You cannot copy content of this page

கண்திருஷ்டிகள் நீங்க:

கண் திருஷ்டியை போக்க நாம் செய்ய வேண்டியது…!!

‘திருஷ்டி’ எனில், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பது. இவற்றைப்போக்கி நாம் மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மைத்தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றுதான் ஆரத்தி எடுப்பது.

இவற்றிலும் பல வகைகள் உள்ளன. ஆனால், அதில் அடிப்படையானது சிவத்தைக் குறிக்கும் சுண்ணாம்பையும், பெண்களின் மங்கலச் சின்னமான மஞ்சளையும் இணைப்பதே. சுண்ணாம்பு சைவமாகிய தூய்மையின் சின்னம். ஸத்வ குணம் உடையதாகவும், கிருமிநாசினியாகவும் செயல்படக்கூடிய ஆற்றல் உடையது.

ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வருவோர் கண்பார்வை படும் படி வைக்கவும் கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச் சுற்றி அதைஇடம் வலமாக மாற்றி எறியுங்கள். அல்லது கடையை மூடும் போது ஒரு எலுமிச்சம் பழத்தில் கற்பூரம் வைத்து உங்களுக்கும் கடைக்கும் சேர்த்து சுற்றி அதை நசுக்கி இட வலமாக மாற்றி எறியுங்கள்.

எலுமிச்சம் பழம் தீய சக்திகளை திருஷ்டியின் பாதிப்புக்களை நெருங்கவிடாமல் செய்யும். எளிமையானதும் கூட.திருஷ்டி என்பது இல்லாதவன் இருப்ப்வனை பார்த்து பெருமூச்சு விடுவதும், ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்.. கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம். சிலர் கல் உப்பு கொஞ்சம் எடுத்து 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள்.

குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும். இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்.

நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பெளர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம் வளர்பிறை, வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம். வாசலுக்கு மேல் ஒரு எலுமிச்சை, 5 பச்சை மிளகாய் என மாறி மாறி கயிற்றில் கோர்த்து தொங்கவிடலாம். இதனை செவ்வாய் கிழமைகளில் செய்யலாம்.

குழந்தைகளுக்கு உண்டாகும் கண்திருஷ்டிகள் நீங்க:

சிறு குழந்தைகளுக்கு கண்திருஷ்டி ஏற்படின் சீறி அழும்,பால் உணவுகள் சாப்பிடாது,தூங்காது.

இவற்றை நிவர்த்தி செய்ய முச்சந்தி மண்,கல்உப்பு,மிளகாய் வற்றல்-5,சுண்ணாம்பு,மஞ்சள்,கடுகு இவைகளை துணியில் வைத்து முடிந்து குழந்தையின் தலையை மூன்று முறை வலது-இடது,இடது-வலதுப் புறமாக சுற்றி உடம்பில் மேலிருந்து கீழாக தடவி இறக்கி பின் அந்த முடிச்சை நெருப்பில் போட கண்திருஷ்டிகள் விலகும்.

திருஷ்டி தோஷம் என்பது ஒருவித எண்ண சக்தியே. இந்த எண்ண சக்தி உடலில் தங்கிப் பெருக வேண்டுமானால் அதற்கேற்ற அசுத்தமான சூழ்நிலை வேண்டும். முழுக்க முழுக்க தூய்மையான ஒரு மனித உடலில் தீய சக்திகள், தோஷ எண்ணங்கள் நிச்சயமாக நிலைத்திருக்க முடியாது. எனவே முடிந்த மட்டும் காலை, மதியம், மாலை என்ற மூன்று வேளையும் தலைக்கு நீர் வார்த்து குளித்தல் அவசியம். குறைந்த பட்சம் காலை மாலை என இரண்டு முறையாவது தலைக்குக் குளித்தலால் தீய சக்திகள் உடலில் குடி புகும் வாய்ப்புகள் தோன்றாது.

இறைப் பிரசாதங்களான விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம், கண் மை போன்றவற்றை அணிதல், மணிக் கட்டு, இடுப்பில் கறுப்புக் கயிறு, கங்கன்களை அணிதல், பெண்கள் தோடு, மூக்குத்தி, வளையல்கள், கொலுசு, மெட்டிகள் போன்ற ஆபரங்களை அணிதல் போன்றவை திருஷ்டி நிவாரண சாதனங்களாகும்.

ஒரு திருஷ்டி விநாயகர் படத்தை வீட்டின் வெளிப்புற வாசலில் வடக்கு திசையை பார்த்து மாட்டிவையுங்கள்.
இவ்வாறு கண் திருஷ்டி விநாயகர் படத்தை மாட்டிவைப்பதினால், மற்றவர்கள் நம்மீது வைக்கும் பார்வைகளில் இருந்து நம்மை திருஷ்டி விநாயகர் காப்பார்.

வீட்டில் துளசி மற்றும் அரும்புகள் போன்ற செடிகளை வளர்பதினாலும், கண் திருஷ்டி நீங்கும் மற்றும் தீய அதிர்வுகளும் நீங்கி விடும்.

