You cannot copy content of this page

021 திருச்சிவபுரம் – திருவிராகம் நட்டபாடை

திருச்சிவபுரம் – திருவிராகம் நட்டபாடை

217

புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம்,
அமர் நெறி,
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை, அவைதம
பவம் மலி தொழில் அது நினைவொடு, பதும நல்மலர் அது
மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே.


பொ-ரை: விண், காற்று, தீ, நீர், மண் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும், எண்ணெண் கலைகளை உரைத்தருளும் வேதங்களையும், முக்குணங்களையும், விரும்பத்தக்க மார்க்கங்களையும், வானுலகில்வாழும் தேவர்கள் முதலியவர்களாய் விளங்கும் உயிர்களையும், தம்முடைய படைப் பாற்றல் நினைவோடு நல்ல தாமரை மலரில் விளங்கும் நான்முகனை அதிட்டித்து நின்று உலகைத் தோற்றுவித்தருளும் சிவபெருமானது சிவபுரத் தலத்தை நினைப்பவர் வளமையான இவ்வுலகில் நிலைபெற்று வாழ்வர்.

கு-ரை: இது இறைவனே சிருட்டித்தொழில் இடையறாது நிகழ்த்தத் திருவுள்ளங் கொள்கின்றார். அத்தொழிலைச் செய்யும் பிரமன் அந்தப் பாவனையில் இருந்து சிருட்டிக்கின்றான். ஆதலால் பவமலி தொழிலது நினைவொடு இருக்கும் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் சிவபுரத்தை நினைப்பவர் நிலைபேறான வாழ்வடைவர் என்கின்றது. புவம், வளி, கனல், புனல், புவி – விண்ணாதி மண்ணந்தமாகிய ஐம்பெரும் பூதங்கள். புவம் – வான், கலை – எண்ணெண் கலைகள். உரைமறை – இறைவன் புகழைச் சொல்லும் வேதம். திரி குணம் – சத்துவம் முதலிய மூன்று குணங்கள். அமர்நெறி – விரும்பத்தக்க மார்க்கங்கள். திவம் – தேவலோகம். உயிரவை – தேவர் முதலாகத் தாவரம் ஈறாகச் சொல்லப்பட்ட உயிர்கள். அவைதம பவமலி தொழிலது நினைவொடு – அவ்வவ் ஆன்மாக்களுடைய வினைக்கு ஈடாக அருளப் படுகின்ற பிறவிக்கேற்ற சிருட்டித் தொழிலின் நினைவொடு. எனவே இறைவன் பிரமனைப்போல விகாரியாய்ப் படைப்பவனல்லன், இச்சையால் எல்லாம் இயங்குகின்றன என்பது. பதும நன்மலரது மருவிய சிவன் – தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் சிவன். சிவபெருமான் பிரமன் உருக்கொண்டு வீற்றிருப்பாரல்லர். இத்தகைய திருவுருவத்தைப் பிரமன் தியானித்தலான் சிருட்டி கைவரப்பெறுவன் என்பது.


218

மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள்,
நிலை மலி சுரர் முதல் உலகுகள், நிலை பெறு வகை
நினைவொடு மிகும்
அலை கடல் நடுவு அறிதுயில் அமர் அரி உருவு இயல் பரன்
உறை பதி
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திரு மகளொடு திகழ்வரே.


பொ-ரை: மலைகள் பல வளரும் இம்மண்ணுலகில் வேத விதிகளின் படி நடக்கும் மிகுதியான மக்கள், விண்ணில் நிலைபேறுடையவராய் வாழும் தேவர்கள் ஆகியோரும் மற்றுமுள்ள உலக உயிர்களும் நிலைபெற்று வாழ்தற்குரிய காத்தல் தொழில் நினைவோடு, மிகுந்துவரும் அலைகளை உடைய திருப்பாற்கடல் நடுவில் அறிதுயில் அமர்ந்துள்ள திருமாலை அதிட்டித்துநின்று காத்தல் தொழிலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதி, கற்களால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைப்பவர் திருமகளொடு திகழ்வர்.

