You cannot copy content of this page

011 திருவீழிமிழலை – நட்டபாடை

திருவீழிமிழலை – நட்டபாடை

108

சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான்,
படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான்,
மடமான் விழி உமைமாது இடம் உடையான், எனை உடையான்,
விடை ஆர் கொடி உடையான், இடம் வீழிமிழலையே.


பொ-ரை: சடைமுடியில் கங்கையைத் தரித்தவனும், இடையினின்று சரிந்து நழுவும் ஒப்பற்ற கோவண ஆடையை அணிந்தவனும், மழுப் படையை உடையவனும், பலவகையான பூதங்களைப் படையாகக் கொண்டவனும், மடமைத் தன்மை பொருந்திய மான்விழி போன்ற விழிகளை உடைய உமையம்மையாகிய பெண்ணை இடப்பாகத்தே கொண்டவனும், என்னை ஆளாக உடையவனும், விடைக் கொடி உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் திருவீழிமிழலை.

கு-ரை: சடையார் புனல் – சடைக்கண் நிறைந்த கங்கை. படையார் மழு என்றது தீப்பிழம்பன்று; எரியாகிய படை என்பதை விளக்க. இடம் – இடப்பாகத்து. எனை உடையான் – என்னை அநாதியே ஆளாக உடையவன். விடையார் கொடி – இடபக்கொடி. இது இறைவனுக்குரிய அடையாளக்கொடி, இறைவன் தருமஸ்வரூபியாதலால் அறவடிவான காளை அவன் கொடிக்கண்ணதாயிற்று.


109

ஈறு ஆய், முதல் ஒன்று ஆய், இரு பெண் ஆண், குணம் மூன்று ஆய்,
மாறா மறை நான்கு ஆய், வரு பூதம் அவை ஐந்து ஆய்,
ஆறு ஆர் சுவை, ஏழ் ஓசையொடு எட்டுத்திசை தான் ஆய்,
வேறு ஆய், உடன் ஆனான், இடம் வீழிமிழலையே.


பொ-ரை: ஊழிக் காலத்தில் அனைத்தையும் ஒடுக்குவோனாய், ஒடுங்கிய உடலைத் தானொருவனே முதற்பொருளாய் நின்று தோற்றுவிப்பவனாய், சக்தி சிவம் என இருவகைப்பட்டவனாய், முக்குண வடிவினனாய், எக்காலத்தும் மாறுபடாத நான்மறை வடிவினனாய், ஐம்பெரும் பூதங்கள், ஆறுசுவை, ஏழு ஓசை, எட்டுத்திசை ஆகியவற்றில் நிறைந்தவனாய் உயிரோடு ஒன்றாகியும், வேறாகியும், உடனாகியும் விளங்கும் இறைவனது இடம் திருவீழிமிழலை.

கு-ரை: ஈறாய் – உலகத்துயிர்களெல்லாம் தன்னிடத்து ஒடுங்கத் தான் ஒருவனே நிற்றலின் இயங்குவ நிற்பவான எல்லாவற்றிற்கும் தான் இறுதியாய். முதல் ஒன்றாய் – இறுதியாக நிற்பவனே உலக காரணனாய் (முதலாய்) நிற்குந் தன்மையன் ஆதலின் ஒடுங்கிய உலகமெல்லாம் மீளத்தோன்றுதற்குக் காரணமான (முதற்) பொருள் தானொருவனேயாய். பெண் ஆண் இரண்டாய் என்பது இரு பெண் ஆண் (ஆய்) என நின்றது. குணம் மூன்றாய் – சத்துவ முதலிய குணங்கள் மூன்றாய். மாறா மறை நான்காய் – தம்முள் மாறுபடாத வேதங்கள் நான்குமாய். அவை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பன. மாறா மறை – என்றும் ஒரு படித்தான வேதம் எனினுமாம். வருபூதம் அவை ஐந்தாய் – தத்தம் காரணமாகிய புலன்களிலிருந்து தோன்றுகின்ற பூதம் ஐந்தாய். ஆறு ஆர் சுவை – ஆறாக அமைந்த சுவை(ஆய்); அவை, அறுவகையான நாப்பொறி கவரும் உப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு, புளிப்பு, தித்திப்பு என்பன. ஏழ் ஓசை – சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற ஓசைகள் ஏழு. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன தமிழ்நூல் வழக்கு. எட்டுத்திசை – மாயாகாரியமான உலகத்தில் காணப்பெறும் எட்டுத்திசை. தானாய் – ஒன்றாய். வேறாய் – அவற்றின் வேறாய். உடனானான் – உடனாய் நிற்பவன். இறைவன் கண்ணும் ஒளியும், கதிரும் அருக்கனும், ஒளியும் சூடும்போல உயிர்களோடு கலந்திருக்கின்ற மூவகை நிலைகளை உணர்த்தியவாறு. இப்பாடல் எண்ணலங்காரம் பட வந்தது.