வீட்டில் கணபதி ஹோமம் செய்யலாம் அல்லது எங்காவது கணபதி ஹோமம் செய்யப்பட்டிருந்தாலும், அங்கு சென்று அந்த ஹோமத்தில் சாம்பல் சிறிதளவு எடுத்து வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் முடிந்து வைத்து கொள்ளுங்கள்.

அதேபோல் வீட்டில் தலை வாசலின் மேல்பகுதியில் படிகாரம் கல்லை கருப்பு நிறம் கயிற்றில் கட்டி தொங்கவிடவும். இவ்வாறு செய்வதினால் வீட்டின் மீது படும் வெளிநபர்களின் கண் திருஷ்டி அகன்றுவிடும்.

அதேபோல் வீட்டின் தலை வாயில்களில் மாவிலையை தோரணமாக கட்டி செவ்வாய் கிழமைகளில் தொங்கவிடுங்கள். இதுவும் ஒரு சிறந்த திருஷ்டி பரிகாரமாகும்.

அமாவாசை, பௌணர்மி போன்ற தினங்களில் உச்சி வேளையில் வீட்டிற்கு திருஷ்டி கழிக்க வேண்டும்.திருஷ்டி கழித்த பிறகு வீட்டின் எல்லா பகுதியிலும் வேப்பிலையை கொண்டு மஞ்சள் நீர் தெளிக்க வேண்டும்.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னிரவு வேளையில் மிளகாய், உப்பு மற்றும் உங்கள் வீடு மற்றும் தொழிற்கூட நிலத்தின் மண் ஆகியவற்றை ஒன்றாக ஒரு கொட்டாங்குச்சியில் போட்டு, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் திருஷ்டி கழித்து தெரு முச்சந்தியில் அப்பொருட்களை தீயிட்டு கொழுத்த வேண்டும். இதன் மூலம் கண் திருஷ்டி கழியும்.

சுத்தமான பருத்தி ஆடைகள் திருஷ்டி தோஷங்களிலிருந்து எளிதில் நிவாரணம் அளிக்க வல்லவை. எந்த அளவிற்கு பருத்தி ஆடைகளால் உடலை மறைத்து வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு திருஷ்டி தோஷங்கள் நம்மை அண்டாது.

இலவம் பஞ்சிற்கு திருஷ்டி தோஷத்தை எதிர்க்கும் தன்மை இருப்பதால் இலவம் பஞ்சினால் ஆன படுக்கைகள், தலையணைகள், திண்டுகள், மெத்தைகளைப் பயன்படுத்துதல் நலம். கோடிக் கணக்கான பணம் புரளும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கூட இலவம் பஞ்சினால் ஆன மெத்தைகளில் அமர்ந்து பஞ்சு திண்டுகளில் சாய்ந்து கொண்டிருப்பதை காண்கிறோம். இதனால் அவர்களைக் காண வருபவர்களின் எண்ண அலைகள் அவர்களைப் பாதிக்காத வகையில் தெளிவான மன நிலையில் நிலைத்திருக்க இத்தகைய பருத்தி, இலவம் பஞ்சு உபகரணங்கள் உறுதுணையாக அமைகின்றன.

வாகன பாதுகாப்பு

இன்றைய உலகில் இரு சக்கர வாகனங்களும், சிலருக்கு நான்கு சக்கர வாகனங்களும் இன்றியமையாத வசதிகள் ஆகிவிட்டன. இந்நிலையில் வாகனங்களை திருஷ்டிக் கண்களிலிருந்து பாதுகாத்துக் கொண்டால்தான் மனிதனுடைய அன்றாட அலுவல்களைப் பிரச்னைகள் இல்லாமல் கவனித்துக் கொள்ள முடியும். சில எளிய வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் வாகனங்களின் மேல் திருஷ்டி தோஷங்கள் படியாமல் அவை நமது உற்ற நண்பர்களாக மாற வழி தேடிக் கொள்ளலாம்.

வாகனங்களை எப்போதும் கிழக்கு நோக்கி நிறுத்தும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முதன் முதலில் வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கும் போது சிறிது தூரமாவது கிழக்கு நோக்கி ஓட்டிச் சென்று விட்டு பிறகு நாம் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி வண்டியை ஓட்டுவது நலம்.

எக்காரணம் கொண்டும் பழைய வாகனத்தை வாங்க வேண்டாம். நமது சக்திக்கு ஏற்ற புது வாகனத்தை வாங்கிக் கொள்வதால் தேவையில்லாத பலவித பிரச்னைகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

வாரம் ஒரு முறையாவது சிறப்பாக செவ்வாய்க் கிழமை அன்று கட்டாயம் வாகனங்களை சுத்தமான நீரால் சுத்தம் செய்து விபூதி குங்குமத்தால் அலங்கரித்து, வாகனங்களை வலம் வந்து சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து நமஸ்காரம் செய்து வழிபடுவதால் எத்தகைய ஆபத்துகளிலிருந்தும் அவை நம்மைக் காப்பாற்றும் என்பதை மறந்து விடாதீர்கள்.

வாகனங்களை அலம்பும்போது டயர்களை நீர் விட்டு சுத்தம் செய்யத் தவறாதீர்கள். வாகனச் சக்கரங்கள் எச்சில், மலம் போன்ற பல அசுத்தங்களின் மேல் உருண்டோடுவதால் டயர்களால் செய்யப்பட்ட பாதணிகளை அணிவதும், பழைய டயர் பைகளில் உடைத்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதும் தேவையில்லாத பல கர்ம வினைப்படிவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளவும். இதனால் விளையும் தோஷங்கள் ஏராளம்.

