You cannot copy content of this page

016 திருப்புள்ளமங்கைத் திருஆலந்துறை – நட்டபாடை

திருப்புள்ளமங்கைத் திருஆலந்துறை – நட்டபாடை

163

பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான்
போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புள மங்கை,
காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்,
ஆலந்துறை தொழுவார் தமை அடையா, வினை தானே.


பொ-ரை: பாலினின்று மிதந்து வரும் வெண்ணெய்த் திரள் போல்பவரும், காலனது வலிமை முழுவதையும் அழித்தவரும், வேதப் புலமையில் நான்முகன் போன்ற அந்தணர் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருப்புள்ளமங்கையில் விளங்குபவரும் ஆகிய இறைவனை நினைந்து வழிபடுபவர்களை வினைகள் அடையா.

கு-ரை: பால் உந்து உறுதிரள் – பாலைக் கடைதலால் விளைந்த வெண்ணெய். பிரமன் தான் போலுந்திறலவர் – பிரமனும் அவன் போலும் தன்மையினராகிய அந்தணரும். ஆலந்துறை கோயிலின் பெயர்; புள்ளமங்கை தலத்தின் பெயர். இதனை “புளமங்கை ஆதியவர் கோயில் திருவாலந்துறை தொழுமின்” என்ற இப்பதிகம் பத்தாம் பாடலால் அறிக. வினையடையா என்றது ஆகாமியங்கள் அடையா என்பதாம்.


164

மலையான் மகள் கணவன், மலி கடல் சூழ்தரு தன்மைப்
புலை ஆயின களைவான், இடம் பொழில் சூழ் புளமங்கை,
கலையால் மலி மறையோர் அவர் கருதித் தொழுது ஏத்த,
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே.


பொ-ரை: இமவான் மகளாகிய பார்வதி தேவியின் கணவனும் நீர் நிறைந்த கடல் சூழ்ந்த குளிர்ந்த இவ்வுலகில் உடலோடு பிறக்கும் பிறப்பைக் களைபவனும் ஆகிய சிவபெருமானது இடம், கலைகள் பலவற்றை அறிந்த அறிவால் நிறைந்த மறையவர்கள் மனத்தால் கருதிக் காயத்தால் தொழுது வாயால் ஏத்தி வழிபடுவதும், பொழில் சூழ்ந்ததும் அலைகளோடு கூடி நீர்பெருகி வரும் காவிரிக் கரையிலுள்ளதும் ஆகிய ஆலந்துறை என்னும் தலத்திலுள்ள புள்ள மங்கை என்னும் கோயிலாகும்.

கு-ரை: கடல்சூழ்தரு தண்மைப் புலையாயின களைவான் இடம் பொழில்சூழ் புளமங்கை – கடல் சூழ்தலால் வந்த பண்பாகிய குளிர்ச்சியோடு புலால் மணத்தைக் களைகின்ற பெரிய இடம் (மணந் தருகின்ற) பொழில் சூழ்ந்த புள்ளமங்கை என்க. களைவான் என ஒரு சொல்லாக்கி, நிற்பவனாகிய இறைவன் என்பாரும் உளர். புலை களைதல் பொழிலின் செயலேயன்றி இறைவன் செயலாகாமை ஓர்க.


165

கறை ஆர் மிடறு உடையான், கமழ் கொன்றைச் சடை முடி மேல்
பொறை ஆர் தரு கங்கைப்புனல் உடையான், புளமங்கைச்
சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலந்
துறையான் அவன், நறை ஆர் கழல் தொழுமின், துதி செய்தே!


பொ-ரை: விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், மணம் கமழும் கொன்றை மலர் அணிந்த சடைமுடியின்மீது சுமையாக அமைந்த கங்கையாற்றை அணிந்தவனுமாய சிவபிரானுக்குரியது, சிறகுகளுடன் கூடிய மதுவுண்ட வண்டுகள் ஒலிக்கும் பொழில்களால் சூழப்பட்ட ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கை என்னும் கோயிலாகும். அக்கோயிலுக்குச் சென்று அப்பெருமானது திருவடிகளைத் துதி செய்து தொழுவீராக.

கு-ரை: கறை – விடம். மிடறு – கழுத்து. பொறையார்தரு – சுமையாகப் பொருந்திய. நறை – மணம்.


166

தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து, எம்
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை,
மணி ஆர்தரு கனகம் அவை வயிரத்திரளோடும்
அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே.