கு-ரை: இது எல்லா உலகங்களும் தத்தம் கால எல்லை வரையில் நிலைபெறுக என்னும் திருவுள்ளக் குறிப்போடு பாற்கடல் மேல் பள்ளிகொள்ளும் திருமால் உருவின் இயல்போடு அரன் உறையும்பதி. நினைப்பவர் திருமகளோடு திகழ்வர் என்கின்றது. உலகு நிலைப்பதற்கு மலை இன்றியமையாமையின் மலை பல வளர் தருபுவி எனப் புவியை விசேடித்தார். மறைதரு வழிமலி மனிதர்கள் – வேத விதியின்படி அக ஒழுக்கத்தையும், புறவொழுக்கத்தையும் வரையறுத்த மக்கள். நிலைமலிசுரர் – மக்களைக் காட்டிலும் வாழ்வால் நீடித்த தேவர்கள், முதல் உலகுகள் என்றது, விண்ணும் மண்ணும் கூறவே இடைப்பட்டனவெல்லாம் உணரவைத்தார், அறிதுயில் – யோகநித்திரை.


219

பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள், மலி
குழுவிய சுரர், பிறர், மனிதர்கள், குலம் மலிதரும் உயிர்
அவை அவை
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன்
உறை பதி
செழு மணி அணி சிவபுரநகர் தொழுமவர் புகழ் மிகும், உலகிலே.


பொ-ரை: பழுதுபடாத, கடலால் சூழப்பட்ட நிலவுலகம் முதலிய எல்லா உலகங்களையும், அவ்வுலகங்களில் நிறைவுடன் குழுமிவாழும் தேவர்கள் நரகர்கள் மற்றும் மனிதர்கள் ஏனையோர்ஆகிய அனைவர் உயிர்களையும் அழிக்கும் வகையான நினைவோடு உருத்திரனை அதிட்டித்து அவனுருவில் அழித்தலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதியாகிய செழுமையான மணிகள் அழகு செய்யும் சிவபுர நகரைத் தொழுவோரின் புகழ் உலகில் மிகும்.

கு-ரை: இது நிலம் முதலிய உலகுகள் முழுவதுமழியும்படி ருத்திராம்சத்தோடு எழுந்தருளும் இறைவன் பதியைத் தொழுமவர் புகழ் உலகில் மிகும் என்கின்றது. கடல்புடை தழுவியபடி என்றது சங்கார கிருத்தியத்திற்குப் பயன்படும் தண்ணீரைக் கூறி விசேடித்தபடி. படி – பூமி. படி முதலிய உலகுகள் என்றது ஒடுக்க முறைக்கண் பிருதிவி முதலாயின முறையே தத்தம் காரணமாகிய மாயையில் ஒடுங்கும் முறை பற்றி. உயிரவை அவை முழுவதும் அழிவகை என்றது உயிர்கள் ஒடுங்குதலை உயிர்களுக்கு என்றும் அழிவின்மையின். முதல் – இறைவனது உருவாகிய உருத்திரவடிவு.


220

நறை மலிதரும் அளறொடு, முகை, நகு மலர், புகை, மிகு வளர் ஒளி,
நிறை புனல் கொடு, தனை நினைவொடு நியதமும் வழிபடும்
அடியவர்
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை
வன பதி
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே.


பொ-ரை: மணம் மிகுந்த சந்தனம், அரும்புகள், இதழ் விரிந்த மலர்கள், குங்கிலியம், சீதாரி முதலிய தூபம், ஒளி வளர் தீபங்கள், நிறைந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு நீராட்டியும், மலர் சூட்டியும் ஒளி காட்டியும் தன்னை நாள்தோறும் நினைவோடு வழிபடும் அடியவர், குறைவிலா நிறைவான சாமீபம் முதலான முத்திகளை அடைய அருள்செய்யும் குணம் உடைய இறைவன் உறையும் அழகிய பதி, நீர் நிலைகள் பலவற்றாலும் வளம் நிரம்பி விளங்கும் சிவபுரமாகும். அதனை நினைபவர் சயமகள் தலைவராவர்.

கு-ரை: இது அபிஷேக ஆராதனைப் பொருள்களோடு நியதியாக வழிபடும் அடியார்களுக்குக் குறைவிலாப் பதத்தைக் கொடுக்கும் மகேச்சுரனது பதியை வழிபடுமவர்கள் செயமகளுக்குத் தலைவராவர் என்கின்றது. நறை மலிதரும் அளறு – மணம் மிகுந்த சந்தனம். முகை நகு மலர் – முகையும் மலரும், புகை – தூபம். ஒளி – தீபம். நினைவொடு – ஈசுவர தியானத்தோடு. நியதமும் – ஒழுங்காக. குறைவிலபதம் – சாமீபம், வனபதி – அழகிய நகரம். சிறைபுனல் – மதகுகளோடு கூடிய புனல். இது கிரியாவான்கள் பெறுபயன் கூறியது.


