திருநின்றியூர் – நட்டபாடை
185
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு;
பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக்
காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும்
நீல மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.
பொ-ரை: முன்னொரு காலத்தில் காலனின் வலிமையைக் காலால் உதைத்துப் போக்கி, மணம் கமழும் நீல மலர்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய திருநின்றியூரில் நிலையாக எழுந்தருளியுள்ள இறைவற்குப் படைக்கலன் சூலம். சுண்ணப்பொடியும், சாந்தமும், திருநீறே. பால் போலும் வெண்மையான பிறைமதி அவரது செந்நிறச் சடைமுடியின் மேலது.
கு-ரை: காலன் வலிபோக்கி, நின்றியூரின் நிலையோர்க்கு, சூலம் படை, சுண்ணப்பொடி, சாந்தம், சுடுநீறு, மதி முடிமேலது என்க. நிலையோர் – நிலைபெறுதலையுடையார். சுண்ணப்பொடியும்சாந்தமும் நீறேயாம், பால் அம்மதி – பால்போலும் அழகிய மதி, அம்தவிர்வழி வந்த சாரியையுமாம். பண்டைக்காலன் என்றது இப்போது சிவனடியார்மேல் செல்லும் முனைப்பற்று இருக்கின்ற நிலையை உளத்தடைத்து.
186
அச்சம் இலர்; பாவம் இலர்; கேடும் இலர்; அடியார்,
நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்
நச்சம் மிடறு உடையார், நறுங்கொன்றை நயந்து ஆளும்
பச்சம் உடை அடிகள், திருப்பாதம் பணிவாரே.
பொ-ரை: நஞ்சை மிடற்றிலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும், மணம் கமழும் கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும், தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய நின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிவார் அச்சம், பாவம், கேடு, நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர்.
கு-ரை: நின்றியூரில் அடிகள் திருப்பாதம் பணியும் அடியார் அச்சமுதலாயின இலராவர் எனக் கூட்டுக. அச்சம் இலர் என்றது தமக்கு உறுதுணையாவார் ஒருவரைப் பெற்றமையால். இந்நிலையை அப்பர் சுவாமிகளும்”சுண்ணவெண் சந்தனச்சாந்தும்” என்னும் பதிகத்து “அஞ்சுவதுயாதொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை” என்றமை காண்க.
பாவம் இலர் – பிராரத்த நுகர்ச்சிக் கண்ணும் இவர்கள் இது செய்தார் யானிது செய்தேன் என்னும் தருக்கதின்றிச் செய்வார்கள் ஆதலின் மேல்வினைக்கு வித்துமாகும் பாவம் இலர். கேடும் இலர் – அவ்வினை காரணமாக வரும் கேடும் இலராவர். நிச்சம் – நித்யம். நோய் – துன்பங்கள். நச்சம் – நஞ்சு. அம் சாரியை. நறுங்கொன்றை நயந்து – மணம் பொருந்திய கொன்றைப்பூவை விரும்பி, ஆளும் – அதனை விரும்பி அன்போடு சாத்தும் அடியார்களை ஆளுகின்ற. பச்சம் உடை அடிகள் – பட்சமுடைய பெருமான். பச்சம், பக்ஷம் என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றது.
187
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும், ஆர
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை;
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள், நின்றியூரில்
உறையும் இறை, அல்லது எனது உள்ளம் உணராதே!
பொ-ரை: பறையடிக்கும் ஒலி, சங்கு முழங்கும் முழக்கம், பக்கங்களிலெல்லாம் மிகவும் ஒலிக்கும் ஏனைய ஒலிகள் ஆகியவற்றில் இறைவனது நாத தத்துவத்தை அறிவோர் உணர்வர். நிறைந்த கங்கைப் புனலைச் சடைமிசை உடையவராய் நின்றியூரில் உறையும் அவ்விறைவரை அல்லது என் உள்ளம் பிறபொருள்களுள் ஒன்றனையும் உணராது.
கு-ரை: பாங்குஆரவும் – பக்கங்களில். மிகவும் – அறையும் ஒலி மிக அடித்தலால் உண்டாகும் (ஏனைய) ஒலிகள். இவை தோற்கருவி ஒலிகள். அறிவார் அடிகள் இறை அவர் தன்மையல்லது உள்ளம் உணராது என முடிக்க. எங்கும் அவையறிவார் – எவரும் அவ்வொலியினை அறிபவர், என் உள்ளம் உணராது என்பது எங்குங்காண்பது அவனுருவே ஆதலின்.