குருவருள்: இப்பாடலில் “ஈறாய் என்பது முதல் எட்டுத்திசை தானாய்” என்பது முடிய இறைவன் அவையே தானேயேயாய்ப் பிரிப்பின்றி உடலும் உயிரும் போல் ஒன்றாயிருந்து அருள் புரியும் நிலையையும், காணும் ஒளியாகிய கண்ணுக்குக் காட்டும் ஒளியாகிய சூரியன் வேறாயிருந்து உதவுவது போல் இறைவன் வேறாயிருந்து அருள்புரியும் நிலையையும், கண் ஒளி ஒரு பொருளைப் பார்த்தாலும் அக்கண் ஒளியுடன் உடனாய் உயிர் கலந்தாலன்றி, கண் காணாதவாறு போல இறைவன் உயிர்களுடன் உடனாயிருந்து அருள்புரியும் நிலையையும் உணர்த்துகின்றார் ஞானசம்பந்தர்.


110

வம்மின், அடியீர், நாள்மலர் இட்டுத் தொழுது உய்ய!
உம் அன்பினொடு எம் அன்பு செய்து, ஈசன் உறை கோயில்
மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டித் திசை எங்கும்
விம்மும் பொழில் சூழ் தண்வயல் வீழிமிழலையே.


பொ-ரை: அன்றலர்ந்த மலர்களைச் சாத்தி வணங்கி உய்தி பெற அடியவர்களே வாருங்கள். உயர்ந்த உம் அன்போடு எம் அன்பையும் ஏற்றருளும் இறைவன் உறையும் கோயில், மும் என்ற ஒலிக்குறிப்போடு இசைபாடும் வண்டுகள் மலர்களைக் கிளறுவதால் திசையெங்கும் மணம் கமழும் பொழில்கள் சூழ்ந்ததும், தண்ணிய வயல்களைக் கொண்டதுமாகிய திருவீழிமிழலை.

கு-ரை: இது அடியார்களை அழைத்து அறிவித்தது. நாண் மலர் -அன்று அலர்ந்த புதுப்பூ. அடியீர் உம் அன்பினொடு மலரிட்டுத் தொழுதுய்ய வம்மின் எனக்கூட்டுக. அன்றி, உம் அன்பினொடு எம்மன்பு செய்து இட்டுத் தொழுது உய்யவம்மின் என்றுமாம். செய்து செய்ய எனத்திரிக்க. மும்மென்பது ஒலிக்குறிப்பு. முரல் – ஒலிக்கின்ற. கெண்டி – மகரந்தங்களைக் கிளறி. வண்டு முரல் பொழில் சூழ் மிழலை எனவே புதுப்பூவிற்குக் குறைவில்லை. ஆதலால் உம்மன்பினொடு இட்டுத் தொழுவதே வேண்டப்படுவது என்பது குறிப்பு. எம்மன்பு செய்து என்றதற்கு, எம்மன்பின் பயனாக எழுந்த திருப்பாடல்களைப் பாடிக்கொண்டே என்பது பொருளாம். பின்னர்த் திருக்கடைக்காப்பில் “தமிழ்பத்தும் இசை வல்லார் சொலக்கேட்டார் வினைபோயிட வான் அடைவார்” என்று அருள்வாராதலின் இதுவே கருத்தாதல் துணிபாம்.