221

சினம் மலி அறுபகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும்
உணர்பவர்
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது
நகர் மதில்
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே.


பொ-ரை: காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் எனப்படும் ஆறு பகைகளையும் வென்று, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையும் அடக்கும் வகையில், காற்றை நிறுத்தியும் விடுத்தும் செய்யப்படும் பிராணாயாமத்தைப் புரிந்தும், தியானித்தலால் உள்ளத்தில் தோன்றியருளும் ஒளிப் பொருளாகிய சிவபெருமானை நாள்தோறும் உணர்பவராகிய யோகியர்கட்குத் தனது எழிலுருவாகிய சாரூபத்தைத் தந்தருளும் சிவபிரான் உறைந்தருளும் நகர், மேகந் தவழும் மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைபவர், கலைமகள் தன் அருளைத் தரவாழ்வர்.

கு-ரை: இது அகப்பகை ஆறும் வென்று ஐம்பொறி அடக்கி, பிராணவாயுவை ஒழுங்குபடுத்திய யோகியர்க்குச் சாரூபந் தரும் பரசிவன் பதியாகிய சிவபுரத்தை நினைப்பவர் சாரூபர்களாவார்கள் என்கின்றது. சினமலி அறுபகை – கோபம் முதலிய உட்பகையாறும், இதனை அரிஷட்வர்க்கம் என்பர் வடநூலார். பொறி – ஐம்பொறிகள். பொறிகள் புலன்களைச் சென்று பற்றுவதைத் தடுப்பது பிராணாயாமம் ஒன்றே என்பதாம். மனன் உணர்வு – தியானம். மலர் மிசை எழுதரு பொருள் – பிரமரந்தரத்தின்கண்ணதாகிய சகஸ்ரதளத்தையுடைய தாமரை மலரின்மேல் எழுந்தருளியிருக்கும் பேரொளிப் பிழம்பாகிய பொருளை. நியதமும் உணர்பவர் – அனவரதமும் அறிபவர்கள். தனது எழில் உருவு கொடு – தன்னுடைய அழகிய வடிவத்தைக் கொண்டு என்றது கண்டக்கறையும் கங்கையும் ஒழிந்த சாரூபத்தை. கனம் – மேகம்.


222

சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு
உரு இயல் உலகு அவை புகழ்தர, வழி ஒழுகும் மெய் உறு
பொறி ஒழி
அருதவம் முயல்பவர், தனது அடி அடை வகை நினை அரன்
உறை பதி,
திரு வளர் சிவபுரம், நினைபவர் திகழ் குலன் நிலன் இடை
நிகழுமே.


பொ-ரை: வேதங்களையும், பலவாகிய நன்மைகளைத் தரும் தலைமையான கலைகளையும், குற்றம் அறப்பயின்று, உலகியலில் பழிபாவங்களுக்கு அஞ்சித் தூய ஒழுக்க சீலராய் உலகம் புகழ விளங்கி உடலின்கண் உள்ள பொறிகள்வழி ஒழுகாது அரிய தவத்தை மேற்கொண்ட அடியவர்கள் தன் திருவடிகளை அடையும் வகை சங்கற்பிக்கும் சிவபிரான் உறையும் பதி திருவருள் தேங்கிய சிவபுரமாகும். அத்தலத்தை நினைவோர்தம் விளக்கமான குலம் உலகிடை நின்று நிகழும்.

கு-ரை: வேதம் முதலான கலைகளைக் குற்றமறப்பயின்று உலகம் புகழ, பொறிவாயில் அவித்து, அருந்தவம் முயல்வார்கள் திருவடி ஞானத்தைப்பெறத் திருவுளங்கொண்டருள்கின்ற பரமசிவன் உறை பதியைச் சிந்திப்பவர் குலம் நிலத்திடை நீடுவாழும் என்கின்றது. பலநலமுதல்கலை – பலவாகிய நன்மைகளைக் கருதுகின்ற கலை. துகள் அறுவகை – சந்தேக விபரீதங்கள் அறும்படி, உருவு இயல் – தோற்றத்தின் அழகு. தனது அடி அடைவகை: இது சாயுச்சியம் அளிப்பது அறிவித்தது.