இல்லங்கள் மேல் படியும் தோஷங்கள்

வாகனங்களைப் போல அவரவர் இல்லங்களின் மீது படியும் திருஷ்டி தோஷங்கள் நிறைய உண்டு. பொதுவாக, வீடுகளுக்கு சுண்ணாம்பு, பெயிண்ட் போன்ற பூச்சுகளைப் பூசி எப்போதும் வீடுகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம்.

எந்த அளவிற்கு உங்கள் இல்லங்களில் தூசி, ஒட்டடை, அழுக்கு, குப்பை கூளங்கள் போன்றவை சேராமல் இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்கள் இல்லங்கள் திருஷ்டி தோஷங்களால் பாதிக்கப்படாமல் இருக்கும்.

குப்பை கூளங்களே தோஷங்களை ஈர்க்கும் பெட்டகங்கள். கண்ணாடி போல் உங்கள் இல்லங்கள் தூய்மையாக இருந்தால் கண்ணாடியில் விழும் சூரிய ஒளியைப் போல் திருஷ்டி எண்ணங்கள் பிரதிபலிக்கப்பட்டு வந்த இடத்திற்கே திரும்பிச் சென்று விடும்.

வீட்டின் முன்புறம் பாதுகாப்புச் சுவர்களில் உள்ள கதவுகளை இரும்புக் கம்பிகளால் அமைத்து கருப்பு வண்ணங்களைப் பூசுவதால் திருஷ்டி தோஷங்கள் வீட்டின் உள்ளே புகாதவாறு பாதுகாத்துக் கொள்ளலாம்.

இரும்பு உலோகத்திற்கும் கருப்பு வண்ணத்திற்கும் திருஷ்டி சக்திகளை ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை உண்டு.

கோபுர தரிசனம் கடுமையான
திருஷ்டி விளைவுகளையும் களையும்

அவ்வப்போது வீட்டில் உள்ள அனைவரையும் வீட்டின் முன் வாசலில் அமர வைத்து ஒரு பூசனிக்காய் மேல் கற்பூரத்தை ஏற்றி வைத்து திருஷ்டி கழிப்பது நலம். இதனால் வீட்டில் வசிப்பவர்கள் மேல் படியும் தோஷங்களும் வீட்டின் மேல் படியும் கண் திருஷ்டி தோஷங்களும் விலகும் என்பது உண்மையே. ஆனால், இவ்வாறு திருஷ்டி கழித்த பூசனிக்காயை முச்சந்தியிலோ, நாற்சந்தியிலோ உடைத்து விடுவதை நடை முறையில் பலரும் பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு திருஷ்டி பூசனிக்காயை நடுரோட்டில் உடைத்தால் பரவெளியை அடைந்த திருஷ்டி தோஷங்கள் மீண்டும் யதா ஸ்தானத்தை சேர்ந்து விடும் என்பது நியதி, அதாவது எங்கிருந்து திருஷ்டி வந்ததோ அங்கேயே திரும்பிச் சென்று விடும், அதனால் திருஷ்டிகள் கழியாத நிலையே உருவாகும். மேலும் அவ்வாறு உடைந்த பூசனிக்காய் துண்டுகள் மீது ஏதாவது வாகனங்கள் ஏறி வழுக்கி விழுந்து, குழந்தைகளுக்கோ மக்களுக்கோ துன்பங்கள் ஏற்பட்டால் அந்த துன்பங்களும் வேதனைகளும் பூசனிக்காயை உடைத்தவர்களைச் சென்று சேரும் என்பது உண்மை. எனவே, இது குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொண்டு வந்த கதையாகி விடுமல்லவா?

இத்தகைய துன்பங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் திருஷ்டி கழித்த பூசனிக்காயை நடுரோட்டில் உடைக்காமல் முச்சந்தி அல்லது நாற்சந்தியில் வாகனங்களுக்கோ, மற்றவர்களுக்கோ இடையூறு இல்லாத வண்ணம் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு வந்து விட வேண்டும். அந்த பூசனிக்காய் வெயிலில் காய்ந்து உலர்ந்து விட்டாலோ அல்லது பூசனிக்காயை ஏதாவது ஆடோ, மாடோ தின்று விட்டால் திருஷ்டி தோஷங்கள் விரைவில் கழிந்து விடும் என்பது சித்தர்கள் கூறும் அறிவுரை.

