You cannot copy content of this page

அக்னீஸ்வரஸ்வாமி கோவில், திருப்புகலூர்

அக்னீஸ்வரஸ்வாமி கோவில், திருப்புகலூர்

சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

நன்னிலம் – நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலையடையலாம். கோயிலின் முன்னால் வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளது. எதிரில் சிவாகம தேவார பாடசாலை உள்ளது.

இத்திருக்கோயில் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது.

உயிர்கள் இறைவன் திருவடிகளைப் புகலாக அடைந்த ஊர். எனவே திருப்புகலூர் என்று பெயர் பெற்றிருக்கலாம் என்பர். இத்தலத்திற்குப் புன்னாகவனம், சரண்யபுரம், ரக்தாரண்யம் என்பன வேறு பெயர்கள். திருநாவுக்கரசு நாயனார் சித்திரைச் சதய நாளில் இறைவனடி சேர்ந்த பெருமையுடைய தலம். முருகநாயனார் அவதாரத் தலம். சுந்தரருக்கு இறைவன் செங்கற்களைப் பொன்னாக மாற்றித் தந்தருளிய தலம். அக்கினி, பாரத்வாஜர் முதலியோர் வழிபட்டது.

இத்தலத்திருந்த முருகநாயனார் திருமடத்தில் சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலியோர் கூடியிருந்து மகிழ்ந்த செய்தி பெரிய புராணத்தில் வருகின்றது. இத்திருமடம் தற்போது ஆதீனமுள்ள இடமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இறைவன்-அக்னிபுரீஸ்வரர், சரண்யபுரீசுவரர், கோணப்பிரான்இறைவி-சூளிகாம்பாள், கருந்தார்குழலிதலமரம்-புன்னைதீர்த்தம்-அக்கினி தீர்த்தம்

மூவர் பாடல் பெற்ற தலம்.

சுற்றிலும் அகழியால் சூழப்பட்ட பெரிய கோயில். பாணாசூரன் தோண்டிய அகழியே நாற்புறமும் தீர்த்தமாக உள்ளது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். ஐந்து நிலைகளையுடையது. உள்கோபுரம் மூன்று நிலைகள். உள்ளே நுழைந்ததும் பிரதான விநாயகர். உள்ளே வலப்பால் அம்பாள் சந்நிதி – தெற்கு நோக்கி. வெளிப்பிராகாரத்தில் சிந்தாமணியீஸ்வரர், நர்த்தன விநாயகர், பாரத்வாசர் வழிபட்ட லிங்கம், அப்பர் ஐக்கிய சிற்பம் முதலிய சந்நிதிகள் உள. உள் பிரகாரத்தில் அக்கினி, அறுபத்துமூவர், பஞ்சலிங்கங்கள், அப்பர் சந்நிதி, வாதாபி விநாயகர், சுப்பிரமணியர், மகரிஷிகள் வழிபட்ட லிங்கங்கள், மகாலட்சுமி, சனீஸ்வரன், நளன், நவக்கிரகம், கலைமகள், அன்னபூரணி, காலசம்ஹாரர் முதலிய சந்நிதிகள் உள்ளன.

(நளச்சக்ரவர்த்திக்கு இங்குச் சனியின் அனுக்கிரகம் கிடைத்து, திருநள்ளாற்றில் விடுதலையாயிற்று என்பர்.) தலமரம் புன்னை உள்ளது.

மூலவர் – வாணாசூரன் (பெயர்த்தெடுக்கமுயன்றதால்) கோணப்பிரான் என்னும் பெயருக்கேற்பச் சற்று வடக்காகச் சாய்ந்துள்ளது. குவளை சார்த்தப்பட்டுள்ளது. மூலவருக்குப் பக்கத்தில் சந்திரசேகரர் தனிச்சந்நிதி உள்ளது. இங்கு இவரே பிரதானமாவார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆலிங்கனகல்யாண சுந்தரர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன. நடராசசபை அழகாகவுள்ளது. உற்சவ மூர்த்தங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 1) அக்கினி (2 முகம் 7 கரங்கள 3 திருவடி 4 கொம்புகள் 7 ஜ்வாலைகளுடன் கூடிய உருவம்) 2) முகாசூரசம்ஹார மூர்த்தி, 3) சோமாஸ்கந்தர் முதலியவை மிகச்சிறப்பானவை.