223

கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என,
மதம் மிகு நெடுமுகன் அமர் வளைமதி திகழ் எயிறு அதன்
நுதிமிசை,
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழி பட, அருள் செய்த
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர், படியிலே.


பொ-ரை: திருமால் வராக அவதாரத்தில் சினம்மிக்க கரிய உருவோடு, தனது நகங்களிடையே வடக்கின்கண் உள்ள மேருமலை கணகண என ஒலி செய்ய, மதம் மிக்க நீண்ட அவ்வராகத்தின் முகத்திற்பொருந்திய வளைந்த பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக அமர்ந்து விளங்க, அப்பூமியை உலகின்கண் அவியாதுநிறுத்திக் காத்த அழகிய திருமால் வழிபட, அவர்க்கு அருள்புரிந்த திருவடிகளை உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை நினைப்பவர் உலகிற் புகழோடு விளங்குவர்.

கு-ரை: ஆதிவராகமான அரிவழிபட அருள் செய்தவரது சிவபுரத்தை நினைபவர் என்றும் விளங்குவர் என்கின்றது. கதம் மிகு – கோபம் மிகுந்த. கருவுருவொடு – கறுத்த மேனியோடு. உகிர்இடை – நகங்களின் இடையே. மதம் மிகு நெடுமுகன் அமர் – மதம் மிக்க நீளமான முகத்திலே இருக்கின்ற. வளைமதி திகழ் எயிறு – பிறைமதியை யொத்த கோரப்பல். நுதி – நுனி. இதம் அமர் புவி – இன்பத்தோடு இருக்கின்ற பூமி. ஆதிவராக உருவெடுத்த திருமாலின் சத்தி பூமியாதலின், அவள் வராகத் தந்தத்தில் இதமாக இருந்தாள் என்றார். பதம் – திருவடி.


224

அசைவு உறு தவ முயல்வினில், அயன் அருளினில், வரு
வலிகொடு சிவன்
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய
நிசிசரன் முடி உடை தர, ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு
உடையரே.


பொ-ரை: உடல் வருத்தத்தைத் தரும் கடுமையான தவத்தைச் செய்து நான்முகன் அருளினால் வரமாகக் கிடைக்கப் பெற்ற வலிமையைக் கொண்டு சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை அது பெயரும்வகையில் இருபது கரங்களை அம்மலையின் கீழ்ச் செலுத்திய இராவணனின் பத்துத் தலைகளில் உள்ள முடிகள் சிதறுமாறு தனது ஒரு கால் விரலால் அடர்த்துத் தன் வலிமையை அவனுக்கு உணர்த்தி அவனைப் பணி கொண்டருளும் சிவபிரான் உறையும் பதி, எண் திசைகளிலும் புகழ் நிறைந்த சிவபுரமாகும். அத்தலத்தை நினைபவர் வளமான இவ்வுலகில் எஞ்ஞான்றும் வாழ்வர்.

கு-ரை: இது பிரமன் அருளால் வந்த தவவலிமையைக் கொண்டு இறைவனது கயிலையையெடுத்த இராவணனது முடியை நெரித்த முதல்வன் நகரத்தை நினைபவர் உலகத்தில் என்றும் வாழ்வர் என்கின்றது.

அசைவுஉறுதவம் – வருத்தம்மிக்க தவம். முயல் வினில் – முயன்றதால். நிசிசரன் – இராவணன்.


225

அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல்
மலிதரு
சுடர் உருவொடு நிகழ் தர, அவர் வெருவொடு துதி அது செய, எதிர்
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன்
நகர்
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி
திகழுமே.


பொ-ரை: வலிமை மிக்க சக்கராயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட திருமாலும் நான்முகனும் அறிதற்கரிய வகையில் அழல்மிக்க பேரொளிப் பிழம்பாய் வெளிப்பட்டருள அதனைக் கண்ட அவர்கள், அச்சங் கொண்டு துதி செய்த அளவில் அவர்கட்கு எதிரே விடம் பொருந்திய கண்டமும் நெற்றிக் கண்ணும் உடைய தனது உருவத்தோடு காட்சி நல்கிய சிவபிரான் எழுந்தருளிய தலம், உறுதியான மரங்கள் செறிந்த பொழில்கள்சூழ்ந்த எழில் பெற்ற சிவபுரமாகும். அதனை நினைபவரும் அவர் மரபினரும் உலகில் புகழோடு விளங்குவர்.