வீட்டைக் கட்டிய பின் அதில் படியும் கண் திருஷ்டி தோஷங்களைக் களைவது ஒரு புறம் இருக்க வீட்டைக் கட்டும்போதே சில வாஸ்து லட்சண விதிகளைப் பின் பற்றுவதால் பெரும்பாலான தோஷங்கள் வீட்டை அண்டாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

பொதுவாக, நிலம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் சதுரம் அல்லது நீண்ட சதுரம் (செவ்வகம்) வடிவத்தில் வீடுகளைக் கட்டுவதால் பெரும்பாலான கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாதவாறு பாதுகாத்துக் கொள்ளலாம். நிறைய பணம் கொடுத்து இடத்தை வாங்கி விட்டோம் என்ன செய்வது? என்று நினைத்துக் கொண்டு கோணல்மானலாக நிலம் முழுவதும் கட்டிடத்தைக் கட்டி வேதனையை அனுபவிப்பதை விட சரியான வடிவத்தில் வீட்டைக் கட்டி எஞ்சிய இடத்தில் மணம் பரப்பும் மலர்ச்செடிகளை வளர்த்து, இறைவனை பூஜிப்பதால் நிம்மதியான, அமைதியான, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்.

தங்கத்திற்கும் தங்க ஆபரணங்களுக்கும் தூய்மையான எண்ணங்களையும் தெய்வீக மந்திர சக்திகளையும் ஈர்க்கும் சக்தி இயற்கையாகவே அமைந்துள்ளது. அதனால் ஆண்கள், தங்கக் கடுக்கன்கள், மணிக்கட்டில் கங்கன்கள் (ப்ரேஸ்லெட்) போன்ற ஆபரணங்களையும் பெண்கள் முடிந்த அளவு தங்க ஆபரணங்களைப் பயன்படுத்துவதும் கண் திருஷ்டி தோஷங்கள் நம்மை அண்டாது காத்துக் கொள்ளும் நடைமுறைப் பழக்கமாகும்.

அக்காலத்தில் இதைக் கருத்தில் கொண்டுதான் பெண்களுக்கு தலை முதல் கால் வரை தங்கம், வெள்ளி, மாணிக்கம், வைரம் போன்றவற்றால் அலங்கரிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இந்த பாரம்பரியம் இன்றும் பல குடும்பங்களில் நடைமுறையில் இருப்பது வரவேற்கத் தக்கதே.

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் அவரவர் எடை அளவு உள்ள தங்கத்தை ஒரு சேர தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது அவசியம் தரிசனம் செய்ய வேண்டும். அதாவது ஒருவருடைய எடை 80 கிலோ என்றால் அவர் ஒரு முறையாவது 80 கிலோ தங்கக் கட்டியை தன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் மனிதப் பிறவியில் முக்தி பெற முடியும். இந்த நியதியின் பின்னால் உள்ள ஆன்மிக ரகசியம் புரியாவிட்டாலும், இவ்வளவு அளவு உள்ள தங்கத்தை ஒரு சேரப் பார்த்தால் அது நிச்சயமாக ஒரு மனிதனைச் சேரும் திருஷ்டி தோஷங்களை நீக்கும் என்பதைப் புரிந்து கொண்டாலே போதும். இன்றைய உலகில் இது நடக்கக் கூடியதா என்று பலருக்கும் சந்தேகம் தோன்றலாம். உண்மையில் சாத்தியமல்லாத ஒரு நியதியை இறைவன் வகுத்து வைத்திருக்க மாட்டார் அல்லவா?

இவ்வாறு எடைக்கு எடை தங்க தரிசனப் பலன் தரும் இடங்கள் நிறைய உண்டு நமது புண்ணிய பூமியில். உதாரணமாக, திருஅண்ணாமலையில் கிரிவலப் பகுதியில் ஸ்ரீகாமாட்சி அம்மன் சந்நிதிக்கும் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைவதே ஸ்வர்ணாகர்ஷண முகட்டு தரிசனம் ஆகும். ரோஹிணி நட்சத்திரம் 60 நாழிகை நிரவும் நாட்களிலும், மூன்றாம் பிறையை தரிசனம் செய்த ஒரு நாழிகை நேரத்திற்குள்ளும் (24 நிமிடங்கள்) இந்த ஸ்வர்ணாகர்ஷண தரிசனத்தைப் பெறுவோர்களுக்கு அவர்கள் எடைக்கு எடை தங்கம் தரிசனம் செய்த பலனை திருஅண்ணாமலையார் அருள்வார்.

அது போல மேற்கூறிய நாட்களில் திருச்சி அருகே உள்ள ஐயர்மலை திருத்தலத்தில் கிரிவலப் பாதையில் ஹிருதய கமல தரிசனம், மலையடிப்பட்டியில் சிவ லிங்கத்தின் ஆவுடை எதிரே நின்று மலையைப் பார்த்தபடி பெறும் தரிசனம் போன்றவையும் தங்க தரிசனப் பலன்களைத் தரும் என்று சித்தர்கள் உறுதி அளிக்கின்றனர். பழனி போன்ற மலைத் தலங்களில் பெறும் தங்கத் தேர் தரிசனமும் இத்தகைய பலன்களை வர்ஷிக்கக் கூடியதே.

உண்மையில் முற்காலத்தில் பல திருத்தலங்களிலும் திருஷ்டி தோஷங்களைக் களைவதற்காக இறை விக்ரஹ மூர்த்திகளை சுத்தமான தங்கத்தில் வார்த்து பூஜித்து வழிபட்டனர். கலியுக மக்களின் பேராசை காரணமாக இத்தகைய ஸ்வர்ண விக்ரகங்கள் தற்போது மறைபொருளாகி விட்டன. ஆனால், நம்பிக்கையுடன் இத்தகைய இறை மூர்த்திகளை வழிபட விரும்புவோர்களுக்கு அம்மூர்த்திகளை கண்ணால் பார்த்து வழிபட முடியாவிட்டாலும் தீர்த்த யாத்திரைகளின் போது இத்தலங்களில் மறை பொருளாக உள்ள தங்க மூர்த்திகளின் அனுகிரக சக்திகளையும் அத்தலங்களில் நிரவியுள்ள திருஷ்டிக் காப்பு சக்திகளையும் பெற முடியும்.

