You cannot copy content of this page

015 திருநெய்த்தானம் – நட்டபாடை

திருநெய்த்தானம் – நட்டபாடை

152

மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான்,
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன்,
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும்
நெய் ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!


பொ-ரை: கருநிறம் அமைந்த கண்டத்தை உடையவனும், மலை மகளாகிய பார்வதியை இடப் பாகமாகக் கொண்டவனும், துதிக்கையோடு கூடியதாய்த் தன்னை எதிர்த்து வந்ததால் அழிவற்ற புகழ் பெற்ற யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த, தன்னொப்பார் இல்லாத் தலைவனுமாகிய சிவபிரான் வயல்களில் முளைத்த குவளை மலர் போலும் கண்களை உடைய உமையம்மையோடும் நெய்யாடிய பெருமான் என்ற திருப்பெயரோடும் விளங்குமிடமாகிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைச் சொல்வீராக.

கு-ரை: மையாடிய கண்டன் – விஷம் பொருந்திய கழுத்தையுடையவன். கையாடிய கரி – கையோடு கூடிய யானை, கேடில்கரி என்றது இறைவன் உரித்துப் போர்த்ததால் நிலைத்த புகழ் கொண்டமையின். செய் – வயல். நெய்யாடிய பெருமான் என்பது இத்தலத்து இறைவன் திருநாமம். நெய்த்தானம் எனத் தலப்பெயரைச் சொல்லுங்கள் போதும் என்கின்றார்கள்.


153

பறையும், பழிபாவம்; படு துயரம்பல தீரும்;
பிறையும், புனல், அரவும், படு சடை எம்பெருமான் ஊர்
அறையும், புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல்,
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே!


பொ-ரை: காவிரி வடகரை மேல் உள்ள எம்பெருமான் ஊராகிய நெய்த்தானம் என்ற பெயரைச் சொல்லுமின் பழி பாவம் தீரும் என வினை முடிபு காண்க.

ஆரவாரத்துடன் வரும் புனலின் அலைகள் சேரும் காவிரி வடகரையில் விளங்குவதும், பிறை கங்கை அரவம் ஆகியவற்றுடன் கூடிய சடைமுடியை உடைய எம்பெருமான் எழுந்தருளியதும், மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்தும் நிறை குணத்துடன் தம்மை ஒப்பனை செய்து கொள்ளும் மகளிர் பயில்வதுமாகிய நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்லுமின்; பழிநீங்கும், பாவங்கள் துன்பங்கள் அனைத்தும் தீரும்.

கு-ரை: பறையும் – கழியும், அறையும் – ஒலிக்கும், நிறையும் புனைமடவார் – மனத்தைக் கற்பு நெறிக்கண் நிறுத்துவதாகிய நிறைக்குணத்தால் தம்மை ஒப்பனை செய்த மடவார்.


154

பேய் ஆயின பாட, பெரு நடம் ஆடிய பெருமான்,
வேய் ஆயின தோளிக்கு ஒருபாகம் மிக உடையான்,
தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன்,
நே ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!


பொ-ரை: ஊழிக் காலத்து, பேய்கள் பாட, மகா நடனம் ஆடிய பெருமானும், மூங்கில் போலத் திரண்ட தோள்களை உடைய உமை யம்மைக்குத் தனது திருமேனியின் ஒரு பாகத்தை வழங்கியவனும், அனைத்து உலகங்களிலும் வாழும் உயிர்களை நிலைபேறு செய்தருளும் தாய் போன்ற தலைவனும், அன்பர்களின் அன்பு நீரில் ஆடுபவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைப் பலகாலும் சொல்வீராக.

கு-ரை: பெருநடம் – மகாப்பிரளய காலத்துச் செய்யப்பெறும் மகாநடனம், வேய் – மூங்கில். அவ்வுலகங்களைத் தாயாகி நிலைபேறு செய்ததலைவன் எனக் கூட்டுக. நெய்யாடிய என்பது எதுகை நோக்கி நேயாடிய என்றாயிற்று. நே – அன்பு. அன்பே அபிடேக மாதல் ஞானப் பூசையிலுண்டு.


155

சுடு நீறு அணி அண்ணல், சுடர் சூலம் அனல் ஏந்தி,
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன், உறைவு இடம் ஆம்
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான்,
நெடுவாளைகள் குதிகொள் உயர் நெய்த்தானம் எனீரே!


பொ-ரை: சுடப்பட்ட திருநீற்றை அணியும் தலைமையானவனும் ஒளி பொருந்திய சூலம் அனல் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தி இருள் செறிந்த இரவின் நடுயாமத்தே நடனம் ஆடும் நம்பனும், கொடிய ஒளி பொருந்திய இளைய வாசுகியாகிய பாம்பு உமிழ்ந்த நஞ்சோடு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனுமாகிய சிவபிரான் உறையும் இடமாகிய நீண்ட வாளை மீன்கள் துள்ளி விளையாடும் நீர்வளம் மிக்க நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்வீராக.