பொ-ரை: தண்ணிய பிறைமதியைப் பாம்போடு முடிமிசை வைத்துள்ள சிவபெருமானது இடம், அடியவர்கள் எமது தொண்டுகளுக்குரியவன் எனத் தொழுது ஏத்துவதும், மணிகளோடு கூடிய பொன்னை வயிரக்குவைகளோடும், அழகிய மணலோடும் கொணர்ந்து சேர்க்கும் காவிரியின் தென்கரையிலுள்ளதுமான ஆலந்துறையில் அமைந்த புள்ளமங்கையாகும்.

கு-ரை: தணி ஆர் மதி – குளிர்ந்தபிறை. இகரம் சாரியை. எம் பணி ஆயவன் – எமது தொண்டு விளங்குதற்கு இடமாயவன். எம்மைப் பணிகொள்ளும் தலைவனானவன் என்பாரும் உண்டு.

பொன்னும் மணியும் முதலாயின மணலில் அணையும் காவிரி என்றது ஓடும் பொன்னும் ஒக்கநோக்கும் இயல்பு காவிரிக்கு உண்டென்பதால் அடியாரியல்பு விளக்கியவாறு.


167

மெய்த் தன் உறும் வினை தீர் வகை தொழுமின்! செழு மலரின்
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரிக் கரை மேல்,
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை
அத்தன், நமை ஆள்வான், இடம் ஆலந்துறை அதுவே.


மெய்த் தன் உறும் வினை தீர் வகை தொழுமின்! செழு மலரின்
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரிக் கரை மேல்,
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை
அத்தன், நமை ஆள்வான், இடம் ஆலந்துறை அதுவே.


168

மன் ஆனவன், உலகிற்கு ஒரு மழை ஆனவன், பிழை இல்
பொன் ஆனவன், முதல் ஆனவன், பொழில் சூழ் புளமங்கை
என் ஆனவன், இசை ஆனவன், இள ஞாயிறின் சோதி
அன்னான் அவன், உறையும் இடம் ஆலந்துறை அதுவே.


பொ-ரை: உலகிற்குத் தான் ஒருவனே மன்னனாய் விளங்குபவனும், மழையாய்ப் பயிர்களை விளைவிப்பவனும், குற்றமற்ற பொன்னானவனும், உயிர்களுக்கு வாழ்முதலாக உள்ளவனும், எனக்குத் தலைவனாய் இசை வடிவாக விளங்குபவனும், இளஞாயிற்றின் ஒளியைப் போன்ற ஒளியினனுமாகிய சிவபெருமான் உறையும் இடம், ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கையாகும்.

கு-ரை: உலகிற்கு ஒரு மன்னானவன் மழையானவன் எனக் கூட்டுக. பிழையில் பொன் – குற்றமற ஓடவிட்ட பொன்னாகிய சாம்பூநதம் முதலியன. என் ஆனவன் – எனக்குத் தலைவனானவன்.


169

முடி ஆர் தரு சடைமேல் முளை இள வெண்மதி சூடி,
பொடி ஆடிய திருமேனியர், பொழில் சூழ் புளமங்கை,
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும்
அடியார் தமக்கு இனியான், இடம் ஆலந்துறை அதுவே.


பொ-ரை: தலைமேல் விளங்கும் சடைமிசை முளை போன்ற இளம்பிறையைச் சூடி வெள்ளிய திருநீறு அணிந்த திருமேனியனாய், மணம் கமழும் மலர்களையும் நீரையும் கொண்டு தன் திருவடிகளை வணங்கி ஏத்தும் அடியார்களுக்கு இனியனாய் விளங்கும் சிவபெருமான் விரும்பி உறையும் இடம் பொழில் சூழ்ந்த ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கை என்னும் கோயிலாகும்.

கு-ரை: முளைஇளவெண்மதி – முளைவடிவான இளைய பிறை. பொடி – திருநீறு. திருமேனியர், இனியான் என ஒருமை பன்மை மயங்கி வந்தது, செய்யுளாதலின்.


170

இலங்கை மனன் முடி தோள் இற, எழில் ஆர் திருவிரலால்
விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி,
புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை,
அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே.