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

அதாவது, அழுக்காறு என்னும் பொறாமைத் தீ அறத்தைப் பாழக்கி விடும் என்று வள்ளுவப் பெருந்தகை எச்சரிக்கிறார்.

நவதுவார வழிபாடுகள்

மனித உடல் ஒன்பது சரீரங்களின் தொகுதியாகும். கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்கள் மனித உடலின் தூல ரூபமாகும். எனவே, ஒன்பது கலசங்களுக்குக் குறையாமல் உள்ள கோயில் கோபுரங்களை தினந்தோறும் குறைந்தது மூன்று நிமிடங்கள் கண்ணார தரிசித்து வழிபடுதலால் மனித சூட்சும சரீரங்கள் தூய்மை பெறுவதுடன் உடலில் உள்ள நவதுவாரங்களும் சீர் பெறும். அதனால் திருஷ்டி துன்பங்களின் தீய விளைவுகள் தவிர்க்கப்படும்.

திருவானைக் கோவில் போன்ற திருத்தலங்களில் மூல மூர்த்தியை நவசாளரங்கள் வழியாக தரிசனம் செய்து வழிபடுவதால் கண் திருஷ்டிகள் நம்மை எளிதில் தாக்காத வகையில் கவச சக்திகளைப் பெருக்கிக் கொள்ள முடியும். ஒன்பது சாளரங்களுக்கு மேல் உள்ள சிறுகமணி சிவத்தலம் போன்ற திருக்கோயில்களிலும் இத்தகைய வழிபாடுகளை மேற்கொண்டு பயனடையலாம்.

உலகிலேயே மிகப் பெரிய சுயம்பு பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையார் அருளும் மலைக் கோட்டையை ஒன்பது முறைக்குக் குறையாமல் கிரிவலம் வந்து வணங்குவதால் கண் திருஷ்டி துன்பங்கள் விலகும்.

ராமபிரான் கயிலை ஈசனை வழிபடுவதற்காக திருக்கயிலையிலிருந்து சிவலிங்க மூர்த்தியைப் பெற்று வருமாறு ஆஞ்சநேயரை அனுப்பினார் அல்லவா? அப்போது ஆஞ்சநேய மூர்த்தி கயிலையில் எம்பெருமானை லிங்க வடிவில் பூஜித்து அதன் பின்னரே ராமேஸ்வரத்திற்கு சிவலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தி கயிலை ஈசனை வழிபடும் சித்திரத்தை அல்லது உருவப் படத்தை அல்லது ராமேஸ்வரத்தில் உள்ள விஸ்வநாத லிங்க மூர்த்தியை தொடர்ந்து வழிபடுவதால் கண் திருஷ்டிக் கோளாறுகள் நம்மை அண்டாது.

பொதுவாக, ஜாதக ரீதியாக செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சமாக விளங்குபவர்கள் கண் திருஷ்டி துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை.

முருக பக்தர்களும், கௌமார உபாசகர்களையும் திருஷ்டித் துன்பங்கள் அண்டாது. எனவே குமரன் அருளும் மலைத் தலங்கள் யாவும் கண் திருஷ்டியை நீக்கும் தலங்களே. அதிலும் சிறப்பாக திருச்செங்கோடு, செங்கோட்டை அருகே திருமலை, கோயம்புத்தூர் அருகே அனுவாவி மலை போன்ற குமரத் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த கண் திருஷ்டிக் காப்புத் தலங்களாக சித்தர்களால் போற்றப்படுகின்றன.

திருமண வைபவங்களில் நவ தானியங்களை மண் சட்டிகளில் வளர்த்து முளைப் பாலிகைகளை வழிபடும் நிகழ்ச்சி ஒன்று உண்டு. புது மணத் தம்பதிகள் மேல் விரவும் கண் திருஷ்டி தோஷங்களைக் களைவதற்காகவும், தம்பதிகள் நற்சந்ததிகளைப் பெற்று வாழவும் இந்த முளைப் பாலிகை வழிபாடு ஒரு முக்கிய திருமண வைபவமாக நிறைவேற்றப்படுகிறது.

இயற்கையாகவே, முளைப் பாலிகை வழிபாடு திருஷ்டி தோஷங்களை நீக்கும் ஆதலால் மண் சட்டிகளில் முளைப் பாலிகைகளை வளர்த்து திருச்சி சமயபுரம் அருகே ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்திலும், கண்ணாயிரம், செந்தாமரைக் கண்ணன், கண்ணாத்தாள் போன்று கண் பெயருடைய இறைவன், இறைவிகள் அருளும் தலங்களில் சமர்ப்பித்து வழிபாடுகள் நிறைவேற்றுவதால் கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாது பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த முளைப் பாலிகைகளை கன்றுடன் கூடிய பசுக்களுக்கு வழங்குவதும் ஓர் அற்புத வழிபாடாகும்.

