You cannot copy content of this page

மலையடிப்பட்டி திருத்தலம்

மலையடிப்பட்டி

புதுக்கோட்டை மாவட்டம், கீழையூா் பஞ்சாயத்தில் புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தூரத்திலும் கீரனூரிலிருந்து 15 கி.மீ. தூர்த்திலும் அமைந்துள்ள அழகிய கிராமம் மலையடிப்பட்டி.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் (தேசிய நெடுஞ்சாலை 67) , துவாக்குடியிலிருந்து அசூர், செங்களூர் வழியாக கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் 16கிமீ தூரத்திலும், புதுக்கோட்டையிலிருந்து சுமார் 33 கிமீ தூரத்தில் கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் மலையடிப்பட்டி உள்ளது. காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்திருக்கும்

திருமாலுக்குரிய கோயில் கண்திறந்த பெருமாள் கோயில் எனப்படுகிறது. இவ்வூரில் சிவபெருமானுக்கும் விஷ்ணு பெருமானுக்கு அருகருகே இரண்டு குகை கோயில்கள் கட்டப்பட்டுள்ளது.

சிவபெருமான் கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டு ஒன்று கி.பி. 730-ல் நந்திவா்ம பல்லவன் இங்குள்ள மலையை குடைந்து வாகீ்ஸ்வரா் என்றழைக்கப்படும் கோவில் எழுப்பித்தான் என்று தெரிவிக்கப்படுகிறது.

விஷ்ணு கோவில் சிவன் கோயிலைவிட காலத்தால் பிந்தியது. இங்கு நரசிம்மமூா்த்தி, திருமால், அனந்த சயனமூா்த்தி மற்றும் ஆதிசேசன் ஆகியோரின் சிற்பங்கள் மலையில் செதுக்கப்பட்டுள்ளது. திருமால் குடைவரை கோயிலில் அா்த்த மண்டபத்தின் மேல் தளத்தில் தசாவாதார ஒவியங்கள்(பெருமானின் பத்து அவதாரம்) ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது.

பெருமாளின் திருநாமம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி. ஆனாலும் ‘கண்ணிறைந்த பெருமாள்’ என்று பக்தர்கள் அழைக்கின்றனர். தாயார் ஸ்ரீகமலவல்லி நாச்சியார்.

சுமார் 2500 வருட பழைமை வாய்ந்த கோயில் இது. ஒருகாலத்தில், ‘திருமால் அடிப்பட்டி’ என அழைக்கப்பட்டு, பின்னர் இந்த ஊர் ‘மலையடிப்பட்டி’ என மருவியதாகச் சொல்வர்.

சிவனார் சந்நிதி கொண்டிருக்கிற இந்த தலம், மகான்கள் வாழ்ந்த இடமாகவும் திகழ்ந்ததால், திரு ஆலத்தூர் என்கிற பெயரும் இந்தத் தலத்துக்கு உண்டு. சிவனாரின் திருநாமம் திருவாகீசர். தல விருட்சம் அழிஞ்சில் மற்றும் வில்வம்.

சீதை பெற்ற செல்வம் லவன். பின்னர் சீதைக்கு உதவியாக வால்மீகி முனிவர் குசனை தோற்றுவித்த தலம் இது. பராசக்தியின் அருள், இந்த சக்தி தீ்ர்த்தத்தில் விளையும் தர்ப்பைக்கு உண்டு என்பர்.

நின்றான், அமர்ந்தான், கிடந்தான் எனும் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார் பெருமாள். மதுரை கூடலழகர் கோயிலிலும் பெருமாள் இதுபோன்ற மூன்று நிலைகளில் சேவை சாதிக்கின்றார்.

சயனித்துள்ள மூலவர் அனந்தபத்மநாபனாகவும், அமர்ந்த நிலையில் உற்சவர் வைகுண்டநாதராகவும் அருள்கிறார். நின்ற கோல பெருமாள் புண்டரீகாட்சன் எனும் திருநாமத்தில் அழைக்கப் படுகிறார். தாயார் கமலவல்லி நாச்சியார், செல்வங்கள் அள்ளித் தந்து பக்தர்களின் குறைகளையும் கவலைகளையும் தீர்க்கிறாள்.

புகழ்பெற்ற திருவனந்தபுர அனந்தபத்மநாபனுக்கும் கண் நிறைந்த பெருமாளுக்கும் சில பொருத்தங்கள் உண்டு. அங்குள்ளது போன்றே, கருவறை மூன்று பாகங்களில் வாயில் கதவுகள் இல்லாமல், தூண்கள் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.

