You cannot copy content of this page

024 சீகாழி – தக்கராகம்

சீகாழி – தக்கராகம்

250

“ பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!
காவாய்!” என நின்று ஏத்தும் காழியார்,
மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம்
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே.


பொ-ரை: பாடல்களின் சொற்பொருளாய்க் கலந்து நிற்கும் பரமர், பக்தர்கள், “கொன்றைப் பூக்கள் பொருந்திய முறுக்கேறிய செஞ்சடை ஈசா காவாய்!” என நின்று துதித்துப் போற்றும் சீகாழிப் பதியினராவார். மனம் ஒன்றாத அசுரர்களின் மூன்று புரங்களை அழித்தவரும் அவரேயாவார்.

கு-ரை: இது பாக்களின் சொற்பொருளாய்ப் பயிலும் பரமர் திரிபுரம் எரித்த சீகாழியார் போலும் என்கின்றது. புரிபுன் சடை – புரியாக முறுக்கேறிய புல்லிய சடை. ஏத்தும் – மக்களாலும் தேவர்களாலும் ஏத்தப்படுகின்ற. மேவார் – பகைவர்களாகிய திரிபுராதிகள். பாவார் இன் சொல் – பாக்களில் நிறைந்த இனியசொல், பயிலுதல் – சொற்கள் தோறும் பொருளாய் அமைதல்.


251

“எந்தை!” என்று, அங்கு இமையோர் புகுந்து ஈண்டி,
கந்தமாலை கொடு சேர் காழியார்,
வெந்த நீற்றர், விமலர் அவர் போல் ஆம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.


பொ-ரை: அந்திக் காலத்தில் நடனம் ஆடும் அடிகளாகிய இறைவர், தேவர்கள் எந்தையே என அன்போடு அழைத்து ஆலயத்துட் புகுந்து குழுமி மணம்மிக்க மாலைகளை அணிவித்தற் பொருட்டுச் சேரும் சீகாழிப் பதியினராவார். அவரே நன்றாகச் சுட்டு எடுத்த திருநீற்றை அணிந்தவரும், குற்றம் அற்றவருமாவார்.

கு-ரை: அந்திக்காலத்து நடமாடும் அடிகளே மாலையுஞ் சாந்துங் கொண்டு தேவர்கள் வழிபடும் காழியார்போலாம் என்கின்றது. இமையோர் – தேவர்கள். எந்தை என்று – எம்உயிர்த் தந்தையே என்று. அந்திநட்டம் – சந்தியாதாண்டவம்.


252

தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்,
கானமான் கைக் கொண்ட காழியார்,
வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே.


பொ-ரை: முற்றிய இன்பத்தோடு ஆடுகின்ற சிவபிரான், இனிப்பில் தேனை வென்று விளங்கும் மொழிகளைப் பேசுகின்ற உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காட்டில் திரியும் இயல்பினதாகிய மானைக் கையின்கண் ஏந்தி விளங்கும் காழிப் பதியினராவார். அவர் வானளாவ உயர்ந்த திருக்கோயிலில் விளங்குபவர் ஆவார்.

கு-ரை: இது உமையாளை ஒருபாகம் வைத்து மானைக் கையேந்திய காழியார் இன்பத்தோடு நடமாடும் இறைவர் என்கின்றது. தேனைவென்ற மொழியாள் – வாய்வழிபுகுந்து முன் இனிப்பாய்ப் பின் புளிக்கும் தேனை, செவிவழியாகச் சிந்தையுள் புகுந்து பின்னும் இனிக்கும் மொழி வென்றது என்பது குறிப்பு. கான மான் – சாதியடை, இறைவன் கையில் உள்ளது காட்டுமான் அன்று. ஆன இன்பம் ஆடும் – முற்றிய இன்பத்தோடு ஆடுகின்ற. ஆனநெய் என்பதுபோல் பசுவினால்வரும் இன்பமாகிய பால் முதலியனவுமாம்.


253

மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார்,
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.