111

பண்ணும், பதம் ஏழும், பல ஓசைத் தமிழ் அவையும்,
உள் நின்றது ஒரு சுவையும், உறு தாளத்து ஒலி பலவும்,
மண்ணும், புனல், உயிரும், வரு காற்றும், சுடர் மூன்றும்,
விண்ணும், முழுது ஆனான் இடம் வீழிமிழலையே.


பொ-ரை: இசையும், அதற்கு அடிப்படையான ஏழு சுரங்களும் வல்லோசை, மெல்லோசை முதலியனவற்றையுடைய தமிழும் உள்ளத்துணர்வாகிய சுவையும், பொருந்திய தாள வேறு பாட்டு ஒலிகளும், மண், புனல், உயிர், காற்று, நெருப்பு, சூரியன், சந்திரன், விண் ஆகிய எண்வகை வடிவங்களும் ஆகிய இறைவனது இடம் திருவீழிமிழலை.

கு-ரை: பண் – இசை. பதம் ஏழு – ஸ்வரஸ்தானங்கள் ஏழு. பதம் – தானம். பல ஓசைத்தமிழ் – வல்லோசை, மெல்லோசை, இடையோசை முதலிய வேறுபாடுகளையுடைய தமிழ். உள் நின்றது ஓர் சுவை – பண்ணைச் சுரத்தானங்களில் நின்று ஆலத்தி பண்ணி, பல ஓசைபொருந்தப் பாடுங்கால் உண்டாகின்ற உள்ளத்து உணர்வாகிய சுவை. உறுதாளத்தொலி – அங்ஙனம் சுவையை அனுபவிக்கும்போது உண்டாகின்ற சச்சபுடம், சாசபுடம் முதலான தாளஒத்துக்கள் பலவும். சுடர் மூன்றும் – சூரியன், சந்திரன், அக்கினி என்ற ஒளிப் பொருள் மூன்றும், இப்பகுதி இறைவனுடைய அட்டமூர்த்தி வடிவம் கூறுகிறது. உயிர் – இயமானனாகிய ஆன்மா.


112

ஆயாதன சமயம் பல அறியாதவன், நெறியின்
தாய் ஆனவன், உயிர் கட்கு முன் தலை ஆனவன், மறை முத்
தீ ஆனவன், சிவன், எம் இறை, செல்வத் திரு ஆரூர்
மேயான் அவன், உறையும் இடம் வீழிமிழலையே.


பொ-ரை: சுருதி, யுக்தி, அநுபவங்களால் ஆராய்ச்சி செய்யாத பல சமயங்களால் அறியப் பெறாதவன். அறநெறிகளின் தாயாய் விளங்குவோன். எல்லா உயிர்கட்கும் அநாதியாகவே தலைவன். வேத வேள்விகளில் முத்தீ வடிவினன். சிவன் எனும் திருப் பெயருடையவன். எங்கட்குத் தலைவன். செல்வம் நிறைந்த திருவாரூரில் எழுந்தருளியிருப்பவன். அத்தகையோன் உறையுமிடம் திருவீழிமிழலை.

கு-ரை: ஆயாதன சமயம் பல அறியாதவன் – இறையுண்மையையும் இறையிலக்கணத்தையும், அளவையானும், அநுபவத்தானும் உள்ளவாறு ஆராயாதனவாகிய சித்தாந்த சைவம் ஒழிந்த ஏனைச் சமயங்களால் சிறப்பியல்பை அறியப் பெறாதவன். நெறி – இறைவனை அறிதற்கு ஏற்ற பல்வேறு சமயநிலைகள். உயிர்கட்கு முன் தலையானவன் – ஆன்மாக்கட்கு அநாதியே தலைமையாக அமைந்தவன். மறை முத்தீயானவன் – வேத வேள்விக் கேற்ற சிவாக்கினியாகிய முத்தீயானவன். ஆயாதன என்பது முதல் தீயானவன் என்பது வரை இறையிலக்கணம் கூறியது. சிவன் எனச் சிறப்பியல்பு கூறியது. எம்மிறை எனத் தம்மோடு உளதாகிய அநாதித் தொடர்பு கூறியது. செல்வத் திருவாரூர் மேயான் என்றது திருவாரூரின் தொன்மை நோக்கிக் கூறியது.