திருவரங்கத்து அரங்கன் புஜங்க சயனம், மலையடிப்பட்டி அரங்கன் அனந்த சயனம். பாதங்களில் பத்ம கமலங்கள் (தாமரை மலர்). திவாகர மகரிஷி தாமரை மலர்களைக் கொண்டு பூஜித்துப் பலன் பெற்றார். எனவே, தாமரை மலர்கள் கொண்டு பெருமாளை வழிபடுவது சிறப்பு.

பாதத்துக்கு அருகில் ஸ்ரீமகாலட்சுமியும் நாபிக்கமலத்தில் பிரம்மாவும், நவகிரகங்களும், கந்தர்வர்களும் வீற்றிருக்கின்றனர். இறைவனின் பாதத்தையொட்டி ஸ்ரீபட்டாபிஷேக நரசிம்மரும், ஸ்ரீவைகுண்டநாதரும் வீற்றிருக்கிறார்கள்.

மற்ற எந்த திருத்தலத்திலும் பட்டாபிஷேக நரசிம்மரைத் தரிசிப்பது அரிது என்கின்றனர். இரண்ய வதம் முடித்து பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் நடத்தும் கோலத்தில் காட்சி அளிக்கிறார் இவர். ஸ்ரீவைகுண்ட நாதர் தரிசனம் முக்தி அளிக்கும்.

இங்கு அருளும் ஸ்ரீசரணாகத வத்சலன், தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நற்கதி கிடைக்கச் செய்கிறார். ஸ்ரீஹயக்ரீவர் கல்விக்கு அதிபதி, வேதங்களின் தலைவர், சரஸ்வதியின் குரு. கல்விச் செல்வம் குறைவில்லாமல் அளிப்பவர்.

பெருமாளின் திருமுடிக்கு மிக அருகில் இறக்கையை விரித்த வண்ணம் கருட பகவான் சேவை சாதிக்கிறார். எனவே, முக்தி தரும் தலம் இது என்கிறது ஸ்தல வரலாறு.

மலையடிப்பட்டி கிராமத்தின் குன்றையும் கோயில்களையும் பார்க்கும்போதே ஆயிரம் வருடங்களுக்கு பின்னால் நம் மனம் சென்றுவிடுகிறது.

தெய்வீகத்தையும் கலையையும் குழைத்துக் கட்டிய கோயில்களாக, இங்குள்ள சிவ-விஷ்ணு ஆலயங்கள் விளங்குகின்றன. இரண்டுமே குடவரைக் கோயில்கள்தான்.

இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள சிவன் கோயில் முற்காலத்தில் ஆலத்தூர்தளி என்று வழங்கப்பட்டது. மலையின் கிழக்குப் பகுதியில் மலையை குடைந்து முன் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள்.

சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகியிருக்கிறது. அந்த பாறையையே குடைந்து சிவலிங்கத் திருமேனியை வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது.

மூலவர் வாக்கீஸ்வரமுடையார், மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரில் நந்தி தேவர். உள் சுற்றில் வடக்கில் தட்சிணாமூர்த்தி, தெற்கில் கணபதி, வீரபத்திரர் மற்றும் சப்த மாதாக்கள். மேற்கே முருகனும் சிங்க வாகனத்தில் சங்கரநாராயணரும் காட்சி தருகின்றனர்.

கருவறையை அடுத்து உள்ள அர்த்தமண்டபத்தின் சுவரில் சப்தமாதர்கள், கணேசர், வீரபத்திரர், சிவன், விஷ்ணு ஆகியோரது சிற்பங்கள் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன. எருமையின் முகமும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரனுடன் சிங்கத்தின் மீதமர்ந்து மகிஷமர்த்தினி சமர் புரியும் காட்சி, வெகு அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

குகையை ஒட்டி முன்னால் உள்ள மண்டபம், விஜயநகர காலக் கலைப் பாணி உடையது. பல்லவர் கால பாணியை ஒட்டி துவாரபாலகருக்கு இரு கைகள் மட்டும் உள்ளன. (வேறு பாணிக் கோயில்களில் நான்கு திருக்கரங்களோடு துவாரபாலகர்கள் காட்சியளிப்பார்கள்).

மலையடிப்பட்டி திருமாலின் கோயில், கருவறையையும், முன்னால் ஒரு மண்டபத்தையும் கொண்டது. அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு கோயில், திருப்பதிக்கு நிகரானது என்று சொல்கிறார்கள். இங்குள்ள தூண்கள் மிக அழகானவை. தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்கு மேல் தூண் உயர்ந்திருப்பதையும் காண்கிறோம். இது பல்லவமாமல்லன் காலத்துக் கலைப் பாணியைக் கொண்டது எனலாம்.

