You cannot copy content of this page

012 திருமுதுகுன்றம் – நட்டபாடை

திருமுதுகுன்றம் – நட்டபாடை

119

மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட
தொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம்
கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டு
முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே.


பொ-ரை: மந்தர மலையை மத்தாக நட்டுக் கடலைக் கடைந்தபோது, கொடிது எனக் கூறப்பெறும் ஆலகால விடம் தோன்ற, அதனை உண்டவனும், பூங்கொத்துக்கள் சூடிய அழகிய நீண்ட சடை முடியினனும், எரி சுடர் வண்ணனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய இடம்; மலர்க் கொத்துக்கள் குளிர்ந்த சந்தனம் அகில் ஒளிதரும் குங்கும மரம் ஆகியவற்றை அலைக்கரங்களால் ஏந்திக் கொண்டு வந்து மணிமுத்தாறு அடிவீழ்ந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

கு-ரை : வரை மத்தா நிறுவி – மந்தரமலையை மத்தாக நிறுத்தி. அ விடம் என்றது அத்தகைய ஆலகாலவிடம் எனச் சுட்டு, பெருமை யுணர்த்தி நின்றது.

தொத்து – கொத்து. மணிமுத்தாறு மலர், சந்தனம், குங்குமப்பூ முதலிய காணிக்கைகளைக் கொண்டுவந்து சமர்ப்பித்து அடிவணங்குகிறது என்பதாம்.


120

தழை ஆர் வடவிடவீதனில் தவமே புரி சைவன்,
இழை ஆர் இடை மடவாளொடும், இனிதா உறைவு இடம் ஆம்
மழை வான் இடை முழவ, எழில் வளை வாள் உகிர், எரி கண்,
முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே.


பொ-ரை: தழைகளுடன் கூடிய ஆலமர நீழலில் யோகியாய் வீற்றிருந்து தவம் செய்யும் சிவபிரான், போகியாய் நூலிழை போன்ற இடையினை உடைய உமையம்மையோடு மகிழ்ந்துறையும் இடம், மேகங்கள் வானின்கண் இடித்தலைக் கேட்டு யானையின் பிளிறல் எனக்கருதி அழகிதாய் வளைந்த ஒளி பொருந்தி விளங்கும் நகங்களையும் எரிபோலும் கண்களையும் உடையனவாய்க் குகைகளில் வாழும் சிங்கங்கள் கர்ச்சிக்கும் உயர்ந்த திருமுதுகுன்றமாகும். அதனை வழிபடச் செல்வோம்.

கு-ரை: வடவிய வீதனில் – ஆலமரத்தினது அகன்ற நீழலில். பதுமாசனத்திலிருந்து தவஞ் செய்கின்ற சைவன் என்றது அநாதி சைவனாகிய சிவனை. இழையார் இடை – நூலிழையை ஒத்த இடை. மழைவானிடைமுழவ – மேகம் வானத்தில் பிளிற. முழவம் பெயரடியாக முழவ என்ற வினையெச்சம் பிறந்தது. ஒலிக்க என்பது பொருளாம். எழில் வளை வாள் உகிர் – அழகிய வளைந்த ஒளி பொருந்திய நகத்தையும்.

எரி கண் – காந்துகின்ற கண்ணையும். முழை – மலைக்குகை. அரி – சிங்கம். சிங்கம் உறுமுதல் மழை ஒலியை யானையின் பிளிறல் என்று எண்ணி. மேருமலையின் வடபால் தனித்து யோகத்திருந்த இறைவன் முதுகுன்றில் உமையாளொடு போகியாக உறைகின்றான் என்றது.


121

விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாசவேதனை, ஒண்
தளை ஆயின தவிர, அருள் தலைவனது சார்பு ஆம்
களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடு
முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே.


பொ-ரை: உயிர்களுடன் அநாதியாகவே வருகின்ற வேதனைகளைத் தரும் பாசங்களாகிய ஒள்ளிய தளைகள் நீங்குமாறு அருள்புரிதற்கு எழுந்தருளிய சிவபிரானது இடம், ஒளி பொருந்திய கிரணங்கள் ஆயிரத்தைக் கொண்ட கதிரவனும் முளைத்தெழுந்து வளரும் சந்திரனும் தவழும் வானளாவிய மலையாகிய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