குழந்தைகள் மேல் படியும் திருஷ்டி தோஷங்கள்
பெரியவர்களை விட குழந்தைகளைத் திருஷ்டி தோஷங்கள் நிறையவே பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு.

குழந்தைகள் வீட்டில் இருக்கும்போதும் வெளி இடங்களுக்கு அவர்களைக் கூட்டிச் செல்லும்போதும் கட்டாயம் குழந்தைகள் கன்னத்தில் ஒரு திருஷ்டி பொட்டு வைத்திருக்க வேண்டும். ஒரு நிமிடம் கூட குழந்தைகள் திருஷ்டி பொட்டு இல்லாமல் இருக்கக் கூடாது. இது பெற்றோர்களின் தலையாய கடமை.

கலியுக நியதியாக குழந்தைகள் மூன்று அல்லது ஐந்து வயது வரை தெய்வீகத் தன்மையுடன் விளங்குவதால் அவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளும் தங்கள் பெற்றோர்களுக்கு வரக் கூடிய துன்பங்களும், ஆபத்துகளும் முன் கூட்டியே தெரிய வரும். எனவே, முடிந்தவரை அக்குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுக்கு வரக் கூடிய துன்பங்களைத் தாங்களே எடுத்து அனுபவிப்பதால் பெரும்பாலான குழந்தைகள் அடிக்கடி நோய் வாய்ப்படுகின்றன. இதை அறிந்தால்தான் குழந்தைகளை அடிப்பதோ, கடுஞ் சொற்களால் நிந்திப்பதோ எவ்வளவு தவறான செயல் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு இடுவதற்கு உகந்த திருஷ்டிக் கண் மையை பெற்றோர்கள் தாங்களாகவே வீட்டில் தயாரித்துக் கொள்தல் நலம்.

இந்த திருஷ்டிக் கண் மையை குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் பெரியவர்களின் திருஷ்டி நிவாரணத்திற்காகவும், கண் பாதுகாப்பிற்காகவும், தெய்வ மூர்த்திகளின் அலங்காரத்திற்காகவும் பயன்படுத்தி பலன் பெறலாம்.

திருஷ்டி கண் மை
கரிசலாங் கண்ணி இலைகளை சிறிது நீர் விட்டு அம்மியில் வைத்து நன்றாக அரைக்க வேண்டும். நவீன மிக்சி, கிரைண்டர்களைத் தவிர்க்கவும். அவ்வாறு அரைத்த விழுதை ஒரு வெள்ளைத் துணியில் இட்டு சாறு பிழிய வேண்டும். அந்த சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மண் சட்டியில் அல்லது வாணலியில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

அப்போது சடசட வென்று எண்ணெய் பொரியும். நீர் முழுவதுமாக ஆவியாகி வெளியேறி விட்டால் எண்ணெயிலிருந்து சப்தம் எழாது. அப்போது எண்ணெயை இறக்கி வைத்து ஆற வைக்க வேண்டும். இதுவே கரிசலாங் கண்ணி தைலம் தயாரிக்கும் எளிய முறையாகும்.

இவ்வாறு தாங்களாக தயாரித்த கரிசலாங்க கண்ணி தைலத்தால் பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், ஆண்கள் புதன், சனிக் கிழமைகளிலும் தலைக்குத் தேய்த்து எண்ணெய்க் குளியல் நிறைவேற்றி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும், தீர்க்கமான கண் பார்வை கிட்டும், கண் கோளாறுகள் அறவே நீங்கும். தோல் நோய்கள் நெருங்காது, இளநரையை தவிர்க்கக் கூடிய எளிய வைத்திய முறை இது. மலச்சிக்கல் ஏற்படாது. ஆயுள் வளரும்.

ஏழரை ஆண்டு சனி, ஜன்ம சனி, அஷ்டம சனி போன்ற சனீஸ்வர பகவான் பீடிப்பால் துன்பம் அனுபவிப்போர் சனீஸ்வர பகவான் தனிச் சன்னதி கொண்டு விளங்கும் திருத்தலங்களில் நல்லெண்ணெயுடன் கரிசலாங்கண்ணி தைலத்தை கலந்து எட்டு தீபங்கள் ஏற்றி வழிபடுதலால் நவகிரகங்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்து ஓரளவு நிவாரணம் கிட்டும். அகால மரணங்களைத் தவிர்க்கக் கூடிய அற்புத வழிபாடு இது.

சந்ததி இன்றி தவிப்போரும், பெண் வாரிசுகளை மட்டும் பெற்று நிராதரவாய் வருந்துவோரும், முதுமையில் துணை அற்றோரும் சனி ஹோரை நேரத்தில் அகல் விளக்கில் கரிசலாங்கண்ணி தீபம் ஏற்றி அஸ்தமன சூரிய மூர்த்தி விளங்கும் ஆலயங்களில் வழிபடுதலால் முதுமை சுமையாய் மாறாமல் உரிய பாதுகாப்பை இறைவன் அளிப்பார்.