பொ-ரை: தம்மைப் பேணி வழிபடாத அசுரர்களின் முப்புரங்களை அழித்த பெருமான், மாட்சிமையில்லாத வெற்றியை உடைய காலனை மடியுமாறு செய்து, தம்மையன்றி வேறொன்றையும் காணாத மார்க்கண்டேய முனிவருக்கு என்றும் பதினாறாண்டோடு விளங்கும் வரத்தை அளித்தருளிய காழிப் பதியினர் ஆவார். முப்புரங்களை அழித்தற்பொருட்டு நாணிற் பூட்டிய அம்பைத் தொடுத்த வருமாவார்.

கு-ரை: சரந்தொடுத்துப் புரம் அட்ட பெருமான் காலனைஉதைத்த காழியார்போலாம் என்கின்றது. மாணா வென்றி – மாட்சிமைப்படாத வெற்றி. காணா மாணிக்கு – இறைவனையன்றி வேறொன்றையும் காணாத பிரமசாரியாகிய மார்க்கண்டருக்கு. பேணார் – பகைவர்.


254

மாடே ஓதம் எறிய, வயல் செந்நெல்
காடு ஏறிச் சங்கு ஈனும் காழியார்,
வாடா மலராள் பங்கர் அவர்போல் ஆம்
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே.


பொ-ரை: குற்றம் பொருந்திய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தருளிய இறைவர், அருகில் கடல் நீரின் அலைகள் எறிந்த சங்குகள் வயல்களில் விளைந்த செந்நெற் பயிர்களின் செறிவில் ஏறி முத்துக்களை ஈனும் சீகாழிப் பதியினர். அவர் வாடா மலர்களைச் சூடி விளங்கும் பார்வதி தேவியைத்தம் திருமேனியின் ஒரு பங்காக உடையவராவார்.

கு-ரை: புரம் எரித்த இறைவரே காழியில் உள்ள உமைபாகர் போலும் என்கின்றது. கடல் ஓதத்தால் பக்கங்களில் எறியப்பட்ட சங்குகள் வயலிலே உள்ள செந்நெற்காட்டில் ஏறி முத்தீனும் காழி என்றது திருவருள் வாய்ப்பிருக்குமானால் மடுவிலிருந்த ஒன்றும் காழிக்கரையேறிக் கடவுள் கருணையெய்தி இன்பமுறும் என்று குறிப்பித்தவாறு, வாடாமலராள் என்றது தெய்வக் கற்புடையாள் என்பதைத் தெரிவிக்க. ஏடு – குற்றம்.


255

கொங்கு செருந்தி கொன்றைமலர் கூடக்
கங்கை புனைந்த சடையார், காழியார்,
அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம்
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.


பொ-ரை: சிவந்த கண்களை உடைய அரக்கர் மூவரின் திரிபுரங்களை எரித்தவராகிய இறைவர், கோங்கு, செருந்தி, கொன்றை மலர் இவற்றுடன் கங்கையை அணிந்துள்ள சடைமுடியினர். அக்காழியர் தாம் அணிந்துள்ள பாம்புகளை அவ்விடத்தே தங்கி ஆட்டுபவராகவும் உள்ளார்.

கு-ரை: புரமெரித்த பெருமானே காழியாராகிய பாம்பாட்டிபோலும் என்கின்றது. அங்கண் அரவம் ஆட்டுமவர் – அவ்விடத்துப் பாம்பை அவயவங்களிலணிந்து ஆட்டுவர்.


256

கொல்லை விடைமுன் பூதம் குனித்து ஆடும்
கல்லவடத்தை உகப்பார் காழியார்,
அல்ல இடத்தும் நடந்தார் அவர்போல் ஆம்
பல்ல இடத்தும் பயிலும் பரமரே.


பொ-ரை: எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்கும் பரமராகிய பெருமானார், முல்லை நிலத்துக்குரிய ஆன் ஏற்றை ஊர்ந்து அதன் முன்னே பூத கணங்கள் வளைந்து நெளிந்து ஆடிச்செல்லக் கல்லவடம் என்னும் பறையை விரும்புபவர். அக்காழியார் தம்மை அறிந்து போற்றுநர் அல்லாதார் இடங்களிலும் தோன்றி அருள் வழங்கும் இயல்பினர்.

கு-ரை: கொல்லைவிடை – முல்லைக் கடவுளாகிய திருமாலாகிய விடை. கல்லவடம் – ஒருவகைப்பறை.