188
பூண்ட வரைமார்பில் புரிநூலன், விரி கொன்றை
ஈண்ட அதனோடு ஒரு பால் அம்மதி அதனைத்
தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்
ஆண்ட கழல் தொழல் அல்லது, அறியார் அவர் அறிவே!
பொ-ரை: அணிகலன்களைப் பூண்ட மலைபோன்ற மார்பில் முப்புரி நூலை அணிந்து, விரிந்த கொன்றை மலர் மாலையையும் அதனோடும் பொருந்தப் பால் போன்ற வெண்மையான திங்களையும்சூடி, வானத்தைத் தீண்டும் பொழில்கள் சூழ்ந்த திருநின்றியூரில் எழுந்தருளி, நம்மை ஆண்டருளிய அவ்விறைவன் திருவடிகளைத் தொழுதல் அல்லது, அவன் இயல்புகளை அடியவர் எவரும் அறியார்.
கு-ரை: பூண்டவரை மார்பு – அணிகளைப்பூண்ட மலை போலத் திண்ணிய மார்பு. பூண்டவ்வரை – விரித்தல் விகாரம்.
ஈண்ட – செறிய. கொன்றை ஈண்ட மதி அதனைத் தீண்டும் பொழில் சூழ்ந்த திருநின்றி எனக் கூட்டுக. திருவடியைத் தொழுதாலல்லது அவர் அறிவான் அறியார் என ஆன்மாக்கள் அருளே கண்ணாகக் காணும் ஆற்றல் விளக்கியவாறு.
189
குழலின் இசை வண்டின் இசை கண்டு, குயில் கூவும்
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்,
அழலின் வலன் அங்கையது ஏந்தி, அனல் ஆடும்
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகணே.
பொ-ரை: குழலிசை வண்டிசை ஆகியவற்றைக் கேட்டுக் குயில்கள் கூவுவதும், நிழலின் அழகு தங்கியதுமாகிய பொழில்களால் சூழப்பட்ட நின்றியூரிடத்து அழலை வலத் திருக்கரத்தில் ஏந்தி அனலிடை நின்று கழல்களின் ஒலிகள் கேட்குமாறு ஆடும் இறைவன் நமக்குக் களைகண் ஆவான்.
கு-ரை: பாடுவாரைப் பார்த்து மற்றவர்க்கும் பாடத் தோன்றுவதுபோலக் குழலிசையும் வண்டிசையும் கேட்டுக் குயில் கூவுகின்றன. நிழலின் எழில் தாழ்ந்த பொழில் – ஒளியும் நிழலும் விரவித் தோன்றும் நிலை சித்திரப்பூம்படாம் விரித்தது போலுமாகலின் நிழலின் எழில் தாழ்ந்த பொழில் என்பர்.
அழலின் வலன் – வலமாகச் சுற்றியெரியும் மழு. ஆடும்புரி கடவுள் – ஆடுகின்ற விரும்பத்தக்க கடவுள். களைகண் – நமக்கு ஆதாரம்.
190
மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒரு பாகம்,
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த
வீரன், மலி அழகு ஆர் பொழில் மிடையும் திரு நின்றி
யூரன், கழல் அல்லாது, எனது உள்ளம் உணராதே!
பொ-ரை: புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, சடைமுடியில் சார்ந்துள்ள பிறைமதியோடு கங்கையை வைத்துள்ள வீரனும் அழகு மலிந்த பொழில்கள் செறிந்த திருநின்றியூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லாது எனது உள்ளம் வேறு ஒன்றையும் உணராது.
கு-ரை: மூரல் முறுவல் – மிகச் சிறிய புன்சிரிப்பு, சலவம் – கங்கை. கழலைப்பற்றிய உள்ளத்திற்கு, வேறொன்றையும் உணர முடியாமையானும் உணர்ந்து ஆகவேண்டுவது இன்மையானும் உள்ளம் உணராது என்றார்.
191
பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும்
பெற்றி அது ஆகித் திரி தேவர் பெருமானார்,
சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்
நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே.