இந்த தைலத்தால் இறைவனுக்கு விளக்கேற்றி வைக்க வேண்டும். ஒரு கொட்டாங்குச்சியில் (தேங்காய் மூடி) உட்புறம் சுத்தமான பசு வெண்ணெயைத் தடவி அந்த விளக்கு தீபத்தின் மேல் காட்ட வேண்டும். அப்போது தீபத்திலிருந்து எழும் புகை வெண்ணெயின் மேல் படிந்து சிறிது நேரத்தில் வெண்ணெய் கறுத்து விடும்.

இந்த கரிய குழம்பை ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு மையிடுவதற்காக, கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளின் மேல் படியும் அனைத்து விதமான திருஷ்டி தோஷங்களையும் களையக் கூடிய சக்தி வாய்ந்த காப்பாகும்.

இறைவனுக்கு மை காப்பு
மேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட கண் மை கொண்டு பெருமாள், அம்பாள் போன்ற தெய்வ மூர்த்திகளை அலங்கரித்து வழிபடுதலால் குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களையும் கண் திருஷ்டி தோஷங்களிலிருந்து விடுவிக்கும் அற்புத வழிபாட்டு முறையாக அமைகிறது. சிறப்பாக பிரதோஷ காலங்களில் இறை மூர்த்திகளுக்கும், தேய்பிறை அஷ்டமி தினங்களிலும், நவராத்திரி பூஜைகளிலும் இத்தகைய கண் மை காப்பு அற்புத பலன்களை வாரி வழங்கும்.

சுமங்கலிகள் தொடர்ந்து இத்தகைய கண் மையை இட்டு வந்தால் அவர்களின் சுமங்கலித்துவம் பெருகுவதுடன் கணவன் மனைவி அன்யோன்ய உறவு வளர்ந்து குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். நவராத்திரியில் சுமங்கலிகள் வழங்கும் மங்கலப் பொருட்கள் தானத்தில் அவசியம் மேற்கூறிய கண் மையை சிறிதளவாவது அளித்தல் நலம்.

32 அறங்களில் ஒன்றான கண் மை தானம் கண் திருஷ்டியைக் களைவதோடு மட்டுமல்லாமல் காட்ராக்ட், புரை விழுதல், கண்களில் நீர் வடிதல், மாலைக் கண் போன்ற கண் நோய்களையும் தடுக்கும் வல்லமை உடையது.

பெரியவர்கள் தங்களுக்கும், இறை மூர்த்திகளுக்கும் உபயோகிக்கும் கண் மைகளில் பசு வெண்ணெய்க்குப் பதிலாக தாங்கள் கையால் அரைத்த சந்தனத்தையும் பயன்படுத்தலாம்.
உடல் சுத்தி வழிபாட்டு முறைகள்

”உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”, என்றவாறு முறையான உடல் சுத்தி வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் திருஷ்டி தோஷங்கள் நம்மைத் தீண்டாதவாறு ஓரளவு பாதுகாத்துக் கொள்ளலாம்.

தம்பதிகள் மேல் திருஷ்டி
மனித வாழ்விற்கு இன்றியமையாத திருமண வைபவங்களில் புது மணத் தம்பதிகள் மேல் படியும் திருஷ்டி தோஷங்கள் ஏராளமானவை. இத்தகைய தோஷங்களைக் களைவதற்காகவே பண்டை காலத்தில் பலவிதமான ஹோம வழிபாடுகளையும், சடங்குகள் சம்பிரதாயங்களையும் வைத்தார்கள். இவை அனைத்துமே அர்த்தமுள்ளவை, தம்பதிகள் நீண்ட காலம் அமைதியுடனும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து சமுதாயத்தை அமைதிப் பூங்காவாக வளப்படுத்தும் தன்மை கொண்டவை.

திருமணத்தை மூன்று நாள், ஐந்து நாள், ஏழு நாள் வைபவமாக கொண்டாடுவது வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்தின் அதாவது முருகன், பெருமாள், சிவ பெருமான் இவர்களின் திருமண வைபவங்களின் நிகழ்த்தி அன்னதானம், மங்கலப் பொருட்களைத் தானமாக அளித்து வந்தார்கள். இது எத்தகைய திருஷ்டி தோஷங்களையும் களையும் வல்லமை படைத்தது.

மேலும் திருமணத்திற்குப் பின் நிகழும் சாந்தி முகூர்த்த வைபவத்தை திருமண நாள் அன்றே நிகழ்த்தாது பல நாட்கள் அல்லது மாதங்களுக்குப் பின் ஒரு நல்ல முகூர்த்த நாளைக் குறித்து நிகழ்த்தினர். இதனால் அத்தம்பதிகளின் மேல் எந்தவித எதிர் வினை எண்ணங்களும், துராசை தாக்குதல்களும் ஏற்படாமல் புது மணத் தம்பதிகள் காப்பாற்றப்பட்டனர்.