கு-ரை: விளையாதது ஒருபரிசில்வரும் பசுபாச வேதனை ஒண்தளை – மீண்டும் அங்குரியாதவாறு அவிந்ததாகிய ஒரு தன்மையில் வரும் பாசங்களாகின்ற துன்பத்தைத் தருகின்ற ஒள்ளிய கட்டு. பசுபாசம் – ஆன்மாக்களை அனாதியே பந்தித்து நிற்கும் ஆணவமலக்கட்டு எனப்பாசத்திற்கு அடையாளமாய் நின்றது. வேதனை – துன்பம் எனப் பொருள் கொண்டு அதன் காரணமாகிய தீவினை என்பாரும் உளர். அப்போது பாசவேதனை உம்மைத்தொகை. பாசமும் வேதனையும் என்பது பொருள். வேதனைக்கு விளையாமையாவது பிராரத்தத்தை நுகருங்கால் மேல்வினைக்கு வித்தாகாவண்ணம் முனைப்பின்றி நுகர்தல். சார்பு – இடம். களை – தேஜஸ். ஆயிரம் பன்மை குறித்து நின்றது. கதிர் ஆயிரம் உடையவன் – சூரியன். சகத்திர கிரணன் என்னும் பெயருண்மையையும் அறிக. செங்கதிரோடு முளைமாமதி தவழும் முதுகுன்று என்றமையால் பிள்ளையார் கண்ட காலம் வளர்பிறைக் காலத்து மூன்றாம் நாளாகலாம் என்று ஊகிக்கலாம்.

குருவருள்: இறை, உயிர், தளை என்ற முப்பொருள்களும் என்றும் உள்ள உண்மைப் பொருள்கள். ஒரு காலத்தே தோன்றியன அன்று. இக்கருத்தையே “விளையாததொர் பரிசில்வரு பசுபாச வேதனை ஒண்தளை” என்றார். இவை நீங்க அருள்பவனே இறையாகிய தலைவன் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் பசு – உயிர். பாசம் – ஆணவம். வேதனை – நல்வினை தீவினையாகிய இருவினைகள். ஒண்தளை – மாயை. ஆணவக் கட்டினின்றும் ஆன்மாவை விடுவிப்பதற்குத் துணை செய்வதால் மாயையை ஒண்தளை என்றார்.


122

சுரர், மா தவர், தொகு கின்னரர் அவரோ, தொலைவு இல்லா
நரர் ஆன பல் முனிவர், தொழ இருந்தான் இடம் நலம் ஆர்
அரசார் வர அணி பொன்கலன் அவை கொண்டு பல் நாளும்
முரசு ஆல்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே.


பொ-ரை: தேவர்களும், சிறந்த தவத்தை மேற் கொண்டவர்களும், கின்னரி மீட்டி இசை பாடும் தேவ இனத்தவரான கின்னரரும், மக்களுலகில் வாழும் மாமுனிவர்களும் தொழுமாறு சிவபிரான் எழுந்தருளிய இடம், அழகிய அரசிளங்குமாரர்கள் வர அவர்களைப் பொன் அணிகலன்கள் கொண்ட வரவேற்கும் மணமுரசு பன்னாளும் ஒலித்தலை உடைய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

கு-ரை: தொகு கின்னரர் – எப்பொழுதும் கூட்டமாகவே இருந்து கின்னரி பயிலும் தேவகூட்டத்தார்.


123

அறை ஆர் கழல் அந்தன்தனை, அயில் மூஇலை, அழகு ஆர்
கறை ஆர் நெடுவேலின்மிசை ஏற்றான் இடம் கருதில்,
மறை ஆயினபல சொல்லி, ஒண்மலர் சாந்து அவை கொண்டு,
முறையால் மிகும் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே.


பொ-ரை: ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அந்தகாசுரனைக், கூரிய மூவிலை வடிவாய் அமைந்த குருதிக் கறைபடிந்த அழகிய நீண்ட வேலின் முனையில் குத்தி ஏந்திய சிவபெருமானது இடம் யாதெனில், முனிவர்கள் பலரும் வேதங்கள் பலவும் சொல்லி நறுமலர் சந்தனம்முதலான பொருள்களைக் கொண்டு முறைப்படி சார்த்தி வழிபடுகின்ற திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.

கு-ரை: இப்பாட்டின் முன்னடியிரண்டிலும், அந்தகனை முத்தலைச் சூலத்தின் உச்சியில் தாங்கிய வரலாறு குறிப்பிடப்படுகிறது. அந்தன் – அந்தகாசுரன். அயில் – கூர்மை. வேலுக்கு அழகு இவ்வண்ணம் தண்டிக்கத் தக்கவர்களைத் தண்டித்தல். முனிவர் மறையாயின சொல்லி, மலர்ச் சாந்துகொண்டு முறையான் தொழு முதுகுன்று எனக் கூட்டுக.