மண்டபத்தின் சுவரில் நரசிம்மர், வராக மூர்த்தி, தேவியருடன் திருமால் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையில் திருமால் அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கின்றார். ஆதிசேஷனின் ஐந்து தலைகளும் குடை போன்று விரிந்து திருமாலின் தலைக்கு நிழலளித்துக் கொண்டிருக்கின்றன. திருமாலின் நாபியிலிருந்து பிரம்மா தோன்றிக் காட்சியளிக்கின்றார்.

கருவறையின் பின் சுவரில் அரக்கர்களும், தேவர்களும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். அனந்த சயன மூர்த்தியின் கலை அமைப்பு மிகவும் சிறப்புடையதாகும்.

அம்பாளின் சன்னதி காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும். அம்பாள் பொன் அழகு அம்மை கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றாள். பிரதி செவ்வாய்க்கிழமை இந்த அம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. அன்று பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாகக் காணப்படும்.

மலையடிப்பட்டி வாகீஸ்வரர் மற்றும் பள்ளி கொண்ட பெருமாள் கோவில்கள் தினசரி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

எல்லாமே மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டவையே! பிற்காலத்தில் மலையை ஒட்டி சுற்றுச் சுவரும் முன் மண்டபமும் கட்டப்பட்டு, விநாயகர், முருகன், அம்பாள் வடிவுடைய நாயகி ஆகியோரின் சந்நதிகள் அமைக்கப்பட்டன.

கோயிலின் முன்பு, வில்வம், ஏரழிஞ்சி மரங்கள், தல விருட்சங்களாகத் திகழ்கின்றன. ஏரழிஞ்சி மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்தில் சென்று ஒட்டிக்கொள்ளுமாம். இதனால் இந்த விதை முளைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

மலையின் மேற்குப் பகுதியில் உள்ள பெருமாள் குடைவரைக் கோயில், முன்காலத்தில் ஒளிபதி விஷ்ணு கிரஹம் என்று அழைக்கப்பட்டது.

கோயிலுக்கு முன் மலைச் சுனையொன்று சக்கர தீர்த்தம் என்கிற சுதர்சன புஷ்கரணியாக விரிந்துள்ளது. இந்த தீர்த்தம் இறைவனின் அபிஷேகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

நுழைவாயிலின் அருகில் விநாயகர் அருள்பாலிக்கிறார். வலது புறம் கமலவல்லித் தாயார் சந்நதி. இடதுபுற மண்டபத்தில் திருமங்கையாழ்வார், ராமானுஜர், நாதமுனிகள், விஷ்வக்சேனர் சிலைகள் உள்ளன. நடுவில் கருடாழ்வாரும், பலிபீடமும். இங்கும் மலையைக் குடைந்து முன் மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் ஆகியன வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத்தில், தரையிலுள்ள பாறையில் ஐந்து குழிகளுடைய அமைப்பு காணப்படுகிறது.

அர்த்த மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத புண்டரீகாட்சப் பெருமாள், ஹயக்ரீவர், நரசிம்ம மூர்த்தி, அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வைகுண்டநாதன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.

கருவறையில் இரு தூண்கள் உள்ளன. இதை ஹரி நேத்திர தூண்கள் என்கிறார்கள். இதன் மூலம் சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளாக, மூலவரான அனந்த பத்மநாபனை கண் நிறைய தரிசிக்கின்றோம்.

பெருமாளின் திருவடிகளை தாமரை மலர்கள் தாங்குகின்றன. பெருமாளை சுற்றி இறக்கை விரித்த கருடன், இட்ச, கின்னர, கிம்புருடர்கள், தும்புரு, நாரதர், வித்யாதரர், இந்திரன், வருணன், வாயு, குபேரன், பிரம்மா, அக்கினி, சூரியன், சந்திரன், யமன், காமதேனு, கற்பகவிருட்சம், அட்சயபாத்திரம், மது-கைடபர் ஆகியோர் பெருமாளை வழிபட்டபடி காட்சியளிக்கின்றனர்.

பெருமாள் தனது வலது கரத்தால் திவாகர மகரிஷிக்கு ஆசி வழங்குகிறார். பூமாதேவி பெருமாளுக்கு பாத சேவை செய்கிறார். அங்கேயே லட்சுமி நாராயண பெருமாள், உற்சவ மூர்த்தியான ரங்கநாதர், சந்தான கோபாலரும் அருள் பாலிக்கின்றனர்.

‘ஸ்ரீகண் நிறைந்த பெருமாள்’ என்றழைக்கப்படும் இந்த மூலவர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமிக்கு நிகரானவர் என்கிறார்கள். கண் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் திருஷ்டி எல்லாம், இப்பெருமாளின் அருளால் நிவர்த்தியடைகின்றன.