கு-ரை: அயன்மால் இவர்களுக்கிடையே அழல் வண்ணராய்த் தோன்றி, அவர்கள் துதிசெய்யக் கண்ணுதல் கண்டக் கறையோடு கூடிய தனதுருவத்தைக்காட்டிய இறைவன் நகரத்தை நினைப்பவர் வைத்தபடி உலகம் நடக்கும் என்கின்றது.

அடல் மலிபடை – வலிமை மிக்க சக்கரம், அவர் வெருவொடுதுதி அது செய்ய – அவர்கள் அச்சத் தோடு துதிக்க (அதற்காக இரங்கி) வெளிபடுமவன் எனக் கூட்டுக. விடமலிகளம் – நீலகண்டம். நுதலமர்கண் அது உடை உரு – நெற்றிக் கண்ணையுடைய உரு. நினைபவர் வழி புவிதிகழும் எனப்பிரிக்க. வழி – வமிசம்.


226

“குணம் அறிவுகள் நிலை இல, பொருள் உரை மருவிய
பொருள்களும் இல,
திணம்” எனுமவரொடு, செதுமதி மிகு சமணரும், மலி தமது கை
உணல் உடையவர், உணர்வு அரு பரன் உறை தரு பதி
உலகினில் நல
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே.


பொ-ரை: குணங்களும் அறிவும் நிலையில்லாதன எனவும், காணப்படும் உலகப் பொருள்களும், உரைக்கும் உரையால் உணர்த்தப்படும் ஏனைய பொருள்களும், அவ்வாறே அழிந்து தோன்றுமியல்பின. இது திண்ணம் எனவும், கணபங்க வாதம் புரியும் கேட்டிற்குக் காரணமான அறிவினராகிய புத்தர்களும், தமது கையில் நிறைந்த உணவை வாங்கி உண்ணும் சமணர்களும், உணர்தற்கரிய சிவபிரான் உறையும் பதி, இவ்வுலகில் நல்லவர்கள் திரளாய் வாழும் சிவபுரமாகும். அதனை நினைபவர் அழகிய உருவோடு விளங்குவர்.

கு-ரை: குணம் அறிவு முதலாயின நிலையில்லாதன; உலகப் பொருள்களும் அங்ஙனமே என்னும் கணபங்கவாதிகளான புத்தர்களும் சமணர்களும் அறிவரிய அரன்பதியை நினைப்பவர் அழகான வடிவத்தை யடைவர் என்கின்றது. குணம் அறிவுகள் நிலையில எனப்பிரிக்க. செதுமதி – குற்றம்பொருந்தியபுத்தி. கை உணல் உடையவர் – கையில் பிச்சையேற்றுண்ணும் சமணர்.


227

திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒருபதும் நவில்பவர்,
நிகழ் குலம், நிலம், நிறை திரு, உரு, நிகர் இல கொடை, மிகு
சய மகள்;
புகழ், புவி வளர் வழி, அடிமையின் மிகை புணர் தர, நலம்
மிகுவரே.


பொ-ரை: இவ்வுலகில் புகழால் விளங்கும் சிவபுரநகரில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடி இணைகளைப் பணிகின்ற சிரபுர நகர்த் தலைவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய உரைச் சிறப்பு வாய்ந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் ஓதி வழிபடுபவர் குலம், நிலம், நிறைந்த செல்வம், அழகிய வடிவம், ஒப்பற்ற கொடை வண்மை, மிக்க வெற்றித் திரு, இவ்வுலகிடை தொடர்ந்து

வரும் சந்ததி, இறைவனடியார் என்ற பெருமிதம் ஆகியன தம்பால் விளங்க எல்லா நலங்களும் மிகப் பெறுவர்.

கு-ரை: இதுவரை பாடல்தோறும் சிவனியல்பும், அவர் எழுந்தருளியுள்ள நகரழகும், அவரை அடைவார் அடைந்து வந்த பயன்களும் கூறிவந்த பிள்ளையார் இப்பாட்டில் இப்பதிகத்தைப் படிப்பார் எய்தும் பயனைத் தொகுத்துக் கூறுகின்றார். குலம் (6) நிலம் (8) நிறை திரு (2) உரு (10) சயமகள் (4) கலைமகள் (5) புகழ் (3) புவி வளர்வழி (9) அடிமை (7) இவ்வாறு இப்பதிகப்பயன் ஒவ்வொரு பாடலிலும் இருப்பதை ஓர்ந்து உணர்க.


Scroll to Top