அந்தகாசுரன் தன்தவமகிமையால் தேவர்களை வருத்தினான். தேவர்கள் பெண்வடிவந்தாங்கி மறைந்து வாழ்ந்தனர். பின் அவர்கள் வேண்டுகோட்கிரங்கிச் சிவபெருமான் பைரவருக்கு ஆணையிட அவர் தனது முத்தலைச் சூலத்திற் குத்திக் கொணர்ந்தார். அவன் சிவனைக் கண்டதும் உண்மை ஞானம் கைவரப் பெற்றான். கணபதியாம் பதவியை அளித்தார் என்பது வரலாறு. (கந்தபுராணம்.)


124

ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி, எழில் விசயற்கு
ஓவாத இன் அருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில்
சாவாதவர், பிறவாதவர், தவமே மிக உடையார்,
மூவாத பல் முனிவர், தொழும் முதுகுன்று அடைவோமே.


பொ-ரை: அம்புகள் பூட்டிய வில்லை ஏந்திய வேட உருவந்தாங்கி வந்து போரிட்டு அழகிய அருச்சுனனுக்கு அருள்செய்த எம் சிவபெருமானுக்கு உகந்த இடம், சாவாமை பெற்றவர்களும், மீண்டும் பிறப்பு எய்தாதவர்களும், மிகுதியான தவத்தைப் புரிந்தவர்களும், மூப்பு எய்தாத முனிவர் பலரும் வந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். நாமும் அதனைச் சென்றடைவோம்.

கு-ரை: இதில் இறைவன் வேடவுருத்தாங்கிப் பன்றியை எய்து வீழ்த்தி அருச்சுனன் தவங்கண்டு வந்து பாசுபதம் அருளிய வரலாறு குறிக்கப்பெறுகின்றது. ஏ – அம்பு. சிலை – வில். எயினன் – வேடன். விசயற்கு – அருச்சுனற்கு. ஓவாத – கெடாத. சாவாதவர்களும், மீட்டும் பிறப்பெய்தாதவர்களும், ஆகத் தவமிக்க முனிவர்கள்; என்றும் இளமை நீங்காத முனிவர்கள் தொழும் முதுகுன்றம் என்றவாறு.


125

தழல் சேர்தரு திருமேனியர், சசி சேர் சடை முடியர்,
மழ மால்விடை மிக ஏறிய மறையோன், உறை கோயில்
விழவோடு ஒலி மிகு மங்கையர், தகும் நாடகசாலை,
முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே.


பொ-ரை: தழலை ஒத்த சிவந்த திருமேனியரும், பிறைமதி அணிந்த சடைமுடியினரும், இளமையான திருமாலாகிய இடபத்தில் மிகவும் உகந்தேறி வருபவரும், வேதங்களை அருளியவருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயில், விழாக்களின் ஓசையோடு அழகு மிகு நங்கையர் தக்க நடனசாலைகளில் முழவோசையோடு பாடி நடனம் ஆடும் திருமுதுகுன்றம் ஆகும். அதனை நாமும் சென்றடைவோம்.

கு-ரை: தழல் சேர்தரு திருமேனியர் – தழலை ஒத்த செந்நிற மேனியை யுடையவர். “தழல்வண்ண வண்ணர்” என்றதும் அது நோக்கி. சசி – சந்திரன். மழ மால் விடை – இளைய பெரிய இடபம். ஆடகசாலை – நடனசாலை.


126

செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன்
கதுவாய்கள் பத்து அலறீயிடக் கண்டான் உறை கோயில்
மது வாய செங் காந்தள் மலர் நிறைய, குறைவு இல்லா
முதுவேய்கள் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே.


பொ-ரை: பொல்லா மொழிகளைக் கருதிக் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் வடுவுள்ள வாய்கள் பத்தும் அலறும்படி கால்விரலால் ஊன்றி அடர்த்த சிவ பிரானது கோயில் விளங்குவதும், தேன் நிறைந்த இடம் உடைய செங்காந்தள் மலர்களாகிய கைகள் நிறையும்படி முதிய மூங்கில்கள் குறைவின்றி முத்துக்களை உதிர்க்கும் பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருமுதுகுன்றை நாம் அடைவோம்.