பொ-ரை: இலங்கை மன்னனாகிய இராவணனின் தலைகளும், தோள்களும் நெரிய, எழுச்சி பொருந்திய அழகிய கால்விரலால் கயிலை மலையிடை அகப்படுத்தி அவனை அடர்த்த சிவபெருமானது இடம், வேதங்களை முறையாகக் கற்றறிந்து ஓதித் துதித்தலோடு புலன்களை வென்ற புகழுடைய அந்தணர் வாழ்வதும் மாலை அணிந்த சடைமுடி உடைய சிவபிரானுக்கு இடமாயிருப்பதும் ஆகிய ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கையாகும்.

கு-ரை: மனன் – மன்னன். தொகுத்தல் விகாரம். எழில் – எழுச்சி. விலங்கலிடை – மலையின் அடியில். புலன்கள் தம்மை வென்றார் – புலன்களாகிய பொறிகளைத் தன்வயமாக்கவிடாமல் வென்ற முனிவர்கள். அலங்கல் – மாலை.


171

செறி ஆர்தரு வெள்ளைத் திரு நீற்றின் திருமுண்டப்
பொறி ஆர்தரு புரிநூல் வரை மார்பன் புளமங்கை,
வெறி ஆர்தரு கமலத்து அயன் மாலும், தனை நாடி
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே.


பொ-ரை: வெண்மையான திருநீறு மூன்று பட்டைகளாய்ச் செறிய உத்தம இலக்கணம் ஆகிய மூன்று வரி பொருந்திய, முப்புரிநூல் அணிந்த மலை போன்ற திண்ணிய மார்பினை உடையவனும் மணம் கமழும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியோர் தன்னைத் தேடி அறியாவகை ஓங்கி நின்றவனுமாகிய சிவபெருமானுக்கு உரிய இடம், ஆலந்துறையிலுள்ள புள்ள மங்கையாகும்.

கு-ரை: செறி ஆர்தரு – நெருங்குதல் பொருந்திய. திருமுண்டம் – அழகிய திரிபுண்டரம். பொறியார்தரு மார்பன் எனக் கூட்டுக. உத்தம விலக்கணம் பொருந்திய மார்பு. (சிந்தாமணி 1462, 1706) வெறி – மணம். அறியாவகை நின்றான் – (அவர்கள்) ஞானக் கண்ணினிற் சிந்தையில் நாடவேண்டிய பதியை ஊனக் கண்ணினிற் காணலுற்றார்களாதலின் அறியா வண்ணம் சோதிவடிவாய் நின்றவன்.


172

நீதி அறியாத அமண்கையரொடு மண்டைப்
போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழுமின்!
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே.


பொ-ரை: நீதி அறியாத அமணராகிய கீழ் மக்களும் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திப் போதிமரத்தடியில் உறையும் புத்த மதத்தினரும் கூறும் உரைகளை மெய்ம்மை எனக் கொள்ளாது எல்லாப் பொருள்கட்கும் ஆதியானவனாகிய ஆலந்துறைப் புள்ளமங்கைக் கோயிலில் உறையும் இறைவனைத் தொழுமின்; பல்வேறு பிரிவினராகிய தேவர்கள் தொழும் தன்மை பெறலாம்.

கு-ரை: அமண்கையர் – அமணர்களாகிய கீழ்மக்கள். மண்டைப் போதியவர் – மண்டையை (பிச்சைக் கலத்தை)க் கையிலுடைய புத்தர். சாதி மிகுவானவர் – முப்பத்துமூன்று கோடியாகச் சாதியினையுடைய தேவர்கள்.


173

பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை
அம் தண்புனல் வரு காவிரி ஆலந்துறை அரனைக்
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன்
சந்தம் மலி பாடல் சொலி, ஆட, தவம் ஆமே.


பொ-ரை: மரப்பொந்துகளில் தேனீக்கள் சேகரித்த தேன் மிகுதியான அளவில் கிடைக்கும் பொழில்கள் சூழ்ந்ததும், அழகிய தண்மையான நீரைக் கொணர்ந்துதரும் காவிரிக்கரையில் உள்ளதும் ஆகிய ஆலந்துறைப் புள்ளமங்கை இறைவனை, மணம் நிறைந்து கமழும் காழிப் பதியில் தோன்றிய கலை நலம் உடைய ஞானசம்பந்தன் பாடிய சந்தம் நிறைந்த இத்திருப்பதிகப் பாடல்களை ஓதிப் பரவசமாய் ஆடத் தவம் கைகூடும்.

கு-ரை: பொந்து – மரப் பொந்துகள். இப்பதிகச் சந்தம், படிக்குங் காலத்தேயே பரவசமாய் ஆட வருந்தன்மையது என்பது குறித்தவாறு.


Scroll to Top