கு-ரை: சுடுநீறு – சுட்டநீறாகிய விபூதி. நடுநள்ளிருள் – அர்த்த யாமம். நடுநள் – ஒருபொருட் பன்மொழி. நள் – செறிவுமாம். நம்பன் – நம்பப்படத்தக்கவன், விருப்பிற்குரியன். கடுவாள் இளஅரவு ஆடு உமிழ்நஞ்சு – கொடிய ஒளிபொருந்திய இளைய வாசுகியாகிய பாம்பு உமிழ்ந்த அடுதலை உடைய நஞ்சம்.


156

நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி,
பகரா வருபுனல் காவிரி பரவிப் பணிந்து ஏத்தும்,
நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய, நெய்த்தான-
நகரான் அடி ஏத்த, நமை நடலை அடையாவே.


பொ-ரை: நுகரத்தக்க பொருளாகிய சந்தனம், ஏலம், மணி, செம்பொன் ஆகியவற்றை நுரையோடு உந்தி விலை பகர்வது போல ஆரவாரித்து வரும் நீரை உடைய காவிரி பரவிப் பணிந்தேத்துவதும், ஒருவகையான மணல் சேர்க்கப்பெற்ற அவ்வாற்றின் தண்கரையில் விளங்குவதுமாகிய நெய்த்தானத்துக் கோயிலில் விளங்கும் சிவபிரான் திருவடிகளை ஏத்தத் துன்பங்கள் நம்மை அடையா.

கு-ரை: நுகர் ஆரம் – நுகரத்தக்க பொருளாகிய சந்தனம், பகரா வரும் – விலை கூறிவருகின்ற. நிகரான் மணல் – ஒருவிதமான மணல். நடலை -துன்பம்.


157

விடை ஆர் கொடி உடைய அணல், வீந்தார் வெளை எலும்பும்
உடையார், நறுமாலை சடை உடையார் அவர், மேய,
புடையே புனல் பாயும், வயல் பொழில் சூழ்ந்த, நெய்த்தானம்
அடையாதவர் என்றும் அமருலகம் அடையாரே.


பொ-ரை: இடபக் கொடியை உடைய அண்ணலும், மணம் கமழும் மாலைகளைச் சடைமேல் அணிந்தவனும் ஆகிய சிவபிரான் மேவியதும், அருகிலுள்ள கண்ணிகளிலும் வாய்க்கால்களிலும் வரும் நீர்பாயும் வயல்கள் பொழில்கள் சூழ்ந்ததும் ஆகிய நெய்த்தானம் என்னும் தலத்தை அடையாதவர் எக்காலத்தும் வீட்டுலகம் அடையார்.

கு-ரை: உடைய அண்ணல், உடையவ் வணல் என விரித்தல் தொகுத்தல் விகாரம் வந்தன சந்தம் நோக்கி. வீந்தார் – இறந்தவர்களாகிய பிரமவிஷ்ணுக்களது. வெளை; வெள்ளை என்பதன் தொகுத்தல். நெய்த்தானம் அடையாதவர் அமருலகம் அடையார் என எதிர்மறைமுகத்தால் பயன் கூறியவாறு. அமருலகம், தேவருலகம் என்பாரும் உளர். விரும்பிய தலமாகிய வீடென்பதே பொருந்துவதாம்; அமரர் உலகு என்னாது அமருலகென்றே இருத்தலின்.


158

நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து
அழல் ஆனவன், அனல் அங்கையில் ஏந்தி, அழகு ஆய
கழலான் அடி நாளும் கழலாதே, விடல் இன்றித்
தொழலார் அவர் நாளும் துயர் இன்றித் தொழுவாரே.


பொ-ரை: பயிர் செழித்து வளர்தலால் ஒளி நிறைந்த வயல்களும் மணம் கமழும் சோலைகளும் நிறைகின்ற நெய்த்தானத்தில், தழல் உருவில் விளங்குபவனும் அனலைத் தன் கையில் ஏந்தியவனும் அழகிய வீரக் கழல்களை அணிந்தவனும் ஆகிய சிவபிரானது திருவடிகளை நாள்தோறும் தவறாமலும் மறவாமலும் தொழுதலை உடைய அடியவர் எந்நாளும் துயரின்றி மற்றவர்களால் தொழத்தக்க நிலையினராவர்.

கு-ரை: கழலாதே – நீங்காதே. விடல் இன்றி – இடைவிடாமல். தொழலார் அவர் – தொழுதலையுடைய அடியார்கள்.


159

அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம்
இறை ஆர முன் எடுத்தான், இருபது தோள் இற ஊன்றி,
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ,
கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே.