கு-ரை: செதுவாய்மைகள் கருதி – பொல்லாச் சொல்லை எண்ணி. செதுவாய்மை – பொல்லாமொழி. “செதுமொழிந்த சீத்தசெவி” என்பதுபோல நின்றது. கதுவாய்கள் – வடுவுள்ளவாய் “கதுவாய் எஃகின்” என்னும் பதிற்றுப்பத்தடி ஒப்பு நோக்குக. மலைப்பிளப்பை ஒத்த வாயுமாம். மதுவாய – தேனை மலரின் முகத்தே உடைய, செங்காந்தள் பூக்களில் நிறைய மூங்கில்கள் முத்தைச் சொரிகின்றன என்பது. செங்காந்தள் கையேந்தி ஏற்பாரையும், வேய்வரையாது கொடுப்பாரையும் ஒத்திருக்கின்றன என்று கொள்ள வைத்தவாறு.


127

இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய,
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன்-
புயல் ஆடு வண்பொழில் சூழ் புனல் படப்பைத் தடத்து அருகே
முயல் ஓட, வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே.


பொ-ரை: தற்பெருமை பேசிய பிரமன் திருமால் ஆகிய இருவராலும் அறிதற்கரிய திருவிளையாடல் செய்து எரியுருவில் எழுந்த செல்வனாகிய சிவபிரான் எழுந்தருளியதும், மேகங்கள் தோயும் வளமையான பொழில்கள், நீர்வளம் மிக்க நிலப்பரப்புகள், நீர் நிலைகட்கு அருகில் வரும் முயல்கள் ஓடுமாறு வெள்ளிய கயல் மீன்கள் துள்ளிப் பாயும் குளங்கள் இவற்றின் வளமுடையதும் ஆகிய திருமுதுகுன்றத்தை நாம் அடைவோம்.

கு-ரை: இயலாடிய பிரமன், இயலாடிய அரி என அடைமொழியை இருவர்க்கும் கூட்டுக. இயல் – தற்பெருமை. செயல் ஆடிய – செயலால் வெற்றி கொண்ட. புயல் – மேகம். புனற் படைப்பை – நீர்பரந்த இடம்.


128

அருகரொடு புத்தர் அவர் அறியா அரன், மலையான்
மருகன், வரும் இடபக் கொடி உடையான், இடம் மலர் ஆர்
கருகு குழல் மடவார் கடிகுறிஞ்சி அது பாடி,
முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே.


பொ-ரை: சமணர்களாலும் புத்தர்களாலும் அறியப் பெறாத அரனும், இமவான் மருகனும், தோன்றும் இடபக் கொடி உடையோனும், ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மலர் சூடிய கரிய கூந்தலை உடைய இளம் பெண்கள் தெய்வத்தன்மை வாய்ந்த குறிஞ்சிப் பண்ணைப் பாடி முருகப் பெருமானின் பெருமைகளைப் பகரும் திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.

கு-ரை: புறச்சமயிகளால் அறியப்படாமை அறிவித்தவாறு. மலையான் மருகன் – இமவானுக்கு மருமகன். வருமிடபம் என்ற சொற்றொடர் இவர் பதிகங்களிற் பலவிடத்தும் வரல் கண்டு இன்புறற்பாலர் முதற்காட்சியதுவாதலின். கருகு குழல் – ஒருகாலைக்கொருகால் கருப்பு ஏறிக்கொண்டே போகின்ற குழல். கடிகுறிஞ்சி – தெய்வத் தன்மை பொருந்திய குறிஞ்சிப் பண், இப்பண்ணே முருகனது பெருமையைக் கூறுதற்கு ஏற்றதென்பது.


129

முகில் சேர்தரு முதுகுன்று உடையானை, மிகு தொல் சீர்
புகலிநகர் மறை ஞானசம்பந்தன், உரைசெய்த
நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும்
பகரும் அடியவர்கட்கு இடர், பாவம், அடையாவே.


பொ-ரை: மேகங்கள் வந்து தங்கும் திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானைப் பழமையான மிக்க புகழையுடைய புகலி நகரில் தோன்றிய மறைவல்ல ஞானசம்பந்தன் உரைத்த ஒப்பற்ற தமிழ்மாலைகளாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பகர்ந்து வழிபடும் அடியவர்களைத் துன்பங்களும் அவற்றைத் தரும் பாவங்களும் அடையா.

கு-ரை: நிகரில்லன தமிழ்மாலை என்றார்; ஒவ்வொரு திருப்பாடலின் முதலிரண்டடிக் கண்ணும் இறைவன் ஆன்மாக்களின் மலத்தைநீக்கி ஆட்கொள்ளும் முறைமையும், உபதேச குருமூர்த்தியாய் வந்தருளும் சிறப்பும், தானே முதல் என உணர்த்தும் தகுதியும் உணர்த்திப் பின்னிரண்டடிகளிலும் இயற்கையழகுகளின் வழியாக இறைவளத்தை யுணர்த்துதலின். இடர் – பாவம்.


Scroll to Top