பொ-ரை: பிரமனது தலைகளில் ஒன்றைப் பறித்து அதனைக் கையினில் ஏந்திப் பலிகேட்கும் இயல்பினராய்த் திரிகின்ற தேவர் தலைவரும் புலித்தோலை இடையில் சுற்றியிருப்பதோடு முடியில் பிறைமதியைச் சூடியவரும், நெற்றியில் ஒரு கண்ணை உடையவரும் ஆகிய பெருமானார் திருநின்றியூரின்கண் நிலையாக எழுந்தருளியுள்ளார்.
கு-ரை: தலை கையினில் பற்றி ஏந்தித் தேரும் பெற்றியது வாகியே திரிகின்ற தேவர் பெருமானார் என இயைக்க. பலி பெற்றியதுவாகி எனவே அப்பெற்றி அவர்க்கு இயல்பன்மையும், தாருகாவனத்து முனிவர்கள்பால் வைத்த தடையிலாக் கருணையே காரணம் என்பதும் வெளிப்படை, சுற்றி – அரையைச் சுற்றி. வேங்கை – புலித்தோல்.
192
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்,
“அல்லர்” என, “ஆவர்” என, நின்றும் அறிவு அரிய
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம்
செல்வர் அடி அல்லாது, என சிந்தை உணராதே!
பொ-ரை: நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனோடு உலகைத் தன் வயிற்றகத்து அடக்கிக் காட்டிய திருமாலும், சிவபிரானே முழுமுதற் பொருள் ஆவர் எனவும் அல்லர் எனவும் கூறிக்கொண்டு தேடிக் காணுதற்கரியவராய் நின்றவரும் நெல்வயல்களால் சூழப்பட்ட நின்றியூரில் நிலையாக எழுந்தருளிய எம் செல்வருமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லது என் சிந்தை வேறொன்றையும் உணராது.
கு-ரை: நல்ல மலர் நல்லம்மலராயிற்று. மலர்மேலான்பிரமன். ஞாலமது உண்டான் திருமால். அல்லர் என ஆவர் என தலைவர் அல்லர் எனவும் தலைவர் ஆவர் எனவும் தாமே தருக்கி நின்று.
193
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே,
நெறி இல்லவர் குறிகள் நினையாதே, நின்றியூரில்
மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே!
பொ-ரை: சமய நெறியில் பயில்வதால் பேராமலும் மறவாமலும் நினைக்கும் முழுமுதற்பொருளை அறியும் அறிவற்றசமணர்களாகிய நெறியற்ற கீழ்மக்களின் உரைகளைக் கேட்டு மயங்காமலும், தமக்கென்று உண்மை நெறியல்லாத புறச் சமயிகளின் அடையாளங்களைக் கருதாமலும் நின்றியூரில் மான் ஏந்திய கையனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாகும்.
கு-ரை: நெறியில் வரும் – தொன்றுதொட்டுக் குரு காட்டிய நெறியினின்று பயில்வதால் வருகின்ற. பேராவகை நினையா நினைவொன்றை அறிவில் சமண் ஆதர் – பேராதே மறவாதே தன்மயமாய் இருந்து நினைக்கப்படும் ஒருபொருளை அறியும் அறிவு அற்ற சமணர்களாகிய கீழ்மக்கள். மயராது – மயங்காது – நெறியில்லவர் – தமக்கென்று உண்மை நெறியில்லாதவர்களாகிய புறச்சமயிகள். குறிகள் – அடையாளங்கள். மறி – மான்.
194
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக
நின்று அங்கு ஒருவிரலால் உற வைத்தான் நின்றியூரை
நன்று ஆர்தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக் குறைவு இன்றி நிறை புகழே.
பொ-ரை: கயிலைமலையை எடுத்த இராவணனின் உடல்தோள் ஆகியன நெரியத் தன் கால்விரல் ஒன்றால் ஊன்றியவனது நின்றியூர் மீது, நன்மைகளையே செய்யும் புகலிப் பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த திருவருள் நலம் குன்றாத இத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் புகழ் நிறையும்.
கு-ரை: உற – பொருந்த. ஞானம்மிகுபந்தன் – ஞானசம்பந்தன். இச்சொல் ஞானசம்பந்தன் என்பதற்குப் பொருள் காட்டியது போலும். குன்றாத் தமிழ் – எஞ்ஞான்றும் திருவருள் குறையாத தமிழ்.