திருஅண்ணாமலை – நட்டபாடை
97
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே.
பொ-ரை: உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.
கு-ரை: உமையாளொடும் உடனாகிய ஒருவன் என்றது உமாதேவியை இடப்பாகத்திருத்தி இருக்கிற உடனாய நிலையை உணர்த்தியது. பெண்ணாகிய பெருமான் என்றது உமையம்மையோடு ஒன்றாகிய நிலையை உணர்த்தியது. மழலை முழவு – சொற்றூய்மையில்லாத முழவொலி. சொல் – மத்தளத்தின் ஜதி ஒலி.
98
தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி,
தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற,
ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே.
பொ-ரை: கிளைகளை வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள் விடுத்த அக்கொம்புகள் வேகமாகத் தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப் பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச் சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக் கருதி மரநிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை இறைவனின், அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல் அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை இலராவர்.
கு-ரை: கடுவன் – ஆண்குரங்கு. விடுகொம்பு – மாம்பழத்தைப் பறித்துவிட்ட மாங்கொம்பு. தூ மா மழை – தூய்மையான கரிய மேகம். துறுகல் – பாறை. ஆமா பிணை – காட்டுப் பசு; பெண்பசுவோடு, ஆமாப் பிணை என்பது எதுகைநோக்கி ஆமாம்பிணையாயிற்று, பூமாங்கழல் – அழகிய மாவிலையின் வடிவந்தோன்றப் புனையப்பட்ட காலணி. மாண் கழலுமாம். நினைக்க முத்தி தரும் தலம் ஆதலின் நினைவார் வினையிலரே என்றார்.
99
பீலிமயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலி மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல்,
ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே.
பொ-ரை: தோகைகளோடு கூடிய ஆண்மயில்கள் பெண் மயில்களோடு உறையும் பொழில் சூழ்ந்ததும், மூங்கில்கள் சூல்கொண்டு உதிர்க்கும் முத்துக்கள் நிறைந்து சொரிவதும், விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த்துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை, இறைவனின், காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ். (தொழுவார் புகழ் பெறுவர் என்பதாம்)
கு-ரை: பீலிம்மயில், ஆலிம்மழை, சூலிம்மணி என்பன விரித்தல் விகாரம். சூலி மணி – சூலிருந்து பெற்ற முத்துக்கள். ஆலி – நீர்த்துளி. திருவடியால் எட்டியுதைத்தார் ஆகலின் காலன் வலிதொலை சேவடி என்றார். புகழ் தொழுவார் எனக்கூட்டுக.
100
உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா, உலகு எல்லாம்
எதிரும் பலி உணவு ஆகவும், எருது ஏறுவது அல்லால்,
முதிரும் சடை இளவெண் பிறை முடிமேல் கொள, அடி மேல்
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே.
பொ-ரை: உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மயிர் நீங்கிய பிரமனது வெண்மையான தலையோட்டை உண்கலனாக் கொண்டு உலகெலாம் திரிந்து ஏற்கும் பலியை உணவாகக் கொள்ளுதற்கு எருது ஏறி வருவதோடு முதிர்ந்த சடைமுடியின் மீது வெண்பிறையைச் சூடித் திருவடிகளில் அதிரும் வீரக் கழல்களோடு விளங்கும் சிவபிரானுக்குரிய இடம் திருவண்ணாமலையாகும்.
கு-ரை: உதிரும் மயிர் இடு வெண்டலை – சதை வற்றிப் போனதால் உதிர்கின்ற மயிரையுடைய காட்டில் இடப்பெற்ற பிரம கபாலம். எதிரும் பலி – வந்து இடப்பெறும் பிச்சை. பிச்சை ஏற்பார் யாசியாது தெருவிற்செல்ல மகளிர் தாமே வந்து இடுதல் மரபாதலின் அதனை விளக்க எதிரும்பலி என்றார். முதிருஞ்சடை இள வெண்பிறை: முரண்.
101
மரவம், சிலை, தரளம், மிகு மணி, உந்து வெள் அருவி
அரவம் செய, முரவம் படும் அண்ணாமலை அண்ணல்
உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார்,
குரவம் கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே?
பொ-ரை: வெண் கடம்பமரம், சிலை, முத்து, மிக்க மணிகள் ஆகியவற்றை உந்திவரும் வெண்மையான அருவிகள் பறைபோல ஆரவாரம் செய்யும் திருவண்ணாமலையில் விளங்கும் அண்ணலாகிய சிவபிரான், சடையில் பாம்பும் கங்கையும் உடனாயிருந்து உலவுவதை ஓராமல், குராமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமையம்மையாரைத் தழுவுதல் நன்றோ?