ஏராளமான பக்தர்கள் கண் பார்வை பெற்றுள்ளனர். முன்மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கை ஐந்து விரல்களை வைத்து இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரிநேத்திர தூண்கள் இடையே மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் அறவே நீங்கும் என்பது உறுதி.

பெருமாளின் பாதங்களை தாமரை மலர் தாங்கியுள்ளதால் அந்தப் பாத தரிசனம் மிகுந்த செல்வத்தை அளிக்கும் என்பது உறுதி.

பெருமாளின் அழகிய திருமேனி மீண்டும், மீண்டும் பார்க்க தோன்றும். இதனால் ஒரு முறை இங்கு தரிசனம் செய்த பக்தர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

தஞ்சாவூர் – திருச்சி நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டி அடுத்த கிள்ளுக்கோட்டை பிரிவு சாலையில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

கண் திருஷ்டி, பில்லி சூனியம், ஏவல் மற்றும் சகல வித தோஷங்களும் பெருமாளை ஸேவித்தால் நீங்கும். பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் வேண்டிக்கொண்டால், பார்வை சீராகும். மேலும் இந்தத் தலத்தை கிரிவலம் வந்து வழிபட்டால் பூர்வ ஜென்ம புண்ணியங்களைப் பெறலாம்.

பக்தர்கள் முப்பது முழம் சாமந்தி அல்லது செவ்வந்திப் பூக்களை மாலையாகக் கோத்து அணிவித்தால் நன்மை கிட்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறையும்.

கோயிலுக்கு எதிரில் சக்தி வாய்ந்த தீர்த்தக் குளம் உள்ளது. இங்கே பக்தர்கள் கால்கள் படாமல் நீரை எடுத்துத் தலையில் தெளித்துக் கொண்டு, பிறகு கோயிலுக்குள் செல்ல வேண்டும். தல விருட்சமான அழிஞ்சில் மற்றும் வில்வத்துக்கு இங்குள்ள சக்தி தீர்த்தத்திலிருந்து கால் படாமல் நீர் எடுத்து வந்து ஊற்றி, நம் கைகளால் அரைத்த மஞ்சள் பூசி, தூய குங்குமம் கொண்டு பொட்டிட்டு வணங்கினால், லட்சுமி கடாட்சம் பெருகும். திருமணத் தடை நீங்கும்.

மலையடிப்பட்டி குகைக் கோயில்களுக்கு மிக அருகில் காளியாப்பட்டி, விசலூர் போன்ற இடங்களில் வேறு சில பழங்காலக் குகைக் கோயில்களும் உள்ளன. புராதனச் சின்னமாக இவை இருப்பதனால் இந்தியத் தொல்பொருள் துறையின் பராமரிப்பின் கீழ் இருக்கின்றன.

இப்பகுதியில் பழங்கால முதுமக்கள் தாழியும் புதைந்த நிலையில் காணப்படுகிறது.

ஸ்தல வரலாறு

இப்பூவுலகின் மிகப் பெரிய அதிசயம் திரு அண்ணாமலை.

திரு அண்ணாமலை உச்சியில் கல்லால மரத்தின் தூய்மையான நிழலில் எம்பெருமான் தட்சிணா மூர்த்தி வடிவத்தில் மனித உடல் தாங்கி அதாவது எலும்பும், சதையும் உள்ள மனித உருவில் எழுந்தருளி உள்ளார்.

இன்றும் பல கோடி லோகங்களிலிருந்து ரிஷிகளும், யோகிகளும், தேவதைகளும் தெய்வங்களும் இந்த அற்புத தெய்வீக காட்சியைத் தரிசித்து எல்லையில்லா ஆனந்தம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தியின் திருவடிகளில் சனகாதி முனிவர்கள் அமர்ந்து பெருமானின் மௌன உபதேச அமிர்தத்தை பருகிய வண்ணம் உள்ளனர். இது யுகம் யுகங்களாய் தொடரும் ஆன்மீக அற்புதம்.

இந்த தெய்வீக சந்நிதானத்தில் தானும் பங்கு கொள்ள எண்ணினாள் அன்னை பராசக்தி. சனகாதி முனிவர்களைப் போல் தானும் எம்பெருமானின் குரு மூர்த்த சொரூபமான தட்சிணா மூர்த்தி கோலத்தை தினமும் தரிசிக்க திருவுள்ளம் கொண்டாள் தேவி.