113

“கல்லால் நிழல் கீழாய்! இடர் காவாய்!” என வானோர்
எல்லாம் ஒரு தேர் ஆய், அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப,
வல்லாய் எரி காற்று ஈர்க்கு, அரி கோல், வாசுகி நாண், கல்
வில்லால், எயில் எய்தான் இடம் வீழிமிழலையே.


பொ-ரை: சிவபிரான் கல்லால மரநிழற்கீழ் யோகியாய் வீற்றிருந்த காலத்து அசுரர்களால் இடருழந்த வானோர் காவாய் என வேண்ட, சூரிய சந்திரராகிய சக்கரம் பூட்டிய பூமியைத் தேராகக் கொண்டு நான்முகன் வேதங்களாகிய தேரிற் பூட்டிய குதிரைகளைச் செலுத்த, அக்கினிதேவனை வலிய வாயாகவும், வாயுதேவனை இறகாகவும் கொண்ட திருமால் ஆகிய அம்பை வாசுகி என்னும் பாம்பினை நாணாகப் பூட்டி மேருமலையாகிய வில்லால் செலுத்தித் திரிபுரங்களை எய்து அழித்த சிவபிரானது இடம் திருவீழிமிழலை.

கு-ரை: கல் ஆல் நிழற்கீழாய் – இறைவன் யோகியாய்க் கல்லால நிழலின் கீழ் அறம் நால்வர்க்கு உரைத்திருந்த காலத்து. வானோர் காவாய் என – அசுரர்களால் வருந்திய தேவர்கள் காவாய் என்று வேண்டிக்கொள்ள, என்றது வேண்டுதல் வேண்டாமையற்ற சனகாதியர் யாதொரு துன்பமுமின்றி இருந்த காலத்தே வினைவயத்தான் வருந்தும் தேவர்கள் அசுரர் ஒறுத்தற்கு ஆற்றாது வருந்திக்காவாய் என வேண்டினர் என்பதை விளக்கியவாறு காண்க.

எல் ஆம் ஒரு தேர் – ஒளிப் பொருளாகிய சூரிய சந்திரர்கள் ஆகிய சக்கரம் பூண்ட ஒரு தேர். அயன் – பிரமன், இங்கே பாகனானான். மறை பூட்டி என்றதால் வேதங்கள் குதிரைகளாயினமை வெளிப்படை.

வல்லாய் எரி – விரைந்து பற்றும் நெருப்பு. காற்று ஈர்க்கு – காற்றாகிய இறகு. அரி கோல் – திருமாலாகிய அம்பு. கல் – மேருமலை. வல்வாய் எரி – வலிய வாயாகிய எரி, வல்லாய் என்று பாடம் ஓதுவாரும் உளர்.


114

கரத்தால் மலி சிரத்தான்; கரி உரித்து ஆயது ஒரு படத்தான்;
புரத்தார் பொடிபட, தன் அடி பணி மூவர்கட்கு ஓவா
வரத்தான் மிக அளித்தான்; இடம் வளர் புன்னை முத்து அரும்பி,
விரைத் தாது பொன் மணி ஈன்று, அணி வீழிமிழலையே.


பொ-ரை: பிரமகபாலம் பொருந்திய திருக்கரத்தினன். யானையை உரித்ததால் கிடைத்ததொரு மேற்போர்வையினன். முப்புர அசுரர் அழியத் தன்னடி பணிந்த அம்முப்புரத்தலைவர் மூவர்கட்கும் மிக்க வரங்களை அளித்தவன். அப்பெருமானது இடம், வளர்ந்தோங்கிய புன்னை மரங்கள் முத்துக்கள் போல் அரும்பி மலர்ந்து பொன் தாதுக்களை ஈன்று பச்சை மணிகளைப்போல் காய்த்து அழகு செய்கின்ற திருவீழிமிழலையாகும்.