கு-ரை: சிலை – ஒருவகை மரம். தரளம் – முத்து. மணி – இரத்தினம். அரவம் – ஒலி, உரவம் – உரகம் என்பதன் திரிபு; பாம்பு. உரகமும், கங்கையும் சடையில் உலாவுதலையும் ஓராமல் உமையாளைத் தழுவுதல் குணமாகுமா என்று வினவுகிறார். புணர்ச்சிக்குத் தனிமை இனியதாய், நாணங்காப்பாகவும். இவர் பாம்பும், கங்கையும் சடைமீது உலாவப் புல்லல் நன்றன்று என்று நகைபடச் சொல்லிற்றாம்.
102
பெருகும் புனல் அண்ணாமலை, பிறை சேர், கடல் நஞ்சைப்
பருகும் தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக்
கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே.
பொ-ரை: பெருகிவரும் அருவி நீரை உடைய திருவண்ணாமலையில் பிறைமதி தோன்றிய பாற்கடலிடைத் தோன்றிய நஞ்சை உட்கொள்ளும் அளவிற்குத் துணிபுடையவரும், அந் நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவரும், திருவெண்ணீற்றை அணிந்தவரும், மணம் கமழும் சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தி உருகும் மனம் உடையவர்கட்கு மிக்க நோய்கள் எவையும் வாரா.
கு-ரை: பிறை சேர் கடல் – ஒருகலைப்பிறை உண்டாதற்கு இடமாகிய பாற்கடல். பருகுந்தனை துணிவார் – உட்கொள்ளும் அளவிற்குத் துணிவுடையவர்.
பொடி – விபூதி. கருகும் மிடறு – கருமை ஒருகாலைக்கு ஒருகால் மிக்குத்தோன்றும் கழுத்து.
103
கரி காலன, குடர் கொள்வன, கழுது ஆடிய காட்டில்
நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள,
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இனவண்டு இசை முரல,
அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.
பொ-ரை: கரிந்த கால்களை உடையனவும், குடரைப் பிடுங்கி உண்பனவும் ஆகிய பேய்கள் ஆடும் இடுகாட்டில், நரிகள் உருட்டி விளையாடும் சிரிக்கும் வெண்டலை ஓடுகள் உதைக்கப்பட்டு உருள, கையில் எரி ஏந்தி ஆடும் சிவபெருமான், வண்டுக் கூட்டங்கள் இசைபாடச் செவ்வரி பரந்த கண்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளிய இடம், திருவண்ணாமலை.
கு-ரை: கரிகாலன – எரிபிணத்தை நுகர எரியில் நிற்பதால் கரிந்துபோன கால்களையுடையன. கழுது – பேய்.
நரியாடிய – நரிகள் உருட்டி விளையாடிய. எரியாடிய – இடுகாட்டில் தீப்பிழம்பில் நின்றாடிய. அரி – செவ்வரி.
104
ஒளிறூ புலி அதள் ஆடையன், உமை அஞ்சுதல் பொருட்டால்,
பிளிறூ குரல் மதவாரணம் வதனம் பிடித்து உரித்து,
வெளிறூபட விளையாடிய விகிர்தன்; இராவணனை
அளறூபட அடர்த்தான்; இடம் அண்ணாமலை அதுவே.
பொ-ரை: ஒளி செய்யும் புலித்தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.
கு-ரை: ஒளிறூபுலியதள் – ஒளிசெய்யும் புலித்தோல், பிளிறூ வெளிறூ அளறூ என்ப சந்தம் நோக்கி நீண்டன. மதவாரணம் – மதம் பிடித்த யானை. வதனம் பிடித்து உரித்து – முகத்தில் திருவடியையூன்றிப் பிடித்துக்கொண்டு உரித்து, வெளிறுபட விளையாடிய – வெள்ளையாக விளையாடிய, வயிரமில்லாத மரத்தை வெளிறு என்றல்போல, கபடமின்றி விளையாடுதலை இங்ஙனம் கூறி இன்புற்றார். அளறுபட – மலைக்கீழகப்பட்டு நசுங்கிச் சேறாக. அடர்த்தான் – நெருக்கியவன்.
105
விளவு ஆர் கனி பட நூறிய கடல்வண்ணனும், வேதக்
கிளர் தாமரை மலர்மேல் உறை கேடு இல் புகழோனும்,
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல்
தளராமுலை, முறுவல், உமை தலைவன் அடி சரணே!
பொ-ரை: விள மரத்தின் கனியை உகுப்பது போல அம்மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும்குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு.