அதை ஒரு சந்தர்ப்பத்தில் எம்பெருமானிடமும் தெரிவித்தாள் அன்னை. அதைக் கேட்ட எம்பெருமான் புன்னகை பூத்து, ”தேவி, உன்னுடைய விருப்பம் நியாயமானதுதான். அதே சமயம் எனது உடலில் சரி பாதியைப் பெற்றிருந்தாலும் பரம்பொருளின் தட்சிணா மூர்த்தி சொரூபத்தைக் காண வேண்டுமென்றால் அதற்குரித்தான தவத்தை மேற்கொண்டே ஆகவேண்டும். இந்த தெய்வீக நிபந்தனையில் யாருக்கும் விலக்கு கிடையாது.

விருப்பம் என்று வந்து விட்டாலே நீ பூலோகம் செல்ல வேண்டிய தருணம் வந்து விட்டது என்றுதானே பொருள். அனைத்து அபிலாஷைகளையும் பூர்த்தி செய்வதற்குரிய தவத்தை இயற்றவல்ல ஒரே இடம் பூலோகம்தான். எனவே நீ அங்கு சென்று திருஅண்ணாமலையின் கல்லால மரத்தின் வேர் சென்று தங்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து தவத்தை மேற்கொள்வாயாக !” என்று திருவாய் மலர்ந்து அருளினார் சுவாமி.

சக்தி தீர்த்தம், மலையடிப்பட்டி

அன்னையும் பேருகையுடன் பூலோகம் வந்தடைந்தாள். பூலோகத்தில் பல திருத்தலங்களைச் சுற்றி வந்தாலும், பல முனிவர்களுடன் கலந்து ஆலோசனை செய்தாலும் திருஅண்ணாமலையின் கல்லால மரத்தின் வேர் நிரவி நின்ற இடத்தைப் பற்றி யாராலும் கூற முடியவில்லை.

எந்தக் கேள்விக்கும் விடை அளிக்கக் கூடிய இடம் திருஅண்ணாமலை ஒன்றுதானே? எனவே திருஅண்ணாமலையைத் தொடர்ந்து கிரிவலம் வந்து பிரார்த்தனை செய்தாள் தேவி.

அப்போது நித்திய கிரிவலத்தை மேற்கொண்டு வரும் ஸ்ரீலோபாமாதாவும் ஸ்ரீஅகத்திய பெருமானும் அன்னையைக் கண்டு, தரிசனம் செய்து தொழுதனர்.

பராசக்தியும் ஸ்ரீஅகத்தியரை வணங்கி தான் கிரிவலம் வரும் காரணத்தைக் கூறி அவரிடம் கல்லால மரத்தின் வேர் நிரவியுள்ள திருத்தலத்தைப் பற்றி வினவினாள்.

ஸ்ரீஅகத்தியர் மிகவும் பணிவுடன், ”தாயே, தாங்கள்தான் ஜகன்மாதா, ஜகத் ரட்சகி, திரிபுவனேஸ்வரி. தோன்றியவைக்கும் இனித் தோன்றப் போகும் அனைத்து லோகங்களுக்கும் தாங்கள்தான் ஆதிபராசக்தியான அன்னை. தங்களுக்குத் தெரியாத ஒரு தேவ ரகசியம் கிடையாது.

இருப்பினும் பூலோக நியதியை அனுசரித்து எந்த தேவ ரகசியத்தையும் திருக்கயிலாய பொதிய முனிப் பரம்பரை வழித் தோன்றல்கள் மூலம் பெறுவதே சிறப்பு என்ற எம்பெருமானின் விதியை மீறக் கூடாது என்பதால் தாங்கள் கேட்கும் இரகசியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.”

தாங்கள் எம்பெருமானின் தட்சிணா மூர்த்திக் கோலத்தைத்தானே தரிசனம் செய்ய விழைகிறீர்கள். அப்படியானால் நீங்கள் தவம் இயற்ற வேண்டிய தலம் இங்கிருந்து வடக்கு திசையில்தானே அமைந்து இருக்கும். எனவே, தாங்கள் நேர் தெற்கு திசையில், பொன்னி நதிக்கு தெற்கே ஆலமரங்கள் செழித்திருக்கும் அற்புத திருத்தலத்தில் எம்பெருமானுக்கு ஆலயம் அமைத்து வழிபட்டால் உங்கள் எண்ணத்தை எம்பெருமான் நிறைவேற்றி வைப்பார்,” என்று அன்னைக்கு வழி கூறி அனுப்பினார்.

அன்னையும் ஸ்ரீலோபாமாதாவையும் ஸ்ரீஅகத்தியரையும் வாழ்த்தி அவர்களிடமிருந்து விடைபெற்று தென் திசை நோக்கி தன்னுடைய பாத யாத்திரையைத் தொடங்கினாள்.