கு-ரை: சிரத்தான் மலி கரத்தான் என மாற்றிப், பிரம கபாலத்தான் நிறைந்த திருக்கரத்தையுடையவன் எனப் பொருள் காண்க. படம் – மேற்போர்வை, புரத்தார் பொடிபட – முப்புரங்களின் வரிசை பொடியாக. தன்னடிபணி மூவர்கட்கு – தம் திருவடியைப் பணிந்த மேம்பட்ட அடியவர்களான தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூவர்கட்கும். ஓவா வரத்தான் மிக அளித்தான் – சுதர்மன், சுநீதி, சுபுத்தி எனப் பெயரீந்து வாயிற்காவலராகும் வரத்தால் மிக அருள் செய்தவன். புரத்தார் பொடிபட என்பதற்கு முப்புராதிகள் பொடியாயினார் எனப் பொருள் கொள்ளின் “உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல் காவலாளர் என்றேவி” என்பதனோடு மாறுகொள்ளும். அன்றியும் அதிகைப்புராண வரலாற்றொடும் முரணும். ஆதலால் புரத்தார் பொடிபட எனப் பிரித்தலே சால்புடைத்து. திரிபுரம் எரிந்த காலத்து அடியவர்கள் மூவர் அழிந்திலர் என்பதைப் புரம் எரிந்த காலத்து இவர்கள் மூவரும் கைலாசத்தில் துவாரபாலகராகும் பதவியைக் கொடுக்கவேண்டும் என வேண்டிக் கொண்டார்கள் என்னும் தர்மசங்கிதைவசனமும் வலியுறுக்கும். புன்னை முத்துப் போலரும்பி, மலர்ந்து, பொன்தாதுக்களை ஈன்று, காய்த்துப் பச்சை மணிகளையீன்று, அழகு செய்கின்ற மிழலை எனக்கூட்டிப் பொருள் கொள்க.


115

முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன், வடகயிலை
தன்னைப் பிடித்து எடுத்தான், முடி தடந்தோள் இற ஊன்றி,
பின்னைப் பணிந்து ஏத்த, பெரு வாள் பேரொடும் கொடுத்த
மின்னின் பொலி சடையான் இடம் வீழிமிழலையே.


பொ-ரை: தன்னை எதிர்த்து நிற்பார் யாரும் இல்லாத வலிமை பெற்ற அரக்கனாகிய இராவணன் வடதிசையிலுள்ள கயிலாய மலையைப் பற்றித் தூக்கினான். அவன் தலைகள் தோள்கள் ஆகியன நெரிய ஊன்றி அதனால் இடருழந்த அவன் பின்னர்ப் பணிந்தேத்த அவனுக்குப் பெரிதாகிய வாள், இராவணன் என்ற பெயர் ஆகியனவற்றைக் கொடுத்தருளிய மின்னல் போலப் பொலியும் சடைமுடியை உடைய சிவபிரானது இடம் திருவீழிமிழலையாகும்.

கு-ரை: முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன் – தன்னொடு எதிர்த்து நின்று பொருவார் யாரும் இல்லா வலிமைபெற்ற தசக்கிரீவன். இற – இற்றறும்படி. ஊன்றி – வலக்காற் பெருவிரல் நுனியை ஊன்றி. பெருவாள் – சந்திரகாசம் என்னும் வாள். பேர் – மலைக் கீழகப்பட்டு அழுதமையால் உண்டான இராவணன் என்னும் பெயர்; கீர்த்தியுமாம். இதனால் ஆன்மாக்கள் முனைப்புற்ற காலத்து மறக் கருணை காட்டித் தண்டித்து நற்புத்தி வரச்செய்து, “நின்னல்லது உறு துணை வேறில்லை” என உணர்ந்து பணிந்த காலத்து அருள் செய்தல் கூறப்பட்டது.


116

பண்டு ஏழ் உலகு உண்டான், அவை கண்டானும், முன் அறியா
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில,
வெண் தாமரை செந் தாது உதிர் வீழிமிழலையே.


பொ-ரை: முன்னொரு காலத்து ஏழுலகையும் தன் வயிற்றில் அடக்கிக்காட்டிய திருமாலும், அவ்வுலகங்களைப் படைத்தருளிய நான்முகனும் தன்னை அறியாதவாறு ஒளி பொருந்திய தீயுருவான சிவபிரான் உறையும் கோயில்; நீர் நிறைந்த பொய்கைகளில் பூத்த செழுமையான தாமரை மலர்மீது இள அன்னம் நடை பயில வெண் தாமரை சிவந்த தாதுக்களை உதிர்க்கும் திருவீழிமிழலையாகும். அன்னத்தின் நிறத்தால் செந்தாமரை வெண்தாமரை ஆயிற்று. அதன் கால்களின் செம்மையால் பொன்னிறத்தாதுக்கள் செந்தாதுக்கள் ஆயின.