திருப்புகலூர்க் கோயிலுக்குள்ளேயே திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் உள்ளது. மூலவரைத் தரிசிக்கும்போது வலப்பால் உள்ளது. வர்த்தமானீச்சரம் ஆகும் – தனிக்கோயில். சந்நிதியுள் நுழைந்ததும் இடப்பால் முருகநாயனார் சந்நிதி. சம்பந்தர் பதிகக் கல்வெட்டுள்ளது. வர்த்தமானலிங்கம் அழகான மூர்த்தி. அம்பாள் மனோன்மணி சிறிய அழகான சந்நிதி. இத்திருக்கோயில் சம்பந்தர் பாடல் மட்டுமே பெற்றது. வைகாசி விசாகத்தில் பெருவிழா ஏகதின உற்சவமாகியுள்ளது. அப்பர் சுவாமி விழா சித்திரைச் சதயத்தில் பத்து நாள்களுக்கு மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது.

இத்தலத்துக் கல்வெட்டு ஒன்று திருநாவுக்கரசரை “குளிச்செழுந்த நாயனார்” என்றும் ; முருகநாயனார் மடத்தை “நம்பி நாயனார் திருமடம்” என்றும் ; திருநீலகண்டயாழ்ப்பாணரை “யாழ்முரி நாயனார், தருமபுரத்து நாயனார்” என்றும் குறிப்பது, உணர்ந்து இன்புறத்தக்க செய்தியாகும். பெரியகோயில் – நல்ல பராமரிப்பு.

‘குறிகலந்த இசைபாடலினானசையா லிவ்வுல கெல்லாம்
நெறிகலந்ததொரு சீர்மையனா யெருதேறிப் பலிபேணி
முறிகலந்ததொரு தோலரை மேலுடையானிட மொய்ம்மலரின்
பொறி கலந்தபொழில் சூழ்ந்தயலேபுயலாரும் புகலூரே.”
                                                                 (சம்பந்தர்)

எண்ணுகேன் என்சொல்லி எண்ணி கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
                                                  (அப்பர்)

“தம்மையே புகழ்ந் திச்சைபேசினும் சார்வினுந் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர்பாடுமின்புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர்கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே”
                                                            (சுந்தரர்)

புகலூர் வர்த்தமானீச்சரம்

“ஈசன் ஏறமர்கடவுள் இன்னமுது எந்தை எம்பெருமான்
பூசுமாசில் வெண்ணீற்றர் பொலிவுடைப் பூம்புகலூரில்
மூசுவண்டறை கொன்றை முருகன்முப்போதுஞ் செய்முடிமேல்
வாசமாமல ருடையார் வர்த்த மானீச்சரத்தாரே.”
                                                     (சம்பந்தர்)
                                                     – சொற்கெசடிய

வன்புகலா நெஞ்சில் மருவுமொரு தகைமைத்
தென்புகலூர் வாழ்மகாதேவனே – இன்பமறை
அர்த்தமா நீக்கரிய ஆதாரமாநின்ற
வர்த்தமா நேச்சரத்து வாய்ந்தவனே”             (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
அ/மி. அக்கினிபுரீஸ்வரர் தேவஸ்தானம்
திருப்புகலூர் & அஞ்சல் – 609 704

(வழி) திருக்கண்ணபுரம் – S.O.
நாகப்பட்டினம் வட்டம் – நாகப்பட்டினம் மாவட்டம்.

Scroll to Top