கங்கைக்கும் மூத்தவளான பொன்னி நதியைத் தொழுது வணங்கி தீர்த்த பூஜைகள் இயற்றி மீண்டும் தென் திசையாக தன் யாத்திரையைத் தொடர்ந்தாள். பொன்னி நதி என்பது ஸ்ரீஅகத்திய முனிவரின் தவப் பயனால் உருவானது அல்லவா? எனவே அன்னை பராசக்தி காவிரியில் நீராடியபின் வானத்தில் ஸ்ரீஅகத்திய நட்சத்திரத்தைக் கண்டு வணங்கினாள். அப்போது முதல் ஸ்ரீஅகத்திய நட்சத்திரமே அன்னைக்கு வழிகாட்ட அன்னையும் அதைத் தொடர்ந்து சென்று ஆலமரங்கள் செழித்து ஓங்கி நின்ற அற்புத திருத்தலம் ஒன்றைக் கண்டாள்.

அத்திருத்தலம்தான் தற்போது திருஆலத்தூர், மலையடிப்பட்டி என்று அழைக்கப்படுகிறது.

எம்பெருமானை தியானித்து அன்னை தன்னுடைய சூலாயுதத்தைப் பூமியில் பதிக்கவே பராசக்தியின் சூலம் பூமியில் பட்ட இடத்திலிருந்து ஓர் அற்புத நீருற்று வெளிப்பட்டது. அந்த தீர்த்தக் கரையில் அமர்ந்து தேவி பூஜைகளை இயற்றத் தொடங்கினாள்.

அப்போது எம்பெருமான் அசரீரியாக, ”ஒரு மண்டலம் தொடர்ந்து பூஜை இயற்றினால் உன்னுடைய எண்ணம் நிறைவேறும்,” என்று உரைத்தார். ஒரு மண்டலம் என்று எம்பெருமான் உரைத்தது சக்தி லோக கணக்கில். நம்முடைய பூலோக கணக்கிற்கு அது 108 யுகங்கள் அளவைக் கொண்டது. இவ்வளவு நீண்ட காலம் பூஜை நிறைவேற்றும் போது அதில் ஏதாவது தடங்கல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு காவல் வேண்டும் அல்லவா? எனவே, தன்னுடைய அருமை மைந்தனான பிள்ளையாரை அழைத்து அந்த தீர்த்தக் கரையிலேயே இருந்து காவல் காக்கும்படியும் சிவபூஜை இடையூரின்றி நிறைவேற்ற உதவிபுரியும்படியும் கணபதியிடம் கூறி விட்டு தன்னுடைய பூஜையைத் தொடர்ந்தாள் தேவி.

மலையடிப்பட்டி சப்தமாதர்கள்

கிட்டத்தட்ட பூஜை நிறைவேறும் தருணத்தில் சிவபெருமான் ஒன்றும் அறியாதவர்போல ஒரு விறகு வெட்டியின் ரூபத்தில் தேவியின் பூஜை நடக்கும் இடத்திற்கு செல்ல முயன்றார் அதைக் கண்ட பிள்ளையார் அவரைத் தடுக்க முயன்று அது முடியாமல் போகவே தன்னுடைய மழு ஆயுதத்தால் சிவபெருமானைத் தாக்க இருவருக்கும் கடுமையான யுத்தம் நடந்தது.”

பார்வதி தேவியின் பிரார்த்தனையால் ஒரு யானையின் தலையைப் பிள்ளையாருக்குப் பொருத்திய இறை லீலை நீங்கள் அறிந்ததே.

இத்தகைய அற்புத இறை லீலைகள் நிறைவேறிய இடமே மலையடிப்பட்டி திருத்தலமாகும். அன்னை பராசக்தி ஏற்படுத்திய தீர்த்தம் தற்போது சக்தி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இது மிகவும் புராதனமான சிவ லீலை. அப்போது முருகப் பெருமானின் திருஅவதாரம் நிகழவில்லை. ஆனாலும், முருக சக்தி என்பது ஆதி அந்தம் இன்றி எப்போதும் பிரபஞ்சத்தில் உள்ள இறை சக்திதானே.

தற்போது மலையடிப்பட்டிபெருமாள் ஆலயத்தின் முன் வாசலில் கொலுவீற்றிருக்கும் வலஞ்சுழி கணபதியே முருகப் பெருமானின் சக்தியையும் தன்னுள் கொண்டு கந்த கணபதியாய், கந்த வாரணராய் பக்தர்களுக்கு அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார். பொதுவாக, திருக்கோயில்களில் வலது புறத்தில் கணபதியும் இடது வாயில் புறத்தில் முருகப் பெருமானும் எழுந்தருளி இருப்பார்கள்.

