இன்ப துன்பங்களுள் இன்பக் களிப்பைக் காட்டிலும் துன்பக்கலக்கம் மிகுந்து தோன்றலின். பல ஊழி – பிரம ஊழி முதலிய பல ஊழிகள். இறைவன் பல ஊழிகளை விளைவிப்பது ஆன்மாக்களின் மலம் பரிபாகமாதற்பொருட்டு. பெயர் – புகழ்.

1‘………முன்னாள் நிகழந்த பன்னீருகத்து
வேறுவேறு பெயரின் ஊறின் றியன்ற…..புகலி”

9

தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்-
வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த,
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

பொ-ரை: திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற, அண்ணாமலையாய் நிமிர்ந்தவனாய், என் உள்ளம் கவர் கள்வனாய் விளங்குபவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

கு-ரை: மாலொடு தண்தாமரையானும் தாள்நுதல் செய்து இறைகாணிய நீணுதல் செய்து நிமிர்ந்தான் எனக் கூட்டுக. மால் தாள்காணிய நிமிர்ந்தான் எனவும், தாமரையான் நுதல் காணிய நிமிர்ந்தான் எனவும் தனித்தனிக் கூட்டிப் பொருள் காண்க. தாள்நுதல் செய்து – தாளையும் நுதலையும் தமது குறிக்கோளாகக் கருதி. இறை காணிய – தம்முள் யார் இறை என்பதைக் காணும்பொருட்டு; இறைவனைக் காணும்பொருட்டு என்பாரும் உளர். நீணுதல் – மால்பெரிய பன்றியாய் நீளுதலும் பிரமன் அன்னமாய் வானத்தில் நீளுதலுமாகிய இரண்டின் செயல்கள். ஒழிய – செயலற்றுப்போக. நிமிர்ந்தான் – அண்ணாமலையாய் உயர்ந்தவன். சென்று பற்றுவேன் என்று செருக்கிய தேவர்க்கு அப்பாற்பட்டவன், செயலழிந்திருந்த தலைவியின் சிந்தையை வலியவந்து கவர்கின்றான் என்பது இறைவனது எளிமை தோன்ற நின்றது. மகளிர் முதலாகிய வையத்தவர் ஏத்த மேவிய பெம்மான் என்றது இவளும் வையத்தவருள் ஒருத்தியாயிருக்க இங்ஙனம் கூறினாள், ஏனைய மகளிர்க்கு இல்லாததாகிய, இறைவனே வலியவந்து உள்ளங்கவரும்பேறு தனக்குக் கிட்டியமையைத் தெரிவிக்க.

10

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா
ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
“மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது!” என்ன,
பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

பொ-ரை: புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித் திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

கு-ரை: பொறிஇல் சமண் – அறிவற்ற சமணர்கள். புறங்கூற – நேர்நின்று சொல்லமாட்டாமையாலே மறைவான இடத்தில் எளிமையாய்ச் சொல்ல. நெறி நில்லா – வரம்பில் நில்லாதனவாக. ஒத்த சொல்ல – ஒரே கருத்தை உரைக்க. புறச்சமயத்தார் ஒருமித்துப் புறங்கூறவும் பிச்சையேற்று உள்ளங்கவர்கின்ற கள்வனாதலின் யானைத் தோலைப் போர்த்து மாயம் செய்தார் என்று இயைபில் பொருள் தோன்ற வைத்தார்.

11

அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,
பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.

பொ-ரை: அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும். ஊழ்வினை தீர்வதற்குரிய மார்க்கங்கள் பல இருப்பினும், இத்திருப்பதிகத்தை ஓதுதலே எளிமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கு-ரை: அருநெறியமறை வல்லமுனி – அருமையான நெறிகளை வகுக்கும் மறைகளில் வல்ல முனிவனாகிய பிரமன். அலர்மேய அகன்பொய்கை பிரமாபுரம் மேவிய பெருநெறிய பெம்மான் இவன்றன்னை – தாமரைகள் பொருந்திய அகன்ற பொய்கையை உடைய பிரமாபுரத்தில் விரும்பியிருந்த முத்திநெறிசேர்க்கும் முதல்வனை. ஒருநெறியமனம் – ஒன்றுபட்ட மனம். மனம் ஐந்து வழியாகவும் அறிந்தவற்றை வழியடைத்தகாலத்தும் சென்று பற்றித் தன்மயமாயிருப்பதொன்றாகலின் அங்ஙனம் செல்லாது ஒருங்கிய மனத்தை ஈண்டு விதந்தார்கள். வைத்து – பிரியாதே பதித்து. திருநெறியதமிழ் – சிவ நெறியாகிய அருநெறியையுடைய தமிழ். தொல்வினை – பழமையாகிய வினை; என்றது ஆகாமிய சஞ்சிதங்களையும், இனி வரக்கடவ பிராரத்த சேடத்தையும். முன்னைய தீரினும் பிராரத்த சேடம் நுகராதொழியாதாகவும் இங்ஙனங்கூறியது, யான் நுகர்கிறேன் என்ற இன்னலுமின்றிக் கழிக்கப்படுதலை. இதனால் பழவினை நீக்கமே இப்பதிகப் பயன் என்று உணர்த்தியவாறு.

Scroll to Top