பொ-ரை: அழகிய கயிலாய மலையைத் தன் இருபது முன் கரங்களாலும் பெயர்த்து எடுத்த ஓசை கெழுமிய கடல் சூழ்ந்த இலங்கைக்குரிய மன்னனாகிய இராவணன் இருபது தோள்களும் நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவன் புனல் நிறைந்த நெய்த்தானப் பெருமானது விளங்கும் திருவடிகளைப் பரவ அவனுக்கு முயற்கறையை உடைய சந்திரனின் பெயரைப் பெற்ற சந்திரகாசம் என்ற வாளை ஈந்த அப்பெருமான் திருவடிகளை ஏத்துதலே, ஒருவற்கு அடையத்தக்க கதியாம்.

கு-ரை: அறை – ஓசை. இறை ஆர – மணிக்கட்டுப் பொருந்த, நெய்த்தானன் – அன் தவிர்வழி வந்த சாரியை; நெய்த்தானத்தவனாகிய இறைவன். கறையார் கதிர்வாள் ஈந்த – சந்திரன் பெயரைப் பொருந்திய வாளைத் தந்த என்றது சந்திரஹாசம் என்னும் வாளைத் தந்த என்பதாம். அவர் கழல் ஏத்துதல் கதியே – அந்த இறைவனுடைய கழலை ஏத்துதலே மீட்டும் அடையத்தக்க கதியாம்.


160

கோலம் முடி நெடு மாலொடு, கொய் தாமரை யானும்,
சீலம் அறிவு அரிது ஆய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம்,
காலம் பெற, மலர் நீர் அவை தூவித் தொழுது ஏத்தும்
ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே.


பொ-ரை: அழகிய முடியை உடைய திருமாலும், கொய்யத்தக்க தாமரைமலர் மேல் விளங்கும் நான்முகனும் தன் இயல்பை அறிதற்கியலாத நிலையில் ஒளிவடிவாய்த் திகழ்ந்த நெய்த்தானப் பெருமானை விடியற் பொழுதிலே நீராட்டி மலர் சூட்டித் தொழுதேத்தும் உலகு புகழ் அடியவரை உடலுறும் நோய்கள் நலியா.

.கு-ரை: கோலம் முடி – அழகிய கிரீடம், சீலம் – சௌலப்யம் என்னும் எளிமைக்குணம். காலம் பெற – விடியலிலேயே. உடலை நோய் நலியா என்க. உறுநோய் – பிராரத்த வினையான் வரும் துன்பம்.


161

மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர்,
புத்தர் அவர், சொன்ன மொழி பொருளா நினையேன் மின்!
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும்
சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே.


பொ-ரை: சித்தத்தில் செருக்குடையவரும், சிறிதும் மதியில்லாதவரும் ஆகிய சமணர்களும், புத்தர்களும் கூறும் பொருளற்ற உரைகளை ஒரு பொருளாக நினையாதீர். நாள்தோறும் நாம் பழகி வழிபடுமாறு, குற்றமற்ற சிவபிரான் உறையும் நெய்த்தானத்தை வணங்கிப் போற்றும் சித்தத்தை உடைய அடியவர் உடலைத் துன்புறுத்தும் நோய்கள் அடையா.

கு-ரை: மத்தம் – மதம். இறைமதியில்லார் – கடவுளுணர்ச்சி சிறிதும் இல்லாதவர்கள். செறுநோய் – வருத்தும் நோய்கள்.

குருவருள்: “உருகும் மனம் உடையார் தமக்கு உறுநோய் அடையாவே” என்ற பிள்ளையார் இங்கு “நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானமதேத்தும் சித்தம்முடை அடியார்உடல் செறுநோய் அடையாவே” என்று கூறுதல் சிந்திக்கத்தக்கது. இறைவழிபாட்டில் ஈடுபாடுள்ள அடியவர்களை உறத்தக்க நோயும் செறத்தக்க நோயும் அடையா என்பதைத் தெளிவித்த வாறறியலாம்.


162

தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல்
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்,
சில மல்கிய செல்வன் அடி சேர்வர், சிவ கதியே.


பொ-ரை: தலங்களில் சிறந்த புனல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உலகெங்கும் பரவிய புகழால் மிக்க நெய்த்தானத்துப் பெருமான் மீது பாடிய ஒப்பற்ற பயன்கள் பலவற்றைத் தரும் பாடல்களாகிய இவற்றைக் கற்றுப் பலகாலும் பரவவல்லவர் சீலம் நிறைந்த செல்வன் அடியாகிய சிவகதியைச் சேர்வர்.

கு-ரை: பலம் மல்கிய பாடலிவை பத்தும் என்றது, முதல் நான்கு பாடலிலும் நெய்த்தானம் என்னுங்கள், உங்களை நடலையடையா, அமருலகு அடையலாம், துயரின்றித் தொழலாம், நோய் நலியா, அடையா, கழலேத்துதல் கதி என இம்மைப் பயனையும்; மறுமைப் பயனையும் எய்தலாம் என்கிறார்கள் ஆதலின். சில மல்கிய – சிலவே நிறைந்த. இறைவனடியைச் சில என்றதால் நிறைவு ஏது? மல்குதற்கேற்ற புண்ணிய வாய்ப்புடையன சிலவேயாதலின் இங்ஙனம் கூறினார்.


Scroll to Top