இத்தலத்தில் முருகப் பெருமானுக்கு முன் தோன்றிய அவதார கோலத்தில் கணபதி மூர்த்தி எழுந்தருளி இருப்பதால் அவரே முருகப் பெருமானின் கந்த சக்தியையும் தன்னுள் கொண்டு கந்த வாரணர் என்னும் திருநாமத்துடன் முருகப் பெருமானுக்கு உரிய இடது வாயிலில் எழுந்தருளி அருளாட்சி செய்கிறார். முருக சக்தியையும் கணபதி சக்தியையும் ஒருங்கே வழங்கும் ஒப்பற்ற கருணா மூர்த்தி இவரே.

பிள்ளையார் மூர்த்தியும் யானையின் தலையைப் பெற்று ஞானக் களஞ்சியமாக விளங்கியதால் எந்நிலையில் தேவ மூர்த்திகள் வந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் சிவ சக்தியைத் தன்னுடைய தந்தையிடமிருந்தே பெற்று ஞானத்தின் சிகரமாக விளங்கினார்.

அன்னையின் தவம் கனிந்தது. தவ முடிவில் சக்தி தீர்த்தத்திலிருந்து தீர்த்தத்தை எடுத்து வந்து சிவலிங்கத் திருமேனியின்மேல் அன்னை அபிஷேகம் செய்தாள். வரலாறு காணாத ஒப்பற்ற இத்தவத்தால் மகிழ்ந்து ஈசன் தன்னுடைய திருக்காட்சியை அன்னைக்கு வழங்கி பராசக்தியை சிவ அருஉருவ ரூபமான ஆவுடை வடிவத்தில் ஏற்றுக் கொண்டார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். சிவ லோகமும் சக்தி லோகமும் திருவிழாக் கோலம் பூண்டது.

தன்னுடைய அற்புத தவத்தால் அன்னை பராசக்தி திருஆலத்தூர் சிவனின் வலப் பாகத்தில் ஆவுடை வடிவத்தில் அமர்ந்து தினமும் எம்பெருமானின் தட்சிணா மூர்த்தி கோலத்தை தரிசனம் செய்து ஆனந்த வெள்ளத்தில் இன்றும் என்றும் மூழ்கித் திளைக்கிறாள்.

இவ்வாறு யாரெல்லாம் திருஅருணாசல ஈசனை தட்சிணா மூர்த்தி ரூபத்தில் தரிசனம் செய்யும் தகுதியைப் பெறுகிறார்களோ அவர்கள் அனைவரும் திருஆலத்தூர் ஈசனின் ஆவுடை வழியாக இன்றும் எம்பெருமானின் மானிட திவ்ய ரூபத்தை திருஅண்ணாமலை கல்லால மரத்தின் கீழ் பொலியும் அவரது கோலத்தை தரிசிக்கும் பேறு பெறுகிறார்கள் என்பது உண்மையே.

உதாரணமாக, திருஅண்ணாமலையை பத்தாயிரம் முறை கிரிவலம் வந்து ஈசனை வழிபட்டால் அவரை தட்சிணா மூர்த்தி ரூபத்தில் தரிசனம் செய்யலாம் என்று அருணாசல புராணம் உறுதியளிக்கிறது. அது போல தட்சிணா மூர்த்தியின் தரிசனம் பெற்றவர்களில் ரமண மகரிஷியும் ஒருவர். இப்பிரபஞ்சம் உய்வடைய தோன்றிய ஒளி விளக்கு ஸ்ரீவெங்கடராம சுவாமிகளும் தம்முடைய குருநாதரான கோணாண்டிப் பெரியவருடன் இத்தலத்திற்கு சிறுவனாக வந்தபோது அவர் கருணையால் திருஆலத்தூர் ஈசனின் ஆவுடை வழியாக திருஅண்ணாமலையில் அருள் புரியும் தட்சிணா மூர்த்தியின் ஈடு இணையில்லாத அற்புத தரிசனத்தை இங்கிருந்தவாறே பெற்றார்.

அந்த தேவ தரிசனத்திற்குப் பின் அவர் எத்திசையை நோக்கினாலும் அத்திசையில் உள்ள எல்லா பொருட்களுமே தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன. கண்களின் காட்சிக்கு தடை என்பதே இல்லாமல் போய் விட்டது, தூரமும் காலமும் கரைந்து விட்டன.

முக்கூட்டு குசா சக்தி


பொதுவாக, வலம்புரி கணபதி குசா சக்தியை அருளும் மூர்த்தி ஆவார். இத்தலத்தில் இரு வலம்புரி கணபதி மூர்த்திகள் எழுந்தருளி, அதாவது திருக்கோயில் நுழை வாயிலின் இடது புறத்திலும், ஸ்ரீகண்ணாயிரமுடையார் ஈசனின் எதிரிலும், கிழக்கு, வடக்காக இரு புனிதமான திசைகளை நோக்கி எழுந்தருளி அற்புத குசா சக்திகளை வர்ஷிக்கிறார். இது மிகவும் அரிதான குசா சக்தித் தலம். மேலும் இராமபிரானின் மைந்தனான குசனின் ஜன்ம பூமி இதுவே.