கு-ரை: விளவு ஆர் கனிபட நூறிய கடல்வண்ணன் – விளாமரமாய் நின்ற கபித்தன் அழியக்கொன்ற கண்ணபிரான் கேடில் புகழோன் – அழியாப் புகழ் பெற்ற பிரமன். அளவா வண்ணம் – தம்முட் பகைகொண்டு கலவாதபடி. இது இத்தலத்தில் பிரம விஷ்ணுக்கள் செருக்கிச்செய்த சண்டையைத் தீர்க்கப் பெருமான் தீப்பிழம்பாகிய அண்ணாமலையாய் நின்ற தலவரலாற்றுக் குறிப்பை விளக்குவது. உண்ணத் தளர்தல் நகிற்கு இயல்பாதலின் உண்ணாமுலை என்பார் தளராமுலை என்றார். தனது நகில் கொண்டும் இறைவனைத் தன்வசமாக்கியவள் என்பது குறிப்பிக்கப் பெற்றது.
106
வேர் வந்து உற, மாசு ஊர்தர, வெயில் நின்று உழல்வாரும்,
மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும்,
ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல்,
கூர் வெண் மழுப்படையான், நல கழல் சேர்வது குணமே!
பொ-ரை: உடலில் வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில் நின்று உழல்வதைத் தவமாகக் கொள்வோராகிய சமணரும், மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து வருபவர் ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர்கள் ஆதலின், அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர். திருவண்ணாமலையில் உறையும் தலைவனும் கூரிய வெண்மையான மழுவாயுதத்தைக் கைக் கொண்டவனும் ஆகிய சிவபெருமானது நன்மைதரும் திருவடிகளை அடைதலே மேலானகுணம்.
கு-ரை: வேர் – வியர்வை. மாசு – அழுக்கு. சீவரம் – மஞ்சள் நிற ஆடை. மார்பு புலப்படாதவண்ணம் மறைத்தல் சமணத்துறவியர் இயல்பு. ஆரம்பர் – தொடக்க நிலையிலுள்ளார்; ஆரம்பவாதிகள் போதிய பயிற்சியில்லார் என்பதாம். ஆடம்பரமில்லாதவர்கள் என்பதுமாம்.
107
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரிசாரல்,
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை,
கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே.
பொ-ரை: வெம்மை மிக்க கதிரவன் ஒளிபுகாதவாறு தடுக்கும் விரிந்த சாரலை உடையதும், அம்பைச் செலுத்தி முப்புரங்களை அழித்த சிவபிரான் எழுந்தருளியதுமான அண்ணாமலையைக் கொம்பு என்னும் வாத்தியங்களின் ஒலியைக் கேட்டு குயில்கள் எதிர் ஒலிக்கும் குளிர்ந்த காழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதவல்லவர்களின் திருவடிகளை வணங்குதல் சிறந்த தவமாம்.
கு-ரை: வெம்பு உந்திய – வெப்பமிக்க, மலையே இறைவன் திருமேனியாதலின் அவனைத் தீண்டிப் பழியேற்க விருப்பின்றி கதிரோன் விலகிச் சென்றான் என்பதாம். கொம்பு ஒருவகை வாத்திய விசேடம். கொம்பு ஊதிய இனிய ஓசையைக் குயில் ஒலிக்கும் காழி.
குருவருள்: இப்பாடலின் இறுதிவரி “ஞானசம்பந்தன தமிழ் வல்லவர் அடிபேணுதல் தவமே” என்கின்றது. இத்திருப்பதிகத்தை வல்லவாறு ஓதுவார்களின் அடியை விரும்பிப் போற்றுதலே ஒருவருக்குத் தவமாக அமையும் என்கிறது. இவ்வாறே திருவலஞ்சுழி பற்றிய “விண்டெலாம” என்ற பதிகத்தின் திருக்கடைக்காப்பாகிய “வீடும் ஞானமும் வேண்டுதிரேல” என்ற பாடலும், “நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை பாடும் ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே” என்ற வரிகளால் இப்பதிகத்தை ஓதுவார்களின் அடிசேர்ந்து வாழ்தலே உண்மை ஞானம் கிடைத்தற்கு ஏதுவாம் என்கின்றது. இவ்விரு பாடல்களும் காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார் அடிபோற்றின் தவமும் அதன் வழி ஞானமும் உண்டாம் என்பதை வற்புறுத்துவது காணலாம். இத்திருப்பதிகத்தின் பத்துப் பாடல்கள், பல்வகைப் பெருமைகளையும் உடைய சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம் திருவீழிமிழலை என்கின்றது.