காசி யாத்திரை என்பது தற்காலத்தில் வயதான பின் நிறைவேற்ற வேண்டிய திருத்தல யாத்திரையாக கருதப்படுகிறது. உண்மையில் மணமான தம்பதிகள் திருமணம் நிகழ்ந்தவுடன் காசி, கயா, அயோத்தி போன்ற திருத்தலங்களுக்கு யாத்திரையாகச் சென்று அபரிமிதமான புண்ணிய சக்தியைச் சேர்த்துக் கொண்டு அதன் பின்னர் இல்லற வாழ்வில் ஈடுபட்டால்தான் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உடல், மன ஆரோக்கியத்துடன் விளங்கி குடும்பத்திற்கு ஒளி விளக்காய்த் திகழ்வார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் சாந்தி முகூர்த்த வைபவத்தை திருமணம் நிகழ்ந்த அன்றே நிறைவேற்றுவது நடைமுறைக்கு வந்து விட்டாலும் தம்பதியர் திருமணம் நிகழ்ந்த ஒரு மண்டல காலத்திற்குள்ளாவது காசி, கயா, அயோத்தி போன்ற திருத்தலங்களை அவசியம் தரிசித்தல் நலம். காசி திருத்தலத்தில் உள்ள 64 தீர்த்தக் கட்டங்களிலும் நீராடி காசி விஸ்வநாதரைத் தம்பதிகள் தரிசித்தலால் அவர்கள் மேல் படியும் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது உண்மை.

காசி, கயா போன்ற திருத்தலங்களை வழிபடும் அளவுக்கு தம்பதிகளுக்கு பொருள் வசதி, நேர அவகாசம் கிட்டாவிட்டாலும் தென்னிந்தியாவின் கயா திருத்தலமாகத் திகழும் திருச்சி அருகே பூவாளூர் திருத்தலம், மாந்துறை, திருவிடைமருதூர், திருச்சி அருகே உத்தமர் கோயில் போன்ற திருத்தலங்களையாவது அவசியம் தம்பதிகள் தரிசிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். இதனால் தம்பதிகள் திருஷ்டி தோஷங்கள் தங்களைத் தாக்காதவாறு பாதுகாத்துக் கொள்வதுடன் உத்தமமான குழந்தைச் செல்வங்களைப் பெறத் தேவையான தெய்வீக புண்ணிய சக்திகளை பெற்றுக் கொள்ளவும் இவ்வழிபாடுகள் பெரிதும் துணை புரியும்.

பெரும்பாலான சிவத்தலங்களில் ஸ்ரீவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாத தெய்வ மூர்த்திகள் எழுந்தருளி இருப்பார்கள். புது மணத்தம்பதிகள் திருமணத்திற்கு முன்னும் பின்னும் வாரம் ஒரு முறையாவது இம்மூர்த்திகளைத் தரிசித்து தங்கள் கையால் தொடுத்த மணமுள்ள மலர் மாலைகளைச் சூட்டி வழிபடுதலால் இல்லற வாழ்வு இன்பமூட்டும்.

திருமணத்திற்கு முன்னால் மாப்பிள்ளையையும் பெண்ணையும் ஒன்றாக அமர வைத்து வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதால் பலவித தோஷங்கள் மணமக்களைச் சாரும் என்று கூறினோம் அல்லவா? அதே போல திருமணத்திற்குப் பின்னும் கூட பொது இடங்களில் தம்பதிகள் தங்கள் அன்யோன்யமான உறவை வெளிப்படுத்துவதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மனிதனுக்கும் மிருகங்களுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. அதில் முக்கியமானது சிரிப்பு. மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்தவன். மற்றவர்களை சிரிக்க வைக்கும் சக்தி உடையவன். மிருகங்களால் சிரிக்க முடியாவிட்டாலும் மற்றவர்களை சிரிக்க வைக்கக் கூடிய சக்தி உடையவை. இரண்டாவதாக, மனிதர்களைப் பொறுத்த வரையில் காமம் என்பது மறைபொருளாக இருக்க வேண்டியது அவசியம். இந்த மானிட தர்மம் அவமதிக்கப்படும்போது அதனால் மனிதர்கள் பலவித திருஷ்டி தோஷங்களுக்கும், சாபங்களுக்கும் ஆளாகிறார்கள்.

பல குடும்பங்களில் ஏற்படும் விவாகரத்து, சண்டை சச்சரவுகள், அமைதியின்மை சந்ததியின்மை, உடல் மன நோய்கள் போன்றவற்றிற்கு தம்பதிகளின் அஜாக்கிரதையே காரணம் என்பதை ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் அவர்களே இதை எளிதில் உணர முடியும். எனவே தம்பதிகள் பொது இடங்களில் மற்றவர்களின் தேவையில்லாத பார்வை தங்கள்மேல் படியாத அளவிற்கு தங்கள் நடிவடிக்கைகளை பொறுப்புடன் வைத்துக் கொள்வதால் பலவிதமான திருஷ்டி தோஷங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

நமது புண்ணிய பாரதத்தில் ஒவ்வொரு விதமான அனுகிரக சக்திக்கு உரிய திருத்தலங்கள் இருப்பது போல கண் திருஷ்டியைக் களைவதற்கும் உரித்தான அற்புதமான தெய்வீகத் தலங்கள் நிறையவே உள்ளன. அவற்றில் இக்கலியுகத்திற்கு உரித்த சித்த தலமாக நீங்கள் தரிசிக்க வேண்டியது திருச்சி அருகே உள்ள சங்கர நாராயண சக்திகள் பல்கிப் பெருகும் மலையடிப்பட்டி திருத்தலமாகும்.

Scroll to Top