ஸ்ரீராமர் நிறை கர்ப்பிணியான சீதாபிராட்டியை காட்டில் விட்டு விட்டு வந்தபின் சீதை வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்தில் லவனைப் பெற்றெடுத்தாள் அல்லவா? அதன் பின்னர் சீதா தேவிக்கு உதவியாக வால்மீகி முனிவர் லவனைப் போல குசன் என்னும் புத்திரனையும் தோற்றுவித்தார் அல்லவா? அவ்வாறு வால்மீகி முனிவர் குசனைத் தோற்றுவித்த தலம் இதுவே.

இத்திருத்தலத்தில் பொலியும் சக்தி தீர்த்தத்தில் விளைந்துள்ள தர்பைப் புற்கள் நேரிடையாக பராசக்தி லோகத்திலிருந்து பெறப்பட்டவை ஆதலால் ஒரு இறை அவதாரத்திற்கு உரிய தெய்வீக சக்திகளை இங்குள்ள தர்பைகள் மட்டும்தான் அளிக்க முடியும் என்பதால் வால்மீகி முனிவர் குசனை தன்னுடைய தபோ சக்தியால் இங்குள்ள தர்பைகளின் துணை கொண்டு உருவாக்கினார்.

இதனால் இத்தலம் ஒரு யுகத்தில் சிறப்பான தர்ப்பாரண்யமாகத் திகழ்ந்து பல்லாயிரக் கணக்கான ரிஷிகள் இங்கு தவமியற்றி பல பேறுகளைப் பெற்றனர். வால்மீகி முனிவர் ஆராதித்த தர்பைகளை இன்றும் நாம் காணும் பாக்கியம் பெற்றது நமது முன்னோர்களின் பெரும் புண்ணியமே. இனியும் தாமதியாது இந்த அற்புத தெய்வீக தர்பைகளை தரிசனம் செய்து இந்த ராம ஜன்ம பூமியில் மனிதர்களாய்ப் பிறந்த பலனை பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தெய்வீக சக்தி வாய்ந்த மகத்துவம் வாய்ந்த இந்த தர்பைகளை பறிக்காது அவைகளை சிவ சக்தி ராம அம்சமாகப் பாவித்து வழிபடுவதே இத்தலத்தில் நீங்கள் இயற்ற வேண்டிய ஆராதனையாகும்.

இத்தலத்தில் தர்பைகளை பறிக்கக் கூடாது என்ற இறை நியதி உள்ளதால் இத்தீர்த்தத்தில் தர்ப்பண வழிபாடுகளுக்குப் பதிலாக அர்க்ய வழிபாடுகளை இயற்றுவது சிறப்பாகும். அவரவர் குல மாமுனி, கோத்ராதிபதிகள், இஷ்ட தெய்வங்கள், குல தெய்வங்கள் போன்ற தெய்வ மூர்த்திகள் அனைவருக்கும் இந்த வால்மீகி தீர்த்தத்தில் (சக்தி தீர்த்தம்) அர்க்யம் அளித்து வழிபடுவதால் நெடுங்காலம் அர்க்ய வழிபாடுகளை இயற்றாத தோஷம் எளிதில் தீர வாய்ப்புண்டு.

வால்மீகி தீர்த்தத்தில் கால்கள் படாது தீர்த்தத்தை மட்டும் கண்களின் மேல் பிரசாதமாக தடவி வந்தால் எத்தகைய கடுமையான கண் நோய்களும் தீரும். இத்தீர்த்தத்தை தலையில் புரோஷித்துக் (பிரசாதமாக தெளித்துக்) கொண்டால் எத்தகைய கடுமையான கண் திருஷ்டி தோஷங்களும் விலகும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து பலன் பெறுங்கள்.

எனவே, எத்தகைய கண் திருஷ்டி தோஷங்களையும் களைய வல்ல ஸ்ரீகண்ணாயிர மூர்த்தியும், ஸ்ரீகண் நிறைந்த பெருமாளும் அருளும் மலையடிப்பட்டி திருத்தலத்தை முறையாக வழிபட்டு அனைத்து திருஷ்டி தோஷங்களிலிருந்தும் நிவாரணம் பெற்று இறையருளைப் பெற எம்பெருமானின் திருப்பாதங்களைப் பணிகிறோம்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

Scroll to Top