அல்லவிடத்தும் – தம்மையறிந்து போற்றற்குரியர் அல்லாத விடத்தும். பல்லவிடத்தும் – உயர்வு தாழ்வு கருதாதே பலவிடங்களிலும்.


257

எடுத்த அரக்கன் நெரிய, விரல் ஊன்றி,
கடுத்து, முரிய அடர்த்தார், காழியார்;
எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம்
பொடிக் கொள் நீறு பூசும் புனிதரே.


பொ-ரை: பொடியாக அமைந்த திருநீற்றைப் பூசும் தூயவராகிய பெருமானார், கயிலைமலையை எடுத்த இராவணனின் முடிகள் நெரியுமாறு தம் கால் விரலை ஊன்றிச் சினந்து அவனது ஆற்றல் அழியுமாறு அடர்த்தவர். அக்காழியார் இராவணன் எடுத்த பாடலாகிய சாமகானத்துக்கு இரங்கி அருள் செய்தவராவார்.

கு-ரை: இராவணனை நெரித்த காழியார் கானத்திற்கிரங்கும் கருணையாளர் போலாம் என்கின்றது. கடுத்து – கோபித்து. பாடல் – சாமகானம்.


258

ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்,
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே.


பொ-ரை: வாழ்நாளைக் கூறுபடுத்திக் கணக்கிட்டு உயிர்கொள்ளும் இயமன் அஞ்சுமாறு அவனை உதைத்து, மார்க்கண்டேயர்க்கு அருள்செய்த குழகராகிய சிவபிரானார், ஆற்றல் உடைய திருமாலும் பிரமனும் தம் அடிமுடிகள் தோன்றுமிடங்களைக் காணாதவாறு வானுற ஓங்கிய வெற்றியை உடையவராய்க் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளார். அவர் மிக உயர்ந்த ஆன்ஏற்றில் ஏறி உலா வந்து அருள்பவராவார்.

கு-ரை: கூற்றங்குமைத்த குழகராகிய காழியார் இடபம் ஏறும் கருணையாளர் போலாம் என்கின்றது.

ஆற்றலுடைய என்றது ஆற்றல் இருந்தும் இறைவனைக் காணப் பயன்பெற்றில என்பதைத் தெரிவிக்க. ஏற்றம் ஏறு – உயர்ந்த இடபம்.


259

பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார், காழியார்,
இருக்கின் மலிந்த இறைவர் அவர்போல் ஆம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே.


பொ-ரை: தாமரை அரும்பு போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை ஒருபங்காகக் கொண்டுள்ள தலைவராகிய சிவபிரான், உண்மையின்றி மிகப் பிதற்றுகின்ற சமணர் சாக்கியர்களின் வஞ்சக உரைகளைக் கொள்ளாதவராய்க் காழியில் எழுந்தருளியுள்ளார். அவரே இருக்கு வேதத்தில் நிறைந்துள்ள இறைவரும் ஆவார்.

கு-ரை: உமையொருபாகனாகிய காழியார் இருக்கு வேதத்தில் நிறைந்த இறைவர் போலாம் என்கின்றது.

பெருக்கப்பிதற்றும் – உண்மையில்லாமல் மிகப் பிதற்றுகின்ற. கரக்கும் உரை – வஞ்சக உரை. அருப்பின் முலையாள் – அரும்பு போன்ற முலையையுடைய பார்வதி.


260

கார் ஆர் வயல் சூழ் காழிக் கோன்தனைச்
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே.


பொ-ரை: நீர் வளத்தால் கருஞ்சேறுபட்டு விளங்கும் வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் விளங்கும் கோமகனாகிய சிவபிரான்மீது, சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் அருளிச்செய்த பாடல்களை ஓதி உலகோர் போற்றத் துதிக்க வல்லவர், அழகிய வானகத்தில் இனிதாக இருப்பர்.

கு-ரை: காழிநாதனைப்பற்றி ஞானசம்பந்தன் சொன்னவைகளை உலகோர் புகழ உரைக்கவல்லவர்கள் வானத்து இனிதாய் இருப்பர் என்கின்றது. ஏர் – அழகு.


Scroll to Top