கு-ரை: உலகுண்டான் – ஏழுலகையும் தன்வயிற்றில் அடக்கிய திருமால். அவைகண்டான் – அந்த உலகைப் படைத்த பிரமன்.


117

மசங்கல் சமண், மண்டைக் கையர், குண்டக் குணம் இலிகள்,
இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து,
பசும் பொன்கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன்
விசும்பைப் பொலிவிக்கும் பொழில் வீழிமிழலையே.


பொ-ரை: மயக்க உணர்வுடையவரும், பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக் கையின்கண் ஏந்தியவரும், நற்குணங்கள் இல்லாதவர்களும் ஆகிய சமணர், புத்தர்கள் நிற்கத் தன்னை வழிபடும் அன்பர்கட்கு வினைவயத்தாற் பொருந்திய பிறப்பினைப் போக்கியவன் எழுந்தருளிய இடம், மிகுதியான தேனீக்கள் தேனை உண்டு களித்து ஒலி செய்யவும், பசுமை நிறமேனியும் பொன் நிறக்காலும் உடைய கிளிகளும், களிப்புற்ற மயில்களும் நிறைந்ததும் ஒளியோடு தோன்றும் கதிரவன் இருக்கும் வான மண்டலத்தை அழகுறுத்துவதும் ஆகிய பொழில் சூழ்ந்த திருவீழிமிழலையாகும்.

கு-ரை: மசங்கல், மயங்கல் – மயக்கம். மண்டை – பிச்சையேற்கும் பனையோலைக்குடைப் பாத்திரம். குண்டர் – அறிவற்றவர். இசங்கும் – வினைவயத்தான் பொருந்திய. இருந்தேன் – பெரிய வண்டு; கரியவண்டுமாம். பசும் பொற்கிளி – பசுமை நிறமும் பொன் போலுஞ் செந்தாளும் உடைய கிளி. திருவீழிமிழலைப் பொழில் விண்ணளவும் ஓங்கி வளர்ந்து பொலிவு செய்யும் என்று உரைத்தருளியதால் இன்றும் அச்சிறப்பிற் குன்றாது ஒளிர்கின்றது.


118

வீழிமிழலை மேவிய விகிர்தன்தனை, விரை சேர்
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ்பத்தும்
யாழின் இசை வல்லார், சொலக் கேட்டார், அவர் எல்லாம்
ஊழின் மலி வினை போயிட, உயர்வான் அடைவாரே.


பொ-ரை: வீழிமிழலையுள் எழுந்தருளிய விகிர்தனாகிய இறைவனைப்பற்றி மணம் பொருந்திய சீகாழிப் பதியில் தோன்றிய கலைவல்ல ஞானசம்பந்தன் பாடியருளிய பாடல்கள் பத்தினையும் யாழிசையில் பாட வல்லார்களும் சொல்லக் கேட்டார்களும் ஆகிய அனைவரும் ஊழாக அமைந்த வினைகள் நீங்கச் சிவப்பேறு எய்துவர்.

கு-ரை: ஊழின் மலி வினை – முறைமையானிறைந்த வினை; அதாவது இன்னதன்பின் இன்னது நுகர்ச்சிக்கு உரியது என நியதி தத்துவத்தான் வரையறுக்கப்பெற்ற வினை.

இத்திருப்பதிகத்தை யாழிசை வல்லவர் பாடக்கேட்டுச் சிவ பக்தியுடன் வழிபட்டவர் எல்லாரும் ஊழ்வினை ஒழியவும் வீட்டுலகம் எய்தவும் பெறுவர் என்றதால், தேவாரத் திருப்பதிகங்களை இசையுடன் பாடல் வேண்டும் என்பதும் அது பத்தியை விளைத்துப் பேரின்ப வீட்டை அருளும் என்பதும் புலனாகும். யாழின் இசை என்றும், யாழ் இன்னிசை என்றும் பிரிக்கலாம். ஊழின்மலி வினை போயிடல் – பாசநீக்கம். உயர் வானடைதல் – சிவப்பேறு.


Scroll to Top